எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, September 29, 2007

வெள்ளெருக்கு

அய்யனாரும் பிற பதிவர்கள் சிலரும் ஏற்படுத்திய முன்விவரணைகள் மூலமாக
அந்நூல் எனக்கு பரிச்சயமானது. பக்கங்கள் அதிகம் நீளும் நாவல்களில்
அதிகம் விருப்பமில்லை. பொட்டுதெறித்தது போல சிறுகதைகள் ஏற்படுத்தும்
சிலிப்புகளே அதிகம் என்னை ஈர்த்தது. நிறைய சொற்களை உள்ளடக்கிய
நாவல்களை விட வாழ்க்கையை ஆதாராமாக சிறு உரையாடல்கள் மூலம்
வெளிப்படுத்தும் சிறுகதைகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வரிசையில் அமைந்து
விடாமல் வெள்ளெருக்கின் அனைத்துக்கதைகளும் எதற்கும் பொருந்தாமல்
இருக்கின்றன. தமிழில் அதிகம் தெற்கைபற்றிய சிறுகதைகளே அதிகம்
எழுதப்பட்டிருக்கின்றன, புனையப்பட்டிறுக்கின்றன. நான் வாசித்த வரையில்
தென்னாற்காட்டின் வாழ்க்கைமுறையை எவரும் பதித்ததில்லை. இச்சிறுகதை
தொகுப்பு அதனை பூர்த்தி செய்கிறது.

முதன்முறையாக வெள்ளெருக்கை கையில் எடுத்தபொழுது எனக்குள் எதிர்
பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அவை எவற்றையும் பொய்யாக்காமல்
அத்தனையும் திரைக்காட்சிகள் போல வாசிக்கையில் என் முன் நிழலாடியது
போன்ற ஒரு உணர்வு.

பொதுவான இடத்தில் நமது பேச்சுக்கள் தலைவர்களின் மேடைப்பேச்சு போலதான்
அழகுற அமைந்திருக்கிறது. அதைத்தான் உலகமும் நம்புகிறது. ஆனால் அது
உண்மையல்ல. எந்த ஒரு சம்பவத்தையுமே நேரில் பார்த்தவன் எழுதும்போதுதான்
அதைப்பற்றிய பிம்பம் வாசிப்பவனுக்குள் முழுமையாக நிழலாட சாத்தியமுண்டு
என்பதை ஆழமாக நம்ப வைத்திருக்கிறது இந்த தொகுப்பு.

குறிப்பிட்டு சொல்லும்படியாக இத்தனை சிறுகதைகள்தான் என ஒரு முடிவுக்கும்
வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன். அத்தனை எதார்த்தமான
வெளிப்பாடுள்ள கதைகள். கதைகள் என்பதை விட நடந்தவை என்றுதான் சொல்ல
முடியும். எவரும் இதை கதை என்று ஒப்புக்கொள்ளவே மறுப்பர்.

ஒரு விஷயம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது என்றால் அது அரிதாக நடக்கும்
ஒன்றாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
வார்த்தைகளும், நம்பிக்கைகளும் இக்காலத்தில் காணவே முடியாதபடி மாறிவிட்டிருக்கிறது.
ஒருகாலத்தில் நடந்தவை நான் சிறுவயதில் தூண்மறைவில் நின்று பார்த்திருக்கிறேன்
என்ற விஷயங்களை எழுத்தில் பார்க்கிற போது ஒரு உற்சாகம். இதுவரை யாரும்
எழுதவில்லையே என்ற ஆதங்கமும் ஒன்று சேர்ந்து என்னை சந்தோஷப்படுத்தியது.

இச்சிறுகதை தொகுப்பில் ஒவ்வொரு கதையிலும் என்னைப் பொருத்திப் பார்க்கும்
படியாக ஒரு கதாபாத்திரம் கண்டிப்பாக காண முடிந்தது. நான் இல்லாவிட்டாலும்
நான் பார்த்த மனிதர்கள் எழுத்தில் தெரியும்போது நூலிற்கும் எனக்குமான நேரடி
உரையாடலாகவே இந்த வாசிப்பனுபவம் எனக்கு தந்தது.

இச்சிறுகதைகளின் மிகப்பெரிய பலம் கிராமத்து மனிதர்களின் எள்ளல் பேச்சு
படிச்சிட்டு சிரிக்காம இருக்கவே முடியாது.

இந்நூலை வாசித்து முடித்த பிறகு இதுவரை எத்தனையோ சத்தில்லாத குப்பைகளை
படித்து தொலைத்து வீணடித்திருக்கிறோம் என்னும் மெல்லிய குற்ற உணர்ச்சி
என்னை தாக்கியது.

சிறுகதைப் பிரியர்கள் தவற விடக்கூடாத தொகுப்பு இது.

வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
தமிழினி பதிப்பகம்.
விலை ரூபாய் 70

No comments: