எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, October 17, 2006

தெருக்கூத்து - ஒரு அற்புதமான கலை

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பிறந்து
வளர்ந்தவர்கள் கண்டிப்பாக தெருக்கூத்து
பார்த்திருப்பீர்கள். திருவிழா காலங்களில்
இடம்பெறும் இந்த கலை இப்போது அழிந்துவரும்
கலையாக இருக்கிறது. சினிமா, நாளிதழ்
போன்ற பெரிய ஊடகங்கள் வரும் முன்பு
மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்த இந்த கலை
இப்போது எங்கே என்பது தேட வேண்டியுள்ளது
வேதனையான உண்மை.எனது சித்தப்பா, மாமா
தாத்தாக்கள் வாழ்ந்து வரும் ஊரில் திருவிழா
நடைபெறும் காலங்களில் மூத்த மாப்பிள்ளையான
எனது அப்பாவிற்கு பத்திரிக்கைகள் அனுப்புவது
வழக்கம். மஞ்சள் நிறத்தில் பத்திரிக்கை மிகப்பெரிய
அளவில் இருக்கும். சம்பிராதாயமாக நேரில்
வந்து திருவிழாவிற்கு அழைப்பர். பெரும்பாலும்
அந்த விழாக்களுக்கு என்னையும் எனது,அம்மாவோ
அண்ணனோ, தம்பியோ, உடன் அனுப்புவார்கள்.

நான் முதலில் அந்த பத்திரிக்கையில் பார்ப்பது
நிகழ்ச்சி நிரலைத்தான். என்றைக்கு தெருக்கூத்து
நடைபெறுகிறது என்பதையே முதலில் பார்ப்பேன்
அதற்கேற்ற மாதிரி பயணத்தை வைத்து கொள்ள
அப்பாவிடம் நச்சரிப்பேன். ஊர் ஊராக போய்
இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை மட்டுமே பார்ப்பதில்
அலாதி பிரியம் எனக்கு. இதில் இன்னொரு வசதி
என்னவென்றால் நெருங்கிய உறவினர்களை சந்திக்கும்
வாய்ப்பு. அத்தை மகள், மகன், தாத்தா, பாட்டி
போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம். பள்ளிக்கூட
இம்சையிலிருந்து ரெண்டு நாள் தப்பிக்கலாம். இப்படி
நிறைய இருக்கிறது.

இப்போது நடக்கும் திருவிழாக்களில் சினிமாவின்
இரண்டாம்தர ஆட்டக்காரி, ஆட்டக்காரர்களை
வைத்து இசைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசத்தை
அரங்கேற்றுகிறார்கள். ஆர்கெஸ்ட்ராவாம் இதுக்கு பேரு.
எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனக்கு தெருக்கூத்தை பிடித்த சம்பவம் கொஞ்சம்
சுவாரசியமானது. அப்போது எங்கள் ஊர் பக்கத்தில்
ஒரு தெருக்கூத்து கலைஞர் இருந்தார். எனது சிறிய
வயதில் இவரை தினமும் பார்ப்பேன். எங்கள் வீட்டு
வழியாகதான் தினமும் ஊருக்குள் பொருள் வாங்கவோ
விற்கவோ போக வர வழி. அந்த கலைஞர்
போகும்போதும் வரும்போதும் நான்கைந்து சிறுவர்கள்
அவர் பின்னாலே நக்கலடித்துக்கொண்டு போவோம்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட சட்டை செய்ய மாட்டார்
அவர். கல் விடுவது, அவரின் நீளமான கூந்தலை பிடிச்சு
இழுத்து விட்டு ஓடுவது. இப்படி செய்வோம். அவரும்
வெறுப்பா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுவார்.
வித்யாசமா ஒரு ஆள் தெருக்குள்ள நுழைஞ்சாவே
நாய்கள் குரைக்குமே அந்த மாதிரிதான் அவர்
தெருக்குள்ள நடந்து போகும்போது. அப்போதெல்லாம்
அவரை பத்தி ஒண்ணுமே தெரியாது. பின்னாளில்
அவரால்தான் எனக்கு தெருக்கூத்தின் மீது காதலே
வந்தது. நீளமான கூந்தல், உதட்டோரமாக எப்போதும்
வழியும் வெற்றிலை குதப்பல், நெற்றியில் குங்குமம்,
நீளமான வெள்ளை வண்ண ஜிப்பா, அதுக்கு நேர் எதிரா
கீழ லுங்கி கட்டியிருப்பார். சுலபத்தில் ஆணா, பெண்ணா
என்று கண்டேபிடிக்க முடியாதபடி இருக்கும் அவரின்
தோற்றம். இதுவே கொலவாரிகள் அவரை கிண்டலடிக்க
முதற்காரனம்.

ஏதேச்சையாக அவர் நடித்த தெருக்கூத்தினை காணும்
வாய்ப்பு கிட்ட அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ச்சே
இவ்வளவு அற்புதமான மனிதரை இவ்வளவு நாளா
ரொம்ப காயப்படுத்திட்டோமேன்னு நினைச்சேன். என்ன
ஒரு கம்பீரமான குரல், அரை மணி நேர பாடலெல்லாம்
அட்டகாசமாக பாடிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும்
மைக்கு கூட இல்லை. விடிய விடிய நடக்கும் இந்த
தெருக்கூத்து. ஆண்களே பெண்வேடம் போட்டார்கள்
அதையும் உற்று நோக்கினால்தான் தெரியும். இதயே
வேடிக்கை பார்க்க பெருசுங்க கூட்டம் பெரிய அலப்பறை
பண்ணிகிட்டு இருந்தாங்க. பலவேடங்களில் கலக்கினார்
அவர். இதே மாதிரிதான் சினிமாவில நடிக்கிறாங்க
அவங்களுக்கு கிடைக்கிற புகழ் இவங்களுக்கு ஏன்
கிடைக்கல என்பது போன்ற சந்தேகங்கள் வந்தது.
கள் குடிப்பது, கூத்தியாள் வச்சிக்கிறது, திருடறது,
போன்ற தவறுகளை மிக நையாண்டியாக எடுத்து
சொல்வார்கள். புலிகேசி படத்தில் கப்ஸி, அக்காமாலா
போன்றவைகளை கலாய்த்தது போல. சில இடங்களில்
"இரட்டை அர்த்த" வசனங்கள் இருந்தாலும்
முகத்தை சுளிக்க வைக்காது. பின்னாளில் அவரை
கண்டால் நக்கல் எதுவும் செய்வதில்லை. ஒரு
புன்னகையோடு நின்று விடுவேன்.

Image Hosted by ImageShack.us

இவ்வளவு சுவாரசியமான ஒரு கலையை இப்போது
கிராமங்களில் கூட காண்பது அரிதாக இருக்கிறது.
இப்போது. இந்த சமயத்தில தற்போது ஒளிநாடா
வெளியாகி வெற்றிகரமாக விற்பனையாகிக்
கொண்டிருக்கும் வெயில் படத்தில பட்டி பேச்சியாத்தா
என்ற பாடல் தெருக்கூத்தினை ஞாபகப்படுத்துவது போல
அமைந்திருந்தது. அதை கேட்ட மாத்திரத்தில் பழைய
நினைவுகள் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
வழக்கமான கிராமியப்பாடல்களுக்கு மாணிக்க
விநாயகத்தயே நாடாமல் அந்த கிராமிய கலைஞர்களை
கொண்டே பாட வைத்திருப்பதாலேயே பெரிய
அளவுக்கு வெற்றி பெற காரணம் என்பது என் கருத்து.
இந்த பாடலாலேயே படத்தையும் பார்க்க வேண்டும்
என்று ஆவலாக இருக்கிறது.

நீங்களும் கேளுங்க இங்கே

ஷங்கர் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு
வெற்றிப்படங்கள் காதல், புலிகேசி மூன்றாவதாக
வெயில். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

21 comments:

Sivabalan said...

தம்பி

நல்ல பதிவுங்க.

சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.

நன்றி

கப்பி | Kappi said...

அருமையான பதிவு தம்பி!

ஊருக்கு திருவிழா நாட்களில் போகும்போது பார்த்த கூத்துக்களை ஞாபகப்படுத்திட்டீங்க ;)


//இப்போது நடக்கும் திருவிழாக்களில் சினிமாவின்
இரண்டாம்தர ஆட்டக்காரி, ஆட்டக்காரர்களை
வைத்து இசைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசத்தை
அரங்கேற்றுகிறார்கள். //

தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று :(

தெருக்கூத்து கலையும் நலிந்த கலைஞர்களும் போதிய கவனம் பெறாமல் கைவிடப்பட்டிருக்கிறார்கள்!!

கப்பி | Kappi said...

//அத்தை மகள், மகன், தாத்தா, பாட்டி
போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம். //

அப்பவே விவரம் தான் ;)

கதிர் said...

//நல்ல பதிவுங்க.

சுவாரசியமாக எழுதுகிறீர்கள்//

நன்றி சிவபாலன். உங்களை விடவா சுவாரசியமாக எழுதுகிறேன்?

வருகைக்கு மிக்க நன்றி சி.பா

கதிர் said...

//தெருக்கூத்து கலையும் நலிந்த கலைஞர்களும் போதிய கவனம் பெறாமல் கைவிடப்பட்டிருக்கிறார்கள்!! //

ஆமாம் கப்பி, ஒரிஜினல விட்டுட்டு போலிங்க பின்னாடி ஓடிக்கிட்டு இருக்கோம்னு தோணுது. இப்போ கூட கூத்துப்பட்டறையிலருந்து வரும் நடிகர்கள் சினிமாத்துறையில் வெற்றி பெறுகிறார்கள்.

கதிர் said...

//அப்பவே விவரம் தான் ;)//

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல கப்பி! :(

கப்பி | Kappi said...

// இப்போ கூட கூத்துப்பட்டறையிலருந்து வரும் நடிகர்கள் சினிமாத்துறையில் வெற்றி பெறுகிறார்கள்.
//

வெயில் படத்தின் பசுபதி கூட கூத்துப்பட்டறை தயாரிப்பு தான்..கமலின் அறிமுகம் ;)

வெயில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..ஏமாற்றமளிக்காமல் இருக்கவேண்டும்..

நாமக்கல் சிபி said...

தம்பி,
பல முகங்களை காட்டி அசர வைக்கிறாய்.

நான் இது வரைக்கும் கூத்து பாத்ததே இல்லை :-(

//அத்தை மகள், மகன், தாத்தா, பாட்டி
போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம்//
நம்ம கார்த்திக் பிரபு பதிவ எத்தனை தடவை படிச்ச ;)

//கமலின் அறிமுகம் ;)//
அதுக்கு முன்னாடியே நம்ம சொர்ணா அக்கா தம்பியா வந்தாரில்லை ;)

கதிர் said...

//வெயில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..ஏமாற்றமளிக்காமல் இருக்கவேண்டும்.. //

எனக்கும் அதே. ஷங்கர் வாரிசு சோடை போகாது என்றே நம்புவோம், ஏற்கனவே ஆல்பம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

கார்த்திக் பிரபு said...

thanbi padithane rasichane..indha madhiri padhivugal eludhanum nu enaku aasai ..seekirame eludha mayarchipane.....


appuram vettipayal ennamo ketrukarre..!!!!

கதிர் said...

//நம்ம கார்த்திக் பிரபு பதிவ எத்தனை தடவை படிச்ச ;)//

ரெண்டு மூணு முறை வாசிச்சேன்.
அவரு கவிஞராயிட்டாருபா! :)

//நான் இது வரைக்கும் கூத்து பாத்ததே இல்லை :-(//

நீங்க ஜிட்டிஜனா? வில்லேஜனா இருந்தா வாய்ப்பிருந்திருக்கும்! அடுத்த முறை வாய்ப்பு கிடைச்சா பாருங்க!

கதிர் said...

//thanbi padithane rasichane..indha madhiri padhivugal eludhanum nu enaku aasai ..seekirame eludha mayarchipane.....//

கண்டிப்பா எழுதுங்க கார்த்திக்!

கார்த்திக் பிரபு said...

ரெண்டு மூணு முறை வாசிச்சேன்.
அவரு கவிஞராயிட்டாருபா! :)


///

illapa summa padhivugal eludha time kidaikalainu kavidhaigal eludhi kalthai ooturane..adhukull ippadi periya varthai ellam solreengale!!!

Unknown said...

நான் தெருக்கூத்து பார்த்தில்லை.
தெருவோரங்களில் நடக்கும் ஓரங்க நாடகம் ஒன்று பார்த்திருக்கிறேன்.
இதுவும் தெருக்கூத்தில் வருமோ?
'இரணியன் ஒரு இணையற்ற வீரன்' என்ற நாடகம்.
அதில் இரணியனாக வந்தவர் நடிப்பை விட சிறந்த நடிப்பை
நான் சினிமாவிலும் பார்த்ததில்லை.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தம்பி,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஈழத்தில் கூத்து என்ற வடிவம் இருக்கிறது. ஆனால் அங்கே பார்க்கக் கிடைக்கவில்லை. :(

தெருக்கூத்து உங்களுக்கும் பிடித்தமானது என்றறிய மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஊரூராகப் போய் கூத்துப் பார்த்தேன் என்று சொல்கிறீர்கள். ஒரு தொடராக எழுதுங்களேன். ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

வெயில் பாடல்கள்தான் இப்போது என் கணினியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சுட்டிக்கு நன்றி.

-மதி

கதிர் said...

//நான் தெருக்கூத்து பார்த்தில்லை.
தெருவோரங்களில் நடக்கும் ஓரங்க நாடகம் ஒன்று பார்த்திருக்கிறேன்.
இதுவும் தெருக்கூத்தில் வருமோ?
'இரணியன் ஒரு இணையற்ற வீரன்' என்ற நாடகம்.
அதில் இரணியனாக வந்தவர் நடிப்பை விட சிறந்த நடிப்பை
நான் சினிமாவிலும் பார்த்ததில்லை.//

தெருவோர நாடகங்களும் தெருக்கூத்து வகையை சேர்ந்ததுதான் என்று நினைக்கிறேன். சினிமாவை விட சிறந்த திறமையுள்ளவர்கள் தெருக்கூத்தில் இருக்கிறார்கள்.

தெருவோர நாடகங்களில் சீரிய கருத்துக்களை நயமாக எடுத்துக்கூறுவார்கள். தெருக்கூத்தில் பெரும்பாலும் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகளை சொல்வார்கள்.

கதிர் said...

தெருக்கூத்து உங்களுக்கும் //பிடித்தமானது என்றறிய மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஊரூராகப் போய் கூத்துப் பார்த்தேன் என்று சொல்கிறீர்கள். ஒரு தொடராக எழுதுங்களேன். ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

வெயில் பாடல்கள்தான் இப்போது என் கணினியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சுட்டிக்கு நன்றி.//

ஒரு கலைஞரே பல வேடமிட்டு அனைத்தையும் சிறப்பாக செயவது மிகப்பெரிய சாதனை. அதுவும் நான்கைந்து மணி நேரத்தில். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். இப்போது தமிழகத்தில் கூட அங்கொன்றூம் இங்கொன்றுமாக மட்டுமே காணக்கிடைக்கிறது.

மன்னிக்கவும்

தொடராக எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயமில்லை.

முதல் வருகைக்கு நன்றி!

Santhosh said...

நல்ல பதிவு தம்பி, தெருக்கூத்து மட்டுமில்லை தாரை தப்பை அடிப்பாங்களே அது முதல் கொண்டு பல கலைகளை நாம் இழந்து விட்டோம்.

கதிர் said...

//நல்ல பதிவு தம்பி, தெருக்கூத்து மட்டுமில்லை தாரை தப்பை அடிப்பாங்களே அது முதல் கொண்டு பல கலைகளை நாம் இழந்து விட்டோம்.//

வாங்க சந்தோஷ்!

தமுக்கடிறது கூட இப்போ இல்ல, வீட்டு கதவ தட்டி சொல்லிட்டு போயிடறாங்க!

சின்ன வயசில பஞ்சாயத்துல எதுனா ஊர்செய்தி சொல்லணும்னா நாலு பேரு தாரை தப்பட்டையோட தெருமுக்குல நெருப்ப (வைக்கோலு) கொளுத்தி மோளத்த அதுல கொஞ்ச நேரம் காமிப்பாங்க. நாங்க பசங்க ஒரு அஞ்சாரு பேரு சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போம். அவங்க சொல்ற செய்திக்காக இல்ல.
அடுத்து அவங்க அடிக்கபோற இசைக்கு அப்படியே அடிச்சாங்கன்னா எல்லாரும் சேர்ந்து ஆடுவோம். ஒரு அஞ்சு நிமிஷம் தெருவே ஆடிப்போற அளவுக்கு அந்த அடி அடிப்பாங்க. அடிச்சு முடிச்ச உடனே நாலு பேர்ல ஓருத்தர் ராகத்தோட சொல்ல வந்த செய்திய சொல்லுவாரு.

அவங்க கூடவே நாலு தெருவையும் சுத்தி ஆட்டம் போட்டுகிட்டே வருவோம்.

இப்போல்லாம் கேபிள் கனெக்ஷன்ல பஞ்சாயத்து செய்திய ஒரு பொண்ணு சொல்லிருதாம்.

எல்லாம் முன்னேற்றம்.

நாமக்கல் சிபி said...

தம்பி,
இந்த பதிவு இந்த வாரம் பூங்காவில் இடம்பெற்றுள்ளது...

வாழ்த்துக்கள்!!!

கதிர் said...

இப்போதான் பார்த்தேன் வெட்டி!

சென்ற வாரமே அனுமதி கடிதம் வந்தது. பார்க்கணும்னு எழுதி வச்சேன் ஞாபகமா அதை மறந்திட்டேன் :)

தகவலுக்கு மிக்க நன்றி!