எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, December 18, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 4

 குரோம்பேட்டை என்றில்லை, சென்னை முழுக்கவே எனக்கு மட்டுமல்லாது பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாக இருப்பது மாடுகள்தான். அதிலும் குரோம்பேட்டை மாடுகள் விசித்திரமானவை. அவற்றின் உரிமையாளர் யார் எனத் தெரியாது. காலையில் கிளம்பி தெருத்தெருவாக சுற்றி அதன் இடத்திற்கு மாலையில் திரும்பிவிடும். நகர மாடுகள் தங்கள் வாழ்நாளில் மேய்ச்சல் நிலத்தைக் கண்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். எங்கள் வீட்டு ஓனர் கூட மாடு வளர்க்கிறார். என் வீட்டுக்கு பின்புறத்தில்தான் அவர் வீடும் இருக்கிறது ஆனால் அந்த மாடுகளை ஓரிரு முறைதான் நான் கண்டிருக்கிறேன். அவ்வளவு ரகசியமாக ஒரு கொட்டகைக்குள் வாழ்ந்து வருகிறது. அதற்கு தீனி வைக்கோல் கொஞ்சம்தான், மீதியெல்லாமே மார்கெட்களில் வீசப்படும் காய்கறிக்கழிவுகள்தான், முட்டைக்கோஸ், காலிப்ளவர் இலைகள், கத்திரிக்காய், காரட், பழுத்த வாழை இலைகள் மற்றும் அன்றைய தேதிக்கு அதிக விளைச்சளால் மார்கெட் வரை வந்து வீணாய் போன அத்தனை காய்கறிகளும் மாடுகளுக்குதான் போய் சேருகிறது. மிக நிச்சயமாக நான் சொல்வேன், அந்தப் பசுக்கள் பசும்புல்லை தின்றிருக்க வாய்ப்பில்லை. எங்கே இருக்கிறது நிலம்? 

தெருக்களில் சுற்றித்திரியும் பசுமாடுகள் வேறொரு ரகம். நகர மனிதர்களுடனே வாழ்ந்து சலித்துப் போன மிருகங்கள் அவை. தனது வழக்கமான உணவு முறையிலிருந்து தள்ளிப்போன ஒரு உணவுமுறைக்கு வந்த பின்னர் உருவான இந்தப் பசுக்களுக்கு எருமை குணம் அல்லது அதற்கு மேலும் கூட பொறுமை வந்திருக்கிறது. விட்டேத்தியாக அதுபாட்டுக்கு சாலையில் நின்று வெகுநேரம் எதாவது யோசித்துக்கொண்டிருக்கும், அப்படியே நடுரோட்டில் அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா செய்யும். எருமைகள்தான் இவ்விதம் சேட்டை செய்யும். மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டே இருக்கும் திடிரென அதன் மூளையில் ஏதோ யோசனை வர சட்டென்று சாலையில் நின்றபடி யோசித்துக்கொண்டே இருக்கும். சீக்கிரத்தில் நகராது. இந்தப் பண்புகளை பசுக்களும் வரித்துக்கொண்டது. அதிலும் குரோம்பேட்டை பசுக்கள் எருமைகளை விட ஒருபடி மேலே போய் நாள் முழுக்க சாலையில் கணித சூத்திரத்தை மனனம் செய்யும் பள்ளி மாணவனைப் போல நின்றுகொள்ளும்.  எளிதில் நகராது. 

பசுக்களின் அடுத்த பிரச்சினை அதன் சாணம்தான். எங்கள் வீட்டில் நாங்களும் பசு வளர்த்திருக்கிறோம்  சாணம் வரிவரியாக உலர்ந்துபோய் புட்டு பதத்தில் இருக்கும். இரு கைகளையும் தரையோடு சேர்த்தால் அடியில் வாரி எடுத்தால் கொஞ்சம் கூட கையில் சாணம் ஒட்டாது. கையைத் தட்டிவிட்டு போய்விடலாம். ஆனால் இந்த குரோம்பேட்டை மாடுகள் போடும் சாணத்தை சாணம் என்று சொல்வது அதிகம். அது எந்த பதத்தில் இருக்கும் என்றால் சினிமா போஸ்டர்கள் ஒட்ட ஒரு பசை செய்வார்களே அதுபோன்ற பதத்தில் இருக்கும். அல்லது வெண்டைக்காயை விளக்கெண்ணை விட்டு மிக்சியில் அடித்தாற்போல ஒரு பதம். வேகமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது சரியாக ப்ரெஷ் சாணியில் டயர் படும்படி ஒரு ப்ரேக் அடித்தீர்கள் என்றால் எலும்பு டாக்டரிடம்தான் கண்விழிக்க நேரிடும். அத்தனை ஆபத்தான விஷயம் அது. எருமைகள் போடும் சாணியோ எப்போதும் ஒரே ரகம்தான். அது மோர் விட்டுக் கரைத்த கம்மங்கூழ் பதத்தில் இருக்கும், இன்னும் சரியாக சொல்வதென்றால் ஓட்டல்களில் ரவா தோசை செய்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே ரவைக் கரைசலை தோசைக்கல் மேல் தெளிப்பார்கள் அப்படிதான் எருமையும் சாலையில் சாணமிடும்.

நான் ஒரு ஏழெட்டு முறை சாணத்தில் கால் வைத்திருக்கிறேன். என் புத்திக்கு எட்டியவரை சாணம் பச்சை நிறத்தில் இருக்கும் என்று மூளையில் பதிந்திருப்பதால் மணல்மேடு போல சாணமிடும் பசுக்களிடம் ஏமாந்துபோகிறேன். பார்ப்பதற்கு மண்குவியல் போல இருக்கும். மண்தானே என்று காலை வைத்தால் இழுத்து விடும். செருப்பில் ஒட்டிய சாணி எளிதில் போகாது. பெவிகால் போல ஒட்டி விடும். சாணியில் கால்வைத்த அடுத்த நொடியே கழுவ ஆரம்பித்தால் கூட சுத்தமாக அரைமணிக்கூர் ஆகும் . நீரில்லாத பகுதியில் மாட்டுனீர்கள் என்றால் அந்த சாணி செருப்பு பிய்ந்துபோகும் வரை கூட இருப்பதற்கு சாத்தியம் உண்டு. பசை அப்படிப்பட்டது.

ஏன் இப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் ஆச்சரியமானவை. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தங்களுக்கு அரசால் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை ஊர வைத்து மாடுகளுக்கு கொடுக்கிறார்கள். மாடுகளும் தங்களுக்குள் வீடுகளைப் பிரித்துக்கொண்டதுபோல மிகச்சரியாக தினசரி அந்த நேரத்தில் போய் வாசலில் நிற்கும். அவர்களும் ஊரவைத்த அரிசியையோ, கோதுமையையோ ஓட்டை குண்டானி வைத்துவிடுவார்கள் மாடுகளும் தரையில் பாதி வாயில் மீதி என தின்றுவிட்டு அந்த குண்டானை தெருவில் உருட்டிவிட்டு சென்றுவிடும். எவனாவது அதில் மோதி விழுவான். மக்கள் மாடுகளுக்கு நன்மை செய்வதாகவும் அதற்கு உணவிடுவதாகவும் நினைத்துக்கொண்டு இச்செயல்களில் மனமுவந்து செய்கிறார்கள். இவைதான் சாணத்தின் பசைத்தன்மைக்கு முக்கிய காரணம். அதிலும் ஊறவைத்த கோதுமையைத் தின்ற மாடுகளில் சாணத்தை மிதிப்பவர்களின் கோணல் முகத்தை நீங்கள் நேரில் பார்த்தால் உணர்வீர்கள்.

எல்லாமே வேகத்தில் நடக்கும் சென்னை போன்ற நகரங்களில் அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து படைத்து சாப்பிட்டுச் செல்ல நேரமிருப்பதில்லை. அக்குற்ற உணர்ச்சியை போக்கும் விதமாக யாரோ ஒரு அகத்திக்கீரை வியாபாரிதான் இப்புரளியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். அமாவாசை தினத்தன்று காய்கறிக்கடையில் ஒரு அகத்திக்கீரையை பைக்கில் அமர்ந்தவாறே வலதுகையால் காசு கொடுத்து வாங்கி அப்படியே அதை இடது கையால் மாட்டின் வாயில் திணித்துவிட்டு முறுக்கிக் கிளம்பி விடுவார்கள். விரதம் இருக்காமல் போன பாவத்தை அகத்திக்கீரைகட்டை மாட்டுக்கு கொடுத்ததன் மூலமாக சரிசெய்து விடலாமாம். அமாவாசை தினங்களில் எல்லா காய்கறிக்கடை முன்பும் வரிசையாக மாடுகள் நிற்கும். எருமைக்கு கொடுக்க மாட்டார்கள். பசுக்கு மட்டும்தான். அதுதான் புனிதமாச்சே.

அடுத்த ஒருமணி நேரத்தில் சாலை முழுக்க பச்சை பெயிண்ட் ஊற்றியது போல அகத்திக்கீரை சாணி நிறைந்திருக்கும். 

தொடரும்...

No comments: