எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, April 04, 2007

முத்தழகு

மன்னிச்சிருங்க மக்கா. அழகுன்னு எதை சொல்றாங்க அப்படின்னு கருத்து
கேக்க போய் இந்த சுற்று விளையாட்டு வர காரணமாயிட்டேன். அழகான
ஆறு போட இலவசம் கூப்பிட்டிருக்காங்க பதிவு எழுத மேட்டர்லாம்
தமிழ்மணத்துல உலாவந்தாவே போதும் சிக்கிடும். அழகு என்பது அவரவர்
பார்வையில் வேறுபடும் என்பது போன பதிவில் நிரூபணமாகிவிட்டது.
எனக்கு பாவனாவை ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா பாருங்க பல பேருக்கு
பாவனா யாருன்னே தெரியல பொதுவான ஒரு ஆளையே இப்படி
சொல்லும்போது அவரவருக்கு தனித்தனியான உலகத்தில் ஒரே அழகு
சாத்தியப்படாது. அழகு என்பது மாறுதலுக்கு உட்பட்டதாக இருந்தாலும் முதல்
தரிசனம் அதை மறக்கச்செய்திடும் அதுவே பின் தொடருமானால் நாம் வேறு
எதுவோ ஒன்றை தேட நேரும். எனக்கு தெரிஞ்ச சலிப்பு தட்டாமல் இருப்பது
மூன்று விஷயம்தான் வாசிப்பு, சாப்பாடு, தூக்கம் இந்த மூணு வேலையையும்
என்னால சிறப்பா செய்யமுடியும்.

நீங்கள்லாம் திட்டறதுக்கு முன்ன நானே மேட்டருக்கு வந்துடறேன்.

1.அழகு

குள்ளவண்டுன்னு ஒரு ஆளு எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல பண்ணையத்துக்கு
வேலை செஞ்சுகிட்டு இருந்தார் (இன்னமும்). பண்ணயத்து வேலைன்னா முதல்ல
என்னன்னு சொல்லிடறேன். வருஷத்துக்கு ரெண்டு புதுத்துணி, மூணு வேலை
சாப்பாடு, உறங்க இடம் வருஷம் இத்தனை மரக்கா நெல் அப்புறம்
பதினாறாயிரம் ரூபாய். அஞ்சு வருஷம் பாண்டு பேப்பர்ல எழுதி குடுத்துட்டா அவங்ககிட்டதான் வேலை செய்யணும். கிட்டத்தட்ட அடிமை மாதிரிதான்.
ஆனா அவங்க வீட்டுல ஒரு ஆளாத்தான் நடத்தினாங்க. எல்லாரும்
அவர் பேர் சொல்லி கூப்பிடவே நானும் குள்ளவண்டுன்னு கூப்பிடுவேன்.
எனக்கு நீச்சல் கத்து குடுத்த, மீன் பிடிக்க, இளநீர் வெட்ட இப்படின்னு
நிறைய கத்துக் குடுத்த குருசாமி.

என் கூட பத்தாவது வகுப்பு படிச்ச ராஜேஸ்வரி ஆர்ப்பாட்டமில்லாத அழகு.
நல்ல கருப்பு வட்ட முகம். முக்கியமா படிப்புல ரொம்ப கெட்டி. மத்த
பொண்ணுங்க ஒரு மார்க் குறைஞ்சாலும் உக்காந்து மூக்க சிந்தி மார்க்
வாங்கிடுவாங்க. ஆனா இந்த பொண்ணு எதுலயும் 95 க்கு குறைஞ்சு
எடுக்காது. பேரமைதியான பொண்ணு. தேர்வுகள் முடிந்து முடிவுகள்
வெளியாகி அந்த பொண்ணுதான் முதல் மதிப்பெண். எல்லாரும்
பாராட்டினாங்க.

காட்டுல கரும்பு வெட்டறாங்க வான்னு குள்ளவண்டு கூப்பிட்டுச்சி, போனேன்.
அங்க நிறைய பெண்கள் கரும்பு சுமந்து ட்ரெய்லர்ல ஏத்திகிட்டு இருந்தாங்க
வரிசையா போன பெண்கள்ல ராஜேஸ்வரியும் ஒருத்தி. சக்திக்கு மீறின சுமை
நாலு கட்டு கரும்பு தூக்கிட்டு போறது ரொம்பவே கஷ்டம். ஏன் இந்த
வேலைய செய்ற நீன்னு கேட்டேன்.

"எம்பொண்ணுதாம்பா அதுன்னு சொல்லிகிட்டே பின்னாடி கரும்பு வெட்டிகிட்டு
இருந்தார் குள்ளவண்டு". ஏன் குள்ளவண்டு படிக்கிற பொண்ண இப்படி
கஷ்டபடுத்தறிங்கன்னு கேட்டேன். லீவ்லதாம்பா இருக்கு அடுத்த வருசம்
கல்யாணம் பண்ணி குடுக்கணும்ல.

"உம்பொண்ணு நல்லா படிக்கும் மேல படிக்க வைய்யி குள்ளவண்டு"

"காசு எங்க இருக்கு படிக்க வைக்க, அப்படியே படிக்க வைச்சா சொந்தத்துல
அவ்வளவு படிச்ச மாப்ள இல்லிங்க தம்பி" அப்புறம் கல்யாணம் பண்றதுல
சிரமம் வந்துடும்.

சொன்ன மாதிரியே கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சி.

இது மாதிரி எத்தனை ராஜேஸ்வரிகள் திறமை வெளித்தெரியாமல்
போயிருக்கும்னு தெரில.

அழகு என்றவுடன் ஆயிரம் விஷயங்கள் மனசுல தோன்றி மறைந்தாலும் அழகும்
அறிவும் ஒருசேர அமைந்த ராஜேஸ்வரிதான் நியாபகத்துக்கு வருது.

*********************************

2. இடம்

இருக்கறது ஏ,சி ரூம்தான் எல்லா வசதியும் கிடைக்குது. சுகமான வாழ்க்கை,
எந்த நேரத்திலும் எதுவும் கிடைக்கும். ஆனா பாருங்க தூக்கத்த தினமும்
போராடித்தான் வாங்க வேண்டியிருக்கு. எங்க வீடு கூரை வீடா இருந்தாலும்
உலகத்துலயே எனக்கு பிடிச்ச இடம் அதுதான். எந்த மூலைல படுத்தாலும் சுகமா
தூக்கம் வரும். திண்ணையில ஆயிரம் கொசுக்களுக்கு இடையில
படுத்தாலும் கன்னா பின்னான்னு தூங்குவேன். கரண்ட் கட்டாகி கும்மிருட்டா
இருந்தா கூட தங்கு தடையின்றி எல்லா அறைக்கும் போய் வருவேன்
அவ்வளோ அத்துபடி. இங்க லொக்கேஷன் மேப் இருந்தா கூட ஆயிரம்
பேர்கிட்ட விசாரிச்சிதான் அத்தாதண்டி பில்டிங்க கண்டுபிடிக்க வேண்டியிருக்கு.
நான் எங்கெங்கயோ படுத்து தூங்கியிருக்கேன் ஆனா வீட்ல படுத்து தூங்கற
மாதிரி ஒரு சுகம் வரவேல்ல அதுவும் படுத்த அஞ்சாவது செகண்டுல எங்க
இருந்து வருமோ தெரியாது. சாப்பிட்ட தட்டை நேக்கா நகர்த்தி வச்சிட்டு
அப்படியே நீட்டிடுவேன் பிறகு தலவாணி இல்லாம பையன்
தூங்குறானேன்னு தூக்கம் கலையாம தலையணைய சொருகி விடுவாங்க.

ஒரு முறை வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருந்தாங்க பத்திரமா இருடா
கண்ணுன்னு சொல்லிட்டு சாப்பாடெல்லாம் இருக்கு பத்தலன்னா பக்கத்து
வீட்டுல போய் நிக்காம தோசை ஊத்தி சாப்பிடுன்னு சொன்னாங்க.
நானும் கண்ணும் கருத்துமா முன்பக்கம், பின்பக்கம் தாழ்ப்பாள் போட்டுட்டு
தூங்கிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா கூரைய பிச்சிகிட்டு தண்ணி ஊத்துது.
என்னடான்னு எந்திரிச்சா எங்கண்ணன் கூரைய பிரிச்சி தண்ணி ஊத்துச்சி
செம கடுப்புல வெளில வந்தா தெருவே நின்னு வேடிக்கை பாக்குது. ரொம்ப
நேரம் கதவ தட்டி பாத்துட்டு கதவு திறக்காமல் போகவே புள்ளைக்கு என்ன
ஆச்சோ ஏதாச்சோன்னு கூரைய பிரிச்சி பாத்து தண்ணி ஊத்திருக்காங்க.
நீங்களே சொல்லுங்க இப்படிப்பட்ட இடத்தை அழகான இடம்னு
சொல்லலாம்தானே?

********************************

3.நிகழ்வு

மறக்கவே முடியாத நிகழ்வுன்னா அது என்னோட ஆறாவது செமஸ்டர்தான்.

சீக்கிரம் போய் உங்க அப்பாவை மடக்குடா HOD ரூம் பக்கம் போய்கிட்டு
இருக்காரு உம்மேல இருக்கற கடுப்புல நீ வச்சிருக்க அரியர்ஸ் எல்லாத்தையும்
புட்டு புட்டு வச்சாருன்னா வசமா மாட்டிக்குவ.

கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் தபால்காரரை
தாஜா பண்ணி நானே வாங்கிடுவேன் அதனால நான் எத்தனை அரியர்
வச்சிருக்கேன்னு அப்பாவுக்கு தெரியாது. கொடுமை என்னன்னா எத்தனை
அரியர் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியாது. முதல் வருஷத்துல நடந்த ஜூனியர்
சீனியர் சண்டை உள்ள போய் வெளில வந்ததினால கல்லூரிக்கு கெட்ட பெயர்.
ரெண்டு செமஸ்டர் எக்சாம் எழுத தடை போட்டுட்டாங்க.

"மொத்தம் பதினெட்டு அரியர்ங்க காலேஜிக்கு கரெக்டா வந்தாலும் எந்த
பரிட்சையிலும் பாஸ் ஆகல" இவனெல்லாம் உருப்படவே மாட்டான்.

வெறுத்து போய்ட்டாரு அப்பா.

"படிக்கறதுக்கு புஸ்தகம் எதுவும் கிடைக்கலயா?"

"மவுனம்."

"படிக்கறதுக்கு இஷ்டம் இல்லயா?"

"மவுனம்"

"லவ்வு கிவ்வு பண்றியா?"

"மவுனம் கூடவே கொஞ்சம் கண்ணீர்"

ஒழுங்கா படிக்கலன்னாலும் பரவால்ல, ஒழுக்கங்கெட்டவன்னு யாரும் சொல்லிட
போறாங்க படிப்ப முடிச்ச உடனே வீட்டுல இருக்காத. எங்கயாவது போய்
பொழச்சிக்கோ அதுவரைக்கும் வீட்டுல இருந்துக்க. தீர்க்கமா சொல்லிட்டாரு

வாழ்க்கையே வெறுத்து போச்சி. அவனவன் கடைசி செமஸ்டருக்கு படிச்சிட்டு
இருக்கான் நான் என்னடான்னா மூணாவது செமஸ்டருக்கான பேப்பர படிச்சிட்டு
இருக்கேன். அஞ்சாவது வகுப்பு பையன ஒண்ணாவது வகுப்புல உக்கார வச்ச
மாதிரி. முதல் வருட பொண்ணுங்க கூடல்லாம் உக்காந்து தேர்வெழுதணும்
இதவிட ஒரு அவமானம் யாருக்கும் வந்துருக்குமான்னு தெரியல இருக்கறது
ஒரே செமஸ்டர்

வைராக்கியமா ஒரு முடிவெடுத்து சாம, பேத, தான, தண்டம், கொஞ்சம்
படிச்சி ஆறாவது செமஸ்டர்ல ஏதோ பேருக்கு பதினெட்டு பேப்பரும் எழுதி
வச்சி வீட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டேன்.

ரெண்டு மாசம் கழிச்சி HOD கிட்ட இருந்து போன்.

"சாதனை பண்ணிட்டப்பா நீ காலேஜ் சரித்திரத்துலயே அதிக அரியர் வச்சவனும்
நீதான் ஒரேடியா எல்லா பேப்பரையும் பாஸ் பண்ணவனும் நீதான்"

என்னால நம்பவே முடியல. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து எப்பவுமே என்னை
காப்பாத்திடுது.

அப்பாவுக்கு போன் பண்ணேன்.

"அப்பா நான் பாஸ் பண்ணிட்டேம்பா"

************************************

4. குறும்பு

நாங்க மட்டும் இல்லன்னா நீ ஏதாச்சும் ஒரு மார்க்கெட்ல கத்திரிக்கா கூறு கட்டி
வித்துகிட்டு இருந்திருப்ப. உன் நல்ல நேரம் எங்க கண்ணுல மாட்டிகிட்டன்னு
அம்மா அடிக்கடி சொல்வாங்க.

அப்போ திண்டிவனத்துல இருந்தோம். மருத்துவர் ஐயா ராமதாசு க்ளினிக்
பக்கத்துல நாலு பில்டிங் தள்ளிதான் நம்ம வீடுன்னு பின்னால அப்பா
சொல்லியிருக்கார்.

அப்போ எல்கேஜி கூட படிக்கல, ஏதோவொரு வெயில்காலம் அப்பாவுக்கு
அம்மை போட்டுருந்ததால என்னை முன்வீட்டில தூங்க வச்சிட்டு எல்லாரும்
பின்கட்டுல இருந்திருக்காங்க. பாட்டிகிட்ட தூங்கறேன்னு அம்மாவும், அம்மாகிட்ட
தூங்கறேன்னு பாட்டியும் என்னை தேடாம விட்டுட்டாங்க.விடிஞ்சி பார்த்தா
என்னை வீட்டுல காணும். ஒருநாள் முழுக்க தேடியும் கிடைக்கல.

மூணு வயசு பையன் ஒருத்தன் பஸ் சக்கரத்துல சிக்கி நசுங்கி போயிட்டான்னு
ஒருத்தர் கொளுத்தி போடவே எல்லாரும் அழுது பொறண்டு ஆஸ்பத்திரிக்கு
ஓடியிருக்காங்க. அங்க ஒருத்தர் மார்க்கெட் பக்கம் அனாதையா ஒரு பையன்
சுத்திகிட்டு இருந்தான் மேல்சட்டை போடாமன்னு சொல்லவே அங்க போய்
பாத்திருக்காங்க.

அங்க நான் அமைதியாக உக்காந்து கத்திரிக்கா கூறு கட்டிகிட்டு இருந்தனாம்.
யார் கூப்பிட்டும் வரல.

உண்மையாவே உன் பையனா இருந்தா உன்ன பாத்ததும் ஓடி வந்திருப்பான்ல
ஏம்மா பொய் சொல்றன்னு மார்கெட்ல இருந்தவங்க எல்லாம் விரட்ட
ஆரம்பிச்சிட்டாங்க

"எனக்கே தத்துக் குடுத்துடும்மா இந்த புள்ளய"ன்னு அந்த பாட்டி அழுதுட்டாங்க.

ஒருவழியா குடும்ப பாட்டையெல்லாம் பாடி கூட்டிவந்தாங்க.

**********************************
5.காடு

காடு ரொம்ப அழகானது யாருமே இல்லாத இடத்தில ஒருநாளை செலவு
பண்ணோம்னா மனசுல இருக்க அத்தனை பாரமும் எங்க போச்சுன்னே
தெரியாது. பக்கத்துலயே கல்வராயன் மலை இருக்கறதுனால நினைச்ச
நேரத்துக்கு போகலாம் வரலாம். விதவிதமான மரங்கள், சுத்தமான காத்து,
நீர்வீழ்ச்சின்னு நிறைய இருக்கும். வெளில இருந்து வர்றவங்கதான் அங்கங்க
கன்னாபின்னான்னு எழுதி வச்சி பாறைய அசிங்கப்படுத்தறானுங்க. சில
பேர் காதல் கவுஜைய எழுதி வச்சி அங்கயே மருந்து குடிச்சி மண்டைய
போட்டு மலையையே ஒரு மர்ம பிரதேசம் ரேஞ்சுக்கு ஆக்கி
வச்சிட்டானுங்க.

எனக்கு இருக்கற ஒரே பிரச்சினை ரொம்ப தூரம் நடந்ததும் ஆரம்பிச்ச
இடத்துக்கு எப்படி வர்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிட்டு இருப்பேன்.
தெய்வாதீனமா யாராச்சும் ஆடு, மாடு மேய்க்கறவங்க வந்தாங்கன்னா அவங்க
கூடவே நடந்து வந்து பஸ் பிடிச்சி வீட்டுக்கு போயிடுவேன்.

பாக்கெட் தண்ணி, பிஸ்லரி, அக்குவாபினா இதுபோல என்னென்னமா
சுத்திகரிப்பு பண்ணி ஒரிஜினல் குடிதண்ணின்னு ஏமாத்துவானுங்க. ஆனா
மலைல கிடைக்கற தண்ணிக்கு ஈடாகாது குடிச்சதும் அடிவயிறு சில்லுன்னு
அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். இதுக்காகவே மலைக்கு அடிக்கடி போவேன்.

**********************************

6. குழந்தைகள்

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

அம்மா சமையல்கட்டுல பிசியா இருப்பாங்க, வேலைக்கு போறவங்களாவும்
இருப்பாங்க, அப்பா குழந்தைங்ககிட்ட அதிகம் பேச மாட்டாங்க. யார்கிட்டயும்
பேசாம மூலைல பையன் உக்காந்துட்டான்னா மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.
அதனால கிடைக்கற நேரத்துல குழந்தைங்ககிட்ட எதையாவது பேச ஆரம்பிச்சி
விட்டா அவங்க போதும் பேசிகிட்டே இருப்பாங்க. முக்கியமா பெரியவர்கள்
அப்படின்ற விஷயத்தை மறந்துபோய் குழந்தையா மாறி பேச ஆரம்பிக்கணும்
இல்லன்னா கூச்சப்பட்டு ஒரு சில வார்த்தைகள்ல பதில் சொல்லிட்டு ஓடிடும்.

குழந்தைங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் ஸ்கூல்ல மிஸ் சொன்ன கதைய
சொல்றா மாப்ளன்னு அக்கா பையன கேட்டோம்னு வைங்க அவங்க சொல்லாத
கதைய இவன் எங்கங்கோ கொண்டு போய் கேக்கறவன் கேணைன்ற மாதிரி
முடிப்பாரு சிரிச்சிகிட்டே கேட்டோம்னா இன்னும் பல கதைகள் சொல்வாரு.

ஓட்டல்ல, பஸ்ல, கல்யாணத்துல, இப்படி எங்க குழந்தைகள பார்த்தாலும்
கண்ண சிமிட்டி, முகபாவனைகள் காட்டி, கன்னா பின்னான்னு சேட்டை
செஞ்சு அந்த குழந்தை நம்மளயே பாத்துகிட்டு இருக்கறமாதிரி செஞ்சுடுவேன்.
ஒரு சில குழந்தைங்க பாதில நம்ம சேட்டைய பாத்து அழ ஆரம்பிச்சுடும்.
(நம்ம முகராசி அப்படி)


****************************************************************************

எழுதி முடிச்சி வாசிச்சா வியர்டு பதிவு மாதிரி இருக்கு சரி இவ்வளவு தூரம்
கஷ்டப்பட்டு டைப் பண்ணியாச்சு வேற வழியில்ல மக்கா. எழுதனதுலயே
இந்த பதிவுதான் ரொம்ப பெரியதா இருக்கு. :(

நான் மூணு பேர கூப்பிடணும்ல.


அபிஅப்பா (இவருக்கு பஞ்சாயத்துராஜ்னு ஒரு புது பேர் வச்சிருக்காங்க)
அவந்திகா (கிரிக்கெட் பத்தி நிறைய சொல்றாங்க இப்ப என்ன சொல்ல
போறாங்கன்னு பார்ப்போம்)
அய்யனார் (இவர் எழுதற கவிதை (கவுஜ இல்லிங்க) ரொம்ப அழகா நளினமா
இருக்கு, சமீபத்தில் கிடைத்த நல்ல நண்பர்)

அழகு எல்லாமே "அ" வரிசைல வர்ற மாதிரி இருக்குல்ல :))

58 comments:

கதிர் said...

அய்யய்யோ பெரிய மொக்கை பதிவா போயிடுச்சு :((((

வெட்டிப்பயல் said...

5 பகுதியா போட வேண்டியத ஒரே பகுதில போட்டுட்ட... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...

பொறுமையா வரேன்...

மணிகண்டன் said...

அழகெல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க..ஒன்னே ஒன்னு கேக்கனும் உங்களை.


ஏம்பா தம்பி, கத்திரிக்கா கிலோ என்ன வெல?

இலவசக்கொத்தனார் said...

"அ"வில் ஆரம்பிக்கும் மூணு பேரா!! அடுத்து அவங்க என்ன 'ஆ'வில் ஆரம்பிக்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லையே!!

என்ன இது டாபிக் எல்லாம் மாத்தி அட்டகாசம். மத்தது எல்லாம் வந்து சொல்லறேன்.

துளசி கோபால் said...

உக்கும்.......... ரொம்ப அழகுதான்,போ(ங்கோ)!

Anonymous said...

"சாதனை பண்ணிட்டப்பா நீ காலேஜ் சரித்திரத்துலயே அதிக அரியர் வச்சவனும்
நீதான் ஒரேடியா எல்லா பேப்பரையும் பாஸ் பண்ணவனும் நீதான்"

Best in all .

வடுவூர் குமார் said...

தம்பி
இந்த பதிவை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.அவ்வளவு அருமை.
ஒரு கிராமத்துக்குப்போய் நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிவிட்டு,மலையடிக்கு போய் சில்லென்று தண்ணீர் குடித்துவிட்டு....இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்,அவ்வளவு அன்யோன்யமாக இருந்தது.
தயவு செய்து யாரும் இந்த விளையாட்டுக்கு என்னை கூப்பிடாதீர்கள்,இது போல் சத்தியமாக என்னால் எழுத முடியாது. :-))
வாழ்த்துக்கள் தம்பி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்லா எழுதியிருக்கீங்க தம்பி

-மதி

Ayyanar Viswanath said...

நல்ல பதிவு தம்பி

கொஞ்சம் ஆச்சர்யமாவும் இருந்தது அட இதெல்லாம் நமக்கும் நிகழ்ந்ததாச்சே ன்னு ..கிராமத்தை வேர்களா கொண்ட எல்லா இளைஞர்கள் மனசுக்குள்ளயும் ஒரு ராஜேஸ்வரி இருக்கா..மத்தபடி இந்த நாடோடி வாழ்க்கையில வீடு சார்ந்த சுகங்களுக்கான ஏக்கம் எப்பொதுமிருக்கு

அழகான பதிவு ப்பா..

கதிர் said...

//5 பகுதியா போட வேண்டியத ஒரே பகுதில போட்டுட்ட... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...//

என்ன பண்றதுப்பா நமக்கு நிறைய தோணுதே :))

//பொறுமையா வரேன்... //

பொறுமையா வா, ஆனா வரணும்.

//மணிகண்டன் said...
அழகெல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க..ஒன்னே ஒன்னு கேக்கனும் உங்களை.


ஏம்பா தம்பி, கத்திரிக்கா கிலோ என்ன வெல? //

ஹி ஹி தெரிலங்க :)) ஆனா அடுத்த ஒவ்வொரு முறை அப்பா மார்க்கெட் போகும்போதும் காய்கறி வாங்கினா அந்த பாட்டிகிட்டதான் வாங்குவாங்க, எவ்வளவு சொன்னாலும் காசு வாங்கிக்கவே மாட்டாங்க. அந்த நிகழ்வுக்கப்புறம் அவங்கள நான் பார்த்ததுமில்ல :((

//"அ"வில் ஆரம்பிக்கும் மூணு பேரா!! அடுத்து அவங்க என்ன 'ஆ'வில் ஆரம்பிக்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லையே!! //

இல்லை :))

//என்ன இது டாபிக் எல்லாம் மாத்தி அட்டகாசம். மத்தது எல்லாம் வந்து சொல்லறேன். //

நன்றி தல, கண்டிப்பா வாங்க கருத்தை சொல்லுங்க.

கதிர் said...

//உக்கும்.......... ரொம்ப அழகுதான்,போ(ங்கோ)! //

வாங்க டீச்சர் :)
போன்னு ஒருமைலயே சொல்லலாம் தவறில்லை.

அந்த "உக்கும்" என்ன அர்த்தம்னே சத்தியமா தெரியல :))

//சாதனை பண்ணிட்டப்பா நீ காலேஜ் சரித்திரத்துலயே அதிக அரியர் வச்சவனும்
நீதான் ஒரேடியா எல்லா பேப்பரையும் பாஸ் பண்ணவனும் நீதான்"

Best in all . //

நன்றிங்க அனானி

//தம்பி
இந்த பதிவை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.அவ்வளவு அருமை.
ஒரு கிராமத்துக்குப்போய் நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிவிட்டு,மலையடிக்கு போய் சில்லென்று தண்ணீர் குடித்துவிட்டு....இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்,அவ்வளவு அன்யோன்யமாக இருந்தது.
தயவு செய்து யாரும் இந்த விளையாட்டுக்கு என்னை கூப்பிடாதீர்கள்,இது போல் சத்தியமாக என்னால் எழுத முடியாது. :-))
வாழ்த்துக்கள் தம்பி. //

குமார் உள்ளத்தில் உள்ள அழகை அப்படியே சொல்லிட்டேன். இது போல இல்ல இத விட சூப்பரா எழுதுவிங்க. உங்களுக்கும் இது ஒருநாள் வரும். :))

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க வடுவூர் குமார்!!

இராம்/Raam said...

கதிரு,

அட்டகாசமான பதிவுப்பா :)

நானும் அந்த மாதிரி தொலைஞ்சு போயி ருக்கேன்..... அது பெரிய காமெடி கதை.. அதைப்பத்தி எழுத வாய்ப்பு கிடைச்ச எழுதுறேன்.

எங்க வீட்டிலே என்னை வையிறப்போ கூட "தொலைஞ்சு போடா"ன்னு கூட திட்டமாட்டாங்க... :)

அப்புறம் அந்த தூக்கம் 'அடடா நம்ம வீட்டுலே வர்றதுக்கு இருக்கே! சொகம்மய்யா' :)

கதிர் said...

//நல்லா எழுதியிருக்கீங்க தம்பி

-மதி //

நன்றிங்க மதி கந்தசாமி அய்யா!
முன்னர் இப்படிதான் பதில் சொல்லியிருக்கேன் உங்களுக்கு. :) அதை பார்த்ததும் சிரிச்சிருப்பிங்கல்ல, கூடவே சின்னதா கோவமும் வந்திருக்கும்.

ரொம்ப நாள் கழிச்சிதான் நீங்கள் ஒரு பெண் என்று தெரிந்து கொண்டேன்.

நன்றிங்க மதி அக்கா.

கதிர் said...

//நல்ல பதிவு தம்பி//

நன்றி அய்யனார்.

//கொஞ்சம் ஆச்சர்யமாவும் இருந்தது அட இதெல்லாம் நமக்கும் நிகழ்ந்ததாச்சே ன்னு ..கிராமத்தை வேர்களா கொண்ட எல்லா இளைஞர்கள் மனசுக்குள்ளயும் ஒரு ராஜேஸ்வரி இருக்கா..மத்தபடி இந்த நாடோடி வாழ்க்கையில வீடு சார்ந்த சுகங்களுக்கான ஏக்கம் எப்பொதுமிருக்கு //

சரியா சொன்னிங்க.
அப்ப உங்க ராஜேஸ்வரி பத்தி எழுதுங்க வாசிக்க ஆவலா இருக்கேன்.

//அழகான பதிவு ப்பா.. //
மீண்டும் நன்றிகள்.

கதிர் said...

//கதிரு,

அட்டகாசமான பதிவுப்பா :)//

நன்றி ராம் அண்ணே, நீங்கதான் சொன்னிங்க வித்தியாசமா எழுதுப்பான்னு.

//நானும் அந்த மாதிரி தொலைஞ்சு போயி ருக்கேன்..... அது பெரிய காமெடி கதை.. அதைப்பத்தி எழுத வாய்ப்பு கிடைச்ச எழுதுறேன்.//

நமக்கு காமெடியா இருக்கும், பெத்தவங்களுக்கு ட்ராஜடியா இருந்திருக்கும். கண்டிப்பா எழுதுங்க.

//எங்க வீட்டிலே என்னை வையிறப்போ கூட "தொலைஞ்சு போடா"ன்னு கூட திட்டமாட்டாங்க... :)//

அதான் பாசம்.

//அப்புறம் அந்த தூக்கம் 'அடடா நம்ம வீட்டுலே வர்றதுக்கு இருக்கே! சொகம்மய்யா' :) //

கரெக்டா சொன்னிங்க. :)

அபி அப்பா said...

தம்பி இது மொக்கை பதிவுன்னு யார் சொன்னாங்க, பெருசா இருப்பதால நான் இப்போதான் பொருமையா படிச்சேன், ரொம்ப அருமை, ஆனாலும் நீங்க பாவனாவையும் 6ல்1ஆ சேத்திருக்கலாம்:-))

அபி அப்பா said...

//ஏம்பா தம்பி, கத்திரிக்கா கிலோ என்ன வெல? //

தம்பி நானும் ஒன்னு கேட்டுகிறேன், "முருங்கை காய் கடை எங்கப்பா இருக்கு?"

அபி அப்பா said...

நம்ம மாட்டிவிடுவதில் என்ன மகிழ்வோ? அழகுதான...எழுதிடுவோம்:-)

கோபிநாத் said...

அருமையாக இருக்கு கதிர் ;-)

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

CVR said...

மிக அழகான பதிவு!
எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருந்தது!!

வாழ்த்துக்கள்! :-)

Avanthika said...

அண்ணா..

பார்த்தீங்களா 'A' ல பேரு ஆரம்பிச்சா எங்க போனாலும் மாட்டிக்குவோம்... எனக்கு இது எல்லாம் எழுத தெரியாதே..வேனா எல்லாரும் எழுதினதுல எனக்கு பிடிச்ச அழகு எல்லாம் copy and paste பண்ணீடறேன்..

இலவசக்கொத்தனார் said...

வரேன்னு சொன்னேன் இல்ல. வந்தாச்சு!

1) ஆக மொத்தம் அந்த பிள்ளை பேரில் ஒரு கண்ணு இருந்தது போல. பின்ன அப்பாரு காட்டுப் பக்கம் போன்னா மாட்டேன்னு சொன்ன புள்ள அன்னிக்கு கரும்பு வெட்டயில ஏன் போகணும்?

2) //பையன்
தூங்குறானேன்னு தூக்கம் கலையாம தலையணைய சொருகி விடுவாங்க.//

பாத்துப்பா அதெல்லாம் அங்கதான். இங்க கொஞ்சம் அசந்தா பேண்டையே உருவிடுவாங்க. ஜாக்கிரதை.

3) அரியர்ஸ் வெச்சு அது பாஸ் பண்ணினது எல்லாம் ஒரு நிகழ்வு. அதை வேற இப்படி பப்ளிக்குல பெருமையா சொல்லற. அதுக்கு கைத்தட்டி ஏத்தி விட நாலு பேரு. நல்லா இருக்குங்கடா உங்க ஆட்டம்.

4) //ஒருவழியா குடும்ப பாட்டையெல்லாம் பாடி கூட்டிவந்தாங்க.//

போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு பாட்டா இல்லை லூசுப் பையா லூசுப் பையா லூசுப் பையா உம்மேலதான் லூசுப் பாட்டி லூசா இருக்குறா பாட்டா? :))

5) //எனக்கு இருக்கற ஒரே பிரச்சினை ரொம்ப தூரம் நடந்ததும் ஆரம்பிச்ச
இடத்துக்கு எப்படி வர்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிட்டு இருப்பேன்.//

ஏற்கனவே எல்லாம் காட்டுப்பய அப்படின்னு சொல்லறாங்க. அங்க இருக்கவும் லாயக்கில்லை அப்படின்னு வேற படம் போட்டுக் காட்டணுமா? காட்டுல போயி மேல சொன்ன தூக்கத்தைப் போட்டுப்பிடாதேயும், அப்புறமா கரடியின் குளிர்கால உறக்கம் அப்படின்னு பத்திரிகையில் வரப் போகுது.

5) //ஓட்டல்ல, பஸ்ல, கல்யாணத்துல, இப்படி எங்க குழந்தைகள பார்த்தாலும்
கண்ண சிமிட்டி, முகபாவனைகள் காட்டி, கன்னா பின்னான்னு சேட்டை
செஞ்சு அந்த குழந்தை நம்மளயே பாத்துகிட்டு இருக்கறமாதிரி செஞ்சுடுவேன்.//

ஆக மொத்தம் இந்த வேலை போச்சுன்னா சர்கஸ்ல சேரலாம்.

இதெல்லாம் போகட்டும். ஆனா கடைசியில் //அபிஅப்பா// இப்படி உன்னை நீயே கூப்பிட்டுக்கறது உனக்கே ஓவராத் தெரியலை?!!!

தென்றல் said...

தம்பி, எல்லா அழகுகளும் அழகு!

/ஒரு சில குழந்தைங்க பாதில நம்ம சேட்டைய பாத்து அழ ஆரம்பிச்சுடும்.
(நம்ம முகராசி அப்படி)
/
ஆஹா...ஆஹா...குழந்தைங்கதான-ங்க..!?

கதிர் said...

//தம்பி இது மொக்கை பதிவுன்னு யார் சொன்னாங்க, பெருசா இருப்பதால நான் இப்போதான் பொருமையா படிச்சேன், ரொம்ப அருமை, ஆனாலும் நீங்க பாவனாவையும் 6ல்1ஆ சேத்திருக்கலாம்:-)) //

நாந்தாங்க சொன்னேன்.
பாவனா....
அட விடுங்க நேத்து ஒரு நூஸ் கேள்விப்பட்டேன் பாவனா பொண்ணு ஏதோ டைரக்டர லவ்வுதாம், கல்யாணமும் ஆகப்போகுதாம். :(

கதிர் said...

//தம்பி நானும் ஒன்னு கேட்டுகிறேன், "முருங்கை காய் கடை எங்கப்பா இருக்கு?" //

வலையுலக பாக்யராஜ்னு சும்மாவா வைச்சாங்க பேரு :))

//நம்ம மாட்டிவிடுவதில் என்ன மகிழ்வோ? அழகுதான...எழுதிடுவோம்:-) //

எழுதுங்க சார் ஓவர் பந்தா காமிக்க கூடாது.

கதிர் said...

//அருமையாக இருக்கு கதிர் ;-)

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க //

எலே இத டெம்ப்ளேட்டாவே வச்சிருக்கியா நீ!

எப்படியோ வாழ்த்திட்ட ரொம்ப நன்றி!

கதிர் said...

//மிக அழகான பதிவு!
எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருந்தது!!

வாழ்த்துக்கள்! :-) //

வாங்க தமிழ்மணத்தை கடத்தியவரே!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

கதிர் said...

//அண்ணா..

பார்த்தீங்களா 'A' ல பேரு ஆரம்பிச்சா எங்க போனாலும் மாட்டிக்குவோம்... எனக்கு இது எல்லாம் எழுத தெரியாதே..வேனா எல்லாரும் எழுதினதுல எனக்கு பிடிச்ச அழகு எல்லாம் copy and paste பண்ணீடறேன்.. //

வாங்க அவந்திகா!

சும்மா எழுதுங்க நானெல்லாம் எழுதல...
எழுத ஆரம்பிச்சா தானா வந்துடும்.

என்னது காபி பேஸ்ட் பண்ணுவிங்களா?
இந்த அழுகுணி ஆட்டம்தான வேணாங்கறது.

எப்படியோ உங்க இஷ்டம்.

எழுதலன்னா அழகை பத்தி நீங்க என்ன நினைக்கறிங்கன்னு தெரியாமல் போயிடும் :(

காட்டாறு said...

அழகு அழகுதான்! அருமையா எழுதியிருக்கிறீங்க. அதுவே அழகுதான்!

//ரொம்ப
நேரம் கதவ தட்டி பாத்துட்டு கதவு திறக்காமல் போகவே புள்ளைக்கு என்ன
ஆச்சோ ஏதாச்சோன்னு கூரைய பிரிச்சி பாத்து தண்ணி ஊத்திருக்காங்க.
//

இது போல நமக்கும் நடந்திருக்குது.

கதிர் said...

//1) ஆக மொத்தம் அந்த பிள்ளை பேரில் ஒரு கண்ணு இருந்தது போல. பின்ன அப்பாரு காட்டுப் பக்கம் போன்னா மாட்டேன்னு சொன்ன புள்ள அன்னிக்கு கரும்பு வெட்டயில ஏன் போகணும்? //

ஒரு கண்ணு இல்லிங்க ரெண்டு கண்ணும்தான் இருந்துச்சி. கரும்பு வெட்டையில போனா அடிக்கரும்பு சாப்பிடலாம்ல அதுக்குதான். நீங்க நினைக்கற மாதிரி இல்லிங்க கொத்ஸ்.
அந்த வயசில விவரம் பத்தலங்கறதுதான் உண்மை.

//2) //பையன்
தூங்குறானேன்னு தூக்கம் கலையாம தலையணைய சொருகி விடுவாங்க.//

பாத்துப்பா அதெல்லாம் அங்கதான். இங்க கொஞ்சம் அசந்தா பேண்டையே உருவிடுவாங்க. ஜாக்கிரதை.//

பஜார்ல உஜாரா இல்லன்னா நிஜார அவுத்துடுவாங்கன்னு எனக்கும் தெரியும். இந்த சூது வாது எல்லாம் அத்துபடி.

//அரியர்ஸ் வெச்சு அது பாஸ் பண்ணினது எல்லாம் ஒரு நிகழ்வு. அதை வேற இப்படி பப்ளிக்குல பெருமையா சொல்லற. அதுக்கு கைத்தட்டி ஏத்தி விட நாலு பேரு. நல்லா இருக்குங்கடா உங்க ஆட்டம். //

தல ஒரு அரியராச்சும் வாச்சிருக்கிங்களா நீங்க???. வச்சிருந்தாதான் அந்த கஷ்டமெல்லாம் தெரியும், சோ தெரியாம பேசறது தப்பு.

//4) //ஒருவழியா குடும்ப பாட்டையெல்லாம் பாடி கூட்டிவந்தாங்க.//

போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு பாட்டா இல்லை லூசுப் பையா லூசுப் பையா லூசுப் பையா உம்மேலதான் லூசுப் பாட்டி லூசா இருக்குறா பாட்டா? :))//

அப்போல்லாம் அந்த பாட்டு வரல கொத்ஸ். குருவியார் கேள்வி மாதிரி லாஜிக்கே இல்லாம கேக்கறிங்களே :))

//5) //எனக்கு இருக்கற ஒரே பிரச்சினை ரொம்ப தூரம் நடந்ததும் ஆரம்பிச்ச
இடத்துக்கு எப்படி வர்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிட்டு இருப்பேன்.//

ஏற்கனவே எல்லாம் காட்டுப்பய அப்படின்னு சொல்லறாங்க. அங்க இருக்கவும் லாயக்கில்லை அப்படின்னு வேற படம் போட்டுக் காட்டணுமா? காட்டுல போயி மேல சொன்ன தூக்கத்தைப் போட்டுப்பிடாதேயும், அப்புறமா கரடியின் குளிர்கால உறக்கம் அப்படின்னு பத்திரிகையில் வரப் போகுது. //

எல்லாரும் சொல்றாங்களா, இல்ல நீங்க மட்டும் சொல்றிங்களா? சொன்னா நம்ப மாட்டிங்க அந்த மலையில கரடி அட்டகாசம் பயங்கரமா இருக்கும். ஆனா "மான்"களை மட்டும்தான் பாப்பேனாக்கும்.

//ஓட்டல்ல, பஸ்ல, கல்யாணத்துல, இப்படி எங்க குழந்தைகள பார்த்தாலும்
கண்ண சிமிட்டி, முகபாவனைகள் காட்டி, கன்னா பின்னான்னு சேட்டை
செஞ்சு அந்த குழந்தை நம்மளயே பாத்துகிட்டு இருக்கறமாதிரி செஞ்சுடுவேன்.//

ஆக மொத்தம் இந்த வேலை போச்சுன்னா சர்கஸ்ல சேரலாம்.//

சர்க்கஸ்ல சேர இது போதுங்களா?
இது தெரியாம போச்சே!


//இதெல்லாம் போகட்டும். ஆனா கடைசியில் //அபிஅப்பா// இப்படி உன்னை நீயே கூப்பிட்டுக்கறது உனக்கே ஓவராத் தெரியலை?!!! ///

அடங்கொக்க மக்கா. இது வெளிநாட்டு சதி யாரும் நம்பாதிங்க.

உங்களுக்கே ஓவரா தெரியல இந்த மாதிரி புரளி கிளப்பி விட!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//நன்றிங்க மதி கந்தசாமி அய்யா!
முன்னர் இப்படிதான் பதில் சொல்லியிருக்கேன் உங்களுக்கு. :) அதை பார்த்ததும் சிரிச்சிருப்பிங்கல்ல, கூடவே சின்னதா கோவமும் வந்திருக்கும்.

ரொம்ப நாள் கழிச்சிதான் நீங்கள் ஒரு பெண் என்று தெரிந்து கொண்டேன்.

நன்றிங்க மதி அக்கா.//

:))

பக்கத்தில இருந்து பார்த்தமாதிரிச் சொல்லுறீங்க. :) கோபம் பெருசா வரலை. ஏன்னா, உங்க இடுகைகளில சிலதைப் பிடிக்கும். அதுவேற ஆ.வி.ல வந்த நகுலன் கவிதைகளை எடுத்துப்போட்டுச் சிலாகித்திருந்ததும் உடன நினைவுக்கு வந்தது. அதனால கோபம் வரலை.

அப்படியே மதின்னு கூப்பிட்டீங்கன்னா இனியும் கோபம் வராது. ;)

இந்த வாரம் உங்களுடைய இந்த இடுகை, ஆழியூரானுடைய கிறுக்கு இடுகையும் மனதைத் தொட்டன.

நன்றி தம்பி!

-மதி

ஜி said...

தம்பி...

நீங்க இது மாதிரியும் எழுதுவீங்களா??
அசத்திட்டீங்க... இத நட்சத்திர வாரத்துல போட்டிருந்தா, இதுதான் நட்சத்திர நட்சத்திரம்.....

ஆரம்பமே இப்படி உணர்ச்சிபூர்வமா இருக்குதே... தொடர்ச்சி அசத்தலா போகும்னு நெனக்கிறேன் :))

Santhosh said...

தம்பி உன்னால கூட இப்படி டச்சிங்கா எழுத முடியுமா? கலக்கலா எழுதி இருக்கே. வீட்டு நியாபகம் வந்துடிச்சிப்பா :(.

கதிர் said...

//தென்றல் said...
தம்பி, எல்லா அழகுகளும் அழகு!//

வாங்க தென்றல்,

நன்றிங்க!

/ஒரு சில குழந்தைங்க பாதில நம்ம சேட்டைய பாத்து அழ ஆரம்பிச்சுடும்.
(நம்ம முகராசி அப்படி)

ஆஹா...ஆஹா...குழந்தைங்கதான-ங்க..!? //

ஹி ஹி, பல சமயம் குழந்தைங்கதான்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தூக்கம்ன்னா என்ன விலைன்னு கேட்டு
வாங்கித்தான் வச்சுக்கனும் நான்..
பரவால்ல குடுத்துவச்சவர் தம்பி நீங்க.

முடிச்சுடனும்ன்னு நினைச்சு ஒரேடியா எல்லாத்தையும் பாஸ் பண்ண கதை
கேட்டு நல்ல அழகு தான்னு நினைச்சுக்கிட்டேன்.

ரொம்ப பெரிசா இருந்ததால அப்பறம் படிக்கலாம்ன்னு தான் இருந்தேன். நானும் இதே குழந்தைகள் இயற்கை[காடு ] தான் எழுதினேன்.

அழகெல்லாம் அழகா பதிஞ்சிட்டிங்க.

கதிர் said...

//காட்டாறு said...
அழகு அழகுதான்! அருமையா எழுதியிருக்கிறீங்க. அதுவே அழகுதான்! //

நன்றிங்க காட்டாறு!

//ரொம்ப
நேரம் கதவ தட்டி பாத்துட்டு கதவு திறக்காமல் போகவே புள்ளைக்கு என்ன
ஆச்சோ ஏதாச்சோன்னு கூரைய பிரிச்சி பாத்து தண்ணி ஊத்திருக்காங்க.
//

இது போல நமக்கும் நடந்திருக்குது. //

:))

கதிர் said...
This comment has been removed by the author.
கண்மணி/kanmani said...

தம்பி 'ஞாபகம் வருதே' பாட்டு எங்கோ தூரத்துல கேக்கிறமாதிரி இருக்கு .பழைய நினைவுகள்ல மூழ்கறது சுகம்தான்.
ஆனாப் பாருங்க நட்சத்திரம் ஆன பின்னாடி ரொம்ப சாதுவாயிட்டீங்க.பொறுப்பான பதிவுகளாயிருக்கு[ பாவனா மேட்டர் தவிர]

இலவசக்கொத்தனார் said...

//ஆனாப் பாருங்க நட்சத்திரம் ஆன பின்னாடி ரொம்ப சாதுவாயிட்டீங்க.பொறுப்பான பதிவுகளாயிருக்கு//

ஐய்யய்யோ, என்ன தம்பி இது? உடம்பு கிடம்பு சரியில்லையா? இல்லை தங்கமணி எபக்ட்டா? பார்த்துப்பா.

கதிர் said...

//பக்கத்தில இருந்து பார்த்தமாதிரிச் சொல்லுறீங்க. :) கோபம் பெருசா வரலை. ஏன்னா, உங்க இடுகைகளில சிலதைப் பிடிக்கும். அதுவேற ஆ.வி.ல வந்த நகுலன் கவிதைகளை எடுத்துப்போட்டுச் சிலாகித்திருந்ததும் உடன நினைவுக்கு வந்தது. அதனால கோபம் வரலை.//

நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு :))
நீங்க பின்னூட்டமிட்டால் அது நல்ல இடுகையாகதான் இருக்கும் முன்னாடி ரெண்டு மூணு பின்னூடம் வந்திருக்கு.

//அப்படியே மதின்னு கூப்பிட்டீங்கன்னா இனியும் கோபம் வராது. ;)//

இல்லயே மதி அக்கான்னுதானே சொன்னேன்.

//இந்த வாரம் உங்களுடைய இந்த இடுகை, ஆழியூரானுடைய கிறுக்கு இடுகையும் மனதைத் தொட்டன.

நன்றி தம்பி!

-மதி //

மிக்க நன்றி மீண்டும் வருகை தந்தமைக்கு!

கதிர் said...

தம்பி...

//நீங்க இது மாதிரியும் எழுதுவீங்களா??
அசத்திட்டீங்க... இத நட்சத்திர வாரத்துல போட்டிருந்தா, இதுதான் நட்சத்திர நட்சத்திரம்.....//

என்ன பண்றது ஜியா சில நேரத்துல தவறுதலா இப்படி ஆகிபோகுது. நட்சத்திர வாரத்துல எழுதன பதிவுலாம் நல்லா இல்லன்னு சொல்ல வர்ற அதான...

//ஆரம்பமே இப்படி உணர்ச்சிபூர்வமா இருக்குதே... தொடர்ச்சி அசத்தலா போகும்னு நெனக்கிறேன் :)) //

உங்க கைக்கு வரும்போது இன்னும் அசத்தலா எழுதுங்க ஜியா!

MyFriend said...

நீங்களும் ஒரு டேக் கேமை ஆரம்பிச்சிட்டீங்களா?

MyFriend said...

நானும் நீங்க வியர்ட்டு பாதிவுதான் எழுதியிருக்கீரோன்னு நெனச்சேன்.. ;-)

MyFriend said...

கூரையை பிச்சு தண்ணி ஊத்துற அளவுக்கு உங்களுக்கு தூக்கமா? இப்பவாவது எழுந்திரிச்சிருவீங்களா? இல்லை நண்பர்கள் தினமும் தண்ணி ஊத்திதான் எழுப்புவாங்களா? :-P

யாழினி அத்தன் said...

அற்புதம்.

அரியர்ஸ் வச்சிருந்தாலும் அற்புதமா எழுதறீங்க. பொதுவா ஒரு பக்கத்துக்கு மேல இருந்தா படிக்க எனக்கு பொறுமை இருக்காது. உங்க பதிவ படிச்சா நேரம் போறதே தெரியல. ஒரு அப்பட்டமான எதார்த்தம்.

நிறைய எழுதுங்க.

இலவசக்கொத்தனார் said...

//கூரையை பிச்சு தண்ணி ஊத்துற அளவுக்கு உங்களுக்கு தூக்கமா? இப்பவாவது எழுந்திரிச்சிருவீங்களா? இல்லை நண்பர்கள் தினமும் தண்ணி ஊத்திதான் எழுப்புவாங்களா? :-P//

நீங்க வேற, இப்போ எல்லாம் மாப்பிள்ளைக்கு நண்பர்கள் தண்ணி ஊத்தினாதான் தூக்கமேவாம்!!

இலவசக்கொத்தனார் said...

//நீங்களும் ஒரு டேக் கேமை ஆரம்பிச்சிட்டீங்களா?//

மை பிரண்ட் நம்ம பக்கமுல்லாம் வராததுனால உங்களுக்கு விஷயமே தெரியலை பார்த்தீங்களா? இனிமேலாவது வாங்க.

வெட்டிப்பயல் said...

தம்பி,
அழக அழகா சொல்லியிருக்க...

வார்த்தைகளே வரவில்லை... பாராட்ட.

சுந்தர் / Sundar said...

"முத்தழகு" -- அருமையான பதிவு - அனுபவித்து வாசித்தேன் ! வாழ்த்துக்கள்

கதிர் said...

//நீங்களும் ஒரு டேக் கேமை ஆரம்பிச்சிட்டீங்களா? //

நான் இல்லிங்கோ, எதுவா இருந்தாலும் இலவசத்த கேளுங்கோ.

//நானும் நீங்க வியர்ட்டு பாதிவுதான் எழுதியிருக்கீரோன்னு நெனச்சேன்.. ;-)//

அப்படிதாங்க இருக்கு.

//கூரையை பிச்சு தண்ணி ஊத்துற அளவுக்கு உங்களுக்கு தூக்கமா? இப்பவாவது எழுந்திரிச்சிருவீங்களா? இல்லை நண்பர்கள் தினமும் தண்ணி ஊத்திதான் எழுப்புவாங்களா? :-P //

இல்லிங்க இப்பலாம் நானாவே அலாரம் வச்சிட்டு எந்திர்ச்சிடுவேன்.
வேற வழி இல்ல. கொஞ்சம் லேட் ஆனாலும் எல்லா வேலையும் கெட்டு போயிடுது. :(

அம்பது :)

கதிர் said...

//நீங்க வேற, இப்போ எல்லாம் மாப்பிள்ளைக்கு நண்பர்கள் தண்ணி ஊத்தினாதான் தூக்கமேவாம்!! //

இது அக்மார்க் வதந்தி!

கதிர் said...

//மை பிரண்ட் நம்ம பக்கமுல்லாம் வராததுனால உங்களுக்கு விஷயமே தெரியலை பார்த்தீங்களா? இனிமேலாவது வாங்க. //

அகாம்பா நல்லா சொல்லுங்க.

கதிர் said...

//தம்பி,
அழக அழகா சொல்லியிருக்க...

வார்த்தைகளே வரவில்லை... பாராட்ட. //

அந்தளவுக்கு நல்லாவா இருக்கு. மனசுல இருந்து வர்றதுனால நல்லா இருக்குதோ என்னவோ!

ரொம்ப நன்றி வெட்டி!

கதிர் said...

//"முத்தழகு" -- அருமையான பதிவு - அனுபவித்து வாசித்தேன் ! வாழ்த்துக்கள் //

மிக்க நன்றி சுந்தர்.

தமிழ்நதி said...

ஐயையோ...!இடம்,குறும்பு... இப்பிடி இதுக்குன்னு சில விதிகள் இருக்குன்னு தெரியாம கண்டபடி விளையாடிட்டனே... அழைக்கும்போது இதெல்லாம் சொல்லக்கூடாதா... ம்... இனியென்ன பண்றது...? மன்னிச்சு மறந்துடுங்க.

Jazeela said...

கதிர், போர் (bore ன்னு வாசிங்க அப்புறம் war ஆகிடப்போகுது ;-) ) அடிக்காத நல்ல பதிவு. அழகெல்லாம் அழகுதான்.

Anonymous said...

Thambi,

Very good post. Enjoyed your writing.
am a continuous reader of your posts. thought of sharing my views from your Star week, somehow postponed everytime.
'Nalla rasichu eluthi irukeenga'

All your posts are like having a chat with a good friend. I like them, Keep it up!

I'm just a reader so dont have tamil typewriting :-)..... apologies...

குழலி / Kuzhali said...

//"அப்பா நான் பாஸ் பண்ணிட்டேம்பா"//
நான் சொன்னப்ப எங்கப்பா நம்பலை, மார்க்ஷீட் பார்த்து 57 பேப்பரோட மார்க்கையும் ஒன்றொன்றாக பார்த்து கடைசியாக PASS என்று போட்டதையும் பார்த்துவிட்டு தான் நம்பினார்...