எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, July 20, 2007

அன்பின் நிராகரிப்புகள்.

கண்டிப்பா மன்னிக்க மாட்டாள். ஏன் என்றால் அவள் உயிரோடு இல்லை. உயிரோடு
இருந்தபோது அவள் என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பு எனக்கு புரியவே
இல்லை. எவ்வளவு கேவலமாக நடந்திருக்கிறேன் நான். விவரம் தெரியாத வயது
அது என்று எனக்கு நானே சமாதானம் சொல்ல மனம் ஒப்பவில்லை. தீடிரென்று
யாரோ ஒருவர் எனக்கு நினைவூட்டியிருக்கிறார் நம்மீது காட்டும் அன்பின் உதாசீனங்களை
எவரும் தாங்க முடியாதென்று. அவள் என்மீது காட்டிய அளவுகடந்த பாசத்திற்கும்
அன்பிற்கும் காரணம் இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. தாத்தாவுக்கும் எனக்கும்
ஒரே மாதிரியான குணாதிசயங்கள் என்று அவளின் கடிதங்கள் படித்த போதுதான்
தெரிந்துகொண்டேன். எதையோ தேடும்போது கைக்கு சிக்கியது அந்த கடிதங்கள். பாட்டி
தன் கைப்பட எழுதியது நிறைய அடித்தல் திருத்தல்களுடன் அந்த கால எழுத்துக்கள்.
பொதுவாக எனக்கு கடிதங்கள் படிப்பதில் அக்கறையே இருந்ததில்லை அதுவும் கட்டாயமான அந்த முதல் இரண்டு "நலமறிய ஆவலை" என்றுமே விரும்பியதில்லை. அந்த இரண்டு ஆவல்களுக்குப்பின் தான் கடிதத்தின் சாரமும் அது தரும் சுகமும் எத்தனையோ
ஆறுதல்களுக்கு சமம் என்று அறிந்திருக்கவில்லை.

தனித்து விடப்பட்டதனால் வந்த வெறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனாலேயே
விடுதிக்கு வரும் கடிதங்களை கூட படிக்காமல் கத்திக் கப்பல் செய்து வாய்க்காலில்
விட்டிருக்கிறேன். இதுபோல எத்தனை அன்பின் நிராகரிப்புகளை செய்திருப்பேனோ
தெரியவில்லை அதற்கெல்லாம் ஒருசேர மன்னிப்பு கேட்கத்தான் செல்கிறேன். அவளே
இல்லாத வீட்டில் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்ற குழப்பம் இல்லை. அவள் புழங்கிய பொருள்களிடம், நடந்த வீதிகளில், பின்கட்டு மரத்திடம், முக்கியமாக அந்த கழனிதொட்டியிடம் கேட்க வேண்டும். பங்கு பாகம் பிரிக்கும்போதுகூட அந்த வீட்டை என்பேரில்தான் எழுதி வைத்திருக்கிறதாக கேள்விப் பட்ட போதும் "யாருக்கு வேணும் அந்த வீடு" என்றுதான் எண்ணினேன். பத்துக்கும் மேற்பட்ட அந்த கடிதங்களை வாசிக்க மொத்தமாக பத்து நிமிடத்தைக்கூட ஒதுக்காமல் விட்டதன் குற்ற உணர்ச்சி முகத்தில் படர்வதை உணரமுடியாமல் இல்லை. என்ன செய்வது வயதின் கோளாறு, தனிமையின் கர்வம் அது.

ச்சே இதுபோல குழந்தைத்தனமா முன் எப்போதுமே இருந்ததில்லை. தற்சமயம்தான்
மாற்றிக்கொள்கிறேனே ஒழிய முழுவதுமாக என்னால் இப்படியே இருப்பது சாத்தியமில்லை.
எப்போதோ செய்த தவறுகளுக்கு இப்போது வருத்தம் தெரிவிக்க போகிறேன் அவ்வளவே.
ஆனால் பெறவேண்டியவர்கள் என்று எவரும் அங்கு இல்லாததுதான் மனதை என்னவோ
செய்கிறது. எதோ கடனை செலுத்த திட்டம் போடுவது போல மனதின் ஓட்டங்கள்
இருக்கிறது அதற்கேற்பவே என்முகபாவங்களும் மாறுமோ? அப்படி இருக்குமாயின்
இப்பொழுதே அதுகுறித்த திட்டங்களும் மனனங்களும் நிறுத்திக்கொள்வேன் எனை
பார்ப்பவர்கள் கண்கள் என்னைப்பற்றி சிறிதும் எடை போடாதவாறு அதாவது என்
மனஓட்டங்கள் யாருக்கும் புரியாதவாறு இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
இதே போன்று மவுனமாக சிந்தித்துக்கொண்டே வந்தால் சற்று நேரத்தில் தலைவலி
வருவது திண்ணம் என்று தோன்றியது. கவனத்தை வேறு எதிலாவது திருப்பவேண்டும்.

எப்படியும் இன்னும் இரண்டு மணிநேரம் பயணம் செல்லவேணும். பேருந்திலும் அதிகம்
கூட்டமில்லை மவுனமான ஒரு சவ ஊர்வலத்தை போல பேருந்து சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து எதற்காக எங்கு சென்று கொண்டிருக்கிறார் என்று
தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஒவ்வொருவர் முகமாக பார்க்க ஆரம்பித்தபோது
ஒருவரின் முகமும் எதையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஒருவேளை எனைப்போலவே
கர்வமுள்ளவர்களுடன் பயணிக்கிறேனா என்ற சந்தேகம் வந்து போனது.

மனதோடு ஒத்திகை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.கனகப்பிள்ளையைத்தான்
ஞாபகத்திற்கு கொண்டு வரவேண்டும். அவர்மீதுதான் நான் மித மிஞ்சிய நேசம்
வைத்திருந்தேன் , எனது தாத்தாவாகிய அவரின் கம்பீரம், அலட்சியப்பார்வை,
சுருட்டு இவையெல்லாம் மிகவும் பிடிக்கும். மாதமொருமுறை சந்தைக்கு சென்று
வட்டமாக இருக்கும் பெரிய பெரிய புகையிலையை வாங்கி வந்து அவரே சுருட்டு
தயாரித்துக் கொள்வார். அவருடன் சந்தைக்கு போவதென்பது எப்போதாவது
அரிதாக நடக்கும் நிகழ்வு ஆனால் அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி
காத்திருக்கிறேன்.

இளமுருகு அத்தனை நாளாக சொம்பில் தண்ணீர்தான் கொடுக்கிறார் என்று நினைத்தேன்.
அது பின்னொரு நாளில் பெண்களின் ஒரே ஆசையான சுமங்கலியாக போய்ச்சேர வேண்டும் என்ற கனவினை தகர்த்து எரிந்தது. கனகப்பிள்ளை சாப்பிடும்போது அந்த சொம்பு
பக்கத்திலேயே இருக்கும் அவ்வப்போது எடுத்து மடக் மடக்கென்று குடித்து விட்டு
ஒருமாதிரி முகத்தை சுளித்தவாறு சாப்பிடுவார். சோடா குடிக்கிறார் என்றுதான் கடைசி
வரை நினைத்தேன் அப்படிதான் அவரும் எனக்கு சொல்லியிருந்தார்.

தாத்தா உயிரோடு இருந்தவரை அதிகமாக இருவரும் பேசிக்கொண்டதே இல்லை.
தாத்தாவின் அறைக்கு சாப்பாடு கொண்டு போகும்போது பேசும் ஓரிரு வார்த்தைகள்
தவிர அவர்கள் பேசிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் இருவருக்குள்ளும்
அன்பு மட்டும் வானளவு என்பதை நான் அறிவேன். உண்டு முடித்த பின் தட்டு
சமையலறைக்கு திரும்ப வரும் வரை எதற்காகவோ காத்திருப்பது போல மனது எங்கும் ஒட்டாமல் காணப்படும் அவளின் முகத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம். சாப்பிட்டபின்
தட்டில் கொஞ்சம் அதிகமாக மீதம் வைத்திருந்தால் கூட அவளின் முகத்தில் குழப்ப
ரேகைகள் படர்ந்து விடும்.

இப்படி எளிதில் முகபாவனைகள் மூலம் தன் உள்மனத்தை காட்டிக்கொடுப்பவர்களைதான்
எனக்கு பிடிப்பதில்லை பாட்டியும் அப்படிப்பட்ட ஒருத்திதான். உண்மையை சொல்லப்போனால் உள்ளத் தூய்மை உள்ளவர்கள் அவர்கள். அதைத்தான் நான் குருட்டு மனப்பான்மையுடம் உதாசீனப்படுத்தி காயப்படுத்தி இருக்கிறேன்.

தாத்தாவின் முகமும் குணாதிசயங்களும் எனக்கு அமைந்திராவிட்டால் என்மீது இவ்வளவு
பிரியம் வைத்திருப்பாளா என்பது சந்தேகம்தான் என்று எண்ணியிருந்தேன்.

"வெத்தல பாக்கு போட்டுட்டு என்கிட்ட பேசாதே, முத்தம் கொடுக்காதே" உன் வாய்
ரொம்ப நாத்தம் அடிக்குது என்று ஒருமுறை சொன்னதற்க்காக வெற்றிலை போடுவதை நிறுத்திவிட்டாள். அப்போதுகூட காரணமில்லாமல் மேலும் வெறுப்பை உமிழ்ந்துதான் வந்திருக்கிறேன். ஆரம்பம் முதலே காரணம் இல்லாமல் வந்துவிட்ட வெறுப்பு சிறுசிறு விஷயங்களுக்கு கூட தன் வக்கிரத்தை உஷ்ணமாக உதிர்த்து வந்தது. ஒருவேளை வயதின் காரணமாக தளர்ந்து விட்ட தோளினாலும், இடுங்கிய கண்களினாலும் வண்ணாத்தி வீட்டு சித்ராவைப்போல டால்கம் பவுடரின் வாசனை அவள் மீது வீசாமல் இருந்ததாலும்
அவளை வெறுத்திருப்பேனோ தெரியவில்லை. சிறுவயதில் இருந்தே வலுக்கட்டாயமாக விடுமுறைகளுக்கு அங்கு அனுப்பப்பட அதுவே தொடர்ந்து விட்டது.

விடுமுறை இல்லாத ஒரு பள்ளிநாளில் அவள் இறந்து போனாள்.

சாவுக்கு கூட காரணம் சொல்லி வராமல் இருந்து விட்டேன். என்ன ஒரு பிறப்பு
நானெல்லாம். மனிதரின் இறப்புக்கு கூட செல்லாமல் விட்டது பெருந்தவறு.

பேருந்தில் ஏறிய கூட்டம் என் கவனத்தை சிதைத்து நிகழ்வுலகுக்கு எனைக்கொண்டு
வந்தது. ஒரு நடுத்தர வயதுப்பெண் இடுப்பில் குழந்தையுடன் தட்டுத் தடுமாறி ஏறி வந்தவள் என் அருகில் வந்து நின்றாள் இடுப்பில் இருந்த குழந்தையை மடியில் வைத்துக்கொள்ளுமாறு பணிவுடன் எனை கேட்டுக்கொண்டவள், நான் மறுக்க மாட்டேன் என்று என்னைப்பாராமல்
என் மடியில் உட்காரவைத்தாள். முகத்தில் இருந்து அறிந்து கொண்டாளா நான் மறுக்க மாட்டேன் என்று? வாழ்வில் முதல் முறையாக இதுபோன்ற கேள்விகள் எழுந்து என்
கர்வத்தை ஓட ஓட விரட்டி என்னை ஒரு பலவீனமான நிலைக்கு இட்டுச்செல்கிறது.

அவளை ஏறிட்டு பார்த்தேன். வண்ணாத்தி வீட்டு சித்ரா தான் அவள். இரண்டாவது முறை
பார்த்து உறுதி செய்துகொண்டேன். நாந்தான் செல்வா என்று அவளிடம் சொன்னால் மிகுந்த
சந்தோஷப்படுவாள். பால்ய கால பள்ளி விடுமுறையின் பாதிபகல் நாட்கள் அவளுடன் தான்
ஆற்றங்கரையில் இருந்திருக்கிறேன். எப்படி எனை அடையாளம் தெரியாமல் போனது? கல்யாணமாகி குழந்தை பெற்று விட்டதால் சீக்கிரமே அவள் முகம் மூப்பெய்திவிட்டது.

உன் பேர் என்னப்பா?

"செல்வகணபதி"

என்ன படிக்கற?

"மூணாவது படிக்கிறேன்"

எப்படியும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆகியிருக்கும்.

அவளையே திருமணம் செய்வதாக ஆற்றங்கரை நாட்களில் உறுதி கூறி இருக்கிறேன்.
அவளும் சிரித்தபடியே என் தலை கோதிவிட்டிருக்கிறாள்.

மணமேடையில் இருந்தபோது எல்லா மணமகளுக்கும் இருப்பதுபோல என் வருகையை
அவள் எதிர்பார்த்திருக்கக் கூடும். வராமல்போகவே கிடைத்த வாழ்விற்கு தன்னை
தகுதிபடுத்திக்கொண்டிருப்பாள்.

தங்கம் என்ற எனது பாட்டியின் பெயருடன் செல்வம் என்ற பெயரையும் இணைத்து
தங்கச்செல்வன் என்று கணபதிப்பிள்ளைதான் எனக்கு பெயர் வைத்ததாக அம்மா
சொல்வாள்.

செல்வா என்று அழைக்கப்பட்ட என் பெயருடன் கணபதி என்ற பெயரினை
இணைத்து தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிறாள் சித்ரா.

பழைய நினைவுகளில் மூழ்கிய நான் என்னையறியாமல் அவளை பார்த்து புன்னகைத்தேன்
கழுத்தை வெட்டி வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். இன்னும் எனக்கு சிரிப்பு அதிகமானது.
திருமணம் பெண்களை எத்தனை கட்டுக்கோப்பாக மாற்றுகிறது என்ற வியப்பு.

ஊர் வந்து விட்டிருந்தது.

மகனை வெடுக்கென்று பிடுங்கி எடுத்துக்கொண்டு இறங்குகிறாள். என்ன பெண் இவள்?

தாத்தா இல்லாத ஊருக்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக பதினைந்து வருடங்கள்
இருந்திருக்கிறேன். கடிதம் படித்திராவிட்டால் இங்கு வராமல் அப்படியே இறந்திருப்பேனோ
என்னவோ!

மாமா எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறார் போல. ஒருவேளை அம்மா
போன் மூலம் தகவல் சொல்லி இருப்பாள்.

வாங்க தம்பி!

வரமறுத்து பின் வந்து ஒட்டிக்கொண்டது புன்னகை.

வரேன் மாமா!

வழக்கான விசாரிப்புகள்! இதெல்லாம் எப்பதான் நிறுத்த போறாங்களோ!

"எல்லாம் நல்லா இருக்காங்க மாமா."

அத்தை, சுகுணா, சுகந்தி எல்லாம் எப்படி இருக்காங்க?

எல்லாம் நல்லா இருக்காங்க தம்பி.

"கணபதிபிள்ளை பேரன் மாதிரி தெரியுதே" டீக்கடைக்காரர்.

ஆமாங்க அவரோட பேரன்தான் நான். செல்வியோட மகன்.

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

பாட்டி வீட்டுல யார் குடியிருக்காங்க மாமா?

யாருமில்லப்பா, பூட்டிதான் கிடக்குது. கிழவி சாகும்போது "என் பேரனத்தவிர
வேற யாரும் இங்க குடியிருக்க கூடாது"ன்னு உன் பேர்ல உயில் எழுதி வச்சிட்டுதான்
போச்சு.

கண்கள் ஈரமாவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

19 comments:

இராம்/Raam said...

/
கண்கள் ஈரமாவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.//

உண்மைதான் கதிரு....

:(

Unknown said...

இப்படி கிராம் தோறும் பூட்டிக்கிடக்கும் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் எவ்வளவு நினைவுகளோ...

யதார்த்தமான நடையில் நல்லாயிருக்கு கதிரு

Anonymous said...

இது கதையாக மட்டும் இருக்கட்டும்..

PPattian said...

நெகிழ்ச்சியான கதை...

சிலரோட அன்பு நமக்கு அன்புத் தொல்லையா தெரியும்.. ஆனால் நம்மோட குணாதிசியம் நமக்கே தெரியற முதிர்ச்சி வரும்போது அன்புத் தொல்லயையும் ஏத்துக்க முடியும்.

இம்சை அரசி said...

// நம்மீது காட்டும் அன்பின் உதாசீனங்களை
எவரும் தாங்க முடியாதென்று
//

ரொம்ப சரியா சொன்னிங்க...

// கண்கள் ஈரமாவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.
//

ம்ம்ம்ம்.....

கோபிநாத் said...

ம்....உண்மை

லொடுக்கு said...

தம்பி நல்லாயிருக்கு. இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

கதிர் said...

//உண்மைதான் கதிரு....

:( //

அப்படி கண்கலங்க வைக்குதா என்ன?
நன்றி அபிஅப்பா!

//யதார்த்தமான நடையில் நல்லாயிருக்கு கதிரு //

நன்றி தேவ்

தூயா!

இது கதைதாங்க!

குசும்பன் said...

தம்பி கலக்(ங்)கிட்டய்யா!!! அருமையாக இருக்கிறது

கதிர் said...

//நெகிழ்ச்சியான கதை...//

நன்றி...

//சிலரோட அன்பு நமக்கு அன்புத் தொல்லையா தெரியும்.. ஆனால் நம்மோட குணாதிசியம் நமக்கே தெரியற முதிர்ச்சி வரும்போது அன்புத் தொல்லயையும் ஏத்துக்க முடியும். //

கரெக்டா சொன்னிங்க.

நன்றி இம்சை!

எலே கோபி,

நீ சொன்னதெல்லாம் உண்மைன்னா இப்பவே குணத்தை மாத்திக்கோப்பா!

லொடுக்கு!

பெருசாதான் இருக்கு என்ன பண்றது எப்பவாச்சும் எழுதணும்னு தோணும்போது ஒரு ஆர்வத்துல நிறைய எழுதிடறேன்.

கதிர் said...

//தம்பி கலக்(ங்)கிட்டய்யா!!! அருமையாக இருக்கிறது //

நன்றி குசும்பா!

கலக்கிட்டனா? இல்ல கலங்கிட்டனா?

தமிழ்மணத்துல இருந்து விடை பெற்று விலகிவிட்டதாக கேள்விப்பட்டேனே!
இன்னும் போகலயா நீ

Jazeela said...

நிறைவான கதை. உங்களுக்கும் சீரியஸ்னஸுக்கும் சம்பந்தமில்லாதது போல் எனக்கு எப்போதும் தோன்றுவதால் இது போன்ற படைப்புகள் வரும் போது நீங்க இப்படிலாம் கூட எழுதுவீர்களாவென ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்.

கப்பி | Kappi said...

en comment enga??

கதிர் said...

//நிறைவான கதை. உங்களுக்கும் சீரியஸ்னஸுக்கும் சம்பந்தமில்லாதது போல் எனக்கு எப்போதும் தோன்றுவதால் இது போன்ற படைப்புகள் வரும் போது நீங்க இப்படிலாம் கூட எழுதுவீர்களாவென ஆச்சரியப்பட வைக்கிறீர்கள். //

நீங்க ஆச்சரியப்படற அளவுக்கு இந்த கதைக்கு தகுதி இருந்துச்சின்னா ரொம்ப சந்தோஷம்.

இப்பவும் கேக்கறேன் சீரியஸ்னஸ்னா என்னங்க? :)

பெரியவங்க நீங்களே பாராட்டும்போது நிறைவா இருக்கு.


கப்பி,

ஒண்ணும் வரலயேப்பா இதுதான் உன்னோட முதல் கமெண்ட். மறுபடியும் போடு (இதை கயமைன்னு சொன்னா அவன் ..... :))

Unknown said...

இதைப் போன்ற உண்மையை வாழ்வில் எத்தனையோ பேர் என்னைப் போல் சந்திந்திருப்பார்கள்.
நிஜமே கதையானது போல்.

கோபங்கள் said...

i saw my character in this story

keep writing

இரா.செந்தில் said...

அன்பின் நிராகரிப்புகள் கொடுமையானவை, மிகவும் நன்றாக் சொல்லப்பட்ட கதை

வெற்றி said...

தம்பி,
மிகவும் அருமையான கதை.

கதிர் said...

பின்னூட்டிய சுல்தான், செந்தில், வெற்றி அனைவருக்கும் எனது நன்றிகள்.