எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, September 12, 2008

Jaane tu ya jaane na, Bashu


கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறை
ஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்
ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்த
மூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்
ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான்.

Jaane tu ya Jaane na



இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நேற்று கம்பெனி
இஃப்தார் நோன்பு விருந்து கொடுத்தார்கள். கேர்ள் ப்ரெண்ட் இல்லாத குறை நேற்றுதான்
தெரிந்தது. எல்லாரும் நவநாகரீக உடையில் ஜோடியாக வந்திருந்தனர். பகட்டான
இடம் அந்நிய உணர்வைத்தந்தது. சாப்பாட்டை நன்றாக வெட்டு வெட்டிவிட்டு கிளம்பி
திரையரங்கம் சென்றேன். போஸ்டரில் வர்தே ஒரு பாரியா என்று கோபிகா புடவையை உயர்த்தி பிடித்தபடி ஜெயராமை சபித்துக்கொண்டிருந்தார் மறுபக்கம் தெலுங்குப்பட
ரேஞ்சுக்கு மம்முட்டி பிட்டு கலர் துணிகளில் சட்டை போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜானெ து யா ஜானெ நா, மும்பை மேரி ஜான் என இரண்டு இந்திப்படம். இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் இந்தி குன்றி மணி அளவுக்கு கூட பேசவராது. குன்ஸாக புரிந்துகொள்வேன். முன்பே ஒருமுறை தாரே சமீன் பர் இதே அரங்கில் பார்த்திருந்தேன்.
ஜானே துவில் வேறு ஜெனிலியா என்ற அ.ராட்சசியும் இருப்பதால் நிபந்தனையே
இல்லாமல் அதற்கே சென்றேன்.

படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அழகினால் செய்யப்பட்டிருக்கிறது.
அதிதி என்ற அழகுப் பிசாசு
ஜெய் என்கிற குழந்தைமுகமும் பெண்மையும் கலந்த அழகன்
ஜெய் அம்மாவாக வரும் சாவித்திரி
ஜெய் அப்பாவாக வரும் நஸ்ருதின் ஷா
ஜெய்யின் காதலியாக வரும் மேக்னா
ஜெய்யின் நண்பி தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிப்பவள்
அதிதியின் ஓவியத்தம்பி
கவ் பாய் சகோதரர்கள்
"ஹேப்பி பர்த்டே டு மி" என்று சொல்லும் பரேஷ் ராவல்
கருப்பு முகமூடியிட்டபடி குதிரையில் செல்லும் கனவு

ஹனிமூன் சென்று திரும்பும் ஹெய் அதிதியை வரவேற்க விமான நிலையத்தில்
கூடுகிறார்கள். அதிலே புதிதாக வந்த பெண்ணிற்கு அவர்களின் காதலை கதையாக
சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. சுவாரசியமில்லாமல் கேட்க ஆரம்பிக்கும் பெண்
ஒவ்வொரு அத்தியாயமாக கதை செல்லும் ஓட்டத்தில் மிகுந்த சுவாரசியாமக் கேட்க
ஆரம்பிக்கிறாள். அவளைவிட படம் பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.

ஆறு இணைபிரியா நண்பர்கள் அவர்களில் மியாவ் என்கிற அதிதி என்கிற ஜெனிலியாவும்
ராட்ஸ் என்கிற ஜெய் என்கிற இம்ரானும் காதலிக்கிறார்கள் என்ற கதைதான். அதையே
அவ்வளவு சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஜெயும், அதிதியும் பழகும் விதத்தைக்
கண்டு அதிதியின் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கவும் அது சம்பந்தமாக பேசவும்
ஜெய்யை அழைக்கிறார்கள். ஆனால் இருவருமே காதலிக்கவில்லை என்றும் இருவரும்
இணைந்து வாழ்வதை கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும்
சொல்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
இருவரும் கனவிலும் கூட வேறொருவருடன் வாழமுடியாது என்பதே உண்மை.
அதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதுதான் கதை.


நண்பர்களின் ஆலோசனைப்படி இருவருமே ஒருவருக்கு மற்றொருவர் ஜோடி தேர்வு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஜெய்யின் காதலியாக மேக்னாவை
அதிதி தேர்வு செய்வதும் அந்த கவ்பாய் சகோதரர்களிடம் இருந்து மேக்னாவை
காப்பாற்றும் காட்சிகள் சுவாரசியமான அழகு. ஜெய்யின் மீது காதல் கொள்கிறாள்
மேக்னா. இடையே ஜெனிலியாவுக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் தங்களின் காதலை உணர்கின்றனர்.
அதைச் சொல்ல இருவருக்குமே தயக்கம்.

ராஜஸ்தான் ரதோர் வம்சத்துக்கே உரிய முரட்டுத்தனத்துடனும் தனது கணவரைப்போலவும்
தன் மகன் ஆகிவிடக்கூடாது என்று ஜெய்யை பொத்தி வளர்க்கும் சாவித்திரி.
ஒவ்வொரு ரதோர் வம்சத்து ஆண்மகனும் மூன்று தகுதிகளை வளர்த்துக்கொண்டால்
மட்டுமே அவன் ஆண். அவையாவன குதிரையேற்றம், அடிதடி, சிறைசெல்வது
இவை எல்லாவற்றையும் நம் மகனும் செய்வான் என புகைப்படத்தில் இருந்தபடியே
சவால் விடும் நஸ்ருதின். இந்தக்காட்சிகள் அருமையான கற்பனை.

நஸ்ருதின் சவால்படியே ஜெய் அதிதிக்கு பார்த்த மாப்பிள்ளையை அடிக்கிறார்.
சிறை செல்கிறார். இறுதியில் குதிரையில் ஏறி விமானநிலையம் சென்று அதிதியை
கைபிடிக்கிறார். விமானநிலைய காட்சிகளும் அருமை.

படத்தின் எல்லா காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலிபோல வந்து இறுதியில்
வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமீர்கான் மீதான பிரமிப்பு இப்படத்தின் மூலம் இன்னும்
அதிகமாகிறது லகான், தாரே சமீன் பர், ஜானே து ய ஜானே நா என தொடர்ச்சியாக
அவரின் தயாரிப்பில் வெற்றிப்படங்கள்.

பாஷு (bashu)


ஈரான் ஈராக் யுத்தத்தில் தாய், தந்தை, தமக்கை என அனைவரையும் கண் முன்னே இழக்கிறான் பத்து வயது சிறுவன் ஒருவன். உயிர்பிழைக்கவும் குண்டுச் சத்தத்தில்
இருந்து தப்பிக்கவும் ஒரு ட்ரக்கில் ஏறி பதுங்குகிறான், அப்படியே தூங்கியும்
போகிறான். ஈரானின் தெற்குப்பகுதியில் கிளம்புகிற ட்ரக் வடக்குப்பகுதிக்கு நிறுத்தமே
இல்லாமல் பயணமாகிறது. கண்விழிக்கிற சிறுவனுக்கு தான் பிறந்த இடமான
வறண்ட பாலைவனம் போல அல்லாமல் நந்தவனம் போல இருப்பதைக் கண்டு
அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ட்ரக்கிலிருந்து இறங்குகிறான். பக்கத்தில் பாலம் கட்டும்
பணி நடைபெறுவதால் குண்டுவெடிக்கிறது தான் இன்னமும் யுத்தம் நடக்கும் இடம்
தாண்டி வரவில்லை என பயந்து காடுவழி ஓடுகிறான்.

பசும்நெல் வயல்கள் நடுவே ஒருகிராமம். எல்லாருமே வெள்ளையான மனிதர்கள்
இப்பகுதிமக்கள் எல்லாருமே வெள்ளை நிறத்தவர். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இரண்டு குழந்தைகளுடன் வயலில் வேலைசெய்துகொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவளின்
குழந்தைகள் விளையாடுகின்றன. அப்போது கருப்பாக இருக்கும் இவனைப்பார்த்து
பயந்து கத்தும்போது அத்தாய் வருகிறாள். அனைவரையும் கண்டு மிரள்கிறான் பாஷு
எனும் அச்சிறுவன். அவனது துரதிர்ஷடம் நிறத்திலிருந்து மொழிவரை வேறு வேறாக
இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அத்தாய்க்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது.
உணவு பகிர்கிறாள், அவனைப் பிடித்து பயம்போக்கி உறங்க வைக்கிறாள்.

ஆரம்பத்திலிருந்து இந்தக்காட்சிகளான இருபது நிமிடங்களும் வசனமே கிடையாது.
பாலுமகேந்திரா படங்களைப்போல கேமரா மட்டும் பேசிய காட்சிகள். அபாரமான
உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்பு.

மறுநாள் கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து அவனை வீட்டை விட்டு விரட்டுமாறு
ஆலோசனை சொல்கிறார்கள்.அனவரையும் புறக்கணித்து அவனை வீட்டில் வளர்க்கிறாள்
அவர்கள் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும் வரை பாஷு பாதுகாப்பாக இருக்க
வேண்டும் என்பது அவள் விருப்பம். புதுஇடம் புதுமனிதர்கள் தந்த அதிர்ச்சியும்
மொழிபுரியாமலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடனும் அங்கு தங்குகிறான் பாஷு.

ரொட்டி சுடும் இடத்தில் நெருப்பைக் கண்ட பாஷு தன் தாய் தீப்பிடித்து எரிந்த காட்சி
கண்முன்னே வர தான் வந்த கதையை மொழி தெரியாத அத்தாயிடம் அவனது
மொழியிலேயே கண்ணீருடன் சொல்கிறான். முழுதும் அபிநயம் கலந்த மொழி
கண் மூடாமால் கண்ணில் நீர் வழிய கேட்கிறாள் அத்தாய். அவன் மீது மேலும்
பரிவுகொள்கிறாள்.

அதற்கடுத்த நாளே கடும் காய்ச்சல் வருகிறது பாஷுவுக்கு கிராமத்தில் யாருமே உதவிக்கு
வரத்தயாரில்லை. மறுநாள் பெரியவர் ஒருவர் உதவியால் மீள்கிறான். இடையில்
சிறு சிறு தொந்தரவுகள். பொருளீட்ட சென்ற கணவனுக்கு பாஷுவினை பற்றி
எழுதுகிறாள். சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் பாஷு.

கணவனிடமிருந்து கடிதம். உற்றார் உறவினர் என அனைவரையும் விசாரித்து
எழுதப்பட்ட அக்கடிதத்தில் பாஷுவினைப் பற்றி எந்த குறிப்புமில்லை. தன் குடும்பத்தில்
ஒருவனாகவே மாறிவிட்ட பாஷுவைக் குறித்து எழுதவில்லை. இருந்தாலும் எழுதியது
போல அவள் படிக்கிறாள். தன்னைக்குறித்தும் முகமறியா ஒருவர் அன்பொழுக
விசாரித்திருப்பதாக நினைத்து பூரிப்படைகிறான் சிறுவன். மிகுந்த நெகிழ்ச்சியான
கவிதை போன்ற காட்சி.

அவள் ஒரு வித்தியாசமானவள் ஒலிகள்தான் அவளது சைகைகள். பறவைப்போல
கழுகைப் போல, வாத்தைப்போல, குதிரையைப் போல ஒலிகள் எழுப்புவாள்.
வித்தியாசமான ஒலிகள் கேட்டால் உடனே அதுபோன்ற ஒன்றை தன் தொண்டையிலுருந்து
கொண்டுவருவாள். இது தானியங்கள் காக்கவும் வயல்வெளிகளில் பறவைகளை
விரட்டவும் காட்டுநரிகளிடம் இருந்து கோழிகளை காக்கவும் அவள் கொள்ளும் உபாயம்.
இதுவும் கவிதையைப் போல அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. இந்த ஒலிகளால்
பாஷுவும் கவரப்படுகிறான். அவனும் ஒலிகளை தன்குரல் மூலம் பிரதியெடுக்கிறான்.

இரண்டாவது கடிதம் கணவனிடம் இருந்து வருகிறது. பாஷுவினை விருந்தினனாக
வைத்திருப்பது எனக்கு சம்மதமில்லை என. வழக்கமாக கடிதம் வாசிக்கும் ஊர்
பெரியவர் இதை வாசிக்கையில் பாஷு கேட்கிறான். மனமுடைந்து அங்கிருந்து
வெளியேறி வழிதெரிந்த போக்கில் செல்கிறான். பதைத்து தேடுகிறாள். மிகுந்த
தேடலுக்குப்பின் கிடைக்கிறான் நெகிழ்வான காட்சி அது.

இறுதியில் அவளின் கணவன் ஒரூ கையை இழந்து ஊர் திரும்புகிறான். பாஷுவினால்
கவரப்படுகிறான். நிபந்தனையற்ற அன்பினால் தன் மூன்றாவது மகனைப்போல்
வாழ்கிறார்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படம்.
அன்பானது மொழி, நிலங்களைக் கடந்தது என்பதை வலியுறுத்தும் கதை.

பஹ்ரம் பெய்சய் ஈரானிய சினிமாவில் புதிய அலைகளை உருவாக்கிய முக்கியமான
படைப்பாளி.

10 comments:

வல்லிசிம்ஹன் said...

தம்பி,
இரு படங்களும் அருமையாக இருக்கின்றன.
கதைகளைச் சொல்லுகிறேன்.

நீங்கள் சொல்லி இருக்கும் அழகே
நன்றாக இருக்கிறது.
இங்க தான் சிடிக்கள் கிடைக்கின்றன. பார்க்க முயற்சிக்கிறேன்.

சென்ஷி said...

வெருதே ஒரு பார்யாவையும் நீ பார்த்திருக்கலாம். நல்ல படமாம்...

படத்துல வர்ற அந்த குண்டு பிரண்டைபத்தி ஒண்ணுமே சொல்லலியேப்பா.. எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அது :)

அப்புறம் நீ சொன்னாமாதிரியே அந்த பொண்ணு மேக்னா பின்நவீனத்துவமா யோசிக்கற கேரக்டரும் கலக்கல் :)

கோபிநாத் said...

குட் ;)

Mohandoss said...

ஜானே து யா ஜானே நா, எனக்கும் பிடித்த படம். சமீபத்தில் வந்த இந்தி படங்களில் இதுவும் என்னைக் கவர்ந்தது. மற்றது ராக் ஆன்! நேரமும் திரைப்படமும் கிடைத்தால் பாருங்கள்.

கபி கபி அதிதி பாடல் என்னை பித்தம் கொள்ளச் செய்துவருகிறது. அதை வைத்து ஒரு மேட்டர் ரெடி செய்தேன் படம் பார்த்து முடிந்ததுமே! ம்ஹூம் நேரத்தைப் பிடிப்பதற்காக அதை இன்னும் துரத்திக் கொண்டே இருக்கிறேன்.

நல்லா எழுதியிருக்கீங்க.

கதிர் said...

கிடைச்சா கண்டிப்பா பாருங்க.
நன்றி வல்லியம்மா..

சென்ஷி
மேக்னா சிரிச்சா செம சூப்பரா இருக்குல்ல... :)

கோபி
கடமை வீரா....

கதிர் said...

மோகன்

ராக் ஆன் இன்னிக்குதான் ரிலீஸ் ஆகிருக்கு. பாத்துடலாம்....

நன்றி.

Unknown said...

hmmm me too liked Jane Tu..
Try to c Rock on and A Wednesday...
Nasrudeen shaw chumma pattiya kelapirupaaru...

ஆடுமாடு said...

vanakkam thambi, nalama?
Bashu patri kelvi patten. innum parkavillai. ungkal arimukam parka thoondukirathu.
nantri.

aadumaadu.

யாத்ரீகன் said...

>> கபி கபி அதிதி பாடல் <<

felt like hearing a Bomarillu song.. isn't it so ?


thanks for the other movie thambi.. will search for it..

கதிர் said...

கமல்,
இந்த வாரம் ராக் ஆன் தான். :)

ஆ.மா
அழகான கவிதை பாஷு, முக்கியமா அதனோட கேமராவுக்காக பாக்கணும்.

யாத்ரீகன்
எனக்கு அப்படி ஒண்ணும் தோணயே!
ஆனா கதை மனதோடு ஒரு மழைக்காலம் என்ற படத்தை ஞாபகப்படுத்துச்சு. அந்தப்படத்தில் கடைசிவரை நண்பர்களாக மட்டும் இருப்பார்கள். இங்க இணைந்துவிடுகிறார்கள்.