எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, April 11, 2008

ஒரே கடல்.

சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா
நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள்
திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள்.

உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான்
இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது
நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும்
சொல்ல முடியாது.

நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன்.
இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள்
மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல்
நம்பிக்கை இல்லாதவன்.



ஜெயக்குமார் (நரேன்) கல்யாணமாகி குழந்தை பெற்ற ஒரு வேலையில்லா பட்டதாரி
தீப்தி (மீரா ஜாஸ்மின்) நரேனின் மனைவி. வேலையில்லாத கணவனுடன் குடும்பம்
நடத்தும் அதிகம் படித்திடாத பெண்.

இவர்கள் மூவரும் ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.
இவர்களுக்குள் நடப்பதுதான் கதை.

மீராவின் குழந்தைக்கு உதவுகிறார் மம்முட்டி நன்றி சொல்ல மம்முட்டியின் வீட்டுக்கு
வரும் மீரா அந்த வீட்டையும், தனியனான மம்முட்டியையும் கண்டு பிரமிக்கிறாள்.
இது அவளுக்கு முற்றிலும் புதியதான உலகம். தயங்கியவாறே நன்றி சொல்லிவிட்டு
செல்கிறாள். உதவிபெறல்களின் தொடர்ச்சியாக இருவருக்கும் உறவு ஏற்படுகிறது.
மம்முட்டியின் சிபாரிசில் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது.

மம்முட்டி மூலம் கர்ப்பமாகிறாள் மீரா. இதைச் சொல்ல வரும் மீராவினை தன்
அறிவுஜீவித்தனத்தால் காயப்படுத்தி அனுப்பும் மம்முட்டி. உடல்சுகத்தை தாண்டி
தன்னிடம் வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை என்ற உண்மை தெரியவரும்போது
மீராவுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தான் கொண்டிருக்கும் நேசத்தை
புறக்கணிக்கும் போது ஏற்படும் மன உளைச்சலில் மனநிலை பாதிக்கப்படுகிறாள்.




இயல்புக்கு மாறான தொடர்ந்த சில சம்பவங்களில் மருத்துவமனையில்
சேர்க்கப்படுகிறாள். சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்து கணவனுடன்
திரும்புகிறாள்.

இடைப்பட்ட காலத்தில் தனது வீடு மாறி, தான் தன்னை பறிகொடுத்த அதேவிதத்தில்
இன்னொரு வேலையில்லாதவனின் மனைவியுடன் தன் கணவனுக்கு தொடர்பு
இருப்பதை உணர்கிறாள். ஒரே கடல் என்ற தலைப்பிற்கு அர்த்தம் அந்நேரத்தில்
புரிய வரும். மிக வலிமையான தலைப்பு.

ஒரு அழகான பெண்ணின் காதலை, பரிசுத்தமான அன்பை, குடும்பத்தை கலைத்த
குற்ற உணர்ச்சியில் பெரும் குடிகாரராகிறார் மம்முட்டி. தன்னால்தான்
கர்ப்பமுற்றாள் என்பதை நம்ப மறுக்கிறார் அதன் விளைவாகவே மீரா மனநிலை பாதிக்கப்படுவதையும்நம்ப மறுக்கிறார். உண்மையை ரம்யா கிருஷ்ணன்
விளக்கும்போதும் நம்ப மறுக்கிறது. பேலா (ரம்யா கிருஷ்ணன்) உயர்தர பார்
நடத்தும் தனிமை பெண். திரைப்படத்தில் ஒரு பெண் பார் நடத்த வேண்டுமென்றால் இயக்குனர் அந்த பாத்திரத்திற்கு ப்ளாஷ்பேக் வைத்திருப்பார். அதற்கென்று சில
ரீல்கள் செலவில்லாமல் பாத்திரமே சொல்வது போல செய்து நம்மை
காப்பாற்றி விட்டார்.

உலக பந்தங்கள் அனைத்து சுயநலமானவை என்று நினைக்கும் அவனுக்கு
அடுத்தவனின் மனைவி மூலம் வாரிசு ஏற்படுவதை ஏற்க முடியவில்லை.
தொடர்ச்சியான சுயகேள்விகள் மூலம் பெரும் குடிகாரனாகிறார் மம்முட்டி. முடிவில்
தான் மீராவை காதலிப்பதை உணர்கிறார். இரு குழந்தைகளுக்கு தாய். கணவன்
என்ற பந்தங்களை விட்டு வேளிவர முடியாத ஒருத்தியின் மேல் காதல் என்பது
சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

நம் சமூகம் கட்டமைத்த உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாதது என்பது மேலை
நாட்டுக் கலாச்சாரம். நம் சமூகத்துக்கு முற்றிலும் பொருந்தி வராத கலாச்சாரம்.
புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் உறவுச்சிக்கல்களின் முடிவில் காதலின்
புனிதத்தை உணர்கிறான். இருவரின் காதலையும் இச்சூழல் ஏற்க மறுக்கிறது.
மிகவும் சிக்கலான இக்கதையில் மிகச்சிறந்த நடிப்பாக மம்முட்டியையும், மீரா
ஜாஸ்மினையும் சொல்லலாம்.

புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயாவின் ஹீரக் தீப்தி என்ற
நாவலின் தழுவலே ஒரே கடல். மிக அபூர்வமான படம். தனது வாழ்க்கையில் நடித்த
மிகச்சிறந்த படம் என்று மீரா ஜாஸ்மின் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மம்முட்டி
பற்றி சொல்லவேண்டியதில்லை. படத்தின் இருபெரும் தூண்கள் இவர்கள்தான்.
நரேனின் நடிப்பு சுமார். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திணிப்பாக மட்டும் உள்ளது.

நான்கே நான்கு பாத்திரங்கள் கொண்டு கலவையான உணர்ச்சிகளுடன் ஒரு மிகச்சிறந்த
படத்தை கொடுத்த இயக்குனர் ஷ்யாமப்ரசாத் அவர்களுக்கு பாராட்டுகள்.

நிச்சயம் தமிழில் எடுக்கவேண்டிய படம். மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியான
ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே!

13 comments:

கோபிநாத் said...

மீராவுக்கு இந்த படத்தில் நடித்தற்காக கேளர அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்திருக்கிறது ;))

படத்தின் முடிவை சொல்லவேல்லியே ராசா...மறந்துட்டியா!! ;)

manjoorraja said...

நல்லதொரு படத்திற்கு கச்சிதமானதொரு விமர்சனம்.

நன்றி கதிர்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றி கதிர். சீக்கிரம் பார்த்துவிடப் பார்க்கிறேன். எங்க கிடைக்கும்னு தேடணும். :)

-மதி

கதிர் said...

நன்றி கோபி, மஞ்சூர், மதி

கானா பிரபா said...

இந்தப் படம் வந்து ஒரு சில வாரங்களுக்குள் பார்த்துவிட்டாலும் இன்னும் எழுதுவது தள்ளிப் போகின்றது. காரணம் இப்படம் கொடுத்த தாக்கம். நன்றாகக் கொடுத்திருக்கீங்க.

MyFriend said...

//ஜெயக்குமார் (நரேன்) கல்யாணமாகி குழந்தை பெற்ற ஒரு வேலையில்லா பட்டதாரி
தீப்தி (மீரா ஜாஸ்மின்) நரேனின் மனைவி.
வேலையில்லாத கணவனுடன் குடும்பம்
நடத்தும் அதிகம் படித்திடாத பெண்.

இவர்கள் மூவரும் ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.
இவர்களுக்குள் நடப்பதுதான் கதை.//

நரேனும் மீராவும் கணவன் மனைவின்னு சொல்றீங்க.. ஆனால் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்ன்னு சொல்றீங்களே? எங்கேயோ இடிக்குதே? :-P

MyFriend said...

jokes a part..

இந்த படம் நல்லா இருக்குன்னு கேள்விப் பட்டேன். படம் best movie of the year அவார்ட் எல்லாம் வாங்கியாச்சே!

கண்டிப்பா பார்க்கனும்ன்னு நெனச்சேன்.

யமுனா வராதேன்னு ஒரு சூப்பர் பாடல் கூட இதே படத்துல இருக்கு. அதுக்காகவே படம் பார்க்கனும்ன்னு நெனச்சேன்.. நீங்க வேற கதை சூப்பரா இருக்குன்னு விமர்சனம் எழுதிட்டீங்க.. அதனாலேயே கண்டிப்பா பார்க்கனும். :-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இன்னைக்குத் தான் படம் பார்த்தேன். நல்லா இருக்கு.

//இடைப்பட்ட காலத்தில் தனது வீடு மாறி, தான் தன்னை பறிகொடுத்த அதேவிதத்தில்
இன்னொரு வேலையில்லாதவனின் மனைவியுடன் தன் கணவனுக்கு தொடர்பு
இருப்பதை உணர்கிறாள். //

இது எந்த காட்சியில் வெளிப்படையாக உணர்த்தப்படுகிறது? எனக்குப் புரியலியே

கதிர் said...

வருக ரவிசங்கர்.

படத்துல மீராஜாஸ்மின் மனநல விடுதிக்கு போனபிறகு நரேனின் புதிய வீட்டிற்கு குடிபோவார். அங்கும் ஒரு வேலையில்லா பட்டதாரி கர்ப்பிணியுடன் இருப்பார். நரேன் எந்த சூழ்நிலையில் மம்முட்டியிடம் உதவி பெற்றாரோ அதே சூழ்நிலையில் நரேனிடம் அந்த புதியவர் உதவிபெறுவார். இதை நரேன் கூட ஒரு சந்தர்ப்பத்தில் மீராஜாஸ்மினிடம் கூறுவார். சோம்பேறிப்பையன் வேலைக்கே போகமாட்டேன்றான்னு. வேலையில்லாதவனின் மனைவியும் மீராஜாஸ்மினும் பேசிக்கொள்ளும்போது பூடகமாக சொல்லப்படும் விஷயம் இதுதான். அப்போது அவர்களுக்குள் என்ன மாதிரியான உறவு இருந்திருக்கும் என்று மீராவும் புரிந்துகொள்கிறாள். காட்சியாக வராமல் பார்வையாளரே உணர்ந்துகொள்ளும் காட்சிகள் அவை.

நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நானும் இப்படித் தான் புரிந்து கொண்டேன். ஆனால், வேறு எந்த விமர்சனங்களிலும் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. குறிப்பாக, சியாமாபிரசாத் ஒரு பேட்டியில் நரேன் ஒரு பலிகடா என்பது சொல்லியது குழப்பியது.

ஒரு காட்சியில் நரேன் சாப்பிட்டுக்கொண்டே அந்தப் பெண்ணைப் பார்த்து தான் உதவினேன் என்று சொல்லி நாக்கைக் கடிப்பது போல் இருக்கும். பிறகு ஒரே கடல் என்ற பெயரைப் பொருத்திப் பார்த்தால் பூடகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி.

கதிர் said...

மாபெரும் பொருளாதார மேதையும் அதிகம் படிக்காத பெண்ணுக்குள் நிகழும் உறவுப்பரிமாற்றமும் எப்படி இருவர் வாழ்க்கையும் சீரழிக்கிறது என்பது கதை. இப்படி கதாபாத்திரங்கள்தான் மாறுகிறதே தவிர எல்லா காலத்திலும் எல்லா தவறுகளும் சேர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரே கடல் என்ற தலைப்பிற்கு கடைசியில்தான் அர்த்தமே விளங்கும். இந்தப்படத்தில்தான் தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்த்தம் இருப்பதுபோல படம் பார்த்து முடிந்ததும் தோன்றியது.
கிட்டத்தட்ட மறந்தே போயிருந்த படத்தை மறுபடியும் நினைவுபடுத்திவிட்டீர்கள். திரும்பவும் பார்க்கவேணும்.

நன்றி ரவிசங்கர்

கதிர் said...

வாவ் ரவி...
பிரமாதமான கலெக்சன். மிக்க நன்றி

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

நல்ல திரைவிமர்சனம் தோழரே. இந்த படத்தை எங்கு காணலாம் என்று தெரிந்தால் தெரிய படுத்துங்கள்.

நன்றி
வைகையின் சாரல்
http://nirmalbabu.blogspot.com