கொலை நடந்த பிறகு அந்த இடத்தைப் பார்ப்பதும் கொலையை நேரில்
பார்ப்பதற்குமே கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். நான் முதல் முதலாக
கொடூரமான கொலையைப் பார்த்தபோது எனக்கு வயது நினைவில்லை. அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிலிருந்து சரியாக ஏழு வளைவுகளை கடந்துசென்றால் வரும் ஏழாவது முனை ஏரிமுனை. வளைவின் ஓரத்திலேயே பெரிய
கிணறு ஒன்று உண்டு. மிகுந்த போதையில் பைக் ஓட்டிச்சென்று நிதானம் தவறி வந்த வேகத்தில் தரை தேய்த்தபடி கிணற்றோரத்தில் வண்டியை நிறுத்தி உயிர்பிழைத்தவர்களும் உண்டு, தவறி விழுந்தவர்களும் உண்டு. எனவே அந்த முனை பிரசித்திபெற்றது மட்டுமல்லாது போதையில் வருபவர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது அம்முனை. அம்முனையை ஒட்டிய வீடுதான் கோபாலுக்கு கோபால் மிகச்சிறந்த குடிகாரன்.
குடித்தபிறகு யாரையாவது கொலைவெறியில் அடிப்பது அவனின் ஒருவகை
மனோவியாதி. பெரும்பாலும் வாயில்லாத ஜீவன்களை அடித்து சித்ரவதை செய்வான். அவன் மனைவியையும் ஒரு வாயில்லாத ஜீவன் என்று நினைத்து ஒருநாள்
மண்வெட்டியால் தலையை வெட்டிவிட்டான். தூக்கத்திலிருந்தவாறே கழுத்து
வெட்டப்பட்ட நிலையில் இறந்துபோனாள். வெட்டிய கணம் முதல் அவள்
சாவதற்கு மிகுந்த சிரமப்பட்டிருக்க வேண்டும். மண்வெட்டியானது கழுத்தை வெட்ட
சரியான ஆயுதமில்லை. கழுத்தின் பாதிவரை மட்டுமே அதன் கூர்மை செல்லுபடியானது போல கிணற்றை ஒட்டிய அவளின் தலை தொங்கிக் கொண்டிருந்தது. தலையின்
கணம் தலை எந்நேரமும் உடலிளிருந்து பிய்ந்து கிணற்றில் விழலாம் என்ற நிலையில்
அது தொங்கிக் கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிகளில் இரத்தம் ஏற்ற அல்லது அவசர
சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மூக்கினுள் செல்லும் சிறிய குழாய் அமைப்பில் அக்கழுத்திலிருந்து நரம்புகள் அறுபட்டிருந்தன. அந்நரம்புகள் முனையில் ரத்தம் தொய்ந்திருந்தது.
மிகவும் கோரமான அந்தக்காட்சிகள் பார்க்கவே பயமாகவும் அறுவெறுப்பையும்
தருவதாக இருந்தாலும் அதை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது.
அபூர்வமான படத்தின் "இன்றே இப்படம் கடைசி" காட்சியை பார்த்துவிடவேண்டும்
என்ற ஆவல் தோன்றுமே அப்படி. விட்டால் பிறகு இதுபோன்ற காட்சியை பார்க்க
முடியாது. அன்று நீல நிற சட்டை காக்கி ட்ரவுசரும் அணிந்திருந்தேன். இதெல்லாம்
பார்க்க கூடாது என்று அம்மா அடித்து இழுத்துக்கொண்டு போனாள். பிறகு அந்த நீலநிற
சட்டை போடும்போதெல்லாம் குரூரமான அல்லது அவஸ்தையான புன்னகையுடன்
ஒரு சிரிப்பு வரும். அறியாத வயது அது. ஆனால் அதற்கடுத்த வருடமே இன்னொரு
கொடூரமான கொலையை நேரில் பார்க்க நேர்ந்தது. அப்போது அந்த உடலில் தலையே
இல்லை. மேலும் முன்பு பார்த்ததை விட இந்த அறுந்த முண்டத்தில் நிறைய குழாய்கள்
பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தன.
வெளிநாட்டுக்கு சென்று வந்திருந்த கணவன். ஆசையாக அணைத்தவனை மிளகாய்
கரைத்த தண்ணியை முகத்தில் ஊற்றி கொலைசெய்யப்பார்த்திருக்கிறாள். இடைப்பட்ட
நாளில் வேறொருவனுடன் உடலால் பழகிவிட்டதால் கணவனின் திடீர் வருகை
அவளுக்கு பிடிக்கவில்லை. பெண்களுக்கு ஆண்களைப் போல பலமில்லை. அவள்
வெட்டிய வேகம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு துல்லியமாக விழவில்லை. மாறாக
அதே அரிவாள்மனையாள் அவளின் கழுத்து அறுபட நேர்ந்தது. முன்பு
பார்த்தகொலைபோல நிதானமில்லாம வெட்டியது போல் அல்ல இந்தக்கொலை. நின்று நிதானமாக நேர்த்தியுடன் வெட்டியதுபோல இருந்தது. வாசல் படிக்கட்டில் சரிந்திருந்த
அந்த உடல் தலையே இல்லாமல் வினோதமாக இருந்தது.
பக்கத்தில் இருந்த நண்பர்கள் வாந்தியெடுத்தபடி விலகிப்போனார்கள். சிலநொடிகள்
ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே என் சட்டையின் நிறத்தைப் பார்த்தேன். நல்லவேளை
வெள்ளைச்சீருடை. இந்தக்கொலை அதிகாலையில் நிகழ்ந்திருக்கவேண்டும். நான்
பள்ளிக்கு செல்லும் சமயம் அந்த நிகழ்வின் மிச்சத்தைப் பார்த்தேன். கழுத்து அறுபட்ட நேரத்தில் எல்லாரும் உறங்கிகொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவளின் கணவன் அவளின் தலையை உரச்சாக்கு ஒன்றில் முடிச்சு போட்டு குறிஞ்சி
ஓட்டலில் பரோட்டா தட்டும் டேபிளின் மேல் வைத்துக் கதவை தட்டியிருக்கிறான்.
அவன் வெளிநாடு செல்லும்போது அங்குதான் காவல்நிலையம் இருந்தது. பிறகு அங்கிருந்தவர்கள் வழிசொல்ல ஆத்தோரத்தில் உள்ள புதிய காவல்நிலையத்திற்கு
சென்றதாக ஓட்டல் வைத்திருப்பவரின் மகன் பள்ளியில் பரபரப்பான தகவலின் சாட்சியை
விரிந்த கண்களுடன் பரப்பிக்கொண்டிருந்தான்.
இந்த இரண்டு கொலைகளுக்குப்பிறகு நான் கல்லூரி செல்லும் வரை வேறு எந்த
கொடூரமான கொலையையும் கண்டிருக்கவில்லை.
அப்போது பெரம்பலூரில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் அறையின் பக்கத்தில்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர்கள் இணத்திலேயே அதிகம் படித்தவர்.
கல்லூரிக்கு மூன்று மாதங்கள் சென்று பின் நின்றுவிட்டதாக சொன்னார். உறக்கம் வராத
சமயங்களில் அவரிடம் சென்று பேசுவேன். நான் குடியிருந்த வீட்டிற்கு எதிரிலே ஒரு
குடிசை போன்ற அமைப்பில் அவர் குடியிருந்தார். எப்பொழுதும் வெள்ளைச் சட்டை
அணிபவர் உள்ளுக்குள் சிவப்பு நிற பனியனின் நிறம் தெரியுமாறு அந்தச்சட்டை இருக்கும்.
அற்புதமான உடலமைப்பு அவருக்கு. தினமும் உடற்பயிற்சி செய்வார். அவருடன் பழக்கமானது விநோதமான சம்பவம். அவரின் வீட்டில் மின்சாரம் கிடையாது
தெருவிளக்கின் அடியில்தான் உட்கார்ந்து எதாவது எழுதிக்கொண்டிருப்பார். எப்போதாவது அந்தப்பக்கம் கடந்து செல்லும் நான் ஓர்நாள் அவரின் அருகில் சென்று என்ன எழுதுகிறார் என்று பார்த்தேன்.
ஓரங்கள் கிழிந்த நாற்பதுபக்க இரட்டை வரி நோட்டில் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சிரித்தபடியே நோட்டை என்னிடம்
கொடுத்தார். படித்துப்பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. எப்போதோ காதலித்தபோது கவிதை எழுதியது பிறகு நான் கவிதை என்று வாசிப்பது வாரமலரின் கடைசிப்பக்க
காதல் கவிதைதான். ஆனால் அவரின் கவிதை அதுபோல இல்லாததால் எனக்குப்
புரியவேயில்லை. சூப்பரா இருக்குது என்று நோட்டை எடுத்து அவரிடமே கொடுத்தேன். தெருவிளக்கு கம்பத்தின் அடியில் ஒரு கல்லைப் போட்டு அமரிந்திருந்த அவரின்
பக்கத்தில் ஒரு நீண்ட கம்பு இருந்தது.
வரி வரியாக கருப்புக்கோடுகள் போட்ட வழவழப்பான கம்பு அது. நீண்ட உபயோகத்திற்கு
பிறகே வரும் வழுவழுப்பு அது. அதை எடுத்து தேவர்மகனில் கமல் கம்பின் அளவு
பார்ப்பது போல நெற்றிக்கு நேராக வைத்து பார்த்தேன். "கம்பு சுத்த தெரியுங்களா சார்"
என்று கேட்டார். என்னை முதல் முதலில் சார் என்று கூப்பிட்டவர் அவர்தான்.
தெரியாதுங்க சார் என்றேன். ஆச்சரியமாக பார்த்தார். பிறகு சட்டையைக் கழற்றி என்னிடமிருந்த கம்பை வாங்கி சுழற்ற ஆரம்பித்தார். தேவர்மகன் கமலை விட நன்றாக சுழன்று ஆடினார்.
பொதுவாக இரவுநேரத்தில் குழல்விளக்கின் வெளிச்சத்தில் குச்சியை வேகமாக
சுழற்றினால் நீலமும் மஞ்சளும் சிவப்பும் கலந்த கோடுகள் நொடிப்பொழுது வேகத்தில் குச்சியின் சுழற்சிக்கு ஏற்ற வேகத்தில் வரும். சிறிய வயதில் முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா?
ஆம் என்றால் அதை நினைவுகொள்ளுங்கள். அவர் சுழன்ற வேகத்தில் நீலமும்,
மஞ்சளும் சிவப்பும் நொடிப்பொழுதில் மின்னி மறைந்துகொண்டிருந்தன. யாருமில்லாத தெருவின் விளக்கு வெளிச்சத்தில் அந்த சிலம்பாட்டம் என் ஒருவனுக்காக நிகழ்ந்துகொண்டிருந்தது. அவரின் மேல் மிகுந்த பிரமிப்பு ஏற்படுத்திய இரவு அது.
எனக்கும் கம்பு சுற்ற கற்றுத்தரும்படி கெஞ்சினேன். "நான் பத்து வயசுலருந்து
சுத்தறேங்க இருவது வருசம் ஆச்சு. இன்னமும் எனக்கு சரியா சுத்த வரல. தினமும்
அரை மணி நேரமாவது சுத்தறேன். எடுத்த உடனே கத்துகிட்டு ப்ளாக்பெல்ட் வாங்க இது கராத்தே இல்லங்க. சின்ன வயசுலருந்து உடல் வளையணும் என்று சொன்னார். கராத்தேவிலும் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என்று பின்னர்தான் தெரிந்தது. இருந்தாலும்
என் பிடிவாதம் காரணமாக எனக்கு சொல்லித்தர முன்வந்தார். படிப்பில் நான் எப்படியோ அதேபோல கம்புசுத்துவதிலும் என் திறமை இருந்தது. உங்களுக்கு வராது என்று அவரே விலகிக்கொண்டார்.
பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவோம். ஓட்டலுக்கு சாப்பிடப்போகும்போதுகூட
அழைப்பேன். குழந்தைகள விட்டுட்டு என்னால வரமுடியாது. அப்படியே இருந்தாலும்
அவங்கள விட்டுட்டு சாப்பிடறமேன்னு தோணும். அதனால வரமுடியாது என்பார்.
நாளுக்கு நாள் அவரின் மதிப்பு என்னில் அதிகமாகிப்போனது.
ஒருநாள் மருந்துக்கடையில் எதோ மருந்து வாங்கிக்கொண்டிருந்தேன். படிக்கட்டு அருகில்
ஒருவர் பைக்கை ஸ்டார் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ ஒருவர்
புயல் வேகத்தில் வந்து அவரின் தலை வெட்டிவிட்டு சென்றார்.
சீற்றமாக வரும் குழாயில் தண்ணீரை அடைத்துப்பிடித்தால் நாலாபக்கமும் தண்ணீர்
வேகமாக சீறி அடிக்கும் பார்த்ததுண்டா? அதேபோல வெட்டப்பட்ட கழுத்திலிருந்து
ரத்தம் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது. நொடிநேரத்தில் நிகழ்ந்துவிட்டது. முண்டா
பனியனை மேல் முடிச்சு போட்டு கண்களுக்கு சிறு இடைவெளிவிட்டு கீழே முடிந்து
விட்டதால் பார்ப்பதற்கு முகமூடி திருடன் போல் இருந்த ஒருவன் வெட்டிவிட்டு ஓடினான்.
கொலையுண்டவர் என்னிலிருந்து பத்தடி தூரம் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ச்சியுடன்
ஓடியவனின் திசை பார்த்தேன். வெள்ளைச்சட்டை சட்டையை மீறி வெளித்தெரியும் நீல
நிற பனியன். எனக்குப் பழக்கமான, சீரான கட்டுடைய உடல்.
மறுநாள் செய்தித்தாளில் நக்கீரன் நிருபர் கொலை என்று இருந்தது. நேற்று கண்ட அதே
சம்பவம். பெரம்பலூர் போன்ற நகரத்தில் இதெல்லாம் சகஜம் என்று பேசிக்கொண்டார்கள்
நானும் இரண்டொரு மாதத்தில் மறந்தே போனேன். அந்த கம்பு சுற்றுபவரையும் காணவில்லை.
பின்பொருநாள் மருத்துவமனையில் இரத்தம் கொடுத்துவிட்டு வருகையில் அவரைச் சந்தித்தேன். அந்தக்கொலையை அவர்தான் செய்ததாக சொன்னார். விபத்தில்
சிக்கியதுபோல இருந்தார். அவரின் படுக்கைக்கு அருகில் நீண்ட கழியில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. ஏன் என்று கேட்டேன். பதில் ஒன்றும் இல்லை. இரத்தவகை கேட்டேன். ஓ நெகட்டிவ் என்றார்.
என்னுடைய இரத்தவகையும் அதுதான். ஒருவேளை அது என்னுடைய ரத்தமாக கூட இருக்கலாம்.

இந்த மூன்று கொடூரமான சம்பவங்களுக்குப் பிறகு வேறு எந்த கொடூரமான
கொலைகளையும் பார்க்கவில்லை. ஆனால் நேற்று சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன்.
ஒவ்வொரு கொடூரமான கொலைகளுக்குப் பின்னாலும் துரோகம், தோல்வி, விசுவாசம், காதல், கள்ள உறவு, பழிக்குப்பழி என்ற எதோ ஒரு காரணம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ரசிக்கவே செய்தேன்.
நிகழ்பவைதானே கதையாக மாறுகிறது.