அப்பா இன்னிக்கு காக்கா கதை சொல்லுப்பா...
சரி சொல்றேன். வழக்கமா காக்கா கதைனாவே, காக்கா வடை திருடுன கதை சொல்வாங்க. அது எல்லாருக்கும் தெரியும். நாம வேற ஒண்ணு சொல்வோம். சரியா?
ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. மிகப்பெரிய கோயில். எதோ ஒரு மன்னன் அந்தக்காலத்துல பிரம்மாண்டமா கட்டிட்டு போயிருக்கான். அந்தக்கோயில் வாசல்ல பெரிய கோபுரம், மரத்தால் ஆன கதவுகள் மூணு ஆள் உயரத்துக்கு இருந்தது. முழுக்க கற்களால கட்டியிருக்காங்க. கோபுரம் தாண்டி போகையில இரண்டு பக்கமும் திண்ணை இருக்கும். கல் திண்ணை. அதுல உக்காந்தா குளிர்ச்சியா இருக்கும். அங்க உக்காந்துதான் ஊர்க்கதை பேசுவார்கள் மக்கள். அதைத் தாண்டி போனோம்னா பெரிய விஸ்தாரமான இடம் ஆயிரம் பேர் நிக்கற அளவுக்கு பெரிய இடம். வலதுபக்கம் கோயில் குளம். இடது பக்கம் பூக்கள் நிறைஞ்ச சிறிய தோட்டம். அதைத்தாண்டி போனா மண்டபம். அங்கதான் கல்யாணம் நடக்கும். மண்டபம் முழுக்க கல்தூண்களால் கட்டப்பட்டிருக்கும். மண்டபம் பின்னாடிதான் கோயில் இருக்கும் அதுக்கு உள்ள கருவறை. அங்கதான் தெய்வம் இருக்கும். அந்தக் கோயிலுக்கு இடது புறம் பெரிய மாமரம் இருந்தது.
கோயிலை சுற்றி 12 அடி உயரத்துக்கு சுவர் இருக்கும். கோயில் உள்ளார இருக்கறது மாமரம். அந்த ஊர்லயே அந்த மரம்தான் பெரிய மரம். கோயிலுக்கு அந்தப்பக்கம் மக்கள் குடியிருக்கற தெருக்கள் இருந்தது. அந்தத் தெருவுலயும் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்துல நிறைய காக்காய்கள் குடியிருந்துச்சு. கோயில் கோபுரம்னு சொன்னேன் இல்லயா, அந்த கோபுரத்துல நிறைய புறாக்கள் குடியிருந்துச்சு, வெண்புறா, மணிப்புறா, பழுப்பு நிறப்புறா, தங்க நிறத்துலன்னு அழகழகா நிறைய புறாக்கள். கோயிலுக்கு உள்ள இருந்த மரத்துல குயில்கள், கிளிகள் குடியிருந்துச்சு.
கோபுரவாசலைத் தாண்டினா நிறைய இடம் இருக்கும்னு சொன்னேன்ல, அங்கதான் சாமி கும்பிட்ட பிறகு மக்கள் அமர்ந்திருப்பாங்க. அப்போ அங்க இருக்கற புறாக்களுக்கு மக்கள் தானியங்கள போடுவாங்க. புறாக்களும் அதை கும்பலா பறந்து வந்து கொத்தி கொத்தி சாப்பிடும். அது சாப்பிடற அழகை மக்களும் குழந்தைகளும் வேடிக்கை பாப்பாங்க.
அந்த மரத்துல குயில்களும் கிளிகளும் இருந்துச்சு சொன்னேன்ல அதுல கிளிகள் மட்டும் கீழ வந்து தானியங்களை தின்னுமாம். குயில்கள் கீழ வரவே வராதாம். குயில்களுக்கு தான்தான் ரொம்ப அழகு. அதுவுமில்லாம தன்னால மட்டும்தான் அழகா கூவ முடியும். அது பாடல் போல இருக்கும்னு நினைப்பு. அதனால கர்வம் அதிகம். உங்களோட சரிக்கு சமமா சாப்பிட்டா அது எனக்கு கவுரவம் இல்லன்னு நினைக்குமாம்.
கோயில்லும் பின்புறம் உள்ள தெருவில் ஒரு மரம் இருக்கும்னு சொன்னேன்ல அந்த மரத்துப் பேரு புங்கை மரம். நல்ல அடர்த்தியான பெரிய மரம். அதுல எண்ணவே முடியாத அளவுக்கு காகங்கள் இருந்துச்சு. அந்தக் காகங்கள் கோயிலுக்குள்ள தானியம் தின்ன வரும்போதெல்லாம் மாமரத்துக் கிளிகளும் குயில்களும் சத்தம் போட்டு காட்டிக்கொடுக்குமாம். புறாக்கள் எல்லாம் சேர்ந்து காகங்கள கோயிலுக்குள்ள வரமுடியாதபடி விரட்டுமாம்.
காகங்கள் ஒருநாள் புறாக்கள் கிட்ட கேட்டுச்சாம். ஏன் நாங்க கோயிலுக்கு உள்ள வந்து தானியங்கள சாப்பிட விடாம தடுக்கறிங்க?
நீ ரொம்ப கருப்பா, அசிங்கமா இருக்கிங்க, அதுவுமில்லாம நீங்க கத்துனா காது கிழியற மாதிரி கத்தறிங்க, செத்த எலிய சாப்பிடறிங்க, போதாக்குறைக்கு எங்களவிட அதிகமான எண்ணிக்கைல இருக்கிங்க. நீங்க உள்ள வந்தா எங்களுக்கு அவமானம். மக்கள் எங்களோட அழகான தோற்றத்துக்காகவும் குரலுக்காகவும்தான் தானியங்கள் போடறாங்க. உங்களுக்காக இல்ல என்றதாம்.
கருப்பா இருக்கறது நாங்கள் தேர்ந்தெடுக்கறது இல்ல, அது இறைவன் கொடுத்தது. எங்களோட குரல் மோசமா இருக்கலாம் ஆனா நாங்க கத்துறது எங்களோட நண்பர்களை கூப்பிடவும், கிடைத்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்ணவும்தான் கத்துறோம். அப்படி கத்தும்போது அருகில் இருக்கிற எங்கள் சக காக்கைகள் வந்து உணவு உண்ணும். பகிர்ந்து உண்ணும் பண்பாடு எங்களோட வரம். அப்புறம் செத்த எலிகள நாங்க சாப்பிடலன்னா ஊரே நாறிடும். அந்த வகைல ஊரை சுத்தமா வச்சிக்கறதுல எங்களோட பங்கும் இருக்கு. உங்கள மாதிரி கர்வம் பிடிச்சி தானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்னு எங்களுக்குத் தெரியாது என காக்கைகள் சொன்னதாம்.
நீங்க என்ன வேணா சொல்லுங்க, நீங்க கோயிலுக்குள்ள வந்தா சத்தம் போடுவோம். நீங்க வரக்கூடாது என்றதாம் கோயில் புறாக்கள்.
காலம் ஒருநாள் மாறும். அப்போ நாங்களும் கோயிலுக்குள்ள வருவோம் அதுவரைக்கும் காத்திருக்கிறோம் என்றதாம் காக்கைகள்.
சரி கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் என்று சிரித்ததாம் கிளிகளும், புறாக்களும். இதை மரத்தில் இருந்த குயில் மகிழ்ச்சியோடு பார்த்ததாம்.
காக்கைகள் அவமானத்தோடு தங்களோட புங்கை மரத்துக்கு திரும்புச்சாம்.
கொஞ்சநாள் கழிச்சி மாமரத்துக் குயிலுக்கு முட்டை இடும் காலம் வந்துச்சு. குயில் என்னதான் அழகா இருந்தாலும், அருமையா பாடினாலும் அதுக்கு கூடு கட்டத் தெரியாது. கூடு இருந்தாதான் அடை காக்க முடியும். அவயம் இருந்தாதான் முட்டைகள் பொறிஞ்சி குயில் குஞ்சுகள் வெளிய வரும். கூடு இல்லன்னா எப்படி குஞ்சு வரும். அதனால குயில் என்ன பண்ணுச்சாம் தெரியுமா?
என்ன பண்ணுச்சு?
புறாக்கள்தாம் நம்ம நண்பர்களாச்சே, அவங்க கூட்டில முட்டை இடலாம்னு போய் அங்க முட்டையிட்டு வந்துடுச்சாம்.
பெண்குயில் ஆண்குயில்கிட்ட சொன்னுச்சாம். நான் புறாவோட கூட்டில் ரெண்டு முட்டையிட்டுட்டு வந்தேன். அது இன்னும் கொஞ்ச நாள்ல குஞ்சு பொரிச்சிடும். நம்ம குடும்பத்து ரெண்டு வாரிசு வரப்போறாங்க என்று மகிழ்ச்சியோடு சொன்னதாம். ஆண்குயிலும் அதக்கேட்டு மகிழ்ச்சியாயிடுச்சி.
ஆனா மறுநாள் குயிலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம்.
என்ன அதிர்ச்சி?
புறா தன்னோட கூட்டில் இருந்த குயில் முட்டைகளை மட்டும் காலால தள்ளி விட்டுருச்சி. அதனால முட்டைகள் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சி.
குயில் முட்டைன்னு புறாவுக்கு எப்படி தெரியும்?
பொதுவா வெவ்வேறு வகை பறவைகளுக்கு வெவ்வேறு நிறத்தில முட்டைகள் இருக்கும். புறாக்களுக்கு வெள்ளையும், காபிபொடியும் கலந்த நிறத்தில் இருக்கும். குயில் முட்டைகள் இளநீல நிறத்தில் இருக்கும். இந்த நிறவேறுபாடு காரணமா தன்னோட முட்டை இல்லன்னு கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.
குயில் வந்து புறாகிட்ட கேட்டுச்சாம். ஏன் முட்டைகளை உடைச்ச?
உன் முட்டைகளை நீயே பொரிச்சுக்க, ஏன் என்கிட்ட குடுக்கற? என்றதாம் புறா
எனக்கு கூடு கட்ட தெரியலன்னுதான் உன்கிட்ட முட்டை வச்சேன். ஆனா நீ கீழ தள்ளி உடைப்பேன்னு எனக்கு தெரியல, அநியாயமா இப்படி உடச்சிட்டியேன்னு அழுதுச்சாம் குயில்.
என்கிட்டயே நாலஞ்சி முட்டை இருக்கு. நீயும் முட்டைய வச்சா அதிகமாயிடும் என் முட்டையால என் முட்டைகள் பொரிக்காம போயிடும் இனிமே நீ வேற எடம் பாத்துக்கன்னு புறா வெறுப்பா சொன்னுச்சாம்.
குயிலும் அழுதுகிட்டே மரத்துக்கு வந்து ஆண் குயில்கிட்ட சொன்னுச்சாம்.
சரி விடு அடுத்த முறை முயற்சி பண்ணலாம்னு சமாதானம் சொன்னுச்சாம் ஆண்குயில்.
இதயெல்லாம் தூரத்துல புங்கை மரத்துலருந்து பாத்துகிட்டுருந்துச்சாம் காக்கை. அந்த காக்கைக்கு ரொம்ப பாவமா இருந்துச்சாம்.
அங்கருந்து பறந்து வந்து குயில்கிட்ட பேச்சு குடுத்ததாம். குயில்களே... நடந்ததை எல்லாம் நான் பார்த்தேன். உங்களுக்கு உதவணும்னு எனக்குத் தோணுது என்றதாம் காக்கை.
எப்படி நீ எங்களுக்கு உதவி செய்வாய்?
அடுத்த முறை உனக்கு முட்டையிடும் பருவம் வந்ததும் நீ புறாவின் கூட்டில் முட்டை வைக்காதே, நேராக எங்கள் கூட்டில் முட்டை வைத்துவிடு. அதை உனக்காக நான் அவயம் காக்கிறேன் என்றதாம் காக்கை.
அதைக்கேட்ட குயில்களுக்கு மனம் இளகியது. என்னதான் நாங்க உங்கள அவமானப்படுத்தினாலும், கோயிலுக்குள்ள விடலன்னாலும், உணவு தர மறுத்தாலும் எனக்காக நீங்க செய்ய நினைக்கிறிங்க, உள்ளத்தால் உயர்ந்தவர்கள் நீங்கன்னு சொன்னுச்சாம் குயில்.
அடுத்த முறை நான் நேராக வந்து உங்கள் கூட்டில் முட்டையிடுகிறேன் சொன்னது குயில்.
இதையெல்லாம் கிளி ஒட்டுக்கேட்டு போய் புறாக்கூட்டத்திடம் சொன்னதாம். புறாக்களுக்கு கோபம் வந்துச்சாம். அந்த அவலட்சண காக்கைகளுடன் நட்பாக இருக்கும் குயிலை திட்டியது. சரியான நேரம் பார்த்து குயில்களை விரட்டணும்னு முடிவு பண்ணுச்சாம்.
அந்த நேரம் பார்த்து அந்த ஊருக்குள்ள ஒரு கிளி ஜோசியன் வந்தான். அவனுக்குத் தொழிலே கிளிய பிடிச்சி பழக்கி அத வச்சு கிளி ஜோசியம் பாக்கறதுதான். அவனிடம் நீண்ட காகம் இருந்த கிளி செத்துப்போனது. புதுக்கிளிய பிடிக்கறதுக்காக வந்திருந்தான். இந்த மாமரத்துல கிளிகள் நிறைய இருக்குன்னு கேள்விபட்டு கோயிலுக்குள் வந்தான். அவனும் மரத்தில் ஏறி கூட்டில் இருந்த சிறிய கிளியை பிடித்தான். உருவத்தில் சிறிய கிளிகளால் சத்தம்தான் போட முடிந்தது. ஜோசியனை விரட்ட முடியவில்லை. கூட்டமாக சேர்ந்து கத்தின.
இதைப்பார்த்த காக்கைக் கூட்டம் உச்ச குரலெடுத்து கத்தியது. அது கத்தியதும் எங்கிருந்துதான் வந்ததோ தெரியாதது போல ஆயிரமாயிரம் காக்கைகள் வந்து மரத்தில் இருந்த ஜோசியனை தன் கூரிய அலகால் கொத்தியது. வலி பொறுக்க முடியாமல் ஜோசியக்காரன் குஞ்சு கிளியை மரத்திலேயே விட்டுவிட்டு கீழே குதித்து ஓட்டம் பிடித்தான்.
சரியான நேரத்தில் உதவிக்கு வந்த காக்கைகளுக்கு கிளிகள் நன்றி தெரிவித்தன. இனிமேல் நீங்கள் கோயிலுக்கு வரும்போது நாங்கள் கத்த மாட்டோம். நாம் நட்போடு இருப்போம் என்றது கிளிகள். காக்கைகளும் கிளிகளும் நட்பானார்கள்.
கொஞ்ச காலம் கழித்து குயிலுக்கு முட்டையிடும் பருவம் வந்தது. அது நேராக சென்று காக்கையின் கூட்டில் முட்டை வைத்தது. இந்த முட்டைகளை என் முட்டைகள் போல் நினைத்து அவயம் காத்து குஞ்சு பொரித்ததும் உங்களிடம் ஒப்படைப்பேன் என காக்கை வாக்கு கொடுத்தது.
சொன்னது போலவே கொஞ்சநாளில் அழகிய இரு குயில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்தன. அதனை காகம் குயில்களிடம் கொடுத்தது.
குயில் குடும்பம் ஆனந்தத்தில் கூத்தாடியது. நம் குடும்பம் காக்கைகளின் உதவியால் பெருகியது. நாம் என்றென்றைக்கும் காக்கைகளுக்கு நன்றியோடு இருப்போம் என்றது குயில்.
ஆம், காக்கைகள் குணத்தால் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்றது அங்கிருந்த கிளிகள்.
கோயிலில் மக்கள் பறவைகளுக்கு தானியங்களை வீசும்போதெல்லாம் மாமரத்துக் கிளிகளும் குயில்களும் சப்தமெழுப்பவில்லை. அதனால் காகங்களும் வந்து தானியங்களை மகிழ்ச்சியோடு சாப்பிட்டன.
புறாக்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பிறகு வேறு வழியில்லாம ஏற்றுக்கொண்டன.
பிறகு வந்த காலங்களில் அக்கோயிலின் தானியங்களை புறாக்களும், காகங்களும், கிளிகளும், குயில்களும் இன்ன பிற பறவைகளும் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.