எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, July 07, 2007

எனது ஈரான் பயணம் - 2

முந்திய பதிவில் சொன்னது போல ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது என்று
சொல்லியிருந்தேன் பிரபலான ஒருவரை சந்தித்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர்தான் அவருடன் பேசிய அந்த மூன்று மணிநேரங்களில்
எவ்வளவு துயரம் எவ்வளவு இன்னல் அடைந்திருக்கிறார் என்று அறிய முடிந்தது.

பார்த்திபன் என்ற அவர் ஒரு இலங்கைத்தமிழர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பத்து
வருடங்கள் இருந்தவர். இயக்கத்தில் இருந்தவர் என்றதும் மிக ஆர்வத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன். இயக்கத்தில் இருந்த ஒருவருடன் நேரடியாக பேசுவத
இதுவே முதல் முறை.

என் கண்முன்னே என் உறவினர்கள் ஊர்க்காரர்கள் சித்திரவதை செய்யப்படுவதும்
கேள்வி விசாரணையில்லாமல் கொல்லப்படுதையும் காணச் சகிக்காமல் பள்ளியிலிருந்து
இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

இயக்கத்தில் சிறுவர்களை சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுப்பதை விட இளைஞர்களை
சேர்க்கலாம் இயக்கத்தில் நீங்கள் இணையும்போது பதினைந்து வயதிலிருக்குமா?

பதினைந்து வயதுதான். இயக்கத்தில் சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஆயதப்பயிற்சி
தருவதில்லை. முதலில் படிப்பு பின்பு அவரவர்க்கு எந்த துறையில் நாட்டம் இருக்கிறதோ அதைப்பொறுத்து படிக்க வைப்பார்கள். தேவையென்றால் வெளிநாட்டுக்கு கூட அனுப்பி
படிக்க வைப்பார்கள். பெற்றோர் இல்லாத பலர் இதுபோன்ற படிப்பினை பெற்றிருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அடிப்படை பயிற்சி கொடுப்பார்கள். நீங்கள் நினைப்பது கட்டாயமாக
சேர்க்க மாட்டார்கள் ஈழவிடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மட்டுமே இயக்கத்தில் சேர்க்கப்படுவார்கள்.

2005ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவித்த போது இஅயக்கத்திலிருந்து வெளிவந்தேன்.
பின்னர் கருணா அணி பிரிந்து சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவுடன்
இயக்கத்திற்கு திரும்பவில்லை.

இயக்கத்தில் இருந்த காரணத்தால் உள்ளூர் போலிசாரால் அடிக்கடி சிறை சென்று வர
நேர்ந்தது எந்த காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் சிறையில் கழித்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம், லட்சம்னு கொடுத்து வெளியே வந்தேன். என்னுடன்
இருந்த பொடியன்கள் பலரை சிறையில் அடித்தே கொன்று விட்டார்கள். மிஞ்சியிருப்பது
நான் மட்டுமே. ஒருவேளை அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பா
இறந்திருப்பேன்.

சென்ற வருடம் என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னை
பிடித்துச்சென்றார்கள். என்ன குற்றம் என்றே தெரியாமல் கையெழுத்திட்டேன். ஆறுமாதம்
சிறைதண்டனை. சிறை என்றால் சாதாரண சிறை இல்லை. மூன்றுக்கு ஆறு அளவில்
உள்ள சிறையில் இரண்டு பேர் நெருக்கியடித்து இருக்க வேண்டும். மலஜலம் கழிப்பது
எல்லாமே அதே அறையில்தான். வருத்தம் வந்து விட்டால்கூட மருத்துவ வசதி
கிடையாது. கேட்டால் அடிப்பார்கள் என்று வருத்தம் வந்த சேதிகூட யாரும்
சொல்வதில்லை. டாக்டர் குறித்த நாளில் பிரசவம் ஆனதா, என்ன குழந்தை
பிறந்தது, சுகப்பிரசவமா என்று எதுவுமே தெரியவில்லை.

கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் சந்திக்கும் ஒருநாளில் என் மனைவியும் குழந்தையும்
வந்திருப்பதாக சொன்னார்கள். மிகுந்த ஆவலுடன் முண்டியடிக்கும் கூட்டத்தின் நடுவில்
பயங்கர சப்தத்திற்கு இடையில் ஓடினேன். என் மனைவி முன் நின்றும் என்னை
அடையாளம் தெரியவில்லை. நான்கு மாதம் முகம் வழிக்காமல், முடிவெட்டாமல் உடல்
இளைத்து இருந்தேன். எதிரில் நின்ற என் தாய் தந்தைக்கே என்னை அடையாளம்
தெரியவில்லை சில வருடங்களுக்கு முன் மணம் செய்த பெண்ணுக்கு எப்படி தெரியும்.

முதல் முதலாக என் குழந்தையை தூக்கும்போது கையில் விலங்கோடு தூக்கினால்
எப்படி இருக்கும்? குற்ற உணர்ச்சியோடு திரும்பினேன். எதிரில் ஜெயிலர் சீக்கிரம்
சீக்கிரம் என்று அவசரப்படித்தினார். நான் பார்க்க விரும்பவில்லை என்றும் என்
குழந்தையை முதல் முதலில் கைவிலங்கோடு தூக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்து
நகர்ந்தேன்.

திடீரென்று கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. யார் என்ன பேசுவது என்று திகைத்த
போது மறுபடியும் அவரே தொடர்ந்தார்.

வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த காரணத்தால் வெளிநாடு தப்பி வர முடிந்தது.
வசதியில்லாத நிறைய பேர் வீதியில் நிற்கிறார்கள். வசதியாக வாழ்ந்த குடும்பம் இன்று தெருவிலும், மரத்தின் அடியிலும் குடியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பொருள்களை
கொள்ளை அடித்து அப்படியே வீட்டை நொறுக்கி விடுவார்கள்.

முதலில் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன் நாளாக நாளாக போலிசார்
எல்லா வழக்குகளுக்கும் என்னையே தேடி வந்து இழுத்து செல்லவே. அவசர அவசரமாக
எங்காவது செல்லவேண்டுமே என்று துபாய் வந்தேன்.

எங்க வேலை செய்யறிங்க?

எங்கயும் வேலை செய்யலங்க. வேலை தேடினேன் கிடைக்கவில்லை. விசா மேல விசா
போட்டு இது மூணாவது விசிட். வேலையும் கிடைக்கல பணமும் செலவாகிட்டே இருக்கு.
வீட்டுக்கு பணம் அனுப்புவது இல்லாமல் வீட்டிலிருந்தே வரவழைத்து செலவு செய்து
கொண்டிருக்கிறேன். நாட்டுக்கும் திரும்ப முடியாமல் இங்கயும் இருக்க முடியாமல்
ரொம்ப சிரமமாக இருக்கிறது என்றார்.

நண்பர்கள், உறவினர்கள் யாரும் இருந்தால் அவர்கள் மூலமாக ஏதாவது ஒரு வேலைக்கு
முயற்சி செய்யலாம்தானே?

என் கூட்டாளி பொடியன்கள் எல்லாருமே சாதாரண வேலை செய்பவர்கள்தான் இருப்பினும்
அவர்கள் மூலமாக கிடைத்த ஓரிரு வேலையும் இரண்டு மூன்று நாட்களுக்கு செய்தேன் பிறகு
திருப்பி அனுப்பிவிட்டார்கள்.மேலும் செலவழிக்க பணமும் இல்லை இந்த விசாவிலாவது
வேலை கிடைக்காவிட்டால் நாடு திரும்புவதை தவிர வேறு வழியில்லை.

என்ன வேலை தெரியும்?

டெய்லரிங் வேலை நல்லா தெரியும். துணிகளை வெட்டி வடிவா தைப்பேன் என்று கூறவே
அங்கிருந்து துபாயில் டெய்லர் கடை வைத்திருக்கும் நண்பருக்கு பேசி ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டேன். ஆள் அனுப்புங்க வேலை தெரிஞ்சா எடுத்துக்கொள்கிறேன்
என்று கூறினார்.

விசா கிடைத்து துபாய் வந்ததும் மறக்காமல் போன் செய்யுங்கள் என்று தைரியம்
கூறிவிட்டு வந்தேன். இன்னும் எத்தனை காலம் அகதிகளாக இவர்கள் வாழ்க்கை
அமையுமோ தெரியவில்லை. கடைசியாக ஒன்று சொன்னார் இந்தியா நினைத்தால்
உடனே பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் கொஞ்ச
நாளில் எங்கள் நாட்டிலே வாழும் நிலை ஏற்படும் என்று உறுதியாக கூறினார்.

மெய்ப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எங்கள் கண்ணீருக்காக, எங்கள் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள்
வெகுசிலரே. சுப.வீ,பழ.நெடுமாறன் அய்யா, வைகோ போன்றவர்கள்தான் என்றார்.
உடனே கொண்டு சென்றிருந்த ஆ.வி இதழில் சுப.வீ எழுதும் "அது ஒரு பொடா காலம்"
பகுதியினை காட்டினேன். ஆர்வத்துடன் படித்தார்.

இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.

15 comments:

Anonymous said...

//இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.//


எனக்கும் இந்த ஆதங்கம் நிறையவே உண்டு...

குசும்பன் said...

தம்பி அருமையாக எழுதி இருக்கிறீர்கள்,மனதை கனக்க செய்கிறது. அவருக்கு வேலை கிடைக்க முயற்ச்சி செய்வோம்,
புலிகளை எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஆதரிக்கும் இருவர் சுப.வீ,பழ.நெடுமாறன் மட்டுமே.......
ஏமாற்று பேர்வழி.(கோடிட்ட இடங்களை நிரப்புக).

அபி அப்பா said...

தம்பி! எனக்கு அவர் போன் நம்பர் வேண்டும். ////இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.//


எனக்கும் இந்த ஆதங்கம் நிறையவே உண்டு... //

ரிப்பீட்டேய்!!!

Ayyanar Viswanath said...

/இந்தியா நினைத்தால்
உடனே பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது./

இன்னுமா தோழா!!
முந்தய கதைகள் மறந்துபோனதா?

கதிர் said...

அபிஅப்பா,

அவரிடம் மொபைல் இல்லை. அவராக நம்மள தொடர்புகொண்டால்தான் எதாவது செய்ய முடியும். துபாய் வந்தவுடன் போன் செய்வார் என்று நினைக்கிறேன்.

Santhosh said...

ரொம்ப நல்லா கோர்வையாக எழுதி இருக்கே கதிர். அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அங்கு இருக்கும் பதிவர்கள் யாராவது அவருக்கு உதவ முடிந்தால் உதவலாமே? நானும் ஒரு இலங்கைத்தமிழரிடம் பேசிய பொழுது அவரும் இதைப்போன்ற ஒரு சோகம் நிறைந்த கதையை சொன்னார் கேட்க கனம் நெஞ்சம் கனத்தது.

கோபிநாத் said...

\\அவசர அவசரமாக
எங்காவது செல்லவேண்டுமே \\

உண்மை....உயிருக்கு பயந்து வட்டிக்கு காசு வாங்கி உயிர் பிழைக்க வருகிறார்கள். என் கூட வேலை பார்க்கும் ஒருவர் இப்படி தான் ரூபாய்.3லட்சம் வாங்கி இப்போ அங்கே வட்டி மட்டும் ரூபாய் 6 லட்சமாம்.

ஆண்களை பார்த்தால் போதும் உடனே சிறைக்கு தான் அடி உதை தானாம்.

அவன் கூறிய மற்றொரு விஷயம்.....அவன் குடும்பத்திடம் பேசி ஒரு வருடம் கடந்து விட்டதாம்.

Jazeela said...

பிராத்தனைகளை தவிர இவர்களை போன்றவர்களுக்கு வேறு என்ன தனியாளாக செய்ய முடியும்? கதிர் அவருக்கு வேலை கிடைக்க உதவலாம். தொழில் தவிர -படிப்பு, மொழி பற்றி ஏதாவது விபரம் தெரியுமா? தொடர்பு கொண்டால் இருக்கும் இடம், நண்பரின் தொலைபேசி எண்ணாவது வாங்கி வையுங்கள். ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.

CVR said...

:-(

கதிரவன் said...

இவரைப்போன்றவர்களின் கனவு சீக்கிரமே மெய்ப்படவேண்டும்.

இவர்கள் இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு

இராம்/Raam said...

கதிரு,

நல்லா எழுதிருக்கே'ப்பா....

வெற்றி said...

தம்பி,

/*வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த காரணத்தால் வெளிநாடு தப்பி வர முடிந்தது.வசதியில்லாத நிறைய பேர் வீதியில் நிற்கிறார்கள். */

உண்மைதான்.

/* இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது. */

ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் எனது தனிப்பட்ட கருத்தை இங்கே சொல்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. அண்ணன் வைகோ அவர்கள் இப்போது இந்திய/தமிழக அரசியலில் அதிகாரம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால் அவர் என்றும் ஈழப் பிரச்சனையில் தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்ததே இல்லை. எங்கு சென்றாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனையை எடுத்துரைப்பவர். கொள்கை உறுதியுள்ளவர்[ஈழப்பிரச்சனையில்]
.ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின்[தமிழக/ஈழ] வாழ்வில் அக்கறை உள்ளவர். புலம்பெயர்ந்து வாழ்ந்த பல தமிழக இளைஞர்களுக்கு சில சிக்கல்கள் வந்தபோது அவர்களுக்குக் கை கொடுத்தவர் வைகோ அவர்களே[இது பற்றி பல பதிவுகளே போடலாம்] இச் சம்பவங்களை வைத்து அவர் விளம்பரம் தேடியிருந்தால் இன்று பலருக்கும் தெரிய வந்திருக்கும். ஆனால் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி காதோடு காது வைத்தாற் போல் செய்ததால் இவை வெளிவரவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரனுக்கு அடுத்ததாக ஈழப் பிரச்சனையில் கொள்கை உறுதியுடனும் இனமான உணர்வுடனும் செயற்படும் ஒரே ஒரு தமிழக அரசியல்வாதி அண்ணன் வைகோ அவர்களே. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று பலமாக இருப்பதற்கு காரணம் அமரர் இராமச்சந்திரன் அவர்கள்தான். அமரர் MGR பெயரைச் சொன்னதும் எப்படிப் பல ஈழத்தவர்கள் நன்றியுடன் அவரை நினவுகூருகிறார்களோ, அதேபோல் வைகோ அவர்கள் மீதும் மதிப்பும், பாசமும் வைத்துள்ளார்கள். [பழ.நெடுமாறன், வீரமணி, சுப.வீ ஆகியோர் இனமான உணர்வுள்ள தமிழத் தொண்டர்கள், அவர்களை
அரசியல்வாதிகள் எனும் வட்டத்திற்குள் இணைக்க முடியாது என நினைக்கிறேன்.]

இளங்கோ-டிசே said...

பகிர்தலுக்கும், அக்கறைக்கும் நன்றி கதிர்.

கதிர் said...

நன்றி பங்காளி.பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

Anonymous said...

No one can not be equal to vaiko .How u peoples are believing yourself like that vaiko is the honest person in this tamilnadu .I don't no why these many ppls are against vaiko .Neengal anaivarum eluthuvatharkkum ,vetti arattai adikka mattume sari paduveergal .