முகநூலில் நேற்று ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
//ஒரு கருத்தை ஏற்பதா? எதிர்ப்பதா? என்று குழப்பம் வரும் போது பார்ப்பனீயம் எதை ஆதரிக்கிறது என்று பார்!
யோசிக்காமல் அதை எதிர்த்து நில்!
யோசிக்காமல் அதை எதிர்த்து நில்!
-பெரியார்//
இதற்கு என்ன அர்த்தம்? நமக்குள்ள நடக்கும் பிரச்சினைகளை நீங்கள் எதற்கு முகநூலில் எழுதுகிறீர்கள் என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
எனக்கு பகீர் என்றது. நான் நிறைய சந்தர்ப்பங்களில் பெரியார் குறித்தும் இலக்கியம் குறித்தும் என் மனைவியுடன் பேசுவதுண்டு. பெரிய கொட்டாவி ஒன்றை விட்டு "அதுக்கென்ன இப்ப" என்பது போல பார்ப்பார். இத்தனைக்கும் வீட்டில் நானூறு புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது. ஓய்வான சமயங்களில் நான் எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கும்போதுதான் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளின் நீளமான பட்டியல் ஒன்றை வாசிப்பார். நான் புத்தகங்களை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.
விஷயத்துக்கு வருவோம். இந்த நிலைத்தகவலில் பொதுவான ஒரு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். அது பெரியார் சொன்ன ஒரு கருத்து. அதில் எங்கே நம் பிரச்சினை இருக்கிறது என்றேன்?
அதுசரி, நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும். அதை ஏன் இப்போ எழுதணும்?
அதைச் சொல்றதுக்கு முன்னாடி பெரியார் பற்றியும், திராவிடர் கழகம், பற்றியும், பகுத்தறிவு, பெண்ணுரிமை, சாதியொழிப்பு பற்றியெல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படிப் பேச ஆரம்பித்தால் இரவு சோறு நிச்சயம் கிடைக்காது. அதைப் பற்றிப் பேசப்போவதுமில்லை. ஆனால் அந்த நிலைத்தகவல் என்னை இந்த இக்கட்டில் கொண்டு வந்துவிடும் என எழுதியபோது எண்ணவில்லை.
இப்போது ஒரு கருத்து சமூகத்தில் நடக்குதென்று வைத்துக்கொள்வோம். அது நம் சமூகத்திற்கும், மக்களுக்கும் ஏற்புடையதா? இல்லையா என்றொரு குழப்பம் வரும்போது பார்ப்பனீயம் அதை ஆதரித்தால் அதை எதிர்த்து நில்
அப்படின்னு பெரியார் சொல்லியிருக்கார் என்றேன்.
பார்ப்பனீயம்னா என்ன?
எனக்கு நெஞ்சு வலித்தது. சமூகமே ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது மகிழ்ச்சியில் இருப்பது எனக்கு பெரும் துயரைத் தந்தது.
நான் பேச ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது என தொண்டையைச் செருமிக் கொண்டு இப்போ திரௌபதி என்றொரு படம் வந்திருக்கிறது. அதன் போஸ்டரில் "ஜாதிகள் உள்ளதடி பாப்பா" என்று டேக்லைன் போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். படமும் வெளிவந்து வசூலில் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இது நல்ல படமா நஞ்சை விதைக்கும் படமா என்று எல்லோரும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் என் முடிவைப் பற்றி ரெண்டு வரி எழுதியிருக்கிறேன் அதுதான் அந்த நிலைத்தகவல்?
மலையாளப்படமா?
இல்லை, தமிழ்ப்படம்தான்.
இதுல விவாதிப்பதற்கு என்ன இருக்கு?
பார்ப்பனீயம் இதுல எங்க வந்துச்சு?
பாரதிய ஜனதா, இந்து முண்ணனி போன்ற அமைப்புகள்ல இருக்கிற சிலர் இந்தப்படத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. இந்த கட்சிகள் எல்லாம் பிராமணக் கொள்கைகள் உடையவை, பிராமணியம் தீண்டாமையை ஆதரிக்கும் கட்சி. பாமக, வன்னியர் பேரவை, முக்குலத்தோர், சோழர் படை, என எல்லா ஜாதி சங்கங்களும் இந்தப்படத்தை மக்களுக்கு இலவசமா டிக்கெட் எடுத்து தரோம்னு கூட அறிவிச்சிருக்காங்க. தீண்டாமைய ஒழிக்கணும்னு தமிழ்நாட்டுல எவ்வளவு போராட்டாங்கள் நடந்து இப்ப இருக்கிற நிலையை அடைஞ்சிருக்கோம். இப்பவும் எல்லாமும் ஒழிஞ்சதா சொல்ல முடியாது ஆனா மத்த மாநிலங்கள்ல இருக்கறதை விட ஜாதிப்பிரச்சினை இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவான மாநிலம். இப்படி இருக்கற நேரத்துல மறுபடி இருபது, முப்பது ஆண்டுகளுக்கு பின்னாடி இழுத்துட்டுப்போற பிற்போக்கு கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கு.
இந்த மாதிரி பார்ப்பனீய கொள்கைகள் உடைய கட்சிகள் ஆதரவு இந்தப்படத்துக்கு இருக்கிறது. எதோவொரு ஆதாயத்துக்கு அவங்க ஆதரிக்கறாங்க என்ற ஒரு காரணமே போதும் இப்படத்தை எதிர்க்கறதுக்கு. அதனால அந்த நிலைத்தகவல் இட்டேன்.
எவனோ என்னமோ படம் எடுத்துட்டுப் போறான் உனக்கென்ன?
இந்தப் படம் வெற்றி பெற்றால் இதைப்போல இன்னும் பத்து படம் வரும். எல்லாத்தையும் நாடக காதல்னு சொல்லி கடைசில காதலித்தாலே குற்றம்னு கொண்டுவந்து தாலிபான் ஆட்சியைக் கொண்டு வருவார்கள். இதெல்லாம் எதிர்க்கணும் இல்லியா?
ஆமா... இப்படி ஒரு படம் வந்ததே யாருக்கும் தெரியல. நீ சொல்லிதான் எனக்கே தெரியும். எல்லாரும் இப்படி பேசி பேசிதான் சின்ன விஷயத்தைப் பெருசா ஆக்கறிங்க.
அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது.