எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, October 10, 2022

கரடியின் கருணையும் எலியின் கைமாறும்.

தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது பிள்ளைகளுக்கு கதைகள் சொல்வது வழக்கம். என்ன கதை சொல்லவேண்டும் என்று அவர்களிடமே கேட்பேன். யானை, பூனை, காக்கா, ஸ்பைடர் மேன், ஸ்னோ மேன், கரடி, என எதையாவது சொல்வார்கள். அந்த வார்த்தையில் ஆரம்பித்து அப்படியே வாய்க்கு வந்ததை சொல்லி முடிக்கும்போது தூங்கியிருப்பார்களா என்றால் இல்லை, அதற்குப் பிறகு கேள்வி பதில் பகுதிக்கு செல்வார்கள். ஓய்ந்து விடும். பல நாட்களில் பெரியவன் கேட்பான், நீ சொல்ற கதையெல்லாம் எங்க படிச்ச? அது தானாக அவிழ்வதுதான் என்ன கதை வேண்டும் என நீங்கள்தானே முடிவு செய்கிறீர்கள், அந்த நொடியிலிருந்துதான் கதைகளை உருவாக்குகிறேன் என்பேன். 


அது எப்படிப்பா சுவாரசியமா சொல்ற, உன்னோட கதைய அப்படியே எங்க க்ளாஸ்ல நான் சொல்லுவேன். நல்லா கத சொல்ற நீன்னு மேடம் சொல்வாங்க என்றான். எனக்கே கூட இந்த ஆச்சரியம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. எல்லா கதைகளிலும் நட்பை, பாசத்தை, நன்றியை, சகோதரத்துவத்தை மையமாக வைத்து சொல்வதுதான். குழந்தைகளுக்கு அதுதானே தேவை.  எதோ ஒரு சொல்லில் இருந்து கதையை ஆரம்பித்து அதை முடிக்கும்போது ஒரு திருப்தி ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். இதையெல்லாம் மறக்காம இருக்க சொல்லும்போதே எழுதி வச்சிக்கப்பா, பின்னாடி யூஸ் ஆகும் என்பான்.

வேண்டுமளவு குழந்தை எழுத்தாளர்கள் நிறைய உண்டு என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் கதைக்கு சாத்தியப்படுவதில்லைதானே. அதனால் அன்றன்று சொல்லும் கதைகளை இங்கே எழுதி வைக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. 


கரடியின் கருணையும் எலியின் கைமாறும்.



அது ஒரு பெரிய காடு. அந்தக்காட்டுல ஒரு எலிக்குடும்பம் வாழ்ந்து வந்துச்சு. எலி வளையானாலும் தனி வளை வேணும்னு பழமொழி இருக்கு. அதுமாதிரி அந்த எலிக்குடும்பத்துக்குன்னு ஒரு வளை இருந்துச்சு. வளைன்னா வீடுன்னு புரிஞ்சிக்கணும். அது எப்படி இருக்கும்னா நிலத்துல சின்னதா ஒரு ஓட்டை போட்டு எலி மட்டும் போய் வரமாதிரி இருக்கும். அதைத்தான் வளைன்னு சொல்வாங்க, அந்த வளை உள்ள போகப்போக பெரிதாவும் இருக்கும் சின்னதாவும் இருக்கும் இல்லன்னா அந்த வளையில இருந்து இன்னொரு வளைக்கு தொடர்ச்சியா போகலாம். 

அந்த பழமொழிக்கு என்ன அர்த்தம்பா?

சிறிய வீடாக இருந்தாலும் சொந்தத்துல ஒரு வீடு இருக்கணும், நமக்குன்னு ஒரு இடம். அதான் அதுக்கு அர்த்தம். 

அந்த எலிக்குடும்பத்துல மொத்தம் ஆறு பேர். அம்மா எலி, அப்பா எலி, நாலு குட்டி எலி. அவங்க எல்லாரும் அந்த வளைல ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாங்க. போதுமான அளவுக்கு அவங்களுக்கு உணவு தாராளமாவே கிடைச்சது. பாம்புகள் இல்லாத இடத்துல வளை இருந்ததால அவங்க ரொம்ப பாதுகாப்பாவே இருந்தாங்க. 

ஒருநாள் திடீர்னு அந்தக் காட்டுல அடை மழை பேய்ஞ்சது. மழைன்னா அப்படி ஒரு மழை எதிர்ல யாரு என்னன்னு கண்ணு தெரியாத அளவுக்கு மழை அடிச்சு ஊத்துது. குளம், குட்டை, ஆறு எல்லாமே நிரம்பி வழியிது. அந்த எலிக்குடும்பத்தால வெளில போகமுடியல. அதனால குட்டி எலிகளுக்கு உணவு இல்லாம பசியோட இருந்தாங்க. மழை விட்ட வெளில போய் அப்பா எலி எதாவது உணவு கொண்டு வருவார். ஆனா மழை விடவேல்ல, ரெண்டு மூணு நாளாகவே தொடர்ந்து பேய்மழை பேய்ஞ்சது.

அப்பா எலிக்கு ஒரே வருத்தம். இப்படியே மழை பேய்ஞ்சதுன்னா இந்த வளை மூழ்கிடும். இதவிட இன்னும் மேடான பகுதிக்கு போனாதான் பிழைக்க முடியும்னு அதுக்கு தோணுது. மெதுவா வளைய விட்டு வெளில வந்து பாக்குது. அப்போ அதுக்கு பயங்கர அதிர்ச்சி. மழை விடல அதுபாட்டுக்கும் பேய்ஞ்சிட்டே இருக்கு. வளைக்கு பக்கத்துல சிறிய ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுது மழைநீர். இப்படியே போச்சுன்னா வளைக்குள்ள தண்ணி வந்துடும். நாம் சீக்கிரமா இங்கிருந்து தப்பிக்கணும்னு அப்பா எலி முடிவு பண்ணுது. 

உடமே அம்மா எலிகிட்ட வந்து சொல்லுது அப்பா எலி. இன்னும் கொஞ்ச நேரத்துல வளைக்குள்ள தண்ணி வந்துடும், அதுக்குள்ள நாம கிளம்பணும்னு சொல்லும்போதே லேசா வளைக்குள்ள தண்ணி வர ஆரம்பிக்குது. நேரமில்ல என்னோட வாலை நீ பிடிச்சிக்க, உன்னோட வாலை பிள்ளைங்க ஒவ்வொண்ணா பிடிச்சிக்குங்க எக்காரணத்தைக்கொண்டும் பிடிய விடாதிங்க, நல்லா இறுக்கமா பிடிச்சிக்குங்க. எதிர்ல வேகமா தண்ணி வரும். தைரியமா என் பின்னாடி வாங்க எறும்புக்கூட்டம் வரிசையா போறத பாத்திருக்கிங்க இல்லையா அதுபோல தொடர்ந்து வரணும் சரியா என்று சொன்னபடி எலி வளைக்கு வெளியே செல்ல ஆரம்பித்தார். நீரின் வேகம் அதிரிகரித்திருந்தது. பெரிய போராட்டத்திற்குப் பிறகு வளையை விட்டு வெளியே வந்தார்கள்.

அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பா எலி எங்கு போவதென்றே தெரியாமல் முழித்தது. குட்டி எலிகளுக்கு மழையில் நனைந்து குளிரில் நடுக்கமெடுத்தது. எப்படி பிழைத்து பிள்ளைகளை காப்பாற்றுவது என்று திகைத்தபோது திடீரென அருகில் இருக்கும் குன்றும் அதற்குள்ளே இருக்கும் சிறிய குகையும் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு பெரிய கரடி அண்ணன் வாழ்ந்து வருகிறார். சரி அங்கே போனால்தான் தப்பிக்க முடியும். உதவி கேட்போம் என முடிவு செய்தது. 

மறுபடி எறும்பு ஊர்வதுபோல ஒருவர் பின் ஒருவராக கடினமான பாதையில் ஏறி குன்றை அடைந்தார்கள்.

அங்கே கரடியண்ணம் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.



மழை மேல் படாதவாறு அம்மா எலியும் குட்டி எலிகளும் ஒதுங்க வைத்துவிட்டு அப்பா எலி மட்டும் பயத்தோட கரடியண்ணன் அருகில் சென்று அண்ணே, அண்ணே என்று கூப்பிட்டது.

யார்ரா இந்த நேரத்துல என்னை எழுப்பறது என்று கோபத்துடன் எழுந்தது கரடி.

யார்ரா நீ என்றது கரடி

அண்ணே நாந்தான் எலி. இங்க பக்கத்துலதான் குடியிருக்கேன். மழை பேய்ஞ்சு வளைக்குள்ள தண்ணி வந்துடுச்சு எப்படியோ பொழச்சு மேல வந்துட்டேன். 

அதுக்கு என்ன இப்போ என்று கொட்டாவி விட்டபடி கேட்டது கரடி.

இந்த மழ விடறமட்டும் நானும் என் குடும்பமும் இந்த குகையில தங்கிக்கறம்ணே. கொஞ்சம் உதவி பண்ணுங்க அண்ணே என்றது.

அதெல்லாம் முடியாது. நீயும் உன் குடும்பமும் குட்டி எலிங்கணும் நாள் பூரா கிரீச், க்ரீச்னு கத்திட்டே இருப்பிங்க பெரிய தொந்தரவா இருக்கும். என்னால நிம்மதியா தூங்கவே முடியாது. வேற எடம் பாத்துக்க ராசா என்றது கரடி.

அண்ணே உங்க தூக்கத்துக்கு ஒரு தொந்தரவு வராது. ஒரு சின்ன சத்தம் கூட வராம நான் பாத்துக்கறண்ணே. சின்ன சத்தம் வந்தாலும் எங்கள தொரத்திடுங்க. கடவுள் மாதிரி உங்கள நம்பி வந்திருக்கேன். என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துங்கண்ணே நல்லாருப்பிங்க நீங்க என்றது அப்பா எலி.

உன்ன பாத்தாலும் பாவமாதான் இருக்கு. இந்த மழையும் இப்ப நிக்கிற மாதிரி தெரியல, குட்டி எலிங்களுக்காக உனக்கு உதவி பண்றேன். ஆனா என் தூக்கத்துக்கு எதாவது தொந்திரவுன்னு எல்லாரையும் அப்படியே நசுக்கிருவேன், புரிஞ்சுதா? என்றது கரடி.

ஒரு சத்தம் கூட வராது. எங்கள நம்பி இடம் கொடுங்கண்ணே என்றது எலி.

சரி, நேரா போய் இடதுபக்கம் திரும்புனா சின்னதா ஒரு இடம் இருக்கும். அங்க தங்கிக்குங்க, ஆனா மழை விட்டதும் ஓடிரணும், சரியா?

சத்தியமா மழை விட்டதும் போயிடறோம் அண்ணே என்றது எலி.

சரி போய் குட்டிங்கள கூட்டிட்டு உள்ள போ...

ரொம்ப நன்றிங்க கரடி அண்ணே.

ம்ம் இருக்கட்டும்.

அப்பா எலி மெதுவான குரலில் "எல்லாரும் என் பின்னாடி வாங்க, சத்தம் போடாம" என்றது.

எல்லோரும் போய் உள்ளே அமர்ந்தன. கரடி அண்ணன் பெரிய மனசு வச்சு நம்மளுக்கு இடம் குடுத்துருக்காரு. அவரு தூக்கத்த கெடுக்கற மாதிரி சின்ன சத்தம் கூட வரக்கூடாது புரிஞ்சுதா குட்டிங்களா.

புரிஞ்சது அப்பா என்றது நான்கு குட்டி எலிகளும்.

கொஞ்ச நேரம் கழித்து குட்டிகளுக்கு குளிரில் உடல் நடுங்கியது. மெதுவாக அம்மா எலி அப்பா எலியிடம் சொன்னது. பிள்ளைங்க குளிர்ல நடுங்கறாங்க பாருங்க. ராத்திரி முழுக்க இப்படியே நடுங்கினா பிழைக்க மாட்டாங்க எதாச்சும் பண்ணுங்க என்றது.

என்ன பண்ணலாம் என்றது அப்பா எலி.

கொஞ்சம் நெருப்பு மூட்டினா கதகதன்னு இருக்கும் என்றது அம்மா எலி. கரடி அண்ணங்கிட்ட கேட்டுப் பாருங்க.

சரி கேட்டுப்பாக்கறேன். 

மெதுவான குரலில் கரடி அண்ணனின் நெருப்பு கொஞ்சம் பத்த வச்சிக்கறேன் அண்ணே, பிள்ளைங்க குளிர்ல நடுங்குது என்றது.

அய்யய்யோ நெருப்பா, நெருப்பு எனக்கு ஆகாது. அதுமட்டும் வேணாம் என்றது கரடி.

பிள்ளைங்களுக்காக கேக்கறேன். என கெஞ்சியது அப்பா எலி.

சரி சரி, போய்த்தொலை, ஆனா பெரிய  நெருப்பு வச்சிராத, கொஞ்சமா வைக்கணும். புரிஞ்சுதா?

சரிங்கண்ணே

சரி, போய் சமையலறைல தீப்பெட்டி இருக்கும். கொஞ்சமா விறகு எடுத்து யூஸ் பண்ணனும்.

சரிங்கண்ணே. ரொம்ப நன்றி அண்ணே என்று சமையலறை பக்கம் ஓடியது எலி.

டேய் எலி, நில்லு, எல்லாரும் சாப்டிங்களா?  

சாப்டு ரெண்டு நாளாச்சிண்ணே, என்று கண்கலங்கியது அப்பா எலி.

அங்க கிச்சன்ல ஒரு சாலமன் மீன் இருக்கு. நேத்துதான் ஆத்துல பிடிச்சிட்டு வந்தேன். அதுல ஒண்ணே ஒன்னு மிச்சம் இருக்கு. அத எடுத்து நெருப்புல காட்டி சாப்புடுங்க, நீயே தின்னுடாத பிள்ளைங்களுக்கும் குடு.



எவ்வளவு நல்ல மனசுண்ணே உங்களுக்கு. என்று நெகிழ்ந்து போனது அப்பா எலி.

தீப்பெட்டியும் விறகும் எடுத்து வந்து நெருப்பு மூட்டி எல்லா எலிகளும் நெருப்பு முன் அமர்ந்தன. உடம்பிலிருந்து குளிர் மெல்ல விலகி சுறுசுறுப்பானது எலிகள். குட்டி எலிகள் எல்லாம் சேர்ந்து "பசிக்கிறது அப்பா" என்றன.

சமையலறை போய் சால்மன் மீனை எடுத்து வந்து அதே நெருப்பில் காட்டி அந்த எலிக்குடும்பமே சேர்ந்து உண்டது.

உணவு உள்ளே போனதும் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து அனைவரும் தூங்கிவிட்டனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது மழை விட்டிருந்தது. சூரியன் உதித்து தரையெல்லாம் காயத்தொடங்கியது. காட்டில் இருள் அகன்று வெளிச்சம் வந்திருந்தது. 

அப்பா எலி எல்லாரையும் எழுப்பிவிட்டு வெளியில் கூட்டிக்கொண்டு வந்தது.

கரடி அண்ணன் தூங்கிக்கொண்டிருந்தார். தூக்கத்தை கெடுக்காம போயிடலாமா என்றது அப்பா எலி. 

அது எப்படிங்க சொல்லாம போக முடியும், நமக்கு மிகப்பெரிய உதவி செஞ்சிருக்கார். சொல்லாம போனா மரியாதையா இருக்காது. எழுப்பி நன்றி சொல்லுங்க. அப்படியே அவருக்கு எதாவது நம்மளால உதவ முடியுமானு கேட்டு பாருங்க என்றது அம்மா எலி.

மெதுவாக சென்று கரடி மூக்கில் சுறண்டியது அப்பா எலி.

தூக்கத்திலிருந்து விழித்த கரடி கொட்டாவி விட்டது. விடிஞ்சிருச்சா? 

ஆமாங்கண்ணே, வெயில் விழ ஆரம்பிச்சிடுச்சி அப்படியே நாங்க கிளம்பறோம். நீங்க உதவி பண்ணலன்னா இந்த குடும்பமே இப்போ இல்ல. உயிர் உள்ளவரை நன்றியா இருப்போம் கரடி அண்ணே என்றது அப்பா எலி.

சரி, சரி போய்ட்டு வா, நல்ல மேடான இடமா பாத்து வளைய தோண்டனும் அப்பதான் மழை உள்ள வராம பாதுகாப்பா இருக்க முடியும் சரியா என்றது கரடி.

ரொம்ப நன்றி கரடி அண்ணே! உங்களுக்கு எதாவது உதவி செய்யணும்னு எனக்கு தோணுது. எங்களால உங்களுக்கு ஆக வேண்டியது எதாவது இருந்தா சொல்லுங்க அண்ணே என்றது அப்பா எலி.

கொஞ்ச நேரம் யோசித்தது கரடி. உன்னால அது முடியாது. நீ உன் வழிய பாத்துப் போ என்றது கரடி.

அப்படிலாம் சொல்லாதிங்கண்ணே, என்ன உதவின்னு சொல்லுங்க எங்களால முடியுமான்னு பாக்கறோம் என்றது.

அது ஒண்ணும் இல்லடா எலிப்பயலே, எனக்கு தேன் சாப்பிடணும் போல இருக்கு. தூரமா ஒரு மரத்துல பாத்தேன். நல்ல பெரிய தேன்கூடு. ஆனா ரொம்ப ரொம்ப உயரத்துல இருக்கு. உன்னால அவ்ளோ உயரம் போக முடியாது.

அட... எவ்வளவு பெரிய மரமா இருந்தாலும் நான் ஏறிடுவேன். எங்கள கூட்டிட்டு போங்கணே நான் தேன் எடுத்து தரேன் என்றது கரடி

அப்படியா சொல்ற?.. சரி வா போகலாம். என்றது கரடி.

மகிழ்ச்சியுடன் கரடி பின்னால் சென்றன எலிகள். வழியெல்லாம் சேரும் சகதியுமாக இருந்தது. எலிகள் சிரமப்பட்டன. வழியில் ஒரு காட்டாறு ஓடியது. ஆற்றை கடந்தால் அந்தப்பக்கம் இருக்கிறது மரம்.

இந்த தண்ணில இறங்கினா அடிச்சிகிட்டு போயிடுவிங்க, என்னோட முதுகுல ஏரி கெட்டியா முடிய புடிச்சிக்குங்க, பிடிய விடக்கூடாது. விட்டேன்னா ஆத்தோட போயிடுவிங்க என்றது கரடி.

எலிகள் முதுகில் ஏறிக்கொண்டன. குட்டி எலிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. கரடியின் முதுகில் பஞ்சு மெத்தை போல முடிகள் இருந்தது. நன்றாக இறுக்கிப்பிடித்துக்கொண்டன.

ஆற்றைக்கடந்தது ஒவ்வொன்றாக குதித்து நடக்க ஆரம்பித்தன. சிறிது தூரத்தில் அந்தப் பெரிய மரத்தைக்கண்டனர்.

அவ்வளவு பெரிய மரத்தை வாழ்நாளில் கண்டதில்லை எலிகள். வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தன.

பாத்தியா, இதுல ஏற முடியுமா உன்னால? மேலருந்து விழுந்தின்னா சட்னி ஆயிடுவ, முடிஞ்சா பாரு இல்லன்னா ஏற வேணாம் என்றது கரடி.

உங்களுக்காக கண்டிப்பா ஏறிடுவேன். இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க உங்க கைல தேனடை இருக்கும் என்றது அப்பா எலி.

மரத்தில் ஏற ஆயத்தமானது எலி.

டேய் எலி, நில்லு. இப்படியே போனா தேனீக்கள் உன்ன கடிச்சிடும். இந்தா நெருப்பட்டி. நெருப்ப காட்டினா தேனி பறந்துடும் அப்புறமா உன்னோட பெரிய பல்ல கத்திரிக்கோல் மாதிரி யூஸ் பண்ணி அறுக்கனும். அப்படி பண்ணா அது கீழ விழும். அப்படியே நான் பிடிச்சிக்கறேன். புரிஞ்சுதா என்றது கரடி.

நல்லவேல இப்பவே சொன்னிங்க. மேல போயிருந்தன்னா அப்படியே மேல போயிருப்பேன் என்றபடி தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு மேல ஏற ஆரம்பித்தது.

ஏற ஏற உயரம் கூடிக்கொண்டே போனது. கையெல்லாம் வலியெடுத்தது. பெரிய பெரிய எறும்புகள் தொல்லை செய்தது. அங்கங்கே ஓய்வெடுத்து ஒருவழியாக தேனடை அருகே சென்றது. ஒரு கிளைய ஒடித்து அதிலே தீ வைத்து தேனடை பக்கம் காட்டியதும் தேனீக்கள் பறந்து ஓடின.

தன் கூரிய பற்களால் ஒரு பக்கமிருந்து மறுபக்கமாக கடித்துக்கொண்டே சென்றது. பாதி தூரத்திலேயே பாரம் தாங்காமல் தேனடையின் ஒரு பகுதி கீழே விழுந்தது.

கரடி சரியாக மண்ணில் படாமல் அதை பிடித்து சாப்பிட ஆரம்பித்தது. குட்டி எலிகளும் தேனை நக்கிப்பார்த்தன. புதுசுவையாக இருந்ததால் தேனை விரும்பி சாப்பிட்டன குட்டி எலிகள்.

கரடிக்கு வயிறு நிறைந்தது. மேலே அண்ணாந்து பார்த்தது. மரத்தில் இன்னும் கொஞ்சம் தேன் இருந்தது.

டேய் எலிப்பயலே, அதையும் கடிச்சி கீழ போடு என்று கத்தியது.

கரடியண்ணே, நாம எல்லாத்தையும் சாப்பிட்டா பாவம் தேனீக்கள் திரும்ப வந்து பாத்து ஏமாந்து போயிடும். பாவம்ணே, இன்னொரு நாள் வந்து சாப்பிடலாம். என்றது அப்பா எலி.

நீ சொல்றதும் சரிதான். கீழ இறங்கி வா என்றது.

ஏறுவதை விட இறங்குவது சுலபமாக இருந்ததால் எலி சீக்கிரமே கீழே வந்து விட்டது.

ரொம்ப மகிழ்ச்சிடா எலி. இவ்வளவு ருசியான தேனை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நல்ல தேன் சாப்பிட்டா அருமையான தூக்கம் வரும்னு சொல்வாங்க. எனக்கு இப்ப நல்ல தூக்கம் வருது. இந்த மரத்துக்கு அடியிலயே தூங்க போறேன். நீங்களும் தூங்கி ஓய்வெடுங்க என்றது.



உங்களுக்கு உதவி செஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி அண்ணே என்றது அப்பா எலி.

சரி, நீங்க எல்லாரும் என்கூடவே வந்து தங்கிடுங்க, அதான் குட்டிகளுக்கு பாதுகாப்பு. பாம்பு தொல்லை இருக்காது. மழைநீர் உள்ள வராது, பத்திரமா இருக்கலாம் என்றது.

எலிக்குடும்பம் மகிழ்ச்சியுடன் சம்மதித்தன. கரடியும் எலிக்குடும்பமும் அந்தக்குகையில் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.



No comments: