எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, November 24, 2007

சூர்யா, முருகதாஸ், அனு மற்றும் நான்.

அனுஹாசனை மிகவும் பிடித்து விட்டதால் காபி வித் அனு நிகழ்ச்சியை ஒன்று
விடாமல் தரவிறக்கம் செய்து பார்த்து விடுவது. இந்த வாரம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக
சூர்யாவும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் வந்திருந்தார்கள். எங்கள் ஊர்க்காரரான
முருகதாஸ் என்ன பேச போகிறார் எப்படி பேச போகிறார் என்ற ஆர்வம்.
ஆனால் கொஞ்சமாக பேசினார் நிகழ்ச்சி முழுக்க சூர்யாவே பேசினார். பொதுவாக தொலைக்காட்சி பேட்டிகளில் கழுத்தை சொறிந்து, முடியை கோதிவிட்டு பார்ப்பவர்களை எரிச்சலூட்டும் நடிக, நடிகையர் மத்தியில் சூர்யா ரொம்ப அமைதியாக கேள்விகளுக்கு கோர்வையாகவும் கலகலப்பாகவும் பேசினார். அனுவிடம் பேசினாலே எல்லாரும்
மிகவும் சந்தோஷமாக பேசுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டு. முன்பே
சொன்னது போல அந்த தோழமையான அணுகுமுறை காரணமாக இருக்கலாம்.

பேட்டியின் இடையில் கார்த்திக்குடனான சிறுவயது சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
சின்ன வயசில அவனை போட்டு அடிச்சிகிட்டே இருப்பேன். ராத்திரில வேஷம்
போட்டுகிட்டு அவனை பயமுறுத்துவேன். அவனும் பயந்திடுவான். அவனை அடிக்காத
நாளே இருக்காது. ஒருமுறை அவன் அமெரிக்கா போனபோதுதான் அவனில்லாத
மாதிரி பீல் பண்ணேன். அப்ப யோசிச்சு பாத்தபோது ஒரு அண்ணனா உனக்கு
ஒண்ணுமே பண்ணதில்ல. உன்ன தட்டி தட்டி வச்சிட்டேன். ஒரு கான்பிடண்ட்
இல்லாம பண்ணிட்டனேன்னு பீல் பண்ணி ஒரு மெயில் அனுப்பினதாகவும். உடனே
தம்பி கார்த்தி அண்ணன்னா அப்படிதான் இருக்கணும், உன்ன மாதிரி ஆவனும்னுதான்
எனக்கு ரொம்ப ஆசை. நிறைய விஷயங்கள்ல உன்னதான் பாலோ பண்ணுவேன்.
உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்னேன்னு பதில அனுப்ப ஒரே செண்டிமெண்டா
ஆகிட்டாரு.

அப்பதான் நம்ம அனு முக்கியமான விஷயத்த சொன்னாங்க. நம்ம குடும்பங்கள்ல
சகோதர சகோதரிகளிடம் ஒரு இணக்கமான சூழ்நிலை இல்லவே இல்லை. சின்ன
சின்ன விஷயத்துக்கு பாராட்டற குணம் கிடையாது. தம்பிகள எப்பவுமே எதிரியாக
பார்க்கிற குணம் இந்த மாதிரியே வளர்ந்துட்டோம்னு. அப்ப யோசிச்சி பாக்காமலே
அனு சொன்னது சத்தியமான உண்மைன்னு எனக்கும் விளங்குச்சு. ஏன்னா சின்ன
வயசில நானும் அப்படிதான்.

நீங்களும் பார்த்திருப்பிங்க பேப்பர்ல வரப்பு தகராருல அண்ணன் தம்பி
சண்டைலருந்து இப்ப அம்பானி சகோதரர்கள் சண்டை வரைக்கும். அப்படியே
நானும் என்னோட பால்ய வயசுக்கு போய் யோசிச்சு பாத்தேன். ரொம்ப
கேவலமா என்னோட சொந்த அண்ணன் தம்பிகுள்ளயே கொலவெறில
சண்டை போட்டுருக்கேன்.

எனக்கும் என்னோட தம்பிக்கும் சண்டை வராத நாளே இருக்காது. நான் ஒரு
தெருல விளையாடியா அவன் அடுத்த தெருவிலதான் விளையாடனும். வீட்டுல
கொடுக்கற தீனில என்னை விட அளவுல கொஞ்சம் கம்மியாச்சின்னா அதுக்கும்
சண்டை. ஒருமுறை கோலிகுண்டு விளையாடும்போது ஒரு பிரச்சினை. விளாடிட்டு
இருக்கும் போது பேந்தால இருந்த குண்டையெல்லாம் தூக்கி முள்ளுத்தோப்புல
வீசீட்டு ஓடிட்டான். வந்த கொலவெறில ஒரு கல்ல எடுத்து அடிச்சேன் அவனை
பார்த்து என் கெட்ட நேரம் நேரா மண்டைல அடிச்சது, அடிச்ச வேகத்துல மண்டை
ஓட்டையே போட்டுகிச்சு சொம்புல ஊத்தற அளவுக்கு ரத்தம் தெருவெல்லாம்.
சும்மாவே ஓவர் சீன் விடுவான் ரத்தத்த பாத்தவுடனே அய்யோ அம்மான்னு
அலறிட்டான். எனக்கு டவுசர் கிழிஞ்சிடுச்சி ஆஹா இன்னிக்கு மாட்டிகிட்டம்டா
சாமி. அங்கருந்து எஸ்கேப் ஆகிட்டேன். அவன நாலஞ்சு பேர் ஆஸ்பத்திரி
தூக்கிட்டு போய் மண்டைல ரெண்டு மூணு தையல் போட்டுகிட்டு வந்தாங்க.

வீட்டுக்கு போனா பொதுமாத்து விழும்னு எனக்கு தெரியும், போகவும் தைரியம்
இல்ல, ராத்திரி வரைக்கும் போகவேயில்ல. பத்து மணிக்கு மேல தூக்கம், குளிர்னு
மாறி மாறி இம்சை பண்ண மெதுவா வீட்டுக்கு போனேன். எங்கப்பா எனக்காக
வாசல்லயே காத்திருக்கார். பக்கத்துலயே தலைல மப்ளர் கட்டின மாதிரி வெள்ளையா
கட்டு. என்னை பாத்தவுடனே தம்பி அழுவ ஆரம்பிச்சிட்டான். எங்க வீட்டுக்கு
முன்னாடி ஒரு நொனா மரம் இருந்துச்சு அதுக்கு பின்னாடி நின்னுகிட்டே
இருந்தேன். ஏண்டா அடிச்ச எதுக்கு அடிச்சேன்னுலாம் கேக்கல். வாசல்லயே
முட்டி போட வச்சிட்டு கதவ சாத்திகிட்டார் அப்பா. ரெண்டு நாளுக்கு அவனுக்கு
சாப்பாடு போடாதன்னு அம்மாகிட்ட சொல்லிட்டார்.

தம்பிக்கு ஏகப்பட்ட மரியாதை, பாலுதான் பழம்தான் என்னை வெறுப்பேத்திகிட்டே
சாப்பிடுவார். அப்பப்ப கிச்சனுக்கு போய் திருட்டுதனமா பொட்டுகடல தேங்காயும்
எடுத்து சாப்பிட்டுக்கறது. இந்தமாதிரி எப்பவுமே அவனை அடிச்சி அடக்கி
வைக்கறதே என்னோட வேலை. ஆத்துக்கு குளிக்க போனா தண்ணிக்குள்ள
புடிச்சி அமுக்கறது, டவுசர தூக்கி ஆத்துல போடறது, கிணத்துக்கு குளிக்க
போனா அங்கயும் அவனுக்கு ஆப்பு வைக்கிறதுன்னு அவனுக்கும் எனக்கும்
ஆகவே ஆகாது.

ராத்திரி சாப்பிட்ட உடனே அப்பா ஒரு தம் அடிப்பார். அப்ப வெளித்திண்ணைல
இருந்து ஒரு சத்தம் கேட்கும். "டேய் தீப்பெட்டி எடுத்துகிட்டு வாடா"ன்னு. சடார்னு
ஓடிப்போய் தீப்பெட்டி எடுத்துகிட்டு ஓடிப்போய் குடுப்பேன். தம்பியும் தேடி
எடுத்துகிட்டு வருவான். நான் முந்திகிட்டேன்னா அவ்ளோதான் அப்பாவ
சிகரெட் பத்த வைக்கவே விட மாட்டான். நான் குடுத்த தீப்பெட்டிய அப்பாகிட்டருந்து
பிடுங்கி வீட்டுக்குள்ள ஓடி நான் எடுத்த இடத்துலயே அத திரும்ப வச்சி மறுபடியும்
எடுத்துகிட்டு வந்து கொடுப்பான். அதாவது அவர்தான் அந்த வேலைய செஞ்ச
மாதிரி இருக்கணுமாம். நான் வளர்ந்து சிகரெட்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சதும்
வீட்டுக்குள்ள சிகரெட் பிடிக்கறது, என்னைய கடைக்கி அனுப்பறது எல்லாத்தையும்
நிறுத்திட்டார். அவரோட கண்ணியமா இருந்தாலும் அதனால எனக்கு ரொம்ப
வருத்தம்.

நான், தம்பி, அண்ணன், அக்கா எல்லாரும் ஒரே பள்ளியில படிச்சதால அங்க
என்ன நடந்தாலும் உடனே வீட்டுல போட்டுகுடுத்துடுவான் தம்பி. உடனே வீட்டுல
பரேடு நடக்கும். ஒருநாள் ஸ்கூல் லேட்டாயிடுச்சி எங்கண்ணன் சைக்கிள்ல
போனாரு, என்னையும் கூட்டிகிட்டு போன்னா ரொம்ப லேட் ஆயிடுச்சின்னு
சொன்னேன். நடுந்து வாடான்னு சொல்லிட்டு போயிட்டாரு. அப்ப நான்
ஏழாவது அண்ணன் ப்ளஸ் டூ. ஸ்கூல ரீச் ஆகற நேரத்துல ப்ரேயர் முடிஞ்சி
பீ.டீ வாத்தியார் தடியோட வெளில லேட்டா வந்த பசங்கள அடிக்க ரெடியா
நின்னுட்டு இருக்கார். அவருக்கு பசங்கள அடிக்கறத தவிர வேற எதுவும்
தெரியாது. ரெண்டு கைலயும் நாலு அடி. பிஞ்சு கை கன்னி போச்சு. தூரத்துல
எங்கண்ணன் சைக்கிள்ல நாலுபேரோட சிரிச்சிகிட்டே போகுது. எனக்கு
கோவம் கோவமா வந்துச்சு அண்ணன் மேல. அதுலருந்து ஒரு நாலு வருஷம்
பக்கமா ஒரே வீட்டுல இருந்தும் எங்கண்ணன் கூட பேசவேல்ல. முகத்தை
பாக்ககூட இல்ல. என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல முக்கியமானது
ஒருத்தர பிடிக்கலன்னா சாகற வரைக்கும் அவங்க கூட பேசவே கூடாதுன்னு
முடிவு பண்ணிடுவேன். என்னோட அக்கா கூடயும் பேசாம ரெண்டு வருசம்
இருந்திருக்கேன்.

சாயந்திரம் ஆறுமணில இருந்து ஒம்பது மணிவரையும் எல்லாரும் வீட்டுல
கட்டாயமா படிக்கணும். அந்த நேரத்துல டீவிய போட்டு பாத்தோம்னா
யாராவது ஒருத்தர் அப்பாகிட்ட போட்டு கொடுத்துட்டாங்கன்னா ஒருவேளை
சாப்பாடு கட் ஆகிடும். ஒருமுறை அக்கா போட்டுகொடுத்துட்டதால வெறில
கூரான காம்பஸ்ல கோழி இறகு கட்டி மரத்துல குத்தி விளையாடறதுக்காக
வச்சிருந்தத காம்பசை அக்கா மேல வீசினேன் (5000 விளம்பரம்). கால்ல குத்தி
கொட கொடன்னு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அப்ப தண்டனையா ரெண்டு
கைலயும் ரெண்டு செங்கல்ல வச்சி வெளில முட்டி போட வச்சிட்டாங்க. இந்த
மாதிரி தண்டனை நான் வாங்கும்போது தம்பிதான் சூபர்வைசிங் பண்ணுவான்.
சும்மா சொல்லக்கூடாது கொஞ்சம் ஆடுச்சின்னாலும் "அப்பா கல்ல கீழ
போட்டுட்டான்பான்னு அலறுவான். உடனே அப்பா வெளில வந்து ஒழுங்கா முட்டி போடறானான்னு
பாக்க வந்திடுவார்.

வீட்டுல அண்ணன தவிர யாரும் யாரையும் மரியாதையா கூப்பிடறதுல்ல.
ஸ்கூல்ல அக்கா ப்ரெண்சோட உக்காந்துட்டு இருக்கும்போது பேர சொல்லி
கூப்பிடுவேன். அவங்களுக்கு அது அவமானமா போயி புகார் பண்ணிட்டாங்க.
ஒருநாள் எல்லாத்தையும் அசெம்பிள் பண்ண சொல்லி. இனிமே நீ அக்காவ
பேர் சொல்லி கூப்பிட கூடாது, அக்கான்னுதான் கூப்பிடணும். என் தம்பிய
பார்த்து இனிமே நீ கதிரவனையும் அண்ணான்னுதான் கூப்பிடணும்னு சட்டம்
போட்டாங்க. அதுலருந்து ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கறதையே குறைக்க
ஆரம்பிச்சாச்சி. இதுவரைக்கும் நானும் அக்காவ அக்கான்னு கூப்பிட்டதில்ல
தம்பியும் என்னை அண்ணன்னு கூப்பிட்டதில்ல.

இதெல்லாம் சின்ன வயசுல மட்டும்தான் வளர வளர பாசம் அதிகமாகிடுச்சி.
அதுகூட ஒரு பிரிவுல வந்ததுதான். ஒரு முழுப்பரிட்சை விடுமுறைல என்னை
சென்னைல இருக்கற மாமா வீட்டுல கொண்டு போய் விட்டாங்க. முழுசா
பத்தே பத்து நாள்ல என்னை வீட்டுல கொண்டு போய் விடுங்க மாமான்னு
ஓன்னு அழுதிட்டேன். என்னால தம்பி, அக்கா, நண்பர்கள், வீடு, அம்மா
யாரையும் பிரிஞ்சி இருக்க முடில. என்னடா பையன் நீன்னு மாமாவும்
வீட்டுல கொண்டு வந்து விட்டார். பத்து நாளுக்கப்புறம் வீட்டையும்
எல்லாரையும் பாத்ததுல வாசல்ல நின்னுட்டே அழுதுட்டேன். ஓடிப்போய்
அம்மாகிட்ட உக்காந்து அழுதுகிட்டே நான் இனிமேல் எங்கயும் போக
மாட்டேன்னு விசும்பிகிட்டே சொல்றேன். அப்பதான் வீட்டுல இருந்த
எல்லார் மேலயும் பாசம் அதிகமாச்சு. தம்பி தோள்மேல கைபோட்டுகிட்டே
கிரிக்கெட் விளையாட போனேன். அந்த வயசுல பத்துநாள் பிரிவு என்னால
தாங்கிக்க முடியாத ஓண்ணா இருந்துச்சு.

இதுவே வயசு ஆக ஆக எல்லாமே மாறிடுச்சி. சண்டை போட நேரமில்ல
இப்ப சின்ன வயசுல சண்டை போட்டதெல்லாம் நினைச்சு பார்த்தா ரொம்ப
கேவலமாவும் சிரிப்பாவும் இருக்கு.

கொஞ்சம் ஓவரா கொசுவத்தி சுத்திட்டேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டில
மட்டும் அந்த வயசுல நான் பார்த்த என்னோட நண்பர்கள் வீட்டுலயும்
தினமும் இதே சண்டைங்கதான். ஏன் இந்த மாதிரி யோசிச்சா பெற்றோர்கள்
சரியா பாசத்தை ஊட்டி வளர்க்கறதில்லயா? கடைக்குட்டி மேல ரொம்ப
பாசம் காட்டறதுனால வர்ற கோபமா, அல்லது தனக்கு வீட்டுல அதிக
முக்கியத்துவம் கொடுக்கறதினால வர்றதா இருக்குமான்னு யோசிச்சு
பார்த்தா ஒண்ணுமே புரியலை.

எது எப்படியோ இனி வளரும் தலைமுறையாச்சும் அதிக பாசத்தோட
சண்டை போடாமல். தம்பி, தங்கச்சிகளுக்கு அண்ணன் அக்காக்கள்
ஒரு வழிகாட்டி மாதிரி வளர்ற சூழ்நிலை வரணும்.

ஒரு பத்து பதிவுக்கு ஒரு கொசுவத்தி சுத்திக்கறனே. நானும் சுத்தி
ரொம்ப நாள் ஆச்சு. அதான் கொலவெறில சுத்திட்டேன். நீங்களும்
உங்க தம்பி, தங்கச்சி, அண்ணன்கள்ல காட்டுன வீர தீர பராக்கிரமத்த
இங்க பகிர்ந்துக்கலாம். அப்பதான் நான் மட்டும்தான் இந்த மாதிரியா
இல்ல எல்லாருமே சின்ன வயசில இப்படிதானான்னு தெரியும். :)

இந்த மாதிரி சிறுவயது சின்னத்தனமான விஷயங்கள ஞாபகபடுத்தினதுக்காக
சூர்யாவுக்கும் அனுவுக்கும் என்னோட செல்லமான கண்டனங்கள்.

26 comments:

ஜே கே | J K said...

ம். எல்லோரையும் பழைய நினைவுக்கு கொண்டு போயிட்டீங்க.

சூப்பர்....

அந்த சின்ன வயசுல அண்ணன், அக்கா, தம்பினு ஒன்னுமே தெரியரதில்லை. சண்டைபோடனும்னு மட்டும் தான் செய்றோம். ஆனா இது கொஞ்சம் பெரியவங்க ஆனதும் பாசமாயிடுது.

இப்பவும் சின்ன பசங்கள பாத்தா அண்ணன் தம்பி அடிச்சுகிட்டு தான் இருக்காங்க.

நாகை சிவா said...

வீட்டுக்கு வீடு வாசப்படி தாண்டி...

அரிவாள் ஆரம்பிச்சு கையில் கிடைப்பதை வைத்து எல்லாம் சண்டை போட்டு இருக்கோம். அது எல்லாம் சின்ன வயசுல தான். அப்புறம் போக போக சிலருக்கு இடைவெளி விழும் அல்லது நெருக்கம் வரும். எனக்கு இரண்டுமே வந்துச்சு.

தம்பிகள் எல்லாமே எண்டா இந்த அண்ணன் மாருங்க எல்லாம் இப்படி இருக்காங்கனு கேட்க வேண்டியது. அண்ணன் எல்லாம் இந்த தம்பிகளே இப்படி தான் என்று பீல் பண்ண வேண்டியது :)

அது எல்லாம் போகுட்டும் உங்க போதைக்கு ஏன்ய்யா அனு க்கு கண்டங்கள்.. பிச்சுடுவேன் பிச்சி...

நாகை சிவா said...

இது இரண்டு பகுதியால வந்துச்சு.. இரண்டாவது பகுதி தரையிறக்கம் பண்ணிட்டீயா?

Unknown said...

//என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல முக்கியமானது
ஒருத்தர பிடிக்கலன்னா சாகற வரைக்கும் அவங்க கூட பேசவே கூடாதுன்னு
முடிவு பண்ணிடுவேன்//

same blood :)

ரூபன் தேவேந்திரன் said...

காபி வித் அனு எங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற விபரம் தர முடியுமா?

கதிர் said...

வாங்க கோசலன்

www.tamilblood.info இந்த தளத்துல ஏராளமான டைம் கில்லர்ஸ் நிகழ்ச்சிகள் இருக்கு. இறக்கி பாருங்க. :)

குசும்பன் said...

அப்பப்ப கிச்சனுக்கு போய் திருட்டுதனமா பொட்டுகடல தேங்காயும்
எடுத்து சாப்பிட்டுக்கறது///

தம்பி சார் தம்பி சார் ஒரு டவுட்டு சார் நீங்க இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு வளர்த்த உடம்புதானா சார் அது?

(என்ன டா சார் என்று பேசுகிறேன் என்று நினைகாதீங்க சார் ஏதும் கோபட்டு கல்லால் அடிச்சா பொட்டுன்னு போய்விடுவேன் சார் அதுக்கு தான் சார்)

இராம்/Raam said...

ம்ம்.... எல்லார் வீட்டிலேயும் இதே கதை தான் கதிரு...... :)

எங்க வீட்டிலே அக்கா,நான்,தம்பி மூணு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருப்போம்..... :) இப்போல்லாம் போனிலே பேசுறதுக்கே டைம் ஒதுக்க வேண்டியதா இருக்கு... :(

சின்னப்புள்ளகளாவே இருந்துருக்கலாம்... :(

குசும்பன் said...

//என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல முக்கியமானது
ஒருத்தர பிடிக்கலன்னா சாகற வரைக்கும் அவங்க கூட பேசவே கூடாதுன்னு
முடிவு பண்ணிடுவேன்//

இதோடு 15 வருடம் ஆகும் என்று நினைக்கிறேன் என் அத்தை பெண்ணிடம் பேசி. கிராமத்தில் இருந்ததால் நமக்கு இந்த குணமா தம்பி?

கோபிநாத் said...

நல்லாவே கொசுவத்தி சுத்தியிருக்க...

\\என்னோட அக்கா கூடயும் பேசாம ரெண்டு வருசம் இருந்திருக்கேன்.\\

\\இதுவரைக்கும் நானும் அக்காவ அக்கான்னு கூப்பிட்டதில்ல\\

சேம் பிளட்...

ஓவர் பாசம் மனசுக்கு ஆகாது ராசா..சில விஷயங்கள் எல்லாம் இப்படி இருந்த தான் சந்தோசம்...ஓவரா போயிட்டோம் அப்புறம் தாங்க முடியாது ராசா :))

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
இது இரண்டு பகுதியால வந்துச்சு.. இரண்டாவது பகுதி தரையிறக்கம் பண்ணிட்டீயா?\\

ரெண்டாவது இன்னும் வரல சகா.

ஆயில்யன் said...

//குசும்பன் said...
//என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல முக்கியமானது
ஒருத்தர பிடிக்கலன்னா சாகற வரைக்கும் அவங்க கூட பேசவே கூடாதுன்னு
முடிவு பண்ணிடுவேன்//

இதோடு 15 வருடம் ஆகும் என்று நினைக்கிறேன் என் அத்தை பெண்ணிடம் பேசி. கிராமத்தில் இருந்ததால் நமக்கு இந்த குணமா தம்பி?
//

15 வருசத்த வேஸ்ட் பண்ணிட்டீயே நண்பா...!!!!
:-(((

கதிர் said...

வாங்க JK

நீங்களும் அப்படித்தானா? இன்னும் அப்படியேதான் இருக்கிங்களா இல்ல மாறிட்டிங்களா?

கப்பி,

இந்த புன்னகை என்ன விலை?

புலி.
நிறைய விஷயத்துல நீயும் நானும் ஒரே மாதிரி இருக்கற மாதிரி பீல் பண்றேன்.

//அது எல்லாம் போகுட்டும் உங்க போதைக்கு ஏன்ய்யா அனு க்கு கண்டங்கள்.. பிச்சுடுவேன் பிச்சி...//

பிட்டு போடற மாதிரி இருக்கே! :)
அதுசரி நீயும் என்னைப்போல கண்ணியமான அனுரசிகன். பழசை எல்லாம் ஞாபகபடுத்தி ஒருமாதிரி குற்றவுணர்ச்சியா தோணுச்சி அதனாலதான் செல்லமான கண்டனங்கள்.

கதிர் said...

//இது இரண்டு பகுதியால வந்துச்சு.. இரண்டாவது பகுதி தரையிறக்கம் பண்ணிட்டீயா?//

ஐ ஆம் தி வெயிட்டிங் மாம்ஸ்.

வாங்க மகி!

நல்லா பாருங்க என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல அதுவும் ஒண்ணு. அதனால நாம ஒருகாலத்துல சேம் ப்ளட் ஆனா இப்ப இல்லை என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)

//தம்பி சார் தம்பி சார் ஒரு டவுட்டு சார் நீங்க இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு வளர்த்த உடம்புதானா சார் அது?//

இப்படியும்...

கதிர் said...

வாங்க வைகைப்புயல் ராம்!

//ம்ம்.... எல்லார் வீட்டிலேயும் இதே கதை தான் கதிரு...... :)//

இதேதான் நம்ம புலியும் வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றார். :) உங்க ரெண்டு பேருக்கும் சேம் ப்ளட்னு நினைக்கிறேன்.

//எங்க வீட்டிலே அக்கா,நான்,தம்பி மூணு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருப்போம்..... :) இப்போல்லாம் போனிலே பேசுறதுக்கே டைம் ஒதுக்க வேண்டியதா இருக்கு... :(//

இப்பயும் டைம் இருந்தா சண்டை போடுவீங்களா? :)

//சின்னப்புள்ளகளாவே இருந்துருக்கலாம்... :(//

என்னதிது சின்னப்புள்ளத்தனமா இருக்குது ராஸ்கல், நாம இன்னமும் சின்னபுள்ளைங்கதான மேன். :)

//இதோடு 15 வருடம் ஆகும் என்று நினைக்கிறேன் என் அத்தை பெண்ணிடம் பேசி. கிராமத்தில் இருந்ததால் நமக்கு இந்த குணமா தம்பி?//

எலேய் குசும்பா! நான் சொல்றது சொந்த அண்ணன் தம்பிக்குள்ள நடக்கற சண்டை. உன்ன யாருய்யா அத்தை பொண்ணுகூடல்லாம் சண்டை போடசொன்னது? சின்னவயசிலயும் சுத்த விவரமில்லாதவனா இருந்திருக்கியே! அதுவும் பதினஞ்சி வருசமா பேசாம இருக்கறது பெரிய முட்டாள்தனம்யா!

ஆமா அப்படி என்னயா தப்பு பண்ண நீயி? :))))

கதிர் said...

//ஓவர் பாசம் மனசுக்கு ஆகாது ராசா..சில விஷயங்கள் எல்லாம் இப்படி இருந்த தான் சந்தோசம்...ஓவரா போயிட்டோம் அப்புறம் தாங்க முடியாது ராசா :))//

வாங்க ஷார்ஜாவின் இளவரசரே!

ஓவர் பாசம் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ல வர்ற. நீ பழமொழி கேள்விபட்டுருக்கியா, எதுக்கு வேணாலும் அணை போடலாம் ஆனா பாசத்துக்கு அணை போட முடியாது.
அன்புக்குண்டோ அடைக்குந்தாழ்.
இப்படி நிறைய சொல்லலாம். அதனால நீ சொல்ல வர்றதுல பிழை இருக்கு ராசா!

//ரெண்டாவது இன்னும் வரல சகா.//

விளக்கெண்ணெ விட்டுகிட்டு பாப்பானுங்க போலருக்கு. :)

//15 வருசத்த வேஸ்ட் பண்ணிட்டீயே நண்பா...!!!!
:-(((//

அல்டிமேட் கமெண்ட்! ரிப்பீட்டேய்ய்ய்

☼ வெயிலான் said...

தம்பியண்ணன்!

அருமையா இருக்குது பதிவு!

எந்த ஊர் உங்களுக்கு? உடனே துபாய்னு சொல்லிராதீங்க.

CVR said...

ஹ்ம்ம்ம்ம்
எனக்கு சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது.ஆனா இந்த பதிவை படிக்கும் போது லேசா கண்ணுல நீர் எட்டி பாத்துச்சு
நல்லா எழுதியிருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)

Unknown said...

//நல்லா பாருங்க என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல அதுவும் ஒண்ணு. அதனால நாம ஒருகாலத்துல சேம் ப்ளட் ஆனா இப்ப இல்லை என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)//

இங்க மட்டும் என்ன வாழுதாம்?
அப்படிப் பாத்தாக்கூட நாம சேம் ப்ளட்தான் :)

கதிர் said...

//தம்பியண்ணன்!

அருமையா இருக்குது பதிவு!

எந்த ஊர் உங்களுக்கு? உடனே துபாய்னு சொல்லிராதீங்க.//

வாங்க வெயிலான்!

கள்ளக்குறிச்சி பக்கத்துல கச்சிராயர்பாளையம்.

ஆனா இப்ப அபுதாபி. துபாய்னு சொல்லவேல்ல பாருங்க.

கதிர் said...

//ஹ்ம்ம்ம்ம்
எனக்கு சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது.ஆனா இந்த பதிவை படிக்கும் போது லேசா கண்ணுல நீர் எட்டி பாத்துச்சு
நல்லா எழுதியிருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)//

நன்றி CVR.

கதிர் said...

//இங்க மட்டும் என்ன வாழுதாம்?
அப்படிப் பாத்தாக்கூட நாம சேம் ப்ளட்தான் :)//

சரி ஓகே! அடுத்த முறை ஆக்சிடெண்ட் ஆச்சின்னா போன் பண்ணுவேன். மறக்காம வந்து ரத்தம் கொடுக்கணும்.

Unknown said...

ஏற்கனவே இருக்குறது ஒரு லிட்டரோ ரெண்டு லிட்டரோ அதும் வேணுமா?

நல்லா இருங்கப்பூ

Anonymous said...

CVR said "இந்த பதிவை படிக்கும் போது லேசா கண்ணுல நீர் எட்டி பாத்துச்சு
நல்லா எழுதியிருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-) "

For me too....Good post.

seethag said...

தம்பி,
நீங்க தெரிஞோ தெரியாமலோ ஒரு முக்கியமான டாபீக்கை தொட்டுட்டு போயிட்டீங்க..

order of birth குழந்தைகளின் உளவியலில் கவனத்தில் ஏடுக்காபடும் விஷயம்.
கட்டன்ண்த மாதம் நான் new york time பத்திரிக்கயில் படித்தது..முதலில் பிறந்த குழண்தையிடம் எதிர்பார்ப்பு அதிகம்மென்று,

பொதுவாக னடுவில் உள்ள
குழண்தைக்கு சற்றூ identity ப்ரச்சினைஇ கூட

கதிர் said...

தம்பி,
//நீங்க தெரிஞோ தெரியாமலோ ஒரு முக்கியமான டாபீக்கை தொட்டுட்டு போயிட்டீங்க..//

தெரிஞ்சுதான் எடுத்தேங்க. ஆனா உளவியல் காரணங்கள் தெரியாது.

//order of birth குழந்தைகளின் உளவியலில் கவனத்தில் ஏடுக்காபடும் விஷயம்.
கட்டன்ண்த மாதம் நான் new york time பத்திரிக்கயில் படித்தது..முதலில் பிறந்த குழண்தையிடம் எதிர்பார்ப்பு அதிகம்மென்று, //

எனக்கு முன்னாடி பிறந்துட்டானேன்ற கோபமா? அல்லது எனக்கு பின்ன பிறந்தவன்ற இளக்காரமா? கொஞ்சமா விளக்குங்க நேரம் கிடைக்கும்போது.

நன்றி.

//பொதுவாக நடுவில் உள்ள
குழந்தைக்கு சற்றூ identity பிரச்சினைஇ கூட//