எல்லையற்ற அன்பு கொள்வோம்
Friday, January 02, 2009
அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா
பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய
காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.
கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை
நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.
நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.
மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்
வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்
சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான
பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.
எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்
வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்
அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்
போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை
திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்
ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்
பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை
கேட்டிருப்பேன் என்றே தெரியாது.
அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"
பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்
சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு
கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும்
இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே
சரியானதாக இருக்கும்.
இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.
"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"
''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?
பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!
இப்படி சொல்லியிருந்தார்
நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று
இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து
பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை
விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்
வழியில் நான் கண்டவையே. கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்
கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை
பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை
கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு
செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என
அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்
நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக
நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்
திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.
அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த
ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.
ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்
இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து
பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு
மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி
வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ
பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்
முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட
வாய்ப்பிருக்கிறது.
ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்
என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்
கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்
அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன.
ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்
ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.
நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்
கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.
அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த
மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து
பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்
பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.
சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்
உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.
அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி
கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி
அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய
மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்
உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே
விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி
திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று
தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே
அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.
அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை
நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே
எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,
ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.
எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
பட..பட..ன்னு அடிச்சி தள்ளிட்டியா!!!!? ;)))
எல்லாம் அந்த பாடல் செய்த லீலை...
//இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.//
வெகு சிலருக்கே இப்படி சில குணங்கள் வாய்க்கும். சிறுவயதில் ஒரு பாட்டிக்கு தண்ணீர் கொடுத்ததும், தெருவோர மனிதர்களிடம் நேசம் பாராட்டி சமமாக தம்மடிப்பதும் அபூர்வமான வியசங்கள்.
பாராட்டுகள் !
which song is this ?
it is great you have talked about the destitutes and the mentally ill. sadly in india just as in everything else,ther is enormous callousness.
www.globalmentalhealth.org/articles.php?
if you are interested you can chek out this website where some of the issues you have mentioned are talked about.
i am sorry at the moment i dont have tamil fonts.
உண்மையிலேயே இதயத்தைத் தொடும் வரிகள் தம்பி. உங்களின் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் உன் அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டே போக வேண்டியதுதானே :)
ஆனாலும் எளிய மனிதர்களிடம் உடனே பழகிவிடும் உன் இயல்பு எனக்கு பிடித்தமானது..
/"மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"/
இதை எழுதினது நாந்தான்யா வென்று :)
கோபி
எது எதுவோ ஞாபகம் வந்துச்சு அப்டியே எழுதி வெச்சுட்டேன்.
கல்வெட்டு,
இரக்கப்படறத தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால.
யாத்ரீகன்
ஓம் சிவ ஓம் எனத்தொடங்கும் பாடல்தான் நான் குறிப்பிடுவது. பாடலின் முதல்வரியை குறிப்பிட தவறி விட்டேன். மன்னிக்கவும்.
சீதா,
பகிர்வுக்கு நன்றி.
//ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.
//
உதவி வேண்டி நிற்கும் மனிதர்கள் பிச்சை எடுக்கும் சூழலில் இருந்த மனிதர்கள் பலரை பார்த்தப்போதெல்லாம் என் நினைவில் வந்து நிற்கும் இதே எண்ணம்! உறவுகள் அல்லது நட்புகள் ஒருவர் கூட இல்லாத சூழலைத்தான் நினைக்கதோன்றும்!
எப்பொழுதுமே மனதை பாதிக்கும் கேரக்டர்கள் :(
கதிரூ,
வர வர ரொம்ப யோசிக்கிற ராசா.. ஆனா நல்லா எழுதி இருக்கே.. கல்வெட்டு சொன்ன மாதிரி ரொம்ப சிலருக்கே இது மாதிரியான இயல்பு வரும்..
இவங்களை காண்பித்து பூச்சாண்டி என்று சிறுவயது முதலே பயமுறுத்தல் தொடங்கி விடுவதாலோ என்னவோ இவர்களிடம் பெரும்பாலானோர் ஒரு வித பயத்துடன் விலகியே இருக்கின்றனர்.
//கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.//
:( :( :(
ஓம் சிவா பாட்டு சமுஸ்கிரதமா இருக்கே, அதுல எங்க தமிழ் வருது?
வேற version இருக்கோ?
//பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது///
ஹ்ம்! :(
//அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா //
இது டமில் இல்லியாம், இப்பதான் தெரிஞ்சுது ;) ஹி ஹி.
சுல்தான், அய்யனார், ஆயில்யன், தோழி தூயா, சந்தோஷ் அண்ணன், சர்வேசன் அனைவருக்கும் நன்றிகள் பல.
சர்வேசர் அய்யா
இசைக்கு மொழி முக்கியமா அந்த இடத்துல சமுஸ்கிரதத்த தவிர்த்து வேற மொழி இருந்தாலும் ரசிக்கலாம். தவறில்லை.
Interesting pathivu. Anda brammaanda kOdi paadal kOdaana kOdi makkaLai bakthi paravasaththil aazththi irukkirathu.
இதில் ஒண்ணும் பெரிய சமஸ்கிருதம் இல்லை. சிவ/லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து பிச்சு பிச்சு எடுத்து எழுதின மாறி இருக்கு
மிக நல்ல பதிவு தம்பி.. உங்களின் இளகிய மனம் எல்லோருக்கும் வராது. வாழ்த்துக்கள்..
தம்பி, எப்படி இருக்கிறீர்கள் ? படித்த போது மனசு கனத்தது. பிரச்சினை என்னவென்றால் சிலர் அத்துமீறி நடந்து கொள்வதால் மற்றவர்களின் மீது இயல்பாக வரக்கூடிய இரக்கம் கூட உள்ளுக்குள் ஓடி மறைந்து கொள்கிறது. முதன் முதலாக உங்கள் பதிவைப் படிக்கிறேன். முதல் பதிவில் உங்கள் பிளாக் நினைவில் நின்று விட்டது.
வாழ்த்துக்கள்
நல்ல மனது!!!
வாழ்த்துக்கள்!11
தேவா...
என்னை நாலு பேர் நீங்க ரொம்ப நல்லவர், நல்ல மனது உங்களுக்கு சொல்றது உண்மையிலே கூச்சமா இருக்கு. இனிமேல் சுயவிவரக்குறிப்புகள தவிர்க்கலாம்னு இருக்கேன். நீங்கலாம் சொல்ற அளவுக்கு நல்லவன்லாம் நான் இல்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.
பின்னூட்டமிட்ட விவேக், அனானி, கேபிள் சங்கர், தங்கவேல் மாணிக்கம், தேவன் மயம் என அனைவருக்கும் நன்றி.
ஒரு பாட்டைக்கேட்டதும் மனசு எதையெல்லாம் நினைக்கிதோ
அதோடயே போய் எழுதியிருக்கீங்க! நல்ல உணர்வு..!
ஆனா..
நீங்க ரொம்ப கெட்டவரு!
(ஆமா..நல்லவருன்னு சொன்னாத்தான் உங்களுக்கு சங்கட்டமா இருக்கே...! )
:))))))
கதிரு,
வலையுலகத்திலே ரசிக்கிற எழுத்துக்களில் ஒன்னோடதும் ஒன்னுப்பா...
Stand and Claps... :)
எங்கே ரொம்ப நாளாப் பதிவுப் பக்கம் ஆளைக் காணோமேன்னு வந்தேன்.விமர்சனம்ன்னு தெரிஞ்சதும் பதிவில் பார்வை செல்லவில்லை.நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்.
//வெகு சிலருக்கே இப்படி சில குணங்கள் வாய்க்கும். //
I agree. Great, thambee!
இந்த மனதும் இயல்பும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...
எழுத்து வழக்கம் போல...!
நீங்க இங்க சொன்ன உணர்வுகள் காலங்காலமாக எனக்குள்ளும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்குது... அது உணர்வுகளாக மட்டுமே இருப்பது தான் வேதனை அளிக்குது... ரயிலில் போகும் போது சில சிரார்கள், நாம சாப்டு அசுத்தும் செய்யும் ரயில் பெட்டியை சுத்தம் செய்ய வருவாங்க.. ஆந்திராவில சில சின்ன பொண்ணுக சப்பாத்தி கல், வளையல் ஸ்டாண்டு வித்துட்டு வருவாங்க..கொஞ்சம் ஸ்டைலா தான் ட்ரெஸ் செய்து இருப்பாங்க... சென்ற முறை அவர்களை வைத்து நம் தமிழ் சகோதரர்கள் செய்த கேலியும் கிண்டலும் இங்கு சொல்ல முடியாது ..அடிப்படை உணர்வற்றவர்கள்.. ம்ம்ம்
இந்த சாலையோர பணியாளர்களில், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் நிலை... ஹ்ம்ம்ம்.. இன்னொரு முறை அதை தனிப்பதிவாக பதிவிடுகிறேன்...
பதிவு நல்லா இருக்கு தம்பி, வாழ்த்துக்கள்
சுரேகா
சங்கட்டமா இல்லிங்க, வெறும் எழுத்தை வெச்சுகிட்டு இவன் ரொம்ப நல்லவன் போலன்னு சொல்றது எல்லாம் அந்த நேர பிரதிபலிப்பு மட்டும்தான்.
வைகை ராம்
உனக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.
ராஜநடராஜன், தெகா, தமிழன் கறுப்பி, நன்றி
மங்கை
உங்களின் ஆதங்கம் புரிகிறது. நான்கு வரி வலையில் எழுதி நல்ல பெயர் வாங்குவதை விட நம்மால் என்ன செய்யமுடியும். முடிந்தால் நான்கு வார்த்தை அன்பாக பேசலாம் தேவையான உதவிகளை செய்யலாம். நேற்றுகூட பாண்டிச்சேரி வரை சென்றிருந்தேன். வழியில் மூன்று சித்தம் கலங்கியவர்களைச் சந்தித்தேன். பேருந்திற்குள் சகல பாதுகாப்பு கவசங்களை அணிந்து குளிரை விரட்டுபவர்களுக்கு மத்தியில் நைந்துபோன துணியை மேலுக்கு சுற்றியுருக்கும் அவன். சுயமழிந்த அவனுக்கு தெரிந்த ஒரே மொழி பிச்சை எடுப்பதுதான் ஒரே தெரிந்த மொழி. ஒரு ஜான் வயிறும் இல்லாவிட்டால் உலக மனிதர்களையும் உதாசீனப்படுத்திவிட்டு தனியுலகம் சென்றுவிடுவார்கள் போல.
உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
//இரக்கப்படறத தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால...//
அதைக்கூட என்ன மாதிரி ஆளுக செய்றோமா என்ன?
காலத் திரிகால நேத்ரத் த்ரிநேத்ர.. பாடல் என்னேரமும் காதில் ஒலிக்கிறது..
பதிவு அருமை தம்பி. வளர்ந்துவரும் எளக்கியவாதின்னா சும்மாவா?
Post a Comment