எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 11, 2006

களத்து வீடு - தேன்கூடு சிறுகதை போட்டிக்காக...

களத்து வீடு - தேன்கூடு மற்றும் தமிழோவியம் இணைந்து நடத்தும் சிறுகதை போட்டிக்கான எனது படைப்பு.


டேய் களம் எவ்வவளவு பெருசா இருக்கு ஏண்டா இவ்வளவு சின்னதா ரவுண்ட் அடிக்கிற?

அப்பா என்ன சொன்னாரு, ரெண்டு களத்தை சேத்தாப்பல
முழுசா 10 ரவுண்ட் அடிச்சுஅம்பது தண்டால் எடுக்கணும்னு சொன்னாருல்ல.

எனக்கு எழரை வெளிய இல்லடா வீட்டுக்குள்ளயே என் தம்பியா வந்து
பொறந்து இருக்கு, என்று நினைத்தபடியே ரவுண்டை பெரிதாக்கி ஓடினேன்.

எல்லாம் என் தப்பு ஸ்கூல கட் அடிச்சிட்டு பசங்களேட அருவில குளிச்சுட்டு
வந்ததுக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும். மேக்கொண்டு ட்யூசன் பீஸையும்
புஸ்வானம் பண்ணா சும்மா விடுவாங்களா?

மொத்தம அஞ்சு பேர் கிளம்பி இருக்கானுங்க சார், பைய பின்னாடி இருக்கற கடையில
பொட்டி கடையில பொட்டுட்டு போயிருக்கானுங்க. சாதாரணமா அந்த அருவில குளிக்கவே
பயப்படுவாங்க, இவனுங்க ஒரு நாள் முழுக்க கூத்தடிச்சுருக்காங்க, இதுல பீடிபழக்கம் வேற.

இதெப்படி தெரிஞ்சுது? நம்ம கும்பல்லயே எவனோ எட்டப்பனுக்கு சொந்தக்காரன் இருக்கான்.

கெமிஸ்ட்ரி டீச்சர் நல்லாவே புகைய போட்டாங்க, அப்பா எள்ளும் கொள்ளும் வெடிக்கற
மாதிரி மொறைக்கறாரு.

ச்சே, நம்ம நேரம் ரத்தினம் சார் இன்னிக்கு லீவு, அவர் இருந்தாருன்னா இந்த சின்ன
விஷயத்துக்கு பூதக்கண்ணாடி போட விட மாட்டாரு. இந்த கொசு என்னடான்னா புகை மேல
புகையா போட்டு கலங்கடிக்குது.

அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்?, உலகத்தில இல்லாத தப்பு, ஒருநாள் கட் அடிச்சது தப்பா?
இதுக்கு போய் இவ்ளோ பில்டப் தேவையில்லயே என்று நினத்தபடியே தலையை நிமிர்த்தி
கொசுவை பார்த்தேன். இப்பவோ அப்பவோ மூக்குலருந்து சரிஞ்சி விழுந்துடுற மாதிரி ஒரு
கண்ணாடி, ஒட்டாத கலர்ல. அதை பாக்க பிடிக்காம தலையை திருப்பினா காந்தி தாத்தா
நக்கலா சிரிக்கற மாதிரியே இருக்கு,

செஞ்சது தப்புதாண்டா அப்படின்னா ஹெட்மாஸ்டர் ரூம் முன்னால முட்டி போடுங்கடான்னா
போட மாட்டேங்குறானுங்க, இந்த வயசுலயே கவுரவம் பாக்குதுங்க.

நான் முட்டி போடலாம்னுதான் டீச்சர் சொன்னேன், இவந்தான் வேணாண்டா நம்ம க்ளாஸ்
பொண்ணுங்க வந்து போற இடம், அசிங்கமா இருக்கும்னு , ஆவறது ஆகட்டும்
பாத்துக்கலாம்னு சொன்னான்.

முருகன் அப்ரூவரா மாறிட்டான்.

அடப்பாவி, இப்படியாடா போட்டு குடுப்பே நீ. துரோகி.

இந்த ஒரு முறை மன்னிச்சுருங்க மேடம், இனிமேல் ஒழுங்கா இருப்பான். அப்பா
கெஞ்சினார்.

அப்படி என்னடா தப்பு செஞ்சே, அப்பா இவ்ளோ கோவமா இருக்காரு, அம்மா கேட்டாங்க.
எனக்கு சொல்ற வேலையே வைக்காம தம்பியே ரொம்ப சந்தோஷத்தோட விலாவாரியா
சொல்லிட்டான்.

நீ செஞ்ச தப்புக்கு என்ன செய்யலாம்?, நீயே சொல்லு. அப்பா கேட்டாரு,

இனிமேல ஸ்கூல் கட் அடிக்காம ஒழுங்கா படிச்சு மொத மார்க் வாங்கறேம்பா.

இதையே எப்பவுமே சொல்ற.

ஒழுக்கத்தை முதலில் கத்துக்க., பின்னாடியே எல்லாம் வரும். அதனால நாளைல இருந்து
காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சி, களத்தை பத்து ரவுண்ட் அடிச்சுட்டு அம்பது தண்டால்
அடி. இதையாவது ஒழுங்கா செய்றியா பாப்போம்.

இதுக்கு ரெண்டு அடிச்சுருக்கலாம், பத்தாததுக்கு இவண் எனக்கு சூப்பர்வைசரா? என்று
தம்பிய பாத்தா, அவன் முகத்தில அப்படியொரு சந்தோஷம்.

டேய் கவி அவன் சரியா செய்யறானன்னு பாத்து என்கிட்ட சொல்லணும் புரியுதா?

சரிப்பா.

ரெண்டு கும்பகர்ணனையும் அஞ்சு மணிக்கே எந்திருக்க வைக்கணும்னு அப்பாவோட ப்ளான்,
ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்ச சந்தோஷம் அவருக்கு, இந்த மாங்கா அது தெரியாம
நமுட்டு சிரிப்போட பாக்குது.

அந்த தண்டனைதான் இப்போ நடக்குது இவனோட காவலுடன்.

என்னடா குமாரு, அஞ்சு மணிக்கே எந்திரிச்சி எக்ஸர்சைஸ் பண்றே? பால் கேன் உடன்
சைக்கிளை தள்ளியபடி வந்தான் செல்வம்.

போடா போய் பால சொசைட்டில ஊத்திட்டு வேலைய பாருடா, வந்துட்டான் வேதனைய கிளப்ப.

அது ஒண்ணும் இல்ல செலவண்ணே என்று விலாவாரியா விளக்கம் கொடுக்கறாரு சூப்பர்வைசரு.

நீ ஒருத்தன் போதுண்டா எனக்கு. இது எதிலயும் காதில வாங்காத மாதிரி என் ஓட்டத்தை
தீவிரப்படுத்தினேன்.

அட இந்த கிளி இவ்ளோ நாளா வீட்டுக்கு பின்னால இருக்குதா, நான் தினமும் பாக்குற கிளி
பட்டு போன தென்னை மரத்தில இருந்து சிறகை விறிச்சு கீச்சு கீச்சு னு சத்தமெழுப்பியபடி
பறந்தது.

பயலுக்கு புத்தி வந்துருச்சா, பல்லு குச்சியோட நாடாரு நக்கலா பார்த்தபடி போறாரு.

சரியா எண்ணுனியா, பத்து முடிஞ்சுடுச்சி தெரியும்ல, தண்டாலுக்கு தயாரானேன்.

கிழக்கிலிருந்து கதிரவன் தலையை நீட்ட எத்தனித்தான். செந்நிற வானத்திலருந்து சூரியன்
மெல்ல மெல்ல வெளிவரும் அற்புதக்காட்சி. தினமும் இப்படிதான் வரும்போல. எவ்ளோ
அழகா இருக்கு, தினமும் பார்க்கணும் மனதி குறித்து கொண்டேன்.

நெல்லை அரை அரை மூட்டையா கட்டி சைக்கிளில் வைத்து தள்ளியபடி வந்தார் ஒரு
முதியவர். நெல் உலர வைக்க காலையிலேயே இப்படி நிறைய பேர் வருவாங்க.

தாத்தா இப்படி கொடுங்க நான் தூக்கிட்டு போறேன் என்று அவரிடமிருந்து வாங்கி
களத்தின் நடுவே கொட்டி, சாக்கை உத்றி அவரிடம் கொடுத்தேன். மொத்தம்
பத்து அரை மூட்டை.

ரொம்ப நன்றி தம்பி.

ஏன் தாத்தா உங்க பசங்க யாரும் இல்லையா?, வயசான காலத்தில ஏன் இப்படி
கஷ்டபடுறிங்க.

பதிலேதும் சொல்லாமல், சிரித்து கொண்டே போய்விட்டார்.

அடடா இன்னிக்கு பொழுது எவ்வளவு அழகா விடிஞ்சு இருக்கு!. அழகிய கிளியின் சத்தம்,
ரம்மியமான காலை இளந்தென்றல், மெல்ல குளிரை விலக்கும்படி கிழக்கிலிருந்து சூரியன்
வெளிவந்த காட்சி, வயோதிகருக்கு செய்த உதவி, அவரின் நன்றி.

அப்பா நமக்கு நல்லதுதான் செஞ்சு இருக்காரு. நாமதான் அவர் எது சொன்னாலும்
தப்பாவே எடுத்துக்கறோம் போல இருக்கு.

குளித்து முடித்து உடை மாற்றினேன். அப்பா சாப்பிட்டு போயிட்டாராம்மா?
இப்போதான் போறாரு கண்ணு. அம்மா இப்படிதான் அழைப்பாள்.

என்ன சாப்பாடு?, இட்லிடா கண்ணு. என்னான்னு தெரியலனா பயங்கரமா பசிக்குது.

பள்ளி விட்டு மாலை வீடு திரும்பினேன்.

களத்தில் காயவைத்த நெல்லை வாரிக்கொண்டிருந்தார் தாத்தா. கூடவே ஒரு கிழவி
மனைவியாக இருக்க வெண்டும்.

இந்த தண்ணிய கொண்டுபோய் அவர்கிட்ட கொடு காலையிலருந்து ரொம்ப கஷ்டபடறாரு.
அம்மா தண்ணி சொம்பை கொடுத்தாள்.

அந்த கிழவிய கூப்பிட்டு குடும்மா, பாவம்டா கொண்டு போய் கொடுடா.

கொடுத்தேன்.

என்னமோ தெரியலை அவரை பார்த்தவுடனே மனசுக்கு சினேகமா மனசுக்கு சினேகமா
வந்துட்டாரு. அப்படி ஒரு நிதானம். ஒவ்வொரு வேலையும் மிக நேர்த்தியா செய்யறது
அவர் உடம்பை பார்த்தா வாலிபத்துல நல்ல உடற்கட்டோட இருந்துருப்பருன்னு
தெரிந்தது.

அவர் சாக்கை விரித்து பிடிக்க முறத்தால் நெல்லை வாரி சாக்கில் கொட்டினேன்.
சிதறிய நெல்மணிகளை துடைப்பத்தால் பெருக்கி கூட்டினாள் கிழவி.

சணலை கோணி ஊசியில் சொருகி அழகாக பின்னலிட்டபடி மூட்டையாக கட்டினார்.
இவ்ளோ நேரம் கிழவனும் கிழவியும் ஒரு வார்த்தை கூட பேசலியே ஏன்?, மனதிற்குள்
ஒரு கேள்வி எழுந்தது. சண்டையா இருக்குமோ, இருக்கும் இருக்கும், நம்ம ஊருல
புருசம் பொண்டாட்டி சண்டைக்கா பஞ்சம்.

உங்கம்மா மாதிரியே தங்கமான குணம்பா உனக்கும், வாழ்த்திவிட்டு சொம்பில் இருந்த
தண்ணீரை குடித்தார்.

தம்பி, நாளைக்கு உன்னோட உதவி தேவைப்படாதுப்பா, கட்டை வண்டிக்கு சொல்லிட்டேன்
இங்கிருந்து அப்படியே வண்டில ஏத்தி நேரா மில்லுல கொண்டு போய் அரைச்சு வீட்டுக்கு
கொண்டு போயிடுவேன். காவலுக்கு நான் இங்கதான் படுத்துக்குவேன்.

வரேன் தாத்தா, சொம்பை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தேன்.

ஏம்மா, கிழவன் கிழவிக்குள்ள சண்டையா?, ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லயே
அம்மாவிடம் கேட்டேன்.

கண்ணு நீ நினைக்கற மாதிரி அவங்க ரெண்டு பேரும் புருசன், பொஞ்சாதி இல்ல.

பின்ன என்ன உறவு?

அது அவரோட தங்கச்சி முறை வேணும், என்னது தங்கச்சியா? ஆச்சரியம் மேலிட
கேட்டேன். ஆமா அவங்களுக்கு பசங்க இல்லயா?

பிள்ளையே இல்ல.

கிழவிக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் குழந்தையே இல்ல, தங்கச்சிக்கு குழந்தை
பிறக்கலியே நாம எப்படி கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கறதுன்னு கல்ய்யானமே
பண்ணிக்கலை. இந்த நேரம் பாத்து கிழவியோட புருசன் வேற ஒருத்தியோட ஓடிப்
போயிட்டான். தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு இவரும் கல்யாணமே
பண்ணிக்கலை. அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கு கிழவிய கண் கலங்காம
பாத்துக்கறாரு .

இந்த காலத்தில இப்படியெல்லாம் இருக்கா, கிழவன் என் மனசுல பெரிய அளவுல
இடம்பிடிக்கறார்.

வயசாயிடுச்சு இல்ல அதான் அவ்வளவா பேசிக்கறது இல்ல.

நம்ம சேகரண்ணன் இருக்காரே, மொத கல்யாணத்தில குழந்தை பிறக்கல, இதுல
ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு வந்தாரு, அதிலயும் பொறக்கல,
தினமும் சுதாக்காவுக்கு அடி, உதைதான். பாவம் அந்தக்கா. எதையும்
வெளிக்காட்டிக்காம இருப்பாங்க.

இந்த காலத்திலயே இப்படின்னா, அந்த காலத்தில எப்படி இருந்திருக்கும். கிழவிய
எத்தனை பேர் மலடின்னு சொல்லி இருப்பாங்க. கொஞ்சமும் மனசை தளர விடாம
எப்படி பாத்துட்டு இருந்திருக்கார் இந்த தாத்தா.

எப்படிம்மா இது?

அதான் கண்ணு ரத்த பாசம்ணு சொல்றது, உறவு, சொந்தம், பந்தம். எல்லாம்
இருந்துட்டா வாழ்க்கையில கஷ்டம் வந்தாலும் சீக்கிறம் விலகிடும். அந்த
சமயத்தில அவங்க கொடுக்கற ஆறுதல் தான் வாழ்க்கையின் பலமே.

மிகப்பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறார் பெயர் தெரியாத அந்த கிழவன்.
யாரால் முடியும்?, தங்கச்சிகாக தன் வாழ்க்கையே தியாகம் பண்ண யாராவது
நினைச்சாவது பார்ப்பார்களா?.

இவர் முன்னாடி சேகரண்ணன் எல்லாம் ஒரு புழு மாதிரிதான்.

இரவு சாப்பாடு முடித்துவிட்டு தாத்தாவுன் நிறைய பேச வேண்டும். மனதில்
குறித்துக்கொண்டேன். நிறைய கேள்விகள் கேட்கணும்.

அவரும் இரவு உணவை முடித்து விட்டு கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.
கிழவி சாப்பாடு கொடுத்து விட்டு அப்போதுதான் நகர்ந்திருந்தாள்.

நிலவொளியில், களத்தின் நடுவே நானும், தாத்தாவும்.

ஏன் தாத்தா கல்யாணமே பண்ணிக்கலை?

மவுனம்.

மறுபடியும் கேட்டேன்.

பிடிக்கல தம்பி. மேலே கேட்பதை அவரும் விரும்பவில்லை, நானும் கேட்கவில்லை.
பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன்.

அவரின் இளமைக்காலங்கள் பற்றி நிறைய பேசினார். சுவாரசியமான
கேட்டுகொண்டு இருந்தேன். மாடு பிடிக்கறது, விவசாயம், வெள்ளைக்காரன்
இளமைக்குறும்புகள்னு நிறைய பேசினார்.

கேட்டுகொண்டு அவருடனே உறங்கிப்போனேன். அம்மாவிடம் சொல்லி,
கையையும் காலையும் புடிச்சி தூக்கிட்டே போய் வீட்டில் படுக்க வைத்தார்கள்.

இரு வாரங்களுக்கு பிறகு,

முழு ஆண்டு தேர்வு வெறு நெருங்கியது, கிட்டத்தட்ட கிழவனை மறந்திருந்தேன்.

"சட்டி சுட்டதடா கை விட்டதடா", எங்கயோ ரிக்கார்ட் பாடியது.

யாரும்மா மண்டைய போட்டது, ஆனா ஊனா மைக்செட்டை, வச்சி ஒப்பாரி போட்டு
இந்த மாதிரி பாட்டை வேற போட்டு இருக்கறவங்களை சாகடிபாங்களே.

சலித்துக்கொண்டேன்.

அப்படியெல்லம் சொல்லாத கண்ணு,

நெல்லு காய வச்சாங்களே

ஆமா

அந்த கிழவிதான் செத்து போச்சு, நெஞ்சு வலியாம், நல்ல சாவுதான். இழுத்துகிட்டு
கஷ்டப்படாம பொட்டுனு போறது.

என்னமா சொல்ற?

ஓட்டமாய் ஓடினேன். வாசலில் நெருப்பு மூட்டியிருந்தார்கள். சாவு வீட்டிற்கான
எந்த அறிகுறியும் இல்லை, ஓவென்ற அழுகை இல்லை, எரிச்சலுற வைக்கும்
ஒப்பாரி இல்லை.

தாத்தாவை தேடினேன்.

திண்ணையின் ஓரமாய் தோளில் துண்டை போட்டபடி அமர்ந்திருந்தார்.
அவரிடம் அழுகை இல்லை.

நான் பார்த்தேன்.

அவரின் கண்ணிலிருந்து சலனமில்லாமல் இரண்டு துளி கண்ணீர் விழுந்தது.
என்னிலிருந்தும்.

என்னால் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியுமா?, தோன்றவில்லை.

"இனிமேல் உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லையே கிழவனுக்கு".

.........................................................................................................................

ஒரு விளையாட்டு பையனின் பார்வையில் உறவுகள் எப்படி இருக்கும்னு
கருவா நினைச்சு எழுதினேன்.

எழுதின பிறகு சுருக்கணும்னு மனசு வரலை அதனாலாதான் எதையும்
எடுக்காமல் எழுதியதை அப்படியே பதிவிலிட்டு விட்டேன்.

பொறுமையாக படித்ததுக்கு நன்றி.

உங்கள் கருத்திற்காக காத்திருக்கிறேன்....

போட்டியில் பங்கு பெறும் படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
தம்பி

18 comments:

வல்லிசிம்ஹன் said...

தம்பி,
அழகான உறவுகளில் அண்ணன் தங்கை உறவு,

அருமையானது.
அந்தக் கிழவியம்மாவும் அண்ணனுக்குத் தன்னால் துயரம் வந்ததேனு வருத்தப்பட்டி இருப்பீங்க.
அபூர்வமான மனிதர்களை அறிமுகப் படுத்தி உறவைப் பலப்படுத்தி விட்டீர்கள்.
இப்பவும் ஓடறது உண்டா?:-)) வாழ்த்துகள். வெற்றி பெற.

தி. ரா. ச.(T.R.C.) said...

தம்பிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்.உறவோடு ஒட்டி விளையாடி இருக்கிறீர்கள். நல்ல படைப்பு.

கதிர் said...

கருத்திற்கு நன்றி மனு,

நான் பார்த்த சம்பவம்தான் இது என்றாலும் கொஞ்சம் கற்பனைய சேர்த்ததினால கதையா மாறிடுச்சு.

//இப்பவும் ஓடறது உண்டா?:-))//

அதெல்லாம் அப்பவே விட்டாச்சுங்க.
<><><><><><><><>

நன்றி தி.ரா.ச

//தம்பிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள//

உங்களின் வாழ்த்துக்கள் என்னை ஊக்கம் கொள்ள செய்கிறது.

Jazeela said...

தம்பி கதிரு, நல்ல கதைய எழுதிப்புட்டு //பொறுமையாக படித்ததுக்கு நன்றி.//ன்னு போட்டா எப்படி? ஆரம்பித்ததுமே கடசி வர இழுத்துட்டு போயிடுச்சுல்ல. நல்ல கத விடுறப்பா. வாழ்த்துக்கள்.

கதிர் said...

நன்றி ஜெசிலாக்கா,

அது என்னவோ தெரியலை என் மேல எனக்கே நம்பிக்கை வரமாட்டெங்குது.
அப்படியே ஒரு ஓட்டும் போட்ருங்க. வெய்யில்ல முகத்தை துடைச்சிக்க ஒரு டிஷுபாக்ஸ் இனாம்.

சும்மா தமாசு, கோவிச்சுக்காதீங்க

அன்புடன்
தம்பி

Clown said...

உறவின் "nature"ஐ சொல்லும் அருமையான படைப்பு.

வயோதிக காலத்தில் நடப்பதாகக் கொண்டு செல்லும் இந்தப் புணைவு எனக்கு 2 ஒத்த(கருப்பொருகள் வேறு -தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்) புனைவுகளை நினைவு படுத்தியது.நன்றி.

1)சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் வந்தது. கணவனை இழந்த ஒரு வயதான மூதாட்டி தன் கணவனின் வேண்டுதல் படி காசியில் சென்று கணவனின் இளம்பிராயக் காதலியை சந்திப்பார். அந்தப் பெண் ஒரு வயதான கன்னியாஸ்திரியாக இருப்பார்.

2) ஸால் பெல்லோ என்ற கனடிய எழுத்தாளர் வயதானவர்கள் பற்றிய நிகழ்வுகளை அதிகம் எழுதுவார்.

வாழ்த்துகள்.

மா.கலை அரசன் said...

கதை நல்லா இருக்குங்க தம்பி.
வாழ்த்துக்கள்.

We The People said...

லேசானால ஒரு உறவு கதை. இந்த மாதிரி உறவுகள் இனி வருங்காலத்தில் காண்பது அரிதாகும்... ஏன் இப்படி ஒரு தியாகியை இனி வரும் தலைமுறை காணாது போல தோண்றுகிறதே தம்பி. வாழ்த்துக்கள் வெற்றி பெற. கவலை பாடாதிங்க நானும் இருக்கேன் சும்மா ஒர் போட்டிக்காக, போட்டியில்லாம வெற்றி சுவை இருக்காது பாருங்க.

கார்த்திக் பிரபு said...

hi thambi ippa than padichane..nall iruku...

kadhaiyin arambatahi padithaal veru thisaiyil kadhai pyanithirumonnu ninaichane..but anga thaan neega vaithrukeenga twist(anga konu poya vacheenga)..valthukkal

கதிர் said...

Clown,
வருகைக்கு நன்றி உங்க இரண்டு மேற்கோள்களையும் கவனத்தில் எடுத்து கொள்கிறேன். ஆனால் இரண்டையும் படிச்சது இல்ல.
<><><>
வாங்க கலை!!

வாழ்த்துக்களுக்கு நன்றி கலை அரசன்,

<><><>

ஜெயசங்கர்,

உங்களை போன்ற அனுபவம் கொண்டவர்களின் வாழ்த்துகளை பெறும்போது மனதுக்கு நிறைவாய்
இருக்கிறது.

நான் அருகில் இருந்து அந்த பெரியவரை பார்த்திருக்கிறேன்.

//ஏன் இப்படி ஒரு தியாகியை இனி வரும் தலைமுறை காணாது போல தோன்றுகிறதே தம்பி//

எல்லாம் நம் கையில்தான் இருக்கு!!


அன்புடன்
தம்பி

Boston Bala said...

ரொம்ப நல்லா வந்திருக்குங்க.... எழுத்துப் பிழைகளையும் மேற்கோள் குறிகளையும் இன்னும் கொஞ்சம் கவனமா கொடுத்திருந்தால் படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும். கடைசி வரிகள் சில குறைத்து (அல்லது) மாற்றியமைத்தால் கூர்மையா முடிஞ்சிருக்கும். இப்போ வாசகனே புரிஞ்சுக்க வேண்டியது வெளிப்படையா வந்திருக்கறது மட்டும்தான் (நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட) குறை.

வெற்றியடையக் கூடிய படைப்பை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி!

கதிர் said...

நன்றி பாஸ்டன் பாலா,

முன்ன பின்ன எழுதி பழக்கம் இல்ல
அதனாலதான் மேற்கோள் குறிகளை
சரியா கையாள முடியல.

இனிமே கவனமா இருப்பேன்.


//நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட//

அப்படிதாங்க பாக்கணும்.

அன்புடன்
தம்பி

கதிர் said...

பாஸ்டன் பாலா,

இதை சொல்ல மறந்திட்டேன்.

இதுதான் முதல் வருகை உங்களுக்கு,
தொடர்ந்து வந்து குட்டிட்டு போங்க!

அன்புடன்
தம்பி

கப்பி | Kappi said...

அருமையான படைப்பு தம்பி

நல்லா இருக்கு..

வாழ்த்துக்கள்

கதிர் said...

வாங்க கப்பி ரொம்ப நாளா ஆள காணும்!?

/அருமையான படைப்பு தம்பி/

ஒழுங்கா ஓட்டை போடுங்கப்பா!

வாழ்த்துக்களுக்கு நன்றி!!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
"சட்டி சுட்டதடா கை விட்டதடா", எங்கயோ ரிக்கார்ட் பாடியது.
///

இதை ரசித்தேங்க

உங்க நடை நல்லா இருந்ததுங்க

கதிர் said...

வாங்க குமரன்,

நன்றி.

கதிர் said...

வாங்க குமரன்,

நன்றி.