எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, January 28, 2007

சொன்னது யார்? - புதிர்

விக்கி, கப்பியை தொடர்ந்து இதுவும் ஒரு புதிர் போட்டி சுவாரசியமாக
இல்லாவிட்டாலும் சுமாராக இருக்கும் என்றே நம்புகிறேன். கீழே
கொடுக்கப்பட்டவைகள் பிரபலங்கள் சொன்னவை யார் அந்த பிரபலங்கள்
என்று கண்டுபிடிங்க! (சன் நியூஸ்ல வருமே அதுமாதிரி)

1."சண்டைக்குப் பின் நண்பராவது வாழ்க்கையில் சகஜம். அது முடிந்து போன விஷயம் இப்போது நாங்கள் நண்பர்கள்" (இப்போதுதான் மீண்டிருக்கிறார்)

கங்குலி, சாப்பல்

2. "அவளுக்கு முகத்தில் முடி வளர்ந்திருக்கிறது ஒரு ஆணைப்போல" அவள் வெள்ளைக்காரியாக விரும்புகிறாள்" (சர்ச்சை)

ஜேட் கூடி

3. இவர் விடுத்த கோரிக்கையின் பேரில் நூலகத்திற்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையய் 600லிருந்து ஆயிரமாக மாற்றினார் கலைஞர். (சட்டமன்ற உறுப்பினர்)

ரவிக்குமார்

4. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது கடல் போன்றது. அதில் யாரும் மேதைகளாகி விட முடியாது (க்ளுவெ இல்லாம கண்டுபிடிக்கலாம்)

இசைஞானி இளையராஜா

5. "எனது ஒவ்வொரு வேற்றிகரமான ஓவியத்தின் பின்னும் ஒரு பெண், ஒரு அழகான பெண் இருக்கிறாள்" (முழுப்பெயரும் வேண்டும்)

மக்பூல் ஃபிதா உசேன்

6. "கிரிமினல்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில் இந்த அரசு இல்லை". (இவர் ஒரு பெண் அ.வாதி)

ராப்ரி தேவி

7. "கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு அல்ல. மற்ற விளையாட்டுகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்". (வைகைப்புயலின் ஊரில் வேகப்புயல் சொன்னது)

கபில்தேவ்

8. உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா?
(பாடலை எழுதியவர் ஒரு நடிகை)

நடிகை ரோகிணி

9. "வைகோ விழுந்துவிடக் கூடாது" (இவரும் ஒரு அ.வாதி)

நடிகர் விஜயகாந்த்

10. "தனது மகன்கள், பேரன், பேத்திகளின் நலனுக்காக பாபாவை வரவழைத்துப்பார்த்தது கருணாநிதிக்குக் காலம் ஏற்படுத்திய கட்டாயம்"
(இவர் ஒரு சீஸன் அ.வாதி)

இராமகோபாலன்


இது எல்லாமெ மிக சுலபமான கேள்விகளே.வார பத்திரிக்கைகள் படிக்கும்
பழக்கமிருந்தால் மிக மிக சுலபம்தான்.

ம்ம்ம் ஆரம்பிங்க....

Friday, January 26, 2007

அமீரக தமிழ் பண்பாட்டு கழக பொங்கல் விழா

பொங்கலை முன்னிட்டு அமீரகத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தார்கள் தமிழ் பண்பாட்டு குழுவினர். காலையில் கபடியுடன்
தொடங்கிய தொடங்கிய இந்நிகழ்ச்சிகள் மாலை 10 மணிக்கு தூதரக
அலுவலகத்தில் நிறைவுப்பெற்றது. அதிகாலை ஏழு மணிக்கு கபடியுடன்
ஆரம்பித்தனர் அங்கே வீரர்கள் அதீத உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொண்டதால் போட்டிகள் நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டு முடிவுகள் தெரிவிக்க முடியாமல் போனது. அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான காளை பிடித்தல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தார்கள் காளை கிடைக்காத காரணத்தால் அடுத்த வருடத்திற்கு கண்டிப்பாக நிறைவேற்றுவதாக விழா
குழுவினர் அறிவித்தார்கள்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதை அண்ணன், கவிஜைகளின் காதலன்
ஆசிப் அண்ணாச்சி உலாபேசியில் சொன்னபோது நிகழ்ச்சிகளில்
பங்கெடுத்துக் கொ(ல்லா)ள்ளாவிட்டாலும் பரவாயில்லை. எம் தமிழ் மக்களை
கண்டாலே போதும் என்று சென்றேன். எலேய் சரியா 2.30 மணிக்கு வந்துடுலே அப்பால நின்னுகிட்டுதான் பாக்கணும் சொல்லிபுட்டேன்னு
சொன்னார். நானும் வழக்கம்போல ஒரு மணிநேரம் தாமதமா போனேன்.
அவங்களும் வழக்கமா இரண்டு மணிநேரம் தாமதமாக நிகழ்ச்சிகளை
தொடங்கினார்கள். தூதரக அதிகாரி திரு. அசோகன், மற்றும் பலர்
குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்ற அற்புதமான பாடலுடன்
கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. (வர்ணனையாளர் இப்படிதாங்க சொன்னாரு. அவரு குரல் கூட ஷாகுல் ஹமீது குரலை போலவே இருந்தது)ஆண்களே ஆடியதை பார்க்க வேதனையாக இருந்தது. அடுத்ததாக பட்டிமன்றம் ஆரம்பமானது மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஏற்றது கிராமத்து வாழ்க்கையா? நகரத்து வாழ்க்கையா? என்ற தலைப்பில் அணிக்கு நான்கு பேர் வாதிட அஷ்ரப் அலி அவர்கள் நடுவராக சிறப்பாக பேசினார். தொலைக்காட்சியில் பார்த்து சலித்து போன பட்டிமன்றங்கள் பாணியில் அனைவரும் பேசினர். நம்ம
அண்ணாச்சி களத்துல இறங்கி அதிரடியா பேசி கிரமாத்து பக்கம் தீர்ப்ப
அடிச்சே வாங்கிடுவாருன்னு எதிர்பார்ப்போடு கூட வந்த நண்பரிடம் பிட்டுகளை அள்ளி விட்டேன். ஏம்பா நீயும்தான் ஏதோ தமிழ்ல ஏதேதோ எழுதற பட்டி மன்றத்துல கலந்துக்கிடலாம்ல னு கேட்டெ வெச்சிட்டாரு. இந்தமாதிரி நிகழ்ச்சி இருக்கறதே நேத்துதாங்க தெரியும். குறிப்பு இல்லாம எப்படி பேச முடியும். (நம்மளுக்கு சன் டி.வி மலரும் மொட்டும் நிகழ்ச்சில கூட பேச முடியாதுங்கறது வேற விஷயம்)ஆனால் அண்ணாச்சி இந்த மாதிரி சிறிய தலைப்புக்கெல்லாம் வாதிட கூடாது.

அதுவுமில்லா விவாதத்துக்கே இடமில்ல கிராமத்து வாழ்க்கைதான் மகிழ்ச்சிக்கு உகந்ததுன்னு நம்மளுக்கு தெரியாதா என்ன. வழக்கம்போல
மணியடித்த பிறகும் பேச்சாளர்கள் தத்தம் ஆணித்தரமான கருத்துக்களால்
மக்களை விரட்டி அடித்துக்கொண்டிருந்தனர். அதிலயும் ஒருத்தர் மணி அடிக்கர நேரமெல்லாம் பார்த்து உரத்த குரலில் பேசி மணி சத்தம் ஒலிக்க முடியாத மாதிரி மிக சத்தமா பேசினார். (இது என்ன கயமைங்க?)அனைவரும் நன்றாக பேசினார்கள்.

அடுத்ததாக கவுஜை அரங்கம். நிகழ்ச்சிகளின் ஹைலைட்டே இதுதான் கவிப்பேரரசு வைரமுத்து பாணியில் ஆறு பேர் வெள்ளுடை அணிந்து
வெண்புகைகளின் பிண்ணனியில் இரு குழந்தைகள் கையில் விளக்கு
வைத்து இங்கும் அங்கும் நடமாட இவர்கள் அறுவரும் இடையில்
நடந்து நடந்து கவிதை பாடினார்கள். மொத்தம் நாப்பது நிமிடங்கள் கவிதைக்கு மட்டும் நான் ரசிச்சேன்னு சொன்னாலும் பக்கத்துல இருந்த
ஆளுங்க முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அனேகமா கவுஜைகளுக்கு
புது உருவமே கொடுத்து சிறப்பித்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
கவிதை யார் எழுதினாங்கன்னு தெரில ஆனா நல்லா இருந்தது.

அடுத்ததாக பாட்டு மன்றம். அண்ணாச்சி பாடப்போவதாக அறிவித்தார்கள்
முன்னரே போன் பண்ணி பிச்சிக்கிட்டியாலேன்னு கேட்டு நான் அரங்கத்தில்
இருப்பதை உறுதி செய்து கொண்டார் அண்ணாச்சி. யாரும் வேளியேற முடியாதபடி பாதுகாப்பு வேளிகள் அமைத்து தடுத்துவிட்டார்கள். பாடல் பாடுவதற்கு முன் அண்ணாச்சி அவர்கள் இடையிடையே நகைச்சுவையாக வர்ணனை கொடுத்து அசத்தினார். அதிலிருந்து ஒரு துணுக்கு வேட்டையாரு விளையாடு பாடல் ஒன்றிற்கு ஒரு கதை சொன்னார். ஒரு ஊர்ல அப்பா மவனுக்கு வேட்டையாடறது எப்படின்னு சொல்லிக்குடுத்தாராம். மவனே அந்த கொக்க நான் எப்படி சுடுறேன்னு மட்டும் பாருன்னு சொல்லிட்டு
கொக்க சுட்டாரு கொக்கு பறந்துடுச்சி. மவன் கேவலமா ஒரு லுக்கு விடறான்
எலே நீ அதிர்ஷ்டக்காரன்லே செத்த கொக்கு பறக்குது பாருன்னு சமாளிச்சாராம்
தூங்கிக்கொண்டிருந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. :-))

அருமையான ஒரு பாடலை இருகுரலில் பாடி அசத்தினார் ஆசிப் அண்ணன்.
வசூல் ராஜா படத்திலிருந்து கலக்கப் போவது யாரு என்ற பாடலை அவர் பாடினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியதற்காகவும், நிகழ்ச்சி நடக்க போவதை ஏசியா ஏசியா நெட் மூலம்அனைவரும் அறிய செய்தமைக்காக அண்ணாச்சிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். அண்ணாச்சி வல்லவரு, நல்லவரு, பாடகரு, பதிவரு, கவுஜைமன்னன், கவிமடத்தலைவன்
(அண்ணே போதுமாண்ணே???)

கலை நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியேறும் போது ஸ்பான்சர்கள்
ஒரு கிலோ பாசுமதி அரிசி, ஐஸ்க்ரீம், பரிசுப்பொருட்கள் கொடுத்து அசத்தினார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நண்பர்கள் கேட்டார்கள்.

எலேய் நீ ஏதோ பட்டிமன்றத்துக்கு போயிட்டு வர்றதா பேசிக்கிட்டாங்க, நீ என்னடான்னா அரிசிப்பையோட வந்து நிக்கற? னு கேட்டுப்புட்டாங்க!

அடப்பாவிகளா, முடிவே பண்ணிட்டிங்களா? இதெல்லாம் அங்க இலவசமா கொடுத்தது வாங்கிட்டு வந்தேன். இப்படி கேப்பிங்கன்னு தெரிஞ்சா வர்ற வழிலயே தானம் பண்ணீட்டு வந்துருப்பேன்.

என்ன பண்றது நல்லதுக்கு செஞ்சாலும் எடக்கா கேள்வி கேக்குறதான் பொழப்பு என்னைய மாதிரி.

ஆயிரம் குறை சொல்ல காரணங்கள் இருந்தாலும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவது என்பது எளிதான காரியமில்லை. வெற்றிகரமாக நடத்தினார்கள். நீண்ட நாள்களுக்கு பின்னர் நிறைய தமிழ் முகங்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்ததை காணும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Sunday, January 21, 2007

தாங்குமா தமிழ்சினிமா? சர்வே

காத்து வாக்குல நம்ம பய ஒருத்தன் ஒரு சேதிய சொன்னான்.ரன்னிங் டயலாக்
ஸ்பெஷல் பேரரசுவும், லிட்டில் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து ஒரு படம் பண்ண
போறாங்கன்னு. செய்திய கேட்டதும் பகீர்னு ஆகிப்போச்சி. அடப்பாவிகளா
ஏண்டா இந்த மாதிரி தொடர்ச்சியா போட்டு தாக்குறிங்க? ஏற்கனவே தர்மபுரி,
வல்லவன் படம் பார்த்த பீதியே இன்னும் போகல. அதுக்குள்ள இப்படி ஒரு
அணுகுண்ட தூக்கி போட்டிங்கன்னா என்னா ஆவுறது தமிழ்சினிமா?

தாவாங்கொட்டைய புடிச்சி யோசிச்சதுல சர்வே போட்டு மக்கள்கிட்டயே
கேட்டுருவோம்னு தோணுச்சி. ஏண்டா உன் ப்லாக்குக்கு வர்ற ஆளுங்களே
மொத்தம் பத்தோ, இருவதோதான் இதுல சர்வே போட்டேன்னா என்னா
தீர்வு கெடைக்கும்னு கேக்கறது?. என்னா பண்றது நமக்கும் ஒரு ஆசைதாங்க.
ஓட்டு போடறதுக்கு முன்னாடி பேரரசு புல் மேக்கப்போட ரன்னிங் வசனம்
பேசிகிட்டு உங்க முன்னாடி நிக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க, அப்படியே
சிம்பு ஷட்டர விரலாலயே கிழிச்சிகிட்டு வெளில வர்ற மாதிரி கற்பனை
பண்ணிக்கோங்க.

பண்ணியாச்சா??

இப்ப ஓட்டை குத்துங்க.

Saturday, January 20, 2007

Dialed List

அம்மா...
அவள்...
கையிருப்பை அறிய...
ஏனைய நண்பர்கள்
பின்னே
இம்மூன்று எண்களுமே
மேல் நிற்கும்
சுழற்றப்பட்ட எண்களாய்!

Wednesday, January 17, 2007

மனசை கல்லாக்கிட்டு படத்தை பார்க்கவும்!!!

Photobucket - Video and Image Hosting

கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க மக்களே. அப்பனும் மகனும் பண்ற ரவுசு
தாங்க முடியல. ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ விக்கெட் எடுத்துட்டாங்க
போலருக்கு அதான் அக்தர் ரேஞ்சுக்கு அலப்பறைய குடுக்கறாங்க.

எவண்டா அந்த காஸ்ட்யூம் டிசைனரு?

அதுவும் நாந்தாங்ணா!!

நெனச்சேன் அதுவும் நீயாத்தான் இருப்பேன்னு.


Photobucket - Video and Image Hosting

ஏம்பா உனுக்கு இந்த வேண்டாத வேலை? எங்கிட்டாசும் வழுக்கி விழுந்தா
என்னத்துக்கு ஆவ?

பதமா எதமா பாட்டு படிச்சிட்டு போவியா... அத விட்டுட்டு
சிங் இன் தி ரெய்ன் பாட்டு நம்மளுக்கெல்லாம் தேவையா?

கேட்டா கனவு பாட்டுன்னு கதைய குடுப்பிங்க! நான் தெரியாமத்தான்
கேக்குறேன் தமிழ் சினிமாவில கனவு பாட்டு எத்தனை எடுத்திருப்பிங்க?
அது என்ன உங்களுக்கு கனவு வந்தா பாட்டு மட்ட்ட்ட்ட்டும் வருது?

இதுக்கு மேல எதுவும் நான் கேக்குற மாதிரி இல்ல!

Tuesday, January 09, 2007

நகுலன் கவிதைகள்

நல்ல கதைகளை படிக்கும்போதும், நுட்பமான உறவுகளை எடுத்து சொல்லும்
சினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக
விலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு
மட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்
போது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை
ஆ.வியில் படித்தேன். படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது
என்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.

Photobucket - Video and Image Hosting

பொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில
கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்
போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.

"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது"


தன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்
நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்
பரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த
புரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்
எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்
நிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்
தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

இனி அவரின் கவிதைகள்!

எந்தப் புத்தகத்தை
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்!


என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!


எனக்கு
யாருமில்லை
நான்
கூட!


யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!


நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!


உன்னையன்றி
உனக்கு வெறு யாருண்டு?


ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!


முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!


வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!


எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கு
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!



இதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான
அர்த்தங்கள் கொண்டவை.

நன்றி: ஆனந்த விகடன்

Saturday, January 06, 2007

ஓசியில சூனியம் வெச்சிக்கறது இப்படி!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி (மூணு மாசம் இருக்குங்க) வழக்கம்போல
ஒரு விடுமுறை நாளில் ஊர சுத்திட்டு தாமதமா வீட்டாண்ட போனேன்.
கதவை திறக்கறதுக்கு பாத்த வாசப்படில ஒரு அழகான நீலக்கலர் பை
இருக்கு எவனாவது தவற விட்டுட்டு போயிட்டானா, இல்ல வேற ஏதாவது
மேட்டரான்னு ஒண்ணும்புரியாம பிரிச்சிதான் பாத்துடுவோம்னு ஒரு ஆர்வத்துல
பிரிச்சி பாத்துட்டேன்.

அட ஆச்சரியம் எங்க கம்பெனி(DOVE) புதுசா ஒரு ஷாம்பு தயாரிச்சிருக்கு
இதை ஒரு முறை உபயோகிச்சி பாருங்க. முற்றிலும் இலவசம் பின் குறிப்பா
இதை விக்க கூடாதுன்னு போட்டுருந்துச்சி. தோ பார்றா இத்தனை பேரு
இந்த ரூம்ல தங்கி இருக்காங்க நம்ம கண்ணுல மாட்டிடுச்சு ஏதோ நம்க்கும்
லக்கு இருக்கு போலருக்குன்னு நினைச்சிகிட்டே மோந்து பாத்தேன்.
பரவால்ல நல்லாதான் இருக்கு. ஒரு மாசத்துக்கு ஷாம்பு பிரச்சினை இல்ல.
75 மில்லி ஓசில கிடைக்குதே. அதுவும் பிரபலமான கம்பெனி. நாம கீழ
குனிஞ்சி எடுக்கறத வேற எவனாவது பாத்தானான்னு ஒரு நோட்டம்
விட்டேன். எவனும் பாக்கல.

அட இதென்னடா ஆச்சரியமா இருக்குதுன்னு பாத்தா ஒவ்வொரு ப்ளாட்
வாசல்லயும் ஒரு நீலக்கலர் பை இருக்குது. விடிஞ்சி பாத்தா மக்களுக்கு
சர்ப்ரைசா இருக்கும்னு ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் வெச்சிட்டு
போயிருக்கான். அட கேணப்பசங்களா எவண்டா இந்த மாதிரியெல்லாம்
ஐடியா போடறது? அதுவும் நான் இருக்கற பில்டிங்ல. சரி வெளஞ்சது
வெள்ளாமைன்னு. ரெண்டு ப்ளோர் சுத்தி ஒரு இருவது பை தேறுச்சு.

எல்லாத்தையும் எடுத்திட்டு வந்து ரூம்ல வெச்சிட்டேன். அப்புறம் ஒரு
வாரமா கமகமக்கும் குளியலோட ஒரே சந்தோஷமாதான் போச்சு. அப்புறம்
தான் தெரிஞ்சது நம்மள கேணப் பசங்களாக்கிட்டங்கன்னு. அட அதை
ஏன் கேக்குறிங்க! தலைல கை வெச்சாவே கொத்து கொத்தா முடி
கொட்டுது. ஓசில கெடச்சதுன்னு கொஞ்சம் ஓவராதான் விளையாடிட்டோமோ?
அப்படின்னு ஒரு யோசனை. சரி இது வேலைக்காகாதுன்னு தூக்கி தூர
வெச்சிட்டேன். கொஞ்சநாள் உபயோகிக்காம இருந்ததுல கொஞ்சம்
முடி கொட்றது கொறஞ்சிடுச்சி. ஆஹா விளம்பரன்ற பேர்ல சொட்டையாக்க
பாத்தானுங்களே. நல்ல வேளை சுதாரிப்பா இருந்ததால தலைக்கு வந்தது
தலை முடில கொஞ்சம் தூக்கிடுச்சி.

என்ன மாதிரி வலை விறிக்கறானுங்க இந்த கம்பெனிகாரனுங்க. அன்னிக்கு நாம
எடுத்தது ரெண்டு ப்ளோர்ல மட்டும்தான் இன்னும் அஞ்சு ப்ளோர்ல எடுக்கலன்னா
அந்தந்த வீட்டுக்காரனுங்களேதான் எடுத்து யூஸ் பண்ணியிருப்பாங்க ஒருவேளை
அவங்களுக்கும் முடி கொட்டுதான்னு பாத்தேன் ஒண்ணும் புரிஞ்சிக்க முடியல.

சரி நம்மள டெஸ்ட் பண்ணிகிட்ட மாதிரி நாம யாரயாச்சும் பண்ணிறனும். நம்ம
பில்டிங் வாட்ச்மேன் சுல்தான் அவர்மேல பாய்ச்சிற வேண்டியதுதான். ச்ச்சே
வேணாம் ஏற்கனவே பாதி வழுக்கை, மேல பாவம் சேக்க வேணாம். சரி
சோதனைன்னு வந்துட்ட பிறகு வேதனைக்கு இடமில்லன்னு முடிவெடுத்தேன்.
என்ன சுல்தான் பாய் தலையெல்லாம் சிக்கு புடிச்சா மாதிரி இருக்கே , ஷாம்பு
போட்டு குளிக்கறதில்லயான்னு ஒரு பிட்டை போட்டேன். இல்லிங்க தம்பி
எப்படி குளிச்சாலும் இப்படிதான் இருக்கு ஒண்ணும் பண்ணிக்க முடிலன்னாரு.

நம்மகிட்ட ஒரு ஷாம்பு கெடச்சிருக்கு சூப்பரா இருக்கும் போட்டு
பாருங்க சும்மா கலகலன்னு ஆயிடும்னேன். எங்க குடுங்க பாப்போம்னாரு
நானும் கொண்டு போய் குடுத்தேன். சிரிச்சிகிட்டே அட இதுவா தம்பி
இது என்கிட்ட ஏற்கனவே நிறைய இருக்கு அதோ அங்க பாருங்க அங்க
அடுக்கி வெச்சிருக்கேன்னாரு. "சூப்பர் மாட்கெட்ல" அடுக்கி வெச்ச மாதிரி
அடுக்கி வெச்சிருக்காரு. ஆஹ்ஹா மீதி மூணு ப்ளோர்ல இந்தாளுதான்
சுட்டுருக்கான் போலருக்கு. நல்லா இருசாமின்னு வாழ்த்தி வந்துட்டேன்.
ச்சே எஸ்கேப் ஆயிட்டாரே. சரி அடுத்த ஆள பாக்க வேண்டியதுதான்

இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைலதான் நம்மள பாக்க நண்பர் ஒருத்தர்
வந்தாரு. வந்தவர வெறுங்கையோட அனுப்பக்கூடாதுன்னு ரெண்டு ஷாம்பு
டப்பா குடுத்தேன். அவரும் கொழப்பத்தோட வாங்கிட்டு போயிட்டாரு.

ரெண்டு வாரம் கழிச்சி போன் பண்ணாரு அருமை நண்பர்.

எலேய் நாதாறி! என்ன எழவு ஷாம்புடா அது? என் தலைல பாதி முடி
கொட்டிடுச்சி. நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன். எனக்கு
இன்னும் கல்யாணம் கூட ஆகல இப்பதான் பொண்ணு போட்டொ
அனுப்பியிருக்காங்க. இப்படி பண்ணிட்டியேடான்னு.

Photobucket - Video and Image Hosting

அது இல்லிங்க நண்பா! க்ளைமேட் சேஞ்ச் ஆச்சில்ல அதான் முடி கொட்டுது
போலருக்குன்னேன்.

அந்த வெண்ணெ எங்களுக்கும் தெரியும்னு சொல்லிட்டு அடுத்து நான் பேச
வாயெடுக்ககும்போதே போன கட் பண்ணிட்டாரு.

நம்ம "தல"ய விட அவர் "தல" ரொம்ப வீக்கா இருக்குமோ!

எது எப்படியோ கெட்ட ஷாம்புன்னு உறுதியாகிடுச்சி! சுத்து வட்டத்து
மக்கள உஷார் பண்ணிறணும்.

இந்த சம்பவம் என்ன சொல்லுதுன்னா! கண்ட கண்ட ஷாம்பு போட்டு
முடிய கெடுத்துக்காதிங்க. மீரா சீகைக்காய் உபயொகப்படுத்துங்க.
பாதிக்கப்பட்டவன் நான் சொல்றேன்.

திஸ்கி : இன்னும் ரெண்டு மூணு ஷாம்பு மிச்சமிருக்கு வேணுன்றவங்க
பின்னூட்டதில் தெரிவிக்கலாம். :))))

Tuesday, January 02, 2007

DUBAI SHOPPING FESTIVAL

அல்லாருக்கும் வணக்கம்.

இப்ப ஒரு நாப்பத்தஞ்சி நாளைக்கு துபாயில ஷாப்பிங் பெஸ்டிவெல்னு
ஒண்ணு வெச்சி ஆம்பளைங்க பர்ச களவாடிட்டு இருக்கானுங்க.
திருவிழாவே என்னமோ அவுங்களுக்காக நடக்குற மாதிரி இருக்கு.
மருந்துக்கு கூட ஜீன்ஸ் பேண்டு கடை,ஒரு டீ சர்ட் கடை இல்ல.
நேத்து துபாய் ஷாப்பிங் பெஸ்டிவெல் போயிட்டு திரும்ப வரும்போது
இந்த டவுட்டு வலுவாயிருச்சி. என்னாதுன்னு கேக்குறிங்களா! குளோபல்
வில்லேஜ்னு ஒரு எடம் அங்கதான் இந்த அக்கிரமம் நடக்குது.
அத்தாதண்டி பெரிய எடத்தில ஒவ்வொரு நாட்டுக்காகரவங்களும்
தனித்தனிய கடை போட்டுருக்காங்க ஆனா பாருங்க எல்லா
நாட்டுக்காரங்களும் சொல்லி வெச்சா மாதிரி பொம்பளைங்க போடற
துணிவகைகள் மட்டும் வெச்சிருக்கானுங்க. (என்னதான் கடை
வெச்சிருந்தாலும் நாம வாங்கிக்க போறது கிடையாது. வாங்கி
குடுத்து அழுவறதுதான் நம்ம பொழப்பு அது வேற விசயம்)

அடப்பாவிங்களா!!

ரைட்டு விடுன்னு இந்தியா பெவிலியன் போய் பார்த்தா அங்க அதை
விட பெரிய கொடுமை. புடவை, சுடிதார், சமையல் பாத்திரங்கள்,
கரண்டி, கடாய், அய்யப்பன் கேசட் வெங்காயம் முதலான காய்கறிகளை
ஈசியா வெட்டறதுக்கு ஒரு சாதனம் நம்ம ஊரு மக்கள்ஸ் அதை டெமோ
காட்ட சொல்லியே அவனை வெங்கயாம் வெட்ட வச்சிட்டாங்க.
கிட்டத்தட்ட அரை டன் வெங்காயம் வெட்டி அவன் கண்ணே விஜயகாந்து
கண்ணு மாதிரி ஆகிப்போச்சி.

Photobucket - Video and Image Hosting


அமீரகத்து பெவிலியன் பக்கம் போனா வாசனை திரவியம் விக்கிற கடை
மட்டும் இருந்தது பெரும்பாலும் அதேதான். அங்கே நவயுக நங்கைகளாம்
காந்த கன்னிகள் வாசனை திரவியங்களை அள்ளித்தெளிக்க (சாம்பிளாம்!!)
இந்தா ரைட்டுல போடு, இந்தா லெப்டுல போடுன்னு ஓசிலயே ஒரு
வாரத்துக்கு தேவையான வாசைனைய தேக்கி வெச்சாச்சி. ஒரு குப்பி
நல்ல வாசனையா இருக்கவே எம்புட்டு புள்ளன்னு விசாரிச்சா 200 திராம்ஸ்
சொலிச்சி. தினமும் குளிப்பதே சாலச்சிறந்ததுன்னு எஸ்கேப் ஆயிட்டேன்.

எகிப்து கடைகளுக்கு போனேன் ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லை.
சோப்பு, சீப்பு, கண்ணாடி, அவங்க நாட்டு பாரம்பரிய ஆடைகள்
விக்கற கடை மட்டும் நாலஞ்சி இருந்தது. நுழைவுவாயிலில் துபாய்
ஷேக்கின் பழைய கால வெள்ளைப்படங்கள் ஒட்டி வெச்சிருந்தாங்க.
அமீரகத்தின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம்னு ரெண்டு பேர் பேசிகிட்டு
இருந்தாங்க.

ஈரான் நாட்டுக்கடைகளில் பெரும்பாலும் கைவினைப்பொருட்கள் விற்கும்
கடை வெச்சிருந்தாங்க. கைவேலைப்பாடுகளால் ஆன திரைச்சீலைகள்,
தரைவிரிப்புகள். கத்தி, கபடா விற்கும் கடை. ரொம்பவே ரசிக்கிறமாதிரி
இருந்தது.

மிகவும் ரசிச்சது கென்ய நாட்டின் கடைகள்தான் முழுக்க முழுக்க விலங்கு
தோலினால் ஆன சிறுசிறு பரிசுப்பொருட்கள்னு வித்தியாசமா இருந்துச்சி.
அவ்வளவு அன்பா பழகி விக்கிறாங்க. பாக்கறதுக்குதான் கருப்பா
இருந்தாலும் வெள்ளை மனதுடைய பெண்கள். அவுங்க நாட்டுக்காரங்க
கூந்தலை சிறு சிறு பின்னல்களாக போட்டு ரொம்ப அழகா
வெச்சிருப்பாங்க அது மாதிரி ரெண்டே ரெண்டு பின்னல் போடறதுக்கு
எம்புட்டுன்னு பக்கத்தில இருந்த ஒரு அக்கா கேட்டுச்சி 28 திராம்ஸ்னு
சொன்னதும் எஸ்கேப் ஆயிருச்சி. விலங்கு தோலினால் சிறிய
பின்னல்களுடன் செய்த ஒரு கயிறு நல்லா இருந்தது. வாங்கி கைல
கட்டிகிட்டேன் அந்த அக்காவே கட்டி விட்டுச்சி. எலேய் நரிக்கொறவன்
கெட்டாண்டா வித்தியாசம்னு சொல்லிட்டு இதை கட்டி நீயே
நாறிக்காதன்னு பாசக்கார பய ஒருத்தன் சொன்னான் வழக்கம்போல
புறந்தள்ளினேன்.

மற்ற நாட்டின் கடைகளுக்கும் சும்மா பேருக்கு போயிட்டு வந்தேன்.

ராட்சத ரங்கராட்டினம் இருந்துச்சி அட கடேசியா நம்ம ஊரு திருவிழால
ராட்டினம் சுத்தினது ரொம்ப நாள் ஆச்சே போய்த்தான் பாப்போமேன்னு
வெலைய விசாரிச்சேன் 15 திராம்ஸ் கொஞ்சம் அதிகமா தோணினாலும்
100 அடி உசரத்துல சுத்த போற ஆசையில குடுத்தேன். டேய் இது பெருசு
கீழ எறங்ககுள்ள வாந்தி எடுத்துறுவே வேணாம் போயிடலாம்னு
சொன்னாங்க. நாந்தான் கேக்கவே இல்ல. ஆவுறது ஆவட்டும்னு
ஏறிட்டேன். வயித்துக்கும் தொண்டக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும்
உருளுதடின்னு வைரமுத்து சொன்னது போல மொத ரவுண்டு மேல
போகும்போது இருந்துச்சி. போகப் போக வேகத்த கூட்டுவானுங்கன்னு
பாத்தா கிழவி மாவாட்டுற மாதிரி சுத்தறானுங்க. நல்லா கரகரன்னு
சுத்துங்கடான்னா சுத்த வெண்ணைங்க சொன்னாலும் கேக்கமாட்டேன்றானுங்க.
குடுத்த காசுக்கேத்த மாதிரி 15 ரவுண்டும் இல்லையாம் 6 ரவுண்டுதான்
சுத்தினாங்க. தண்டமா போச்சி.


ரமேஷ் கண்ணா ஒரு படத்தில சின்ன வட்டம் போட்டு சில்லறைய தூக்கி
போட்டு வட்டத்துக்குள்ள விழற காசு எல்லாம் உனக்கு சிதறுற ஒண்ணு
ரெண்டு மட்டும் எனக்குன்னு சொல்லுவாரு. அதே மாதிரி ஒரு இடத்தில
பெரிய மேசை போட்டுருந்தாங்க அஞ்சு திராம்ஸு குடுத்தா ஒரு சின்ன
நாணயம் தராங்க அதை ஏதாவது ஒரு வட்டத்துல போட்டா
வட்டத்துக்கேத்த மாதிரி டெடிபியர் (கரடிபொம்மை) தருவாங்களாம்.
பொண்ணுங்க கட்டி பிடிச்சி தூங்கறதுக்காகவே கண்டுபிடிச்ச ஒரு
பொம்மை அது. இதிலயும் பெண்ணாதிக்க போக்கு தெரிஞ்சதால எஸ்கேப்.

பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடலாம் இல்லாதவன் பாயாசம்
குடிக்கலாம்
என்ற பழமொழிக்கேற்ப எல்லாத்தையும் வேடிக்கை
மட்டும் பார்த்துட்டு வந்துட்டேன்.