எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, December 07, 2007

குறிப்புகள்.

என் பிறந்தநாள் டிசம்பர் மாதத்தில் வருவதில் மிகப்பெரிய சங்கடம் அந்த மாதத்தில்
வீசும் கடும் குளிர். அம்மா சொல்வாங்க விடிகாலைல எந்திரிச்சு குளிச்சி முருகன்
கோவிலுக்கு போய் வான்னு. மிக பிரயத்தனப்பட்டு குளிக்க வேண்டிய நாட்கள்
இவை. என் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் என்னிக்குன்னு எனக்கு தெரியாது
ஆனா என்னோட பிறந்தநாளுக்கு எல்லாரும் கண்டிப்பா வாழ்த்து சொல்வாங்க
திருப்பிச் செலுத்தனும்னு தோணியதேயில்லை. மறதிதான் என்பதைத் தவிர
வேறெதுவும் காரணமில்லை.

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

*****************************

பிறந்தநாளை முன்னிட்டு அமீரக வாழ் மக்கள் அனைவருக்கும் விடுமுறை
அளிக்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக அமீரக தமிழ் மன்றத்தினர் நடத்திய
கலைநிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்தன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சேரன்
வந்திருந்தார். அபிஅப்பா, சுல்தான், முத்துக்குமரன் தவிர மற்ற அனைத்துப்
பதிவர்களும் வந்திருந்தனர். ஆனால் பேசமுடியாமல் போய் விட்டது.
நாங்கள் பேசாவிட்டால் என்ன எங்களுக்கெல்லாம் சேர்த்து ஆசிப் அண்ணாச்சி
நிறைய பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே அவர்தான். நாவில்
தமிழ் விளையாடுகிறது கூடவே நகைச்சுவையும். "இந்தாளு ரேடியோல
பேசிட்டு இருந்தவர்டா நல்லா பேசுவார் என்று பின்னால் இருந்தவர்கள்
பேசிக்கொண்டார்கள். ஆமாங்க அவர் ரொம்ப நல்லவர் என்று திரும்பி
அவர்களுக்கு பதில் சொன்னேன். (அண்ணாச்சி பேமண்ட் கரெக்டா வரணும்).

நிகழ்ச்சி வர்ணனை என்பது வெகு கவனமாக கையாளப்படவேண்டிய விஷயம்
அதைக் கூட அனாயசமாக கையாண்டார் அண்ணாச்சி. மன்றத்தின் மூத்த
தலைவர்கள் ஒரு குயர் பேப்பரில் எழுதி வைதிருந்ததை வாசிக்க நம்
அண்ணாச்சியோ வர்ணனையில் புதிய சாதனை படைத்தார் என்றே சொல்ல
வேண்டும் ஏனென்றால் நிகழ்ச்சி நிரல் முதல் கொண்டு மாறுதலுக்குள்ளான
நிகழ்ச்சிகள் வரை நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் வர்ணனை செய்து
கொண்டிருந்தார். சிலசமயம் திரைமறைவில் இருந்து கொண்டு குரல் மட்டும்
கம்பீரமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வந்து விட்டது. நிகழ்ச்சி 6 மணிக்கு
என்று சொல்லி அதே நேரத்தில் ஆரம்பித்ததை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
தாமதமாக வந்த மாமாக்கள், மாமிக்கள் பட்டுப்புடவை சரசரக்க வந்தார்கள்.
பத்திரிக்கையில் நிகழ்ச்சி நேரத்தை பார்த்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை
7.30 க்கும் 8.30 க்கும் ரெண்டு இன்ச் பவுடர் அடித்துக்கொண்டு நிறைய பேர்
உட்கார இடம் இல்லாமல் ஆரம்பத்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பி விட்டு
தாங்கள் உட்கார்ந்து கொண்டார்கள். சினிமாவுக்குன்னா சீக்கிரமா போறாங்க,
இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் தாமதமா வர்றாங்கன்னு தெரில. சீரியல்னா
கரெக்ட் டைமுக்கு குந்த வச்சி பாக்க தெரியற மக்களுக்கு ஏன் இது புரியலன்னு
தெரில. இந்தியாவிலருந்து வந்த சேரன் சீக்கிரமா வந்துட்டார். உள்ளூர்ல இருந்து
வர்றவங்களுக்கு என்ன பிரச்சினையோ தெரில.

**நேத்து ஒரு பேப்பர் துண்டு பாத்தேன் எதோ ஒரு மாவட்டத்தின் பகுதி
ஒன்றில் தினசரி இரவு 10 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறிது நேரம்
கழித்து திரும்பவும் இணைப்பு கொடுக்கிறார்களாம். இது போன்ற தினசரி
துண்டிப்பால் சீரியல்கள் பார்க்க சிரமம் இருப்பதாக பெண்கள் எல்லாம் அணி
திரண்டு மின்சார அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு
கொடுத்தார்களாம். வாழ்க வளர்க.

அரங்கம் சின்ன அரங்கம் அடுத்தமுறை இதை விட சிறப்பாக இருக்கும் என்று
எதிர்பார்க்கலாம். வழக்கம்போல சேரன் மனதில் பதியும் விதமாக பேசினார்.
விரைவில் அமீரகவாழ் மக்களின் துயர் கதையை திரைப்படமாக எடுக்கப்போவதாக
சொன்னார் அதற்கு தொழில்முறை நடிகர்களை நடிக்க வைக்காமல் இங்கிருந்தே
தேர்வு செய்யப்போகிறாராம். அவரின் லட்சியப்படம் என்று கூட சொன்னார்.

தமிழ்நாட்டுல இருந்து வர்ற நான் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசறேன். ஆனா
நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் நண்பர் ஆசிப் தூய தமிழில் பேசி என்னை
வெட்கப்படவைக்கிறார். குற்றவுணர்ச்சியா இருக்கு எனக்கு என்று சேரன் பகிரங்கமாக
பாராட்டினார். அண்ணாச்சி அவர்கள் பேசுவதை விட நன்றாக பாடுவார் என்பது
ஏனோ சேரனுக்கு தெரியவில்லை. தெரியவில்லையா அல்லது தெரிவிக்காமல்
மறைத்து சதி செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. :) நல்லவேளை
அவர் பாடாமல் எங்கள் வயிற்றில் வடை வார்த்தார்.

விழாமலரின் அட்டைப்படம் வடிவமைக்க நம் குசும்பர் சரவணரிடம் உதவி
கேட்டு இருந்தார்களாம். என்ன கொடும சரவணர் இது???

குழந்தைகள் அச்சுப்பிச்சுன்னு ஆடினாலும் அழகாதான் இருக்கும். நிகழ்ச்சியில்
ஆடிய சிறுமிகள் மிகவும் கவர்ந்தார்கள்.

சிறப்பாக நடந்த நிகழ்ச்சி. அடுத்த விழாவில ஆசிப் தமிழுக்கு இன்னும் சில
ரசிகர்கள் கூடியிருப்பார்கள். (ஆசிப், இதுக்காகவாச்சும்...)

*****************************

கடந்த வாரத்தின் மந்தமான மாலையொன்றை பரபரப்பூட்ட போன்பூத் படத்தை
எத்தனையாவது முறை பார்த்தேன் என்று தெரியவில்லை, பார்த்தேன். எத்தனை
முறை பார்த்தாலும் சலிப்பை தராத படம். காலின் பெரல் நடிப்பு அற்புதமாக
இருக்கும். அந்த படம் முடிந்த பிறகு சற்று பரபரப்பாக உணர்ந்தேன். மீள
புத்தகம் படிக்கலாம் என்று யூமா வாசுகியின் மஞ்சல் வெயிலை கையில்
எடுத்தேன்.

தன் காதலிக்கு எழுதும் கடிதமாக கதை ஆரம்பமாகிறது இந்தக்கதையில் வரும்
கதாநாயகன் கதிரவனுக்கு முன்னால் இதயம் முரளி எல்லாம் துகளுக்கும் கீழ்.
அந்தளவுக்கு மென்மையான ஓவியர். தாழ்வு மனப்பான்மையுள்ள, கோழை,
பெண்களிடம் பேசுவதி தயக்கமுள்ள, வறுமையில் தவிக்கும் ஒரு சாதாரண
பத்திரிக்கை ஓவியன். தன் காதலியிடம் காதலை தெரிவிக்கவே இந்த
கடிதம் ஆனால் காதலிக்கல்ல. தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல.
யூமா வாசுகியின் எழுத்து நடை பிரமிப்பான தனித்துவம் கொண்டது என்பதை
வாசிக்க ஆரம்பித்த உடனே புரிந்து கொண்டேன். தன் காதலியை பற்றிய
வர்ணனையாகவும் சந்தித்த வேளை இவற்றை விளக்கவே கிட்டத்தட்ட 80
பக்கங்கள் எழுதியிருக்கிறார். பத்தி பிரிக்காத பக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிக்க வாசிக்க நாம் கதிரவனுடன் இருப்பது போன்ற உணர்வு. அத்தனை
மென்மையான நாயகன் சில இடங்களின் "இவன் சொல்லுவானா சொல்றதுக்குள்ள
செத்துடுவானா" என்ற எரிச்சலை கிளப்பினாலும். ஒரு கதை கடிதமாக
எழுதப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.

யூமா வாசுகியின் நடையில் உள்ள தனித்துவம் மிக சுலபமாக முதல் வாசிப்பிலேயே
கண்டுபிடிக்கலாம் அதுதான் கண நிகழ்வை இம்மி பிசகாமல் பதிவிக்கும் நடை.
மேம்போக்காக சம்பவங்கள் நடந்தன என்று சொல்லி கதை நகர்த்தாமல் நம் கை
பிடித்து நேராக கொண்டு செல்வது போன்றது. அதேபோல கதையின் இடையில்
வரும் ஓரிரு பாத்திரங்களும் மிக நல்லவர்கள் வாட்ச்மேன், நண்பர்கள். குறிப்பாக
பக்கத்து வீட்டு குழந்தைகள். மிக முக்கியமாக கான் முகம்மது சென்னைபோன்ற
நெருக்கடி நகரத்தில் ஏரியாவுக்கொரு கான் முகம்மதுவை காணலாம். இந்த
கான் முகம்மது பாத்திரத்தை நகல் செய்துதான் மொழி படத்தில் பாஸ்கர் செய்த
பாத்திரம் அச்சு அசலாக இந்தகதையிலும் வருகிறது சிறிய மாற்றங்களுடன்.
ராதாமோகன் இந்த நூலை வாசித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது நகல் செய்வதில்
எந்த தவறும் இல்லை அதை ஒழுங்காக செய்யவேண்டும். மூலத்தை சிதைக்காமல்
திரையில் கொண்டு வந்ததால் ராதாமோகனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

புத்தகங்களில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் அப்படியே படத்திலும்
காப்பி அடிப்பது வழக்கம்தான் ஆனால் சில எதேச்சையாக நடந்ததும் உண்டும்.
புயலிலே ஒரு தோணி நாவலின் நாயகன் பாண்டியன் ஜப்பானியர் வசம் சிக்கிய
டச்சுப்படை தளபதிக்கு உதவி செய்வார். உலகப்போர் நடைபெற்ற சமயம்
டச்சுப்படை வசம் இருந்த இந்தோனேசியா ஜப்பானியர் வசம் வந்தபோது
டச்சுக்கதிகளை மணல் அள்ளும் வேலைக்கு எடுத்துச்செல்வர் அப்போது பரிதாபமாக
காட்சி அளிக்கும் அவருக்கு உதவி செய்வார். கதையின் கடைசியில் பாண்டியன்
இக்கட்டான மரண சூழ்நிலையில் இருக்கும்போது டச்சுத்தளபதியின் மகன்
பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வருவார். இதேபோன்ற காட்சி தி பியானிஸ்ட்
படத்தில் சற்று மாறுதல்களுடன் வரும். பு.தோணி உலகப்போர் முடிந்த சமயம்
எழுதப்பட்டது. பியானிஸ்ட் படம் சமிபத்தில் எடுக்கப்பட்டது. இரண்டுமே
உலகப்போரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதுடன் சம்பவத்தின் கரு
ஒன்றேதான். கதையிலும் சரி காட்சியிலும் சரி நெகிழ வைக்கும் விதமாக
இருக்கும்.

**********************

நிகழ்ச்சி முடிந்து அய்யனாரும் நானும் பிற நண்பர்களும் காரில் வந்து கொண்டிருந்த
போது துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் நடக்க போவத்ற்கான அறிகுறிகள் அங்கங்கே
தென்பட்டன. வண்ண விளக்குகள் தோரணங்கள், ஹோர்டிங்குகள் எல்லாம். இந்த
ஒரு மாதம் துபாய் களைகட்டும். இந்த மாதிரி விழாக்காலங்களில் எல்லாம் நம்
ஊர் போல இரட்டிப்பு சம்பளம் போனஸ் என்று எந்த எழவுமே இல்லாமல்
பொருள் வாங்க விழா எடுப்பது முட்டாள்தனமானது. என்ன மாதிரி ஆளெல்லாம்
எங்கருந்து வாங்கறது? என்று கேட்டேன்.

"அதுக்குதான் க்ரெடிட் கார்டு கொடுத்துருக்கானுங்கல்ல தேய்க்க வேண்டியதுதான"
என்று நண்பர் சொன்னார்.

என்னய்யா சுத்த விவரமில்லாதவனா பேசற! பின்னால அதுக்கும் நாந்தான
பணம் கொடுக்கணும் நான் சொல்ல வர்றது போனஸ். அதுவுமில்லாமல் இந்த ஊர்ல
க்ரெடிட் கார்டு தேய்ச்சோம்னோ நீ தேய்ஞ்சு கட்டெறும்பாக்கிதான் ஊருக்கு
அனுப்புவானுங்க. இந்த மாதிரி தேய்ச்சு வட்டி கட்டமுடியாம அசலும் கட்ட
முடியாம நிறைய பேரை பாத்திருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரணும்னா
நம்ம கலைஞர இங்க கொண்டு வந்து அஞ்சு வருசம் உக்காத்தி வச்சம்னா
கடனை வட்டியோட தள்ளுபடி செய்ய ஆவண சட்டங்கள போடுவாருல்ல என்ற
அருமையான ஐடியாவை கொடுத்தேன். அப்படியே கலைநிகழ்ச்சிகளும் பேரரசு
போன்ற இயக்குனர்களுக்கு சிறந்த திரைக்கதாசிரியர் விருது போன்றவற்றை
கண்குளிர பார்த்துக்கொண்டிருக்கலாம். கூடவே நமீதா ஆட்டமும் போனசாக!!

*****************

பதிவு பெருசாகிட்டே போகுது அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

15 comments:

குசும்பன் said...

(ஆசிப், இதுக்காகவாச்சும்...)

ஒரு லிட்டர் பசும் பால் பாட்டில் வாங்கி கொடுங்க அண்ணாச்சி , பாவம் தம்பி வேற உடம்பு சரி இல்லாம இருக்கான். சரியா!!!!

கதிர் said...

லெய் சரவணரு!
நாங்கலாம் அப்பவே காட்ட வித்து கள்ளு குடிச்ச ஆளுங்க. எங்களுக்கு பாலா?

கோபிநாத் said...

சரி அடுத்து..

தாசன் said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

சுரேகா.. said...

//நாங்கலாம் அப்பவே காட்ட வித்து கள்ளு குடிச்ச ஆளுங்க. எங்களுக்கு பாலா?//

அப்ப அடுத்தவாட்டி வித்து குடிக்க காடு..?

நல்லா எழுதுறீங்க..கலக்குங்க..

Anonymous said...

ஏன்யா உனக்கு யாரும் கமெண்ட் போட மாட்டறாங்க?

கதிர் said...

//சரி அடுத்து..//

ம்.. அடுத்து நீதாண்டா பதிவு போடணும்.

கதிர் said...

//வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.//

என்ன பண்றது இப்போதைக்கு நிறுத்தறதா யோசனை இல்ல. :)

உங்க பேர லைட்டா சுருக்கி தாஸ் னு கூப்பிடலாமா! :)

கதிர் said...

//வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.//
நாளைய பிரபலமே வாழ்த்து சொல்லுது. :)
என்னையும் உங்க குருப்புல சேத்துக்குங்க சார்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்தநாள் வந்ததா ? வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.

கதிர் said...

//ஏன்யா உனக்கு யாரும் கமெண்ட் போட மாட்டறாங்க?//

கேப்பய்யா கேப்ப, உனக்கு இருக்கா மாதிரி கோடானுகோடி ரசிகர்கள் உலகம் பூரா எனக்கு இல்லல்ல நீ இதையும் கேப்ப இதுக்கும் மேலயும் கேப்ப!

அதுக்கெல்லாம் அங்கங்க போய் மொய் வைக்கணும்யா! :) அதுவுமில்லாம கமெண்டுக்கோசரம் எழுதறவன் இல்ல இந்த தம்பி. ஆத்ம திருப்திக்கோசரம் எழுதறவன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் யூமா வாசுகியும் ஒருவர். அவரது மஞ்சள் வெயில் என்னைக் கவர்ந்த ஆக்கம். அவரது கவிதைகள் கூட நன்றாக இருக்கும் (ஒரு சிறு பத்திரிகையும் நடத்தியிருக்கிறார் - குதிரைவீரன் பயணம் - என்று ஞாபகம்). நல்ல ஓவியரும் கூட.

பன்முகப் பரிமாணம் கொண்டவர் யூமா வாசுகி.

கதிர் said...

//பிறந்தநாள் வந்ததா ? வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.//


வந்தாச்சு போயாச்சு.
வாழ்த்துக்கு நன்றிங்க முத்துலட்சுமி.

கதிர் said...

//எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் யூமா வாசுகியும் ஒருவர். அவரது மஞ்சள் வெயில் என்னைக் கவர்ந்த ஆக்கம். அவரது கவிதைகள் கூட நன்றாக இருக்கும் (ஒரு சிறு பத்திரிகையும் நடத்தியிருக்கிறார் - குதிரைவீரன் பயணம் - என்று ஞாபகம்). நல்ல ஓவியரும் கூட.//

நீங்கள் சொல்வதை பார்த்தால் அவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதை போலவே இக்கதை எழுதியிருக்கிறார் போல! ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்த அவதானிப்புடன் வருணிக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. அவருடைய மற்ற கவிதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

//பன்முகப் பரிமாணம் கொண்டவர் யூமா வாசுகி.//

சரியான வார்த்தை.

வீரமணி said...

வணக்கம் தம்பி, தங்களின் எழுத்துகள் அத்தனையும் இன்றுதான் படித்தேன் நன்றாக இருந்தது.. வாழ்த்துக்கள். தொடர்ந்து பேசலாம்.

அன்புடன்
வீரமணி