எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--

10 comments:

☼ வெயிலான் said...

பேராண்மை - நானும் பார்த்தேன். படம் பார்க்கும் வரை விமர்சனங்களை படிப்பதில்லை.

காடு - இப்போது என் கையிலும். இன்னும் வாசிக்கவில்லை.

கோபிநாத் said...

பேராண்மை இங்க இன்னும் வர மச்சி..;)

நல்லா எழுதுற மச்சி...ஆனா என்னோட கதிர் தொலைஞ்சு போயிட்டது மாதிரி இருக்கு.

ரௌத்ரன் said...

அய்யோ கதிரு..நீரும் ஒரு எலக்கியவாதினு இத்தன நாள் தெரியாமப்போச்சே..போச்சே :))

காடு நாவல படிக்க காட்டுக்கு போனது ஓக்கே..அங்க போயி உங்கள யாரு தூங்க சொன்னது..ம்ஹீம் கரடிக்கு கொடுத்து வெக்கல :))

ஆயில்யன் said...

பேராண்மை திரைப்பட விமர்சனங்கள் ஆரம்பத்தில் அதிகப்படியாகவே தூற்றிவிட்டன போல வாய்ப்புக்கிடைக்கும்போது பார்க்க செலக்ட் செய்துவைத்திருக்கிறேன் !

கதை படிக்க லொக்கேஷன் செலக்ட் செஞ்சுக்கிட்டு காடு நோக்கி சென்ற பயணம் சுவாரஸ்யம்! எனக்கும் எஸ்ராவின் கட்டுரைதொகுப்புக்களோடு அப்படியான ஒரு லொக்கேஷனுக்குபோய் உக்காரணும்ன்னு ரொம்பவே ஆசை!
:)

க.பாலாசி said...

பேராண்மை இயக்குனர் பற்றிய உங்களின் பார்வை அருமை....உண்மையில் நல்ல மனிதர்தான்.

//இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.//

இருக்கலாம்...யதார்த்தத்திற்காக இப்படி செய்திருக்கலாம். இல்லை இந்த வார்த்தைகளை எங்கோ கேட்டிருக்கலாம்.

Ayyanar Viswanath said...

டம்பி

பேராண்மை படம் எனக்கு பிடிக்கல. கீச் கீச்னு ரவி பேசும்போது சிரிப்புதான் வந்தது. இந்த மாதிரி ஒரு களத்த தேர்ந்தெடுத்துக்காக ஜனாவ பாராட்டலாம் முடியாது இயற்கை ஈ இப்படி நல்ல படங்களா பண்ணிட்டிருந்த ஒரு ஆள் ஹாலிவுட் இரண்டாந்தர சினிமாக்கள தமிழ்ல முயற்சி பண்ணியிருக்கிறது தேவையில்லாத ஒண்ணுனுதான் எனக்கு பட்டது.

இதுல அவர் இறையாண்மைய திணி திணி னு சராசரி மூளைக்குள்ள திணிக்கப் பாத்திருக்கார் அவ்ளோதான் சில இடங்களில நிலம் சார்ந்த கோபத்தையும் வார்த்தைகளா தெளிச்சிருக்கார். பெரிய பெரிய கன் னலாம் தூக்கி காட்டுக்குள்ள வெடி போடுர காட்சிகளையெல்லாம் எப்படியா உன்னால ரசிக்க முயுது :(

டப்பா லூமிக்ச கொடுத்திருக்கலாம்தான். என்னதான் இருந்தாலும் அந்த மகாகலைஞன நம்மள மாதிரி சல்லிப்பயல்களையா படமெடுக்க விடுறது? ஃப்ரீயா விடு :)

KARTHIK said...

// இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது.//

ஆமா தல ரம்ப கடுப்படிக்குராங்க
உபோஒ ரொம்ப நல்ல படம் அதுக்கு கூட கண்னு காது மூக்கு வெச்சு எழுதிட்டாங்க

// சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம் //

கிராவோட கரிசல் கதைகள் தொகுப்புல இந்த கதை (வெயிலோடு போய்) தான் முதல் கதையே.கதைல வர்ர கதா பாத்திரங்கள் பெயர்கூட மாத்தாமா முடிவு வரைக்கும் அப்படியே வந்தது ரசிக்கும் படியா இருந்துதுங்க.
இந்தமாதிரி நாவல் படமாக்கப்படுவது நல்ல விசையம்தான்

காடு நாவல் வாங்கிவெச்சதோட சரி இன்னும் படிக்க ஆரம்பிக்கல
ஜீவஸ்ணா கூட சொன்னார் ரொம்ப நல்லா இருக்குன்னு
படிக்கனும்.

யாசவி said...

kathir,

peranmai is quit ok. Different from other movies.

But too much messages without logic - not entertaining.

No need foreigners and not so realistic.

Hats off to Jananathan. We expect something like iyarkai, E...

வால்பையன் said...

//டப்பா லூமிக்ச கொடுத்திருக்கலாம்தான். என்னதான் இருந்தாலும் அந்த மகாகலைஞன நம்மள மாதிரி சல்லிப்பயல்களையா படமெடுக்க விடுறது? ஃப்ரீயா விடு :)//

ஜனாவை கிழி கிழியென்று கிழித்த அய்யனார், இங்கே ஒருவரை மகா கலைஞன் என்கிறார்! அந்த பெயர் வர காரணமாக இருந்த அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தலாமே!

கதிர் said...

நன்றி வெயிலான் நீலி சுரம் சரியா போச்சா?

கோபி

நானும் தேடறேன் பாத்தா சொல்லி அனுப்பறேன் மச்சி.

காடு நாவல படிக்க காட்டுக்கு போனா மானசரோவர் நாவல் படிக்க மானசரோவர் போவியான்னு கேக்காம விட்டதுக்கு நன்றீ ராஜேஷ்

ஆயில்யன்
கண்டிப்பா அமைதியான சூழ்நிலைல வாசிச்சா அந்த சுகமே தனியானது. அது கிடைக்கணும்னுதான் போனேன் மத்தபடி காடுக்காக இல்ல.

நன்றி பாலாசி.க எது எப்படியோ கமல் இன்னொரு படத்திலும் இதையே தொடர்வார்.

அய்ஸ்...

பெரிய பெரிய கன்லாம் தூக்கி வெடிபோடாம குத்த வெச்சா வெடிபோட முடியும், நல்லா கேக்கறய்யா கேள்வி.

அஞ்சு ஹீரோயின வெச்சி அவங்க குண்டி, முகம், இடுப்பு கழுத்து, பனிமலைல பாட்டுனு இல்லாம எடுத்ததுக்கே அவர பாராட்டலாம்.

உன்போல சராசரி மூளைக்கா துபார் கெவுர்மெண்டுல வேல தராங்க...

இயற்கை, ஈ படங்களையே இன்னும் தெளிவா பாரு இட ஒதுக்கீடு, சாதிய பிரச்சினைகள அந்த படங்கள்லயும் ஓரிரு வார்த்தைல சொல்லிருப்பார். அதோட தொடர் வடிவமாதான் இந்த படத்தையும் பார்க்கிறேன்.

இறையாண்மை சராசரின்னு புலம்பாதைய்யா, இந்த மாதிரிதான் நானும் நினைச்சேன் சுத்தமான் சி சென்டர் அரங்குகளான எங்க ஊர்ல இந்த படத்தை விசில் சத்தத்துக்கு இடையிலதான் நான் பார்த்தது.


கார்த்திக்

இணைய சுப்புடுக்களை பசித்த துருவக்கரடி குதறட்டும்.

நன்றி யாசவி

வால்பையன்
//ஜனாவை கிழி கிழியென்று கிழித்த அய்யனார்//

கிழிச்ச மாதிரியே தெரிலயே :)))

எப்படிய்யா சிரிப்பாணி போடாமலே இந்த மாதிரி எழுதறிங்க? :)