எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, April 20, 2008

நாய்களைப்பற்றி....

நகுலனின் நாய்கள் நாவலை சமீபத்தில் படித்து முடித்தேன். வேறொரு நாளில்
நாய்கள் பற்றி என்ன எழுதியிருந்தார் என்று நினைவுகொள்ள விரும்பியபோது
மனத்திரையில் வெள்ளைத்தாள்களே தோன்றின. அப்படிப்பட்ட புகமுடியா உலகம்
நகுலனது. அப்படி மீண்டும் உலகிற்குள் போகவிரும்பினால் நீங்கள் ஒரு மனம்பிறழ்ந்தவராகவோ அல்லது தனக்குள் பேசிக்கொள்பவராகவோ இருந்தால்
கூடுதல் தகுதி.

எங்கள் வீட்டில் ஒரு பூனை வளர்த்தோம். பூனை என்றாலே அழகுதானே... பக்கத்து
வீட்டு சிறுமி ஒருத்தி அந்த பூனையை வாஞ்சையுடன் தூக்கி முத்தமிட்டாள். இந்த
பூனைக்கு பேர் என்ன? என்று கேட்டாள்.

அப்போதுதான் பெயரின் அவசியத்தை உணர்ந்து அந்த நொடியிலிருந்து பூனைக்கு ஒரு
பெயர் வைக்க யோசித்தேன். அது பெண் பூனையாக இருந்தது. யோசித்ததில் எந்த
பெயரும் பொருந்தவில்லை. இறுதியாக அதற்கு "பூனை" என்றே பெயர் வைத்தேன்.

மறுபடியும் அச்சிறுமியை அழைத்து "இந்தப்பூனைக்கு பேர் வைத்து விட்டேன்" என்று
சொன்னேன்.

சிறுமி மிக்க ஆவலுடன் என்ன பேர் என்று கேட்டாள்.

"பூனை" என்றேன்.

அவளும் சிரித்தபடியே பூனை என்று அழைக்கத் தொடங்கினாள். இன்று அப்பூனை
வளர்கிறது.

இன்று எதேச்சையாக கதாவிலாசத்தில் ராமகிருஷ்ணனின் நகுலன் குறித்த
கட்டுரையினை வாசித்தேன். ஏற்கனவே வாசித்ததுதான் இருந்தாலும் ராமகிருஷ்ணனின் எழுத்தும் நகுலனையும் பிடிக்கும் என்று மறுபடியும் வாசித்தேன்.

அங்கேயும் இதே போல நகுலன் பூனைக்கு பூனை என்றே பெயர் வைத்திருப்பதாக
எழுதி இருந்தார். என்றோ படித்தது என் ஞாபக அடுக்குகளில் படிந்திருக்கிறது
சமயத்தில் அது வெளிப்பட்டுருக்கிறது. இப்படித்தான் எவர் எவரையோதான் நாம்
வாழ்நாளில் கடைபிடிக்கிறோம்.

ஏன் நவீனனை நாய் என்று அழைக்கக்கூடாது? என்று அடிக்கடி நவீனன் டைரியில்
வருகிறதென்று தெரியவில்லை.

நாம் நாயைப்பற்றி அல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட நாட்களில் எனக்கென்று ஒரு நாய் வளர்த்துக்கொள்ள ஆசை இருந்தாலும்
வீட்டின் அனுமதி கிடைக்கவில்லை. என் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் நண்பர்
ஒருவர் இருந்தார். அவர் ரஜினியின் தீவிர எதிரி. ஒவ்வொரு நாய்க்கும் ரஜினியின்
படங்களையே பெயராக இட்டு மகிழ்ந்தார். அப்படித்தான் அந்த நாய்க்கு "முத்து" என்று
பெயரிட்டு அழைத்தார். ஏற்கனவே அவர் வீட்டில் "வீரா" என்ற நாய் இருந்தது.

ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விடுவேன். போகையில்
ஒரு ரூபாய்க்கு தவிட்டு பிஸ்கெட் என்று அழைக்கப்படும் அந்த வட்டமான
பிஸ்கெட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கொள்வேன். ஒரு ரூபாய்க்கு இருபது
தருவார்கள். டவுசரின் பையில் போட்டுவிட்டு வேகமாக கரும்புக்காடு, நெல்வயல்,
பருத்தி தோட்டங்களை தாண்டி நடந்து செல்வேன். அவரின் வீடு வயல்களுக்கு நடுவே மஞ்சள் சுண்ணாம்புடன் தனித்து அடையாளம் தெரியும்.

அப்போதுதான் அவர் சொன்னார் "முத்து" என்றொரு நாயை ராஜபாளையத்தில்
இருந்து வாங்கி வந்திருப்பதாக. வீராவுக்கு பத்து முத்துவுக்கு பத்து என்று
பிஸ்கெட்டுகளை பிரித்து கொடுத்தேன். நான் கண்ட நாய்களிலே மிகச்சிறப்பான நாய் "முத்து"தான். கோபமாக பேசினால் சாப்பிட மறுக்கும். எத்தனை நாளானாலும்
தட்டில் சாதம் கூட அப்படியே இருக்கும். சமாதானமாக பேசினால் மட்டுமே
சமாதானமாகும்.

உதாரத்திற்கு ஒரு கோழிக்காலை எடுத்து வாசல்படிக்கு உள்பக்கம் வைத்தால் அது
வெளியே உட்கார்ந்திருக்கும் கூப்பிட்டாலும் உள்ளே வராது. அவ்வளவு ஒழுக்கமாக
வளர்த்து இருந்தார்கள்.

தொடந்தது போல நான்கைந்து மாத ஞாயிறுகளையும் பார்த்துவிட்ட முத்துவுக்கு
என்னோடு வந்துவிடவேண்டும் என்று ஆசை. ஒருநாள் அங்கிருந்து திரும்பி
வரும்போது எனக்கு தெரியாமல் என்னோடே வந்துவிட்டது. பிறகு நான்கைந்து
முறை திருப்பிக் கொண்டு விட்டும் திரும்பி எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது.
அவர்களுக்கே சலிப்பாகி விட்டதைப் போல அங்கயே வளரட்டும் என்று விட்டு
விட்டார்கள். அன்றிலிருந்து எங்கள் வீட்டிலேயே வாழ்ந்து வந்தது. மிகச்சிறந்த
பாதுகாப்பை அது எங்கள் வீட்டிற்கு அளித்தது. வெற்று ஆள் ஒருவர் கூட
உள் நுழைய முடியாது. நாய்கள் மிகுந்த ஞாபகசக்தி கொண்டது. எத்தனை வருடம்
கழித்து வந்தாலும் வாசனை மூலம் யார் என்று அறிந்துகொள்ளும்.

அந்த ஊரின் எல்லையில் அமைந்துள்ள கடைசி வீடு எங்கள் வீடு. இரவில் அதிக
நடமாட்டம் இருக்காது. பழகிய வாசனை அல்லாத எவரும் எங்கள் வீட்டைத் தாண்டி
சுலபத்தில் போய்விட முடியாது ஆனால் நான் இரவு எத்தனை தாமதமாக வந்தாலும்
தூரத்தில் வரும்போதே தலைதூக்கிப் பார்க்கும். என் காலடியோசை கூட அதற்கு
அத்துபடி. என் நடை எப்படி இருந்தாலும்.

எப்படி ஒழுக்கமாக இருந்தாலும் அந்த முத்துவுக்கு காமத்தை மட்டும் கட்டுப்படுத்தவே
முடியவில்லை. ஒரே தெருவில் சலித்து போய் அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று
ஆட்டையை போட்டு வந்தது. முத்துவுக்கு எதிராக மற்ற எல்லா நாய்களும் ஒன்றுபட்டு
முத்துவின் காம ஆட்டத்தை அழிக்க திட்டம் போட்டு கடிக்க ஆரம்பித்தன. முதலில்
சிறு சிறு காயங்கள் பிறகு பெரிய காயங்கள், சிலநாள் ஓய்வுக்குப்பிறகு மறுபடியும்
அதேபோல வேட்கைப்பயண விழுப்புண்கள். ஓய்வு பெறும் வயது வந்தது கூட
நினைவில்லாமல் தொடர்ந்து தெருத்தெருவாக போய் கடைசியாக அதன் காமத்தை
அதன் போக்கில் விட்டு விட்ட பின்னர் எப்போதாவது வரும் போகும்.

கொஞ்சநாள் கழித்து அடையாளம் தெரியாத அளவுக்கு அடிவாங்கி வந்து தோட்டத்தில்
படுத்திருக்கும் தெம்பு வந்தவுடனே திரும்பி செல்லும் பிறகு வரும். எதோ ஒரு
சண்டையில் ஒரு சொறிநாய் கடித்துவிட்டது போல. இதற்கும் சொறி வந்து விட்டது.
தெருவாசிகள் சொறிநாயை விட்டுவைக்க கூடாது என்று முறையிட்டபின்னர் ஒரு
சுபயோக சுபதினத்தில் தூக்கிலிட்டு கொன்றாயிற்று.

இப்படித்தான் முத்துவின் கதை முடிந்தது.

என் பள்ளிக்கால நண்பனின் வீட்டில் ஒருநாய் வளர்த்தார்கள். அவனின் அப்பா இவனிடம்
பேசியதைவிட லட்சக்கணக்கான வார்த்தைகள் அதிகமாக மணி என்ற அந்த நாயிடம்
பேசியிருப்பார். மணியிடம் மட்டுமல்ல அவர் தெருவில் உள்ள நாய்களிடம் கூட
நின்று நிதானமாக பேசிவிட்டுதான் போவார். தெருநாய்களிடன் பேசும்போது மட்டும்
போதையில் இருப்பார். அவரும் அப்படிதான் குடியை விடமுடியாமல் மறுவாழ்வு
மையம் சென்று வந்தார். எல்லா பழக்கமும் காணாமல் போனது. ஆனால் நாயுடன்
பேசுவது மட்டும் முன்பிருந்ததை விட அதிகமானது. இப்போதெல்லாம் அவர்
நாயுடன் மட்டும்தான் பேசுவார். நாய்தான் எதுவும் இவரிடம் பேசுவதில்லை.

கண் திறவாத நாய்க்குட்டிகள் முலைதேடும் காட்சியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?


நெகிழ்ச்சியாக இருக்கும் அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். முடிந்தால்
தூக்கி கொஞ்சி பாருங்கள். வினோதமான வாடையுடன் கத கதப்பை உணரலாம்



நாய் குட்டி போட்டவுடன் எவராவது அதன் அருகில் போயிருக்கிறீர்களா?

கண்டிப்பாக போகமுடியாது. நான் பலமுறை முயன்று தோல்வியை தழுவியிருக்கிறேன்.
ஏதோ ஒரு நாயுடன் கலவி கொண்டு பெற்றதாயினும் குறிப்பிட்ட காலம் வரை
குட்டிகளிடம் யாரையும் அண்ட விடுவதில்லை. பிறந்த நாய்க்குட்டிகள் கண்ணை
திறக்காமல் அரை போதையில் இருக்கும்போது அதனிடமிருந்து ஒரு வாசனை வரும். (நாற்றம் என்று கூட சொல்லலாம்) அதை முகர எனக்கு அப்போது பிடிக்கும்
ஆனால் தாய்நாய் வந்துவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும்.

என் கல்லூரி நண்பன் ஜெயக்குமாருக்கு நாய்கள் என்றாலே ஆகாது. நாய்கள் இருப்பதாக
சொன்னால் அந்த தெருவில் நடப்பதற்கே பரிசீலனை செய்பவன். சிறிய வயதில்
எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கலாம். ஆனால் அவன் வீட்டு நாய்க்கு கூட
பயம். கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு ச்சூ ச்சூ என்றபடியேதான் போவதும்
வருவதும். அவனிடம் உங்கள் வீட்டில் நாய் இருப்பதாக சொன்னால் முடிந்த வரை
உங்கள் வீட்டுக்கு வருவதை தவிர்ப்பான். சினிமாவில் வருவதுபோல கோரமாக
எதாவது ப்ளாஷ்பேக் இருக்கலாம்.

ஐந்தாவது வரை நானும் என் உடன் பிறந்த தம்பியும் ஒன்றாகத்தான் டியூஷன்
செல்வோம் அப்படியொருநாள் செல்லும்போது வாத்தியார் வீட்டின் எதிர்வீட்டில் இருந்த
நாயை கொஞ்சிக்கொண்டே வந்தான். நாய் என்ன நினைத்ததோ தெரியவில்லை. எகிறி
வந்து முகத்திலே கடித்து விட்டது. சரியாக மேல் உதட்டில் ஒரு ஓட்டை. அழுது
கொண்டே வீட்டுக்கு ஓடினோம். பிறகு அந்த வாத்தியாரிடம் செல்வதை நிறுத்தி
விட்டோம்.

சமீபத்தில் ஒருநாய் மூன்று குட்டிகள் இட்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று
பார்க்கலாம் என்று போனபோது உர்ர் என்று உறுமும் சத்தம். பின்வாங்கினேன்.

எல்லா ஊர்களிலும் நாய்கள் ஒரே குணத்தைதான் கொண்டிருக்கிறது.

நாய்க்காரப்பாட்டி


எங்கள் பள்ளிக்கு எதிரே வடை சுடும் பாட்டி
ஒருத்தி இருந்தாள். நிலவில் வடை
வடை சுட்டவள் இவளாகத்தான் இருக்குமோ
என்ற ஐயம் கூட எனக்கு உண்டு.
என் வாத்தியார் அதே பள்ளியில் படித்த
போதுகூட இவள் பாட்டியாகவும், வடை
சுடுபவளாகவும், தனிமைக்காரியாகவும்
இருந்தாள். ஆனால் அவளுக்கு ஆறு
கால்கள்.
ஆம்
அவளுடன் ஒரு கிழட்டு நாயும் இருந்தது.
இப்போது எத்தனை என்று தெரியவில்லை.
ஆனால் அந்த நாய்க்கு நான்குதான்.

Sunday, April 13, 2008

மொபைல் போன் தொலைந்து போனால்....

மொபைல் போன் தொலைந்து போவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால்
ஏண்டா மச்சான் போனே பண்ணலன்னு யாராச்சும் கேட்டால் மொபைல் தொலைஞ்சு
போய் நம்பர் காணாமா போச்சுடா மாப்ளன்னு சொல்லலாம். கடன்காரன், ஊர்க்காரன்
தூரத்து சொந்தம், தினமும் ஆபிஸ்லருந்து ஓசி போனில் ஒயிலாக பேசும் ஊழியர்கள்
இடமிருந்து கூட உபரியாக தப்பிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் தலையணைக்கடியில்
இருந்த மொபைலை என் தூக்கம் கலையாமல் லவட்டிவிட்டார்கள். நான் கதவைப்
பூட்டாமல் தூங்கியதை எந்த உளவுத்துறையினர் அக்கொள்ளையர்களுக்கு தகவல்
கொடுத்தார்களோ தெரியவில்லை. விலைமதிப்புமிக்க பாவனா, நமீதா, இன்னபிற
திரை அழகிகளின் புகைப்படங்கள் தவறிவிட்டன. இளையராஜா பாடல்களும்
நானே பாடி பதிவு செய்த பாடல்களும் பொக்கிஷம் போல யாருக்கும் தெரியாமல்
பாதுகாத்து வைத்திருந்தேன் அத்தனையும் புஸ்.

காவல் நிலையத்தில் புகார் செய்ய போனபோது அங்கொரு கொடுமை சிங்கில் பீஸில்
ஆடியது. அங்கே இருந்த ஒரு போலீசுக்கு மருந்துகுப்பி அளவு கூட ஆங்கிலம்
தெரியவில்லை. எனக்கோ கட்டிப்போட்டு அடித்தால்கூட அரபி வராது. அக்கம்
பக்கத்தில் வார்த்தைகளை கடன் வாங்கி கூடவே சைகை நடனம் ஆடி அவர்களுக்கு
புரியவைத்தேன். போன் வாங்கியதற்கான ரசீது, சீரியல் எண், அடையாள அட்டை
எல்லாவற்றையும் கொடுக்க சொன்னார்கள். எதுவுமே இல்லாமல் வந்திருந்த எனக்கு
பேரதிர்ச்சி உடனே அறைக்குச் சென்று எடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தேன்.

என் நேரம் ஒரு டாக்சி கூட கிடைக்கவில்லை. மெதுவாக நடந்து செல்லும்போது
ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் தென்பட்டது. உள்ளே நுழைந்து இரண்டு புட்டிகள் வாங்கி
தொலைந்துபோனதை கொண்டாடிவிடலாம் என்று மனம் கணக்கு போட்ட நொடியில்
ஆவோ பாய் என்ற எனக்கு தெரிந்த இந்தி வார்த்தையில் ஒரு பாகிஸ்தானி டாக்சிகாரன்
அழைத்தான். போய் திரும்ப அழைத்து வர அவனுடன் இந்தியில் கதைத்து (ஆம் இந்தி)
அறை வந்தபோது ரசீது எங்கு வைத்தேன் என்பது மறந்துபோனது. கட்டிலையே புரட்டி
அடியில் இருந்த பேப்பரை எடுத்தால் ரசீதாக இருந்தது. மொபைலே கிடைத்த சந்தோஷம்
சீரியல் எண்ணும் அதிலேயே எழுதி இருந்தது.

மறுபடியும் அதே போலிஸ் ஸ்டேஷன். அவர்கள் கொடுத்த பாரத்தில் விடைகளை
நிரப்ப சொன்னார்கள். பேனா எடுத்து வரவில்லை. சூன்யமான முகத்துடன் அந்த
தாடி போலிசை பார்த்தேன். நம் ஊர்களிலாவது ஒருமீட்டர் செருப்பு தைக்கும் நூலில்
பேனாவை இறுக்கமாக கட்டி வைத்திருப்பார்கள். இங்கே அதுவும் இல்லை. பக்கத்தில்
நின்றிருந்த ஒரு சூடானியரிடம் கெஞ்சி வாங்கி நிரப்பி ரசீதின் நகல், அடையாள அட்டை நகல், எல்லாவற்றையும் இணைத்து கொடுத்தேன்.

இவ்வளவு சிரமத்துக்கு இடையில் கொடுத்தபோது அதை இடக்கையால் வாங்கி பிரித்து
கூட பார்க்காமல் ஓரமாக வைத்துவிட்டார் அந்த கனவான் இப்படியாகும் என்று தெரிந்து
இருந்தால் நானே புலனாய்வில் இறங்கி திருடனுக்கு வலை விரித்திருப்பேன். வெளியே
வந்து காவல் நிலையத்திற்கு பின்னால் இருந்த ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் கிளையினுள்
நுழையப்போனேன். அப்போதுதான் வேலை நேரம் முடிந்து கதவை அடைத்தார்கள்.
"ஐயா கருணையாக ஐந்து நிமிடத்தை தாருங்கள்" என்று என்று ஏலம் விட்டு படிப்படியாக
நான்கு, மூன்று, இரண்டு என்று கடைசியாக ஒருநிமிடம் கூட திறக்க முடியாது என்று
சொல்லி கதவை அடைத்து விட்டார் அந்த கறார் ஊழியர்.

தொலைந்து போனது கிடைக்கும் வரை தற்காலிகமாவது ஒரு சிம்கார்டு இருந்தால்
நல்லது என்று அதை வாங்க சென்றேன். அந்த மெகாமாலில் இதுவரை ஆங்கிலத்தில்
வந்திராத ஆங்கிலப் படங்கள் எல்லாம் விலைக்கு இருந்தன. அய்யா இது எல்லாம்
எந்த நூற்றாண்டில் வெளிவந்த படங்கள் என்று கேட்கலாம் போல இருந்தது.
இந்த பிலிப்பைன் தேசத்து பிகர்கள் பணம் எண்ணி கல்லாபெட்டியில் போடுவதற்கும்,
தொலைபேசிக்கு பதில் சொல்லவும் மட்டும் பிறந்தவர்களா என்ற சந்தேகம் அடிக்கடி
எனக்கு ஏற்படுவதுண்டு. கல்லாக்களில் நீக்கமற வெள்ளை நிற பிலிப்பினி பிகர்கள்
பொம்மைகள் போல அமர்ந்திருந்தன.

வயிறு பசித்தது. எங்காவது காரமாக உள்ளே தள்ளவேண்டும் போல இருந்தது. நேராக
தென்னிந்திய உணவு விடுதி நோக்கி சென்றேன். "இப்பதான் ரெடியாகிட்டு இருக்குங்க"
இட்லி தோசை வேணா சூடா கிடைக்கும் என்றார்கள். சரி எதாச்சும் கொடு என்றேன்.
போனில் பேசியபடியே ஒருவன் என் அருகில் உட்கார்ந்தான். புதிதாக வந்தவன் போல
ஊருக்கு போன் பண்ணி பிஸ்து காமித்துக் கொண்டிருந்தான் நடு நடுவே "ஆமா...
இல்லயா பின்ன.." என்று வேறு இந்தநேரத்தில் என் கையில் டுபாக்கி இருந்தால்
ரோட்டில் போன் பேசி செல்லும் அனைவர் வாயிலும் குறிபார்த்து சுடுவேன்.

போனை ஒரு வினாடி நிறுத்திவிட்டு "அண்ணே எனக்கு ஒரு ஆவூ" என்றான் அந்த
அண்ணாரும் "ஒண்ணே ஒன்னு போதுமா கண்ணு" என்று திருப்பி கேட்டார். இவன்
சைகையாலே பதில் அளித்தான். (இல்லயா பின்ன IST லைன் இல்லா) என்னால்
ஆர்வத்தை அடக்க முடியவில்லை போன் பேசிக்கொண்டிருந்தவனிடம் "ஏங்க ஆவூ"
என்றால் என்ன என்று கேட்டேன். ஆவூன்னா ஆனியன் ஊத்தாப்பம் என்ற தன் அரிய
சுருக்கு சொல்லை சொன்னார்.

"அப்ப சாதா வூத்தப்பத்த என்னன்னு சொல்விங்க? சாவூன்னா? என்று கேட்டேன். வேறு
இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டு ஆவூவை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியேறினான்.

அறைக்கும் திரும்பும் வழியில் டாக்சியில் என் பக்கத்தில் இருந்தவர். என் மொபைல்
மாடல் போலவே வைத்திருந்தார். (Sony ericson k800i) அப்படியே புடுங்கிகிட்டு
கார்லருந்து குதிச்சிறலாமான்னு தோன்றியது. போனையே வெறித்து பார்க்க அவர்
பேண்டின் உள்பாக்கெட்டில் போட்டு பத்திரப்படுத்திவிட்டார்.

கடந்த ஒருவாரமாக எண்களை மொபைல் போனில் சேமிக்காமல் மனதில் மனனம்
செய்வது என்று முடிவுசெய்து சேமிக்காமல் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்றிரண்டு
தவிர மனனம் ஆக மாட்டேன் என்கிறது. தூங்கும்போது நிறைய எண்கள் கனவில்
வருகிறது, கார் நம்பர்கள் குறுக்கே வந்து குழப்பமளிக்கிறது, திடிரென்று என்
டெலிபோன் எக்ஸ்டென்சன் மறந்து போனது, உச்சகட்டமாக புதிதாக வாங்கிய எண்
என்னவென்று தெரியவில்லை. அலுவலக போனில் இருந்து 100 மைல் தள்ளி
இருந்த ஒருவருக்கு அழைத்து எண் உலாபேசி எண் என்னவென்று சொல்ல முடியுமா?
என்று கேட்டேன்.

"அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்..." நம்பர்
சொல்றேன் குறிச்சுக்கங்க என்று சொல்லி நம்பர் சொன்னார்.

சிறுவயதில் உறவுக்காரர்கள் வீட்டு டெலிபோன் எண் எல்லாம் டாண் டாண் என்று
சொல்வேன். மொபைல் வந்ததிலிருந்து மூளை என்ற வஸ்துவை உபயோகபடுத்தாமல்
விட்டதினால் துருப்பிடித்து விட்டது.



என்
எதிரே
எண்களின்
குவியலாக உள்ளது
எந்த எண்ணிலும் என்
எண்கள் இல்லை எதிரில்
உள்ள கார் எண்ணின் கூட்டுத்தொகை
என் காதலி வீட்டு எண்ணை ஒத்திருக்கிறது.
எங்கெங்கு காணினும் எண்களடா தம்பி எண்களடா
எத்தனை கோடி எண்கள் வைத்தாய் எங்கள் இறைவா..??

இதுக்கு பேர்தான் படிக்கட்டு கவுஜை.

Friday, April 11, 2008

ஒரே கடல்.

சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா
நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள்
திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள்.

உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான்
இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது
நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும்
சொல்ல முடியாது.

நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன்.
இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள்
மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல்
நம்பிக்கை இல்லாதவன்.



ஜெயக்குமார் (நரேன்) கல்யாணமாகி குழந்தை பெற்ற ஒரு வேலையில்லா பட்டதாரி
தீப்தி (மீரா ஜாஸ்மின்) நரேனின் மனைவி. வேலையில்லாத கணவனுடன் குடும்பம்
நடத்தும் அதிகம் படித்திடாத பெண்.

இவர்கள் மூவரும் ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.
இவர்களுக்குள் நடப்பதுதான் கதை.

மீராவின் குழந்தைக்கு உதவுகிறார் மம்முட்டி நன்றி சொல்ல மம்முட்டியின் வீட்டுக்கு
வரும் மீரா அந்த வீட்டையும், தனியனான மம்முட்டியையும் கண்டு பிரமிக்கிறாள்.
இது அவளுக்கு முற்றிலும் புதியதான உலகம். தயங்கியவாறே நன்றி சொல்லிவிட்டு
செல்கிறாள். உதவிபெறல்களின் தொடர்ச்சியாக இருவருக்கும் உறவு ஏற்படுகிறது.
மம்முட்டியின் சிபாரிசில் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது.

மம்முட்டி மூலம் கர்ப்பமாகிறாள் மீரா. இதைச் சொல்ல வரும் மீராவினை தன்
அறிவுஜீவித்தனத்தால் காயப்படுத்தி அனுப்பும் மம்முட்டி. உடல்சுகத்தை தாண்டி
தன்னிடம் வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை என்ற உண்மை தெரியவரும்போது
மீராவுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தான் கொண்டிருக்கும் நேசத்தை
புறக்கணிக்கும் போது ஏற்படும் மன உளைச்சலில் மனநிலை பாதிக்கப்படுகிறாள்.




இயல்புக்கு மாறான தொடர்ந்த சில சம்பவங்களில் மருத்துவமனையில்
சேர்க்கப்படுகிறாள். சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்து கணவனுடன்
திரும்புகிறாள்.

இடைப்பட்ட காலத்தில் தனது வீடு மாறி, தான் தன்னை பறிகொடுத்த அதேவிதத்தில்
இன்னொரு வேலையில்லாதவனின் மனைவியுடன் தன் கணவனுக்கு தொடர்பு
இருப்பதை உணர்கிறாள். ஒரே கடல் என்ற தலைப்பிற்கு அர்த்தம் அந்நேரத்தில்
புரிய வரும். மிக வலிமையான தலைப்பு.

ஒரு அழகான பெண்ணின் காதலை, பரிசுத்தமான அன்பை, குடும்பத்தை கலைத்த
குற்ற உணர்ச்சியில் பெரும் குடிகாரராகிறார் மம்முட்டி. தன்னால்தான்
கர்ப்பமுற்றாள் என்பதை நம்ப மறுக்கிறார் அதன் விளைவாகவே மீரா மனநிலை பாதிக்கப்படுவதையும்நம்ப மறுக்கிறார். உண்மையை ரம்யா கிருஷ்ணன்
விளக்கும்போதும் நம்ப மறுக்கிறது. பேலா (ரம்யா கிருஷ்ணன்) உயர்தர பார்
நடத்தும் தனிமை பெண். திரைப்படத்தில் ஒரு பெண் பார் நடத்த வேண்டுமென்றால் இயக்குனர் அந்த பாத்திரத்திற்கு ப்ளாஷ்பேக் வைத்திருப்பார். அதற்கென்று சில
ரீல்கள் செலவில்லாமல் பாத்திரமே சொல்வது போல செய்து நம்மை
காப்பாற்றி விட்டார்.

உலக பந்தங்கள் அனைத்து சுயநலமானவை என்று நினைக்கும் அவனுக்கு
அடுத்தவனின் மனைவி மூலம் வாரிசு ஏற்படுவதை ஏற்க முடியவில்லை.
தொடர்ச்சியான சுயகேள்விகள் மூலம் பெரும் குடிகாரனாகிறார் மம்முட்டி. முடிவில்
தான் மீராவை காதலிப்பதை உணர்கிறார். இரு குழந்தைகளுக்கு தாய். கணவன்
என்ற பந்தங்களை விட்டு வேளிவர முடியாத ஒருத்தியின் மேல் காதல் என்பது
சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

நம் சமூகம் கட்டமைத்த உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாதது என்பது மேலை
நாட்டுக் கலாச்சாரம். நம் சமூகத்துக்கு முற்றிலும் பொருந்தி வராத கலாச்சாரம்.
புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் உறவுச்சிக்கல்களின் முடிவில் காதலின்
புனிதத்தை உணர்கிறான். இருவரின் காதலையும் இச்சூழல் ஏற்க மறுக்கிறது.
மிகவும் சிக்கலான இக்கதையில் மிகச்சிறந்த நடிப்பாக மம்முட்டியையும், மீரா
ஜாஸ்மினையும் சொல்லலாம்.

புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயாவின் ஹீரக் தீப்தி என்ற
நாவலின் தழுவலே ஒரே கடல். மிக அபூர்வமான படம். தனது வாழ்க்கையில் நடித்த
மிகச்சிறந்த படம் என்று மீரா ஜாஸ்மின் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மம்முட்டி
பற்றி சொல்லவேண்டியதில்லை. படத்தின் இருபெரும் தூண்கள் இவர்கள்தான்.
நரேனின் நடிப்பு சுமார். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திணிப்பாக மட்டும் உள்ளது.

நான்கே நான்கு பாத்திரங்கள் கொண்டு கலவையான உணர்ச்சிகளுடன் ஒரு மிகச்சிறந்த
படத்தை கொடுத்த இயக்குனர் ஷ்யாமப்ரசாத் அவர்களுக்கு பாராட்டுகள்.

நிச்சயம் தமிழில் எடுக்கவேண்டிய படம். மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியான
ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே!

Thursday, April 03, 2008

டகீலா கவுஜையுடன் இரு அழுகைகள்

தனியனான என் அறையில் மிக சமீப காலமாய்
சில பேச்சுக்குரல்கள் கேட்கின்றன.
முதல் முறையாக கேட்டது நாராயணனின் குரல்தான்
பலவீனப்படுத்தும் விதம் அவனின் வருகை
இருந்தது பின் குட்டினோவும் வந்தபோது
வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
என் மந்தமான புத்திக்கு பெண் வீழ்த்துதல்
பற்றித் தெளிய வெகுநேரம் பிடித்தது.
அதற்கும் மந்தத்திற்கும் தொடர்பில்லை
என்று தெரியவந்தபோது கஸ்தூரியின் மீது
வியப்பு ஏற்படவில்லை. இப்போதைக்கு
நகுலனையும் நவீனனையும் பிரித்தாளுவதுதான்
பெரிய பிரச்சினையாக இருக்கிறது நடுவில்
சுசீலாவின் பிரதி வேறு.

வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?

டகீலா கவிதைகள் என்று வகைப்படுத்தக் கூடிய கவுஜைகள் இவை.
டகீலா சாப்பிட்டவுடன் பழைய ஞாபகங்கள் வரும் என்று ஆப்பிரிக்க டகீலாக்காரி
சொன்னது உண்மைதான் என்ற ஞானம் விடியலில் வந்தது.

நன்றி - நகுலன்

------------

ஒரேநாளில் இரண்டு விதமான அழுகையை பார்க்க நேர்ந்தது. இரண்டுக்குமான
வித்தியாசத்தை நீங்களே பிரித்தறியலாம்.

ஏசியா நெட் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவுகளில் ஐடியா (Idea)
ஸ்டார் சிங்கர் என்றொரு நிகழ்ச்சி. நல்ல குரல் வளம் உள்ள ஆரம்ப நிலை
பாடகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. முதல் பரிசு நாப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள
வீடு, இரண்டாம் பரிசு கார் இப்படியாக. இந்நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களுக்கு
மேலாக நடந்து வருகிறது. விறுவிறுப்பான நிகழ்ச்சி. தங்களது திறமையை
எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.
தரமான, கேட்க இனிமையாகவும் இருந்தது.

நேற்று முந்தைய தினம் பாடிய ஒருவர் பெயர் மறந்து விட்டது. ஏதோ ஒரு
ராகத்தில் பாட ஆரம்பித்தார். அரங்கமே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது
ராகம் தாளம் லயம் தெரியாத நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களுக்கு
மேலாக அதை பாடிக்கொண்டிருந்தார். உருகி உருகி பாடுவதென்பது அதுவாகத்தான்
இருக்கவேண்டும். அவர் பாடி முடிக்கும்போது உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டே
அழுது விட்டார். அவர் மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த மலையாளத்தின் புகழ்பெற்ற
பாடகர்கள் இரண்டு பேர் (M.G. Sreekumar தமிழில் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார்
சின்ன சின்ன மழைத்துளிகள் - என் சுவாசக் காற்றே இன்னொருவர் சரத்), ஒரு இசையமைப்பாளர், மற்றும் உஷா உதூப் எனஅனைவர் கண்ணிலும் கண்ணீர்.

பாடினவர் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. அவர் பாடி
முடித்தவுடன் தான் அரங்கத்தில் உள்ளவர்கள் கூட இயல்பு நிலைக்கு திரும்பினர்.
நடுவர்கள் 96 மதிப்பெண்கள் வழங்கினர்.இதுவரை பெற்ற மதிப்பெண்களில்
அதிகபட்சம் இதுவே.

புரியாத கர்னாடக இசையென்றாலும் அதனை கேட்கையில் அப்படி ஒரு சாந்தம்.

ஒரு நல்ல இசையின் உச்சம் என்பது கேட்பவரையும், பாடுபவரையும்
நெகிழ்ச்சிப் படுத்துவதாக, பலவீனப்படுத்துவதாக கூட இருக்கலாம்.


இரண்டாவது அழுகையை பாருங்கள்

மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்ததை
என்னவென்று சொல்வது? எனக்கு ஏன் இரண்டு கண்களை படைத்து பின்
மானாட மயிலாட நிகழ்ச்சியையும் பார்க்க வைத்தாய் எங்கள் இறைவா...

இது நடன நிகழ்ச்சி (அப்படிதான் விளம்பரப்படுத்துகிறார்கள்)

ஒரு மூதாட்டி (இவரை மூதாட்டி என்றே சொல்ல வேண்டும்) கலவையான குத்துப்
பாடல்களுக்கு கலவையாக காலை அகட்டி அகட்டி வைத்து ஆடிக்கொண்டிருந்தார்.
குத்துப்பாடல்களுக்கேற்ற வேக அசைவுகள் தோன்ற இயலாத வகையில் பருத்த
உடலமைப்பு. இசைமாறுதல்களுக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள அவர்
எடுத்துக்கொள்ளும் ஒரு வினாடி நேரத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தையால்
திட்ட வேண்டும் என்று நமக்கு தோன்றும் அடுத்த வினாடி ஆட ஆரம்பிக்கிறார்.

மதிப்பெண் வழங்கும்போது குறைவாகவோ அல்லது எதோ விமர்சனத்தை
அந்த நடுவ நாட்டாமைகள் வழங்க அம்மணி அங்கிருந்தே முகத்தை பொத்திய
வாறு குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தார். நாலு ஆங்கிள்களில் அதை
மறக்காமல் படமெடுத்து சோக பிண்ணனி இசையில் ஒளிபரப்பினர். பார்க்கவே
நாராசமாக இருந்தது.

ஏண்டா அழுவுறத கூடுமா காப்பி அடிக்கறதூ???

மேலே சொன்ன இரண்டு அழுகைக்குமான வித்தியாசத்தை நீங்களே புரிந்து
கொள்ளுங்கள்.

-----------

இந்த வார பிகர் பிரிவில் இரண்டு வாரமாக மாற்றம் செய்யவேயில்லை
இது குறித்து எந்த ஜொள்ளரும் கேள்வியெழுப்பாததை எப்படி எடுத்துக்கொள்வது.
இந்த பிகரையே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றா? :)