எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, January 21, 2008

நெகிழ்வுதரும் காட்சிகள், எழுத்துக்கள் மற்றும் ஒரு கவிதை

தனிமையின் வழி என்ற கட்டுரைத் தொகுப்பை அய்யனார் என்னிடம் கொடுக்கும்போதே
அருமையானது என்று சொல்லியே கொடுத்தார். வாங்கி இரண்டுமாதம் கழித்துதான்
அதை பிரித்து பார்க்க நேரம் வாய்த்தது. அவர் சொன்னதுக்கும் மேலாக இருந்தது.
இதை கட்டுரைத் தொகுப்பு என்று கூட சொல்லமுடியாது. தனியனின் வலி நிறைந்த
பயணம்தான் தனிமையின் வழி.

கதையைப் போல கற்பனையைப் போல எழுதிவிட முடியாதது தன்னைப் பற்றிய
குறிப்புகள். ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் முடிவுகள் மிக
நெகிழ்ச்சியாக இருந்ததை இதற்கு முன் எப்போதும் கண்டதில்லை. எந்த ஒரு
வார்த்தையைக் கொடுத்தாலும் அந்த வார்த்தையைக் கொண்டு அழகான நினைவலைகளை
கட்டிவிடுவார் என்று தோன்றுகிறது. நாம் எழுதும்போதுகூட சுவையானவை
என்று கருதுவதை மட்டுமே எழுதுகிறோம். (இந்த எண்ணம் எனக்கு எப்போதுமே
உண்டு)வாசிப்பவர் நம்மீது சிறிதளவு பிரமிப்பாவது அடைய வேண்டும் குறைந்த
பட்சம் கவனிக்கப்படவாவது வேண்டும் என்ற முனைப்பு தெரியும்.

நான் எழுதிய சில பதிவுகள் நெகிழ்ச்சியாக இருந்ததாக வாசித்தவர் சிலர் சொல்லி
இருக்கிறார்கள். அதை நேரடியான எழுத்தின் மூலம் நான் அடைந்தது இந்த
கட்டுரைத் தொகுப்பில்தான். சுந்தர ராமசாமி, மணிக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி
ஆகியவர்களுடன் தனது நட்பை விவரிக்கும் குறிப்புகளை படிக்கும்போது
அதிகாலைப் பொழுது. முனை மடித்து வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
வாசித்து முடிக்கும்போது குரல் உடைந்துவிட்டதைப் போல உணர்ந்தது.
உண்மைகளைப் பற்றி எழுதும்போது அவை உண்மையாக இருப்பதே அபூர்வம்.
குழம்பிய நிலையில் இருப்பதாக நினைக்கும்போது சுகுமாரனின் குறிப்புகள்
ஒன்றை படிக்க வேண்டும்.

நூல் பெயர்: தனிமையின் வழி
ஆசிரியர்: சுகுமாரன்

-------

ஒம்பது ரூபாய் நோட்டு படம் பார்க்க நேர்ந்தது. முதலில் தங்கர் மீது
எனக்கு பயங்கர கொலைவெறி இருந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.
அதை பழி தீர்க்கும் விதமாக சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், சிதம்பரத்தில்
அப்பாசாமி போன்ற படங்களை இன்னமும் பார்க்கவில்லை. சத்யராஜ் வாழ்க்கையில்
உருப்படியான இரண்டாவது படம் இது என சொல்ல வைக்க கூடிய கதை.
நாவல் வடிவத்தில் படிக்காது இருந்ததனால் இரண்டையும் ஒப்பிட்டு திருப்தியடையாத
மனநிலை என்பது இல்லவே இல்லை, தலைவர்களின் வரலாறோ, நாவலை
அடியொற்றி எடுக்கப்படும் படங்கள் மூலத்தை பிரதிபலிப்பதாக எவரும் சொல்லி
கேட்டதுமில்லை.

என்னைப்பொருத்த வரை தங்கரின் மேல் உள்ள கோபத்தின் அளவை வெகுவாக
குறைத்திருக்கிறது. அவரின் மற்ற படங்களை பார்ப்பதின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இறுதிக் காட்சிகளின் போது கமீலா, மாதவரய்யா மேல் காட்டும் வருத்தத்தை
மட்டும் வழக்கமான சினிமா விதிகளின் அடிப்படையில் அமைந்தது போல
ஒரு தோற்றம். படத்தின் இரண்டு காட்சிகள் மிகுந்த நெகிழ்வுகளை தந்தது.
நாசர் வீட்டுக்கு சத்யராஜ், அர்ச்சனா நிராதரவாக செல்லும் காட்சி மற்றும்
மாதவரய்யா இறந்த காட்சி. இவையிரண்டும் அடுத்த நெகிழ்வான காட்சிகள்
காணும் வரை மனதில் இருக்கும்.

நன்றி தங்கர்.

------------

என் மொழி புரியாத வெளி தேசத்தவர்களிடம் பேசுவதில் அலாதியான ஆசை
எப்போதுமே உண்டு. சொல்ல வருவதை நமக்கு புரிய வைப்பதில் அவர்களின்
முகத்தில் குழப்ப ரேகையுடன் கூடிய மெல்லிய பதைப்பு தெரியும். அவற்றில்
புதிய முகபாவங்கள் தென்படலாம். எனக்கும் இது பொருந்தும். அந்த வகையில்
நேற்று இரண்டு துருக்கியர்களை சந்தித்தேன். (இதுபோல சந்தித்தது பற்றி மட்டுமே
எழுதுவதாக சில விஷமிகள் பரப்புவதால் நீண்டநாள் கழித்து இப்போது எழுதுகிறேன்)
அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை, அரபியும் ஷோய ஷோய எனக்கு
எனக்கு அரபியும் சுத்தமாக வராது. ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனின் செய்தி
வாசிப்பது போல பேசிக்கொண்டிருந்தோம். துருக்கி நாட்டு பெண்கள் மிக
அழகானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை விளக்கிச் சொல்ல ஐந்து
நிமிடம் பிடித்தது.

உடனே சிடி பேக்கிலிருந்து விதவிதமான சிடிக்களை எடுத்து கொடுத்தார்கள்.
எல்லாமே பார்த்து சலித்தவை. எதாவது திரைப்படம் இருக்கிறதா என்று சோதிக்க
ஐந்து நிமிடம் செலவழித்து எடுத்தது ஒரு இராக்கிய படம். பெயர் தெரியவில்லை.
ஆங்கிலத்திலோ, அல்லது இராக்கிய மொழியிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்
துருக்கியில் டப்பிங் செய்திருந்தது. சப்டைட்டில் கூட இல்லை.



கதைக்களன் சதாமைத் தேடி அமெரிக்கப்படைகள் சுற்றும் மற்றும் அபு க்ரைப்
சிறையில் இராக்கியர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி பேசும் படம். படத்தில்
பெரும்பாலான இடங்களில் வசனங்கள் இல்லாதது வசதியாக இருந்தது.
முக்கியமான ராணுவ தளபதியை (பாண்டம் மம்மி படத்தில் நடித்த மாயாவிதான் இவர். இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் தமிழில்)போட்டுத்தள்ள மூவர் படை கிளம்புகிறது
ஒவ்வொரு முறையும் தப்புகிறார். முடிவில் ஒரு பெண்ணின் குறுவால் மூலம்
மரணம் அடைகிறார். அப்பெண் திருமணத்தின் போது நடந்த விருந்தில் புதுக்
கணவன் கொல்லப்படுகிறார்.

சுற்றிலும் வீடுகள் நடுவில் மைதானம் போன்ற இடத்தில் அனைவருக்கும் தேநீர்
கொடுக்கப்படுகிறது. மணப்பெண் உட்பட பெண்கள் வீட்டின் மேலிருந்து ஆண்கள்
நடனமாடுவதை பார்க்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியான இரவை அனுபவித்துக்
கொண்டிருக்கும்போது அமெரிக்க படைகள் வருகிறது. ஏதோ காரணம் சொல்லி
யாரையோ தேடுகிறது. நவீன ரக துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு வீரருக்கு அருகில்
சிறுவன் ஒருவன் அதிசயமாக துப்பாக்கியை பார்க்கிறான். விளையாட்டு சாதனம்
என்று நினைத்து குழலில் குச்சியை விடுகிறான். அந்த வீரன் கோபப்பட்டு சிறுவனை
ஒதுக்க மீண்டும் மீண்டும் குச்சியை விடுகிறான் சிறுவன். சலிப்படை வீரன்
மூன்றாவது முறை ஒதுக்கும்போது மூன்று குண்டுகளை வரிசையாக சிறுவனின்
இதயத்தில் செலுத்துகிறான். தொடர்ச்சியான இந்த காட்சியில் துப்பாக்கியிலிருந்து
குண்டு வெளியாவதை தவிர வேறு எந்த ஒலியும் இல்லை. கூட்டத்தில் சலசலப்பு
ஏற்படுகிறது. சிறுவனின் தந்தை பதைப்புடன் ஓட அவரையும் சுடுகிறார்கள்.
மாப்பிள்ளை கதறியபடி வர அவரையும் சுடுகிறார்கள். மணப்பெண் ஓடிவர
துப்பாக்கி முனையால் ஓர் அடி அவளும் மயக்கமாகிறாள். அப்பெண் அமெரிக்க
தளபதியை பழிவாங்க குறுவாளுடன் செல்லும் காட்சிகள் பரிதாபத்தை
வரவழைக்கிறது. அதே தளபதியை கொள்ள வரும் மூவருக்கு உதவி செய்கிறாள்.
கடைசியில் மரணமடைகிறார்.

இடையில் அபுகிரைப் சித்திரவதைகள், கைதிகளை நிர்வாணமாக்கி நாயை ஏவி
விடும் காட்சிகள், அமெரிக்க நிருபரை கடத்தி தலையை சீவ முயலும் தீவிரவாதிகள்
இடம் மதகுரு ஒருவர் மீட்டு நிருபரை அனுப்புவது(உண்மைச்சம்பவம்னு நினைவு)
ஊரையே காலி செய்யும் காட்சிகள் போன்றவை மனதைப் பிசைகிறது. இது எந்த
மொழிப்படம் என்பது தெரியவில்லை. தொழில்நுட்ப நேர்த்தியைப் பார்த்தால்
இராக், அல்லது துருக்கியர் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
இணையத்தில் தேடியதில் படத்தின் பெயர் kurtlar vadisi என தெரிந்து கொண்டேன்.

------

நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.
என் கற்பனை உலகம் மெய்யாகும்
தருணத்தில் முன் நிச்சயிக்கப்பட்ட
நிகழ்வுகள் நிகழலாம்.
என் கற்பனை உலகம் வெற்றிடம்
ஆகும்போது மனம் கவலை கொள்ளலாம்.
அக்கவலைகள் தீண்டாதிருக்கவே
மனம் கற்பனைகளை மீண்டும் மீண்டும்
புனைந்தும் ஏமாற்றியும் போகிறது,
எனினும் தேவதைகளுடனான கனவுகள்
மட்டுமே மிகுந்த கிளர்வுகளை
உண்டாக்குகிறது. அவை
தன் இயக்கத்தை நிறுத்தாமல்
பயணிக்கட்டும்.

----------

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்கிறேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு
முதல் பயணம். மகிழ்ச்சியாக உணர்கிறேன். சகோதரரின் திருமணத்திற்காக
அவசர பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவல். சந்திப்புகள்
இருந்தால் தெரியப்படுத்தவும். தொடர்பு கொள்ள 9944111050.

10 comments:

Anonymous said...

The making itself is not that great as most viewers have said. However, the action is entertaining enough. But I think what is more important is the subject of the movie. I'm glad that someone is finally has the gut to make a movie on the real injustice that committed by the America. It's amazing how many narrow minded people actually refuse to accept the truth about US army in Iraq. The massacre of civilian by US solder has already been reported by Time magazine and now the US defend department finally bowed to public pressure to investigate. Here's a report by US newspaper so no more arguments about the fact behind this movie. www.registerguard.com /news /2006 /05 /20 /a3.nat.iraqprobe.0520.p1.php?section=nation_world. (you need to remove the spaces in between to form a valid url)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் சுகுமாரனின் கவிதைகள் படித்திருக்கிறீர்களா.? முழுத் தொகுதி வந்திருக்கிறது. முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் சுகுமாரன். நல்ல மொழி பெயர்ப்பாளரும் கூட.

கோபிநாத் said...

\\நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.
என் கற்பனை உலகம் மெய்யாகும்
தருணத்தில் முன் நிச்சயிக்கப்பட்ட
நிகழ்வுகள் நிகழலாம்.
என் கற்பனை உலகம் வெற்றிடம்
ஆகும்போது மனம் கவலை கொள்ளலாம்.
அக்கவலைகள் தீண்டாதிருக்கவே
மனம் கற்பனைகளை மீண்டும் மீண்டும்
புனைந்தும் ஏமாற்றியும் போகிறது,
எனினும் தேவதைகளுடனான கனவுகள்
மட்டுமே மிகுந்த கிளர்வுகளை
உண்டாக்குகிறது. அவை
தன் இயக்கத்தை நிறுத்தாமல்
பயணிக்கட்டும்.\\

நல்லாயிருக்கு ராசா ;)

\\இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்கிறேன்.\\

என்ஜாய் பண்ணிட்டு வா ராசா ;)

Unknown said...

இந்தியா உன்னை வரவேற்கிறது தம்பி வருக... வருக....

பதிவு நல்லா இருந்துச்சி... இது போல உன் எண்ணங்களைத் தொடர்ந்து பதிவிடு...

Anonymous said...

நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.

pidithavai mattum alla niraiya paerin manathil thinam thinam nadakkum nigalvu

yaar enna sonnal enna. padippathil suvarashyam irukirathaa.
that's important.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

What a coincidence!

I just noticed sukumaranès book in uyirmai and made a mental note.

reg. the turkish movie - thankyou. will look for it. am searching for another turkish movie titled (in english) my father, my son. paarthittu sollunga padam paththi.

-Mathy

சுரேகா.. said...

தனிமையின் வழி.....ஒரு அற்புத, அனுபவக்கோர்வை...

தனிமையின் வலி - யாகவும் உணரலாம்.

நல்ல புரிதலும், எழுத்தும் உங்களுக்கு கைவந்திருக்கிறது...வாழ்த்துக்கள்.

தேவதை கனவுகள்
உங்களைத்தொடரட்டும்.

ஜி said...

:))) Naanum antha padaththa paaka muyarchi panren...

arumaiyaana kavithainu nenakiren...

India poyittu nalla nsoi pannittu vaanga

கதிர் said...

சுந்தர்,

மொழிபெயர்ப்பாளர் என்பதும் கவிதை எழுதுபவர் என்பதும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அவரின் ஒரு கவிதை கூட பதியவில்லை. தேடி வாங்க வேண்டும்.

நன்றி கோபி, தேவ், அனானி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தம்பி,

சுகுமாரன் பிரதானமாய்க் கவிஞர். நிறைய மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழி பெயர்த்துள்ளார்.

தமிழகம் வருவதாகச் சொல்லியிருந்தீர்கள். சென்னைக்கு வருவீர்களா.? இங்கே New Booklands என்று ஒரு புத்தகக் கடை இருக்கிறது தி.நகரில். என்னுடைய எண் 98845 71371. நேரமிருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். சில நல்ல புத்தகங்கள் வாங்கலாம்...