எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 31, 2007

கோயி

அவன் பெயர் கோவிந்தன் பொறக்கும்போது வச்ச பேர் அது. பெத்தவங்களுக்கும்
அந்த பேர் ஞாபகம் இல்ல, ஊர்ல உள்ள மக்களுக்கும் ஞாபகம் இல்ல. எல்லாரும்
கூப்பிடறது செவிட்டூமை சிலசமயம் கோயி. ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பி
பாக்க மாட்டான் ஏன்னா அவனுக்குதான் காதே கேக்காதே.

குள்ளகுட்டியோட மகன்னு சிலபேர் சொல்லுவாங்க, சிலபேர் குள்ளகுட்டியோட
சாபம்னு சொல்லுவாங்க. குள்ளகுட்டின்றது பரம்பரை பேர் அவன் வம்சத்துலயே
அஞ்சடிக்கு மேல எவரும் வளர்ந்ததில்லை. கோயிந்தன் மட்டும் சற்று விதிவிலக்கு
மூன்று மகன்களில் இளையமகன் தான் கோயி என்கிற கோவிந்தன். கோயி அரை
லூசாக பிறந்துவிட்டான் என்பதற்காக அவனிடன் யாரும் ஈடுபாடு காட்டவில்லை.
வீட்டில் வளர்க்கும் மாடுகளுள் ஒன்றாகவே வாழ்கிறான். என்றாவது ஒருநாள்
வீட்டிற்குள் நுழையும்போது அவன் முதுகுகில் நான்கைந்து கோடுகள் போட்டு
வெளியே அனுப்புவாள் அவனை பெற்றவள். அதற்கு பிறகு இரண்டு மூன்று
மாதத்திற்கு உள்வாசல்படியை மிதிக்கவே தயங்குவான். தழும்பு மறையும்
நேரத்தில் மறுபடி உள்ளே நுழைந்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் மீண்டும்
பிறக்கும். மிகுந்த சேட்டைக்காரன்.

மனிதர்கள் மிக விசித்திரமானவர்கள் மனதிற்குள் நினைப்பவை எல்லாம்
உதட்டை விட்டு வெளிவந்துவிட்டால் ஒருமணி நேரத்தில் உலகமே சுடுகாடாக
மாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கோயிந்தன் விஷயத்தில் மட்டும் எவர்
வேண்டுமானாலும் நினைத்ததை நேராக சொல்லிவிடலாம் அந்தளவுக்கு
அவனையே அறியாமல் சுதந்திரம் வழங்கி இருந்தான்.


மாவாட்டி வேலுதான் அவனுடைய நண்பன், எதிரி, ஹீரோ, வித்தை காட்டுபவன்
எல்லாமே. வயது அறுபத்தி ஐந்தை தாண்டிருக்கலாம் தேகத்தை பார்த்தால்
அப்படி தெரியாது. ஒருகாலத்தில் வீடுவீடாக மாவரைத்து பிழைத்து வந்ததால்
மாவாட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது. கடந்த வருடம் சோத்துக்கு
செத்த ஒரு வீட்டில் இருந்து பதினெட்டு வயது குமரியை கல்யாணம் செய்து
வந்திருந்தார். கிழவனுக்கு முப்பது நாப்பது ஆடுகள் தேறும். மாசாமாசம்
குருவிக்கடை பாய் கொடுக்கும் ஆட்டுப்பணத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்து
வைத்திருப்பதாக ஊரெல்லாம் பேச்சு. அவருடைய ஒரே கவலை புதிய
மனைவியை கர்ப்பமாக்க முடியவில்லை என்பதுதான்.

பதினைந்து வருடமாக கோயியுடன் ஒரே ஏரிக்கரையில் மாடு மேய்ப்பதால்
சைகை மொழி நன்கு பரிச்சயமாகி இருந்தது. கோயியுடன் சைகை மொழியால்
பேசும் ஒரே ஜீவன் என்பதால் கோயிக்கும் கிழவன் மீது ஏகப்பட்ட பாசம்.

காலையில் பள்ளி செல்லும் பையன்களுக்கு எதிர்வரிசையில் மாடுகளை ஓட்டிக்
கொண்டு ஏரிக்கரைக்கு செல்வது தினப்படி வழக்கம். ஏறுக்கு மாறாக அவன்
சட்டை பொத்தான்கள், வாய் சற்று இடது பக்க இழுத்து விட்டது போல் இருக்கும்
அதனால் வாயை சரிவர இழுத்து மூடுவதில் சிக்கல் இருப்பதால் வழியும் எச்சில்
இடது பக்க சட்டைப்பைக்குள் நேராக இறங்கும் அதனால் எல்லா சட்டையிலும் நீக்க
முடியாத கரை ஒன்று இருக்கும் அதிலிருந்து ஊத்தநாத்தம் வருவதாக மாவாட்டி
அடிக்கடி குறைபட்டுக்கொள்வார். அவனின் கால்சட்டையின் பின்புற ஓட்டையில்
சிறுவர்கள் லட்டர் போட்டு விளையாடுவார்கள்.

பதிலுக்கு இவன் மாடுவிரட்டும் குச்சியால் எவனையாவது அடிக்க கூட்டத்தில்
ஒருவன் மாட்டை எதிர்த்திசைக்கு விரட்டி விடுவான் இதனால் நிலைகுலைந்து
போகும் திரும்ப மாடுகளை ஒன்றிணைத்து மேட்டுத்தெருவை கடக்கும்வரை
அல்லல்தான். ஒருவகையில் இந்த அல்லல் அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால்
ஞாயிற்றுக் கிழமைகளில்தான் அவனை சீண்ட எவருமே இல்லை.

மேட்டுத்தெருவை கடந்துவிட்டால் அவன் உற்சாகம் இருமடங்கை எட்டும்
ஏனென்றால் அங்குதான் மாட்டுக்கூட்டத்தோடு மாவாட்டியின் ஆட்டுக்
கூட்டமும் இணையும். என்றாவது ஒருநாள் ஏரித்தண்ணீரில் தள்ளி விட்டாலொழிய
உடல் நனைவதுதான் அவன் அறிந்து குளிப்பது இல்லையென்றால் ஒதுங்க
முடியாதபடி மழை வரும்போது குளிப்பதென்பது சாத்தியப்படலாம்.

கோயிக்கு மாவாட்டியை அடுத்து சந்தோஷம் தரும் ஒரே ஆள் மாடுகளுக்கு
லாடம் கட்டும் பெரியசாமி என்கிற பெருசுதான். மாடுகளுக்கு லாடம் கட்டும்
காட்சியும் எத்தாம் பெரிய மாடாக இருந்தாலும் சடாலென தரையில் வீழ்த்தி
கால்களுக்கு தாம்புக்கயிறால் எட்டு முடிச்சி போடுவான் பெருசு. அந்தக்
காட்சியை இமை கொட்டாமல் பார்த்து ரசிப்பான் கோயி. ஆணி எடுத்து
தருவது சுத்தியல் எடுத்து தருவது போன்ற உதவிகளை கோயி செய்ய
உதவுபவன் என்பதால் லாட வேலை இருந்தால் ஏரிக்கரையின் தெற்கு மூலையில்
இருக்கும் புளிய மரத்தடியிலிருந்து ஒரு விசில் சத்தம் பறக்கும் அதைக்கேட்டு
எங்கிருந்தாலும் அடித்து பிடித்து ஓடிவருவான் கோயி.

எந்த வகையில் உசத்தியாக இருப்பினும் எந்த வகையில் தாழ்ந்து இருப்பினும்
அவரவருக்கு ஏற்ற சந்தோஷங்களும் துக்கங்களும் இவ்வுலகில் நிறைந்து
இருக்கின்றன. ஆனால் அதை தேடிக்கண்டுபிடிக்கத்தான் சற்று சிரமப்பட
வேண்டும். கோயி எந்த சந்தோஷத்தையும் எதிர்பார்க்க முடியாதபடி
அமைந்துவிட்டதால் இதுதான் தனக்கு சந்தோஷமளிக்க கூடிய விஷயங்கள்
என்று எண்ணியிருந்தான்.


பதினெட்டு வயதை கோயி நெருங்கி விட்டதனால் முகத்திலும் கணுக்காலில்
இருந்து தொடையின் இறுதிப்பகுதி வரையிலும் மயிர்கள் செழித்து வளரத்தொடங்கின.
அரைக்கால் டவுசர் முழுதாக மூடமுடியவில்லை. தெருப்பெண்கலின் புகாரினால்
கோயியின் அண்ணன்கள் போட்டுக்கிழித்த குழாயில் இரண்டை குள்ளகுட்டி
போடச்சொல்லி கொடுத்தார். முதல்முதலாக குழாயினை போட்டு பார்க்கும்போது
அவன் முகத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோஷம் நிரம்பி இருந்தது.
ஆனால் முதலிரண்டு நாட்கள் ஏன் தன்னைப்பார்த்து நாய்கள் குரைத்தன என்று
தெரியாமல் குழம்பி போய்விட்டான். அதைவிட மாவாட்டியிடமிருந்து பெற்ற
பாராட்டு அவற்றையெல்லாம் மறக்கச்செய்து விட்டது.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் இரவு படுத்தபடியே மூச்சை நிறுத்தியிருந்தார்
மாவாட்டி. "கிழவன் சாவு நல்ல சாவு தூங்கின மாதிரியே செத்து போயிட்டான்"
எங்க வீட்டுக்கிழம் போவேனான்னு ரெண்டு மாசமா இழுத்துகிட்டு இருக்குது"
என்று தாட்டியான பெண்ணொருத்தி எழவு வீட்டில் அளந்து கொண்டிருந்தாள்.
கவலைகளை வலுக்கட்டாயமாக முகத்தில் இருத்தி வைப்பதாக எண்ணிக்கொண்டு
மாவாட்டியின் வயதையொத்த பெருசுகள் வாசலில் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் முகம் எழவு வீடு இப்படிதான் இருக்கும் இருக்கமுடியும் என்று
சொல்லும் விதமாய் இருந்தது.

வழக்கம்போல கோயி மாடுகளை ஓட்டிக்கொண்டு மாவாட்டி வீட்டு முன் நின்றான்.
"மாவாட்டி இறந்துட்டான் இனிமேல் நீ தனியாதான் மாடுமேய்க்க போகணும்
என்று சிலர் சைகை மொழியால் புரிவிக்க படாத பாடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இதெல்லாம் புரியாமல் மாடுகளை தெருவிலேயே விட்டுவிட்டு இழவு வீட்டில்
உள்ளே சென்று பிணைக்கப்பட்டிருந்த மாவாட்டியின் கால் கட்டை விரல்களை
பிடித்திழுந்து என்னோடு வா என்று சொல்லிக்கொண்டிருந்தான் கோயி.

அவனை இழுத்து வந்து வெளியே விட்டனர் நாலைந்து பலசாலிகள்.

"மாவாட்டி செத்துட்டாருடா கோயி" என்றார் ஒருவர்.

"மாவாட்டியே வந்து சொன்னால் நம்புவேன் என்பது அவன் மனநிலை.
அவனுக்கும் புரிகிற மாதிரி சொல்லத்தான் ஒரு ஆள் தேவையாக இருந்தது
கோயிக்கு.

"மேய்ச்சலுக்கு போகாம ஆடுகளுக்கு எலும்பு துருத்திகிட்டு தெரிய ஆரம்பிச்சிடுச்சி
நேத்தே குருவிக்கடை பாய் வந்து சத்தம் போட்டுட்டு போனான்" நாளையில
இருந்து ஆட்டை நீ பாத்துக்கோ வீட்டை நான் பாத்துக்கறேன் என்று மகளுக்கு
யோசனை கூறினாள் கிழவனின் வயதையொத்த கிழவனின் மாமியார்.

"இரண்டு மூன்று நாட்களில் கோயியுடன் ராசியாகிப்போனாள் திரும்பவும்
மேட்டுத்தெரு முகப்பில் கிழவனுக்கு பதிலாக அவரின் மனைவி காத்திருக்க
தொடங்கினாள்"

ஒரு மழைநாளின் இறுதிப்பொழுதின்போது ஊணாங்குச்சிகள் நிரம்பிய குகை
போன்ற அமைப்பினுள் கோயியை அழைத்துச்சென்றாள்.

"அன்றிலிருந்து மாராப்பு விலகிய பெண்களை அதிசயமாகவும் இமை கொட்டாமலும்
பார்க்க ஆரம்பித்தான் கோயி"

14 comments:

கோபிநாத் said...

அட்டகாசமான எழுத்து நடை தம்பி......நல்ல முயற்சி :)

குசும்பன் said...

தம்பி கதை அருமை!!! கோயி அந்த குகைக்கு போய் வந்த பின் தெளிஞ்சுட்டானா?

குசும்பன் said...

கோபிநாத் said...
அட்டகாசமான எழுத்து நடை தம்பி......நல்ல முயற்சி :)

ரிப்பீட்டேய்:))))

கண்மணி said...

தம்பி இப்பத்தான் கோயி படித்தேன்
சிப்பிக்குள் முத்து கமல்ஹாசன் ஞாபகம் வந்தது.
நல்ல எழுத்து வளம் கதையோட்டம்.
நான் பாராட்ட நினைத்த வரிகளை நீங்களே போல்டு லெட்டரில் குடுத்திட்டீங்க.
அருமை

அய்யனார் said...

சுலபத்தில கிடைக்காத ஒரு கதாபாத்திரம்..கோயிய அவனோட உலகத்தில போய் வெளிய பாத்திருக்க முயற்சி பண்ணியிருந்திருக்கலாம்..

சாதாரண/கொஞ்சம் நல்ல சமூகத்தின் கண்கள் கொண்டு கோயியை அனுகியிருப்பது நல்லாத்தான் இருக்கு.ஆனா என்னைப் பொருத்தவரை இந்த இலைமறை காய்மறை யா சொல்வது எதையோ பூசி மொழுகுறாப்போல இருக்கு

ஒரு கதாபாத்திரம் அதும் அபூர்வமான கதாபாத்திரம் ஒன்றை முன் வைக்கும்போது பின் விவரனைகள் அவன் அக உலகத்தை முன்னிருத்தி எழுதப்படுமெனில் உயிர்த்தன்மை வெகு சீக்கிரம் கதைக்கு வந்துவிடும்..

ஆனாலும் உன் கதைகளில் வரும் மனிதர்களின் இயல்பை நீ சிதைக்காதிருப்பதே நிறைவாயிருக்கிறது.

Anonymous said...

//...ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பி
பாக்க மாட்டான் ஏன்னா அவனுக்குதான் காதே கேக்காதே..........//

//..ஏரிக்கரையின் தெற்கு மூலையில்
இருக்கும் புளிய மரத்தடியிலிருந்து ஒரு விசில் சத்தம் பறக்கும் அதைக்கேட்டு
எங்கிருந்தாலும் அடித்து பிடித்து ஓடிவருவான் கோயி...//

முரண்படுகிறதே...?

கண்மணி said...

Anonymous said...
//...ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பி
பாக்க மாட்டான் ஏன்னா அவனுக்குதான் காதே கேக்காதே..........//

//..ஏரிக்கரையின் தெற்கு மூலையில்
இருக்கும் புளிய மரத்தடியிலிருந்து ஒரு விசில் சத்தம் பறக்கும் அதைக்கேட்டு
எங்கிருந்தாலும் அடித்து பிடித்து ஓடிவருவான் கோயி...//

முரண்படுகிறதே...?அய்ய்ய்யா தம்பி மாட்டிக்கிட்டாரு?
அனானி கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்லை பதிவைத் திருத்துங்க

தம்பி said...

மாட்டுக்கு லாடம் கட்டும் இடம்னு நான் சொல்லி இருப்பது ஏரியின் தென்புறம் அமைந்துள்ள புளியமரத்தின் அடியில்.

கோயிக்கு செய்திகளை பரிமாறவும் உரையாடவும்தான் மாவாட்டியின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

இதை உணர்வுப்பூர்வமா வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்தேன். அதுவுமில்லாமல் நீங்கள் குறிப்பிடும் அந்த இடம் எழுத்துவடிவத்தில் தவறாக இருப்பதாக வாசிப்பவர் உணர்வதில் தவறே இல்லை. என்னுடைய தவறுதான் ஆனால் திருத்திக்கொள்கிற அளவுக்கு பெரிய பிழை அல்ல என்பது என் கருத்து.

நுட்பமான உறவுகளில் உள்ள சம்பாஷனைகள் எப்படி இருக்கும்னு நாமதாங்க கற்பனை பண்ணிக்கணும் டீச்சர்.

Anonymous said...

//.என்னுடைய தவறுதான் ஆனால் திருத்திக்கொள்கிற அளவுக்கு பெரிய பிழை அல்ல என்பது என் கருத்து.//

சால்ஜாப்பு....!

மீண்டும் அதே அனானி.

தம்பி said...

//சால்ஜாப்பு....!//

அப்படிதான் வச்சுக்கப்பு.

நீங்க அனானியா ஏன் வரணும்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

நீங்க அனானியா வர்றதும் ஒரு வகைல நல்லதுதான் ஏன்னா சொன்ன கருத்தை விட அதை சொன்னவங்களோட பின்புலத்தை ஆராயாம இருக்கறதும் ஒருவகைல நல்லதுதான். :)

தம்பி said...

கோபி
நிஜமாவே அட்டகாசமா இருக்கா? :)

குசும்பா...

ஆமாம் ரொம்ம்ப தெளிஞ்சிட்டான் வேணும்னா நீயும் போய் வர்றியா?

தம்பி said...

//தம்பி இப்பத்தான் கோயி படித்தேன்
சிப்பிக்குள் முத்து கமல்ஹாசன் ஞாபகம் வந்தது.
நல்ல எழுத்து வளம் கதையோட்டம்.
நான் பாராட்ட நினைத்த வரிகளை நீங்களே போல்டு லெட்டரில் குடுத்திட்டீங்க.
அருமை //

டீச்சர்,

தமிழ்சினிமாவை பொறுத்தவரை மனம்பிறழ்ந்தவர்களை ஒரே மாதிரியாதான் காட்டி இருக்காங்க. அதனாலதான் உங்களுக்கு சிலபடங்கள் ஞாபகம் வருகிறது. வாய்பேச, காதுகேட்க முடியாத எத்தனையோ பேர் நிறைய சாதிச்சிருக்காங்க ஆனா கோயி தன் குடும்பத்தாலேயே கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறான். இது போல கதைகள் ஊருக்கு ஒண்ணு இருக்கு. எந்த குறையும் இல்லாம இருந்தால்தான் குடும்பமே மகனாக ஏற்றுக்கொள்கிறது இதில் சமூகத்தை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்த மாதிரி தகுதிகளை உடையவன் அனுபவிக்கும் வலிகளைதான் நான் பதிவிக்க முயன்றது. இதுக்கும் தமிழ்சினிமாவுக்கு பொருத்தமா இருந்துசின்னா சந்தோஷம் :)

தம்பி said...

//சுலபத்தில கிடைக்காத ஒரு கதாபாத்திரம்..கோயிய அவனோட உலகத்தில போய் வெளிய பாத்திருக்க முயற்சி பண்ணியிருந்திருக்கலாம்..//

லாம்னா? அதத்தான் முயற்சி பண்ணியிருக்கேன். சரியா வரலன்னா இனிமேல் சரியா எழுதறேன்.

//சாதாரண/கொஞ்சம் நல்ல சமூகத்தின் கண்கள் கொண்டு கோயியை அனுகியிருப்பது நல்லாத்தான் இருக்கு.ஆனா என்னைப் பொருத்தவரை இந்த இலைமறை காய்மறை யா சொல்வது எதையோ பூசி மொழுகுறாப்போல இருக்கு //

எல்லா விஷயங்களையும் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க அய்ஸ். சில புரிதல்களை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது.
உள்ளதை உள்ளபடியே சொல்றதுக்கு இது பின்நவீனத்துவமா?
இல்ல அதுதான் நமக்கு வருமா?

//ஒரு கதாபாத்திரம் அதும் அபூர்வமான கதாபாத்திரம் ஒன்றை முன் வைக்கும்போது பின் விவரனைகள் அவன் அக உலகத்தை முன்னிருத்தி எழுதப்படுமெனில் உயிர்த்தன்மை வெகு சீக்கிரம் கதைக்கு வந்துவிடும்..//

ரெண்டு முறை படிச்சாதான் மேல உள்ள வரிகளே புரியுது.

நந்தா said...

//எல்லா விஷயங்களையும் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க அய்ஸ். சில புரிதல்களை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது.
உள்ளதை உள்ளபடியே சொல்றதுக்கு இது பின்நவீனத்துவமா?
இல்ல அதுதான் நமக்கு வருமா?//

சரியான கேள்வி. சூப்பரான பதில்.