இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களை இதற்கு முன்பு படித்ததில்லை
அவருக்கென்று எந்த பிம்பங்களும் எனக்குள் பதிந்திருக்கவில்லை அதனால்
வாசிப்பின் போது ஏமாற்றமோ பிரமிப்போ எதுவும் ஏற்படவில்லை. கதையின்
முக்கியமான பாத்திரமான கஸ்தூரி பிழைப்பிற்காக டெல்லி வருகிறான்
ஆரம்பத்தில் அய்யராத்து அம்மாஞ்சி டெல்லி வரைவந்து ஏதோ வேலையில்
ஒட்டி பிறகு இருபது வருடங்களுக்கு முன்பு செட்டிலான வடகலையோ
தென்கலையோ ஏதோவொரு கலையை கட்டி காத்துவரும் அரசாங்க
ஊழியரின் மகளை ஏதேச்சையாக சந்தித்து காதல்வயப்பட்டு கல்யாணத்தில்
முடியும் போலிக்கிறது என்று முதல் பத்து பக்கங்களை படித்து முடித்தபிறகு
அனுமானித்தேன். இதை எதற்கு கதையாக எழுதவேண்டும் சின்னத்திரை
தொடர்களிலே இதைத்தானே காட்டுகிறார்கள் என்று சலிப்பு மேலிட
தொடரலாமா வேண்டாமா என்று யோசித்து பிறகு வேறு எதுவும் புத்தகங்கள்
இல்லாததால் இதையே தொடர்ந்தேன்.
ஆரம்பத்திலேயே சுவாரசியமில்லாமல் போனதற்கு சுஜாதாவின் முன்னுரையும்
ஒரு காரணம். என் குழந்தைத்தனமான முன் அனுமானங்கள் தவறு என்று படித்து
முடித்த பிறகு உணர்ந்தேன். சுவாரசியமானதாக இல்லாவிட்டாலும் வாசிப்பினூடே
நம்மையும் கதையில் இணைத்துக்கொள்கிற உத்தியை ஆசிரியர் நன்றாக
கையாண்டிருக்கிறார். தன் மேதாவித்தனங்கள் எல்லாம் ஒருபெண் முன் தவிடு
பொடியாக்கப்படுவது விரும்பாமல் சுற்றியலையும் மனம் கொண்டவனாக கஸ்தூரி
கதையில் அவன் பாத்திரத்தின் அதிநவீனமான முற்போக்கு சிந்தனைகள் கண்டு
ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.
அரசாங்கத்தின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் கதைக்குள் எப்படி கொண்டு
வந்தாரேன்று வியப்பாக உள்ளது. கதையின் ஒவ்வொரு வரியிலும் எள்ளல்
இருப்பது ஒரு புன்னகையுடன் வாசிக்க வைக்கிறது. இத்தனை நகைச்சுவையான
எழுத்தை முன்பு வாசித்ததில்லை. அதுவும் எலியை எக்ஸ்போர்ட் செய்ய்யும் தொழில்
பற்றி விவரிக்கும்போது வாய்விட்டு சிரிக்கமுடிந்தது. அதிபுத்திசாலித்தனமான
உரையாடகளும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் அங்கங்கே தூவியிருப்பது
இனிமை.
எல்லா இடத்திலும் எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார். கல்யாணம்
என்ற வியாபாரத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவன் தன் பிடியில் இருந்து மெல்ல
மெல்ல தன்னையறியாமல் விலகும் பெண்ணை கண்டு அச்சமுறும் கஸ்தூரி. முதலில்
ஆணாதிக்க சிந்தனை உள்ளவனாக இருப்பானோ என்றெண்ணியிருந்தேன். சடார்
சடாரென அவன் எடுக்கும் முடிவுகள் நமக்குள் பதை பதைப்பை ஏற்படுத்துபவையாகவும்
அதுவே பின் அப்பாத்திரத்தின் மேல் காதல் கொள்ளவும் வைக்கின்றன.
எந்தவிதமான இலக்கும் இல்லாமல் பயணிக்கும் வாழ்க்கை கஸ்தூரிக்கு எதிர்ப்படும்
எவரையும் தன் வலைக்குள் வீழ்த்தும் தொழில்நேர்த்தி வியாபாரத்தில் மட்டுமல்ல
பெண்கள் விஷயத்திலும். தன் சுயமரியாதைக்கு சிறிது கலங்கம் ஏற்பட்டாலும் அந்த
கணத்திலேயே வேலையை தூக்கியெறியும் அவனுக்கு ஒருசமயத்தில் போக்கிடம்
இல்லாமல் போகும்போது ஒருபெண்ணின் தயவால் முன்பு செய்த வேலையை விட்ட
அடுத்த நொடியிலேயே அடுத்த வேலை கிடைக்கிறது. அப்போது அவன் தனக்குள்
கேட்டுக்கொள்ளும் கேள்விகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சுய அலசலாக
இருக்கலாம்.
கதையில் ஏராளமான கதாபாத்திரங்கள் வந்து போகின்றன அவைகளுக்குள் நடக்கும்
உரையாடல்கள் ஒரு திரைப்படத்தைப் போல நமக்குள் விரிவது அலுப்பில்லாமல்
வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு இடத்தில் கதாபாத்திரத்தின் முகபாவனை இப்படிதான்
இருந்திருக்குமோ என்று கூட எண்ணவைக்கும் அளவுக்கு உள்ளது. முக்கியமானது
இதன் நகைச்சுவை மிகவும் நுட்பமான இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்துகொள்ள
முடியும் என்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சம். எழுத்தாளருக்கு நிச்சயமாக
நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே இருக்கிறது.
கதையின் ஆரம்பம் அழகாகவும் பிறகு கஷ்டபட்டு முடிவில் சுபமாக முடிக்கும்
கதையாக இருக்கும் கதையின் பாத்திரங்கள் எல்லாம் மிகவும் நல்லவர்களாக
இருப்பார்கள் என்று எண்ணுவீர்களானால் எல்லாமே தவறாக இருக்கும் இதை
வாசித்தபிறகு. எவர் நல்லவர் எவர் கெட்டவர் என்றே தீர்மானமாக
எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவரவர் அவரவர் சந்தர்ப்பத்திற்கு
காத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வளவுதான் நவீனங்களுக்குள் புகுந்து நாகரீக
வேஷம் போட்டாலும் அவனின் ஆதிகுணம் என்பது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
வெளிப்பட்டே ஆகவேண்டும். அந்த வெளிப்பாடு வெற்றியிலா தோல்வியிலா
இயலாமையிலா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் கதையின்
சாராம்சம். இத்தனை முற்போக்குவாதியாக காட்டப்பட்டிருக்கும் கஸ்தூரியின்
கதாபாத்திரம் மீனாவினால் தனக்கு ஏற்பட்ட அவ்வாறு கஸ்தூரியால் எண்ணப்படும்
தோல்வியை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளை தன்வசமாக்கி
தன் தோல்வியை வெல்ல மீனாவின் கணவனை ராஜஸ்தானுக்கு அனுப்பும்போது
கஸ்தூரியின் மேல் வைத்திருந்த அத்தனை ஆச்சரியங்களும் காணாமல் போகின்றன.
அடுத்தவனின் மனைவியை அடைய துடிக்கும் அந்த நொடியில் அத்தனையும்
காணாமல் போகின்றன.
கஸ்தூரிக்கு அடுத்தபடியாக கதாநாயகி போன்ற பாத்திரமான மீனாவை எப்படி
புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. கதையின் ஆரம்பத்தில் மேலிடத்து
அதிகாரியை வளைத்துபோடும் செகரட்டரி என்ற அளவில் அறிமுகமாகி பின்
நம்ப முடியாத அளவுக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த பாத்திரத்தை
புரிந்துகொள்வது கடினம் அதனால்தான் கஸ்தூரி அவளிடம் தன் ஆணவத்தை
கைவிட்டு சரணடைகிறான். பெண் என்பவள் பெண்ணாலேயே புரிந்து கொள்ள
முடியாதவள் என்பது போல அமைந்த பாத்திரம். நல்லவளா, கெட்டவளா என்ற
இருவார்த்தைகளுக்கு அடக்க முடியவில்லை. அதையும் தாண்டி கஸ்தூரிக்கு
தான் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என எண்ண வைக்கும் அளவுக்கு
அவளின் போக்கு இருக்கிறது. அதுவும் உண்மைதான்.
ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத கதை இது. வாழ்க்கையை அதன்போக்கில்
வாழவிரும்பும் ஒருவனின் வாழ்க்கையில் எதிர்படும் சவால்கள், தோல்விகள்,வெற்றிகள்
சந்தோஷங்கள் எல்லாம்தான் தந்திரபூமி. கதையின் முடிவாக எழுத்தாளர் என்ன
சொல்ல வருகிறார் என்பது வாழ்க்கை பெரியோர்கள் கட்டமைத்தபடி வாழ்ந்தால்தான்
இனிமையாக இருக்கும் என்பது போல எனக்கு பட்டது.
எல்லாம் வாசித்து முடித்தபிறகு சுஜாதாவின் முன்னரையை மறுபடியும் வாசித்தேன்.
முன்பே சொன்னது போல முன் அனுமானங்களுடன் ஒரு விஷயத்தை அலட்சியமாக
எண்ணினால் அது தவறாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்பது தவறான பழமொழி என்பதை உணர்ந்தேன்.
வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி.
அய்யனாருக்கு வாசிக்க கொடுத்தவருக்கும் நன்றி.