எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, October 15, 2009

அன்பினால் நிறைந்த வீடு

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.
அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை
மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி
அறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்
ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்
முழுக்க அன்பினால் நிறைந்திருக்கிறது அந்த அன்பு அவர் வீடு முழுவதும் விரவியிருக்கிறது
வந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் பகிர்ந்தளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க
கருங்கற்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு, விளக்கு மாடங்கள், ஓவியங்கள் என
ரசனையில்லாதவரையும் அமர்ந்து ரசிக்க வைக்கும் வடிவங்கள்.

முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் மனம்
தனிமையை உணரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பது அது. அதிகம் அடம்பிடித்தால்
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவதாக
சொல்லி பயமுறுத்தியிருந்தார் அப்பா. முன்னதாக அங்கெ சென்று வந்த நாள் முதல் எனது
சேட்டைகளை மூட்டை கட்டியது நினைவிலிருக்கிறது. வீட்டை விட்டு விடுதியில் இருப்பதே
தாங்க முடியாததாக இருக்கும். மேலதிகமாக அவ்விடுதி முழுக்க முழுக்க எவ்வித அலங்காரமும்
அற்ற கருங்கற்களால் கட்டப்பட்டது. மிக உயரமான சுவர்கள் கொண்டது. பல சிறுவர்கள் களையிழந்த
முகங்களுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட சஷாங்க் ரிடம்ப்ஷன், க்ரீன் மைல்
படத்தில் வரும் சிறைச்சாலையை ஒத்திருக்கும். எனவே கற்களால் கட்டப்பட்ட வீட்டையோ
விடுதியையோ பார்த்தால் சிறைச்சாலையின் தனிமை பிம்பம் வந்துபோகும். இனிமேல் அது வரா.
பவாவின் அன்பு நிறைந்த இல்லமே ஞாபகம் வரும். பிற்காலத்தில் இதேபோன்றதொரு வீடு
கட்டவும் எண்ணமிருக்கிறது.



படத்தில் பாலுவும் கரிசலும்

இதுவரை பார்த்திராத புதுமையில் நடத்தினார். வீட்டில் முதலில் மாட்டை புக வைக்கும்
சம்பிரதாயமில்லை. மாறாக எழுத்தாளர்கள், எழுத்தை ரசிப்பவர்களால் இல்லம் நிரம்பியிருந்தது
சிகரம் வைத்தது போல தமிழ் சினிமா பெருமைப்படும் பாலுமகேந்திரா வந்திருந்தார்.
அவரை மிக அருகாமையில் சந்தித்ததே கனவினைப்போன்றதொரு தோற்றம் தந்தது.
த.மு.எ.ச வைச் சேர்ந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குழு இயற்றிய தமிழ்
பாடல்களை(சினிமா அல்ல) கிருஷ்ணசாமி பாட அவரைச்சுற்றிலும் அமர்ந்து அனைவரும்
கேட்டுக்கொண்டிருந்தோம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல். முன்னதாக
பாலுமகேந்திராவுக்கு பாடிக்காட்டிக்கொண்டிருந்தபோது அறையில் வெளியிலிருந்து
ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அமர்வில் பாடும்போது தெளிவாக கேட்டேன்.



பாடலின் போது நண்பர்கள், வெண்சட்டையில் ஒய்யாரமாய் நின்றிருப்பவர் பவா.

பாடல் முடிந்ததும் பவா மற்றும் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசினார்கள். அனைவரும்
ஒருமித்த குரலாக பேசியது ஒன்றைத்தான். இவ்வீடானது இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து
பறவைகளுக்கும் வேடந்தாங்களாக அமையும் என்பது. அன்பால் நிறைந்த வீடு. வீடு என்ற
கனவைப்பற்றி பாலு பேசும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் தூர்தர்ஷனில்
வீடு படத்தை பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வந்தன. மனிதர்களில் அபூர்வமானவர் பாலு
அவரது பேச்சும் ரத்தினச்சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது.

நம் இருவரையும் பாலு புகைப்படமெடுத்தால் எப்படியிருக்கும்? கேட்டுப்பாக்கலாமா என்று
அய்யனார் என்னிடம் கேட்டதை உடனடியாக நிராகரித்தேன். இந்த டப்பா லூமிக்சில் அதுவும்
நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் என்றேன்,

அங்கு செல்லும்போது அய்யனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்த ப்லாக்
எழுதறவன், பதிவு எழுதறவன்னு தயவு செய்து யார்கிட்டயும் அறிமுகப்படுத்த வேண்டாம்
என்பது. சாதாரண வாசகன்னு சொல்லு போதும் என்று. ஆனால் சொல்லிவைத்தது போல
இவர் ஒரு ப்லாக்கர் என்றே அறிமுகப்படுத்தினார். க.சீ.சிவக்குமார் என்னவெல்லாம் எழுதுவீர்கள்
என்று கேட்டார் சொல்வதற்கு விழிக்க வேண்டியதாயிருக்கிறது.

மூவாயிரத்தி சொச்சம் விமர்சகர்கள், ரெண்டாயிரத்தி சொச்சம் கவிஞர்கள், ஆயிரத்து சொச்சம்
கந்தசாமிகள், ஐநூத்தி சொச்சம் மொக்கைகள்.... இதெல்லாம் சொல்லவில்லை. சிவாவுக்கு
வலையுலகம் என்ற அபத்தமே தெரியாலிருப்பது சந்தோஷமான விஷயம் என்று அய்யனார்
அறிவுரை கூறினார்.

குமார சம்பவம் படித்துவிட்டீர்களா என்று கேட்டார். வாராந்தர தொடர்களில் ஆர்வமில்லை
ஒரே அமர்வில் படித்தாலும் மூளையில் நிற்காத அளவு நினைவுத்திறன் கொண்டவன் நான்
என்றேன். ஆனால் அவர் எழுதிய சிறுகதைகள் அடங்கிய பிடிஎஃப் கோப்பு
ஒன்றை அவரிடம் காட்டினேன். "அடப்பாவிகளா இதெல்லாம் இன்னும் பத்திரிக்கைக்கே
அனுப்பலியேஉங்க கைக்கு எப்புடிய்யா கெடச்சுது என்றார். இதில் எல்லாமே விகடனில்
வெளிவந்தவையா இருக்கலாம் எவராவது ஒருவர் வாராவாரம் திரட்டி இதுபோன்ற கோப்புகளாக
மாற்றி வெளியிடுவார். இது ஒன்றுமட்டுமல்ல உலகம் முழுக்க வெளிநாடு
வாழ் வாசகர்களுக்கு இம்மாதிரி கோப்புகள் மட்டுமே கிடைக்கும் சாத்தியம். இப்படித்தான் நான்
பல நாவல்கள் படித்தேன். அவருக்கே தெரியாமல் அவரது கதைகள், நேர்காணல்கள் எப்படி
வந்தது என்று தெரியவில்லையாம். இணைய உலகம். கடைசியாக ஒருவேண்டுகோள் விடுத்தார்
எனக்கொரு பிரதி அனுப்ப முடியுமா என்று.

சிவக்குமாரின் சிறுகதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவை அதே சமயம் அரசியலமைப்பு,
அதிகாரம் போன்றவற்றின் மீதான எள்ளல். இந்த எள்ளல் ஒவ்வொரு வரியிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணம்

"அகர முதல எழுத்தெல்லாம் கூடிமுயங்கப் பெறின்(முதல் நான்கெழுத்தின் சேர்க்கை வினோதம்!.)
கிடைக்கக்கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்களத்து விசேஷங்கள் நெர்ந்தது"

"ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் கருப்பு வெள்ளை நிறமுடையது"

கவிதைகளும் அழகியல் உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. விகடனில் தவறவிட்டவர்கள்
கோப்பு வடிவில் வாசிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)

எழுத மனம் நிறைய சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் இத்தோடு முடித்துக்கொள்ளலாம்
என்று நினைக்கிறேன்.

இன்னொரு சந்தோஷமான விஷயம். தடாலடியாக பத்து, பனிரெண்டு என்று நூல் வெளியிடும்
எழுத்தாளர்களுக்கு மத்தியில் இணைய உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.
வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி

15 comments:

ரௌத்ரன் said...

ம்...கொண்டாடிட்டு வந்துருக்கீங்க...ஆச்சர்யமா இருக்கு..கருங்கல்லாலேயே வீடா? பவா வீட்ட பாக்கனும் கதிர்...

அய்யனார் புத்தகம் பத்தி முன்னமே சொன்னார்...ரொம்ப சந்தோஷமா இருந்தது...அடுத்தது நீங்க எப்ப போட போறீங்க :))

☼ வெயிலான் said...

இந்த சொற்வீடும் நன்றாயிருக்கிறது.

கரிசல் குயிலின் பாடல்களை தமுஎச கூட்டங்களில் நானும் கேட்டிருக்கிறேன். குரல் கணீரென்றிருக்கும்.

// இந்த டப்பா லூமிக்சில் அதுவும்
நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் //

:)))

கோபிநாத் said...

ராசா எங்க இருக்க இப்போ!?

நிகழ்ச்சியை பற்றி நன்றாக சொல்லியிருக்கிறாய் ;)

\\குமார சம்பவம் படித்துவிட்டீர்களா \\

குமார சம்பவம் படித்தாச்சி...விகடனில் தான். அது தவிர வேற இருந்த அனுப்பவும்.

\\உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.
வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை \\

ஆகா...சொல்லவேல்ல...வாழ்த்துக்கள் ;)

இங்க தானே வரணும் இருக்கு அந்த ஆளுக்கு ;)))

selventhiran said...

நண்பா, படிக்கவே உவப்பாக இருக்கிறது. க.சீ.சி வந்திருந்தாரா... பிலாக் என்றதும் என்னை ரெண்டு திட்டு திட்டி இருப்பாரே...

கதிர் said...

ரௌத்ரன்
மனம் நிறைந்த கொண்டாட்டமாக இருந்தது ராஜேஷ். வீட்டை முழுமையா படம் எடுக்க முடியல. அதுக்கு முக்கிய காரணம் நம்ம புகைப்பட திறமை. இணைய இணைப்பு சரியா கிடைக்கும்போது எல்லாவற்றையும் அனுப்புகிறேன்.

எத போட? :)

நன்றி வெயிலான். நம் மசினக்குடி அனுபவங்கள் இப்பதான் படிச்சேன். நான் எழுதிருந்தா இத விட நல்லா எழுதிருக்க முடியாது.

கரிசலின் குரல் தனித்துவமானது.

கோபி...

இப்போதைக்கு ஊர்நாட்ல இருக்கேன்.
மாறலாம்.
அனுப்பறேன் மச்சி.

செல்வா...

//நண்பா, படிக்கவே உவப்பாக இருக்கிறது//

ர்ர் ர்ர் ர்ர உட்டுட்டிங்க செல்வா...:))

உங்கள பத்தியும் நிறைய சொன்னார். நள்ளிரவுக்கு மேல உங்களின் அதிகாரத்தின் உரையாடல் குறித்தும் சொன்னார்.

Deepa said...

நல்ல பகிர்வு. கருங்கல்லில் மொத்த வீடா? பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது.

//கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல்//

கண்டிப்பாக. அவரது பாடல்களை இரண்டு மூன்று முறை தான் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் குரலும், அதைக் கேட்ட அனுபவமும் நெஞ்சை விட்டு என்றும் அகலாது.

மாதவராஜ் said...

பவா திரும்ப திரும்ப அழைத்தார். வருவதற்கு இயலாமல் போய்விட்டது. வருத்தமே. வந்திருந்தால் உங்களை, அய்யனார், க.சீ என எல்லோரையும் சந்தித்து இருக்கலாம். ம்....
பகிர்வுக்கு நன்றி. பவாவின் அன்பும், கரிசலில் அமுதமும் தெவிட்டாதவை.

சென்ஷி said...

சந்தோசம்... மகிழ்ச்சி!!

selventhiran said...

யோவ், உவப்புங்கிறதும் தமிழ் வார்த்தைதாம்யா... நா எதையும் உடலே...

sivaramang said...

நல்ல அனுபவப்பதிவு கதிர்.

கருங்கல்வீட்டுப்புகைப்படங்களை வலையேற்றுங்கள். உங்கள் எழுத்துக்கு பின்னர் பவாவின் வீட்டை பார்க்கும் ஆவல் மேலோங்கியிருக்கிறது.

ஆனந்தவிடனின் வாயிலாக அறிமுகமான எழுத்தாளர்களில் க.சீ.சி. எனக்கு மிகவும் ஆப்தர். ஆதிமங்கலத்துவிசேஷங்கள் கோப்பு என் அலுவலக கணினியிலேயே போட்டு வைத்திருக்கிறேன்.

அய்யனார் புத்தகங்கள் குறித்த செய்தி மிகுந்த மகிழ்வைத் தந்தது.

தொடர்ந்து எழுதுங்கள் :) நன்றி.

KARTHIK said...

// வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி //

வந்த பின்னாடி எங்களுக்கும் சொல்லுங்க
கவிதை தவிற :-))

பொன்ஸ்~~Poorna said...

தம்பி,
எனக்கும் ஒரு பிரதி அனுப்ப முடியுமா?

அன்புடன்
பொன்ஸ்

தென்றல் said...

//ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)//

please..my mail id is "vasantham.india@gmail.com"

அய்யனாருக்கு வாழ்த்துக்கள்!

கண்ணகி said...

அன்பினால் நிரைந்த வீடு அழ்கு.புதுமை.

தமிழன்-கறுப்பி... said...

அட இந்த பதிவுக்கு நான் பின்னூட்டம் போடலையா...
ஏதோ பெரிசா பின்னூட்டம் எழுதின நினைவா இருக்கு சரி பறவால்ல வர வர மறதி அதிகமாயிடுச்சு சந்தோசமான பகிர்வு அண்ணே.

:)

அந்த பிரதி எனக்கு அனுப்ப முடியுமா?