முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு
உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள்
தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊர்ஜிதம் செய்வதென்பது
கொலை செய்வதற்கும் சமமானதாக இருக்கலாம். மேலும் மரணம் கலைத்துப் போடும்
எவ்வித சலனமும் வீட்டில் நிகழாத ஒரு மரணமாக அது மாறலாம். எனக்குத் தெரிந்து
என் அம்மாவே கூட சாவென்பது சந்தோஷமாக வந்துவிடவேண்டும் மூப்பெய்தி தள்ளாடி
எழுந்து நிற்கக்கூட மற்றவர் உதவி நாடவேண்டும் என்ற நிலை வராத மரணமாக
இருக்க வேண்டும் என்று கூறுவார்.
தினமும் நான் என் கதவை திறந்து வெளிவரும்போது எதிர்வீட்டு திண்ணையில் ஒரு
பெரியவர் சாகக்கிடப்பதை காண்கிறேன். சாகக்கிடக்கிறார் என்று சாதாரணமாக சிறிய
வார்த்தையில் எழுதினாலும் அவர் படும் அவஸ்தைகளை நேரில் பார்க்கும்போது வேதனையை
தருகிறது. அவரின் மனைவி சமீபத்தில்தான் இறந்திருந்தார். ஆனால் அவரோ இவர்தான்
முதலில் சாவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஏனெனில் பெரியவரின் உடல்நிலை
அப்படி இருந்தது. திடீரென்று அந்தப்பாட்டி இறந்தது அவரை மேலும் நிலைகுலைய
செய்துவிட்டது. நான் பார்த்தவரை இவர்களைப் போன்ற புரிதல் உள்ள தம்பதியை
வேறெங்குமே கண்டதில்லை.
கிட்டத்தட்ட கலைஞரின் வயது இவருக்கு இருக்கலாம். பால்யத்தில் நிறைய குடிப்பழக்கம்
இருந்ததினால் உடல் தளர்ந்துவிட்டது. வெயிலில் காய்ந்த செருப்பு சுருட்டிக்கொள்ளுமே
அதைப்போல அவரது கால்கள் வளைந்து விட்டன. காது கேட்கவில்லை. பேச்சு சரியாக
வரவில்லை. எழுந்துசென்று மூத்திரம் கழிக்க முடியவில்லை. பெற்றெடுத்த அரை டசன்
பிள்ளைகள் வெளியூரிலும் தேசத்திலும் வாழ கிட்டத்தட்ட தனிமையின் காட்டில் தனித்து
விடப்பட்டது போன்ற மனநிலை. மனிதவாழ்வில் ஆச்சரியப்படும் விதமாக சில விஷயங்கள்
நடக்கும் அதைப்போலவே ஒருவாரம் முன்பு இவரின் நினைவு தவறிவிட்டது.
அதனால் இயல்புக்கு மாறாக தினமும் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எழுந்து நடக்கவே
சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று
கோமுகி நதிக்கரை பக்கம் வந்துவிட்டார். தெரிந்த ஒருவர் பார்த்து சந்தேகத்தில் எங்கே
செல்கிறீர்கள் என்று கேட்டபோது தன் மனைவி கைப்பிடித்து வந்ததாக கூறினார். ஆனால்
தெருவில் அவரைத்தவிர யாருமே இல்லை மேலும் அவர் மனைவி இறந்து நான்கு
மாதமாகிறது. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றிருந்தால் அவர் மனைவியை புதைத்த
இடத்திற்கே சென்றிருக்கலாம். ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால் அங்குதான்
சென்றிருப்பார்.
விடிந்தபொழுது அவரிடம் கேட்டபோது அப்படியொரு சம்பவமே நடந்திராத தொனியில்
பேசினார். இரண்டொரு நாளுக்கு முன்பு ஒன்றரை மணிக்கு என்னறையின் கதவு தட்டும்
ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் சரியாக தெருவிளக்கு இவர் முகத்தில் விழ சிரித்தபடி
நின்றிருந்தார். அவருக்கு பூனைக்கண்கள் நெருப்புத்துண்டங்களைப்போல இருக்கும். மேலும்
தோல் சுருங்கி கோடுகள் விழுந்த அம்முகத்தை திடீரென்று பார்த்ததும் திகைத்து நின்று
விட்டேன். மெதுவாக சமாளித்தபடி என்ன தாத்தா என்றதும் வீட்டுக்குள்ள நாலு பேர் பூந்துகிட்டானுங்க யாருன்னே தெரியல என்னன்னு பாரு என்றார்
வீட்டில் குழந்தைகளும் மருமளும் மட்டுமே இருந்தனர். அவரும் வெளியே வந்து ஒருவாரமா
இப்படிதான் பண்றார் என அழ ஆரம்பித்துவிட்டார். நினைவுகள் மறந்து மூளையழிந்த
ஒருவரது மனநிலை என்னவாக இருக்கும் இந்த நொடியில் அவர் எதைப்பற்றி சிந்திப்பார்
என நினைத்துக்கொண்டிருந்தேன்.
நாஞ்சில் நாடன் சிறுகதையொன்றில் நகரத்தில் வாழும் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த
ஒருவனின் தாய் மூப்பில் படும் அவதியையும் அவரின் மருமகளே மாமியாரை கொல்லும்
கதையொன்றை நினைத்துக்கொண்டேன்.
விபரீதமாக அப்படியெல்லாம் ஒரு நிலை அவருக்கில்லை என்றாலும் மனது கிடந்து
தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை கடைத்தெருக்கு அழைத்துச்செல்லும்படி
கேட்டார். அவருக்கு காது மந்தம் என்பதைவிட கேட்காது என்றே சொல்லலாம் மகன்
செவிட்டு மெசின் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதை பொருத்திக் கேட்பதை அவர்
விரும்பவில்லை. நாம்தான் சிரமம் பாராமல் மிகக்குரலுயர்த்தி பேசவேண்டும். அப்படி
அவருடன் பேசுவது எனக்கே என்னை வினோதமாக காட்டியது. என்ன வேண்டும் என்று
கேட்டேன். மருந்து வாங்கவேண்டும் என்று கேட்டார். குடுங்க நானே வாங்கிட்டு வரேன்
என்றதும் மறுத்துவிட்டார். உனக்கு தெரியாது என்று சொல்லி என்னை எப்படியாவது
கூட்டிப்போ என்று அழ ஆரம்பித்துவிட்டார்.
கடைசியில்தான் தெரிந்தது அவர் வயதானவர்கள் இழுத்துக்கொண்டு கிடந்தால் சாகட்டும்
என்று ஒரு மருந்தை கடையில் விற்பார்களாம். அதை வாங்கவேண்டும் எனவும் தன்னால்
இனி எந்த வலியையும் தாங்க முடியாது எனவும் அழுதபடி கதறுகிறார். பார்த்துக்கிடந்த
எனக்கு எப்படிப்பட்ட பதிலை சொல்லவேணும் என்று கூட தெரியவில்லை.
முன்பே ஒருமுறை பேரனை சைக்கிள் எடுத்துவரச்சொல்லி அதில் பின்னால் உட்கார்ந்து
தள்ளிக்கொண்டே பாதி தூரம் சென்றுவிட்டார் அந்த மருந்தை வாங்கிவர. பாதி வழியில்
பேரன் வண்டி பாரம் தாங்காமல் கீழே விட விழுந்து விட்டார். அந்த வலி வேற.
தினமும் சிறிதளவு பிராந்தி குடுத்தால் மட்டுமே சற்று தெளிவாக பேசுகிறார். ஆகாரம்
எதுமில்லை சாப்பிட்டு நான்கு நாளாகுது. தொண்டையெல்லாம் புண். ஒண்ணுக்கு போக
மருமகளின் துணை வேண்டும் என்பதுதான் அவருக்கு வேதனை தரும் விஷயமாக
இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
எங்க அய்யாலாம் நூத்தியோரு வயசு வரை நல்லா வாழ்ந்துட்டு அலுங்காம செத்துப்
போனாரு. எனக்கு அப்படி வாழணும்னு இல்லன்னாலும் நிம்மதியான சாவு வரமாட்டேங்குதே
என்று தினமும் புலம்புகிறார்.
இவருடைய சகபாடி ஒருவர் கறுப்புத்தாத்தா என்பவர் இன்றும் கூட மாடுமேய்த்து
கொடிக்காலில் வெற்றிலை கிள்ளி விவசாயம் பார்க்கிறார். நல்ல தினகாத்திரமான கிழவர்.
இப்படியெல்லாம் நான் ஒரே பீலிங்ஸாக எழுதிவைத்து காத்திருந்தேன். ஜானெக்சா தந்த
தெம்பில் மறுநாளே எழுந்தமர்ந்து "என்னப்பா தம்பி ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியே
ஒரு கட்டையோ முட்டையோ பாத்து கண்ணாலத்த பண்ணு ராசா" என்று கலாய்த்து
விட்டார்.
வந்தவனுக்கு தெரியும் போவதெப்படி என்று நினைத்துக்கொண்டேன்.
சம்பந்தமில்லாத பின்குறிப்பு
பருவமழை பெய்ததைத்தொடர்ந்து எங்க ஊர்ப்பக்கம் இருக்கற மலையில அருவிகள்
நிரம்பி வழியறதா செய்தி. இதே அருவிய இரண்டு வாரத்துக்கு முந்தி போட்டோ
எடுத்து இங்கே போட்டிருந்தேன் சின்ன பையன் உச்சா போற மாதிரி இருந்த இந்த
பெரியார் அருவி இப்போ கூட்டமா டைனோசர்கள் உச்சா போற அளவுக்கு வந்துடுச்சு.
இத விட மேகம் அருவின்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம்னு இந்த வாரம்
முடிவு பண்ணிருக்கோம். அங்க போகணும்னா இரண்டு மலை ஏறி இறங்கணும்
உடம்புல வலு உள்ளவங்க வரலாம்.வர விருப்பம் உள்ளவங்க இணைந்துகொள்ளலாம்.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Wednesday, November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நானும் ரொம்ப ஃபீலிங்க்ஸோட படிச்சுட்டு வந்தேன். கடைசில, தாத்தா ஒரு புன்சிரிப்பை வரவச்சிட்டார்
நீங்க சொல்லியிருக்கற நாஞ்சில் நாடன் கதை பேர் என்ன ?
காடு, மலை, அருவின்னு இயற்கையோட ஒன்றிப்போயிட்டு இருக்கீங்க போல..Enjoy !!
எனக்கு ஒரு சீட்டுல துண்டு போடுங்கப்பா!
அப்புறம் யார் யாரெல்லாம் வராங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலாய் இருக்கும்......
உங்களுக்கு அறிவுரை சொன்ன அந்த நேரமாவது அவர் நேற்றுகளை மறந்து, இன்றில் வாழ்ந்து, உங்கள் நாளையை நல்ல முறையிலாக்க முயன்றிருக்கின்றார்.
அருவிக்கு நானும் வரலாமா தல!?
ம்ம்ம்...
எங்க இருக்கேன்னு மெயில் அனுப்பு
//எழுந்து நடக்கவே
சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக..//
ம்ம்..என் தாத்தாவின் இறுதி நாட்களில் நானும் இப்படி விசித்திரங்களை உணர்ந்திருக்கிறேன்.முன்னே பின்னே செத்தா தானே சுடுகாடு தெரியும் என்று நினைத்து கொள்வேன்.
இந்த தாத்தா கடைசிலே காமெடி பண்ணிட்டார் போங்க.மண்டையை போடும் முன்னரே அஞ்சலி குறிப்பெல்லாம் எழுதியது அவருக்கு தெரிஞ்சு போச்சோ :))
kathir ,
unga mokkai ellam padichen,eppavuma neenga ippadithana,illa ippadithaan eppavume va....mudiyala
Post a Comment