ஒரேநாள்ல பத்துப்படம் பார்த்து சாதனை பண்ணவேண்டும்னு ரொம்பநாள் ஆசை. அத
கடந்த வெள்ளிக்கிழமை செஞ்சாச்சு (கலைப்படம் நீங்களாக). இப்படிலாம் மொக்கசாதனை பண்ணிதான் நம்ம திறமைய நிரூபிக்க முடியும். அஞ்சு தமிழ்ப்படம் அஞ்சு ஆங்கிலப்படம்னு முதல்ல முடிவு பண்ணேன். தமிழ்லருந்து ஆரம்பிக்கலாம்னு வேதா படத்தை முதல்ல பாத்தேன். சூப்பரா சொதப்பிருக்காங்க. விஜயகுமார் புள்ளைங்க ஒண்ணுகூட தேற முடியாதுன்ற விஷயத்தை மறுபடியும் அழுத்தம் திருத்தமா விஜய் அருண்
நிரூபிச்சிருக்கார். பத்துப் படம்ன்ற சாதனை பண்றதுக்கு பெரும்சவாலா இந்தப் படம் பார்த்ததைச் சொல்லலாம். படுத்துகிட்டு, உருண்டுகிட்டு, கண்ணமூடிகிட்டு, காதப்பொத்திகிட்டு, போர்வைய இழுத்து மூடியும் இந்த படம் முடியுற மாதிரி
இல்லாததால் இரண்டாவது CD ய பாக்கவேல்ல. உசுரே போனாலும் இனிமே அருண்
விஜய் நடிச்ச படத்தை பாக்ககூடாதுன்னு வேதா CD மேல இருந்த அருண் ஸ்டில் மேல
அடிச்சு சத்தியம் பண்ணேன்.
சொக்கம்பட்டிப்பய (SJ சூர்யாவோட மச்சானாம்) தமிழ்ப்படம் டிவிடி ஒண்ணு இருக்கு
பாக்கறீங்களாண்ணேன்னு கேட்டான். குடுடா பாக்கலாம்னு வாங்கிட்டு வந்தா
அதுல மதுரைப்பொண்ணு சென்னைப்பையன், மலரினும் மெல்லிய (எங்கருந்துடா
டைட்டில் புடிக்கறிங்க)விளையாட்டு ன்னு மொத்தம் மூணு படம். ம.பொ.செ.பை
எப்படியும் துள்ளுவதோ இளமை மாதிரி கில்பான்சியா இருக்கும்னு ஆர்வத்துல
பாத்தேன். அதுக்கு ஏத்தமாதிரி ஷர்மிளியும் சுந்தர்ராஜனும் ரெண்டு மூணு சீன்
லவ் பண்ணதோட சரி அப்புறம் காணவே காணும். கதைனு பாத்தா ம.பொண்ணும்
செ.பையனும் லவ்பண்றாங்க. மதுரப்பொண்ணுன்னாவே அவளுக்கு ஓலை கட்ன
வகைல ஒரு மாமன் கண்டிப்பா இருப்பான். அவன் கட்டை மீசை வச்சிருப்பான்.
முதுகுல அருவாள வச்சிருப்பான். வெள்ள சட்டை, வேட்டி கட்டிருப்பான்.....
கடைசில இளசுங்க காதலுக்கு அருவா தூக்கி பின்னாடி சேத்து வைப்பாங்க. இத
எதுக்குடா படமா எடுத்திங்க??
மலரினும் மெல்லிய டைட்டிலே சரியா இல்லன்றதுனால ரிஜக்ட்டட். அடுத்து விளையாட்டு
படம். காதல் படத்துல சந்தியாவுக்கு கொடுக்கா, கண்ணாடி போட்ட மாமி இருக்கும்ல
"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயான்னு" கேக்கும்ல அந்த பொண்ணு ஹீரோயின்
ஹீரோ நேஷனல் பர்மிட் லாரி ஓட்டுனர் மாதிரி செவப்பு கண்ணும் பத்துநாள் தாடியும்
கொலைவெறியோட வர்றார். பேர் தெரில ஆனா ரித்திஷ்கு சரியா போட்டியா வருவார்.
நிறைய காட்சிகள் இயக்குனர் ரசிச்சு எடுத்திருக்கார். அதுல ஒண்ணு ரெண்டு தேறுது.
இந்த படத்தோட பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட். ஜாஸி கிப்ட் இசையமைச்ச படம்னு
நினைக்கிறேன். ரெண்டு குத்துப்பாட்டும் ஒரு மெலடியும் சூப்பர். கதை ஒரு ரவுடியும்
(போதை மருந்து விக்கறவன்) அழகான பொண்ணும் லவ் பண்றாங்க. ரவுடிய அழகு
பொண்ணு திருத்தறாங்க. ரவுடியும் போதைபொருள் விக்கறது தப்புன்னு வேர் வரைக்கும்
உள்ள போய் பெரிய புள்ளிகள அழிச்சி கடைசில காதலியுடன் சேர்றதுதான் கதை.
படத்தோட கடைசில ஹோம் அலோன் படத்தை அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க.
என்ன இங்கிலிஷ்ல குழந்தை செய்ற கேரக்டர இங்க கதாநாயகி செஞ்சிருக்காங்க.
கதாநாயகியும் குழந்தையும் ஒண்ணுதான!
அறை எண் 305ல் கடவுள். சிம்புதேவன் படம் காமெடியா இருக்கும்னு பாத்தா சுத்தமா
காமெடி இல்ல. கஞ்சா கருப்பு அமீரின் ராம் படத்துக்கு அப்புறம் வேற எந்தப்படத்திலும்
சிறப்பா நடிக்கவேயில்ல. இந்தப்படத்திலும் அதே! (சுப்ரமணியபுரம் இன்னும் பாக்கல)
கொழந்திங்களுக்கு நீதிக்கதை சொல்ற மாதிரி இருக்கு படம் முழுக்க. அங்கங்க நிறைய
காட்சிகள் சுவாரசியமா இருந்தாலும் படத்துல ஏதோ ஒண்ணு ஒட்டவேல்ல. சந்தானத்த
அடக்கி வாசிக்க வைக்காம அவர் ஸ்டைல்ல நடிச்சிருந்தா கண்டிப்பா நல்லாருந்திருக்கும்.
என்னவோ தெரில காமெடி நடிகருங்க காமெடிய தவிர வேற எதுல நடிச்சாலும் அது
செம ட்ராஜடியா மாறிடுது. நான் பார்த்த தமிழ்ப்படங்கள்ல அஞ்சுக்கு இரண்டு படத்துல
க.கருப்பு கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் ரேஞ்சுக்கு இருக்கு நடிச்சிருக்கார்.
இரண்டுலயும் சிரிப்பே வரல.
அது ஒரு கனாக்காலம்
பாலுமகேந்திரா படத்துல யாருக்கும் மேக்கப் போடமாட்டாங்க
ஒரு சீன்லயாவது நாயகி சட்டை போட்டுகிட்டு கீழ ஒண்ணுமே போடாம வழ வழன்னு
காலை காமிப்பாங்க
பொன்மேனி உருகுதே மாதிரி செமத்தியான பாட்டு ஒண்ணு இருக்கும்
நாயக, நாயகியின் பக்கத்துவீட்டுக்காரங்க பெரும்பாலும் பாட்டியா இருப்பாங்க அவங்க
ரொம்ப நல்லவங்களாவும் இருப்பாங்க.
உதட்டோட உதடு முத்தக்காட்சி எப்படியாவது இருக்கும். ராமன் அப்துல்லான்னு ஒரு
படம். அதுல ஈஸ்வரி ராவுக்கு கண்டமேனிக்கு உதட்டுல முத்தம் கொடுத்துட்டே
இருப்பார் விக்னேஷ். (அந்தப்படம் பாக்கும்போது சினிமாவுல நடிச்சா பாலுமகேந்திரா
படத்துல மட்டும்தான் நடிக்கணும்னு நினைச்சதெல்லாம் இப்ப ஞாபகம் வருது)
கதை சென்னைல நடந்தாலும் எப்படியும் பின்பகுதி அல்லது படத்தின் முடிவு ஊட்டியிலோ
அல்லது மலைப்பிரதேசத்துலயோதான் நடக்கும்.
கேமரா எல்லாம் பொங்கல் சாப்பிட்ட மாதிரி மெதுவாதான் போகும் வரும் ஆனா அது
சக்கரைப்பொங்கல் மாதிரி செம டேஸ்டா இருக்கும்.
இப்படி பாலு படத்துல நிறைய ஒற்றுமைகள் இருக்கும். ஆனா இந்த ஒற்றுமைகள் நம்மை
சலிக்க வைக்காது இதுதான் அவரின் பலம்.
வீட்டுக்கு வரும் ப்ரியாமணிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து அரைவாங்கி பிறகு
வருந்துவார். மறுநாள் மன்னிப்பு கேட்கும்போது ப்ரியாமணி கண்ணீரோடு கட்டிப்
பிடிப்பார். அருமையான சீன். கவிதையான படம்.
The Holiday (ஹாலிடே)
இரு பெண்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆண்களால் ஏமாற்றப்பட்டு விரக்தி
அடைகின்றனர். இருவரும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு இரண்டு வார
காலத்திற்கு எங்காவது வெளிநாடு சென்று தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்.
இப்படிப்பட்ட இரண்டு பெண்களும் சாட்டிங்கில் எதேச்சையாக சந்தித்து, உரையாடி
தத்தமது இடங்களை இருவாரங்களுக்கு மாற்ற திட்டமிடுகின்றனர். காமரூன் டயஸ்,
கேட் வின்ஸ்லட்தான் அந்த இருவரும். திட்டப்படி காமரூன் லண்டனில் உள்ள
கேட்டின் வீட்டிற்கும், கேட் அமெரிக்காவில் உள்ள காமரூன் வீட்டிற்கும் செல்கின்றனர்.
வந்த இடங்களில் இருவரும் இரு ஆண்களால் கவரப்படுகின்றனர். கடைசியில்
இணைகின்றனர்.
Shawshank Redamtion படம் பார்த்தவர்கள் அந்த படத்தில் குருவிக்கு உணவிலிருந்து
புழுவை எடுத்து ஊட்டும் கிழவரை மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட நாப்பது
வருடம் அந்தச்சிறையில் கைதியாக, நூலக காப்பாளராக, கடைசியில் விடுதலை
பெற்று வெளியில் வரும்போது நாப்பது வருட சிறைவாழ்க்கை அந்நியமாகி இருக்கும்
பிறகு ஒரு விடுதியில் தற்கொலை செய்துகொள்வார். அற்புதமான கதாபாத்திரம் அது
அதுபோலவே ஹாலிடே பத்திலும் ஒரு கிழவரின் பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு
இருக்கிறது. மகிழ்ச்சியாக ரசிப்பதற்கு ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. jude Lawன்
மகளாக வரும் இரண்டு குழந்தைகளும் சில காட்சிகளே வந்தாலும் மனதில் அழுத்தமான
இடம் பிடிக்கிறது.
அருமையான படம். கிடைத்தால் பாருங்கள்.
The Covenant (கோவணாண்டி !)
நான்கு இளைஞர்களுக்கு எதோ ஒரு சக்தி கிடைக்கிறது. அதில் ஒருவன் அந்த சக்தியை
தவறாக பயன்படுத்துகிறான். நாயகன் அதைத்தடுக்கிறான். நாயகனுக்கு தலைமுறையாக
சக்தி இருக்கிறது என்றும் உதாரணத்துக்கு அடிக்கடி புருடாபுராணம் போன்ற புத்தகத்தை
புரட்டி புரட்டி உதாரணம் காட்டுகிறார்கள். சிறிது தள்ளாட்டத்துடன் பார்த்ததால் கதை
சுத்தமாக புரியவில்லை. ஆனால் இதில் வந்த ஒரு பெண் மிக அழகாக,
இந்தியமுகத்துடன்! இருந்தாள் அவளே இந்த மொக்கப்படத்தையும் முழுதாக பார்க்க
முழுமுதல் காரணம். பெயர் என்ன என்று விசாரித்ததில் ஜெசிகா லுகாஸ் jessica lucas என்று தெரிந்தது. கூகிளில் தேடினால் அவுட் ஆஃப் போகஸ் படங்களே கிடைக்கின்றன.
பார்க்க வேண்டும் என்றால் படத்தில் பாருங்கள் அல்லது நேரில் பாருங்கள். செமையாக
இருக்கிறார்.
Rocky Balboa (ராக்கி பெல்பொ)
சில்வெஸ்டர் ஸ்டொலன் நடிப்பில் வந்த படம். ஹெவிவைட் குத்துச்சண்டையிலிருந்து
ஓய்வுபெற்று அமைதியாக ஒரு உணவகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் காதல்
மனைவியின் கல்லறைக்கு தினமும் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். இரும்பு
மனிதனுக்குள்ளே அழகான காதல் இருக்கிறது. (உடனே தமிழ்ப்படத்தில் வருவதுபோல
முகத்தில் பவுடர் அடித்து இளமையாக காண்பித்து ப்ளாஷ்பேக்கில் லவ்ஸ்டோரி
எல்லாம் போடவில்லை. அவருக்கு ஒரு மகன். தன் தந்தையின் நிழலில் வாழ விருப்பம்
இல்லாதவன். தன் தந்தையிடம் இருந்து தனிமையில் இருக்கிறான்.
தினமும் மாலை தன் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தன் கடந்தகால
குத்துச்சண்டைக் கதைகளை பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று
தினமும் தன் அனுபவங்களை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். முதல்
மரியாதை சிவாஜி போல காலம் கடந்தும் அவருக்கு ஒரு பெண்மணி மீது காதல்
வருகிறது. கூடவே தன் வாழ்வின் கடைசி முறையாக ஒரு குத்துச்சண்டை போட்டியில்
கலந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது.
உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றாலும் கமிட்டி தலைவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
வாதிடுகிறார் ஸ்டொலன் இறுதியாக சம்மதிக்கிறார்கள். உடனே மகன் வந்து சண்டை
போடுகிறான். "நீ இந்த வயசுல சண்டை போட்டு என்ன பண்ணப்போற" என்ற மகனுக்கு
தன் ஆசையை விவரிக்கிறார். பிரிந்திருந்த தந்தையும் மகனும் ஒன்று சேர்கிறார்கள்.
தமிழ்ப்படத்தில் வருவதுபோலவே ஒரே பாடலில் பயிற்சிகள் அனைத்தையும் முடிக்கிறார்.
நாடே உற்சாகம் தருகிறது. அந்தப்பெண்மணியும் உற்சாகம் தருகிறார். ஆனால் அவரை
எதிர்த்து மோதப்போவது உலகஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரர்.
போட்டி நடக்கும்போது பயங்கர விறுவிறுப்பு. மோதுகிறார்கள் மோதுகிறார்கள் இருவரும்
சமமாக மோதுகிறார்கள். முதல் மூன்று ரவுண்டுகளில் சரமாரியாக குத்துவாங்கி முகம்
கிழிந்துபோகிறார் ஸ்டொலன். அரங்கமே அமைதியாகி விடுகிறது. அந்தப்பெண்மணி
கண்ணீரோடு தனது ஆதரவை தெரிவிக்கிறார். உடனே வீறுகொண்டு எழுந்து அடுத்த
மூன்று ரவுண்டுகளில் அவனை சாய்த்து விடுவார் என்று நினைத்தீர்களானால் நீங்கள்
புத்திசாலி. ஆமாம் ஆறாவது ரவுண்டில் எதிராளியின் முகம் கிழிந்து ரத்தம் கொட்டுகிறது.
இடைவேளைக்குப் பின் மீண்டும் மோதுகிறார்கள். கொலைவெறியுடன் மோதுகிறார்கள்.
மறுபடியும் சமமாய் ஆகிறது. கட்டக்கடைசியில் போட்டி யாரும் வெற்றி பெறாமல் எவ்வித
முடிவும் இன்று முடிகிறது. இந்த சண்டைக்காட்சி மில்லியன் டாலர் பேபி அளவுக்கு
சிறப்பாக இல்லையென்றாலும் அதே சுவாரசியம் உண்டு.
போட்டி முடிந்ததும் உலகத்தின் தலைசிறந்த வீரன் நீ என எதிராளியை பார்த்து
சொல்கிறார். படம் முழுக்க ஸ்டொலனின் ஆதிக்கம். படம் ஆக்சன் படம் என்றே
போட்டிருந்தது. படமும் ஆக்சனாகவே இருந்தது. ஆனால் இங்கே பேரரசுவு ஒரு
ஆக்சன் இயக்குனர் என்று சொல்கிறார்கள். பழனி, குருவி எல்லாம் ஆக்சன் படமாம்.
The Sting (தி ஸ்டிங்)
1973ல் வெளிவந்த இந்தப்படம் ஏழு ஆஸ்கார் விருது பெற்றது. இரண்டு நண்பர்கள்
திருடர்களாக இருக்கின்றனர். ஒருமுறை நகரின் மிகப்பெரிய திருடனிடம் திருடி
விடுகிறார்கள். அந்த மிகப்பெரிய திருடன் இருவரில் ஒருவரை கொன்றுவிடுகிறான்.
இன்னொருவன் அவனை பழிவாங்குகிறான். பழிவாங்குவதென்றால் சாதாரணமாக
இல்லை அப்படியே அவனை திட்டம்போட்டு ஏமாற்றுவது. அந்தத்திட்டம்தான்
படத்தின் கதை. தப்பித்த இன்னொருவன் (rabert redford) மிகப்பெரிய கிரிமினலை
பழிவாங்க Paul Newman இடம் செல்கிறான். திட்டம் போடுகிறார்கள். முதலில்
சீட்டாட்டம் போல ஏதோ விளையாடுகிறார்கள். மங்காத்தா வகைபோல. அதில்
சூழ்ச்சி செய்து பெரும்பணத்தை அவனிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள். பால்
நியுமென் சீட்டுக்கட்டில் செய்யும் மாயாஜாலங்கள் பிரமிக்க வைக்கும். உதாரணத்திற்கு
பிதாமகன் படத்தில் சூர்யா செய்வாரே அதுபோல. முதலில் விட்டு பிறகு முழுதாக
வில்லனுக்கு ஆப்படிக்கிறார். அதில் காய்ந்துபோகும் வில்லனை இன்னும் காயவிட்டு
இன்னொரு திட்டம் போடுகின்றனர்.
குதிரை ரேஸ் நடப்பதுபோலவே ஒரு சூதாட்டவிடுதியை ஆரம்பித்து வில்லனை நம்ப
வைக்கிறார்கள். இந்த அரங்கத்தில் வர்ணனை செய்வது முதல் பந்தயம் கட்டுவது வரை
பால் நியுமெனின் ஆட்கள். இதிலும் முதலில் வில்லனை ஜெயிக்கவிட்டு பிறகு
மொத்த பணத்தையும் ஆட்டையை போடுகிறார்கள். பலமில்லியன் டாலரை கத்தியின்றி
ரத்தமின்றி மிகச்சிறந்த திட்டமிடலின் மூலம் திருடனிடமிருந்தே திருடுகிறார்கள்.
அந்த டிவிடியின் அனைத்துப்படங்களுமே கேங்ஸ்டர் ரவுடிகளின் படம். காட்பாதர்
முதல் ப்ரெஞ்ச் கனெக்சன் வரை. ஆனால் காட்பாதரை என்னால் முழுதாக பார்க்க
முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக பிறகு பார்ப்பேன். அப்படியே ஒரு பதிவெழுதியும்
பீற்றிக்கொள்வேன்.
சிறப்பான ஒளிப்பதிவு சிறப்பான திரைக்கதை சிறப்பான நடிப்பு இந்த மூன்றுமே
படத்தின் பிரம்மாண்டம். காமிக்ஸ் நாவலின் ஐந்து அத்தியாங்கள் போல படத்தை
ஐந்து பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும்போதும் முடியும்போதும்
பல முடிச்சுகளுடன் காமிக்ஸ் நாவலின் கடைசி அத்தியாயத்தில் எல்லா முடிச்சுகளும்
அவிழ்வதுபோல மிகத்திறமையாக முடித்திருக்கிறார் இயக்குனர்.
Midnight Cowboy (மிட்நைட் கவ்பாய்)
டைட்டிலே கில்பான்சியாக இருப்பதுபோல படமும் "அந்த" மாதிரிதான். 1969ல்
வெளிவந்த இந்தப்படம் மூன்று ஆஸ்கர் விருது பெற்றது. நெகிழ வைக்கும் நட்புதான்
படத்தின் மையக்கருத்து. "அந்த" மாதிரி மேட்டர் எல்லாம் மாயை என்று சொல்லும்படம்.
ஜோ பக் டெக்சாசிலிருந்து நியூயார்க் வருகிறார். ஆன் விபச்சாரன் தொழில் செய்து
நிறைய சம்பாதிக்கலாம். ஜாலியாக இருக்கலாம் என்று வருகிறார். அந்தக்காலத்திய
ஆட்கள் ரேடியோ புழக்கத்துக்கு வந்த புதிதில் பலர் ரேடியோவும் கையுமாக திரிந்து
என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். எனக்குத்தெரிந்து சைக்கிளில் சென்று வளையல்
விற்கும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரின் சைக்கிளில் எப்போதுமே ரேடியோ
பாடியபடி இருக்கும்.
சைக்கிள் காரியரில் வளையல்பெட்டியுடன் காற்றடிக்கும் பம்ப் பொருத்தப்பட்டிருக்கும்
ஹேண்ட்பாரின் இருபக்கமும் பைகள் தொங்கும் அந்த பைகளில் ஒன்றில் ரேடியோ
கதறியபடி இருக்கும். அவர் இறக்கும்வரை வியாபாரம் செய்துகொண்டே இருந்தார்
அந்த ரேடியோ இன்னமும் உள்ளது.
படத்தின் நாயகன் வாயில் சுயிங்கமும் கையில் ரேடியோவுமாக அறிமுகமாகிறான்
மிக உற்சாகமாக நியூயார்க் நகரில் நுழைகிறான். நகரங்கள் எப்போதுமே புதியவர்களுக்கு
நரகங்கள்தான். அவன் நினைத்தது போல பெண்களுடன் படுத்தால் பெரும்பணம்
கிடைக்கும் என்பது பொய்யாகிறது. மாறாக இவனிடமிருந்தே பணத்தைப்
பிடிங்கிக்கொண்டு போகிறார்கள். அந்தச்சமயத்தில் ராட்சோ ரிசோவின் அறிமுகம்
ஜோவிற்கு கிடைக்கிறது.
ஆனால் ராட்சோ அவனுக்கு உதவுவதாக சொல்லி இருக்கும் பணத்தை எல்லாம்
ஆட்டையைப் போட்டுவிடுகிறான். பிறகு அவனைக் கண்டுபிடிக்கும்ம் ஜோ தன்
பணத்தைக் கேட்டு அவனை நச்சரிக்கிறான். ஒரு கால் குட்டையாக இருப்பதால்
ராட்சோவால் மனிதர்களைப் போல நடக்க முடியாது. குதித்துக் குதித்துதான் நடக்க
முடியும். தங்குவதற்கு கூட இடமில்லாத ஜோ, ராட்சோவுடன் செல்கிறான்.
அவனோ பாழ்டைந்த வீட்டில் குப்பைகளுக்கிடையில் தங்கி இருக்கிறான். படத்தில்
காலத்தை ஒரு குறியீடு போல காண்பித்திருக்கிறார்கள். ஜோ நியூயார்க் வரும்போது
பனிகாலம் ஆரம்பிக்கிறது எப்பொழுதுமே வசந்தகாலத்தின் ஆரம்பம் மிக இனிமையாக
இருக்கும். அடர்ந்த பனிக்காலம் வரும்போது விளிம்பு மக்களின் திறந்த வாழ்விடம்
குளிரில் முற்றிலும் உறைந்திருக்கும். அதுபோலவே பாழடைந்த அந்தக்கட்டிடத்தில்
தங்கும் அவர்கள் குளிர் உச்சமடையும் காலத்தில் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள்.
ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த ராக்சோவின் உடல்நிலை மோசமடைகிறது.
குளிரின் தீவிரம் மூர்க்கமாக தாக்கும்போது தீவிரமாக புகலிடம் தேடுகிறார்கள்.
இடையில் நடக்கும் சம்பவங்கள் இருவருக்கிமிடையில் அழகான நட்பை உண்டாக்கி
விடுகிறது. ஒரு பெண்ணை கரெக்ட் செய்து திருப்திபடுத்துவதன் மூலம் பெரும்
பணத்தை சம்பாதிக்கிறான் ஜோ. நண்பனை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல
ஜோ முனையும்போது ராக்சோ தன் கனவை சொல்லுகிறான். எப்படியாவது என்னை
ப்ளோரிடா கொண்டு சேர்த்துவிடு. அங்கே சென்றதும் எல்லாம் சரியாகிவிடும் என்று
சொல்கிறான். மருத்துவரிடம் வரமுடியாது என பிடிவாதமும் பிடிக்கிறார். பின்னர்
இருவருமாக ப்ளோரிடாவுக்கு பயணமாகிறார்கள். பல ஆசைகளுடன் பயணிக்கும்
ராக்சோ உறங்கிய நிலையிலே மரணமடைவதுடன் படம் முடிகிறது.
பத்துப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மிட்நைட் கவ்பாயும் ஹாலிடேயும்தான்
சொல்லமுடியும்.
இங்கே திருட்டு வீசிடி விற்கும் இடத்திற்கே சென்று ஜே.கே.ரித்திஸ் நடித்த
நாயகன் படத்தைக் கேட்டபோது அப்படியொரு நடிகரையே தெரியாது என்று அவர்
சொன்னார். கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. யாராவது நாயகன் பட விசிடி
வைத்திருந்தால் துபாய் குறுக்கு சந்திற்கு பார்சல் அனுப்பவும்.
சனிக்கிழமை காலை அலுவலகத்தில் நுழையும்போது எல்லாரும் என்னை பேயடித்த
மாதிரி ஏன் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Saturday, July 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
நீங்க டயர்டு ஆகலையா? ஒரே நாளில் இத்தனை படம் பார்த்து நான் தசாவாதாரம் பார்த்தே டயர்டு ஆகிட்டேன்
இந்த தடவை நாட்டுக்கு போன போது சுமார் 250 படங்களை (Tour போன போது எடுத்தது) ஒரே நாளில் பார்த்து பெரும் சாதனை செய்திருக்கேன். இதெல்லாம் ஜூஜூபி. :))
பதிவு ரொம்ப பெரியதாகையால் பாதி வரை படித்துள்ளேன்.
:-))
//அந்தப்படம் பாக்கும்போது சினிமாவுல நடிச்சா பாலுமகேந்திரா
படத்துல மட்டும்தான் நடிக்கணும்னு நினைச்சதெல்லாம் இப்ப ஞாபகம் வருது//
ஹா ஹா ஹா
//நீங்க டயர்டு ஆகலையா? ஒரே நாளில் இத்தனை படம் பார்த்து நான் தசாவாதாரம் பார்த்தே டயர்டு ஆகிட்டேன்//
ஹா ஹா ஹா பத்து ரோல் பத்து படம்
உங்க பதிவும் பொறுமையா பெரிதா எழுதி இருக்கீங்க, அந்த படங்களை பார்த்த மாதிரியே..
நான் கூட சென்னையில் இருந்த போது என் நண்பனுடன் சேர்ந்து 4 படம் திரை அரங்கிலேயே ஒரே நாளில் பார்க்க முடிவு செய்து பார்த்தோம். நீங்க என்னை விட மோசமாக இருக்கிறீர்களே :-)))
உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள் :-)
எப்படிண்ணே இவ்வளவும் பாத்து முடிக்கிறிங்க...!!??
நானும் ஒரே நாள்ள ஐந்து படம் பாத்திருக்கேன் ஆனா இது....
\\\
சனிக்கிழமை காலை அலுவலகத்தில் நுழையும்போது எல்லாரும் என்னை பேயடித்த
மாதிரி ஏன் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.
///
:)
\\\
கேமரா எல்லாம் பொங்கல் சாப்பிட்ட மாதிரி மெதுவாதான் போகும் வரும் ஆனா அது
சக்கரைப்பொங்கல் மாதிரி செம டேஸ்டா இருக்கும்.
///
சூப்பரு...!
///எல்லையற்ற அன்பு கொள்வோம்///
இத எப்ப மாத்தினிங்க...
ஒரு பதிவெழுத இம்புட்டு கஸ்டப்படணுமா??
அவ்வ்வ்
உங்க பொறுமை மெய்சிலிர்க்க வைக்குது. எப்படித்தான் அந்த மொக்கை படங்களையெல்லாம் சமாளிச்சு பார்த்தீங்களோ.. உங்களுக்கு மெரினா பீச் பக்கத்துல சிலைதான் வைக்கணும் தம்பிண்ணா. :-)))
10 நிமிசம் 10 நிமிசம் ஆ பாத்தா 10 என்ன 100 படம் கூட பாக்கலாம்..ஏன்யா அதான் மொக்க படம்னு தெரியுதுல்ல அப்புறம் என்னா கருமத்துக்கு பாக்குற..பாத்துட்டு பெரிசா ஒரு பதிவு வேற..நீர் புத்திசாலியென்றால் புத்திசாலித்தனமான படங்களை மட்டும் பாரும்..எதுக்குவே மட்டமான படங்களை பார்த்து நொட்ட நொள்ள சொல்லிட்டுத் திரியுற...
பத்தி எழுத்திற்கு அடிப்படைத் தேவையான சரளமான நடை உங்களுக்கு நன்றாகக் கைகூடியுள்ளது.
இனி வேறு விஷயங்களும் நீங்கள் முயற்சித்தால் மகிழ்வேன்.
எப்படிங்க இப்படி கலக்கரீங்க.....
உங்க பதிவ படிச்சே நான் டயர்டு ஆகிட்டேன்.
போய் ஒரு புல் மீல்ஸ் சாப்பிடனும்.
Next meet panren.....
Kathir.
ரைட்டு..நடாத்துங்க அண்ணாச்சி :))
கார்த்திக்,
இதெல்லாம் எனக்கு சாதாரணம். வெளில கொளுத்துற வெயில் எங்கயும் போகமுடியாதுன்னா இதத்தான் செஞ்சாகணும்.
சுல்தான்,
நான் சொல்றது எல்லாமே திரைப்படம்.
புகைப்படம் இல்ல.
கோபி அன்னன்
:)
கிரி,
//உங்க பதிவும் பொறுமையா பெரிதா எழுதி இருக்கீங்க, அந்த படங்களை பார்த்த மாதிரியே.//
நிஜமாவே பாத்தங்க. நம்புங்க கிரி.
//உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள் :-)//
இதுக்கு கூடுமா வாழ்த்து?? :))
தமிழன் அண்ணாச்சி
//எப்படிண்ணே இவ்வளவும் பாத்து முடிக்கிறிங்க...!!??//
கேர்ள் ப்ரண்டோட வெயில்ல ஊர் சுத்த வக்கில்லாதவன் வட்டை எடுத்து வெறிச்சு பாத்துட்டுருப்பான். அதான் நான் செய்றேன். :)
//இத எப்ப மாத்தினிங்க...//
இப்பதான், கொஞ்ச நாளைக்கு முன்னாடி.
மங்ளூர்,
பாக்கறதுக்கு சுலபம் மங்களூர் ஆனா அத பத்தி தம்பட்டம் அடிச்சுக்கறதுக்காக எழுதுறதுதான் பெரிய கரைச்சல் புடிச்ச வேலை.
மைப்ரெண்ட்
//உங்க பொறுமை மெய்சிலிர்க்க வைக்குது. எப்படித்தான் அந்த மொக்கை படங்களையெல்லாம் சமாளிச்சு பார்த்தீங்களோ.. உங்களுக்கு மெரினா பீச் பக்கத்துல சிலைதான் வைக்கணும் தம்பிண்ணா. :-)))//
செத்துப்போடான்னு சொல்றத இப்டிகூட சொல்லாம்ல.
//10 நிமிசம் 10 நிமிசம் ஆ பாத்தா 10 என்ன 100 படம் கூட பாக்கலாம்..ஏன்யா அதான் மொக்க படம்னு தெரியுதுல்ல அப்புறம் என்னா கருமத்துக்கு பாக்குற..பாத்துட்டு பெரிசா ஒரு பதிவு வேற..நீர் புத்திசாலியென்றால் புத்திசாலித்தனமான படங்களை மட்டும் பாரும்..எதுக்குவே மட்டமான படங்களை பார்த்து நொட்ட நொள்ள சொல்லிட்டுத் திரியுற...//
பதிவா ஒழுங்க படியும் ஓய், கலைப்படங்கள் நீங்களாகன்னு எழுதிருக்கேன் பாரும். கலைப்படங்கள முழுசா பாக்கறதுக்கு நான் என்ன அய்யனாரா? இல்ல ஆசிப்பா?
அந்த மாதிரி படங்கள பத்து நிமிசம் பாக்கறதே பெரிய விஷயம்.
இதுல நீர் 100 படம் வேற பாப்பீரா?
பேஷ் பலே! பாத்தா அப்டி தெரிலயே! :)))
கருத்திற்கு நன்றி சுந்தர்!
அனானி,
நீங்களும் கதிரா?
கப்பி,
நடாத்திட்டா போச்சு...
ஆமாம் நான் கதிரவன்.
நானும் அபுதாபில தான் இருக்கேன்.
Kathir.
கதிர்
மகிழ்ச்சி. முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்.
எப்படியெல்லாம் சாதனை பண்றாங்கப்பா :-)
:)))) Neenga sonna antha kadaisi rendu padaththa mattum try pannanum....
Subramaniapuram seekiram paarunga... konja naal aachunna athuvum pazaiya padam listku poyidum :)))
இதெல்லாம் சாதாரணம்.
இன்னும் இருக்கு வெட்டி, மெதுவா செய்யலாம் அதெல்லாம்.
சமீபத்தில் NARUTO மற்றும் NARUTO SHIPPUDEN என்ற அனிமேஷன் நெடுந்தொடரை ஆங்கிலத்தில் பார்த்தேன். மொத்தம் 720 எபிஸோட்கள் என்பதால் 11 நாட்களுக்கு மேலே எனக்கு தேவைப்பட்டது. கதை நன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன்.
Post a Comment