எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, December 19, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 5

 சென்னையில் பல்லாயிரக்கணக்கில் பிரியாணிக்கடைகள் உண்டு. குறிப்பாக இந்த கோவிட் காலத்தின்போதும் அதற்குப் பிறகும் முளைத்த கடைகள் ஆயிரங்களைத் தாண்டு. அதில் 90 சதவீதம் ஆறே மாதங்களில் இழுத்து மூடப்படும். சில கடைகள் அதிகபட்சம் ஒருவருடம் தம் கட்டி ஓடும். எஞ்சுவதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுபோலவே பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பிரபலமான பிரியாணிக்கடைகள் உண்டு, பல்லாவரம் யா மொஹிதீன், பாண்டியன், அரபிஸ்தான், ஆசிப், புஹாரி, தால்சினி, வெற்றி தியேட்டர் அருகில் உள்ள பிரியாணிக்கடைகள் என ஏராள புகழ்பெற்ற பிரியாணிக்கடைகள்.

மேல்சொன்னவற்றில் மொஹிதீன், ஆனால் போர்டில் யா முஹைதீன் என்றே எழுதியிருக்கிறது. பேச்சுவாக்கில் மொஹிதீன். இந்தக்கடை பிரியாணி பிறர் சொல்வது போல ஆஹா ஓஹோ என்ற ருசி கிடையாது. பிரியாணியின் ருசிக்கு முக்கிய காரணம் அது பிரியாணி அண்டாவிலிருந்து நமது தட்டிற்கு பத்து விநாடிகளுக்குள் பரிமாறப்பட வேண்டும். நீங்கள் பாக்கெட்டில் அடைத்து டெலிவரி செய்யப்படுவது பிரியாணிதான் ஆனால் அதன் முழு ருசியைப் பார்க்க முடியாது. யா மொஹிதீனில் பிரியாணியை டவர் போல டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பார்கள். அப்போதே பகுதி ஆறியிருக்கும், பிறகு  நீங்கள் வாங்கி வீட்டுக்கு வந்து பெட்டியைத் திறந்து உண்ண ஆரம்பிக்கும்போது அதன் ஒரிஜினல் சுவையில் முக்கால்வாசி காற்றோடு போயிருக்கும்.  புஹாரி கூட ஒப்பு நோக்கினால் விலையும் சுவையும் கூடுதல். புஹாரியில் பிரியாணி சாப்பிட்ட பிறகு கையை இரண்டு முறை சோப்பு போட்டு கழுவினாலும் வழவழப்பு போகாது. நெய்யாக இருந்தால் ஒருமுறை கழுவினாலே போதும். இது வேறு ரகம். க்ரீஸ் டப்பாவிற்கு கையை நுழைத்தது போல இருக்கும். மாதம் நான்கு முறை சாப்பிட்டால் ஆறு மாதத்தில் மாரடைப்பு உறுதி. மற்றபடி புஹாரி பிரியாணி அட்மாஸ்பியர், சர்வீஸ், போன்ற பிற காரணங்களுக்காக எப்போதாவது சாப்பிடலாம்.

எனக்குப் பிடித்தமானது பல்லாவரம் பாண்டியன் ஓட்டல் ஓரளவுக்கு மதுரையின் மட்டன் பிரியாணி சுவையை நினைவுபடுத்தும். மற்ற கடைகளான, தால்சினி, அரபிஸ்தான், இன்னபிற கடைகள் டோட்டல் வேஸ்ட். என் பள்ளிக்காலங்களில் பிரியாணி என்றால் அது பீஃப் பிரியாணி மட்டும்தான். சிக்கன், மட்டன் எல்லாம் பிற்பாடு கேள்விப்பட்டவைதான். எங்கள் வீடான வெங்கட்டாம்பேட்டை ரோட்டிலிருந்து வடக்கநந்தல் அரசு ஆண்கள் மேல்நிலைக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய வாய்க்கால் கோமுகி அணையிலிருந்து வரும். பேருந்துநிலையத்திற்கு செல்லும் வழியில் அந்த ஓடை ஓரத்தில் ஒரு பாய் பிரியாணிக்கடை வைத்திருந்தார். மதிய உணவுக்கு சைக்கிளில் செல்லும்போது அது என் வழி இல்லையென்றாலும் அந்தக்கடை வழியாகவே செல்வேன். அந்த வாசனையை சொல்லில் எழுதவே முடியாது. எப்படியாவது ஒருநாள் காசு சேர்த்து சாப்பிட வேண்டும் என்று நினைத்ததுண்டு, கால் ப்ளேட் பத்து ரூபாய்தான். ஆனால் அந்த பத்து ரூபாய் என்னிடம் எப்போதுமே இருந்ததில்லை. பிறகு நண்பர்களுடன் காசு சேர்த்து ஆளுக்கு இரண்டு ரூபாய் போட்டு ஒரு பார்சல் வாங்கலாம் என முடிவெடுத்தோம். அங்குதான் ஒரு சிக்கல், யாராவது மாட்டுக்கறி பிரியாணி வாங்குவதை பார்த்து வீட்டில் போட்டுக்கொடுத்தால் ஊதாங்கோலால் அடி விழும். ஆகவே யார் வாங்குவது என்று சீட்டெழுதி எடுத்து பிறகுதான் வாங்கினோம். நாந்தான் வாங்கிவந்தேன். சாணி மெழுகிய தரை, இரண்டே இரண்டு பெஞ்ச். வயதான இஸ்லாமியர். எனக்கு நன்கு தெரிந்த முகம். பள்ளி சீருடையிலேயே வாங்கினேன். வாய்க்கால் ஓரமாக சென்று பொட்டலத்தைப் பிரித்த மூன்றாவது நொடியே காலியாகிப்போனது. அதுவரை சுவைத்திராத சுவை. கறி நன்றாக வெந்து பூப்போல இருந்தது. கையைக் கழுவாமல் பள்ளிக்கூடம் வரை முகர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். 

ஆகவே எனக்கு பிரியாணி என்றால் அது பீஃப் பிரியாணி அதுவும் நான் சிறுவயதில் சுவைத்த அதே ருசியில் இருக்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருந்தது. இங்கிருக்கும் கடைக்காரர் ஒருவர் ஜிம் பாடி. நன்றாக கறி சாப்பிடக்கூடியவர். அவரிடம் என் ஆசையை சொன்னபோது அவர் ஒரு கடையைக் காட்டினார். பல்லாவரம் பாலத்தின் அடியில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தாண்டினால் நாகல்கேணி வரும் சாலை ஓரத்திலேயே ஒரு கடை உண்டு. பீஃப் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும். 2 மணிக்குள்ள போகணும் இல்லன்னா கிடைக்காது என்றார். ஒருநாள் பார்த்து  போய் வாங்கிவந்தேன். சாப்பிட்டபிறகு பெரிய ஏமாற்றம். கறி வேகவில்லை. மிகவும் காய்ந்துபோய் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்த பீஸ்களும் வேகவில்லை. பல்லில் மாட்டி அவஸ்தையாக இருந்தது. பிறகு வேல்ஸ் நிறுத்தம் அருகே உள்ள பீஃப் பிரியாணி, தட்டுக்கடை பிரியாணி,  வைத்திலிங்கம் சாலை பிரியாணி என எங்குமே என் சுவைக்கு ஒத்துவரவில்லை. 

கிட்டத்தட்ட அப்படியொரு பிரியாணியை என் வாழ்நாளில் ருசிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கே வந்தநாளில் ஒரு அதிசயம் நடந்தது. பிள்ளைகளுக்கு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இசை வகுப்பு, நடன வகுப்புகள் உண்டு வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். ரயிலடி பக்கம் கனரா வங்கியின் மொட்டைமாடியில் இருந்தது. வகுப்பு முடிந்து திரும்பும்போதெல்லாம் ராதாநகர் ரோட்டில் மாலை ஆறு மணிக்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கூட்டமான கூட்டம் நின்றபடியே பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் " யார்ரா இவனுங்க நைட்டு நேரத்துல பிரியாணி திங்கிறானுங்க" என்று கடந்துவிடுவேன். ஆனால் வாசனை பட்டையைக் கிளப்பும். அந்தக்கடை திறப்பது மாலை ஆறுமணிக்குதான். அப்போதுதான் நாங்கள் வகுப்புக்குப் போவோம். திரும்பும்போது கூட்டம் அலையடிக்கும். ஒன்பது மணிக்கெல்லாம் கடை காலியாகிவிடும். வண்டியே இருக்காது. ஒவ்வொரு முறை அதைக் கடக்கும்போதும் வாசனை ஈர்த்தாலும் இரவு நேரத்தில் அதுவும் ரோட்டோரக்கடையில் பிரியாணி சாப்பிடுவது எனக்கு ஆரோக்கியமல்ல என்று நினைத்ததால் அதை முயற்சி செய்யவேயில்லை.  

ஒருநாள் ஆர்வம் தாங்கமுடியாமல் வாங்கிவிட்டேன். வீட்டுக்கு வந்து சாப்பிட அமரும்வரை கூட எனக்கு சலிப்பாகத்தான் இருந்தது. ஆனால் பிரித்தவுடன் வந்த வாசனையில் கிறங்கிப்போனேன். சுவைத்தால் எனக்கு நெஞ்சே அடைத்துக்கொண்டது. நான் சிறுவயதில் சாப்பிட்ட அதே சுவையில் அதே தரத்தில் ஒரு பிரியாணி. கறி ஒவ்வொன்றும் அத்தனை பதமாக வெந்திருந்தது. ஒரு பீஸை கையில் எடுத்து அழுத்திப் பார்த்தேன் தேன் கூட்டைப் பிழிவது போல இலகுவாக இருந்தது. இருவிரலில் கறித்துண்டை சுலபமாக பிரிக்க முடியுமானால் அதுதான் வாய்க்கு ஏற்ற பக்குவம். பல்லில் சிக்காது. நிறைய பீஸ்கள் ஒரு பக்கம் என்றால் அதன் சுவை என்னை மெய்மறக்கச் செய்தது. பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் முக்கால்வாசியை நானே தின்று தீர்த்தேன். அந்த வாசனை, குறிப்பாக பிரியாணியின் சூடு கொஞ்சம் கூட குறையாமல் பார்சல் கட்டித்தந்தார் அந்த பாய். வழக்கமாக பிற க்டைகளில் கண்ணாடி காயிதம், கவர்ச்சி டப்பா, ப்ளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் பார்சல் தருவார்கள். ஆனால் இவர் முதலில் இரண்டு டெப்ளாய்ட் சைஸ் பேப்பரை விரித்து அதன் மேல் ப்ளாஸ்டிக் தாள் வைத்து அதன் மேல் இலையை வைத்து பிரியாணி அண்டாவிலிருந்து மின்னல் வேகத்தில் பிரியாணியை வெட்டிக்கோதி எடுத்து அழகாக மடித்து நூலால் எட்டு சுற்று சுற்றுகிறார். இறுக்கமாக சுற்றப்படும் அந்த நூலினைத்தாண்டி சூடு வெளியே போகாது. குறைந்தது இருபது நிமிடங்கள் அந்த அண்டாவில் இருக்கும் அதே சூட்டோடு இருக்கும். தரமான பீஃப் பிரியாணி விரும்பிகள் தவறவே விடக்கூடாது. மற்ற கடைகளில் இதே பிரியாணி சாப்பிட்டிருந்தால் பல்லில் சிக்கி குச்சி வைத்து குடைந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்தக்கடையில் ஒருநாள் கூட பல்லில் சிக்கி இம்சை கூட்டவில்லை. பேரதிசயம்.

அந்த பாய் இடதுகைக்காரர். பார்சல் கட்டும் வேகமும் நூல் சுற்றும் வேகமும் கூட என்னை மிகவும் கவர்ந்தது. வாரம் ஒருமுறையாவது அவர் கடையில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்போது தொடர்ந்து நான்காவது நாளாக அங்கே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். இன்னும் இரண்டுநாளில் சிங்கப்பூர் பயணம் அதற்குப் பிறகு சாப்பிட வாய்க்காது. விமானம் ஏறும் நாள் கூட இங்கே சாப்பிட்டுவிட்டுதான் ஏறலாம் என்றிருக்கிறேன். அந்தளவுக்கு அதன் சுவை என்னை ஈர்த்துவிட்டது. குரோம்பேட்டையில் கண்டெடுத்த முத்து அந்த பாய். ராதாநகர் மெயின் ரோடில் எஸ்பிஐ வங்கிக்கு அருகில் உள்ளது அக்கடை. இதைப் படிக்கும் யாராவது? போய் சுவைத்துப் பார்த்து எனக்கு எழுதுங்கள்.


தொடரும்....


No comments: