வேலை தேடி துபாய் வந்த சமயம். ஏதோ ஒரு குருட்டு
நம்பிக்கையில் ப்ளைட்டு புடிச்சி வந்திட்டேன்.
வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து
அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில்
வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது
தெளிவாகவே புரிந்துவிட்டது. நமக்கு இங்கிலீசு
சுமாராதான் வரும், இந்தியோ சுத்தமா நஹி அப்புறம்
எப்படி வேலை கிடைக்கும்னு எல்லாரும்
பயமுறுத்திட்டாங்க. சரி வந்தது வந்தாச்சி விசா முடியுற
வரைக்கும் ஊர சுத்தி பாத்துட்டு அப்படியே கிளம்பிட
வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். வந்து ஒரு
மாசத்தில பத்து இன்டர்வியூக்கு மேல அட்டெண்ட்
பண்ணிட்டேன். எல்லாமே ஊத்தல்ஸ், சொதப்பல்ஸ்தான்.
நம்ம விட திறமைசாலிங்க இருக்காங்களே
என்ன செய்யறது.
நான் தங்கி இருந்தது துபாயில் தேஹ்ரா என்ற இடத்தில்.
உறவினர்களுடன் இருந்தேன். நம்ம முயற்சி மட்டும்
நிக்கவே இல்ல தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்போதான் ஒரு அழைப்பு வந்தது ஆனால் துபாயில
இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் புஜைரா என்ற
ஊரில் இன்டர்வியூ. கிட்டத்தட்ட மூன்று மணி நேர
பயணம் இங்கிருந்து புஜைரா செல்ல. ஒதுக்கிடலாம்னு
நினைச்சேன் ஆனால் அறை நண்பர்களின்
வற்புறுத்தலால் சென்றேன்.
இவ்வளவு தூரம் யாரும் வரமாட்டாங்க வேலை
கிடைச்சுடும்னு நம்பிக்கைல போனேன். ஆனா எனக்கு
முன்னாடி அங்க பத்து பேர் உக்காந்து இருக்காங்க.
ஏதோ ஓரளவுக்கு அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன்.
இந்த வேலை இல்லாம போனாலும் நல்லதுதான் எவன்
இவ்வளவு தூரம் வந்து வேலை பார்ப்பான். மனசை
தேத்திகிட்டேன்.
நீங்க துபாய் போகணுமா?
ஆமாம்.
எங்க கம்பெனி ட்ரைவர் இப்போ துபாய் போக
இருக்காரு நீங்க வேணா அவர் கூடவே போயிருங்க!
தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு.
வெளிய வந்தேன். கார் தயாராக நின்றிருந்தது. உள்ளே
ஒரு பாகிஸ்தானியன் அமர்ந்திருந்தான்.
இவன் கூட போகலாமா வேணாமா? என யோசித்து பின்
வேண்டாம் என்று அவனை தவிர்த்து நடந்தேன்.
பொதுவாக பாகிஸ்தான் என்றாலே எந்த ஒரு
இந்தியனுக்கும் பிடிக்காது. ஏனென்றால் நம் நாட்டிலே
அமைதியை குலைப்பவர்கள், அப்பாவி மக்களை குண்டு
வைத்து கொல்பவர்கள் என்று தினசரிகளும்
சினிமாக்களும் எனக்கு சொல்லியிருப்பதும் ஒரு
காரணம்.
ஆவோ பாய்! ஆவோ!!
இவண் வேற ஒருத்தன், இந்தியிலதான் பேசுவான் போல
அப்போ கண்டிப்பா இவன் வண்டியில ஏறக்கூடாது!
பஸ்ஸுலயே போயிட வேண்டியதுதான்.
தொடர்ந்து ஹாரன் அடித்து வற்புறுத்தினான். எதுக்கு காசு
வீணாக்கற?, நான் துபாய்தான் போறேன் வந்து ஏறிக்கோ
துபாய்ல இறக்கி விடறேன்.
இல்ல நான் பஸ்ல போயிக்கிறேன்.
இப்போதாங்க பஸ் கிளம்பி போச்சு. இனிமே அடுத்த
பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும். டிக்கெட் கொடுப்பவர்
சொன்னார்.
அடடா! வலிய வந்து கூப்பிட்டான் அவன் கூடவே
போயிருக்கலாம். வீம்பா வந்திட்டோம். ரோட்டை
பார்த்தேன் அவனே வந்து கொண்டிருந்தான்.
என்னருகில் வந்து காரை நிறுத்தினான்.
எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டேன்.
ஆப்கா மதராஸி? ஆஞ்ஜி போட்டேன்!
ஏதோ இந்தியில பேச ஆரம்பித்தான். அய்யா சாமி
எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. இங்கிலிசுல சொல்லு
புரிஞ்சிக்குவேன்.
சாப்பிட்டாச்சா, வணக்கம்னு ரெண்டு மூணு தமிழ்
வார்த்தை சொல்லிட்டு கண் சிமிட்டினான்.
அவரை தெம்பூட்டும் விதமாக சிரித்து வைத்தேன்.
வீரப்பனை கூட அவனுக்கு தெரிந்திருந்தது
உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.
பதினஞ்சி வருஷமா இங்க வேலை செய்யறேன்.
என்னை மாதிரியே அரை குறை ஆங்கிலத்தில்
சொன்னான்.
நானும் அவனும் கொஞ்ச நேரத்திலயே சகஜமாக பேச
ஆரம்பித்து விட்டோம். ஆனால் திடீர்னு அந்த கேள்விய
என்கிட்ட கேப்பான்னு எதிபாக்கவே இல்ல!
"பாகிஸ்தான் பத்தி என்ன நினக்கிற நீ ?"
என்ன சொல்றதுன்னே தெரியலை. நான் நினைக்கறதை
அப்படியே சொன்னா நடு பாலைவனத்தில இறக்கி
விட்டாலும் விட்டுறுவானோ? சரி என்ன ஆனாலும்
பரவாயில்லை.நான் என்ன நினைக்கிறேன் என்பதை
அப்படியே சொல்லிற வேண்டியதுதான்.
எனக்கு சுத்தமா பிடிக்காது. காட்டுமிராண்டிங்க ஊர்
அது.எனக்கு மட்டுமில்ல எந்த ஒரு இந்தியனுக்கும்
பாகிஸ்தானை பிடிக்காது. இந்த காரணத்துக்காகத்தான்
நான் உன்னுடன் வர மறுத்தேன். என் மனதில்
தோன்றியதை சொல்லி விட்டேன்
அவனுக்கு மூஞ்சியே சுருங்கி விட்டது.
எதுவும் சொல்லாம இருந்திருக்கலாமோ, பாவம்
அவன் மனசு கஷ்டப்படறானே என்று
வேதனைப்பட்டேன்.லொட லொடன்னு பேசிட்டு
வந்தவன் அமைதியாக மாறிட்டான்.
நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க
கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டு
மொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது. என்ன
பண்றது தலைமையே சரியில்லையே. நிஜமான
வேதனையுடன் சொல்கிறான் என்பது முகத்திலே
தெரிந்தது!
ஒருவேளை நம்ம நாடு பிரியாமலே இருந்திருந்தா
நல்லா இருந்திருக்குமோ!
தெரியவில்லை என்றேன்.
ஆனால் நான் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறேன்
தெரியுமா?
அது ஒரு புனிதமான நாடு. உங்க நாட்டு கலாச்சாரம்
எனக்கு ரொம்ப பிடிக்கும். காந்தியின் மீது எனக்கு
மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. எனக்கு என் நாட்டு
நண்பர்களை விட மதராஸி நண்பர்களே அதிகம்.
பாகிஸ்தானிகள் ஆறடி உயரத்தில், பருமனாகவும்,
பார்ப்பதற்கு ரவுடி போலவும் இருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன். இவனும் அப்படித்தான் இருந்தான்
ஆனால் இவண் கண்களே சொல்லியது நான் அந்த
ரகமல்ல என்று.
பேச்சு எங்கெங்கோ சென்றது. நான் நினைத்ததற்கு
மாறாக இருந்தது அவரின் குணாதிசயங்கள்.
இரண்டரை மணி நேர பயணம் மாதிரியே
தெரியவில்லை. சீக்கிரம் முடிந்தது போல
தோன்றியது.
விடைபெறும் தருணம். வழக்கமான கைகுலுக்கலில்
எல்லாம் முடிந்தது.
இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சீக்கிரமே வேலை
கிடைக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.
ரொம்ப நன்றி!
இன்ஷா அல்லாஹ் சம்மதித்தால் நாம் மீண்டும்
சந்திப்போம்!
பாகிஸ்தான் மீதிருந்த என் பார்வையை சற்றே திசை
மாற்றி இருந்தார். ஆனால் அவர் சொன்ன ஒரு
வார்த்தையை கேட்டு என்னால் ஆச்சரியப்படாமல்
இருக்கவே முடியவில்லை!
இந்தியாவில்தான் நாமும் இருக்கிறோம் நமக்கு இது
தோணவே இல்லையே! ஏன?
என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக உள்ளதா?
சொன்னது இதுதான்.
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது
புனித
மெக்கா செல்வது கடமையாக கருதப்படும்.
எனக்கும் என் வாழ்வில் ஒருமுறையாவது
தாஜ்மகாலைதரிசிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை.
முடியுமா தெரியவில்லை! வேதனையோடு சொன்னார்!
யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!