எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, July 21, 2009

வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"

சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில்
இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால்
தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏழாம் வகுப்பு படிப்பவர்க்கெல்லாம் நுழைய அனுமதி இல்லையாம். இடதுபக்க மூலையில்தான் சாமுத்திரிகா லட்சணம் பற்றிய புத்தகங்கள் இருப்பதாக செட்டியார்
வீட்டு பையன் சொன்னது நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணின் முடியை
வைத்தே அவளது முகலட்சணங்களைக் கூட கண்டுபிடிக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் இருக்குமிடத்தில்தான் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு
பிறகு பத்தாம் வகுப்பு படிக்கையில் அரசு நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கத்தினராக சேர்ந்தபோது இனித்தது, ஆனால் முக்கியமாக நான் தேடிய புத்தகங்கள் எந்த மூலையில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதைய நூலகம் வடக்கநந்தல் அரசுப்பள்ளிக்கு
அருகில் இருந்தது. நூலகத்தினுள் எப்போதும் காற்றாடியின் சப்தம் மட்டுமே கேட்கும். இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் பஸ்நிலையம் பின்புறம், கார் ஸ்டேண்ட் என பரபரப்பான இடத்தில் இருப்பதால் அமைதியைக் காணவில்லை. முக்கியமாக
புத்தகங்கள் அடுக்கிய அறையினுள் அந்துருண்டையுடன் கூடிய புத்தகங்களின் வாசனை அறவே போய் ப்ளீச்சின் பவுடர் நாறல் அடித்தது.

இப்போது நூலகத்தினுள் நுழையும்போது கூட அங்கமுத்து சக்கரையின் மீதான
பயத்தினால் சற்றே பின்வாங்கினேன். ஏனென்றால் உறுப்பினராக சேரும்போது
அடம்பிடித்து சேர்ந்த நான் நாளடைவில் புத்தகங்கள் திருப்பித்தராமல் டபாய்க்கத்துவங்கினேன். சிலநாள் என் பின்னாலேயே சுற்றினார் அ.மு சக்கரை.
நான் பிடிபடவேயில்லை. கல்லூரி, மறுபடி கல்லூரி, வெளிநாடு என்று சுற்றி விட்டு இப்போழுது வந்தால் இப்போழுதும் அதே நூலகரே இருப்பாரோ, அடையாளம் கண்டுகொள்வாரோ என்று பயம் அதனாலே இங்கு வந்தநாள் முதல் நூலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சென்ற வார இறுதிக்கொண்டாட்டத்தின்
உச்சமாக எனது டயர் பஞ்சராகியது அதை நான்கு மைல் தள்ளி வந்து நல்லாத்தூர் என்னுமிடத்தில் ஒட்டக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். சரியாக பஸ்நிறுத்தத்திற்கு
எதிரே அமைந்துள்ளது அந்தக் கடை. இரண்டு புளியமரங்களுக்கிடையில் ஒரு கடை
அதற்கு ஒரு நிறுத்தம். சிகரெட் கூட கிடைக்காத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெந்தபடி கல்திண்டில் அமர்ந்திருந்தேன். ஒரு பேருந்து வந்தது. அதில்
இருந்து ஒருவர் இறங்கினார். சில முகங்களைப் பார்க்கும்போது பழகிய முகம் ஆனால்
மறந்து போயிருக்கும் ஞாபகத்தில் வராதவரை மூளையை போட்டு கசக்கிப்போட்டு பிழிந்தெடுத்து வாட்டிக்கொண்டிருக்கும்போது “சக்கர சார் என்ன பென்சன் நாளா...”
என்று கேட்டபோதுதான் எனக்கு உரைத்தது, அது பலவருடங்களாக என்னை
வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் அங்கமுத்து சக்கரை என்ற வடக்கநந்தல் சிறப்புநிலை பேரூராட்சியில் துணை நூலகத்தின் நூலகர் என்று. உடனே பயமும் பிடித்துக்கொண்டது என்னை ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டால்? திருட்டுப்பயலே உன்னால நான் எவ்ளோ அலைஞ்சேன் தெரியுமா..., நீ அந்த புக்கு திரும்பக்குடுக்காத பையன் தான?
தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...
இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதுவும்
சொல்லவில்லை. என்னை அடையாளம் தெரியவில்லை. பெரிய சந்தோஷம்.

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை



சாருவின் எழுத்துத் தொனிக்கும் நாமக்கல் கவிஞரின் எழுத்துத் தொனிக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால்தான் சாருவின் வலைப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். இரண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை வாசிக்கும்போது உணர முடிந்தது. குறிப்பாக கட்டை மீசையுடன் கம்பீரமான தோற்றம், புலவன் வறுமை (இதைப்பற்றி பெரிய அத்தியாயமே உள்ளது), இரண்டு திருமணங்கள், தன் மனைவியை தெய்வத்திற்கு சமமான ஒன்றாக முன்வைத்து அவர் எழுதும் பல உதாரணங்களுடன் சில பக்கங்கள், புலவரின் இல்லறவாழ்வு வறுமையால் வாடியபோது அவரது நண்பர்களே உதவுவது. குறிப்பாக உனது எழுத்துவேலையை நீ தொடர்ந்து செய் உனது
குடும்பம் பற்றி கவலைப்படாதே அதற்கான நிரந்தர வருமானத்தை உருவாக்கித்தர
நாங்கள் இருக்கிறோம் என. அதிலும் பல சிக்கல்கள் நிலம் எழுதித்தர முடிவு செய்யும்
நண்பர் ஒருவர் இறந்துவிடுவது, அல்லது எதோவொரு காரணத்தால் தடைபடுவது என.
கடைசியாக பாரதியார் மேல் கொண்டிருந்த அபரிதமான அன்பு. அவரை நேரில் சந்திக்க நடந்தே செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

நாமக்கல் கவிஞரின் இளமைக்காலத்தை விவரிக்கும் இடங்களில் வெள்ளைப்படம்
பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. குறிப்பாக அவரது ஓவியத்திறமை. காவல்
துறை ஏட்டான அவரது தந்தையோ படம் வரையும் தொழில் சுத்தமாக பிடிக்கவில்லை.
தன் மகன் தன்னைப்போலவே காவல்துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் செல்லமகள் இறந்து போகிறாள் அவளுடைய
புகைப்படம் கூட ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது மிகச்சிறிய வயதில் எடுத்தது.
நான் சொல்லும் குறிப்புகளை வைத்து படம் வரைந்து தரமுடியுமா எனக்கேட்கிறார். அதுவரை தன் ஓவியத்திறமைக்கு எவருமே ஆதரவாக இல்லை என்ற குறை அவருக்கிருந்தது அதனால் உடனே சம்மதிக்கிறார். புகைப்படத்தை வாங்கிக்கொண்டு
அவர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டு பதினைந்து நாளில் வரைந்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். தன் திறமைகள் அனைத்தையும் கொட்டி பார்த்துப் பார்த்து
செதுக்கி அதிகாரியிடம் காட்டுகிறார் அவர் சலனமேயில்லாமல் வெகுநேரம்
அமைதியாக பார்த்துவிட்டு புலவரிடம் கண்களில் நீர் கசிய சொல்கிறார். என் மகளை
எனக்கு மீட்டுத்தந்து விட்டீர்கள் என அணைத்துக்கொள்கிறார்.

அதுவரை ஓவியத்திற்கு விலையாக ஐம்பது ரூபாய் கொடுப்பார் என்று எண்ணியிருந்த புலவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தன் பணப்பையில் இருந்து
எண்ணாமலேயே அள்ளிக்கொடுக்கிறார். அதில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேலாக
பணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய பணம்.

புலவர் வாழ்நாள் முழுவது எதோவொரு குழப்பத்திலேயே வாழ்ந்து விட்டதாகவே வாசிக்கையில் தெரிகிறது. அல்லது வாழ்நாள் முழுவதும் மற்றவரின் விருப்பத்திற்காகவே வாந்ததுபோல என்று சொல்லலாம். தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றி தன் தந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பது. தன் திருமணம், அசைவத்தை விடவேண்டும் என்று நான்கைந்து முறை சபதமெடுத்து அவற்றில் தோல்வியடைவது, இல்லறவாழ்வில் வறுமையில் வாடுகையில் தன் தந்தை சொல்படி போலிஸ் உத்தியோகத்திற்கு சென்றிருந்தால் இந்த வருமை எட்டிப்பார்த்திருக்காது என வருந்துவது என நிறைய சொல்லலாம்.

இவரின் இளமைக்காலம் மிகுந்த சுவாரசியமுள்ளதாகவே தெரிகிறது. ஒருபாடம் தவிர
மற்ற எல்லாப்பாடங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருந்தார். அது கணிதம். இவருக்கு கணிதம் கற்பிக்க பல பிரயத்தனங்கள் செய்தும் பலன் அளிக்காமல் போகிறது. சிறந்த கால்பந்து வீரராகவும் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் மூலை முடுக்கு ஒன்றுவிடாமல் சுத்தி வந்திருக்கிறார். ஒரு பயணத்திற்கு குறைந்தது ஆறுமாதங்கள். பாகிஸ்தானின் பெஷாவர் வரை சென்று வந்திருக்கிறார். அதுகுறித்த விவரமாக புத்தகத்தில் இடப்பெற்றிருக்கிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கும் இப்பகுதியை இருமுறை வாசித்தேன்.

ராஜாஜி, வா.வே.சு ஐயர், பெரியார், காந்தி, பாரதி, பாரதிதாசன், என்று
அனைவருடனும் மிகுந்த நட்புடன் பழகி இருந்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரசு வளர முக்கிய காரணிகளுல் ஒன்றாக இருந்திருக்கிறார். இவரது மேடைப்பேச்சினைக் காண
மக்கள் திரண்டிருக்கின்றனர். காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளர்களில் முதன்மையான ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.

பாரதியின் மேல் இவருக்கு ஒரு மிகப்பெரிய அபிமானம் இருந்திருக்கிறது. வெறி என்று
கூட சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் மேல் பற்று இருந்திருக்கிறது. அவரைக்கான புதுச்சேரிக்கு பலமுறை சென்றும் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார். ஒருமுறை தேவகோட்டைக்கு நண்பருடன் சென்றிருக்கும் புலவருக்கு பாரதி இங்கே வந்திருக்கிறார்
என தகவல் கிடைக்கிறது. மேலும் அதிகாலையில் அவர் கிளம்பிவிடுவார் என்றும்
தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே இரவு நெருங்கியிருந்தது ஆனால் சற்றும் யோசிக்காமல் அவரைக்காண புறப்படுகிறார். மாட்டுவண்டி கூட ஏற்பாடு செய்யாமல் வயல்வெளிகளில் சுற்றி நடந்தே பல மைல்கள் கடந்து செல்கிறார். கடைசியில் அங்கு
சென்றடையும்போது பாரதியார் நண்பர்களுடன் உலாத்தப்போயிருக்கிறார் என்று சொல்கின்றனர் உடனே அவரைத் தேடி அலைகிறார். இறுதியாக கண்டுகொள்கிறார்.
ஊருக்கு வெளியே காட்டில் நிலவொளியின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும்போது எனது உடல் நடுங்கியது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் தான் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என்று குறிப்பிடுகிறார்.

தலையில் முண்டாசு கட்டி கோட் அணிந்திருந்தார் பாரதி. நிலவொளியின் கீழ் அவர்
ஒரு ஓவியம் போல இருந்தார். அவரைக்காண்கையில் எனக்கு இரண்டு ஆசைகள்
இருந்தன. ஒன்று அவரை ஓவியம் தீட்டுவது, இரண்டாவது அவர்பாடக்கேட்பது.
தன்னை அறிமுகப்பத்துக்கொள்கிறார். பாரதி முன்பே இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்
ஏனெனில் ஓவியத்திறைக்கு சான்றாக அவர் டெல்ல்லி வரை சென்று பதக்கம் பெற்று
திரும்பியிருந்தார். தானும் ஒரு கவி என்று சொல்லும்போது மரமதிர சிரித்த பாரதி
“நீர் ஒரு காவியக்கவிஞர் என்று சொல்லும்” என்று சிரித்தாராம். பாரதியின்
முன்னிலையில் தான் இயற்றியிருந்த பாடல்களை பாடினார் கவிஞர்.

பாடி முடித்ததும் வெகுநேரம் கைதட்டினாராம் பாரதி. பின்னர் வெகுநேரம் சுதந்திரம் குறித்தும், கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விடியல்காலை மூன்று மணி ஆகியது. ஆனால் தூக்கத்தின் அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தெரியவில்லை. புறப்படுகையில் பாரதியாரிடம் பாடும்படி கேட்டுக்கொண்டார் கவிஞர். கேட்கும்போதெல்லாம்
பாடமுடியாது எனக்குத்தோன்றும்போதுதான் பாடமுடியும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த கவிஞர் ஓவியம் வரையவேண்டும் என்கிறார். அதற்கான
நேரம் வரும் என்று சொல்கிறார்.

பாரதி அதிகாலையில் பயணமாகி வேறு ஒரு இடம் செல்லவேண்டும் ஆகவே
கிளம்பலாம் நண்பர்களே என்று கிளம்புகின்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாரதி
தூங்குகிறார் அவருக்கு அருகில் கவிஞர். அதிகாலை நான்கு மணிக்கு அருகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த கவிஞரை எழுப்பி “பாடல் வேண்டுமென்று கேட்டாயே
இப்பொழுது இப்பொழுது பாடட்டுமா என்று கேட்கிறார். சந்தோஷமிகுதியில் தலையாட்ட பாடத்துவங்குகிறார்.

கம்பீரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார் பாரதியார். அங்கே உறங்கியவர்கள் எழுந்து உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கின்றனர். கவிஞர் கண்களை மூடி பாடலில் லயிக்கிறார். தொடர்ந்து வெகுநேரம் பாடிக்கொண்டே இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர்கள் பயண நேரம் தாண்டிப்போனதால் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவரோ நிறுத்துவதாக தெரியவில்லை. இறுதியில் கண்களைத்திறந்து பாடலை நிறுத்துகிறார். இப்போழுது திருப்தியா என்றவாறு புறப்படுகிறார் பாரதி. இவ்வாறு தான் பாரதியை சந்தித்ததை எழுதியிருக்கிறார் நாமக்கல் கவிஞர்.

நூலில் பல இடங்களில் சில வார்த்தைகள் புரியவில்லை. குறிப்பாக “அகஸ்மாத்தாக” என்று பல இடங்களில் உள்ளது. நாமக்கல் பகுதி நகராட்சி அலுவலகத்தில் இன்றும் அவரது ஓவியங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நாமக்கல் பகுதியில் உள்ளவர் கண்டிருந்தால் எப்படியிருக்கிறது என்று தெரியப்படுத்தலாம்.

அந்தக்கால கல்வி முறையில் படித்ததை விவரிக்கும்போது “ஐந்தாவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” “நான்காவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” என்று வருகிறது அது ஐந்தாம் வகுப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.


“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” இந்த வரிகளை எழுதியது பாரதிதான்
என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதியது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
அற்புதமான வரிகள். பாரதியின் மறைவுக்குப்பின் அவரின் வெற்றிடத்தை இராமலிங்கம் அவர்களால் தான் நிரப்ப முடிந்தது என்று பல்வேறு சுதந்திர தியாகிகள் பல தருணங்களில் கூறியதை பதிவித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நான் எதையும் சாதிக்கவில்லை என்றும் பதிவித்துள்ளார்.

அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. அந்தக்காலத்தில் எழுதியதால் சலிப்பு தரும் நடையில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். சாதாரண பேச்சு வழக்கிலேயே இதை எழுதியிருப்பதால் எந்தவித தடையும் இல்லாமல் சரளமாக வாசிக்க முடிகிறது.

எப்படி எழுதினாலும் எழுத்து நடை வாசிக்க சங்கடமில்லாமல் செல்வது எழுதவரவில்லை.
வெறும் தகவல்களின் தொகுப்பு போலதான் வருகிறது எனக்கு. இந்த அருமையான
புத்தகத்தை வெறும் தகவல்களின் தொகுப்பாகவே தருகிறேன்.
-
பி.கு: ஆரம்பத்தில் நூலக அங்கத்தினராக சேர வெறும் முப்பத்தி ஐந்தே ரூபாய்தான் கட்டணம். வருடத்திற்கு ஐந்து ரூபாய் சந்தா தொகை. இப்படி குறைந்த கட்டணத்தில் எத்தனைபேர் அங்கத்தினராக இருப்பார்கள் என்றால் நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். வாசிக்கும் பழக்கம் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை
என்பது வேதனைப்படவேண்டிய விஷயம்.

உள்ளே நுழைந்த உடன் முதலில் நான் கண்டெடுத்தது “மறைவாய் சொன்ன கதைகள்” வெகுநாளாக தேடிக் கொண்டிருந்த நூல். (அண்ணாச்சி வீட்டில் ஆட்டையை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் சிக்கவில்லை) அதை முதலில் எடுத்து மேசையில் வைத்ததும் பெண் நூலகர் ஒரு தினுசாக பார்த்தார்.

சிறப்பான பல புத்தகங்கள் மிகச்சிறிய நூலகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு புத்தகங்கள் அதிகமாக கிடைக்கின்றன. தொடர்ச்சியாக, மூன்று விரல், சுஜாதாவின் சில்வியா ப்ளாத், தாமரையின் சிறுகதை தொகுப்பு
என எடுத்து வந்து வாசித்தேன்.

எல்லா அரசு அலுவலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?

ஒருவேளை விடுமுறை நாளில் அனைவரும் பயபெறும் வகையில் இருக்குமா என்றால் அதுவுமில்லை அன்றுதான் எவருமே உள்ளே நுழைவதில்லை.

6 comments:

ரௌத்ரன் said...

இந்த பதிவை ஒரு 10 நாளைக்கு முன்பே இட்டிருந்தால் எனக்கு புத்தகம் கிடைத்திருக்கும்..உங்களுக்கு வெ.ரா வின் புகைப்படம் கிடைத்திருக்கும்...சமீபத்தில் விடுப்பில் சென்று வந்த என் 'கொலிக்கி' நாமக்கல் தான்...

நூலகத்தில் நானும் நிறைய ஆட்டை போட்டதுண்டு..இங்கு வருவதற்கு முன்பு கூட நூலக பெண் இறுதியாக எடுத்த புத்தகம் குறித்து கேட்டாள்..என் ஊர் நூலகர் ஒரு சப்ஸ்டியூட்டை ஏற்பாடு செய்து கொண்டு வீட்டிலேயே இருந்து சம்பாதிக்கிறார்...யாருக்கு தெரியும் யார் நூலகர் என்று...முக்கிய புத்தகக் கடையில் கூட கிடைக்காத புத்தகங்களை என் ஊர் நூலகத்தில் பார்த்திருக்கிறேன்..அவை நூலக முத்திரை இட மட்டுமே பிரிக்கப்பட்டவையாக இருக்கும்.பெரும்பாலும் அதை முதன்முதலாக எடுப்பதே நானாகத்தான் இருக்கும்...அடுத்து நூலகத்திற்கு வருபவர்களை அவதானிப்பதும் என் பொழுது போக்கு..எல்லோருமே காமிக்ஸ்,கிரைம்,சாண்டில்யன்,ரமனிச்சந்திரன் என்ற தொடக்கம் கிடைத்தவர்களாகவே இருக்கிறார்கள்.ஆனால் அதை தாண்டி வெளியில் வராமல் போய்விடுகிறார்கள்...புத்தகம் படிப்பவன் என்ற முறையில் என் வீட்டில் என்னை ஜந்தை பார்ப்பது போல் தான் பார்ப்பார்கள்...காசை கரியாக்குகிறேன் என திட்டுவார்கள்..இதற்கு யாரை சொல்லி எதை நோவது :)

//தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல//

:)

ஒரு சிறிய சந்தேகம்.இப்பதிவை எழுத எவ்வளவு நேரம் எடுத்து கொண்டீர்கள்?

அகஸ்மாத்-ஏதேச்சை,எப்பொழுதாவது.

நடை நன்றாக இருக்கிறது கதிர் :)

பிச்சைப்பாத்திரம் said...

//“அகஸ்மாத்தாக”//

இன்னும் கூட புழக்கத்தில் உள்ள சொல்தான் இது. 'தற்செயலாக' என்று அர்த்தம்.

சாருவின் பரிந்துரையின் பேரில்தான் நானும் 'என் கதை'யை வாசித்தேன். அந்தக் கால எழுத்து முறையிலிருந்து விலகி சுவாரசியமானதொரு நடையைக் கொண்டிருந்தது. நிச்சயம் படிக்க வேண்டிய நூல்தான்.

KARTHIK said...

// மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...
இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.//

தல இதெல்லாம் வெரும் மனப்பிராந்தி.

இப்போ வரைக்கும் நூலம் போயி படிக்குர பழக்கம் இல்லை.

நல்ல விமர்சனம்.

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி ...

ஆமா நானும் பல தடவை இப்படி ஒளிஞ்சு திரிஞ்சிருக்கேன்.இதுக்கு பெரும்பாலும் எடுத்த புத்தகத்தை வாசிச்சிட்டு எங்கயாவது மறந்து போய் விட்டுடறதுதான் காரணமா இருந்திருக்கு.. அப்புறம் திருப்பி எங்க இருந்து குடுக்க அந்த புத்தகத்தை.

கதிர் said...

பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்,

இந்த பதிவை எழுத இரண்டு வாரமாச்சு. எழுதலாம்னு ஆரம்பிச்சு முதல் பத்தியிலே நிறுத்திட்டேன். எதாச்சும் எழுதணுமேன்னு மீதிய உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போது எழுதினேன்.

சுரேஷ் கண்ணன்

இன்னும் கூட புழக்கத்தில் உள்ள சொல்தான் ஆனால் யாரும் உபயோகப்படுத்தறமாதிரி தெரியல.
தமிழ்ச்சொல்தானா இதுன்னு கூட தெரியல.

நன்றி

கார்த்திக்,

உங்க லெவலுக்கு நீங்க உள்ளூர் நூலகமெல்லாம் போய் படிக்கலாமா...

தமிழன் கறுப்பி

நன்றி

காயத்ரி சித்தார்த் said...

//எல்லா அரசு நூலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?
//

எல்லா அரசு 'அலுவலகங்களும்' நு சொல்ல வந்தீங்களா? விடுமுறை நாள்ல உபயோகமா இருக்கட்டுமேன்னு வெச்சிருப்பாங்கன்னு தான் நானும் நினைக்கறேன். ஈரோட்ல மட்டும் 4 லைப்ரரில மெம்பரா இருக்கேன் நான். (ஈரோட்ல அத்தனை லைப்ரரி இருக்கான்னு கேக்கப்படாது!) ஞாயிறுகள்ல கூட்டம் இருக்கத்தான் செய்யுது. வயசானவங்க தினமுமே வர்றாங்க. படிக்க தான் வர்றாங்களா.. எங்காச்சும் போகனுமேன்னு வர்றாங்களான்றது என்னோட நீண்ட நாள் சந்தேகம். :)