எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, December 16, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 1

 குடும்பமாக குரோம்பேட்டைக்கு குடிவந்து இந்த மாதத்தோடு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.  திடிரென ஒரு இடமாற்றம் பெற்றவர்களையும் பிள்ளைகளையும் எந்தளவுக்கு பாதிக்கும் என அரசு ஊழியர்களின் பிள்ளைகள் நன்கறிவர். நானும் அதைப்போன்ற ஒரு பிள்ளைதான். ஒரு பள்ளியில் பயின்று நல்ல நண்பர்களை சம்பாதித்திருப்பேன். ஊரின் அத்தனை சந்து பொந்துகளும் சுற்றியிருப்பேன். அகன்ற கிணறுகளில் குளித்துக் களித்திருப்பேன், பள்ளித்தோழிகளின் வீடுகள், சினிமா அரங்கம், அக்கம் பக்கம் வீடுகளுடனான உறவுகள் என எல்லாவற்றையும் மாற்றி எழுதிப் போட்டுவிடும் அப்பா கொண்டு வரும் மாற்றல் கடிதம். பெட்டி படுக்கைகளுடன் அம்மக்களிடம் இருந்து விடைபெற்று புதிய ஊருக்குப் போவோம். இப்படி என் பால்யத்தில் வேறூன்ற் போகும் சமயத்தில் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்டிருக்கிறேன். ஒரு சிறுவனாக என் பார்வையில் தோன்றும் அதே பிரிவுகள் அம்மாவுக்கும் உண்டு, அப்பாவுக்கும் உண்டு. எல்லோருக்குமே சங்கடம் அளிக்கும் விஷயம்தான் அது.

அவ்வகையில் குரோம்பேட்டைக்கு முன்பு சிங்கப்பூரில் குடியிருந்தோம். பத்து வருடங்கள். என் அப்பாவுக்கு விதிக்கப்பட்ட அதே வாழ்க்கை அமைப்புதான், நிலம் மட்டும் வேறு. அவருக்கு என்ன விதிக்கப்பட்டிருந்தது? கைக்கும் வாய்க்குமான ஊதியம். அதற்குள்ளே வாழ்க்கை. அவர் பெரிதாக ஒன்றுக்கும் ஆசைகொள்ளாதவர். அவரைப் போலவே எனக்கும் அமைந்தது குணம். வாழ்க்கையும் கூட. ஆனால் கொண்டாட்டங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் குறையில்லாத வாழ்க்கை. பிறகு அங்கிருந்து வரும் சூழல் உருவானபோது எனக்குள் ஏற்பட்ட துயரம் சொல்லி மாளாது. நான் குடியிருந்த அத்தெருவை நேசித்தேன். அம்மனிதர்கள் எனக்கு மனதிற்கினிய மனிதர்களானார்கள். அத்தெருக் கடைகளில் பணிபுரிந்த பல்வேறு நாட்டவர்கள் நெருங்கிய நண்பர்கள். நடைபாதை, மரங்கள், புறாக்கள், பூனைகள், அப்பகுதிக்கே உரிய உணவுகள், பிள்ளையின் புதிய நட்பு. அப்போதுதான் பக்கத்து வீட்டு சிறுமியுடன் அவனுக்கு நட்பு உண்டானது. இவை எல்லாவற்றையும் பிரியும் சோகம் ஒரே நிலத்தில் வாழ்பவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

இப்படிதான் நான் அங்கிருந்து குரோம்பேட்டை வந்து சேர்ந்தேன். குரோம்பேட்டை எனக்கு ஒன்றும் புதிதல்ல. இங்கு நான் ஏற்கனவே குடியிருந்திருக்கிறேன். ஆனால் அப்போது நான் பேச்சிலர். அதிகமல்ல, இடையில் பதினொரு ஆண்டுகள்தான் கடந்திருக்கின்றன. இந்த இடைவெளியில் என் வாழ்வில் என்னவொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என எண்ணிப்பார்க்க உதவியது குரோம்பேட்டையின் மீள்வரவு. அப்போது ஐந்தாறு பேர்கள் ஒரு வீடெடுத்து ராதாநகர் வேலாயுதம் தெருவில் குடியிருந்தோம். முப்பதுக்கும் அதிகமான ஜன்னல் கதவுகள் வைத்த பழங்காலத்து வீடு. மழை வந்தால் ஜன்னல் சாத்துவதற்கே நேரம் போதாது. தரையில் அமர்ந்தபடியே கழுத்தை நீட்டாமல் தெருவில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக காண முடியும். அந்தளவுக்கு ஜன்னலை இறக்கி வைத்திருப்பார்கள். இரண்டு படுக்கை கொண்ட அந்த வீட்டில் குறைந்த 70 ஜன்னல்களும் இரண்டு கதவுகளும் உண்டு.  கு.பே வந்த பிறகு மீண்டும் அந்த தெருவுக்கு சென்று பார்த்தேன். வீடுகள் முற்றிலும் மாறியிருக்கின்றன. அப்போதே புதிய வீடுகள் போலிருந்ததை இடித்து அடுக்குமாடி வீடு கட்டியிருக்கிறார்கள். அகலமான சாலை குறுகலாயிருக்கிறது. எவர் வீட்டின் முன்பும் சேர் போட்டு அமர்ந்து ஓய்வெடுக்கிற அமைப்பே இல்லை. காற்று கூட புக முடியாத இரும்பு கேட்களால் மூடியிருக்கிறார்கள். மரங்கள் காணாமல் போயிருந்தது. ஆனால் நான் குடியிருந்த அந்த வீடு மட்டும் அப்படியே இருந்தது. சுண்ணாம்பு கூட அடிக்கவில்லை. வீட்டு உரிமையாளரின் மகன்  மட்டும் வாலிபனாக மாறியிருந்தான். கண்ணாடி போட்டிருந்த அம்மாஞ்சி சிறுவன் உருண்டு திரண்டு நிற்பது ஒன்றுதான் நான் மாற்றமாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். அந்த வீடும்.

வேலாயுதம் தெருவுக்கு இன்னொரு சிறப்பு உண்டென்றால் அது, எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அங்குதான் குடியிருக்கிறார். வரும்காலத்தில் சினிமாவை ஆளப்போகும் ஒரு ஆளுமையாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் உடையவர். கு.பே வந்த புதிதில் அவரிடம் இரண்டு புத்தகங்கள் இரவல் வாங்க்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மறுபடி வேலாயுதம் தெருவுக்கு சென்று வந்தேன். நாம் வாழ்ந்த ஓரிடத்தைக் காணுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புத்தகத்தை திருப்பிக்கொடுப்பது என்பது என் அகராதியிலேயே இல்லாத ஒரு சொல். ஆனால் காலம் எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள். லஷ்மியும் நானும் ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் சந்திப்பதுதான் வாடிக்கை. நான் டீயும், அவர் காபியும் குடிப்போம். இரண்டுமே நன்றாக இருக்காது. உண்மையில் குரோம்பேட்டையில் நல்ல டீக்கடை இல்லை. சுமாரான டீக்கடை உள்ளது. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி என்பது வெல்லப்பாகில் பாலைக்கலந்து கொடுப்பார்கள். குடித்த கொஞ்ச நேரத்திலேயே உடல் இனிக்கும். பொதுவாகவே டீ குடிக்க ஏற்ற வேளை என்பது காலை ஐந்து மணி. கடை திறப்பதற்கு முன்பே அங்கே வந்து காத்திருந்து கடைக்காரர் அடுப்பை பற்ற வைத்து முதல் டீதூள் கொதிக்கும் அந்த நேரம் ஒரு வாசனை வரும். அதை முகர்ந்த பிறகு குடிக்கும் டீயே சிறந்த டீ. காத்திருந்து பெறவேண்டும் அதில்தான் ருசி அடங்கியிருக்கிறது. இப்போது அப்படியெல்லாம் குடிக்க சாத்தியமில்லை, எவருக்கும் நேரமில்லை. சொந்த ஊருக்குப் போகும் போது வாயில் பீடி புகை கசிய முக்காடு போட்டுக்கொண்டு முதல் டீக்கு காத்திருக்கும் பெருசுகளை பார்க்க முடிகிறது. கொடுத்து வைத்தவர்கள்.

 இந்த பத்து ப்ளஸ் ஆண்டுகள் என் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை மனம் யோசிக்க ஆரம்பித்தது. ரத்த உறவின் மறைவுதான் பேரிடி,  எனக்கு திருமணம் ஆனது, சிங்கப்பூர் சென்றது, பிறகு மனைவியை அழைத்துக்கொண்டது , முதல் குழந்தை, மகிழ்ச்சி க்கொண்டாட்டம், ஒரு நடுத்தர வாழ்வினன் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களும் எதிர்கொள்ள காலம் பழக்கிக் கொடுத்தது. ஒரு சலிப்பு வரும் அல்லவா, அந்த சலிப்பிலிருந்து நீங்க புத்தகங்களும் நண்பர்களும், குடியிரவு கொண்டாட்டங்களும் துணை வந்து சலிப்பு மேலிடாதவாறு பார்த்துக்கொண்டது. இப்படியாக இரண்டாவது ஒருவன் பிறந்தான். இவன் பிறந்த நேரம் நீ பெரிய உச்சங்களை தொடுவாய் என ஆருடம் சொன்னார்கள். ஆம், வானில் பறந்து உச்சம் தொட்டு குரோம்பேட்டை வந்தடைந்தேன். 

தொடரும்...

No comments: