எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, July 13, 2008

சிறுவர்களின் உலகம் - ரத்த உறவு - யூமா வாசுகி

பேய் பிசாசுகள் அண்டாமல் இருப்பதற்காக மந்திரித்த தாயத்து ஒன்றை கருப்புக்
கயிறுடன் புஜத்தில் கட்டுவார்கள். அப்படிக்கட்டும்போது மந்திரித்தவர் சொல்வார்
"மண்ணுல படாம பாத்துக்க" தவறி பட்டுச்சோ "உலகம் அழிஞ்சி போயிடும்" என்று.
பிறகு கோலிக்குண்டு சண்டையிலோ, கில்லி சண்டையிலோ மண்ணில் புரண்டு
எழும்போது தாயத்து மண்ணில் பட்டிருக்கும். உலகம் அழியப்போகிறது என்று
கத்திக்கொண்டே ஒளிந்துகொள்ள இடம் தேடுவேன். ஆனால் இந்த உலகம் இன்னமும்
அழியவேயில்லை. ஆச்சரியமாக இருக்கும். உங்களுக்கு இருந்திருக்கிறதா?

சக நண்பர்களை காணாவிட்டால் அவர்களைத் தேடுவதற்கு ஒரு உபாயமொன்று
சிறுவயதில் உபயோகப்படுத்தியிருப்போம் ஞாபகமிருக்கிறதா? இல்லையென்றால்
சொல்கிறேன். வாயில் எச்சில் கூட்டி இடதுகையில் துப்பவும் கொத்தாக நுரையுடன்
இருக்கும் அதில் வலது கையால் பச்சக் என்று அடித்தால் எந்தப் பக்கமாக எச்சில்
தெறிக்கிறதோ அந்தப் பக்கம்தான் தேடும் ஆள் இருக்கிறான் என்று அர்த்தம்.
இந்த உபாயத்தை கையாண்டு இருக்கிறீர்களா?

மழைக்காலங்களில் ஒருவித பூச்சி ஒன்று பறக்கும். அதை "மழ சொல்ற பூச்சி" என்போம்
அந்த பூச்சியானது வெட்டுக்கிளியை விட பெருசாக இருக்கும் அதே சமயத்தில் மிக
மெல்லியதாக இருக்கும். அப்பூச்சியைக் காண்பது மிக அரிது. கண்டால் அதனிடம்
"மழை எந்த திசையில் வரும்" என்று கேட்டால் எந்த பக்கமாவது திரும்பும். திரும்பிய
பக்கம் மழை வரும் என்று அந்த வயதில் நம்பியிருக்கிறேன். பிறகு மழை வந்த
நேரத்தில் எந்த திசை... அதுவும் மறந்துபோயிருப்பேன். நீங்கள் இதுபோல மழபூச்சி
சொன்னதை நம்பியிருக்கிறீர்களா?

ஓணானை அடித்துப் புதைத்தால் அது காசாக மாறியிருக்கும் என்று நம்பிருக்கலாம்.
சிறுவயதில் கற்பிக்கப்படும் இது அனேகமாக எல்லாரும் அறிந்ததுதான்.

அம்மா கொடுக்கும் தின்பண்டங்களின் ஒரு பகுதியை மிக வாஞ்சையுடன் பூமிக்கு
அளித்திருக்கிறீர்களா? அப்படி பூமிக்கு உணவளித்தால் பூமாதேவி உங்களை எந்த
ஆபத்தும் வராமல் காப்பாற்றுவாள். ஏதாவது ஆபத்து வரும் நேரத்தில் பூமாதேவிக்கு
உணவளித்த உரிமையில் நீங்கள் தாராளமாக அவளை உதவிக்கு அழைக்கலாம்.
தேவிக்கும் உணவிடுவதில் யார் பெரியவர் என்ற போட்டி எனக்கும் என் தம்பிக்கும்
பெரிய அளவில் நடந்திருக்கிறது. தேவி துணையிருப்பாள் என நம்பியிருக்கிறீர்களா?

எனக்கு விவரம் தெரியும் வயது வரை ஊரில் இருந்த பல மொட்டைக்கிணறுகளிலும்
பல மரங்களின் உச்சியிலும் கொடூரமான பேய்கள் வாழ்ந்து வந்தன. எப்படியோ பிற்பாடு
மாயமாயின. ஆனால் வேறு பெயர்களில் வேறு சிறுவர்கள் இன்னமும் அந்த இல்லாத
பேய்களுக்கு பயந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி பேய்க்கு பயந்து இருக்கிறீர்களா?

சாத்தியமே இல்லாவிட்டாலும் கூட பலவிதமான பொய்களை எந்த நிபந்தனையும் இன்றி
ஏற்றுக்கொள்ளும் வயது அந்த வயது.

இதுபோன்ற எண்ணற்ற நினைவுகளால் நிரம்பிய அந்த வயதை இப்போது ஒரு நாவல்
ஞாபகப்படுத்தியது. அது யூமாவாசுகியின் "ரத்த உறவு" சிறுவர் நாவல் என்று நினைத்து
விடவேண்டாம். தரமான சமூக நாவல் இது.

திடிரென்று காலம் பின்னோக்கி சென்று உங்களை நீங்கள் விரும்பும் பருவத்திற்கு
அழைத்துச்செல்லும் என்று வரம் கிடைத்தால் நான் நான்கிலிருந்து ஏழு வயதுக்குள்ளான
பருவத்திற்கு செல்லவே விரும்புவேன். கிடைக்கும்/பார்க்கும் அனைத்து பொருள்களையும்
ஆச்சரியமாக பார்க்கும் வயது அது. நிறைவேறும் அல்லது நிறைவேற சாத்தியம்
இல்லாத ஆசைகளில் இரண்டாவது வகையின் மேல்தான் எப்போதுமே ஈர்ப்பு
இருக்கலாம். சிறுவர்களின் உலகத்தை பெரியவர்கள் ஆன பிறகுதான் இழந்ததாக
உணர்கிறோம். இழந்ததாக உணர்ந்த ஒன்றின்மேல் ஈர்ப்பு வரத்தானே செய்யும்.
அவ்வகையான ஈர்ப்புகளை ஞாபகப்படுத்தும் அல்லது வாசிக்கும் புத்தகங்களில்
உள்ளவற்றைக் காணும்போதும் நாம் சிறுவயதிற்கு செல்வது போலவே தோன்றும்.
இன்றளவும் காமிக்ஸ், சாகச கதைகளை பருவம் தவறிப்போய் விரும்பி படிப்பது
கூட இப்படிப்பட்ட உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கலாம்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் கூட "அவன் ஒரு கொழந்த மாதிரி"
என்று சொல்வார்கள். ஒரு மோசமான தகப்பனைக்கொண்ட குடும்பத்தில் பிறந்த
நான்கு சிறுவர்களில் ஒருவன் பார்வையில் கதை ஆரம்பித்து பல சிறுவர்களின்
வழியாக கதை சொல்லப்பட்டு முடிகிறது. கதை என்ற இரண்டு வார்த்தைகளால்
அடக்கிவிட முடிந்துவிட்டாலும் இதை வாசித்தபிறகு உங்களின் சிறுவயதின்
உணர்வுகளை பார்க்காமல் முடிக்கமுடியாது. அக்குடும்பத்தில் மூத்தவளான
அக்கா அவளுக்கு பிறகு இரு சகோதரர்கள் அண்ண, தம்பி என முழுக்க முழுக்க
உறவுப்பெயர்களால் மட்டுமே நாவல் முழுக்க வருகிறார்கள்.

சினிமா பார்த்தும் கூட இதுவரை அழுததாக நினைவில்லை. ஆனால் இந்த நாவலின்
சில பக்கங்கள் என்னை கலங்கச்செய்தன. கதை என்ன என்று இந்தப் பதிவில் சொல்ல
வேண்டும் என்ற உத்தேசம் இல்லை. வாய்ப்பு வரும் நேரத்தில் தவறவிடாமல்
வாசித்துப் பாருங்கள்.

நம் சிறுவயதின் அற்புதமான தருணங்கள் நம் அப்பாவின் மூலமோ, பெரும்பாலும்
அம்மாவின் மூலமோதான் நமக்கு அறியப்படும். வளர்ந்தபிறகுதான் தனிப்பட்ட
குணாம்சங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
நிகழ்வுகள் காலம் உள்ளவரை சொல்லியபடி இருப்பார்கள். தலைகுனிந்தே நடப்பது,
உள்ளங்கையின் மடிப்பில் மல்லிகையின் மொட்டுகளை அணைத்து வைப்பது,
கிழவிகளின் சுருக்கத்தை அதிசயமாக பார்ப்பது என்று எனக்கான பழக்கங்கள் என
பிற்காலத்தில் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்குத்
தோன்றும் இப்படியெல்லாம் இருந்திருந்த என்னால் ஏன் அந்நிகழ்வுகளை வளர்ந்த
பிறகு அதிகபட்சம் நினைவுகொள்ளக்கூட தவறிவிட்டேன் என்று.

பேசக்கற்றுக்கொண்ட காலத்தில் எதிர்த்த வீட்டுப்பெண் தீபாவுடன் தான் நிறைய
பேசினேன் என்று கூட சொல்வார்கள். அவள் வீட்டில் பீரோவுக்கும் தலையணைகள்
வைக்கும் இடத்திற்கும் நடுவில் இரண்டு சிறுவர்கள் மறைவாக அமரும் வகையில்
ஒரு இடம் உண்டு அந்த இடத்திலேதான் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்
என்று தீபாவின் அம்மாவேகூட சொல்வார். அந்தக்கணத்தில் அவளுடன் என்ன
பேசியிருப்போம் என்று நினைத்தால்கூட உதட்டில் புன்னகை பரவும். நான்
எப்போதுமே நினைவுகொள்ள நினைக்கும் ஒரு தருணம் அது.

மோசமான குடிகாரனாக அப்பாவும், கீழ்த்தரமான எண்ணங்கள் உடைய பாட்டியும்
கொடுமைக்கார பெரியம்மா, சித்தி போன்றவர்களுடன் ஒன்றாக வசிக்கும் குடும்பத்தில்
இருந்து ஒரு சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கீழ்நடுத்தர
மோசமான குடிப்பழக்கத்தினை உடைய தந்தையினால் ஏற்படும் இன்னல்களை
இத்தனை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார். முன்பே யூமாவாசுகியின் படைப்புக்
களில் ஈர்க்கப்பட்டிருந்தேன். முக்கியமாக அவரின் கவிதைகளை. உதாரணத்திற்கு
இப்பதிவின் கடைசி இரண்டு கவிதைகளை வாசித்துப்பாருங்கள். குழந்தைகளின்மீது
அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர் குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.

பக்கத்து வீட்டு ஜனனி (கருவாச்சி) என் தம்பியிடன் பேசுவதைப்போல என்னிடம்
பேசுவதில்லை என்று எனக்கு வருத்தம் இருந்தது. அவளுக்கு என்னை பிடிக்கவில்லை
போலும் என்றுகூட நினைத்துக்கொள்வேன். பின்னொருநாள் என் தம்பி அவளுடன்
பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குழந்தையைப் போல உடல்மொழியுடன் பேசிக்கொண்டு
இருந்தான். அவளும் மிகுந்த சுவாரசியத்துடன் புருவத்தை உயர்த்தி கையை இடுப்பில்
வைத்து பெரிய மனுசி தோரணையுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள்.
என்னுடன் கூட அப்படி பேசியதில்லை அவள். அந்தக்காட்சி கவிதையைப் போல
இருந்தது. சிறுவர்களிடம் சிறுவர்களைப் போலதான் பேசவேண்டும் என்பதைக்கூட
மறந்து போயிருந்தேன்.

நாவல் வாசித்து முடித்ததும் பல ஞாபகங்கள் வந்தன. நாவலில் என்னை பெரிதும்
கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது இரண்டு சிறுவர்களின் அக்கா என்ற பாத்திரம்.
அவளின் பெயர் வாசுகி

யூமா வாசுகியின் கவிதைகள் சில...


லொள் லொள் என்று நாய் மாதிரிக் குரைக்குமே
அது மாதிரி ஒண்ணு வரைந்து தா
என்று சொன்னாள் சிறுமி.
ரெண்டு கால் மாதிரி வைத்துக் கொண்டு
நடக்கிறமாதிரிப் போகிற
மனிதன் மாதிரியும் ஒன்று.
வால் மாதிரித் தொங்கவிட்டு
குரங்குமாதிரித் தாவுவது.
கடல் மாதிரிக் கிடப்பதிலே
நிற்கும் கப்பல் மாதிரி.
சேப்பு சேப்பா பூ மாதிரிப் பூக்குமே
அந்த மரம் மாதிரியும் ஒண்ணு
வரைந்து தா...
அவள் சிறுமி மாதிரி
என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்
நான் ஓவியன் மாதிரி
வரைந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு மனிதன் முயலாக
---------------------
ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
'முயல் என்ன செய்கிறது?'
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
'முயல் சாப்பிடுகிறது'
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
'எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்'
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
'பெரிய முயல் கடித்துவிடும்' என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
'என்ன செய்கிறது முயல்' என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
'முயல் எங்கே போகிறது..?'
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது...

பின்குறிப்பு: இந்தப்புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்ன, குழந்தையைப் போன்ற, ஊரில் இருந்து நிறைய புத்தகங்கள் வாங்கி வந்திருக்கிற, அமீரகத்தின் ஒரே நல்ல
நல்லவர், பலகுரல் பாடல் மன்னன் ஆசிப் அண்ணாச்சிக்கு அன்போடு
இந்தப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

தலைப்பு கப்பியிடம் இருந்து திருடியது.

9 comments:

கோபிநாத் said...

புத்தகத்தை படிக்க தூண்டுகிறது உன் எழுத்துக்கள் ;))

அருமையாக எழுதியிருக்க கதிர் ;)

அய்யனார் said...

என்ன கொடும ஒரு பயலும் கமெண்ட் போடலியே :((

மோகன் கந்தசாமி said...

////பேசக்கற்றுக்கொண்ட காலத்தில் எதிர்த்த வீட்டுப்பெண் தீபாவுடன் தான் நிறைய
பேசினேன் என்று கூட சொல்வார்கள். அவள் வீட்டில் பீரோவுக்கும் தலையணைகள்
வைக்கும் இடத்திற்கும் நடுவில் இரண்டு சிறுவர்கள் மறைவாக அமரும் வகையில்
ஒரு இடம் உண்டு அந்த இடத்திலேதான் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்
என்று தீபாவின் அம்மாவேகூட சொல்வார். அந்தக்கணத்தில் அவளுடன் என்ன
பேசியிருப்போம் என்று நினைத்தால்கூட உதட்டில் புன்னகை பரவும்.////

என்ன பேசினீர்கள் என்று தீபாவிடம் இப்போது கேட்டு சொல்லுவீர்களா?

தம்பி said...

நன்றி கோபி.

பாயாசம் குடிச்ச மாதிரி இருக்குமே அய்ஸ். கமெண்ட் எதிர்பாக்கறவன் இல்ல இந்த கதிர்.


மோகன்
சத்தியமா அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கான்னு கூட தெரியாது. அனேகமா ரெண்டு குழந்தைகள் இருக்கலாம், இறந்து போயிருக்கலாம், எனக்கு பக்கத்து தெருவில கூட இருக்கலாம்.

கப்பி பய said...

:)

ரொம்ப நாளாச்சு! இப்படி ஒரு பதிவைப் படிச்சு!! அருமை!

ரத்த உறவு புத்தகம்..எப்ப வாய்க்குமோ! :))

தம்பி said...

கப்பி
இது என்னோட நூத்தி அம்பதாவது பதிவு. ஓரளவுக்காச்சும் நல்லா இருக்கணுமேன்னுதான் நல்ல புத்தகத்தை பத்தி எழுதினேன்.

நன்றி

dj said...

வாசித்த காலத்தில் பாதித்த ஒரு புதினம். பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி.

விஜய் said...

மனித வாழ்வில் அந்த பால பருவம் .அதன் அனுபவங்கள். அருமையாய் சொல்லிய்ருக்கீங்க.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

solpavarkal sonnal ethuvum azhaguthaan.. saatharana karkal kooda vairamaga minnum

ungal nadaikkagavae padithaal enna thontum..

good orator