எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, December 19, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 5

 சென்னையில் பல்லாயிரக்கணக்கில் பிரியாணிக்கடைகள் உண்டு. குறிப்பாக இந்த கோவிட் காலத்தின்போதும் அதற்குப் பிறகும் முளைத்த கடைகள் ஆயிரங்களைத் தாண்டு. அதில் 90 சதவீதம் ஆறே மாதங்களில் இழுத்து மூடப்படும். சில கடைகள் அதிகபட்சம் ஒருவருடம் தம் கட்டி ஓடும். எஞ்சுவதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுபோலவே பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பிரபலமான பிரியாணிக்கடைகள் உண்டு, பல்லாவரம் யா மொஹிதீன், பாண்டியன், அரபிஸ்தான், ஆசிப், புஹாரி, தால்சினி, வெற்றி தியேட்டர் அருகில் உள்ள பிரியாணிக்கடைகள் என ஏராள புகழ்பெற்ற பிரியாணிக்கடைகள்.

மேல்சொன்னவற்றில் மொஹிதீன், ஆனால் போர்டில் யா முஹைதீன் என்றே எழுதியிருக்கிறது. பேச்சுவாக்கில் மொஹிதீன். இந்தக்கடை பிரியாணி பிறர் சொல்வது போல ஆஹா ஓஹோ என்ற ருசி கிடையாது. பிரியாணியின் ருசிக்கு முக்கிய காரணம் அது பிரியாணி அண்டாவிலிருந்து நமது தட்டிற்கு பத்து விநாடிகளுக்குள் பரிமாறப்பட வேண்டும். நீங்கள் பாக்கெட்டில் அடைத்து டெலிவரி செய்யப்படுவது பிரியாணிதான் ஆனால் அதன் முழு ருசியைப் பார்க்க முடியாது. யா மொஹிதீனில் பிரியாணியை டவர் போல டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பார்கள். அப்போதே பகுதி ஆறியிருக்கும், பிறகு  நீங்கள் வாங்கி வீட்டுக்கு வந்து பெட்டியைத் திறந்து உண்ண ஆரம்பிக்கும்போது அதன் ஒரிஜினல் சுவையில் முக்கால்வாசி காற்றோடு போயிருக்கும்.  புஹாரி கூட ஒப்பு நோக்கினால் விலையும் சுவையும் கூடுதல். புஹாரியில் பிரியாணி சாப்பிட்ட பிறகு கையை இரண்டு முறை சோப்பு போட்டு கழுவினாலும் வழவழப்பு போகாது. நெய்யாக இருந்தால் ஒருமுறை கழுவினாலே போதும். இது வேறு ரகம். க்ரீஸ் டப்பாவிற்கு கையை நுழைத்தது போல இருக்கும். மாதம் நான்கு முறை சாப்பிட்டால் ஆறு மாதத்தில் மாரடைப்பு உறுதி. மற்றபடி புஹாரி பிரியாணி அட்மாஸ்பியர், சர்வீஸ், போன்ற பிற காரணங்களுக்காக எப்போதாவது சாப்பிடலாம்.

எனக்குப் பிடித்தமானது பல்லாவரம் பாண்டியன் ஓட்டல் ஓரளவுக்கு மதுரையின் மட்டன் பிரியாணி சுவையை நினைவுபடுத்தும். மற்ற கடைகளான, தால்சினி, அரபிஸ்தான், இன்னபிற கடைகள் டோட்டல் வேஸ்ட். என் பள்ளிக்காலங்களில் பிரியாணி என்றால் அது பீஃப் பிரியாணி மட்டும்தான். சிக்கன், மட்டன் எல்லாம் பிற்பாடு கேள்விப்பட்டவைதான். எங்கள் வீடான வெங்கட்டாம்பேட்டை ரோட்டிலிருந்து வடக்கநந்தல் அரசு ஆண்கள் மேல்நிலைக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய வாய்க்கால் கோமுகி அணையிலிருந்து வரும். பேருந்துநிலையத்திற்கு செல்லும் வழியில் அந்த ஓடை ஓரத்தில் ஒரு பாய் பிரியாணிக்கடை வைத்திருந்தார். மதிய உணவுக்கு சைக்கிளில் செல்லும்போது அது என் வழி இல்லையென்றாலும் அந்தக்கடை வழியாகவே செல்வேன். அந்த வாசனையை சொல்லில் எழுதவே முடியாது. எப்படியாவது ஒருநாள் காசு சேர்த்து சாப்பிட வேண்டும் என்று நினைத்ததுண்டு, கால் ப்ளேட் பத்து ரூபாய்தான். ஆனால் அந்த பத்து ரூபாய் என்னிடம் எப்போதுமே இருந்ததில்லை. பிறகு நண்பர்களுடன் காசு சேர்த்து ஆளுக்கு இரண்டு ரூபாய் போட்டு ஒரு பார்சல் வாங்கலாம் என முடிவெடுத்தோம். அங்குதான் ஒரு சிக்கல், யாராவது மாட்டுக்கறி பிரியாணி வாங்குவதை பார்த்து வீட்டில் போட்டுக்கொடுத்தால் ஊதாங்கோலால் அடி விழும். ஆகவே யார் வாங்குவது என்று சீட்டெழுதி எடுத்து பிறகுதான் வாங்கினோம். நாந்தான் வாங்கிவந்தேன். சாணி மெழுகிய தரை, இரண்டே இரண்டு பெஞ்ச். வயதான இஸ்லாமியர். எனக்கு நன்கு தெரிந்த முகம். பள்ளி சீருடையிலேயே வாங்கினேன். வாய்க்கால் ஓரமாக சென்று பொட்டலத்தைப் பிரித்த மூன்றாவது நொடியே காலியாகிப்போனது. அதுவரை சுவைத்திராத சுவை. கறி நன்றாக வெந்து பூப்போல இருந்தது. கையைக் கழுவாமல் பள்ளிக்கூடம் வரை முகர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். 

ஆகவே எனக்கு பிரியாணி என்றால் அது பீஃப் பிரியாணி அதுவும் நான் சிறுவயதில் சுவைத்த அதே ருசியில் இருக்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருந்தது. இங்கிருக்கும் கடைக்காரர் ஒருவர் ஜிம் பாடி. நன்றாக கறி சாப்பிடக்கூடியவர். அவரிடம் என் ஆசையை சொன்னபோது அவர் ஒரு கடையைக் காட்டினார். பல்லாவரம் பாலத்தின் அடியில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தாண்டினால் நாகல்கேணி வரும் சாலை ஓரத்திலேயே ஒரு கடை உண்டு. பீஃப் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும். 2 மணிக்குள்ள போகணும் இல்லன்னா கிடைக்காது என்றார். ஒருநாள் பார்த்து  போய் வாங்கிவந்தேன். சாப்பிட்டபிறகு பெரிய ஏமாற்றம். கறி வேகவில்லை. மிகவும் காய்ந்துபோய் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்த பீஸ்களும் வேகவில்லை. பல்லில் மாட்டி அவஸ்தையாக இருந்தது. பிறகு வேல்ஸ் நிறுத்தம் அருகே உள்ள பீஃப் பிரியாணி, தட்டுக்கடை பிரியாணி,  வைத்திலிங்கம் சாலை பிரியாணி என எங்குமே என் சுவைக்கு ஒத்துவரவில்லை. 

கிட்டத்தட்ட அப்படியொரு பிரியாணியை என் வாழ்நாளில் ருசிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கே வந்தநாளில் ஒரு அதிசயம் நடந்தது. பிள்ளைகளுக்கு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இசை வகுப்பு, நடன வகுப்புகள் உண்டு வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். ரயிலடி பக்கம் கனரா வங்கியின் மொட்டைமாடியில் இருந்தது. வகுப்பு முடிந்து திரும்பும்போதெல்லாம் ராதாநகர் ரோட்டில் மாலை ஆறு மணிக்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கூட்டமான கூட்டம் நின்றபடியே பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் " யார்ரா இவனுங்க நைட்டு நேரத்துல பிரியாணி திங்கிறானுங்க" என்று கடந்துவிடுவேன். ஆனால் வாசனை பட்டையைக் கிளப்பும். அந்தக்கடை திறப்பது மாலை ஆறுமணிக்குதான். அப்போதுதான் நாங்கள் வகுப்புக்குப் போவோம். திரும்பும்போது கூட்டம் அலையடிக்கும். ஒன்பது மணிக்கெல்லாம் கடை காலியாகிவிடும். வண்டியே இருக்காது. ஒவ்வொரு முறை அதைக் கடக்கும்போதும் வாசனை ஈர்த்தாலும் இரவு நேரத்தில் அதுவும் ரோட்டோரக்கடையில் பிரியாணி சாப்பிடுவது எனக்கு ஆரோக்கியமல்ல என்று நினைத்ததால் அதை முயற்சி செய்யவேயில்லை.  

ஒருநாள் ஆர்வம் தாங்கமுடியாமல் வாங்கிவிட்டேன். வீட்டுக்கு வந்து சாப்பிட அமரும்வரை கூட எனக்கு சலிப்பாகத்தான் இருந்தது. ஆனால் பிரித்தவுடன் வந்த வாசனையில் கிறங்கிப்போனேன். சுவைத்தால் எனக்கு நெஞ்சே அடைத்துக்கொண்டது. நான் சிறுவயதில் சாப்பிட்ட அதே சுவையில் அதே தரத்தில் ஒரு பிரியாணி. கறி ஒவ்வொன்றும் அத்தனை பதமாக வெந்திருந்தது. ஒரு பீஸை கையில் எடுத்து அழுத்திப் பார்த்தேன் தேன் கூட்டைப் பிழிவது போல இலகுவாக இருந்தது. இருவிரலில் கறித்துண்டை சுலபமாக பிரிக்க முடியுமானால் அதுதான் வாய்க்கு ஏற்ற பக்குவம். பல்லில் சிக்காது. நிறைய பீஸ்கள் ஒரு பக்கம் என்றால் அதன் சுவை என்னை மெய்மறக்கச் செய்தது. பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் முக்கால்வாசியை நானே தின்று தீர்த்தேன். அந்த வாசனை, குறிப்பாக பிரியாணியின் சூடு கொஞ்சம் கூட குறையாமல் பார்சல் கட்டித்தந்தார் அந்த பாய். வழக்கமாக பிற க்டைகளில் கண்ணாடி காயிதம், கவர்ச்சி டப்பா, ப்ளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் பார்சல் தருவார்கள். ஆனால் இவர் முதலில் இரண்டு டெப்ளாய்ட் சைஸ் பேப்பரை விரித்து அதன் மேல் ப்ளாஸ்டிக் தாள் வைத்து அதன் மேல் இலையை வைத்து பிரியாணி அண்டாவிலிருந்து மின்னல் வேகத்தில் பிரியாணியை வெட்டிக்கோதி எடுத்து அழகாக மடித்து நூலால் எட்டு சுற்று சுற்றுகிறார். இறுக்கமாக சுற்றப்படும் அந்த நூலினைத்தாண்டி சூடு வெளியே போகாது. குறைந்தது இருபது நிமிடங்கள் அந்த அண்டாவில் இருக்கும் அதே சூட்டோடு இருக்கும். தரமான பீஃப் பிரியாணி விரும்பிகள் தவறவே விடக்கூடாது. மற்ற கடைகளில் இதே பிரியாணி சாப்பிட்டிருந்தால் பல்லில் சிக்கி குச்சி வைத்து குடைந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்தக்கடையில் ஒருநாள் கூட பல்லில் சிக்கி இம்சை கூட்டவில்லை. பேரதிசயம்.

அந்த பாய் இடதுகைக்காரர். பார்சல் கட்டும் வேகமும் நூல் சுற்றும் வேகமும் கூட என்னை மிகவும் கவர்ந்தது. வாரம் ஒருமுறையாவது அவர் கடையில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்போது தொடர்ந்து நான்காவது நாளாக அங்கே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். இன்னும் இரண்டுநாளில் சிங்கப்பூர் பயணம் அதற்குப் பிறகு சாப்பிட வாய்க்காது. விமானம் ஏறும் நாள் கூட இங்கே சாப்பிட்டுவிட்டுதான் ஏறலாம் என்றிருக்கிறேன். அந்தளவுக்கு அதன் சுவை என்னை ஈர்த்துவிட்டது. குரோம்பேட்டையில் கண்டெடுத்த முத்து அந்த பாய். ராதாநகர் மெயின் ரோடில் எஸ்பிஐ வங்கிக்கு அருகில் உள்ளது அக்கடை. இதைப் படிக்கும் யாராவது? போய் சுவைத்துப் பார்த்து எனக்கு எழுதுங்கள்.


தொடரும்....


Sunday, December 18, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 4

 குரோம்பேட்டை என்றில்லை, சென்னை முழுக்கவே எனக்கு மட்டுமல்லாது பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாக இருப்பது மாடுகள்தான். அதிலும் குரோம்பேட்டை மாடுகள் விசித்திரமானவை. அவற்றின் உரிமையாளர் யார் எனத் தெரியாது. காலையில் கிளம்பி தெருத்தெருவாக சுற்றி அதன் இடத்திற்கு மாலையில் திரும்பிவிடும். நகர மாடுகள் தங்கள் வாழ்நாளில் மேய்ச்சல் நிலத்தைக் கண்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். எங்கள் வீட்டு ஓனர் கூட மாடு வளர்க்கிறார். என் வீட்டுக்கு பின்புறத்தில்தான் அவர் வீடும் இருக்கிறது ஆனால் அந்த மாடுகளை ஓரிரு முறைதான் நான் கண்டிருக்கிறேன். அவ்வளவு ரகசியமாக ஒரு கொட்டகைக்குள் வாழ்ந்து வருகிறது. அதற்கு தீனி வைக்கோல் கொஞ்சம்தான், மீதியெல்லாமே மார்கெட்களில் வீசப்படும் காய்கறிக்கழிவுகள்தான், முட்டைக்கோஸ், காலிப்ளவர் இலைகள், கத்திரிக்காய், காரட், பழுத்த வாழை இலைகள் மற்றும் அன்றைய தேதிக்கு அதிக விளைச்சளால் மார்கெட் வரை வந்து வீணாய் போன அத்தனை காய்கறிகளும் மாடுகளுக்குதான் போய் சேருகிறது. மிக நிச்சயமாக நான் சொல்வேன், அந்தப் பசுக்கள் பசும்புல்லை தின்றிருக்க வாய்ப்பில்லை. எங்கே இருக்கிறது நிலம்? 

தெருக்களில் சுற்றித்திரியும் பசுமாடுகள் வேறொரு ரகம். நகர மனிதர்களுடனே வாழ்ந்து சலித்துப் போன மிருகங்கள் அவை. தனது வழக்கமான உணவு முறையிலிருந்து தள்ளிப்போன ஒரு உணவுமுறைக்கு வந்த பின்னர் உருவான இந்தப் பசுக்களுக்கு எருமை குணம் அல்லது அதற்கு மேலும் கூட பொறுமை வந்திருக்கிறது. விட்டேத்தியாக அதுபாட்டுக்கு சாலையில் நின்று வெகுநேரம் எதாவது யோசித்துக்கொண்டிருக்கும், அப்படியே நடுரோட்டில் அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா செய்யும். எருமைகள்தான் இவ்விதம் சேட்டை செய்யும். மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டே இருக்கும் திடிரென அதன் மூளையில் ஏதோ யோசனை வர சட்டென்று சாலையில் நின்றபடி யோசித்துக்கொண்டே இருக்கும். சீக்கிரத்தில் நகராது. இந்தப் பண்புகளை பசுக்களும் வரித்துக்கொண்டது. அதிலும் குரோம்பேட்டை பசுக்கள் எருமைகளை விட ஒருபடி மேலே போய் நாள் முழுக்க சாலையில் கணித சூத்திரத்தை மனனம் செய்யும் பள்ளி மாணவனைப் போல நின்றுகொள்ளும்.  எளிதில் நகராது. 

பசுக்களின் அடுத்த பிரச்சினை அதன் சாணம்தான். எங்கள் வீட்டில் நாங்களும் பசு வளர்த்திருக்கிறோம்  சாணம் வரிவரியாக உலர்ந்துபோய் புட்டு பதத்தில் இருக்கும். இரு கைகளையும் தரையோடு சேர்த்தால் அடியில் வாரி எடுத்தால் கொஞ்சம் கூட கையில் சாணம் ஒட்டாது. கையைத் தட்டிவிட்டு போய்விடலாம். ஆனால் இந்த குரோம்பேட்டை மாடுகள் போடும் சாணத்தை சாணம் என்று சொல்வது அதிகம். அது எந்த பதத்தில் இருக்கும் என்றால் சினிமா போஸ்டர்கள் ஒட்ட ஒரு பசை செய்வார்களே அதுபோன்ற பதத்தில் இருக்கும். அல்லது வெண்டைக்காயை விளக்கெண்ணை விட்டு மிக்சியில் அடித்தாற்போல ஒரு பதம். வேகமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது சரியாக ப்ரெஷ் சாணியில் டயர் படும்படி ஒரு ப்ரேக் அடித்தீர்கள் என்றால் எலும்பு டாக்டரிடம்தான் கண்விழிக்க நேரிடும். அத்தனை ஆபத்தான விஷயம் அது. எருமைகள் போடும் சாணியோ எப்போதும் ஒரே ரகம்தான். அது மோர் விட்டுக் கரைத்த கம்மங்கூழ் பதத்தில் இருக்கும், இன்னும் சரியாக சொல்வதென்றால் ஓட்டல்களில் ரவா தோசை செய்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே ரவைக் கரைசலை தோசைக்கல் மேல் தெளிப்பார்கள் அப்படிதான் எருமையும் சாலையில் சாணமிடும்.

நான் ஒரு ஏழெட்டு முறை சாணத்தில் கால் வைத்திருக்கிறேன். என் புத்திக்கு எட்டியவரை சாணம் பச்சை நிறத்தில் இருக்கும் என்று மூளையில் பதிந்திருப்பதால் மணல்மேடு போல சாணமிடும் பசுக்களிடம் ஏமாந்துபோகிறேன். பார்ப்பதற்கு மண்குவியல் போல இருக்கும். மண்தானே என்று காலை வைத்தால் இழுத்து விடும். செருப்பில் ஒட்டிய சாணி எளிதில் போகாது. பெவிகால் போல ஒட்டி விடும். சாணியில் கால்வைத்த அடுத்த நொடியே கழுவ ஆரம்பித்தால் கூட சுத்தமாக அரைமணிக்கூர் ஆகும் . நீரில்லாத பகுதியில் மாட்டுனீர்கள் என்றால் அந்த சாணி செருப்பு பிய்ந்துபோகும் வரை கூட இருப்பதற்கு சாத்தியம் உண்டு. பசை அப்படிப்பட்டது.

ஏன் இப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் ஆச்சரியமானவை. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தங்களுக்கு அரசால் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை ஊர வைத்து மாடுகளுக்கு கொடுக்கிறார்கள். மாடுகளும் தங்களுக்குள் வீடுகளைப் பிரித்துக்கொண்டதுபோல மிகச்சரியாக தினசரி அந்த நேரத்தில் போய் வாசலில் நிற்கும். அவர்களும் ஊரவைத்த அரிசியையோ, கோதுமையையோ ஓட்டை குண்டானி வைத்துவிடுவார்கள் மாடுகளும் தரையில் பாதி வாயில் மீதி என தின்றுவிட்டு அந்த குண்டானை தெருவில் உருட்டிவிட்டு சென்றுவிடும். எவனாவது அதில் மோதி விழுவான். மக்கள் மாடுகளுக்கு நன்மை செய்வதாகவும் அதற்கு உணவிடுவதாகவும் நினைத்துக்கொண்டு இச்செயல்களில் மனமுவந்து செய்கிறார்கள். இவைதான் சாணத்தின் பசைத்தன்மைக்கு முக்கிய காரணம். அதிலும் ஊறவைத்த கோதுமையைத் தின்ற மாடுகளில் சாணத்தை மிதிப்பவர்களின் கோணல் முகத்தை நீங்கள் நேரில் பார்த்தால் உணர்வீர்கள்.

எல்லாமே வேகத்தில் நடக்கும் சென்னை போன்ற நகரங்களில் அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து படைத்து சாப்பிட்டுச் செல்ல நேரமிருப்பதில்லை. அக்குற்ற உணர்ச்சியை போக்கும் விதமாக யாரோ ஒரு அகத்திக்கீரை வியாபாரிதான் இப்புரளியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். அமாவாசை தினத்தன்று காய்கறிக்கடையில் ஒரு அகத்திக்கீரையை பைக்கில் அமர்ந்தவாறே வலதுகையால் காசு கொடுத்து வாங்கி அப்படியே அதை இடது கையால் மாட்டின் வாயில் திணித்துவிட்டு முறுக்கிக் கிளம்பி விடுவார்கள். விரதம் இருக்காமல் போன பாவத்தை அகத்திக்கீரைகட்டை மாட்டுக்கு கொடுத்ததன் மூலமாக சரிசெய்து விடலாமாம். அமாவாசை தினங்களில் எல்லா காய்கறிக்கடை முன்பும் வரிசையாக மாடுகள் நிற்கும். எருமைக்கு கொடுக்க மாட்டார்கள். பசுக்கு மட்டும்தான். அதுதான் புனிதமாச்சே.

அடுத்த ஒருமணி நேரத்தில் சாலை முழுக்க பச்சை பெயிண்ட் ஊற்றியது போல அகத்திக்கீரை சாணி நிறைந்திருக்கும். 

தொடரும்...

Saturday, December 17, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 3

 சிங்கப்பூரில் பொதுமுடக்கம் திறந்த பிறகும் கூட விமானங்கள் இயங்கவில்லை. இந்திய அரசு வெளியேற விரும்பும், வெளியேறியே ஆக வேண்டிய இந்தியர்களை வரவழைக்கும் பொருட்டு சிறப்பு விமானங்களை இயக்கினார்கள். தூதரகத்தில் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். என் வேலைக்கான ஒப்பந்தகாலம் முடிந்து அடுத்த வேலை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கொரோனா சனியன் வந்தது. வேறு வேலை தேடுவது அத்தனை சுலபமாயில்லை. வேலை கிடைத்தும் கூட அரசு புதிய வேலைக்கான ஒப்பந்த காலங்களை அனுமதிக்கவில்லை. எங்கும் நிலைமை அதுவே. முதல் அலையின் போது வேலைக்கான அனுமதிக்காலம் முடிந்தவர்கள், நிறுவனம் மாறுபவர்கள் எல்லோரும் சிரமப்பட்டார்கள். பிள்ளைகளின் படிப்பு, வீடு, பொருட்கள், நண்பர்கள், புத்தகங்கள், அழியாத நினைவுகள் என அப்படியே விட்டு விட்டு வரவேண்டிய சூழல் வந்தது. இப்படியொரு நிலை வரும் என என் கனவில் கூட நினைக்கவில்லை. சிங்கையில் இருந்தபோது சேகரமான நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை ஒரு சலூன் கடை நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அவர் ஒரு இலக்கிய வாசகர். அவரிடம் இருப்பதுதான் சரி.

சிறுவயதில் என்னை பாதித்த பிரச்சினைகளில் ஒன்று, வேலை இடமாற்றம். அப்பாவுக்கு அரசு வேலை. அவர் எங்கெங்கு பணியாற்றுகிறாரோ அந்த ஊர்களில் இருப்போம். என்னைப்போல அரசு ஊழியர்களின் பிள்ளைகள் இதை எதிர்கொண்டிருப்பார்கள். ஒரு புதிய ஊருக்கு வந்து புதிய தெருவில் நுழைந்து, புதிய வீட்டில், புதிய பள்ளியில், புதிய நண்பர்களின் மத்தியில், என எல்லாமே புதிய விஷயங்களாக இருக்கும். அதைப்போலவே பழைய ஊரின் ஏக்கம், நண்பர்கள் என நினைவில் வருத்தும். இப்படி புதிய இடத்தில் பழகி, கலந்து வேறூன்றி இதுதான் நமக்கான ஊர் இங்கேயே இருக்கலாம் என்று இருக்கும்போது மறுபடி ஒரு மாற்றல் வரும். 

அப்படி ஒருமுறை சிங்காரப்பேட்டை என்ற ஊரில் குடியிருந்தோம். சிங்காரப்பேட்டை திருவண்ணாமலையில் இருந்து 55 கிமீட்டரில் ஊத்தங்கரை என்ற ஊருக்கு அருகில் உள்ள சிறிய ஊர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாக இருந்தது. அப்போது எனக்கு வயது 7 வயது இருக்கலாம். இரண்டோ மூன்றோ படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்பு திண்டிவனத்தில் இருந்தோம். அந்த வேலை மாற்றலாகி சிங்காரப்பேட்டை வந்தோம். எனக்கு வயது குறைவாக இருந்ததால் எந்த மாற்றமும் பாதிக்கவில்லை. ஆனால் அண்ணனும் அக்காவும் 12 வயது தாண்டியவர்கள் குறிப்பாக அம்மாவுக்கு இந்த இடமாற்றங்கள் தந்த தொந்தரவுகள் ஏராளம். தட்டுமுட்டு சாமான்களை மூட்டை கட்டி எங்கள் நால்வரையும் சமாளித்து ஒவ்வொரு ஊராக அலைகழிந்த அவரது உழைப்பு சொல்லிமாளாது. எந்த ஊருக்கு சென்றாலும் கூட அந்த ஊரில் ஒரு குடும்பம் நெருக்கமான நட்பாகிவிடும். உயிரையே கொடுக்கும் அளவுக்கு அந்த நட்பில் இருக்கும் அப்படி ஒரு பிணைப்பு உருவாகும்போதுதான் அந்த ஊரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகிவிடும். 

சிங்காரப்பேட்டையில் முதலில் நாங்கள் குடிபுகுந்த வீடு ஒரு கூரை வீடு. நவாப்களின் கோட்டை நகரமாக திப்பு காலத்தில் இருந்த நகரம். இப்போது இடிபாடுகளுக்கு இடையில் இருக்கும் சிதிலமடைந்த கோட்டைக்கு அருகில் இருந்தது. பெரிய சதுர வீடு உள்ளே ஒரு ஆளுயர தடுப்பு சுவர் அந்தபக்கம் உடைகள் மாற்றலாம். படுக்கை எல்லாம் ஹாலில்தான். நாங்கள் ஆறுபேர் வரிசையாக படுத்திருப்போம். வெளியே மண் அடுப்பு. இடதுபுறம் தென்னையோலை மறைப்பில் குளியலறை. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர். பொதுவாகவே சென்னைக்கு கிழக்கே போகப் போக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர் மிக இனிமையானவர். அவர் மேல் எப்போதும் அத்தர் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். சொந்தமாக விவசாய நிலங்கள் இருந்தது. அவர் விவசாயம், ஆடு, மாடு வளர்த்து வந்தார்.  எங்கள் கூரை வீட்டிற்கு எதிரில் இருந்த இன்னொரு கூரை வீடு அவர்களுடையது. அப்பாவின் அன்றைய வருமானத்தில் அப்படி ஒரு வீட்டில்தான் இருக்க முடிந்தது. 


அவருக்கு அப்போது ஐந்து பிள்ளைகள், மற்றும் பாய்விட்டம்மா வயிற்றில் ஒன்று. எங்கள் வீட்டில் நான்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். மெல்ல மெல்ல பாய்வீட்டம்மாவுக்கும் எங்கள் அம்மாவுக்கும் ஒரு நட்பு உருவானது. அது எப்படிப்பட்ட நட்பு என்றால் முப்பது ஆண்டுகள் கழிந்தும் கூட இன்றும் தொடரக்கூடிய நட்பாக இருக்கிறது. அந்த ஊரில் நாங்கள் இருந்தது இரண்டரை ஆண்டுகள்தான். ஆனால் இன்னமும் அவர்களுடனான நட்பு தொடர்கிறது. ஜீவனக்கஷ்ட காலங்களில் எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவோ உதவியிருக்கிறது அக்குடும்பம். பாய் கடுமையான உழைப்பாளி, அந்த ஊருக்கு சென்ற புதிதில் பாஷை ரொம்ப வித்தியாசமாக இருந்தது. பொதுவாகவே கிருஷ்ணகிரி மாவட்டத்து வட்டார வழக்கு வித்தியாசம், இவர்கள் உருது கலந்து பேசியது இன்னும் குழப்பமாக இருந்தது. அவர் வயல் உழும்போது கூட உதவிக்கு செல்வோம். அப்போது மோட்டர்கள் இல்லை, கமளத்தில்தான் தண்ணீர் இறைப்பார். கமளத்தில் தண்ணீர் இறைப்பது கொண்டாட்டமாக இருக்கும். இந்தகாலத்தில் கமள இறைப்பு பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பொழுதுகள் மிக இனிமையாக பொறுமையாக நகர்ந்த காலம் அவை.

நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அவருக்கு ஆறு குழந்தைகள். பிறகு இரண்டு என மொத்தம் எட்டு பிள்ளைகள். எல்லா நல்ல/கெட்ட காரியங்களுக்கு அவர்களும், நாங்களும் தவறாமல் கலந்துகொள்வதுண்டு. அக்காவின் திருமணம், அண்ணனின் திருமணம், புதுவீடு புகுவிழா, என எல்லாவற்றிலும் கலந்துகொள்வோம். இதில் என்ன சிக்கல் என்றால் எங்கள் தரப்பில் அப்பாவும், அவர்கள் தரப்பில் பாய் மட்டுமே கலந்துகொள்வார்கள். எனக்கு அந்த ஊரை அக்குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் மனதில் அடியாழத்தில் இருந்துகொண்டே இருந்தது. முப்பது வருடம் கழித்துகூட நிறைவேறவில்லை. சென்ற வாரத்தில் ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது. முகநூலில் தேடி என்னைக்கண்டுபிடித்து ஒருவர் அழைத்திருந்தார். அவர் அண்ணா பல்கலையில் வேதியியல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர், முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் இருந்தார். பர்கதுல்லா. எனக்கு சுத்தமாக நினைவில்லை. அவரே சொன்னார். "நீங்க அந்த ஊர்ல இருந்து போகும்போது நான் கைக்குழந்தை, அம்மா உங்க குடும்பத்தை சொல்லி சொல்லி வளர்த்தார். எப்போதும் உங்கள் நால்வரையும் காணவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. இவ்வளவு காலமும் கைகூடவில்லை. நான் உங்களைப் பார்க்க வரலாமா? என்றார்.

கண்டிப்பாக வரவேண்டும் என்றேன். அன்று மாலையே வந்திருந்தார். மிகச்சிறு பிராயத்தில்தான் நாங்கள் பார்த்திருக்கிறோம். பார்த்த நினைவே எனக்கு இல்லை, அவருக்கு வாய்ப்பே இல்லை ஆறு மாதக்குழந்தை. எது எங்களை இன்று சந்திக்க வைத்தது? எங்கள் குடும்பத்தில் அம்மாவும், அவர்கள் குடும்பத்தில் அவர் அம்மாவும் இரு குடும்பங்களுக்கிடையிலான நட்பை சொல்லி வளர்த்திருக்கிறார்கள். மதவெறி அரசியல் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இதுபோல ஆயிரக்கணக்கான நெகிழ்ச்சியுரும் கதைகள் ஏராளம் உண்டு இம்மண்ணில். இவருக்குப் பிறகு பிறந்த மூன்றுமே ஆண்பிள்ளைகள், ஒருவர் மிருகவைத்தியர், ஒருவர் வணிகமேலான்மை, கடைசித்தம்பியும் உயர்வகுப்பு படித்திருக்கிறார். ஏராளமாக பேசி விடைபெற்றோம். தலைமுறை தாண்டி தொடரும் இந்த நட்பு.


தொடரும்....

குரோம்பேட்டை நினைவுகள் - 2

 டிசம்பர் பத்து 2020 ஆம் ஆண்டு குரோம்பேட்டை கன்னிகோயில் தெருவில் உள்ள 18அ என்னும் வீட்டில் குடிபுகுந்தேன். வீட்டின் உரிமையாளர்கள் வயதான தம்பதியினர். அந்த தாத்தா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பதினெட்டு பூர்த்தியாகும் முன்பே இங்கே கப்பலில் வந்திறங்கியவர். அப்போது வனாந்திரமாக கிடந்த குரோம்பேட்டையில் விவசாயம் செய்து வந்திருக்கிறார். கூடவே மாடு வளர்ப்பு. பால் வியாபாரம். அந்த காலத்தில் வாங்கிய இடம், இப்போதைய மதிப்பு சில கோடிகள். அவர் என்னிடம் சொல்லி சொல்லி மாய்ந்துபோகும் ஒரு விஷயம். எண்பதுகளின் இறுதியில் திருமண காரியம் ஒன்றுக்காக இப்போதிருக்கும் துரைப்பாக்கம் 200 அடி ரோடில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார். அப்போதைய தேவை சில ஆயிரங்கள். அந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு 20 கோடிகள். நிலம் இவ்வளவு விலை போகுமென்று அவர் அறிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஐடி நிறுவனம் இப்போது இருக்கிறது. 

குரோம்பேட்டை எனக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இதுவே எனக்கு புத்தம் புதிய இடமாக இருக்கிறது. வேலாயுதம் தெருவிலிருந்து பின் பக்க பெரிய சாக்கடையைத் தாண்டிச் சென்றால் ரயில்வே க்ராசிங் வரும். சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறதே அந்த வழி. ரயில்வே லைனை ஒட்டியே சென்றால் கடைசியில் பல்லாவரம் பாலம், வலது புறம் திரும்பி ஓடிக்கொண்டே இருந்தால்  கிட்டத்தட்ட பள்ளிக்கரணை வரை ஏரிகள்தான். அத்தனை ஏரிகளும் இப்போது பெரும் குட்டைகள்.  அதுவும் பாலம் தாண்டி வந்தால் வலப்புறம் முழுக்க குப்பைகள் கொட்டி சமதளமாக்கி வீடுகள் கட்டி விட்டார்கள். 200 அடி ரோட்டுக்காக ஏரிகளை இரண்டாக பிளந்ததில் ஏரிகள் குட்டைகள் ஆயின. பிறகு குப்பைகளைக் கொட்டி அதை சமதளமாக்கிவிட்டார்கள். இரண்டு புறமும் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் வந்துவிட்டது. கோடிகளில் வீடு. முன்பு இந்த சாலையில்தான் ஜாகிங் ஓடுவேன். சிறிய சாலை. மரம் அறுப்பு பட்டறைகள், பழைய பொருட்களின் குடோன்கள் என இருந்த இடம் இப்போது இல்லை. வளர்ச்சி.

குரோம்பேட்டை வந்த புதிதில் எங்கு பார்த்தாலும் ரஜினி பட போஸ்டர்களே நீக்கமற நிறைந்திருந்தது. அப்போது அவர் அரசியல் ரேசில் இருந்தார். தாம்பரம் நுழைந்ததும் ஜிஎஸ்டி ரோடு நகரைக் கிழித்தபடி செல்லும் அப்படி செல்லும்போது சிட்லபாக்கத்திற்கு அடுத்த நிறுத்தம் குரோம்பேட்டை.  பொதுவாக குரோம்பேட்டை என்பது வலது புறம் ராதா நகர், வலது புறம் ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவக்கல்லூரி அடங்கிய பகுதி. ராதா நகர் மெயின் ரோட்டிலிருந்து எங்கும் வளையாமல் ஒரு கிமீ தாண்டினால் கன்னிகோயில் தெரு. ஜிஎஸ்டி சாலையில் இருந்து வந்தால் பல்லாவரம் பாலத்தில் வலது திரும்பி வேல்ஸ் கல்லூரியில் இன்னொரு வலது எடுத்தால் கன்னிகோயில் தெரு. இந்த சுற்றுவட்டாரத்தில் எங்கு பார்த்தாலுமே ரஜினி முதல்வராக வேண்டும் என்ற போஸ்டர்கள் பில்லியன் கணக்கில் ஒட்டப்பட்டிருந்தன. அப்போதை குரோம்பேட்டை மாடுகளும், எருமைகளும் கொழுத்திருந்தன. தினமும் புதிது புதிதாக போஸ்டர்கள். நான் வழக்கமாக படவேட்டம்மன் கோயில் எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதுண்டு. அங்கே எதிரே குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் உள்ள சுவர்களில்தான் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். தினம் புதிது புதிதாக போஸ்டார் ஒட்டியிருப்பார்கள். தினமும் வெவ்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். அடிப்படை ஒன்றுதான் ரஜினிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். 

அரசியல் புரிதல் ஓரளவுக்கு இருந்தபோதிலும் கூட நான் குழம்பிப்போனேன். ரஜினியைத் தவிர எல்லோருமே அவர் முதல்வர் ஆகிவிடுவார் என்றே நம்பினார்கள். நானும் கூட நம்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்தேன். காலையில் ஒட்டுவார்கள், கூட்டமாக மாடுகள் வந்து நின்று வாசித்துவிட்டு தின்று செரிக்கும். மறுநாள் புதிய போஸ்டர்கள். டீக்கடைக்காரரிடம் கேட்டேன். "வாய்ப்பில்லங்க" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். அவரே ஒரு ரஜினி ரசிகராம். அப்போது ஸ்டாலின் அவர்கள் சீனிலேயே இல்லை. எடப்பாடியார் கல்லூரி, பள்ளி மாணவர்களின் தேவதூதனாய் இருந்தார். எக்கச்சக்க விடுமுறை, ஆல்பாஸ், தேர்வுகள் இல்லை. எடப்பாடி என்று எழுதத்தெரியாத மாணவருக்கு கூட அவர் தலைவராக இருந்தார். ஒரு வருடம் கழித்து நடந்த தேர்தலில் காட்சிகள் எல்லாம் மாறின. ரஜினி அரசியல் இல்லை என அறிவித்துவிட்டார். அந்த செய்தி குரோம்பேட்டையில் பயங்கரமாக எதிரொலிக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் எந்த சுவடும் இல்லாமல் நகரம் அதன் இயல்பில் இருந்தது. அப்போ போஸ்டர் ஒட்டினவன் எல்லாம் யார் கோப்பால்? என்ற கேள்வி குடைய ஆரம்பித்தது. பிறகு வந்த நாட்களில் எடப்பாடியின் செல்வாக்கு குறைந்தது. ஸ்டாலின் அசுர பலம் பெற்று முதல்வரானார். காற்றிழந்த பலூன் போல ஆகியது எடப்பாடி தரப்பு. 

ஒன்று புரிந்துகொண்டது என்னவென்றால், முன்புபோல சினிமாக்காரர்கள் அரசாள முடியாது. அப்போதை உலகம் வேறு. அவர்களின் அந்தரங்கம் அந்தரங்கமாக இருந்தபோது அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியுலகை அடையும் முன்பே பெரிய இடத்திம் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இப்போதைய காலம் அப்படியல்ல, தீயை விட வேகமாக தகவர் பரவும் காலம். அதுவும் வதந்தி காட்டுத்தீ போல பரவும் தன்மையுடது. நடிகர்களால் கடவுள் அவதாரம் எடுக்க முடியாது. எம்ஜிஆரோடு முடிந்த விஷயம் அது. வெளிப்புறம் பார்க்க ரஜினி கோமாளி போலத் தெரிந்தாலும் உள்ளுக்குள் தன்னைப் பற்றி உணர்ந்திருப்பதால் அவருக்கு நேர இருந்த பெரும் சேதத்தை தவிர்க்க உதவியது. கமலுக்கு அப்படி அல்ல அவர் பெரும் குழப்பவாதி. 


தொடரும்; 


Friday, December 16, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 1

 குடும்பமாக குரோம்பேட்டைக்கு குடிவந்து இந்த மாதத்தோடு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.  திடிரென ஒரு இடமாற்றம் பெற்றவர்களையும் பிள்ளைகளையும் எந்தளவுக்கு பாதிக்கும் என அரசு ஊழியர்களின் பிள்ளைகள் நன்கறிவர். நானும் அதைப்போன்ற ஒரு பிள்ளைதான். ஒரு பள்ளியில் பயின்று நல்ல நண்பர்களை சம்பாதித்திருப்பேன். ஊரின் அத்தனை சந்து பொந்துகளும் சுற்றியிருப்பேன். அகன்ற கிணறுகளில் குளித்துக் களித்திருப்பேன், பள்ளித்தோழிகளின் வீடுகள், சினிமா அரங்கம், அக்கம் பக்கம் வீடுகளுடனான உறவுகள் என எல்லாவற்றையும் மாற்றி எழுதிப் போட்டுவிடும் அப்பா கொண்டு வரும் மாற்றல் கடிதம். பெட்டி படுக்கைகளுடன் அம்மக்களிடம் இருந்து விடைபெற்று புதிய ஊருக்குப் போவோம். இப்படி என் பால்யத்தில் வேறூன்ற் போகும் சமயத்தில் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்டிருக்கிறேன். ஒரு சிறுவனாக என் பார்வையில் தோன்றும் அதே பிரிவுகள் அம்மாவுக்கும் உண்டு, அப்பாவுக்கும் உண்டு. எல்லோருக்குமே சங்கடம் அளிக்கும் விஷயம்தான் அது.

அவ்வகையில் குரோம்பேட்டைக்கு முன்பு சிங்கப்பூரில் குடியிருந்தோம். பத்து வருடங்கள். என் அப்பாவுக்கு விதிக்கப்பட்ட அதே வாழ்க்கை அமைப்புதான், நிலம் மட்டும் வேறு. அவருக்கு என்ன விதிக்கப்பட்டிருந்தது? கைக்கும் வாய்க்குமான ஊதியம். அதற்குள்ளே வாழ்க்கை. அவர் பெரிதாக ஒன்றுக்கும் ஆசைகொள்ளாதவர். அவரைப் போலவே எனக்கும் அமைந்தது குணம். வாழ்க்கையும் கூட. ஆனால் கொண்டாட்டங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் குறையில்லாத வாழ்க்கை. பிறகு அங்கிருந்து வரும் சூழல் உருவானபோது எனக்குள் ஏற்பட்ட துயரம் சொல்லி மாளாது. நான் குடியிருந்த அத்தெருவை நேசித்தேன். அம்மனிதர்கள் எனக்கு மனதிற்கினிய மனிதர்களானார்கள். அத்தெருக் கடைகளில் பணிபுரிந்த பல்வேறு நாட்டவர்கள் நெருங்கிய நண்பர்கள். நடைபாதை, மரங்கள், புறாக்கள், பூனைகள், அப்பகுதிக்கே உரிய உணவுகள், பிள்ளையின் புதிய நட்பு. அப்போதுதான் பக்கத்து வீட்டு சிறுமியுடன் அவனுக்கு நட்பு உண்டானது. இவை எல்லாவற்றையும் பிரியும் சோகம் ஒரே நிலத்தில் வாழ்பவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

இப்படிதான் நான் அங்கிருந்து குரோம்பேட்டை வந்து சேர்ந்தேன். குரோம்பேட்டை எனக்கு ஒன்றும் புதிதல்ல. இங்கு நான் ஏற்கனவே குடியிருந்திருக்கிறேன். ஆனால் அப்போது நான் பேச்சிலர். அதிகமல்ல, இடையில் பதினொரு ஆண்டுகள்தான் கடந்திருக்கின்றன. இந்த இடைவெளியில் என் வாழ்வில் என்னவொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என எண்ணிப்பார்க்க உதவியது குரோம்பேட்டையின் மீள்வரவு. அப்போது ஐந்தாறு பேர்கள் ஒரு வீடெடுத்து ராதாநகர் வேலாயுதம் தெருவில் குடியிருந்தோம். முப்பதுக்கும் அதிகமான ஜன்னல் கதவுகள் வைத்த பழங்காலத்து வீடு. மழை வந்தால் ஜன்னல் சாத்துவதற்கே நேரம் போதாது. தரையில் அமர்ந்தபடியே கழுத்தை நீட்டாமல் தெருவில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக காண முடியும். அந்தளவுக்கு ஜன்னலை இறக்கி வைத்திருப்பார்கள். இரண்டு படுக்கை கொண்ட அந்த வீட்டில் குறைந்த 70 ஜன்னல்களும் இரண்டு கதவுகளும் உண்டு.  கு.பே வந்த பிறகு மீண்டும் அந்த தெருவுக்கு சென்று பார்த்தேன். வீடுகள் முற்றிலும் மாறியிருக்கின்றன. அப்போதே புதிய வீடுகள் போலிருந்ததை இடித்து அடுக்குமாடி வீடு கட்டியிருக்கிறார்கள். அகலமான சாலை குறுகலாயிருக்கிறது. எவர் வீட்டின் முன்பும் சேர் போட்டு அமர்ந்து ஓய்வெடுக்கிற அமைப்பே இல்லை. காற்று கூட புக முடியாத இரும்பு கேட்களால் மூடியிருக்கிறார்கள். மரங்கள் காணாமல் போயிருந்தது. ஆனால் நான் குடியிருந்த அந்த வீடு மட்டும் அப்படியே இருந்தது. சுண்ணாம்பு கூட அடிக்கவில்லை. வீட்டு உரிமையாளரின் மகன்  மட்டும் வாலிபனாக மாறியிருந்தான். கண்ணாடி போட்டிருந்த அம்மாஞ்சி சிறுவன் உருண்டு திரண்டு நிற்பது ஒன்றுதான் நான் மாற்றமாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். அந்த வீடும்.

வேலாயுதம் தெருவுக்கு இன்னொரு சிறப்பு உண்டென்றால் அது, எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அங்குதான் குடியிருக்கிறார். வரும்காலத்தில் சினிமாவை ஆளப்போகும் ஒரு ஆளுமையாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் உடையவர். கு.பே வந்த புதிதில் அவரிடம் இரண்டு புத்தகங்கள் இரவல் வாங்க்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மறுபடி வேலாயுதம் தெருவுக்கு சென்று வந்தேன். நாம் வாழ்ந்த ஓரிடத்தைக் காணுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புத்தகத்தை திருப்பிக்கொடுப்பது என்பது என் அகராதியிலேயே இல்லாத ஒரு சொல். ஆனால் காலம் எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள். லஷ்மியும் நானும் ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் சந்திப்பதுதான் வாடிக்கை. நான் டீயும், அவர் காபியும் குடிப்போம். இரண்டுமே நன்றாக இருக்காது. உண்மையில் குரோம்பேட்டையில் நல்ல டீக்கடை இல்லை. சுமாரான டீக்கடை உள்ளது. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி என்பது வெல்லப்பாகில் பாலைக்கலந்து கொடுப்பார்கள். குடித்த கொஞ்ச நேரத்திலேயே உடல் இனிக்கும். பொதுவாகவே டீ குடிக்க ஏற்ற வேளை என்பது காலை ஐந்து மணி. கடை திறப்பதற்கு முன்பே அங்கே வந்து காத்திருந்து கடைக்காரர் அடுப்பை பற்ற வைத்து முதல் டீதூள் கொதிக்கும் அந்த நேரம் ஒரு வாசனை வரும். அதை முகர்ந்த பிறகு குடிக்கும் டீயே சிறந்த டீ. காத்திருந்து பெறவேண்டும் அதில்தான் ருசி அடங்கியிருக்கிறது. இப்போது அப்படியெல்லாம் குடிக்க சாத்தியமில்லை, எவருக்கும் நேரமில்லை. சொந்த ஊருக்குப் போகும் போது வாயில் பீடி புகை கசிய முக்காடு போட்டுக்கொண்டு முதல் டீக்கு காத்திருக்கும் பெருசுகளை பார்க்க முடிகிறது. கொடுத்து வைத்தவர்கள்.

 இந்த பத்து ப்ளஸ் ஆண்டுகள் என் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை மனம் யோசிக்க ஆரம்பித்தது. ரத்த உறவின் மறைவுதான் பேரிடி,  எனக்கு திருமணம் ஆனது, சிங்கப்பூர் சென்றது, பிறகு மனைவியை அழைத்துக்கொண்டது , முதல் குழந்தை, மகிழ்ச்சி க்கொண்டாட்டம், ஒரு நடுத்தர வாழ்வினன் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களும் எதிர்கொள்ள காலம் பழக்கிக் கொடுத்தது. ஒரு சலிப்பு வரும் அல்லவா, அந்த சலிப்பிலிருந்து நீங்க புத்தகங்களும் நண்பர்களும், குடியிரவு கொண்டாட்டங்களும் துணை வந்து சலிப்பு மேலிடாதவாறு பார்த்துக்கொண்டது. இப்படியாக இரண்டாவது ஒருவன் பிறந்தான். இவன் பிறந்த நேரம் நீ பெரிய உச்சங்களை தொடுவாய் என ஆருடம் சொன்னார்கள். ஆம், வானில் பறந்து உச்சம் தொட்டு குரோம்பேட்டை வந்தடைந்தேன். 

தொடரும்...