எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, August 15, 2007

குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!

காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ ஒரு வேலை என்னை
இயக்கி கொண்டே இருக்கிறது. அதனிடத்தில் இருந்து விடுபட நான் எடுக்கும்
முயற்சிகளின் முடிவு சலிப்புகளின் எல்லையாக உள்ளது. இந்த சலிப்பினால் நாப்பது
வயதில் ஏற்படுகிற மன அயற்சி இப்போதே வந்து விடுமோ என்று எண்ணுகிறேன்.
தினமும் எதிர்கொள்ளும் முகங்களுக்கு எதிர்ப்புன்னகை கூட வறட்டுத்தனமாக இதழில்
பொறுத்த வேண்டியதாக இருக்கிறது.

சில பெண்களுக்கு எத்தனை வயதானாலும் குழந்தை குணம் மாறுவதே இல்லை.
குழந்தைகள் பொய்யானவற்றை தனது தாயிடம் விவரிக்கும்போது கைகளை
ஆட்டி முகத்தை கோணலாக்கி உதடு சுழித்து சொல்லும் அது உண்மையா
இல்லையா என்பது தவிர்த்து நாமும் நம்மையறியாமல் ரசிக்கத் தொடங்கி
விடுகிறோம். அது சொல்லப்படும் விஷயங்களைப் பொறுத்து சந்தோஷமும்
துக்கமும் நமக்கும் ஏற்படும் குழந்தையின் உடல் மொழி தெரிந்தவர்களுக்கு
புரியும். இந்த குணங்களை ஒத்த ஒரு ஈராக்கிய பெண் எங்கள் அலுவலகத்தில்
பணிபுரிகிறாள்.

லெபனான் அல்லது எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில்
அதிகம் அவளும் அதுபோன்றொதொரு நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கக்
கூடும் என்ற நினைப்பில் இருந்தேன். இரண்டொரு தினங்களுக்கு முன் தான்
தெரிந்தது அவள் ஒரு ஈராக்கி என்று. பொதுவாகவே அரபுநாடுகளைச் சேர்ந்த
பெண்களுடன் அதிகம் பழகுவதில்லை அது ஏனோ பிடிப்பதே இல்லை. முக்கியமாக
அவர்களின் திரவிய மோகம், பகட்டு வாழ்க்கை. போலி புன்னகை. ஆனால் இந்த
ஈராக்கிய பெண்மணியிடம் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. சில குணநலன்களில் எனது
தாயினை ஒத்திருபதாலோ என்னவோ தெரியவில்லை. சில வேளைகளில்
அவளை மம்மா என்று கூட என்னை மறந்து அழைத்திருக்கிறேன் பதிலுக்கு
அவள் புன்னகை புரிவது சற்று கூடுதலாக என்னைக் கவரும்.

ஈராக் பெரியநாடு, சதாம் என்ற சர்வாதிகாரி ஆண்ட நாடு தற்போது அங்கங்கே
குண்டுகள் வெடிப்பதாக செய்திகளில் படிப்பது என்பதைத் தவிர வேறொன்றும்
தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருப்பதில்லை என்பதைவிட எனக்காக
ஒதுக்கிக்கொள்ளும் சிலமணி நேரங்களை செலவிட விருப்பமில்லை என்பதே
உண்மை.

ஈராக்கின் தெற்குப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு
வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாக சற்றுமுன் வலைப்பதிவில்
வாசித்திருந்தேன். ஓய்வாக இருக்கும் சமயத்தில் இதுகுறித்து அவளிடம் பேச
வேண்டும் ஒருவேளை அவள் அந்த பகுதியினை சேர்ந்தவளாக இருப்பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது காயமடைந்திருப்பார்களா என்று விசாரிக்க
வேண்டும் என்று மனதினில் குறித்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் அதிகம் வேலை இல்லாத மாலைநேரம் அனைவரும் வீட்டுக்கு
திரும்ப சில மணித்துளிகள் இருந்தன. ஏதோ ஒரு சந்தேகம் கேட்க என்னறைக்கு
வந்தவளிடம் கேட்டேன். இதற்காகவே காத்திருந்தது போல நிறைய பேசினாள்.

குண்டு வெடித்து 150 பேர் இறந்து விட்டார்களாமே என்று கேட்டேன்.

குண்டு வெடிக்கவில்லை என்றால் இப்போதெல்லாம் போர் அடிக்கிறது. தினமும்
வெடிப்பதால் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. இழப்புகள், சேதங்கள் அதிகமாகும்
போதுதான் மீடியாக்கள் பெரியகட்டம் கட்டி செய்தி வெளியிடுகின்றன. இருபது
முப்பது என்றால் மூக்குப்பொடி விளம்பரத்தின் மூலையில் சிறிய பெட்டிச் செய்தியாக
வெளியிடுவார்கள். நேற்று நடந்த வெடிப்புகூட எங்கள் பகுதியில் நடந்ததுதான்.

தொலை தொடர்புசாதனங்கள், மின்சாரம் கூட இல்லாத பகுதியாகிவிட்டது எங்களின்
வசிப்பிடம். நான்கு ஊர்களுக்கு தள்ளி குண்டு வெடித்தால் கூட எங்கள் பகுதியில்
குண்டு சத்தம் கேட்கும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் அங்கிருந்த போது என் வீட்டினுள்
குழந்தைகளை வைத்து பூட்டி விடுவேன் அனைத்து ஜன்னல்களையும் மூடிவிடுவேன்
இல்லையென்றால் வெடி சத்தத்தில் எனது குழந்தைகள் அழ ஆரம்பித்துவிடும்.
எல்லாரையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவ்வப்போது தெருவழியாக செல்லும்
துப்பாக்கி ஏந்தியவர்கள் வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து
இழுத்துச் சென்று விடுவார்கள் அதனால் நான் மட்டும் வீட்டுக்கு வெளியே
நின்று யாருமில்லை என்று சொல்லிவிடுவேன். என்னைச் சுட்டால் கூட எனது
குழந்தைகளை காப்பாற்றிவிடுவேன் என்றார்.

நாங்களும் ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தோம். இப்போதுதான் நிலைமை
மிக மோசமாக உள்ளது. விரைவில் இது தீரும் இன்ஷா அல்லாஹ். பேசிமுடிக்கும்
நேரத்தில் அவளது முகம் அழும் தோரணைக்கு வந்திருந்தது. அவள் பேசியது
தெளிவான ஆங்கிலமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு புரிய வைக்க
அவளது கைகளை ஆட்டியும், சோகமான முகபாவங்களை குழந்தைகளை போல்
வலுக்கட்டாயமாக முகத்தில் திணிக்கும்போதும் வார்த்தைகளால் உருவாக்க முடியாத
புரிதல்களை எனக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள். எனக்கும் நன்றாகவே புரிந்தது.

நேரம் முடிந்து அலுவலகத்தில் அனைவரும் வாகனங்களுக்கு செல்ல ஆயத்தமாகினர்.
அவளின் தோழிகள் நெடுநேரம் அழைத்தமையால் மீதியை நாளைக்கு சொல்கிறேன்
என்று சென்று விட்டாள். வலுக்கட்டாயமாக புன்னகையை உதட்டுக்கிழுத்து விடை
கொடுத்தேன்.

என்னுடன் பேசும் பழக்கமில்லாத யாவரும் சந்தோஷமாக ஆரம்பித்து
சோகநிலையிலேயே முடிக்கின்றனர். ஒவ்வொருமுறை இப்படி ஆகும்போதும்
எனக்குள்ளேயே குற்ற உணர்ச்சி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

17 comments:

குசும்பன் said...

:( ஈராகியர்களின் வாழ்கை, பாலஸ்தீனியர்களின் வாழ்கை எல்லாம் சோகமானதுதான் தம்பி:(

Anonymous said...

" பொதுவாகவே அரபுநாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் அதிகம் பழகுவதில்லை அது ஏனோ பிடிப்பதே இல்லை. "

அத்தான் அப்படியே இருங்க அத்தான்:)

வெற்றி said...

நல்ல பதிவு தம்பி.

Anonymous said...

pathivai azhagaga korthu irukkireergal....nice

Anonymous said...

ரொம்ப கலக்கலா கொடுத்திருக்கீங்க கதிர்.

அருமையான வெளிப்பாடு

Jazeela said...

//எனக்காக
ஒதுக்கிக்கொள்ளும் சிலமணி நேரங்களை செலவிட விருப்பமில்லை என்பதே
உண்மை.// மனித இயல்பே இப்படித்தான் இருக்கில்லையா கதிர்? உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சனையென்றால் விசாரிப்போம் தெரிந்துக் கொள்வோம் வெறும் செய்தியாக, சில மணி துளிகளுக்கு மேல் பெரிதாக பாதிக்காது. இந்தியா என்றால் கூடுதல் அக்கறையிருக்கும். இந்தியாவில் நம் ஊரென்றால் இன்னும் ஆர்வம் அதிகரிக்கும் அதுவும் நமக்கு தெரிந்தவர் அதில் அடங்குவார்களென்றால் எல்லா நொடிகளும் மனது அதையே நினைத்துக் கொள்(ல்லு)ளும் :-(

கதிர் said...

நன்றி குசும்பா!

பாவனா,
கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா?

வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கதிர் said...

jazeela!

தொடர்ந்து பதிவுகளை படிக்கறிங்க போலருக்கு.

கருத்துக்கு நன்றி.

நந்தா,
பேச்சு வழக்கில் பதிவு எழுதாமல் மொழி நடையில் எழுதினால் பதிவு எப்படி இருக்கும் என்று அறியவே இந்த முயற்சி.

நன்றி நந்தா.

கதிர் said...

//மனித இயல்பே இப்படித்தான் இருக்கில்லையா கதிர்? உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சனையென்றால் விசாரிப்போம் தெரிந்துக் கொள்வோம் வெறும் செய்தியாக, சில மணி துளிகளுக்கு மேல் பெரிதாக பாதிக்காது. இந்தியா என்றால் கூடுதல் அக்கறையிருக்கும். இந்தியாவில் நம் ஊரென்றால் இன்னும் ஆர்வம் அதிகரிக்கும் அதுவும் நமக்கு தெரிந்தவர் அதில் அடங்குவார்களென்றால் எல்லா நொடிகளும் மனது அதையே நினைத்துக் கொள்(ல்லு)ளும் :-( //

அதிகபட்சமாக வருத்தப்படுவதைத் தவிட வேறென்ன செய்து விடமுடியும்.
அடுத்த வினாடி ஆச்சரியங்கள், வேலைகள் முந்தியதை மறக்கச் செய்துவிடும்.

Unknown said...

//நாங்களும் ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தோம். இப்போதுதான் நிலைமை
மிக மோசமாக உள்ளது. விரைவில் இது தீரும் இன்ஷா அல்லாஹ்.//
மிக நன்றாக இருந்தவர்கள். உலகத்துக்கே உதவும் அளவுக்கு வளம் கொழித்திருந்த நாடு. குண்டு வெடித்தலே தின நிகழ்வாகிப் போனதில் விரக்தியில் சொல்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் நல்ல நிலைமைக்கு திரும்பட்டும். விரைவில்....?

Ayyanar Viswanath said...

கலக்குற ராசா

நல்ல பதிவு கதிர்

பாகிஸ்தான் ட்ரைவர் கிட்ட பேசினியே உனக்கு தில் இருந்தா அதை பதிவா போடுய்யா பாக்கலாம் :)

கதிர் said...

//இன்ஷா அல்லாஹ் விரைவில் நல்ல நிலைமைக்கு திரும்பட்டும். விரைவில்....? //

எல்லாருடைய வேண்டுதலும் அதுதான் சுல்தான்.

கதிர் said...

அய்ஸ்!

ஏன் சொல்ல முடியாது! இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.

Me no go up. :)))

Raghavan alias Saravanan M said...

ஹாய் தம்பி,

நல்ல பதிவு.. உருக்கமான பதிவும் கூட.

நீங்கள் கேட்டிருந்தபடி இந்தியன் படத்தின் கப்பலேறிப் போயாச்சு பாடலின் வரிகள் வலையேற்றப்பட்டுள்ளது.

http://thiraippadap-paadal-varigal.blogspot.com/2007/08/indian-kappaleari-poyaachu.html

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி.

CVR said...

வழக்கம் போல சூப்பர் அனுபவ பதிவு தம்பி!!
அவங்க ஊரிலேயும்,பிரச்சினை உள்ள எல்லா ஊரிலேயும் அமைதி திரும்பட்டும்!! :-)

கோபிநாத் said...

;-(

ராஜ நடராஜன் said...

இப்பொழுதுதான் சிவபாலன் அவர்களின் இலங்கைத் துயர் பின்னுட்டங்களை பார்வையிட்டு வந்தேன்.உலகமே வேண்டாமென்ற ஓர் போரினை எந்த அரசியல் கண்ணோட்டத்தில் அமெரிக்கா அமுல் படுத்தியதோ.... விடியுமென்ற பூமிக்கு இன்னும் விடியலைக் காணோம்.