எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 10, 2008

பிராந்து - நாஞ்சில் நாடன்



பேய்க்கொட்டு (1994) சிறுகதை தொகுப்பு வெளியான பின்பு எழுதப்பட்ட கதைகள் இவை.
மொத்தம் பதினெட்டு சிறுகதைகள்.

"உலகத்தரத்திலான தமிழ்ச்சிறுகதையின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும்
காலப்பகுதியில் முன்னேர் அல்லாத, கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத
எனது சிறுகதைகள்" கால்நூற்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் இவரின்
எந்தவித தன்மிகை இல்லாத முன்னுரை மேலும் நம்மை ஈர்க்கிறது.

பிராந்து பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே பிடித்து விட்டிருக்கும் காலக்
குறுக்கு வெட்டை கவலையோடு கவனித்துக் கொண்டிருப்பவன் கலைஞன். சுழன்று
சுழன்று கோட்டம் விழுந்து விட்டது போலும் பூமியின் அச்சில். இயற்கையின்
செயற்பாடுகளில், இயற்கையை அண்டியும் போராடியும் வாழும் மனித மனங்களின்
வெளிப்பாடுகளில் இந்த கோட்டம் வெளிப்படையாகக் காணக்கிடைக்கிறது.

"இனி மீட்சியே இல்லை எனத் தோன்றும்போது ஒப்பவும் மறுக்கிறது கலைஞனின்
மனம் நம்பிக்கை என்பதோ நம்பிக்கை இழப்பு என்பதோ கையிலிருக்கும் தீவட்டி
வெளிச்சத்தில் காண முயல்வதுதானா? என் தீவட்டி எப்போதும் என் மனத்தில்:
என் கரங்களில் அல்ல. அது எரிக்கும் ஒளி பாய்ச்சும். எண்ணையற்று கருகிப்
புகைந்தும் போகும்".

கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தடம் பதித்து விட்டவனா
இல்லை தடம் தொலைத்து விட்டவனா என்பது புரிபடுவதில்லை பல சமயம்.
எல்லாத்தடங்களையும் அழித்துவிட்டுக் காடு செழிக்க வேண்டும் மறுபடியும்.
நம்பித் தொடர்ந்த தடங்களெல்லாம் தப்பாக தெரிகின்றன தற்போது.

- முன்னுரையிலிருந்து-

புனைவுகள் கற்பனைகள் என்ற வடிவங்கள் என்றுமே எழுத்தாளனின் மிகையுணர்ச்சி
மற்றும் கற்பனைத்திறனை சார்ந்து எழுதப்படுவது. வாசகனை ஈர்க்க வேண்டும்
என்ற யுக்தியுடன் எழுதப்படுபவை யாவும் எவரும் திறமை வளர்த்து எழுதலாம்.
ஆனால் உண்மையை/நிகழ்வை/வலியை எந்த வித மிகையும் இல்லாமல் பதிவிக்க
சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில் நாஞ்சில் நாடனின் கதைகள் மிக
அபூர்வமானது.

சிறுகதைகள் சினிமா போல அல்ல. சினிமாவின் கதாநாயகர்கள் செய்யும் ஒரே
விதமான சாகசங்கள், காதல்கள், பாடல்கள் எதுவுமே இல்லாதது. எந்த
வித அலங்காரமுமில்லாது சம்பவத்தை பதிவித்தலே சிறுகதைகள். இப்போது
நிறைய சிறுகதைகள் வருகின்றன எல்லாவற்றையும் சிறுகதை என்று
ஒப்புக்கொள்ளமுடியாது. சினிமாவுக்கும் கதைக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் பாத்திரங்களோடு தன்னையோ, பிறரையோ இணைத்து பின் உள்வாங்குதல்.
உங்களால் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாத தருணத்தில் அந்த சிறுகதை/சினிமா உங்களை நெருங்காமலே சென்று விடும். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்கள்
சாகசங்கள் ஏதுமற்ற சாதாரண வாழ்வியல் மனிதர்கள். அதிகார/அலங்காரங்கள்
அற்ற பாத்திரங்கள் அவருடையது. பிராந்து என்றால் மனம்பிறழ்ந்த/பாதித்தவர்களை குறிப்பிடும் வார்த்தை. இச்சிறுகதைத் தொகுப்பின் ஒரு சிறுகதையாக பிராந்து
என்னும் சிறுகதையும் உண்டு. அதுவே இத்தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்கிறார். நாஞ்சிலின் தலைப்புகள் மீது எனக்கு தனி காதல் உண்டு உதாரணமாக


"என்பிலதனை வெயில் காயும்"
"எட்டுத்திக்கும் மதயானை"
"நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை"

"'நள்' என்று ஒலிக்கும் யாமம்"

எளிமையாகவும் அதே சமயம் வலிமையான அர்த்தம் கொண்ட தலைப்புகள். எட்டு
திக்கும் மதயானை தலைப்பிற்காக வெகுநாள் காத்திருந்தாராம். எதோ ஒருநாள்
அதிகாலை உறக்கத்தில் திடீரென்று உதயமானது என்று அவரே சிலாகித்திருக்கிறார்.

இதில் மனதை மிகவும் கலங்க வைத்த சிறுகதையாக "சாலப்பரிந்து" என்பதனை சொல்லலாம். படித்து முடித்த பின் சொல்லமுடியாத பாரம் வந்து தொற்றிக்
கொண்டது. எல்லாமே அனுபவத்திலும்/நேரிலும் கண்டதை எழுதும் நாஞ்சில்
சாலப்பரிந்து என்பதையும் எங்கோ கண்டு எழுதியிருந்தால் என்று தோன்றும்போதே
நெஞ்சை கனக்க செய்கிறது. கதையின் சுருக்கம் இதுதான் வயதான தாய் தனக்கும்
தன் குடும்பத்தினருக்கு உபயோகப் படாதபோது மகன், மருமகள் தன் மீது காட்டும்
உதாசீனம். ஒருகட்டத்திற்கு மேல் படுத்த படுக்கையாகி கிடக்கையில் இறந்து
விட்டாள் என்று கருதி ஊரெல்லாம் சொல்லப்போக அவள் இறவாமல் சீராக
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். "ஊரெல்லாம் செத்துட்டான்னு சொல்லியாச்சு
விடியறதுக்குள்ள மூச்சு அடங்கற மாதிரி தெரியல" பாத்ரூம்ல கொண்டு வச்சு
நாலு வாளி தண்ணி ஊத்துங்க சவம் அப்பவாச்சும் சாகுதான்னு பாக்கலாம்னு
மருமகள் சொல்கிறாள். மகனும் வேறு வழியின்றி காற்று போன பலூன் மாதிரி
இருக்கும் கிழவியை தூக்கி வந்து கழிவறையில் வைத்து தண்ணீர் ஊற்றுகிறான்.
"கிழவி சிரித்த மாதிரியே இறக்கிறாள்" இப்படி முடியும் கதையை யார்
படித்தாலும் அடுத்த பத்து நிமிடங்களுக்கு மனது அலைபாயும்.

வட்டார வழக்குகளில் மட்டும் எழுதி மொழியை சிதைப்பவர் என்ற குற்றச்சாட்டு
இவர் மீது உண்டு. அது மிகவும் தவறான குற்றச்சாட்டு வட்டார வழக்கிற்கும்
உருவம் உண்டு மொழியை சிதைப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கதையின்
தன்மைக்கு எது பொருந்துகிறது என்பதை படைப்பாளிதான் தேர்ந்தெடுக்கவேண்டும்
அந்த வகையில் தன் நிலைப்பாட்டின் மேல் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது.
இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் கூட சாதாரணமாக இருந்தாலும் அசாதாரண
தன்மை கொண்டவையாக இருக்கும்.

பேப்பர், பேனா, தபால் தலை, அஞ்சல் உறைக்கு கூட போதுமானதாக
இல்லாதவாறுதான் சிறுகதை படைப்பாளிக்கு சன்மானம் அளிக்கப்படும் சூழல்
நமது. உலகத்தரம் மிக்க படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில்
எத்தனையோ படைப்பாளிகளின் வாழ்க்கைத் தரம் இன்னமும் சிக்கலான
நிலையில்தான் இருக்கிறது. "நேர்காணல்" மற்றும் "காக்கைக்கு கூகை கூறியது"
போன்ற சிறுகதை எந்த மிகையுமில்லாமல் படைப்பட்டிருக்கிறது. நடப்பு
உலகத்தில் கூட உதாரணங்கள் கூறலாம் நல்லநாள் என்றில்லாமல் வேறு
எந்த நாளிலோ கூட நடிக,நடிகர்கள்,அரசியல்வாதி தவிர்த்து எந்த தொலைக்
காட்சியிலாவது எழுத்தாளனின் நேர்காணலை பார்த்திருக்கிறீர்களா? எந்த
எழுத்தாளனும் தொலைக்காட்சி நேர்காணலை எதிர்பார்த்து இல்லாவிட்டாலும்
குறைந்தபட்ச அங்கீகாரம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதுதான்
நேர்காணலின் கதை.

சில விஷயங்கள் மிகவும் சாதாரணமாகவும் சில நல்லெண்ண முயற்சிகள்
அபாயகரமான விளைவுகளையும் தரக்கூடும். பேருந்தை தவற விட்டு வருகையில்
சில திருடர்கள் தேங்காய் களவாடுவதை பார்க்கிறான். புகார் சொல்லபோனால்
கண்டும் காணாமல் இருக்க கடைசியில் திருடனே அவனை கூப்பிட்டு இளநீர்
வெட்டி தருகிறான்.

சாகித்ய அகாடமி விருதை புறந்தள்ளும் கும்பமுனி என்கிற எழுத்தாளரின் வேதனை.
இக்கதையில் வரும் எள்ளல் அசாத்தியமானது.

சுய மதிப்பீடுகளின் சாயம் இழந்த விட்ட மனிதர்களை காணச்சகியாமல் அரசு
வேலையை ராஜினாமா செய்த மந்திரமூர்த்திக்கு ஊர் வைத்த பெயர் "பிராந்து"

கதைகளின் ஊடாக இவர் தரும் நகைச்சுவை மிகுந்த சிரிப்பை வரவழைக்க கூடியது.
இவருக்கு மட்டுமே சாத்தியமான நுண்ணிய நகைச்சுவை உணர்வு. பொதுவாக
தென்பகுதி எழுத்தாளர்களின் படைப்புகளில் இவற்றை காணலாம். இவரின் பாதை
தனித்து தென்படும்.

வாலி, சுக்ரீவன், அங்கதன் வதைப்படலம் கதையில் கல்லூரியின் பாடத்திட்டதில்
உள்ள எழுத்தாளன் அப்பல்கலைக்கழகத்து உரையாற்ற அழைக்கப்படுகிறான். போக
வர ஆகும் செலவு அறுநூறு ஆனால் அங்கே சன்மானமாக தரப்படுவதோ கவரின்
உள் மடித்து வைத்த பத்து பத்து ரூபாய் நோட்டுகள். சம்பளமில்லாத விடுப்பில்
பயணம் சென்று வரும் சன்மானம் இதுதான். படைப்பாளியின் அனுமதியின்றி
பாடத்திட்டத்தில் சேர்த்த கதையை யாரோ ஒருவர் தெரியப்படுத்துவதன் மூலம்
தெரிந்துகொள்வது என இக்கதை தமிழ்ச்சுழலை நினைவுபடுத்துகிறது.

தொகுப்பில் உள்ள அனைத்து மிகத்தரமான சிறுகதைகள்.

விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 100
நன்றி Anyindian.com

8 comments:

சிறில் அலெக்ஸ் said...

நன்றி தம்பி.

பிராந்து மலையாளச் சொல் இல்லியா? பைத்தியம் என அர்த்தம்

manjoorraja said...

ஆழ்ந்த வாசிப்பு உங்கள் எழுத்துகளில் தெரிகிறது. நாஞ்சில் நாடன் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். பிராந்து தொகுப்பை விரவில் வாங்கி படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

நன்றி தம்பி.

கதிர் said...

சிறில்,
பதிவிலே மனம்பிறழ்ந்தவர்கள்னு போட்டிருக்கேன். ரெண்டுக்கும் அர்த்தம் வேறு இருக்காதுன்னு நினைக்கிறேன்.
நன்றி

கதிர் said...

வாங்க மஞ்சூர்

ஆழ்ந்த வாசிப்புலாம் இல்லிங்க. சும்மா மேலோட்டமா படிக்கறதுதான். நாஞ்சிலின் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் தொடர்ந்து அவரின் அத்தனை படைப்புகளையும் வாசிக்க தூண்டுகிறது.

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தம்பி, நீங்கள் தொடர்ந்து நாஞ்சில் நாடனை வாசிப்பதும் அவர் எழுத்துகளைப் பற்றி எழுதுவதும் மகிழ்ச்சியாயிருக்கிறது.

லக்ஷ்மி said...

நீங்க சொல்லியிருப்பது போல நாஞ்சிலோட தலைப்புகளே அருமைதான். அப்புறம் கும்பமுனி கதைகள் - இவரோட எல்லாத் தொகுதியிலும் ஒன்றிரண்டு கதைகள் இந்த கேரக்டரை வச்சு அமைஞ்சுடும் போல. 'சூடிய பூ சூடற்க' விலும் சில கும்பமுனி கதைகள் இருக்கு. கொஞ்சம் சுயசரிதைத் தனமான இந்தக் கதைகளில் இருக்கும் கசப்பேறிய எள்ளல் அழகா சித்தரிக்கப் பட்டிருக்கு - ரொம்ப புலம்பலாவும் இல்லாம அதே சமயம் வழவழ கொழகொழாவாவும் இல்லாம சமூகக் கோபத்தை சொல்றது இவருக்கு நல்லாவே கைவருது.

நல்ல விமர்சனம் - வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல்ல இன்னொரு புத்தகம் சேந்தாச்சு.

mani said...

we use commonly "Pirathu" words in our sides. it mean - "complain someone to another".
when i read the story understood same meaning.

It is nice book to have it for repeat reading, very interesting.
After "Asogamitran - Ootran", i read it many times. Really nice one.

சுரேகா.. said...

எல்லா புத்தகமும் படிச்சாச்சா..?

ஒவ்வொண்ணா...லைட் அடிங்க!

நல்லா இருக்கு