எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, April 19, 2007

மாணிக்கம் பொண்டாட்டி

"சட்டி சுட்டதடா கை விட்டதடா"

எங்கோ ஒலிபெருக்கியில் பாடலை ஒலிக்கவிட்டிருந்தார்கள் இந்த பாடல் ஒலித்தால்
எங்கோ எழவு விழுந்து விட்டதென்று அர்த்தம்.

ஏண்டாப்பா யாருடா அது போய் சேர்ந்தது? அயிலு நாய்க்கரு வாய்ல
பல்லுக்குச்சியோட தெருல நின்னு கேக்கறாரு.

ரோட்டோரமா எச்சிய துப்பிபுட்டு எழவு கேக்க ஆவலா வர்றாரு

"அட அயிலு விசயம் தெரியாதா... நம்ம மாணிக்கம்தாங்க புட்டுகிட்டான்"

"நல்லாத்தானே இருந்தான் பயலுக்கு என்னடா ஆச்சு இம்புட்டு சீக்கிரமா போயிட்டான்"

ஒருமாசமாவே பய ஒரு டைப்பாதான் திரிஞ்சான் அயிலு, முகமெல்லாம்
வெளிறிப்போயிதான் கெடந்தான். அப்பவே நெனச்சேன் ஏதோ நோவு பிடிச்சிருக்குன்னு
நான் நெனச்சது சரியாத்தான் போச்சு.

"அங்கிட்டு என்னய்யா வெட்டிநாயம் பேசிகிட்டு இருக்க. பல்லுவெளக்கறசாக்குல ஊர்
கதைய பேசிகிட்டு இருக்கியே வந்து குளிச்சிட்டு சோலிய பாரு"

அயிலு சம்சாரம் வசையாட ஆரம்பிச்சா எட்டு ஊர்லயும் எதிர்த்து பேச ஆள்
கிடையாது அயிலு மட்டும் விதிவிலக்கா என்ன...

"ஊர்கதைய நான் பேசறனாம் இவ சொல்ல வந்துட்டா" மேல சொல்லுய்யா அப்படி
என்னய்யா சீக்கு வந்துச்சி அந்த பயலுக்கு?

கொள்ளிய எடுத்து வெளிய விடு புள்ள, எழவுக்கு போயிட்டு வந்து ஒட்டுக்கா
ஊத்திக்கிறேன்.

யாரு எழவு?

"மாணிக்கமாம்"

"அடபாவி குத்துக்கல்லாட்டம் இருந்தானே" தன்பங்குக்கு கன்னத்தில் நான்கு
விரல்களையும் தாவாங்கொட்டையில் கட்டை விரலையும் பதித்து ஆச்சரியத்தை
வெளிப்படுத்திச் சென்றாள்.

"இந்த காலத்துல சீக்குக்கா பஞ்சம் இப்பதான் வாய்ல நொழையாத பேர்ல
வியாதிங்க வர ஆரம்பிச்சிருச்சே அனேகமா மருந்து கண்டுபிடிக்காத ஏதோ
ஒண்ணாத்தான் இருக்கும்.

வெவரமா சொல்லுய்யா அவனுக்கு சாகற வயசா இது? இப்பதாம்பா புள்ளைக்கு
மொதமுடி எடுத்தாங்க அதுகூட பள்ளியூடத்துக்கு போயிட்டு இருக்கு. பய லாரில
ஏறும்போதே நினைச்சேன் கண்ணு மண்ணு தெரியாம முட்டி சாவான்னு ஆனா
பொம்பள சீக்கு புடிச்சி சாவான்னு எதிர்பாக்கல.

வாய கழுவிட்டு வரேன் பொறவு போலாம் செத்த நில்லுய்யா. மனுசன் கண்ணமூடி
கண்ண தொறக்கறதுக்குல்ல போய் சேந்துடறானே சாகற வயசா இது.

நாலுவருசத்துக்கு மின்னாடிதான் மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகியிருந்துச்சு
பத்தாவது பெயிலான கையோட கிளினரா போனவன் வண்டி ஓட்ட கத்துகிட்டு
இருந்த ஒன்ற ஏக்கர் பூமிய வித்து கல்யாணமும் மீந்த காசுல ஓட்டை லாரியும்
வாங்கினான்.

ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்த குடும்பம்னுலாம் சொல்லமுடியாட்டியும்
ஒரு வேளை சோத்துக்கும் பஞ்சமில்லாத வாழ்ந்த குடும்பம். அவங்கப்பன்
இருந்தவரைக்கும் கொஞ்சம் உழைச்சி நிறைய குடிச்சி போய் சேந்துட்டான்
போனவன் அஞ்சாரு மாசத்துல பொஞ்சாதியையும் கூட்டிகிட்டான்.

புள்ள கைல சிக்குனா சரிப்படுவான்னு சொந்தமெல்லாம் முடிவு பண்ணி கல்யாணத்த
பண்ணி வச்சாங்க. வாய்ச்சவளையும் சும்மா சொல்லக்கூடாது இந்த பயலுக்கு
அம்சமா வாய்ச்சிட்டான்னு ஊரே வாய பொளந்துச்சி. மணல் லோடு அடிக்க போய்
போலிசுல மாட்டின வகைல பொண்டாட்டி நகையெல்லாம் வட்டிக்கடைக்கு போச்சு.

என்னதான் சண்டை சச்சரவு இருந்தாலும் வெளித்தெரியாம கட்டுபெட்டியா குடும்பம்
நடத்துனவதான் சாந்தி பேருக்கேத்தமாதிரி அமைதியான புள்ள அவளுக்கு போய்
இப்படி நடந்திருக்ககூடாதுதான். மூணு வயசுப்பையன வச்சிகிட்டு என்ன கஷ்டபட
போறாளோ தெரில. வழியெல்லாம் யோசனையா வந்துகிட்டு இருக்கு பெருசு.

"என்ன அயிலு பேசாம வந்துகிட்டு இருக்க"

ஒண்ணுமில்ல தொப்பளான் அந்த புள்ள வாழ்க்கை இப்படியாகும்னு யாரு கண்டா
சொல்லு. வந்த வெலைக்கு வித்து தள்ளுன சரக்காட்டமா அந்த புள்ளய இவங்கைல
புடிச்சி கொடுத்தான் அவங்கப்பன். "இன்னமும் ரெண்டு கழுத்து தாலியேற ரெடியா
இருக்க வீட்டுல தாலியறுந்த ஒருத்தியா" நெனச்சிகூட பாக்கமுடியலப்பா தொப்பு

பொண்ண பெத்தவன் கதியெல்லாம் இதுதான் ஒண்ணே போதுமின்னு நிறுத்தியிருந்தா
சாடியில்லாம இருக்குமல்ல. நானெல்லாம் பாரு ஒரு பொண்ண கட்டிக்குடுக்கவே
ஓட்டாண்டியாகி நிக்குறேன் இதுல மூணு பொட்டைய பெத்தெடுத்தா சிக்கல்தான்.

யோவ் தொப்பு எந்த நேரத்துல எதய்யா பேசுற? உன் வீட்டு சமாச்சாரத்த பேசத்தான்
தோள்ல துண்ட போட்டுகிட்டு வந்தியா. அங்கயும் கொலப்பெருமைய பேசிகிட்டு
இருக்காம எழவு வீட்டுக்கு வந்தமா போனமான்னு இருக்கணும் புரியுதா.

நல்லத சொன்னா ஏம்பா சலிச்சிக்கிற அவம்போனது எனக்கு சந்தோஷமா என்ன?

"பொண்டாட்டிய வனப்பாக்கிட்டு போயிட்டானே அவபாடு என்ன ஆகுமோன்னு
நினைச்சி நானே விசப்படறேன்".

"உங்கண்ணயெல்லாம் கரும்பாறைல வச்சி தேய்க்கணும்யா" உள்ளுக்குள்ள அயிலு
முனகியது தொப்பளான் என்கிற தொப்புக்கு கேட்டிருக்காது. சங்கட்டமான நேரத்துல
கோணாண்டிக்கு புத்தி நாலாபக்கமும் சீறிப்பாயிது பாரு. நினைத்த மாத்திரத்தில்
சாந்தியின் முகம் வந்து போனது.

ஒப்பாரிசத்தம் சமீபத்தை எட்டியிருந்தது.

வாழைமரம்ன்ற பேர்ல எதையோ ரெண்டு பக்கமும் நட்டிருந்தார்கள். நாலு பக்கமும்
கருவேல கழிய விட்டு மேல ரெண்டு குச்சி போட்டு அதுக்குமேல பேருக்கு ரெண்டு
தென்ன ஓலைய விரிச்சி விட்டுருக்கானுங்க.

மைக்குசெட்டுக்காரன் பாட்டை நிறுத்திட்டு பந்தலுக்கு நடுவே இருந்த குச்சியில்
மைக்கை தொங்க விட்டு சத்தம் வருதான்னு டெஸ்டு பண்ணிகிட்டு இருக்கான்.
அந்தாட்ட நாலு கெழவிங்க பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க ஒத்திகை
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வராத அழுகைய எங்கருந்து வரவழைக்கலாம்னு அக்கம்பக்கத்து பொம்பளைக
யோசிச்சிட்டு வராததினால நாடகபாணில அழுதுகிட்டு இருக்காங்க. ரத்த சொந்தமான
அஞ்சாறு பொம்பளைக மாருல அடிச்சிகிட்டு அழுகுதுங்க சாந்தியோட அம்மாவும்
அதுல ஒருத்தி அவளோட புருசங்காரன் வாயில துண்ட பொத்திகிட்டு கண்ண
கசக்கிட்டு இருந்தான்.

மத்த சம்பிரதாய வேலைகள செய்யிறதுக்கு ஆள் இல்லாம தடுமாறி நிக்கிற
எழவு வீடு.

பக்கத்து வீட்டுல குடியிருக்கற வார்டு மெம்பரு கோயிந்தன் எல்லாத்தையும்
நாந்தான் இழுத்து போட்டு செய்யிறேன்னு அவங்குடுத்த சவுண்டுலயே தெரியுது.
ஏடாகூடமான பய இவன் ஒத்தாசை பண்றான்னா கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.

தன் பங்குக்கு ஏதாவது செய்யணுமின்னு வந்த சொந்தங்க யாரு, வராம விட்டது
யாரு, வர நிக்கறவங்க யாருன்னு விசாரிச்சி எழவு செலவுக்கு ஆயிரம் ரூவாவையும்
வெட்டி விட்டாரு அயிலுநாயக்கரு.

பொண்ணு முகத்த பாக்கணுமின்னு நாலஞ்சு முறை உள்ளுக்கு தலய விட்டு எட்டி
பாத்தும் சாந்திமுகம் கண்ணுக்கு சிக்கல.

அழுது கண்ணையும் மூக்கையும் முந்தானைல தொடச்சிகிட்டு ஒரு செட்டு
பொம்பளைக வெளியேறி போறாங்க.

"நானும் எத்தனையோ எழவு பாத்துருக்கேன் இந்த மாதிரி ஒரு எழவு பாத்ததில்லடி
யெம்மா" புருசன் செத்துப்போனாகூட கண்ணுல ஒரு செட்டு தண்ணி எட்டி பாக்காம
பையன் கூட பந்து விளையாடிகிட்டு இருக்கற மொத பொம்பள இவதான்.

"இப்படியே ஒப்பாரி வச்சிகிட்டு இருந்தா வேலைக்காவாது சீக்குல செத்தவன் உடம்பு
சாயந்தரம் வரைக்கும் தாங்குமின்னு இருக்க கூடாது" மேல ஆகவேண்டிய வேலைகள
பாருங்க தொப்ப பக்கத்துல இருந்த பெருசுங்ககிட்ட பேசிகிட்டு இருக்கு.

"யோவ் கொஞ்ச நேரம் வாயபொத்திகிட்டு சும்மா இருய்யா"

அயிலு உள்ள போய் பாக்கறாரு நெசமாவே பையன் கூட பந்து உருட்டிதான்
வெளாடிட்டு இருக்கா சாந்தி.

"பொம்பளையா இவ" எழவு கூட்டியவர்களின் சத்ததையும் மீறி அவள் காதுகளை இந்த
வார்த்தைகள் எட்டியிருக்ககூடும்.

"யாருப்பா பொட்டழிக்க நாலு அனாதைகெழவிங்கள கூட்டிகிட்டு வாங்கய்யா" சட்டு
புட்டுன்னு சோலிய முடிச்சி சுடுகாட்டுக்கு கொண்டு போவோம்.

"இந்தாம்மா இப்படி வந்து உக்காரு பூவு பொட்ட எடுக்கணும்" வாயில் வெற்றிலைக்
கறையுடன் இருந்த ஒரு கெழவி அழைப்பிற்கு காத்திருந்தவள் போல எழுந்து வந்து
அமர்ந்தாள்.

என்னடியம்மா இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்களே புருசன் போயிட்டா விழுந்து
பொறண்டு அழுவுறாங்க உங்கண்ணுல ஒரு சொட்டு எட்டிப்பாக்கலயே செத்தது உன்
புருசந்தானே?

மொத்தக்கூட்டமும் அழமறந்து சாந்தியின் முகத்தை ஏறிட்டு பார்க்க ஆரம்பித்தன.

"மவுனமாக அமர்ந்திருந்தாள்"

மனசுக்குள்ள எதாச்சும் வச்சிருந்தா அழுது தீத்துடும்மா சாந்தி மனசுக்குள்ளேவே
பொத்தி வச்சிருந்தா நல்லா இருக்காது.

"எனக்கு அழுகை ஒண்ணு வரல" பதிலை கேட்ட அத்தனை கூட்டமும் பேயறைந்தது
போல நின்றது. கொட்டகையில் தொங்கிக்கொண்டிருந்த மைக்கில் மரண ஓலமிட்ட
சில கிழவிகளும் உள்ளறைக்கு வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"இப்படியும் ஒருத்தியா" சாந்தியின் அம்மா செய்வதறியாது திகைத்து பெண்ணின் அருகில்
வந்து நின்றாள்.

"என்னடி இது இப்படி பண்ணிகிட்டு இருக்கவ?" கேள்வி வந்த திக்கில் நிமிர்ந்தாள்.
பெத்த தாய் கேக்குறா வாய தொறக்கறாளா பாரு...

"போனவங்க சும்மாவா போனாங்க எனக்கும் சேத்துல்ல கொடுத்துட்டு போயிருக்காங்க"

சிறிதும் பிசிறில்லாமல் வெளிவந்த பதிலில் உறைந்து நின்றது சனம்.

Tuesday, April 17, 2007

எனக்குள் நான்...

தினமும் சந்திக்கும் நபர்தான்
தினமும் சிறிதளவேனும் புன்னகை சிந்துபவர்தான்
இன்று வினோதமாக...

தாயின் கரம்பற்றிய குழந்தை
தெருமுனையை தாண்டும் வரை திரும்பியபடி
பார்க்கிறது வினோதமாக....

இளைஞர்கள் சிரித்தபடி வருகிறார்கள்
என்னைக் கடந்தபின் அவர்களின்
சிரிப்புக்கு கருப்பொருளானேன்

பாவத்தையும் கழிவிரக்கத்தையும்
வெளிக்காட்டியபடி
என் வயதையோத்த வயசாளிகள்

பார்ப்பவர்களின் பேசுபொருளானேன்
நான் பேசாதிருந்தும்

அனைவரும் விலகுகிறார்கள்
எனக்குள் நான் பேச ஆரம்பித்ததும்...


சமீபத்தில் படித்த இந்த கவிதை கண நேரம் சிந்திக்க வைத்தது கவிதையின்
ஒவ்வொரு ஆழ்ந்து ரசித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் தனக்குள் பேச
ஆரம்பிக்கும்போது உலகம் அவனுக்கு அந்நியமாகிறது. கிட்டத்தட்ட தியானத்தை போன்றதொரு நிலை.

எழுதியவர் கண்டிப்பாக இப்புற உலகினை மௌனக்கண் கொண்டு பார்த்திருக்கிறார்
என்பது புலனாகிறது. எந்நேரமும் சலசலவென்று பேசும் மக்கள் கூட்டத்தில் இருந்து
விலகி மௌனம் காத்தலே ஒரு வித்தியாசம் என்றாகிப்போன இந்த உலகத்தில்
தனக்குள் ஒருவன் பேசினால் எப்படி இந்த சமூகம் பார்க்கும் என்பதை இயல்பாக
கவிதையில் வடித்திருக்கிறார். எதுவுமே மிகையாகிப்போனால் சலிப்பு தட்டி விடும்
நம் கவிஞர்கள் காதல், பெண், நிலா, மலர்கள், தேவதைகள், கனவுகள்
இதையெல்லாம் தாண்டி வெளிவந்து இயல்பான கவிதைகள் வடிக்க ஆர்வம்
காட்ட வேண்டும். அதற்கு முன் உதாரணமாக இக்கவிதையினை சொல்லலாம்.

பி.கு

இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.

Sunday, April 08, 2007

எதிர்பாலின ஈர்ப்புகள்!!!

எதிர்பாலினம் மேல் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எந்த வயது
ஆனாலும் பருவத்துக்கு ஏற்ப அது மாறுபடுகிறது. வாலிபத்தில் பெண்களை கவர
ஏக்கப்பட்ட யுக்திகள் செய்கிறார்கள். அன்பை பெற, காதலைப் பெற, நட்பைப் பெற
என எந்த பருவத்திலும் ஏதாவதொன்றை செய்துகொண்டேதான் இருக்கிறோம்
தன்னிச்சை செயல்போல.

ரெண்டு நாள் முன்னாடி என்னோட நண்பன் ஒருத்தன் வந்தான். அதிக பழக்கமில்லை
நான் படித்த கல்லூரியில் படித்ததாக சொன்னான்.(ஒழுங்கா காலேஜ் போயிருந்தாதான
தெரியும்) அப்படியே துபாய் வந்து ஒரு வருட பழக்கம் மரியாதையான பையன்.
இங்க பக்கத்துலதான் இருக்கேன் பாத்து ரொம்ப நாளாச்சு வா பாப்போம்னு
கூப்பிட்டதால போனேன். அங்க ஒரு பொண்ணு கூட உக்காந்திருந்தான்.
மடிமேல ஒரு மடிக்கணினி(நாதாறி இதுல படம் பாக்கறது எப்படின்னு எங்கிட்ட
கேட்டது இது)

"வாடா எப்படி இருக்க?"

"அடப்பாவி இதுக்கு முன்னாடி என்னை வாடா போடான்னு கூப்பிட்டதில்ல
ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா எப்படிலாம் படம் காட்றானுங்க"

நான் நல்லாதான் இருக்கேன் இவுங்க யாரு?

"இவங்க என் கொலீக் பேரு கனிமொழி"

"நல்ல தமிழ்ப்பெயர் எனக்கு ரொம்ப பிடிச்ச பேருங்க"

"என்னோட பேர் கதிர்"

என்னடா மச்சி லேப்டாப்ல படம் பாக்கறது, பாட்டு கேக்கறதுலாம் எப்படின்னு
இப்ப கத்துகிட்டயா? பாவிப்பய ஒண்ணுமே தெரியாம லேப்டாப் வாங்கிட்டான்
நாந்தாங்க எல்லாத்தையும் கத்துகுடுத்தேன். (எனக்காடா ஆப்பு வைச்ச நீயி)

பையன் திரு திருன்னு முழிக்கறான்

மாப்ள நாம அந்தபக்கம் போய் தனியா பேசுவோம் வான்னு அப்படியே
அத்துவிட்டு கூட்டிகிட்டு வந்துட்டான்.

இந்த மாதிரி நண்பனா இருந்தாலும் பக்கத்துல ஒரு பொண்ணு இருந்துட்டா கெத்து
காமிக்கிறேன்னு இப்படி பண்றானுங்க. எது இவனுங்கள இப்படி பண்ண வைக்குது.

ஒரு பைக் சண்டியர் நம்ம ப்ரெண்டு தலகீழ ஓட்டுவாரு அதுவும் பொண்ணுங்க
ட்யூஷன் விட்டு வர்ற நேரம் வீலிங், ஸ்கிட்டிங்னு இல்லாத ரவுசு ஒருநாள்
எக்குத்தப்பா ஒரு பிகர் முன்னாடி வீலிங் பண்றேன்னு சில்லறை வாங்கி ரெண்டு
பல்லு அவுட்.

ஏன் இப்படி இயல்புக்கு மாறா நடக்கறது? எல்லாமே ஒரு ஈர்ப்புதான், எந்த
நேரத்துலயும் நாம அடுத்தவங்க கவனத்துல இருக்கணும். நம்மள பத்தி நாலு
பேர் நினைச்சிட்டே இருக்கணும். ஆனா இந்த பொண்ணுங்க பாருங்க எந்த
கவலையுமில்லாம அதுகபாட்டுக்கு இருக்கும். நம்மாளுங்கதான் உழுந்து பிறண்டு
வித்தை காட்டுவானுங்க.

சுகந்தி க்ராஸ் பண்ணான்னா பாண்ட்ஸ் பவுடர் வாசனை அடிக்குதுன்னு அடுத்த
மாச மளிகை லிஸ்ட்ல அதை சேக்க சொல்லி அடம்பிடிச்சி அடிவாங்கியிருக்கேன்.
நாமளும் அதே பவுடர போட்டா வாசனையாவும் இருக்கும் மேட்சிங்காவும்
இருக்கும்னு ஒரு எண்ணம்.

நம்ம பய ஒருத்தன் இருக்கான் கார்த்தி கார்த்தின்னு சதா க்ளாஸ் பொண்ணுங்களுக்கு
சேவை செஞ்சிகிட்டே இருக்கணும்னு நல்ல எண்ணம். பயாலஜி லேப்ல எலி,
தவளை சோதனையின் போது அவங்கவங்க கண்டிப்பா எலி, தவளை பிடிச்சிட்டு
வரணும். நம்ம பய வீட்டுல எலி ஜாஸ்தி. மச்சி எனக்கும் சேர்த்து புடிச்சிட்டு
வாடான்னு சொன்னா எங்க வீட்டுல இருக்கறதே ஒரே ஒரு எலி. அதையும்
உங்கிட்ட குடுத்துட்டா நான் எங்க போறது? வேற எங்கனா பாத்துக்கன்னு
சொல்லுவாரு. மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.

இதே தவளை பரிசோதனைன்னா கேக்கவே வேணாம் பக்கத்துல எதாச்சும் ஏரி,
குளம், குட்டைன்னு விழுந்து எந்திரிச்சி ரெண்டு கைலயும் அஞ்சாரு தவக்களைய
பிடிச்சிகிட்டு வீரமா நடந்து வருவாரு. இப்படி டிஸ்ட்ரிபியூட் பண்றதாலயே அவர்
பேர் தேவர் பிலிம்ஸ்னு ஆகிப்போச்சு.

அஞ்சாப்பு படிக்கும்போது மதியம் கணக்கு வாத்தி பீரியடுன்னா டவுசர் ஈரமாகும்
எல்லாருக்கும். ஒரு காதுல பெரிய ஓட்டை இருக்கறதுனால அவர் பேர் தொளக்காது
வாத்தி. இவர் குடுக்கற தண்டனையே வித்தியாசமா இருக்கும். அதாவது ஒரு
கேள்வி கேட்டு நமக்கு தெரியலன்னு வச்சிக்கோங்க அந்த கேள்விக்கு எவன்/எவள்
சரியாக சொல்றாங்களோ அவங்க வந்து ரெண்டு கன்னத்துலயும் ஒரே நேரத்துல
அடிக்கணும். பையனே சரியான விடை சொல்றான்னா முன்பகைய பொறுத்து அடி
பலமாவும்,சன்னமாவும் விழ வாய்ப்பிருக்கு. ஏதோ ஒரு புள்ளைக்கு விடை
தெரியாம போய் பையன் சரியா சொல்லிட்டான்னு வைங்க அந்த புள்ளைக்கு
கன்னம் நோகாம தடவி குடுத்துட்டு வருவான். தம்பி இங்க வா "இப்படி"
அடிக்கணும்னு செவுளே கிழியற மாதிரி அடிப்பாரு தொளக்காது வாத்தி.
இந்த மாதிரி பொண்ணுங்கள்னா மட்டும் தியாகி ஆகி வாத்திகிட்ட அடிவாங்கறது
எதனால?

நானே என் சட்டைய இஸ்திரி பண்ணா சுருக்கம் சரியா போகமாட்டேங்கதுன்னு
இஸ்திரிகாரன்கிட்ட போட ஆரம்பிச்சது சரியா மீசை அரும்பற வயசிலதான்.
யாராச்சும் நம்மள கவனிக்கணும், யாராச்சும் நம்மள நினைக்கணும். இந்த மாதிரி
ஏன் ஹார்மோன் திடீர்னு மாறிப்போகுது.

ஏண்டா இம்புட்டு பேசறியே நீ மட்டும் என்ன ஒழுங்கான்னு யாரும் கேக்காதிங்க
நான் அதே மாதிரிதான்னாலும் ஓவர் பந்தா விட மாட்டேன். சில பேர் இருக்கானுங்க
பிகர்கள பாத்தா ப்ரெண்ட்ஷிப்ப மறந்து ஏத்தமா பேசுவானுங்க பாருங்க அவன்களுக்கு
இந்த பதிவு கண்டனங்களை தெரிவிக்கிறது.

திருந்துங்கடா அரைடவுசர் மண்டையனுங்களா...

தலைப்ப பார்த்து பதிவு நல்லா இருக்கும்னு படிங்க வந்தவங்ககிட்ட மன்னிப்பு
கேட்டுக்கறேன்.

Wednesday, April 04, 2007

முத்தழகு

மன்னிச்சிருங்க மக்கா. அழகுன்னு எதை சொல்றாங்க அப்படின்னு கருத்து
கேக்க போய் இந்த சுற்று விளையாட்டு வர காரணமாயிட்டேன். அழகான
ஆறு போட இலவசம் கூப்பிட்டிருக்காங்க பதிவு எழுத மேட்டர்லாம்
தமிழ்மணத்துல உலாவந்தாவே போதும் சிக்கிடும். அழகு என்பது அவரவர்
பார்வையில் வேறுபடும் என்பது போன பதிவில் நிரூபணமாகிவிட்டது.
எனக்கு பாவனாவை ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா பாருங்க பல பேருக்கு
பாவனா யாருன்னே தெரியல பொதுவான ஒரு ஆளையே இப்படி
சொல்லும்போது அவரவருக்கு தனித்தனியான உலகத்தில் ஒரே அழகு
சாத்தியப்படாது. அழகு என்பது மாறுதலுக்கு உட்பட்டதாக இருந்தாலும் முதல்
தரிசனம் அதை மறக்கச்செய்திடும் அதுவே பின் தொடருமானால் நாம் வேறு
எதுவோ ஒன்றை தேட நேரும். எனக்கு தெரிஞ்ச சலிப்பு தட்டாமல் இருப்பது
மூன்று விஷயம்தான் வாசிப்பு, சாப்பாடு, தூக்கம் இந்த மூணு வேலையையும்
என்னால சிறப்பா செய்யமுடியும்.

நீங்கள்லாம் திட்டறதுக்கு முன்ன நானே மேட்டருக்கு வந்துடறேன்.

1.அழகு

குள்ளவண்டுன்னு ஒரு ஆளு எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல பண்ணையத்துக்கு
வேலை செஞ்சுகிட்டு இருந்தார் (இன்னமும்). பண்ணயத்து வேலைன்னா முதல்ல
என்னன்னு சொல்லிடறேன். வருஷத்துக்கு ரெண்டு புதுத்துணி, மூணு வேலை
சாப்பாடு, உறங்க இடம் வருஷம் இத்தனை மரக்கா நெல் அப்புறம்
பதினாறாயிரம் ரூபாய். அஞ்சு வருஷம் பாண்டு பேப்பர்ல எழுதி குடுத்துட்டா அவங்ககிட்டதான் வேலை செய்யணும். கிட்டத்தட்ட அடிமை மாதிரிதான்.
ஆனா அவங்க வீட்டுல ஒரு ஆளாத்தான் நடத்தினாங்க. எல்லாரும்
அவர் பேர் சொல்லி கூப்பிடவே நானும் குள்ளவண்டுன்னு கூப்பிடுவேன்.
எனக்கு நீச்சல் கத்து குடுத்த, மீன் பிடிக்க, இளநீர் வெட்ட இப்படின்னு
நிறைய கத்துக் குடுத்த குருசாமி.

என் கூட பத்தாவது வகுப்பு படிச்ச ராஜேஸ்வரி ஆர்ப்பாட்டமில்லாத அழகு.
நல்ல கருப்பு வட்ட முகம். முக்கியமா படிப்புல ரொம்ப கெட்டி. மத்த
பொண்ணுங்க ஒரு மார்க் குறைஞ்சாலும் உக்காந்து மூக்க சிந்தி மார்க்
வாங்கிடுவாங்க. ஆனா இந்த பொண்ணு எதுலயும் 95 க்கு குறைஞ்சு
எடுக்காது. பேரமைதியான பொண்ணு. தேர்வுகள் முடிந்து முடிவுகள்
வெளியாகி அந்த பொண்ணுதான் முதல் மதிப்பெண். எல்லாரும்
பாராட்டினாங்க.

காட்டுல கரும்பு வெட்டறாங்க வான்னு குள்ளவண்டு கூப்பிட்டுச்சி, போனேன்.
அங்க நிறைய பெண்கள் கரும்பு சுமந்து ட்ரெய்லர்ல ஏத்திகிட்டு இருந்தாங்க
வரிசையா போன பெண்கள்ல ராஜேஸ்வரியும் ஒருத்தி. சக்திக்கு மீறின சுமை
நாலு கட்டு கரும்பு தூக்கிட்டு போறது ரொம்பவே கஷ்டம். ஏன் இந்த
வேலைய செய்ற நீன்னு கேட்டேன்.

"எம்பொண்ணுதாம்பா அதுன்னு சொல்லிகிட்டே பின்னாடி கரும்பு வெட்டிகிட்டு
இருந்தார் குள்ளவண்டு". ஏன் குள்ளவண்டு படிக்கிற பொண்ண இப்படி
கஷ்டபடுத்தறிங்கன்னு கேட்டேன். லீவ்லதாம்பா இருக்கு அடுத்த வருசம்
கல்யாணம் பண்ணி குடுக்கணும்ல.

"உம்பொண்ணு நல்லா படிக்கும் மேல படிக்க வைய்யி குள்ளவண்டு"

"காசு எங்க இருக்கு படிக்க வைக்க, அப்படியே படிக்க வைச்சா சொந்தத்துல
அவ்வளவு படிச்ச மாப்ள இல்லிங்க தம்பி" அப்புறம் கல்யாணம் பண்றதுல
சிரமம் வந்துடும்.

சொன்ன மாதிரியே கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சி.

இது மாதிரி எத்தனை ராஜேஸ்வரிகள் திறமை வெளித்தெரியாமல்
போயிருக்கும்னு தெரில.

அழகு என்றவுடன் ஆயிரம் விஷயங்கள் மனசுல தோன்றி மறைந்தாலும் அழகும்
அறிவும் ஒருசேர அமைந்த ராஜேஸ்வரிதான் நியாபகத்துக்கு வருது.

*********************************

2. இடம்

இருக்கறது ஏ,சி ரூம்தான் எல்லா வசதியும் கிடைக்குது. சுகமான வாழ்க்கை,
எந்த நேரத்திலும் எதுவும் கிடைக்கும். ஆனா பாருங்க தூக்கத்த தினமும்
போராடித்தான் வாங்க வேண்டியிருக்கு. எங்க வீடு கூரை வீடா இருந்தாலும்
உலகத்துலயே எனக்கு பிடிச்ச இடம் அதுதான். எந்த மூலைல படுத்தாலும் சுகமா
தூக்கம் வரும். திண்ணையில ஆயிரம் கொசுக்களுக்கு இடையில
படுத்தாலும் கன்னா பின்னான்னு தூங்குவேன். கரண்ட் கட்டாகி கும்மிருட்டா
இருந்தா கூட தங்கு தடையின்றி எல்லா அறைக்கும் போய் வருவேன்
அவ்வளோ அத்துபடி. இங்க லொக்கேஷன் மேப் இருந்தா கூட ஆயிரம்
பேர்கிட்ட விசாரிச்சிதான் அத்தாதண்டி பில்டிங்க கண்டுபிடிக்க வேண்டியிருக்கு.
நான் எங்கெங்கயோ படுத்து தூங்கியிருக்கேன் ஆனா வீட்ல படுத்து தூங்கற
மாதிரி ஒரு சுகம் வரவேல்ல அதுவும் படுத்த அஞ்சாவது செகண்டுல எங்க
இருந்து வருமோ தெரியாது. சாப்பிட்ட தட்டை நேக்கா நகர்த்தி வச்சிட்டு
அப்படியே நீட்டிடுவேன் பிறகு தலவாணி இல்லாம பையன்
தூங்குறானேன்னு தூக்கம் கலையாம தலையணைய சொருகி விடுவாங்க.

ஒரு முறை வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருந்தாங்க பத்திரமா இருடா
கண்ணுன்னு சொல்லிட்டு சாப்பாடெல்லாம் இருக்கு பத்தலன்னா பக்கத்து
வீட்டுல போய் நிக்காம தோசை ஊத்தி சாப்பிடுன்னு சொன்னாங்க.
நானும் கண்ணும் கருத்துமா முன்பக்கம், பின்பக்கம் தாழ்ப்பாள் போட்டுட்டு
தூங்கிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா கூரைய பிச்சிகிட்டு தண்ணி ஊத்துது.
என்னடான்னு எந்திரிச்சா எங்கண்ணன் கூரைய பிரிச்சி தண்ணி ஊத்துச்சி
செம கடுப்புல வெளில வந்தா தெருவே நின்னு வேடிக்கை பாக்குது. ரொம்ப
நேரம் கதவ தட்டி பாத்துட்டு கதவு திறக்காமல் போகவே புள்ளைக்கு என்ன
ஆச்சோ ஏதாச்சோன்னு கூரைய பிரிச்சி பாத்து தண்ணி ஊத்திருக்காங்க.
நீங்களே சொல்லுங்க இப்படிப்பட்ட இடத்தை அழகான இடம்னு
சொல்லலாம்தானே?

********************************

3.நிகழ்வு

மறக்கவே முடியாத நிகழ்வுன்னா அது என்னோட ஆறாவது செமஸ்டர்தான்.

சீக்கிரம் போய் உங்க அப்பாவை மடக்குடா HOD ரூம் பக்கம் போய்கிட்டு
இருக்காரு உம்மேல இருக்கற கடுப்புல நீ வச்சிருக்க அரியர்ஸ் எல்லாத்தையும்
புட்டு புட்டு வச்சாருன்னா வசமா மாட்டிக்குவ.

கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் தபால்காரரை
தாஜா பண்ணி நானே வாங்கிடுவேன் அதனால நான் எத்தனை அரியர்
வச்சிருக்கேன்னு அப்பாவுக்கு தெரியாது. கொடுமை என்னன்னா எத்தனை
அரியர் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியாது. முதல் வருஷத்துல நடந்த ஜூனியர்
சீனியர் சண்டை உள்ள போய் வெளில வந்ததினால கல்லூரிக்கு கெட்ட பெயர்.
ரெண்டு செமஸ்டர் எக்சாம் எழுத தடை போட்டுட்டாங்க.

"மொத்தம் பதினெட்டு அரியர்ங்க காலேஜிக்கு கரெக்டா வந்தாலும் எந்த
பரிட்சையிலும் பாஸ் ஆகல" இவனெல்லாம் உருப்படவே மாட்டான்.

வெறுத்து போய்ட்டாரு அப்பா.

"படிக்கறதுக்கு புஸ்தகம் எதுவும் கிடைக்கலயா?"

"மவுனம்."

"படிக்கறதுக்கு இஷ்டம் இல்லயா?"

"மவுனம்"

"லவ்வு கிவ்வு பண்றியா?"

"மவுனம் கூடவே கொஞ்சம் கண்ணீர்"

ஒழுங்கா படிக்கலன்னாலும் பரவால்ல, ஒழுக்கங்கெட்டவன்னு யாரும் சொல்லிட
போறாங்க படிப்ப முடிச்ச உடனே வீட்டுல இருக்காத. எங்கயாவது போய்
பொழச்சிக்கோ அதுவரைக்கும் வீட்டுல இருந்துக்க. தீர்க்கமா சொல்லிட்டாரு

வாழ்க்கையே வெறுத்து போச்சி. அவனவன் கடைசி செமஸ்டருக்கு படிச்சிட்டு
இருக்கான் நான் என்னடான்னா மூணாவது செமஸ்டருக்கான பேப்பர படிச்சிட்டு
இருக்கேன். அஞ்சாவது வகுப்பு பையன ஒண்ணாவது வகுப்புல உக்கார வச்ச
மாதிரி. முதல் வருட பொண்ணுங்க கூடல்லாம் உக்காந்து தேர்வெழுதணும்
இதவிட ஒரு அவமானம் யாருக்கும் வந்துருக்குமான்னு தெரியல இருக்கறது
ஒரே செமஸ்டர்

வைராக்கியமா ஒரு முடிவெடுத்து சாம, பேத, தான, தண்டம், கொஞ்சம்
படிச்சி ஆறாவது செமஸ்டர்ல ஏதோ பேருக்கு பதினெட்டு பேப்பரும் எழுதி
வச்சி வீட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டேன்.

ரெண்டு மாசம் கழிச்சி HOD கிட்ட இருந்து போன்.

"சாதனை பண்ணிட்டப்பா நீ காலேஜ் சரித்திரத்துலயே அதிக அரியர் வச்சவனும்
நீதான் ஒரேடியா எல்லா பேப்பரையும் பாஸ் பண்ணவனும் நீதான்"

என்னால நம்பவே முடியல. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து எப்பவுமே என்னை
காப்பாத்திடுது.

அப்பாவுக்கு போன் பண்ணேன்.

"அப்பா நான் பாஸ் பண்ணிட்டேம்பா"

************************************

4. குறும்பு

நாங்க மட்டும் இல்லன்னா நீ ஏதாச்சும் ஒரு மார்க்கெட்ல கத்திரிக்கா கூறு கட்டி
வித்துகிட்டு இருந்திருப்ப. உன் நல்ல நேரம் எங்க கண்ணுல மாட்டிகிட்டன்னு
அம்மா அடிக்கடி சொல்வாங்க.

அப்போ திண்டிவனத்துல இருந்தோம். மருத்துவர் ஐயா ராமதாசு க்ளினிக்
பக்கத்துல நாலு பில்டிங் தள்ளிதான் நம்ம வீடுன்னு பின்னால அப்பா
சொல்லியிருக்கார்.

அப்போ எல்கேஜி கூட படிக்கல, ஏதோவொரு வெயில்காலம் அப்பாவுக்கு
அம்மை போட்டுருந்ததால என்னை முன்வீட்டில தூங்க வச்சிட்டு எல்லாரும்
பின்கட்டுல இருந்திருக்காங்க. பாட்டிகிட்ட தூங்கறேன்னு அம்மாவும், அம்மாகிட்ட
தூங்கறேன்னு பாட்டியும் என்னை தேடாம விட்டுட்டாங்க.விடிஞ்சி பார்த்தா
என்னை வீட்டுல காணும். ஒருநாள் முழுக்க தேடியும் கிடைக்கல.

மூணு வயசு பையன் ஒருத்தன் பஸ் சக்கரத்துல சிக்கி நசுங்கி போயிட்டான்னு
ஒருத்தர் கொளுத்தி போடவே எல்லாரும் அழுது பொறண்டு ஆஸ்பத்திரிக்கு
ஓடியிருக்காங்க. அங்க ஒருத்தர் மார்க்கெட் பக்கம் அனாதையா ஒரு பையன்
சுத்திகிட்டு இருந்தான் மேல்சட்டை போடாமன்னு சொல்லவே அங்க போய்
பாத்திருக்காங்க.

அங்க நான் அமைதியாக உக்காந்து கத்திரிக்கா கூறு கட்டிகிட்டு இருந்தனாம்.
யார் கூப்பிட்டும் வரல.

உண்மையாவே உன் பையனா இருந்தா உன்ன பாத்ததும் ஓடி வந்திருப்பான்ல
ஏம்மா பொய் சொல்றன்னு மார்கெட்ல இருந்தவங்க எல்லாம் விரட்ட
ஆரம்பிச்சிட்டாங்க

"எனக்கே தத்துக் குடுத்துடும்மா இந்த புள்ளய"ன்னு அந்த பாட்டி அழுதுட்டாங்க.

ஒருவழியா குடும்ப பாட்டையெல்லாம் பாடி கூட்டிவந்தாங்க.

**********************************
5.காடு

காடு ரொம்ப அழகானது யாருமே இல்லாத இடத்தில ஒருநாளை செலவு
பண்ணோம்னா மனசுல இருக்க அத்தனை பாரமும் எங்க போச்சுன்னே
தெரியாது. பக்கத்துலயே கல்வராயன் மலை இருக்கறதுனால நினைச்ச
நேரத்துக்கு போகலாம் வரலாம். விதவிதமான மரங்கள், சுத்தமான காத்து,
நீர்வீழ்ச்சின்னு நிறைய இருக்கும். வெளில இருந்து வர்றவங்கதான் அங்கங்க
கன்னாபின்னான்னு எழுதி வச்சி பாறைய அசிங்கப்படுத்தறானுங்க. சில
பேர் காதல் கவுஜைய எழுதி வச்சி அங்கயே மருந்து குடிச்சி மண்டைய
போட்டு மலையையே ஒரு மர்ம பிரதேசம் ரேஞ்சுக்கு ஆக்கி
வச்சிட்டானுங்க.

எனக்கு இருக்கற ஒரே பிரச்சினை ரொம்ப தூரம் நடந்ததும் ஆரம்பிச்ச
இடத்துக்கு எப்படி வர்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிட்டு இருப்பேன்.
தெய்வாதீனமா யாராச்சும் ஆடு, மாடு மேய்க்கறவங்க வந்தாங்கன்னா அவங்க
கூடவே நடந்து வந்து பஸ் பிடிச்சி வீட்டுக்கு போயிடுவேன்.

பாக்கெட் தண்ணி, பிஸ்லரி, அக்குவாபினா இதுபோல என்னென்னமா
சுத்திகரிப்பு பண்ணி ஒரிஜினல் குடிதண்ணின்னு ஏமாத்துவானுங்க. ஆனா
மலைல கிடைக்கற தண்ணிக்கு ஈடாகாது குடிச்சதும் அடிவயிறு சில்லுன்னு
அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். இதுக்காகவே மலைக்கு அடிக்கடி போவேன்.

**********************************

6. குழந்தைகள்

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

அம்மா சமையல்கட்டுல பிசியா இருப்பாங்க, வேலைக்கு போறவங்களாவும்
இருப்பாங்க, அப்பா குழந்தைங்ககிட்ட அதிகம் பேச மாட்டாங்க. யார்கிட்டயும்
பேசாம மூலைல பையன் உக்காந்துட்டான்னா மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.
அதனால கிடைக்கற நேரத்துல குழந்தைங்ககிட்ட எதையாவது பேச ஆரம்பிச்சி
விட்டா அவங்க போதும் பேசிகிட்டே இருப்பாங்க. முக்கியமா பெரியவர்கள்
அப்படின்ற விஷயத்தை மறந்துபோய் குழந்தையா மாறி பேச ஆரம்பிக்கணும்
இல்லன்னா கூச்சப்பட்டு ஒரு சில வார்த்தைகள்ல பதில் சொல்லிட்டு ஓடிடும்.

குழந்தைங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் ஸ்கூல்ல மிஸ் சொன்ன கதைய
சொல்றா மாப்ளன்னு அக்கா பையன கேட்டோம்னு வைங்க அவங்க சொல்லாத
கதைய இவன் எங்கங்கோ கொண்டு போய் கேக்கறவன் கேணைன்ற மாதிரி
முடிப்பாரு சிரிச்சிகிட்டே கேட்டோம்னா இன்னும் பல கதைகள் சொல்வாரு.

ஓட்டல்ல, பஸ்ல, கல்யாணத்துல, இப்படி எங்க குழந்தைகள பார்த்தாலும்
கண்ண சிமிட்டி, முகபாவனைகள் காட்டி, கன்னா பின்னான்னு சேட்டை
செஞ்சு அந்த குழந்தை நம்மளயே பாத்துகிட்டு இருக்கறமாதிரி செஞ்சுடுவேன்.
ஒரு சில குழந்தைங்க பாதில நம்ம சேட்டைய பாத்து அழ ஆரம்பிச்சுடும்.
(நம்ம முகராசி அப்படி)


****************************************************************************

எழுதி முடிச்சி வாசிச்சா வியர்டு பதிவு மாதிரி இருக்கு சரி இவ்வளவு தூரம்
கஷ்டப்பட்டு டைப் பண்ணியாச்சு வேற வழியில்ல மக்கா. எழுதனதுலயே
இந்த பதிவுதான் ரொம்ப பெரியதா இருக்கு. :(

நான் மூணு பேர கூப்பிடணும்ல.


அபிஅப்பா (இவருக்கு பஞ்சாயத்துராஜ்னு ஒரு புது பேர் வச்சிருக்காங்க)
அவந்திகா (கிரிக்கெட் பத்தி நிறைய சொல்றாங்க இப்ப என்ன சொல்ல
போறாங்கன்னு பார்ப்போம்)
அய்யனார் (இவர் எழுதற கவிதை (கவுஜ இல்லிங்க) ரொம்ப அழகா நளினமா
இருக்கு, சமீபத்தில் கிடைத்த நல்ல நண்பர்)

அழகு எல்லாமே "அ" வரிசைல வர்ற மாதிரி இருக்குல்ல :))