எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, March 03, 2020

திறப்பு

தன்னை மீட்டெடுத்தல் என்பது அபூர்வமாக நடக்கும் விஷயம். இன்னது நிகழப்போகிறது என்பதே தெரியாது நடந்துவிடும் ஆச்சரியம். சில நாட்களாக எதிலும் மனம் ஈடுபாடு இன்றி அலைந்து திரிந்தது. பிரத்யேகக் காரணங்கள் ஒன்றுமில்லை. மனக்கதவுகள் தானாக சாத்திக்கொண்டன. ஒரு திறப்பிற்காக நானும் காத்திருந்தேன். இடையில் நானாக சில காரியங்களை திறப்பிற்காக முயற்சி செய்து பார்த்தேன். பயணம். எங்காவது பயணம் சென்று வந்தால் ஓரளவு மனதுக்கு புத்துணர்சி கிடைக்கக் கூடும் என எண்ணி, பிறகு நடைமுறை சாத்தியங்களை நினைத்து தவிர்த்துவிட்டேன். தவறான புத்தகத் தேர்வுகள் வாசிப்பையும் முடக்கிப்போட்டன. திரைப்படங்கள் பார்க்கலாம் என நெட்பிலிக்ஸ் பக்கம் ஒதுங்க, தனது ஆக்டோபஸ் கரங்களால் அது என்னை இழுத்துக்கொண்டது. வகை தொகை இல்லாமல் படங்கள், தொடர்கள். சமீப ஆறுமாதத்தில் அதில்
செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால் என் வாழ்நாளில் மொத்த கணினி உபயோகத்தின் நேரத்தில் பாதியை அதில் செலவிட்டிருக்கிறேன். நான்கு சீசனும், சீசனுக்கு பத்து அத்தியாயங்களும், அத்தியாத்திற்கு குறைந்தளவு ஒரு மணி நேரமும் ஓடக்கூடிய தொடர்களை அதிகபட்சம் நான்கு நாட்களில் முடித்திருக்கிறேன்.

நைட் ஷிப்ட் வாட்ச்மேன் போல நடைகூட தள்ளாடிப்போனது. இதனால் நான் இழந்தது நிறைய. பிள்ளைகளுடனான அணுக்கமின்மை, வீட்டம்மணியுடன் உரையாடல் குறைந்தமை, வார இறுதிகளில் சமையல் பக்கம் உதவி நின்றது, நண்பர்களுடனான சந்திப்பு குறைந்தது. வாசிப்புப்பக்கம் கொஞ்சமும் செலவழிக்காதது. என பட்டியல் நீளும். ஒரே நல்ல விஷயம் குடி அமர்வுகளில் சமீப காலமாக பங்கேற்கவில்லை.

ஒரு திறப்பு எல்லாவற்றிற்கும் உண்டல்லவா... காலப்போக்கில் இந்த நெட்பிளிக்ஸ் போரடிக்க ஆரம்பித்தது. தொடர்களில் நாட்டம் குறைந்து மொத்தமாக மறைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முன்பு போல அதில் நேரம் அதிகம் செலவழிப்பதில்லை.

சென்றவாரம் டாக்டர் சைமன் அழைத்திருந்தார். வீட்டம்மணி முன்பு வேலை பார்த்த கிளினிகின் பல் டாக்டர் அவர். கிளினிக்கில் கணினி சம்பந்தப்பட்ட வேலைகளில் உதவி தேவை என்றால் என்னை அழைப்பார். செய்து தருவேன். இந்த முறை ரசீதுகளைப் பிரிண்ட் செய்வதுபோல சிறிய அளவில் ஒரு பிரிண்டரை கவுண்டருக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும் என்றார். அதற்கு முன் சைமன் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு கனவான். வாழ்வில் நிறைய பெரிய மனிதர்களை சந்தித்தாலும் சிலரை மட்டுமே கனவான் என மனதில் வைத்திருப்போம் அல்லவா அதுபோல ஒரு கனவான் அவர். ஒரு குறுஞ்செய்தியில் எத்தனை மரியாதை கலந்த வார்த்தைகள் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு வார்த்தைகளை அன்புடன் கலந்துதான் அனுப்புவார். நான் அதற்கு ஒற்றை வரியில் பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். கனவானுக்கும் சில்லறைக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சைமன் ஒரு வேலையிட்டார் அல்லவா. அதற்காக சிம்லிம் சென்று ஒரு பிரிண்டர் வாங்கவேண்டும். வேலையிலிருந்து நேராக சிம்லிம் சென்று வாங்கி கிளினிக்கில் பொருத்துவதாக திட்டம் வகுத்துக்கொண்டேன். கிளினிக் போகும் வழியில்தான் ராஜாராம் முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். அங்கே ஒரு டீக்கடையும் இருக்கிறது. நண்பர்களுடன் நின்று கொண்டே தேநீர்க்கோப்பையுடன் உரையாடுவது அலாதியான விஷயம். இங்கு எல்லா கடைகளிலும் அமர்ந்து சாப்பிடும் முறைதான் உள்ளது. சிங்கப்பூரிலேயே நின்றுகொண்டு சாப்பிடும் ஒரு கடை அதுதான். அதனால் அவ்வழியாக செல்லும்போதெல்லாம் அங்கே நின்று ஒரு டீ சாப்பிடுவது வழக்கம். சோகம் என்னவென்றால் ராஜாராம் எப்போதுமே பிசியாக இருப்பார். சும்மா இருப்பது அபூர்வம். அவர் சும்மா இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வேன். ஆனாலும் எவர் தலையிலாவது விளையாடிக்கொண்டிருப்பார்.

அம்பானியுடன் கூட தேநீர் அருந்த வாய்ப்புண்டு. ஆனால் ராஜாரமுடன் அருந்த முயல்வது கடினம். வேலையிலிருந்து சற்று நேரம் விலகி டீ சாப்பிடலாம் என்று அவரை அழைப்பது சரியாக இருக்காது. அது அவரது தொழிலைக் கெடுக்கும் செயல். ராஜாவின் கடைக்குச் செல்ல மற்றுமொரு காரணம் அங்கே புத்தகங்கள் இருக்கும். சாரு, ஆசான், எஸ்ரா, ஷோபா சக்தி, லசகு என இலக்கியவாதிகளின் பெயர்கள் சரளமாக புழங்கும். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புவது வழக்கம். கெட்ட வார்த்தை என்ற சாருவின் நூல் ஒன்று கண்ணில் பட்டது. கேட்டவுடன் “எடுத்துட்டுப் போங்கணே” இதுல்லாமா கேட்டுகிட்டு இருப்பாக என்றார்.

எடுத்துவந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு திறப்பு நிகழும் என்று காத்திருந்தேன் அல்லவா, அந்தத் திறப்பை கெட்ட வார்த்தைதான் செய்துகொண்டிருக்கிறது. வாசித்துக்கொண்டிருக்கும் போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் எழுத்து சாருவினுடையது.

சீன ராயா என்றொரு சிறுகதை எழுத ஆரம்பித்து நான்கு பாராக்களுடன் நிற்கிறது. அதைத் தொடர வேண்டும். முடிக்கவேண்டும். வலைப்பூவில் தினமும் எதையாது தோன்றுவதை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆவலை சாரு ஏற்படுத்திவிட்டார். இந்த உத்வேகத்தை எழுத்தும் வாசிப்பும் மட்டுமே உருவாக்கும்.




No comments: