எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, April 19, 2007

மாணிக்கம் பொண்டாட்டி

"சட்டி சுட்டதடா கை விட்டதடா"

எங்கோ ஒலிபெருக்கியில் பாடலை ஒலிக்கவிட்டிருந்தார்கள் இந்த பாடல் ஒலித்தால்
எங்கோ எழவு விழுந்து விட்டதென்று அர்த்தம்.

ஏண்டாப்பா யாருடா அது போய் சேர்ந்தது? அயிலு நாய்க்கரு வாய்ல
பல்லுக்குச்சியோட தெருல நின்னு கேக்கறாரு.

ரோட்டோரமா எச்சிய துப்பிபுட்டு எழவு கேக்க ஆவலா வர்றாரு

"அட அயிலு விசயம் தெரியாதா... நம்ம மாணிக்கம்தாங்க புட்டுகிட்டான்"

"நல்லாத்தானே இருந்தான் பயலுக்கு என்னடா ஆச்சு இம்புட்டு சீக்கிரமா போயிட்டான்"

ஒருமாசமாவே பய ஒரு டைப்பாதான் திரிஞ்சான் அயிலு, முகமெல்லாம்
வெளிறிப்போயிதான் கெடந்தான். அப்பவே நெனச்சேன் ஏதோ நோவு பிடிச்சிருக்குன்னு
நான் நெனச்சது சரியாத்தான் போச்சு.

"அங்கிட்டு என்னய்யா வெட்டிநாயம் பேசிகிட்டு இருக்க. பல்லுவெளக்கறசாக்குல ஊர்
கதைய பேசிகிட்டு இருக்கியே வந்து குளிச்சிட்டு சோலிய பாரு"

அயிலு சம்சாரம் வசையாட ஆரம்பிச்சா எட்டு ஊர்லயும் எதிர்த்து பேச ஆள்
கிடையாது அயிலு மட்டும் விதிவிலக்கா என்ன...

"ஊர்கதைய நான் பேசறனாம் இவ சொல்ல வந்துட்டா" மேல சொல்லுய்யா அப்படி
என்னய்யா சீக்கு வந்துச்சி அந்த பயலுக்கு?

கொள்ளிய எடுத்து வெளிய விடு புள்ள, எழவுக்கு போயிட்டு வந்து ஒட்டுக்கா
ஊத்திக்கிறேன்.

யாரு எழவு?

"மாணிக்கமாம்"

"அடபாவி குத்துக்கல்லாட்டம் இருந்தானே" தன்பங்குக்கு கன்னத்தில் நான்கு
விரல்களையும் தாவாங்கொட்டையில் கட்டை விரலையும் பதித்து ஆச்சரியத்தை
வெளிப்படுத்திச் சென்றாள்.

"இந்த காலத்துல சீக்குக்கா பஞ்சம் இப்பதான் வாய்ல நொழையாத பேர்ல
வியாதிங்க வர ஆரம்பிச்சிருச்சே அனேகமா மருந்து கண்டுபிடிக்காத ஏதோ
ஒண்ணாத்தான் இருக்கும்.

வெவரமா சொல்லுய்யா அவனுக்கு சாகற வயசா இது? இப்பதாம்பா புள்ளைக்கு
மொதமுடி எடுத்தாங்க அதுகூட பள்ளியூடத்துக்கு போயிட்டு இருக்கு. பய லாரில
ஏறும்போதே நினைச்சேன் கண்ணு மண்ணு தெரியாம முட்டி சாவான்னு ஆனா
பொம்பள சீக்கு புடிச்சி சாவான்னு எதிர்பாக்கல.

வாய கழுவிட்டு வரேன் பொறவு போலாம் செத்த நில்லுய்யா. மனுசன் கண்ணமூடி
கண்ண தொறக்கறதுக்குல்ல போய் சேந்துடறானே சாகற வயசா இது.

நாலுவருசத்துக்கு மின்னாடிதான் மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகியிருந்துச்சு
பத்தாவது பெயிலான கையோட கிளினரா போனவன் வண்டி ஓட்ட கத்துகிட்டு
இருந்த ஒன்ற ஏக்கர் பூமிய வித்து கல்யாணமும் மீந்த காசுல ஓட்டை லாரியும்
வாங்கினான்.

ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்த குடும்பம்னுலாம் சொல்லமுடியாட்டியும்
ஒரு வேளை சோத்துக்கும் பஞ்சமில்லாத வாழ்ந்த குடும்பம். அவங்கப்பன்
இருந்தவரைக்கும் கொஞ்சம் உழைச்சி நிறைய குடிச்சி போய் சேந்துட்டான்
போனவன் அஞ்சாரு மாசத்துல பொஞ்சாதியையும் கூட்டிகிட்டான்.

புள்ள கைல சிக்குனா சரிப்படுவான்னு சொந்தமெல்லாம் முடிவு பண்ணி கல்யாணத்த
பண்ணி வச்சாங்க. வாய்ச்சவளையும் சும்மா சொல்லக்கூடாது இந்த பயலுக்கு
அம்சமா வாய்ச்சிட்டான்னு ஊரே வாய பொளந்துச்சி. மணல் லோடு அடிக்க போய்
போலிசுல மாட்டின வகைல பொண்டாட்டி நகையெல்லாம் வட்டிக்கடைக்கு போச்சு.

என்னதான் சண்டை சச்சரவு இருந்தாலும் வெளித்தெரியாம கட்டுபெட்டியா குடும்பம்
நடத்துனவதான் சாந்தி பேருக்கேத்தமாதிரி அமைதியான புள்ள அவளுக்கு போய்
இப்படி நடந்திருக்ககூடாதுதான். மூணு வயசுப்பையன வச்சிகிட்டு என்ன கஷ்டபட
போறாளோ தெரில. வழியெல்லாம் யோசனையா வந்துகிட்டு இருக்கு பெருசு.

"என்ன அயிலு பேசாம வந்துகிட்டு இருக்க"

ஒண்ணுமில்ல தொப்பளான் அந்த புள்ள வாழ்க்கை இப்படியாகும்னு யாரு கண்டா
சொல்லு. வந்த வெலைக்கு வித்து தள்ளுன சரக்காட்டமா அந்த புள்ளய இவங்கைல
புடிச்சி கொடுத்தான் அவங்கப்பன். "இன்னமும் ரெண்டு கழுத்து தாலியேற ரெடியா
இருக்க வீட்டுல தாலியறுந்த ஒருத்தியா" நெனச்சிகூட பாக்கமுடியலப்பா தொப்பு

பொண்ண பெத்தவன் கதியெல்லாம் இதுதான் ஒண்ணே போதுமின்னு நிறுத்தியிருந்தா
சாடியில்லாம இருக்குமல்ல. நானெல்லாம் பாரு ஒரு பொண்ண கட்டிக்குடுக்கவே
ஓட்டாண்டியாகி நிக்குறேன் இதுல மூணு பொட்டைய பெத்தெடுத்தா சிக்கல்தான்.

யோவ் தொப்பு எந்த நேரத்துல எதய்யா பேசுற? உன் வீட்டு சமாச்சாரத்த பேசத்தான்
தோள்ல துண்ட போட்டுகிட்டு வந்தியா. அங்கயும் கொலப்பெருமைய பேசிகிட்டு
இருக்காம எழவு வீட்டுக்கு வந்தமா போனமான்னு இருக்கணும் புரியுதா.

நல்லத சொன்னா ஏம்பா சலிச்சிக்கிற அவம்போனது எனக்கு சந்தோஷமா என்ன?

"பொண்டாட்டிய வனப்பாக்கிட்டு போயிட்டானே அவபாடு என்ன ஆகுமோன்னு
நினைச்சி நானே விசப்படறேன்".

"உங்கண்ணயெல்லாம் கரும்பாறைல வச்சி தேய்க்கணும்யா" உள்ளுக்குள்ள அயிலு
முனகியது தொப்பளான் என்கிற தொப்புக்கு கேட்டிருக்காது. சங்கட்டமான நேரத்துல
கோணாண்டிக்கு புத்தி நாலாபக்கமும் சீறிப்பாயிது பாரு. நினைத்த மாத்திரத்தில்
சாந்தியின் முகம் வந்து போனது.

ஒப்பாரிசத்தம் சமீபத்தை எட்டியிருந்தது.

வாழைமரம்ன்ற பேர்ல எதையோ ரெண்டு பக்கமும் நட்டிருந்தார்கள். நாலு பக்கமும்
கருவேல கழிய விட்டு மேல ரெண்டு குச்சி போட்டு அதுக்குமேல பேருக்கு ரெண்டு
தென்ன ஓலைய விரிச்சி விட்டுருக்கானுங்க.

மைக்குசெட்டுக்காரன் பாட்டை நிறுத்திட்டு பந்தலுக்கு நடுவே இருந்த குச்சியில்
மைக்கை தொங்க விட்டு சத்தம் வருதான்னு டெஸ்டு பண்ணிகிட்டு இருக்கான்.
அந்தாட்ட நாலு கெழவிங்க பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க ஒத்திகை
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வராத அழுகைய எங்கருந்து வரவழைக்கலாம்னு அக்கம்பக்கத்து பொம்பளைக
யோசிச்சிட்டு வராததினால நாடகபாணில அழுதுகிட்டு இருக்காங்க. ரத்த சொந்தமான
அஞ்சாறு பொம்பளைக மாருல அடிச்சிகிட்டு அழுகுதுங்க சாந்தியோட அம்மாவும்
அதுல ஒருத்தி அவளோட புருசங்காரன் வாயில துண்ட பொத்திகிட்டு கண்ண
கசக்கிட்டு இருந்தான்.

மத்த சம்பிரதாய வேலைகள செய்யிறதுக்கு ஆள் இல்லாம தடுமாறி நிக்கிற
எழவு வீடு.

பக்கத்து வீட்டுல குடியிருக்கற வார்டு மெம்பரு கோயிந்தன் எல்லாத்தையும்
நாந்தான் இழுத்து போட்டு செய்யிறேன்னு அவங்குடுத்த சவுண்டுலயே தெரியுது.
ஏடாகூடமான பய இவன் ஒத்தாசை பண்றான்னா கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.

தன் பங்குக்கு ஏதாவது செய்யணுமின்னு வந்த சொந்தங்க யாரு, வராம விட்டது
யாரு, வர நிக்கறவங்க யாருன்னு விசாரிச்சி எழவு செலவுக்கு ஆயிரம் ரூவாவையும்
வெட்டி விட்டாரு அயிலுநாயக்கரு.

பொண்ணு முகத்த பாக்கணுமின்னு நாலஞ்சு முறை உள்ளுக்கு தலய விட்டு எட்டி
பாத்தும் சாந்திமுகம் கண்ணுக்கு சிக்கல.

அழுது கண்ணையும் மூக்கையும் முந்தானைல தொடச்சிகிட்டு ஒரு செட்டு
பொம்பளைக வெளியேறி போறாங்க.

"நானும் எத்தனையோ எழவு பாத்துருக்கேன் இந்த மாதிரி ஒரு எழவு பாத்ததில்லடி
யெம்மா" புருசன் செத்துப்போனாகூட கண்ணுல ஒரு செட்டு தண்ணி எட்டி பாக்காம
பையன் கூட பந்து விளையாடிகிட்டு இருக்கற மொத பொம்பள இவதான்.

"இப்படியே ஒப்பாரி வச்சிகிட்டு இருந்தா வேலைக்காவாது சீக்குல செத்தவன் உடம்பு
சாயந்தரம் வரைக்கும் தாங்குமின்னு இருக்க கூடாது" மேல ஆகவேண்டிய வேலைகள
பாருங்க தொப்ப பக்கத்துல இருந்த பெருசுங்ககிட்ட பேசிகிட்டு இருக்கு.

"யோவ் கொஞ்ச நேரம் வாயபொத்திகிட்டு சும்மா இருய்யா"

அயிலு உள்ள போய் பாக்கறாரு நெசமாவே பையன் கூட பந்து உருட்டிதான்
வெளாடிட்டு இருக்கா சாந்தி.

"பொம்பளையா இவ" எழவு கூட்டியவர்களின் சத்ததையும் மீறி அவள் காதுகளை இந்த
வார்த்தைகள் எட்டியிருக்ககூடும்.

"யாருப்பா பொட்டழிக்க நாலு அனாதைகெழவிங்கள கூட்டிகிட்டு வாங்கய்யா" சட்டு
புட்டுன்னு சோலிய முடிச்சி சுடுகாட்டுக்கு கொண்டு போவோம்.

"இந்தாம்மா இப்படி வந்து உக்காரு பூவு பொட்ட எடுக்கணும்" வாயில் வெற்றிலைக்
கறையுடன் இருந்த ஒரு கெழவி அழைப்பிற்கு காத்திருந்தவள் போல எழுந்து வந்து
அமர்ந்தாள்.

என்னடியம்மா இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்களே புருசன் போயிட்டா விழுந்து
பொறண்டு அழுவுறாங்க உங்கண்ணுல ஒரு சொட்டு எட்டிப்பாக்கலயே செத்தது உன்
புருசந்தானே?

மொத்தக்கூட்டமும் அழமறந்து சாந்தியின் முகத்தை ஏறிட்டு பார்க்க ஆரம்பித்தன.

"மவுனமாக அமர்ந்திருந்தாள்"

மனசுக்குள்ள எதாச்சும் வச்சிருந்தா அழுது தீத்துடும்மா சாந்தி மனசுக்குள்ளேவே
பொத்தி வச்சிருந்தா நல்லா இருக்காது.

"எனக்கு அழுகை ஒண்ணு வரல" பதிலை கேட்ட அத்தனை கூட்டமும் பேயறைந்தது
போல நின்றது. கொட்டகையில் தொங்கிக்கொண்டிருந்த மைக்கில் மரண ஓலமிட்ட
சில கிழவிகளும் உள்ளறைக்கு வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"இப்படியும் ஒருத்தியா" சாந்தியின் அம்மா செய்வதறியாது திகைத்து பெண்ணின் அருகில்
வந்து நின்றாள்.

"என்னடி இது இப்படி பண்ணிகிட்டு இருக்கவ?" கேள்வி வந்த திக்கில் நிமிர்ந்தாள்.
பெத்த தாய் கேக்குறா வாய தொறக்கறாளா பாரு...

"போனவங்க சும்மாவா போனாங்க எனக்கும் சேத்துல்ல கொடுத்துட்டு போயிருக்காங்க"

சிறிதும் பிசிறில்லாமல் வெளிவந்த பதிலில் உறைந்து நின்றது சனம்.

42 comments:

நிர்மல் said...

+

Chinna Ammini said...

ரொம்ப நல்லா இருக்குங்க உங்க கத. நல்ல Flow.பளார்னு அடிச்ச மாதிரி இருக்க கடைசில‌

Lakshman said...

கடைசியில் திக்கென முடித்து விட்டீர்கள். கதை சொல்லும் பாணி அருமை.

CVR said...

Wow!!!
தம்பி!!
மிக அருமையான கதை!!!

கலக்கிட்டீங்க போங்க!! :-)

சந்தோஷ் aka Santhosh said...

நல்ல கதை கதிரு. ரொம்ப நல்லா ஊர் நடையோட வந்து இருக்கு.

ILA(a)இளா said...

//"போனவங்க சும்மாவா போனாங்க எனக்கும் சேத்துல்ல கொடுத்துட்டு போயிருக்காங்க//
என்ன ஒரு திடம், என்ன ஒரு யதார்த்தம். சட்டுன்னு அறையற மாதிரி இருக்கு.

வெட்டிப்பயல் said...

நல்லா இருந்துச்சுப்பா...

கடைசி வரியை இரண்டாவது முறை படிக்கும் போது தான் புரிந்தது...

காட்டாறு said...

கிராமத்து எளவ கண்ணு முன்னால கொணார்ந்து நிறுத்திட்ட அப்பூ...

கப்பி பய said...

அருமை!!!

வல்லிசிம்ஹன் said...

கடவுளே.

வல்லிசிம்ஹன் said...

:_(

.:: மை ஃபிரண்ட் ::. said...

AnnaththEy,

Cherile poy eppo Settle aaneenggaa? ;-)

Anonymous said...

Beautiful story! Reflects the present life situation.

Srinivas from Dubai

ஜி said...

தம்பி... எங்கையா ஒழிச்சு வச்சிருந்தீரு இந்த தெறமைய??
அருமையான கதை. அதனையும் மிஞ்சும் நடை.

ப்ரசன்னா said...

ரொம்ப நல்லா இருக்கு. படிச்சவுடனே சாந்தியை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்.

முத்துகுமரன் said...

தம்பி,

நேர்த்தியான, தடையில்லாத மொழி நடை. உயிரோட்டமான கதை. சாந்தியின் கதாபாத்திரம் சிறப்பான முறையில் படைக்கப்பட்டிருக்கிறது. பல நேரங்களில் எதார்த்தம் சுடத்தான் செய்யும். பெண் இயற்கையிலே வலுவான மனதை கொண்டவள் என்பதை மெய்பிப்பிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது சாந்தியின் மனோதிடம்.

இன்னும் உங்களுக்குள் மாணிக்கங்கள் உண்டு. விரியும் அதன் ஒளிவீச்சை காணும் ஆவலுடன்

முத்துகுமரன்

லொடுக்கு said...

தம்பி,
நல்ல வந்துருக்கு கதை. அழகான நடை. கண்ணத்தில் அறைந்தாற்போல் ஒரு முடிவு. சூப்பர் தம்பி.

லொடுக்கு said...

கேட்க மறந்துட்டேன். இது உங்க வட்டார பேச்சு வழக்கா?

மின்னுது மின்னல் said...

நல்லா இருக்குங்க கதை

ஒன்னுமே எழுத தோனல

அபிமன்யு said...

தம்பி,

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெருங்கிய உறவில் நிகழ்ந்தது..கதையில் இறந்து போனவரின் தொழில், அவர் இறந்ததன் காரணம் என எல்லாமும் சரியாக பொருந்துகிறது பெயர்களைத்தவிர...ஆனால் அவள் அழுது கொண்டிருந்தாள்..கனத்த மவுனத்துடன் அவர்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்த எனக்கு அவரின் கண்ணீர் இறந்து போனவரை நோக்கி எறிந்த சாபங்களாகவே தோன்றியது..ஏதுமறியாத அவரது ஒரு வயது குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த போது வாழ்க்கையின் குரூர முகம் உணர்ந்தேன்... உங்கள் கதையை படித்தபோது கண்களில் கண்ணீர் பெருகியது..

கோபிநாத் said...

நல்ல கதை தம்பி

எழுத்து நடையும் அருமை

தம்பி said...

//+//

_/\_

//ரொம்ப நல்லா இருக்குங்க உங்க கத. நல்ல Flow.பளார்னு அடிச்ச மாதிரி இருக்க கடைசில‌//

நன்றி சின்ன அம்மிணி,
நிஜத்துல நடந்த கதைன்னுலாம் அளந்து விட மாட்டேன். ஆனா ஒருத்தர் என்கிட்ட சொன்னதை சிறுகதையா மாத்திட்டேன்.

//கடைசியில் திக்கென முடித்து விட்டீர்கள். கதை சொல்லும் பாணி அருமை.//

வாங்க லட்சுமணன்,

அப்படிதாங்க நடந்தது தினமும் நம்மிடையே நடந்துட்டுருக்க நிஜம்தான் அது.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

//Wow!!!
தம்பி!!
மிக அருமையான கதை!!!

கலக்கிட்டீங்க போங்க!! :-) //

நன்றி CVR :))

//நல்ல கதை கதிரு. ரொம்ப நல்லா ஊர் நடையோட வந்து இருக்கு.//

நன்றி சந்தோஷ், உங்கள மாதிரி பெரியவங்க சொன்னா ஒத்துகிடத்தான் வேணும்

தம்பி said...

//ILA(a)இளா said...
//"போனவங்க சும்மாவா போனாங்க எனக்கும் சேத்துல்ல கொடுத்துட்டு போயிருக்காங்க//
என்ன ஒரு திடம், என்ன ஒரு யதார்த்தம். சட்டுன்னு அறையற மாதிரி இருக்கு.//

அதுதான் கதைக்கு உயிர்நாதம் போல அந்த வார்த்தைகள் இல்லன்னா கதையே இல்ல. இது நிஜத்துல நடந்த கதைன்னு ஒருத்தர் சொல்ல கேட்டிருக்கேன்.

//நல்லா இருந்துச்சுப்பா...

கடைசி வரியை இரண்டாவது முறை படிக்கும் போது தான் புரிந்தது... //

வலையுலகின் மூத்த தொடர்கதை எழுத்தாளர் நீயே சொல்லிட்ட அப்படின்னா கதை நல்லாத்தான் வந்திருக்கு.

//கிராமத்து எளவ கண்ணு முன்னால கொணார்ந்து நிறுத்திட்ட அப்பூ... //

முயற்சில ஜெயிச்சிட்டேன்னு உங்க வார்த்தைகள் மூலம் தெரியுது.

//அருமை!!! //

எலே கப்பி, ரொம்ப நாள் கழிச்சி போடாத பின்னூட்டமெல்லாம் இங்க இருக்குன்னு ஒரு பதிவு போட்டியே அந்த பதிவுல கூட இந்த வார்த்தை இருந்துச்சே அப்படிதானா இது??

//கடவுளே. //

அவர் இருக்காருங்க. கதைல வர்ற ஒரு கதாபாத்திரத்துக்காக நீங்க வருத்தப்படறிங்கள்ல நீங்களும் ஒரு சக கடவுள்தான். (நன்றி:அன்பே சிவம்)

//:_( //

!!

தம்பி said...

//Beautiful story! Reflects the present life situation.

Srinivas from Dubai //

கருத்துக்கு நன்றி சீனிவாஸ்.

//தம்பி... எங்கையா ஒழிச்சு வச்சிருந்தீரு இந்த தெறமைய??
அருமையான கதை. அதனையும் மிஞ்சும் நடை. //

இருந்தாதானய்யா ஒழிச்சி வைக்க!
யாரோ ஒருத்தர் பாத்துட்டு வந்து எங்கிட்ட சொன்னார் என்னையும் பாதிச்சதால அதை கதையா எழுதினேன்.


என்னோட முயற்சி என்னன்னா என்னோட தனிப்பட்ட வாழ்க்கை முறையினை பிரதிபலிக்காமல் ஒரு கதையோ கவிதையோ எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை. அதனால இதை எழுதினேன். ஓரளவுக்கு திருப்தியும் வந்திருச்சு இனிமேல் இதுபோன்ற என் முயற்சிகள் தொடரும்.(எல்லாம் நீங்க குடுக்கற தைரியம்தான்)

தம்பி said...

//ரொம்ப நல்லா இருக்கு. படிச்சவுடனே சாந்தியை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். //

இதுல வருத்தப்பட ஒண்ணுமே இல்லிங்க அவனவன் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கணும் அது தவறும்போது எத்தனை பேரை பாதிக்கும்னு சொல்ல வந்தேன்.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி ப்ரசன்னா!

தம்பி said...

//தம்பி,

நேர்த்தியான, தடையில்லாத மொழி நடை. உயிரோட்டமான கதை. சாந்தியின் கதாபாத்திரம் சிறப்பான முறையில் படைக்கப்பட்டிருக்கிறது. பல நேரங்களில் எதார்த்தம் சுடத்தான் செய்யும். பெண் இயற்கையிலே வலுவான மனதை கொண்டவள் என்பதை மெய்பிப்பிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது சாந்தியின் மனோதிடம்.//

நன்றி முத்துக்குமரன்.
பெண் இயற்கையிலேயே வலுவான மனதை கொண்டிருந்தாலும் அதன் கடிவாளம் ஆண் கையிலேயே இருந்து வந்திருக்கிறது இக்கதையிலும் அவளின் ஆதங்கம் வெளிப்படும்போது தெரியும்.

//இன்னும் உங்களுக்குள் மாணிக்கங்கள் உண்டு. விரியும் அதன் ஒளிவீச்சை காணும் ஆவலுடன்
முத்துகுமரன் //

கொஞ்சம் ஓவரா இருக்கு, இருந்தாலும் மூத்த பதிவர் நீங்க சொல்றதுனால ஒத்துக்கறேன்.

நன்றி முத்துக்குமரன்.

தம்பி said...

//தம்பி,
நல்ல வந்துருக்கு கதை. அழகான நடை. கண்ணத்தில் அறைந்தாற்போல் ஒரு முடிவு. சூப்பர் தம்பி.//

நன்றி லொடுக்கு,
இதுபோலொரு சம்பவம் நடந்ததுன்னு கேக்கும்போதும் மனசு வேதனையா இருந்துச்சு.

//கேட்க மறந்துட்டேன். இது உங்க வட்டார பேச்சு வழக்கா? //

இது எங்க வட்டார பேச்சு வழக்குதான்.
கொஞ்ச நாள் முன்னாடி எங்கோ ஒரு இடத்துக்கு டாக்ஸில போனேன் வழக்கமா எனக்கு பாகிஸ்தானி ஓட்டுனரா மாட்டுவாங்க அன்னிக்குன்னு பாத்து தமிழ்காரர் அவர்கிட்ட பேச்சு குடுத்தேன் அப்பதான் இந்த கதைய சொன்னாரு அதையே நான் பாத்த மாதிரி எழுதிட்டேன். கதை நல்லா இருந்தது என்றால் உண்மையிலேயே அந்த பெயர் தெரியாத ஓட்டுனரின் வெற்றிதான்.

நன்றி லொடுக்கு

தம்பி said...

//நல்லா இருக்குங்க கதை

ஒன்னுமே எழுத தோனல //

உங்க வழக்கமான டச் மிஸ் ஆகும்போதே புரியுதுங்க :))

நன்றி மின்னல்

தம்பி said...

//தம்பி,

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெருங்கிய உறவில் நிகழ்ந்தது..கதையில் இறந்து போனவரின் தொழில், அவர் இறந்ததன் காரணம் என எல்லாமும் சரியாக பொருந்துகிறது பெயர்களைத்தவிர...ஆனால் அவள் அழுது கொண்டிருந்தாள்..கனத்த மவுனத்துடன் அவர்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்த எனக்கு அவரின் கண்ணீர் இறந்து போனவரை நோக்கி எறிந்த சாபங்களாகவே தோன்றியது..ஏதுமறியாத அவரது ஒரு வயது குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த போது வாழ்க்கையின் குரூர முகம் உணர்ந்தேன்... உங்கள் கதையை படித்தபோது கண்களில் கண்ணீர் பெருகியது..//

ஆச்சரியபடறமாதிரி இல்லன்னாலும் ஒரு ஊருக்கு மாணிக்கமோ, சாந்தியோ இருக்கத்தான் செய்றாங்க.

மிக்க நன்றி அபிமன்யு!

தம்பி said...

//நல்ல கதை தம்பி

எழுத்து நடையும் அருமை //

வாய்யா கோபி!

எதோ சொல்ற சரி இப்பவாச்சும் ஒத்துக்க அண்ணன் பெரிய எழுத்தாளர்னு :)

மணிகண்டன் said...

அருமையான கதை தம்பி.கலக்கிட்டிங்க !

Syam said...

அருமையா இருந்துச்சு தம்பி..ரொம்ப யதார்த்தமா....

துளசி கோபால் said...

நல்ல நடையா இருக்கு தம்பி. கதை(?) நல்லாவும் வந்துருக்கு. முடிவு 'நச்'

தம்பி said...

மணிகண்டன், ஸ்யாம் உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

வாங்க துளசி டீச்சர்!

நல்ல வேளை பாத்து சொன்னிங்க. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

கேள்விக்குறி போட்டது சரிதான், ஏன்னா அது உண்மைக்கதையாம்!

அய்யனார் said...

நல்லாருக்கு தம்பி..:)

வட்டார வழக்கும் சரியாவே வந்திருக்கு ..கடைசி வரி அதிர்ச்சி உத்திய சரியா கையாண்டிருக்க..

கலக்கிட்டபா

அபி அப்பா said...

தம்பி! நான் இன்னிக்குதான் படிச்சேன். ஒன்னும் சொல்ல தோனலை! அருமையா வந்திருக்கு!

ஆழியூரான். said...

காலத்திற்கு ஏற்ற நல்ல கதை. கதை சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது. கொங்கு வட்டார வழக்கு போல தெரிகிறது.. அதை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக கையாண்டிருந்தால் கூடுதல் அழகு வந்திருக்கும்.

கதை பூங்காவில் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். பூங்கா வழிதான் இங்கு வந்தேன். பின்னூட்டங்களில் தெரியும் உங்கள் பெயரை க்ளிக்கினால், ப்ளாக்கர் ப்ரொஃபைல் தெரிவதில்லை. மக்கர் செய்கிறது.

தம்பி said...

நன்றி அய்யனார் _/\_

அபி அப்பா,
பதிவை படிச்சிட்டு பின்னூட்டமிட்டதுக்கு நன்றி :)

தம்பி said...

//காலத்திற்கு ஏற்ற நல்ல கதை. கதை சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது. கொங்கு வட்டார வழக்கு போல தெரிகிறது.. அதை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக கையாண்டிருந்தால் கூடுதல் அழகு வந்திருக்கும்.//

வாங்க ஆழியூரான்!

கொங்கு வட்டார வழக்கும், எங்கள் பகுதி வழக்கும் இணைந்து வித்தியாசமாக இருக்கும். இதை சிறுகதையாக எழுதும் எண்ணம் இல்லை ஒரு காரோட்டியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்ன விஷயம்தான் இது எழுதி முடித்த பிறகு சிறுகதைக்கான தொனி தெரியவே சிறுகதையாக்கிவிட்டேன். முதலில் இருவர் பேசுவது போன்றே எழுதி பின் திருத்திவிட்டேன்.


//கதை பூங்காவில் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். பூங்கா வழிதான் இங்கு வந்தேன். பின்னூட்டங்களில் தெரியும் உங்கள் பெயரை க்ளிக்கினால், ப்ளாக்கர் ப்ரொஃபைல் தெரிவதில்லை. மக்கர் செய்கிறது. //

நன்றி ஆழியூரான்.

இப்போது சரி செய்துவிட்டேன்.

வருகைக்கு நன்றி

இராம் said...

கதிரு,

கதையே படிச்சிட்டு ரொம்ப நேரம் அமைதியாவே இருந்தேன்......

அது ஏன்னே தெரியலை...

ஒனக்கு இருக்கிற திறமைக்கு ஒரு சான்றுதான் இந்த கதை....

கதையோட இறுதிதான் பிரமாதம் :)

தம்பி said...

வாங்க ராம் அண்ணே!

//கதையே படிச்சிட்டு ரொம்ப நேரம் அமைதியாவே இருந்தேன்......//

ஏன் அமைதியாகிட்டிங்க, ஒருவேலை கதை உங்கள அமானுஷ்ய கயிறு கொண்டு கட்டி போட்டுச்சா!

//அது ஏன்னே தெரியலை...//

இப்பவாச்சும் ஒத்துக்கணும் தம்பிக்குள்ள ஒரு சிறுகதை எழுத்தாளன் ஜமுக்காளத்த போத்திக்கினு தூங்கிட்டுருக்கான்னு :))

//ஒனக்கு இருக்கிற திறமைக்கு ஒரு சான்றுதான் இந்த கதை....//

ஏண்ணே இல்லாததையும் பொல்லாததையும் சொல்றிங்க!

//கதையோட இறுதிதான் பிரமாதம் :)//

ரொம்ப நன்றிங்க ராயல் ராமச்சந்திரமூர்த்தி!

SurveySan said...

சூப்பர் தம்பி.