மூன்று மாதங்களுக்கு முன்பு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்ற போது மாமா தனது
மகன் சரியாக படிப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டார். தன்னைப்போலவே
டீக்கடையில் டீ ஆத்துகிற வேலை செய்யாமல் கொஞ்சமாவது படிக்க வைக்கலாம்னு
நினைச்சா அத புரிஞ்சிக்காம எந்த நேரமும் எதையாச்சும் வாங்கிட்டு வந்து வளக்கறேன்னு
சொல்லிகிட்டே இருக்கான். போனமாசம் சேத்துவெச்சிருந்த காசையெல்லாம் எடுத்துகிட்டு
மீன் தொட்டி, கலர் மீன், மீனுக்கு தீனின்னு முன்னூறு ரூபாயை செலவு பண்ணிட்டு
வந்தான். இந்தமாசம் நாலு புறாவை வாங்கிட்டு வந்து எந்த நேரமும் அதையே
பாத்துகிட்டு இருக்கான். இன்னிக்கு எங்கயிருந்தோ மூணு பூனைய தூக்கிட்டு வந்துட்டான்.
எல்லாமே ரவ ரவ பூனை. அவனுக்கு எது குடுத்தாலும் முழுசா தான் வளக்கறதுக்கு
செலவு செஞ்சிடறான். பிராணிகள் மேல இருக்கற அக்கறை கொஞ்சமாச்சும் படிக்கறதுல
இருந்தா உருப்படலாம். இந்த வருசம் பத்தாவது தேறுவானான்னு சந்தேகமா இருக்கு.
இப்படி குறைபட்டுக்கொண்டார்.
மாமா பையனான முரளிக்கு படிப்புமேல எந்தவிதமான அபிப்ராயமும் இல்லை. அது
தனக்கு வரவில்லையே என எந்த கவலையும் இருப்பதாக கூட தெரியவில்லை. எனக்கு
அவனை சிறுவயதுமுதலே தெரியும். அறிவுரை சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம்
கிடையாது. அமைதியாக எதையும் கேட்டுக்கொள்வான். அடுத்தநொடி சொல்வதற்கு
எதிராக செய்துகொண்டிருப்பான். கண்டித்தால் கூட சிரித்துவிட்டு நாம் மறந்து சிறிது
நேரம் கழித்துப்பார்த்தால் புறாவையே பார்த்துக்கொண்டிருப்பான்.
மாமா பூனைகளை இரவோடு இரவாக எங்கேயோ கொண்டுபோய் விட்டார். மீன்
தொட்டியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதிகாலையில் கிளம்பிய என்னிடம் நான்கு
புறாக்களை பெட்டியில் அடைத்துக் கொடுத்துவிட்டார். கலங்கிய கண்களுடன் என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான் முரளி. அந்த புறாக்களை எடுத்துப்போக எனக்கு துளியும்
விருப்பமில்லை. எனினும் எதிர்வரும் முழுத்தேர்வில் தேர்ச்சியாகவேண்டுமெனில்
கொஞ்சமாவது படிக்கவேண்டும் என்ற காரணத்தால் நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
புறாக்களை எடுத்துவந்துவிட்டே ஒழிய அதை எங்கே வைப்பது என்று தெரியவில்லை.
நல்ல கூண்டு ஒன்றை செய்யவேண்டும். இதற்கே எனக்கு இரண்டுநாள் ஆனது. புறாவுக்கு
என்ன தீனி போனவேண்டும் என்பதை முரளி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு
வந்தது. கம்பு, கேழ்வரகு, ஒவ்வொரு கிலோ அதுகூட நூறுகிராம் பொட்டுக்கடலை
சேத்து கலந்து ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க மாமா. காலைல ரெண்டு கை, மாலைல
ரெண்டு கை வாசல்ல தூவுனிங்கன்னா ஒவ்வொன்னா பொறுக்கி தின்னும். சிமெண்ட்
அள்ளுற பாண்டு வீட்டுல இருக்கா? இருந்ததுன்னா அதுல நிறைய தண்ணி ஊத்தி
வாசல்ல வெச்சிருங்க. அதுல தண்ணி குடிச்சிக்கும். வெயில் வேற அதிகமா அடிக்குதுல்ல
மதியத்துல அதுல குளிச்சிக்கும். மார்கெட் பக்கம் போனா காய்கறி அடைச்சு வெச்சிருக்க
மரப்பெட்டி கிடைக்கும் அதை வாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல்
இருக்குல்ல அதுமேல வெச்சிடுங்க. அப்பப்போ துடைப்ப குச்சிய ஒடச்சி தீனி போடற
எடத்துல போட்டிங்கன்னா அது கூடுமாதிரி ஒண்ணு ரெடி பண்ணிக்கும். முட்ட
வெச்சிதுன்னா பதினஞ்சி நாள்ல பொறிஞ்சிடும். மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்
முடிக்கும்போது அவனது அழுகை காணாமல் போயிருந்தது.
கிளம்பும்போது அருகில் வந்தான். "மாமா அடுத்த மாசம் நான் லீவ் விட்ருவாங்க
அங்க வந்துருவேன். மஞ்ச தடவிடாதிங்க என்று கேட்டுக்கொண்டான்". எவ்ளோ
அழகா இருக்கு இத போய் யாராச்சும் அடிச்சு சாப்பிடுவாங்களா... ஒழுங்கா படி
என்று சொல்லிக் கிளம்பினேன். பத்து மாத்திரை கொண்ட அட்டை ஒன்றை நீட்டி
"இது நியூரோபின் மாத்திரை இத தண்ணில கலந்து வெச்சிட்டிங்கன்னா ஒரு
நோயும் வராது" என்று கையில் வைத்து அழுத்தினான்.
பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போதெல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள
கோயிலில் புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருந்தவை
எல்லாம் பழுப்பு நிற புறாக்கள். இவை அழகான வெள்ளைப் புறாக்கள்.
சிறுவயதில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கித்தருவார் அப்பா. வாந்தி வராமல் இருக்க அது உதவுதாக சொல்வார். மேலதிகமாக இரு பாலிதீன்
பைகளையும் என் கையில் கொடுப்பார் அதை உபயோகிக்காமல் கர்மசிரத்தையாக யார்
மடியிலாவது வாந்தி எடுத்து வைப்பேன். ஆனால் விவரம் தெரிந்தபிறகு பேருந்து
பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்றவை நின்று விட்டது. இன்னமும்
முரளிக்கு வாந்தி வியாதி நிற்கவில்லை போல. தேர்வு முடிந்த மறுநாள் தனியனாக
பேருந்தில் ஏறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். வருவதற்கு முன்னிரவும் காலையும்
ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறி இருக்கிறான். அதனால் வாந்தி தலை
சுற்றல் இல்லை.
வந்த முதல் வேலையாக புறாக்களை பார்க்க ஆரம்பித்தவன் நாளின் தூங்கும் நேரம்
போக மற்ற நேரங்களில் திண்ணையில் அமர்ந்துகொண்டு மல்லிகைக்கொடி பந்தலின்
மேல் உள்ள மரப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருப்பான். வாழைமரத்தில் சிறிது
நேரம், மாமரத்தில் சிறிது நேரம் தரையில் தானியங்கள் பொறுக்கியபடி சிறிது நேரம்
என புறாக்கள் இருந்தது.
ஒருமுறை திண்ணையில் முரளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல
புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவை கூறையின் மத்தில் ஏறி அங்கேயும்
இங்கேயும் நடந்துகொண்டிருந்தன.
மாமா அங்க பாருங்க கால்ல முடி இருக்கறது பெண் புறா கொஞ்சம் தள்ளி இருக்குதே
அது ஆண்புறா அது ரெண்டும் ஒரு ஜோடி. இந்தப்பக்கம் கூறையில இருக்கறது ஒரு
ஜோடி. இப்ப பாருங்க அந்த பெண்புறாவ அந்த ஆண்புறா மெறிக்கும் பாருங்க.
"மெறிக்கறதுனா என்னடா?"
"ஏறி அழுத்தும்பாருங்க"
"ஏறி அழுத்தறதுனா... என்னடா?"
"அதான் மாமா... அது... அப்பதான் புறா முட்ட போடும்"
"ஓஹ் அதுவா... சரி எத்தன நாள்ல முட்ட போடும்?
அது சரியா தெரியல ஆனா கொஞ்ச நாள்ல முட்ட போடும். ரெண்டே ரெண்டு முட்டதான்
போடும். அது முட்ட போடறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூடுகட்ட ஆரம்பிச்சிடும்.
அப்போ ஆண்புறா என்ன செய்யும்னா அங்க இங்க அலஞ்சு சின்ன சின்ன குச்சிகள
தூக்கிட்டு வந்து போடும். அத வெச்சு பெண் புறா சின்ன மேடை மாதிரி செய்யும்.
அதுலதான் முட்டய போடும். அப்போ யாரும் கூண்டுப்பக்கம் போவகூடாது. அப்படி
போய் முட்டய பாத்துட்டிங்கன்னா அவ்ளோதான் அது முட்டய அதுவே கீழ தள்ளி
ஒடச்சிடும்.
"ஏண்டா அப்டி பண்ணுது... ?
அது அப்டிதான் மாமா...
ஒரு தடவ அப்டிதான் என் ப்ரெண்டு ஒருத்தன் ஆசையா முட்டைய எடுத்து பாத்தானா
அந்த புறா முட்டைய கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.
"ஏண்டா அப்டி?
அது அப்டிதான்னு சொல்றேன்ல. மனுசங்க கை பட்டா அது கூழ் முட்டையாகிடும்னு
நினைக்கிறேன்.
"புறான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?
"ஆமாம்"
"இதுல காட்டற அக்கறைய படிப்புல காமிச்சா நீ பாஸ் ஆகிடலாம் தெரியுமா"
"அதான் எனக்கு வரமாட்டேங்குதே மாமா... என்ன செய்ய?"
"நீ மட்டும் பத்தாவது அப்புறம் பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டேன்னு வையி...
பறவைகள பத்தி ஆராய்ச்சி செய்றதுக்குன்னே ஒரு படிப்பு இருக்கு அதுக்கு பேர்
ஆர்னித்தாலஜி அத படிக்கலாம்". உலகம் முழுக்க இருக்கற பறவைகள பாத்துட்டே
இருக்கலாம். அதபத்தியும் படிக்கலாம் என்ன சொல்ற?
"நெஜமாவா மாமா"
"ம்ம்... படிப்பியா"?
பாக்கலாம் என்றபடி மறுபடி புறாக்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான். படிப்பு சம்பந்தமான
விஷயங்களை அவனிடம் பேச ஆரம்பித்தால் அவமானத்தில் குறுகி நிற்கும் மனிதனைப்
போல முகம் மாறிவிடுகிறது. இதனாலேயே அவனிடத்தில் படிப்பைப் பற்றி மட்டும்
பேசுவதில்லை.
இப்படித்தான் அவனிடம் பேச அமர்ந்தால் புறாவில் ஆரம்பித்து அங்கேயே முடிப்பான்.
கொஞ்ச நேரத்தில நாமும் அப்படியே மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு சுபயோக சுபநாளில் ஆண்புறா சிறு சிறு குச்சிகளை சேகரிக்க ஆரம்பித்தது.
பரபரப்பாக மாறினான் முரளி. தென்னந்துடைப்பத்தில் உள்ள குச்சிகளை ஒவ்வொன்றாக
உருவி புறா இருக்குமிடங்களில் எல்லாம் போட்டான். அதற்காக அத்தையிடமிருந்து
திட்டு வாங்கினான்.
"தொடப்பக்குச்சிய ஒடச்சி போட்ட அப்புறம் அத்தாலயே அடி வாங்குவ நீ..."
வேப்பமரத்தின் காய்ந்த கொப்புகளை உடைத்து அந்தச்சிறிய குச்சிகளை சேகரித்து
வந்து அதற்கு மாற்றாக தூவினான. பிறகு திண்ணையில் வந்து அமர்ந்தான்.
"மாமா இப்ப பாருங்க குச்சி பொறுக்கும்..."
அவன் சொன்னது போலவே புறா தயக்கமாக நடந்து வந்து அலகில் கொத்தியவாறு
பறந்து சென்று கூண்டுக்குள் வைத்தது. நாள் முழுக்க சேகரித்து மறுநாள் பார்த்தபோது
அங்கே தட்டுபோன்ற அமைப்பில் கூடு உருவாகியிருந்தது.
அடைகாக்குற நேரத்துல பெண்புறா வெளியவே போவாது மாமா... இப்போ மத்தியானம்
உள்ள போச்சுன்னா அவ்ளோதான். மறுநாள் மதியானமாத்தான் வெளிய வரும் அதுவும்
அதிகம்போனா ஒருமணிநேரம்தான். அந்த ஒருமணி நேரந்தான் ஆண் புறா அடைகாக்கும்.
மத்தபடி எல்லாமே பெண்புறாதான் செய்யனும். அது ரொம்ப பாவம் மாமா.
புறாக்களைப் பற்றியே பேசுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.
முட்டை வைத்த மறுநாள் இங்கு கிளம்பி வந்திருந்தேன். இரண்டு வாரங்கள்
கழித்து தொலைபேசியபொழுது முரளி பேசினான்.
"மாமா இன்னிக்கு காலைல ரெண்டு முட்டையும் பொரிஞ்சிடுச்சி". ரெண்டு குட்டிப்புறா
இப்போ இருக்கு. மொத்தமா ஆறுபுறா இருக்கு நம்மகிட்ட...
இந்த வித்யா தொத்தாகிட்ட சொல்லுங்க மாமா. அடிக்கடி குட்டிப்புறாவ தொட்டுப்பாக்கறாங்க
எதாச்சும் ஆயிடும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க
மாமா...
"ம் சொல்றேண்டா போன குடு"
இப்போ குட்டிப்புறாவுக்கு பெண் புறாதான் எல்லாமே கொடுக்கும். குட்டிப்புறா
ஆ னு வாயபொளந்துட்டு இருக்கும் அது உள்ள தீனிய போடும்.
சரிடா போன வைக்கிறேன்.
போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் Isle படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்
பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அவர் போக்கிலே விட்டால் நிச்சயம் அவன் ஒரு அறிஞன். அதற்கான ஆரம்ப வேலைகளை செய்து விடத்தான் ஆளில்லை அவருக்கு.
சொல்லி இருக்கும் விதம் அருமை கதிர்.
புறாக்களின் மீது சிறுவன் கொண்ட பற்றி சிறுகதை அழகா இருக்கு!
இதே கேரக்டர்ல ஒரு பையன் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்கான் பட் என்ன ஒண்ணு அவுங்க அப்பா ஒரு முடிவு பண்ணி பையனுக்கு படிப்பை விட இதுல்ல நல்லா இண்ட்ரஸ்ட் இருக்குன்னு நல்லா புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிறாரு!
:)
உன் ஒருத்தன் எழுத்தை படிக்கும்போதுதான் எனக்கு எழுத்து கூடவே வேற ஏதாவது சிந்தனைகள் வந்து தொலையுது :-((
நல்லா இருடா ராசா!
ஒரு சாமான்யன் புறா வளர்க்க தேவையான அனைத்து தகவல்களும் சொல்லிட்டிங்க!
நன்றி!
ஐலே இன்னும் பார்க்கல!
அறிஞன் ஆவதற்க்கான வாய்ப்பு இருக்கலாம் ஆனா முயற்சின்னு ஒண்ணு வேணுமில்லயா... நன்றி சுல்தான்.
ஆயில்யன்,
நன்றி. கிட்டத்தட்ட எல்லாருமே இதேபோல கேரக்டரை பாத்திருப்பாங்க.
சென்ஷி,
வேற எதாவதுன்னா...
வால்பையன்,
பாருங்க, மேட்டர் நெறைய இருக்கு.
\\போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் Isle படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்
பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்\\
படம் பார்த்துட்டேன்...;)
எழுதின முறை பிடிச்சிருக்கு!
நானும் பறா வளக்க ஆசைப்பட்டேன் அப்பறம் அது நடக்கல...
சில நேரங்களில் புறாக்களை பர்த்துக்கொண்டே இருக்கலாம், அதுவும் அவளுகள் வளர்க்கிற புறாக்களை கவனிப்பது......
அது சரி இந்தப்படம் ஒரு ரவுண்டு வருது போல,இன்னும் பாக்கல :)
எங்க வீட்ல எப்பவும் 15 முதல் 20 ஜோடி புறா இருக்கும்... :) நல்ல ஆனந்தமான அனுபவங்கள்..
குஞ்சுப் புறா தாயின் வாயிற்குள் தனது அலகை செலுத்தி இரையை உண்ணும் என்று நினைக்கின்றேன்.
உயிர்களை நேசிக்கும் இந்த மாதிரியான குழந்தைகளால் தான் அழிவிலிருந்து பூமியைக் காக்க முடியும்.
கதிர்!எப்படியிருக்கீங்க?
தேடலில் வாசித்தவை.பகிர்வுக்கு நன்றி.
Post a Comment