எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, June 13, 2008

தசாவதாரம் - உலகத்தரமா?

தசாவதாரத்தின் மேலும் கமலின் நடிப்பின் மேலும் வானளவு நம்பிக்கை
வைத்திருப்பவர்கள் இந்த பதிவை படிப்பதும் படிக்காமல் இருப்பதும் அவரவர்
விருப்பம். இங்கு எனக்குத் தெரிந்தவகையில் மட்டுமே பார்வை இருக்கும்.

படத்தின் தயாரிப்புக்காலம் இரண்டரை ஆண்டுகள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய
விஷயம்தான். பத்தில் எட்டுப்பேருக்கு மாஸ்க் மாட்டிவிடவே அத்தனை நேரம் தகும்.
கமலை விட்டால் இந்த வேடங்களில் யாராலும் நடிக்கவே முடியாது, காரணம் படத்தின்
பெயர் தசாவதாரம். பத்து வேடங்களில் நடித்திருப்பதை எப்படி சாதனை என்று சொல்ல
முடியும்? நடித்தபிறகுதான் சாதனை செய்ய வாய்ப்புள்ளதா என்று தெரியும் இல்லையா
என்று தெரியும். படம் முடிந்துவெளிவரும் முன்னரே உலக சாதனை, உலகத்தின்
ஒரேநாயகன் என்ற அடைமொழிகளோடு சொன்னவர்கள் எல்லாரும் கமலைச் சுற்றி
உள்ள அடிப்பொடிகள். இதுவும் ஒரு மார்க்கெட் உத்தி என்றே கொள்க. சிவாஜி என்ற
குப்பைப் படத்திற்கு ஆன அளவுக்கு ஆகாமல் மாறுபட்டிருந்தது என்பது குறித்து
சந்தோஷம் கொள்வோம்.

உலகத்தரம் என்ற கூச்சலுக்கு முதலில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய
கட்டாயம். எங்கே அய்யா இந்தமாதிரி உலகத்தரமான படம் எடுக்கிறார்கள்? அதிக
பட்சமாக இந்தியத்தரம் என்று சொல்வதுகூட சற்று அதிகம். மேம்பட்ட தமிழ்நாட்டுத்
தரம் என்பது சரியாக இருக்கலாம்.

சந்தானபாரதி என்பவர் கமலின் உற்றநண்பர். இவர் நடித்த படங்களில் கதாநாயகியை
அத்துவானக்காட்டில், ஆற்றங்கரையோரம் கற்பழிப்பதுதான் இவரின் ஹைலைட்.
அதற்காக தசாவதாரத்தில் கூடவா மாற்றமே இல்லாமல் எடுப்பார்கள்?.

ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி சேகர், க்ரேஸி மோகன் ஆரம்பகால நாடகங்களில்
அவர்களின் மொக்கைக் கடி ஜோக்குக்காகவே பிரபலமானது. அந்த வகைக் காமெடியை
கமல் இன்னமும் வீழ்ந்துவிடாமல் காப்பாற்றி வருகிறார். இப்பொழுதுகூட எந்தக்
குழந்தை சொல்லும் கடிஜோக்குகளின் சரிபாதி இவர்களிடம் இருந்து சுட்டதாகத்தான்
இருக்கும்.

கொல்டி கமலின் வேடத்திற்கு அவ்வை சண்முகியின் முகத்தை எடுத்திருக்கிறார்கள்.
மற்ற அனைத்து வேடத்திற்கும் உடலைவிட தலை பூதாகரமாக பெரிதாக இருக்கிறது.
உதாரணம் வேண்டுமென்றால் விநாயகர் வேடமிட்டு வரும் தெருக்கூத்து நாடகங்களை
நினைவுக்கு கொண்டுவாருங்கள்.

உலகத்தையே அழிக்கும் அந்த கிருமி படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளிருந்து கடைசி
காட்சி வரை உச்சபட்ச வெயில் நகரமாகிய சென்னையில்தான் உலாத்திக்கொண்டிருந்தது
ஆனால் அதற்கு கமலாக மனது வைத்தாலொழிய மோட்சமில்லை.

தயவுசெய்து உலகத்தரத்திற்கு எடுக்கிறேன் என்று கிளம்புபவர்கள் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாதீர்கள். அல்லது உலகத்தரம் என்ற லேபிளை உபயோகிக்காதீர்.

படத்தில் மொத்தமாக எனக்கு வெறுப்பு வந்த இடம் நாகேஷ் விபத்துக்குள்ளாகி
சாலையோரத்தில் பேசும் வசனங்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட பத்து வினாடிகளில்
சூழ்நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கடிஜோக்குகள் சொல்கிறார். கொல்டிகமலும்
வந்து தன்பங்குக்கு இரண்டு கடிஜோக்குகள் சொல்கிறார்.

ஆங்கிலத்தில் ஹெல்பாய் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள் அல்லது Shrek படத்தின்
எடிமர்பி குரல்கொடுத்திருக்கும் வேடத்திற்கும் கைப் உல்லா வேடத்திற்கும் குறைந்த
பட்சமாக எத்தனை வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும்? இவர் இவ்வளவு
உயரம் என்று காட்டுவதன் பின்னே எந்த அரசியல் உள்ளது. தமிழ்நாட்டில் வளரும்
முஸ்லிம்கள் இன்னமும் தமிழை இப்படித்தான் பேசுகின்றார்களா? கண்மண் தெரியாத
அளவுக்கா இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்? உயரமான கமல் பேசும்
தமிழும் அவ்தார்சிங் பேசும் தமிழும் எந்த விதத்தில் வேறுபட்டது?

புஷ் கேரக்டரிலிருந்து சிதம்பரம் 95 வயசு பாட்டிவரைக்கும் இவர் மட்டுமே செய்ய
வேண்டுமா? இதற்கு ஹாலிவுட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டுமா? ஈரானில்
இப்படி யாரும் வருவதில்லை. மொராக்கோ, செசன்ய குட்டிநாடுகள் எல்லாம்
இவ்விதம் உலகத்தரம் என்று நீட்டி முழக்கி படம் எடுக்கவில்லை. ஆனால் அவர்களின்
படம் உலகத்தரத்திற்கு சவால் விடும்படி உள்ளது.

கமலின் நம்பிக்கை என்னவென்றால் சிவாஜி என்ற படத்தையே வெற்றிப்படமாக்கியவர்கள்
தசாவதாரத்தை கொண்டாடுவார்கள் என்பதுதான்.

பெனாத்தல் அய்யா சொல்லியிருக்கிறார். அமெரிக்க வில்லன், புஷ், ஜப்பான் கமல்
என்று பலவேடங்கள் இருந்தாலும் உடல்மொழி பிரமாதமாக உள்ளது என. என்னுடைய
கணிப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால் கடைசிகாட்சியில் புஷ் மேடையில் குத்து
டான்ஸ் ஆடாத குறையாக மேடையில் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து
இடமாகவும் நடக்கும் அந்த காட்சியை பார்த்ததும் மொத்தமாக கலைந்துபோனது.
பழைய நாடங்கங்களில் பிரதான நாயகர்கள் ஒப்பனை செய்யும் நேரத்தில் திரையை
இழுத்து மூடாமல் பபூன் என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகரை உலவ விடுவர்
அதுபோலதான் அந்த புஷ் வேடம் நடந்து சென்றது. இதற்கு ஆர்ப்பரிக்கும் மக்கள்
வேறு!

உயரமான கமல், புஷ் வேடம், பாட்டி வேடம் போன்றவை எண்ணிக்கைக்கு
உதவியதே தவிர வேறென்ன செய்தது. இந்த படத்தால் தெரியவரும் செய்தி என்ன
என்றால் கமல் 100 பாத்திரங்களைக் கூட ஒரே படத்தில் செய்ய முடியும் அதைச்சுற்றி
ஜிகினா போல கதையை அமைத்து ஹாலிவுட் தரம் என்ற லேபிளையும் குத்த
முடியும் என்பதே!

படத்தின் இசையைப் பற்றி சொல்லவேண்டும். இசை இந்த படத்தில் என்ன செய்தது
என்பதை யாராவதுதான் சொல்லவேண்டும். போக்கிரி படப்பாடல் கூட இந்தகாலத்தில்
ஹிட் ஆவது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயம் அல்ல. பின்னணி இசை வேறு ஒருவர்.

அய்யா கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே! உங்களுக்கு இப்படத்தின் இயக்குனர் என்ற
பெயரே அதிகபட்சம். சுந்தர் சி க்கு அளிக்கப்பட்டதே அதைப்போல. அதற்காக எல்லாபடத்திலும் வருவதுபோல கருப்பு கண்ணாடி கருப்பு கோட்சூட்டுடன் காக்காய்வலிப்பு வந்தவரைப்போல ஏன் ஆடுகிறீர்? உலகத்தரமான இப்படத்தில் நீங்கள் எதற்கு? சற்று ஒதுங்கிதான் நில்லுங்களேன். அந்த ஐந்து நொடி நடனத்தில் என்ன சாதித்துவிட்டீர்?

கசப்பு மருந்தை சாப்பிட்டவுடன் இனிப்பை நம் மனது நாடும் அல்லவா! அதுபோல
மூன்றாம் பிறையின் இந்திப்பதிப்பான சத்மா வை பார்த்தேன். பாலுமகேந்திராவுக்கும்
கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
எவ்வளவு அழகான தெளிவான முகம்? மூன்றாம் பிறை முதல் அன்பே சிவம்
வரை தங்களது முகத்தில் சிறிய மாற்றத்தினைதான் காணமுடியும். அக்கால
இடைவெளி கூட தங்கள் உடல்கட்டினை பாதிக்கவில்லை. பத்து வேடம் செய்கிறேன்
இருபது வேடம் செய்கிறேன் என்று முகத்தில் ரசாயனத்தை அள்ளிப் பூசாதீர்கள்.
மாயாஜால தந்திரப்படங்களைப் பார்ப்பதுபோல உள்ளது. தங்களின் நடிப்பிலும்
மேலாக உங்கள் முகத்தை ரசிக்கிறேன்.

சிவாஜி படத்தை தொழில்நுட்பம், ஒப்பனை இல்லாமல் யாராவது அதே கதையை
பார்க்க தைரியம் உள்ளவர்கள் இருக்கிறார்களா? ரஜினி என்ற அவ்வளவு பெரிய
காந்தத்திற்கே இந்த நிலைமை. அடுத்த ரஜினி படத்துக்கு கூட இதே நிலைமைதான்
"ரோபோ" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஷங்கர் கூட்டத்தினர்
ராமநாராயணனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. தொழில்நுட்பத்தை பரிகாசம்
செய்பவர்கள் இவர்கள்.

படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும் "கடவுள் இருந்திருந்தா நல்லா இருக்கும்"
என்று. ரஜினியின் அரசியல் பிரவேச அறிக்கைகள் போல உள்ள காட்சி இது.
எதிர்ப்பாளாரகவோ, ஆதரிப்பவராகவோ நடிகர்கள் இருக்கவேண்டும் என்று நம்பும்
மனப்பான்மையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு போவதில் இந்த நடிகர்களுக்கு
அப்படி என்ன மயக்கமோ தெரியவில்லை. தமிழனும் தினம் தினம் அதற்காகவே
காத்துக்கொண்டிருக்கிறான். என்னையும் சேர்த்தே சொல்கிறேன். இன்னும் இருபது
வருடம் கழித்து விஜய் கூட தகுதி பெற்றுவிடுவார் என்று நம்புவோம்.

இவ்வளவு செய்திருக்கும் இந்தப்படத்தில் குறைகள் சொல்லவே மனது அஞ்சுகிறது.
காரணம் அத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது. மாறாக கமலின் வேடங்கள்
மனதுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க வில்லன் பாத்திரத்தைப்
பார்க்கும்போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது. அவ்வளவு பெரிய தலையா
அமெரிக்கர்களுக்கு இருக்கிறது? எம்.ஜி.ஆர் காலத்தில் மச்சம் ஒன்றுதான் இரட்டை
வேடத்திற்கு மாற்றாக இருந்ததே! சமீபத்தில் வந்த அ.த.ம கூட அந்த விதிகளை
மீறாமல்தானே வந்திருக்கிறது. :)

நிஜமுகத்தை வைத்துக்கொண்டே நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் கமல். இந்த பொய்
முகங்களுடனான முகத்தில் உங்கள் நடிப்பை கடினத்துடன் தேட நேர்கிறது முடிவில்
சலிப்புதான் மிஞ்சுகிறது.

100 கோடி பட்ஜெட், வெளிநாட்டு ஒப்பனைக்கலைஞர்கள், ஹாலிவுட் தரம், மயிர்க்
கூச்செரியும் சண்டைக்காட்சிகள் இதெல்லாம் சலித்து விட்டன கமல். உங்களைச்சுற்றி
இருக்கும் "ஒலகநாயக" கோஷத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். புகழுக்காக,
வியாபாரத்துக்காக மூளையை மழுங்கடிக்கும் வித்தையை செய்ய பலர் இருக்கிறார்கள். இப்பொழுதுகூட உங்கள் படத்தினைக் காண எனது ஒரு முழுமாத ஊதியத்தைக் கூட தரத்தயாராக இருக்கிறேன். அதற்கேற்றார்போல உங்களது படங்களும் இருக்கட்டும்.
சன் டீவி, கலைஞர் டிவி டாப்டென்னில் முதலிடம் பெற விஜய், அஜித், சிம்பு
போன்றவர்கள் இருக்கிறார்கள்.

'நீ சொல்வதை ஏற்கவோ மறுக்கவோ எனக்கு உரிமையுண்டு,
ஆனால் அதை நீ சொல்வதற்கான சுதந்திரத்தை என்
உயிரைக்கொடுத்தேனும் பெற்றுத்தருவேன்"
புனிதர்களின் தாக்குதலில் இருந்து
தப்பிப்பதற்கான டிஸ்கி அல்ல இது.

Wednesday, June 11, 2008

ஓலைப்பகோடாவும் மெக்டொவலும்

எதிர்பாராம வந்த நேற்றைய விருந்தினன் மெக்டொவலுக்கு தொட்டுக்கொள்ள
ஓலைப்பகோடா வேண்டும் அமுத்தலாக அடம்பிடித்தான். இந்த அரபு நாட்டிலே
அபூர்வமாக கிடைக்கும் ஓ.பகோடாவுக்கு எங்கு போவேன். கொஞ்சம் கூட
கருணையில்லாமல் கேட்கிறான் பட்டியிண்ட மொவன். இருந்தாலும் என்ன
பண்றது விருந்தாளியா வந்துவிட்டவனை இவ்விதம் வைவது நாயமில்லை.
போடா மயிறுன்னு சொல்லலாம்தான். மெக்டொவலுடன் எப்போதும் பிரதாப்
போத்தனுடன் கூட்டணி. "பொன்மாலை மேகங்களே என் இன்ப ராகங்களே"
தனியறையுடன் இப்பாட்டிருந்தால் சைட் டிஷ், ஊறுகாய்கூட இரண்டாம்
பட்சமே. இவனுக்கென்றால் ஓலைப்பகோடா வேண்டுமாம். எந்த நாதாறி
இவனுக்கு ஓ.ப வை அறிமுகப்படுத்தியிருக்க கூடும். "ஷோபாவைக் காட்டி
நல்ல பிகர் என்றான்". மதுவின் கூடலுடன் இசையை ரசிக்கத் தெரியாதவன்
என்ன மனிதனாக இருக்க முடியும். முன்கூட்டிய தீர்மானங்களுடன் ஒருவனை
எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனின் சுவாசித்தல் கூட
தவறாகப் படும். முன்பொரு முறை "வான் நிலா நிலா அல்ல" என்ற பாடலை
கேட்டுக்கொண்டிருக்கையில் பங்களாதேஷி பன்னாடையும் கேட்டுத்தொலைத்து
அவனுக்கு அந்த இசையும், குரலும் என்ன நினைவுகளைத் தூண்டியதோ
தெரியவில்லை. பிறகு தினமும் ஆறுமுறை அப்பாடலைக் கேட்டபடி இருந்தான்.
இதனால் எனக்கொன்றும் பாதகமில்லை என்றாலும் அப்பாடலுக்கான வரிகளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு சொன்னபோதுதான் எரிச்சலாக வந்தது.

மனதுக்குள்ளே வான்நிலா நிலா அல்ல வை எப்படி மொழிபெயர்க்கலாம் என்று
தோற்றேன். அத்தனை சாமர்த்தியம் எனக்கு கைவரவில்லை மாறாக எரிச்சலே
வந்தது. இசை வடிவத்தை எந்த மொழியாயினும் ஏற்றுக்கொண்டால் என்ன
குறைந்துவிடப்போகிறது. மையமாக சிரித்தபோதுகூட புரிந்துகொள்ளாமல்
எதிர்பார்ப்பவனை தொல்விலங்கின் மூர்க்கத்துடம் தெரியாது என்றபோது அலறி
விட்டான். பிறகு அவனும் அதே மூர்க்கத்துடன் தினமும் பாடலைக்கேட்டு
அட்சர சுத்தமாக பாடிக்காட்டினான். அதில் என்ன சந்தோஷம் அவனுக்கு இருக்க
முடியும் என்று தேட ஆசைதான்.

ஓ.ப வை இவன் மறந்திருப்பான் என்ற நினைக்கும்போது ஒரு சிரிப்பினூடே
மறுபடி நினைவூட்டினான். அவன் கோப்பையின் விளிம்பில் அளவில் சிறிய
கரப்பான் ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் திரவத்திலோ அல்லது
மேசையிலோ விழக்கூடும். எதோ ஒரு சுவாரசியம் தொற்றிக்கொள்ள கூர்ந்து
கவனிக்க ஆரம்பித்தேன். நினைத்ததுபோலவே திரவத்தினும் விழுந்தது. சிறிது
நேரம் தத்தளித்துப் பின் இறந்தது. பிடி சாபத்தைக் கொடுத்து அதை தூக்கி
வெளியெறிந்து பின் குழலினில் சரித்தான். என்னைவிட அவன் கரப்பானுடன்
சமாதானத்தை பெற்றிருக்கவேண்டும். அவனின் மனநிலை எனக்குக் கைவர
நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, வரவேண்டும். மாறாக அதனுடன் என்
வன்முறை அளவுக்கு மீறிப்போகிறது. ஆயுதங்களாக வாசித்துக்கொண்டிருக்கும்
புத்தகம், லைட்டர், செருப்பு, செய்தித்தாள் போன்றவற்றைக் கொண்டு மூர்க்கமாக
தாக்கத் துவங்கினேன். இப்படி செய்யும்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து
தொல்லையும் குறையும் என்று நினைத்தேன். ஆனால் எந்த மாற்றத்தையும்
இந்த வன்முறை தரவில்லை. அதன் இனப்பெருக்கும் எந்த விதத்திலும் தடை
படவில்லை.



கரப்பான் பூச்சியை பார்த்தாலே நம் சினிமா இயக்குனர்களின் கற்பனா சக்தியும்
ஞாபகம் வரும். நாயகியை அச்சுறுத்தும் ஆயுதமாக அது இருந்தது. பயத்துடன்
நாயகனை கட்டி அணைப்பாள். நாயகனுக்கு கரப்புகளிடம் துளியளவும் பயம்
இருக்காது. இதேபோலதான் மின்னல், ரவுடி, மற்ற விலங்குகளிடத்தும்.
இவைகள் தோன்றும்போதெல்லாம் நாயகனின் பின்பக்கமாகவோ அல்லது
முன்பக்கமாக இறுக்கமாக கண்களை மூடி கட்டியணைத்திருப்பாள்.

உங்கள் கால்விரல்களின் கடைசி விரலின் அளவில் பெரிய இரண்டு உணர்வுக்
கொம்புகளுடன் ஒளி பட்டு மினுங்கள் றெக்கையுடன் ஒரு அழகிய கரப்பான்
உங்கள் அழகிய உணவின் மீது கொம்புகளை ஆட்டி நர்த்தனம் ஆடும்போது
கோபம் வரவில்லையென்றால் நீங்கள் இலவம்பஞ்சு போன்றவர். எனக்கு
கொலைவெறியுடன் அதை வீழ்த்தவேண்டும் என்று தோன்றும். துரத்துவேன்
செருபாலே குறிபார்த்து அடிப்பேன் அது தவறும், கையில் கிடைப்பவையே
ஆயுதம் பெரும்பாலும் என்குறி தவறிவிடும். அதுவும் சாமர்த்தியமாக எதாவது
இடுக்களில் நுழைந்துகொண்டு என் கொலைவெறியை அதிகரிக்கச் செய்யும்.
இப்படித்தான் ஒருநாள் நெருக்கத்தில் இருந்த கரப்பானை அடிக்கும்போது
வெள்ளை நிற திரவம் ஒன்று தெறித்து வந்து உதட்டில் விழுந்தது. கரப்பானுக்கு
ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும் என்று சிறுவயதிலே படித்தது நினைவு
வந்தது. நாற்றமா, மணமா என்பதை உணர முடியவில்லை. அருவெறுப்பாக
வந்தது. அழுத்தமாக துடைத்துவிட்டும் மனம் ஆறவில்லை. நன்றாக கழுவி
பிரஷ் செய்தபின்பு புத்துணர்வு கிடைத்த மாதிரி தெரிந்தது. இப்படிதான்
படிப்படியாக என் வன்முறை அதிகரித்து இப்படி வந்து நிற்கிறது.

ஓ.ப கூட வேணாம். எதாச்சும் இருந்தா பரவால்ல. நேந்திரம் சிப்ஸ் கிடைக்கும்ல
என்று ஷோபாவின் மேல் கண்வைத்தபடி கேட்டான். ம்... வாங்கிட்டு வரேன்.
போதையில் எனக்கு நினைவுகள் என்றால் அவனுக்கு பெண்ணின் தேகங்கள்
கிளர்ச்சியினை தருகின்றன. ஒவ்வொருவரும் பலவிதம். தொழுகை நேர
கடையடைப்புக்கு முன்பாக நாஸர் கடைக்கு சென்றால் எதாவது கிட்டலாம்.

எதிரே சூடானிய சகோதரர்கள் சலாம் அலைக்கும் என்றார்கள். இவ்விரு சூடானிய
சகோதரர்களைக் கண்டால் பலவேடப் புகழ் இயக்குனர் ரவிக்குமாரின் மீது அலுப்பே
வராது. கனரக இயந்திரங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளிகள் இருவரும். மிகுந்த
உடல் உழைப்பு. பெரியவரின் முகம் துன்பியல் நாடகத்தின் முடிவு போலவும்
இளைய சகோதரனின் முகம் அதற்கு நேர்மாறாக இருக்கும்.

நாஸர் கடையில் ஓலைப்பகோடாவின் வடிவத்தை விவரிக்கும்போது அவர்
சிரித்துவிட்டார். வாங்கிக்கொண்டு திரும்பியபோது, வந்த விருந்தினன் மல்லாக
கவிழ்ந்திருந்தான்.
"பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே..

ஓடிக்கொண்டிருந்தது. என் கோப்பையில் அளவில் பெரிய கரப்பான் ஒன்று மடிந்துபோயிருந்தது. உண்மையில் நாய்களை விட கரப்பானுக்குத்தான் அதிக
மோப்பசக்தி இருக்க முடியும். காவல்துறையிடம் நாய்களை பறித்து விட்ட்டு
ஹைபிரிட் கரப்பான்களை உற்பத்தி செய்து பழக்கிக் கொடுக்கலாம்.

மணியடித்தது... போனில் டில்லி.

"இன்று என்ன நாள்னு கண்டுபுடி மச்சான்"

"தெர்லடா"

"முக்கியமான நாள்ரா, இதுகூட தெரியாம என்ன மயித்துக்கு நீ லவ்வு
பண்ற"

"என்ன எழவு நாள்ரா இன்னிக்கு சொல்லித்தொலயேண்டா"

"இன்னிக்கு பாவனா பொறந்தநாள்ரா மச்சான்"

"சரி வைய்யி.

இந்த பதிவு அனானி தீர்க்கதரிசிக்கு கொலைவெறியுடன் எழுதப்பட்டது.

Saturday, June 07, 2008

சில குறிப்புகள்.

பொதுவாக பட்டான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானியர்களைப்பற்றி ஒரு விதமான
கருத்து உள்ளது. அதாவது நம்ம ஊர்ல இப்படி சொல்வாங்க. "இவளே இவ்ளோ
அழகா இருக்கான்னா இவ தங்கச்சி எப்படி இருப்பா" என்று. அதையே பட்டான்கள்
மாற்றி "இவளே இவ்ளோ அழகா இருந்தான்னா இவ தம்பி செமையா இருப்பான்"
என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து உண்மைதான். ஓரினச்சேர்க்கை விஷயத்தில்
கராராக இருப்பவர்கள் இவர்கள். வம்ச விருத்திக்கு மட்டுமே பெண்ணை நாடும்
குணம் உள்ளவர்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாங்கள் தங்கி இருக்கும்
இடத்தில் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பிலிப்பினோ திருநங்கைகள் மூன்று
பேர் தங்கியிருக்கிறார்கள். பிலிப்பைன் நாட்டில் மட்டுமே இவ்வித குறைபாடுகள்
கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சரியாக
நூற்றுக்கு மூன்றுபேர் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் விடுதியில் பட்டான்
என்ற பாகிஸ்தானிய ட்ரைவர்கள் அதிகம் பேர். கனரக வாகனங்கள் ஓட்ட அவர்களை
விட்டால் சிறந்த இனம் ஒன்று இல்லை. இந்த பிலிப்பினோக்கள் மூவரும் வெளியில்
செல்லும்போதோ, வரும்போதோ இவர்களை விழுங்கும் தாபத்தோடு அனேக
பட்டான்கள் நோக்குவர். முதுகின் கீழ் துளைப்பது போன்ற பார்வை பின் எதாவது
கமெண்ட் அடிப்பது. அதில் எரிக் என்பவர் மட்டும் என் நண்பர். "இந்தியர்களாவது
போகும்போதும் வரும்போதும் கிண்டல் மட்டும்தான் செய்வார்கள். படான்களோ
ஒருபடி மேலேபோய் பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். தனிமனித
சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த ஆதியினம் என்பார் அந்த
நண்பர். அவர் சொல்வதும் சரியே.

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியினை காண
நேர்ந்தவுடன் நம் இந்தியச்சமூகம் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது.

----

சென்ற வார குமுதம் இணையப் பதிப்பை பார்த்தவர்கள் பலருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்
ஆவேசம் கிலேசம்னு நிறைய வந்திருக்கலாம். ஆனால் எனக்கு குஜாலாக இருந்தது
மேலும் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு போன் செய்து மேட்டர் சொன்னேன்.
அவர்களும் குஜாலாக பார்த்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். மேட்டர்
என்னன்னா குமுதம் பெண்கள் சிறப்புப் பகுதியில் சேலை கட்டுவது எப்படி
என்று விவரணப்படம் போட்டிருந்தார்கள். விவரணப்படம் என்றால் விலாவாரியாக
என்று கொள்க. சவுகார்ப்பேட்டை ஆண்டி ஒன்று சேலை கட்டுவதை ஒளிவுமறைவு
இல்லாமல் கவர் செய்திருந்தார்கள். பெண்கள் சிறப்புப் பகுதியில புடவை கட்ட
சொல்லித்தரும் அளவுக்கு வந்தாச்சு போல. ஆனாலும் விவரணப்படம் சகிலாவுக்கே
சவால் விடும் தரத்திற்கு இருந்தது. வாழ்க வளர்க. அடுத்தவாரம் ஜட்டி போடுவது
எப்படி என்று சொல்லித்தருவாங்களா என்று அய்யனார் கேட்டார். அடப்ப்ப்பாவி...
இதுகூடுமா தெரியாது...

----

திரும்பத் திரும்ப புத்தகங்களை சிலாகித்துப்பேசுவது எனக்கே சலிப்பைத் தருகிறது
என்றாலும் வாசிப்பதை நிறுத்துவதில்லை. அதைப்பற்றி பேசுவதையும் நிறுத்துவதில்லை
அய்யனாரிடமிருந்து பறித்து வந்த "ஆதண்டார் கோயில் குதிரை" என்ற சிறுகதைத்
தொகுப்பை வாசித்தேன். முன்பே கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" என்ற
தொகுப்பை வாசித்து பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இந்த நூலிலும் தமிழின்
தரமான சிறுகதைகள் என்று நேர்மையாக சொல்லக்கூடிய கதைகள் இருக்கின்றன.
சிறந்த படைப்பாளன் என்பவன் தான் வாழ்ந்த சூழ்நிலையை, மக்களை, அவர்களின்
மொழியை, வட்டார வழக்கத்தை நியாயமாக பதிவிப்பவனே நேர்மையான படைப்பாளன்.
அந்த வகையில் கண்மணி குணசேகரன் தமிழின் முக்கியமான படைப்பாளி.
என் வாசிப்பு தளத்தில் நாஞ்சில் நாடனுக்குப் பிறகு வட்டாரவழக்கிலான படைப்புக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படைப்பாளி.

மருதாணி என்பதை எங்கள் ஊரில் "அழவான" என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட
கொத்தடிமையைப் போல மாடுமேய்த்து, சாணியள்ளி, தொழுவம் பெருக்கி என
எல்லா வேலைகளையும் செய்யும் சிறுவனின் உலகம் என ஆரம்பித்து அவனின்
அழவான வைத்துக்கொள்ளும் ஆசையினையும் அதைவிட அதிகாலையில் அழவான
உதிர்ந்து கையிலிருந்து வெளிப்படும் அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும்
சிறுவன். அதற்காக அழவான செடியைத் தேடுகிறான். மிகுந்த தேடலுக்குப்பின்
அழவானையை கண்டு பெரும்பயத்தினூடே பறிக்கிறான். மறுநாள் அதிகாலையிலே
வருமாறும் "மாட்டை பொலிபோட" வேண்டும் என்று பலமுறை எச்சரித்து
சொல்கிறாள் சொந்தக்காரி. மருதாணி வாசம் முகரும் ஆர்வத்துடன் அக்காவிடம்
அரைக்கச்சொல்லி வைத்துக்கொள்கிறான். மறுநாள் சூரியன் சூத்தாமட்டையில்
அடிக்கும்போதுதான் விழிப்பு வருகிறது கூடவே முந்தின தினம் எச்சரிக்கை
செய்ததும் நினைவு வர உதறி விட்டு ஓடுகிறான். அவள் இவனைக் கண்டபடி
ஏசுகிறாள் மிகுந்த அச்சத்துடன் சாணி அள்ளி எருக்குழியில் போடுகிறான். திடீரென
கை உதறிக்கொண்டு அழவான வாசனையை முகரும் தன் ஆசையை அவனே
அறியாமல் மூக்கருகே கோண்டு செல்கிறான். சாணி நாத்தம்தான் அடித்தது.
வாசம் என்ற கதையும் அழகாக இதனை பதிவித்திருந்தார். ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத அத்தனை கதைகளும் ஒருகிராமத்தின் வெவ்வேறு தளங்களில்
இயங்குகிறது.

----



சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் "RAY" என்ற படம். டைட்டில் இசைக்காக
மறுபடியும் படம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. படம் முழுக்க இசைதான்.
கண்தெரியாத ஒரு இசைமேதையின் வரலாற்றை சொல்லும் படம். வாய்ப்புக்
கிடைத்தால் பாருங்கள். இந்தப்படத்தில் வருவதுபோன்ற அற்புதமாக ப்ளாஷ்பேக்
காட்சிகள் வேறெந்தப்படத்திலும் கண்டதில்லை. ஒவ்வொரு ப்ரேமும் ஒரு
கவிதை. உண்மைக்கதை என்று போட்டிருக்கிறார்கள். ஒரு இசைக்கலைஞனின்
மிகச்சிறந்த பதிவு.

----

தமிழ்மணக்கவுஞ்சர்கள் கவிதை எழுதி வன்முறை செய்வதை தடுக்கும் விதமாக
அவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளதா
என அடர்கானகப்புலி என்னிடம் கேட்டது, மேலும் இல்லையென்றால் எப்பாடுபட்டாவது
ஒரு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்று துயரத்துடன் விம்மியபடி
கிட்டத்தட்ட அழுதபடி சொன்னார். மிகச்சிறிய அளவில் வன்முறை செய்தவன்
என்ற வகையில் கடக்கவேண்டிய தூரம் அதிகமிருப்பதால் இதில் கருத்துச்சொல்ல
ஈரிழைத் துவர்த்து அளவுக்குக் கூட எனக்கு உரிமை இல்லை.

ஆகவே தமிழ்மணக்கவுஞ்சர்கள் வன்முறையின் உச்சம் தொட்டு அடர்கானகப்புலியின்
படைப்புச்சுதந்திரத்திற்க்கு எதிரான அதிகார மய்யத்தினை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டு
சிறந்த வன்முறைக்கவுஞ்சராக வைகை ராம் அவர்களையும் அவரின் கவுஜையை
பதிவிக்கிறேன்.

பெருவெளியின் காட்சியடைய
சாளரம் வழியும் எரிதழலின்
நிறமடைகிறது எனது அறை...
உந்தன் முதன்முறை வருகையை போலே...