எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, May 26, 2008

அங்கே இப்ப என்ன நேரம்

நண்பர் பி.கே.பி அவர்களின் வலைப்பக்கத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது நிறைய
மென்நூல் கோப்புகள் கண்டேன். முன்பே சுஜாதா தொடங்கி ஜெயமோகன், தமிழில்
லினக்ஸ், ஜாவா வரை பலகோப்புகள் சேமித்து வைத்திருந்தாலும் நான்காவது கொலை
தவிர்த்து மற்ற எதையும் முழுதாக வாசிக்கவில்லை. நா.கொ கூட நகைச்சுவைக்காக
படித்தது. அதை வாசிக்கும்போது அலுவலகத்தில் எவ்வளவு கட்டுப்படுத்தியும் பலர்
முன்னிலையில் காரணமில்லாமல் சிரித்தது கூட நினைவுக்கு வருகிறது. இறுக்கமான
அலுவலக சூழலை இந்த நகைச்சுவை எழுத்துக்கள் எளிதாக்கிவிட்டன. திரையில்
கண்கொட்டாமல் வாசித்துக்கொண்டிருக்கும்போது யாராவது தொலைபேசியில்
அழைத்தாலோ, அருகிலே நின்று எதாவது கேள்வி கேட்டாலோ தன்னிச்சையாக
தமிழிலே பதில் அளித்திருக்கிறேன். கேட்பவர் "ங்கே" என்று முழிப்பது கண்டு இயல்புநிலைக்கு திரும்பவேண்டும். இதற்காகவே நான் அலுவலகத்தில் தமிழ்மணம்
தவிர்த்து எதையும் வாசிப்பதில்லை.

"அப்ஸராவுக்கு இரண்டு வயது.
ஏற்கனவே பழக்கமான மெட்டுக்கு தன்னுடைய
சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடுகிறாள்.
நேற்று சந்திரனைப் பற்றிய ஒரு
பாடல் செய்தாள்.
அந்தப் பாடலில் நானும் இருந்தேன்.
அதுபோல ஒரு கவிதையை
என் வாழ்நாளில் கேட்டதில்லை.
அதுபோல ஒரு பரிசைப் பெற்றதுமில்லை.
இந்த புத்தகம் அப்ஸராவுக்கு"


இந்த ஆரம்ப வரிகளே என்னை படிக்கத் தூண்டியது.

எப்போது வீட்டுக்கு தொலைபேசினாலும் அம்மா தவறாமல் கேட்கும் முதல் கேள்வி
அங்க இப்ப என்னடா நேரம் என்பதுதான். சலிக்காமல் நானும் பதில் சொல்வதை
இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

எதிர்பாராத நிகழ்வுகள்தான் ஆச்சரியத்தை அளிக்கும். அதேபோல அ.முத்துலிங்கம்
அவர்களின் "அங்கே இப்ப என்ன நேரம்" என்ற கட்டுரைத் தொகுப்பை வாசிக்க
ஆரம்பித்ததும் சுற்றம் மறந்து போனது. முன்பு நாஞ்சில் நாடனின் கட்டுரைத்
தொகுப்பைப் பற்றி எழுதியபோது குறிப்பிட்ட ஆனால் சற்றே வித்தியாசமான
மொழி அழகில் படைப்பட்டதுதான் "அங்கே இப்ப என்ன நேரம். 343 பக்கங்கள்
கொண்ட இந்த பி.டி.எப் வடிவ புத்தகத்தை இரண்டே அமர்வில் வாசித்துமுடித்தது
உச்சகட்ட சாதனை. படித்து முடித்த இரண்டு நாட்களுக்கு என் கண்கள்
விஜயகாந்த் படத்தின் இறுதி சண்டைக்காட்சியின் போது அவர் கண் எப்படி
இருக்குமோ அதுபோல ஆகிவிட்டது.

பொதுவாக ஈழத்து எழுத்துக்களை இதற்கு முன்பு இணையத்தில் பல இடங்களில்
படித்தாலும் சில வார்த்தைகள்(இந்த சில என்பது கணிசமாக தேறும்)விளங்குவதில்லை
அதனால் வாசிக்க சோம்பல் படுவதுண்டு. உதாரணத்திற்கு கீழே சில வார்த்தைகள். இவற்றிற்கு ஓரளவு நானே அர்த்தப்படுத்திக்கொண்டாலும் உண்மையான அர்த்தம்
வேறாக இருக்கலாம்.

சிருங்காரநாரி - இடுப்புன்னு நினைக்கிறேன்
சீமைக்கிளுவை - முள்ளா இருக்குமோ?
கதிரை - நாற்காலி, முக்காலி, இருக்கை, மேசை இதுல எதோ ஒண்ணுதான்
சொண்டு - உதடு (இது மட்டும் சரியா தெரியும்)
றாத்தல்
அப்பியாசக்கொப்பி
வாங்கு
வலகம்ப்பாகு

இவையெல்லாம் எழுதி வைத்த வார்த்தைகள் மட்டுமே. எழுதாத வார்த்தைகளை
எலிக்குட்டி கொண்டு மேலும் கீழும் சறுக்கி கண்டுபிடிக்க முனைந்து பின் சலித்து
விட்டுவிட்டேன். ஈழத்தில் மட்டும் புழங்கும் வார்த்தைகளை இதற்கு முன் எவராவது
வலையில் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தால் அங்கு சென்று
பார்த்துக் கொள்ளலாம். இல்லாதபட்சத்தில் நண்பர்கள் முயற்சி செய்யலாம்.

பல்வேறு நாடுகளில் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்த ஒருவருக்கு புத்தகம் மட்டுமே
தனிமையை போக்க உதவியிருக்கும். அவர் படித்த, பார்த்த, அனுபவித்த உலகத்தை
இந்த 343 பக்கங்களில் அற்புதமான மொழியினால் வடித்திருக்கிறார். வெளிநாட்டின்
சூழலை வாசிக்கிறோம் என்று தோன்றச்செய்யாத எழுத்து. மிகவும் வியப்பது
இவரின் நகைச்சுவை. சுஜாதாவின் எள்ளலும் நாஞ்சிலின் மொழியும் இணைந்த
கலவையான புதுவடிவம்.

கனடாவில் கடன் என்ற முதல் கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கும்போது ஏற்பட்ட
புன்சிரிப்புடன் கடைசிவரை படிக்க முடிந்தது. கனடாவில் கடன் அட்டை இல்லாமல்
பொருள் வாங்குவது கடினம். அந்த கடன் அட்டைகளைப்பற்றிய இவரின்
நகைச்சுவையை ரசிக்காமல் இருப்பவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று
சொல்லலாம். கீழே இருப்பதை படித்துப்பாருங்கள்.

பெருமதிப்பிற்குரிய தலைமையாளர் அவர்களுக்கு.

இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட
வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வியடைந்து
கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பக்கப்பட்டுவிட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த
நாட்டில் கடன் சரித்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்புக்
கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு
வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.

எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து
சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன்
அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சரித்திரத்தை
படைத்து, மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும்
கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல் கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கிலோமீட்டர் ஓடும் சிக்கனமான
ஒரு கார் வாங்கியிருக்கிறேன் அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும்
மாத வருமானத்தில் 1% குறைவான பாலில்,கோதுமை சக்கையை கலந்து காலை உணவாகவும் ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறேன். அதைக்கூட
தாங்கள் பார்க்கலாம். உணவிலும் பங்கு கொள்ளலாம்.

ஆனால் துரதிர்ஷடவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை.
எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை
கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த
இலக்கை அடைந்து விடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும்
முக்கியம் என்று எனக்கு படுகிறது.

தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என்
கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக்காட்டுவேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையான, கீழ்ப்படிந்த, தாழ்மையான, நிலத்திலே புரளும்...



அங்கதம், பகிடி போன்ற குறிச்சொற்கள் கொண்டு விளங்க வைக்காமல் நேரடியான
நகைச்சுவை எழுத்து. அனுபவத்தை எழுத்தாக்கும்போது இருக்கும் அனுகூலமே
படிப்பவர் தன்னையும் எழுத்தோடு இணைத்துக்கொள்வதாகதான் இருக்க முடியும்.
நகைச்சுவை மாத்திரமன்றி குடும்ப உறவுகள், பாசம், நட்பு, ஆங்கில இலக்கியம்
மொழிபெயர்ப்பு, ரசனை, பயணம், விமர்சனம் என்று மொத்தம் 48 கட்டுரைகள்
அத்தனையும் ரசித்து வாசிக்கலாம்.

இத்தனை சுவாரசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் எப்படி எழுத முடிகிறது என்று
ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அனுபவக்கட்டுரை மாத்திரமல்ல மொழி
பெயர்ப்பிலும் மிகச்சிறந்த கதாசிரியர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளது அவரின்
பரந்த வாசிப்பனுபவத்தை காட்டுகிறது. ஒருவர் சிறந்த வாசகராக இருக்கலாம்,
சிறந்த எழுத்தாளராகவும் இருக்கலாம். வெற்றுமொழியை அதன் உலகத்தோடு
நமக்கு காட்சிப்படுத்துவது ஒரு கலை. ஆண்டன் செக்காவின் "வேட்டைக்காரன்"
மிகச்சிறந்த சிறுகதை. வாசித்தபின்பும் மனதை விட்டு விலகவில்லை. கடந்த
பதினைந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதை ஜெயமோகனின்
"வலை" என்ற சிறுகதையை குறிப்பிட்டிருந்தார். இது சிறந்த சிறுகதைதான்
மிகச்சிறந்த சிறுகதையா என்று தெரியவில்லை. ஜெமோவின் "திசைகளின் நடுவே"
சிறுகதைத் தொகுப்பில் "வலை" படித்தபோது திகைத்தது உண்மைதான்.

றோராபோரா சமையல்காரன்

பெஷாவரில் பணியாற்றியபோது பாகிஸ்தானிகளிடம் ஏமாந்த அனுபவங்கள். சமையல்
செய்ய ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்த குலாம் என்பவர் தாம் இருபதுவ்
வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தன் பணி அனுபவ காகிகத்தை இவர் முன்
நீட்டுகிறார். எட்டு மடிப்புகளாக பிரிந்த அந்த காகிதத்தில் பின்வருமாறு ஆங்கிலத்தில்
இருந்தது. இருபது வருடங்களாக தன்வசமிருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதி
உள்ளது என்பதுகூட அறியாமல் இருந்திருக்கிறார்.

"To whom it may concern" இதனால் சகலமானவருக்கு அறியத்தருவது

"இந்தக்கடிதத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் "குலாம் முகம்மது நிஸாருதீன்"
உங்களிடம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்று அர்த்தம். இவர் என்னிடம்
இரண்டு வருடகாலம் சமையல்காரராக வேலை பார்த்தார். இவருக்கு சமைக்க
தெரியாது. மிகவும் நல்லவர். மற்ற என்ன வேலை கொடுத்தாலும் செய்வார் என்றே
நினைக்கிறேன்".

"வில்பிரட் ஸ்மித்"


ஒரு சிறுவனின் ஆர்வத்துடன் மாயஜால புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை
படித்த உணர்வு.

பி.கு: கனநாட்களாக அர்த்தம் தெரியாத ஒரு வார்த்தை இருக்கிறது என்றால் அது "கொழுவி" என்ற வார்த்தைதான். அந்த வார்த்தையும் நூலில் இடம் பெற்று
இருக்கிறது. ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும்... அசல் அர்த்தம் தெரியவில்லை.

8 comments:

Anonymous said...

அகதியாக இவர் புலம் பெய்ரந்ததாக உனக்கு யார் சொன்னது? அரைவேக்காட்டுத்தனமாகவே எழுதி எப்படியும் எளக்கியவாதின்னு பேர் வாங்காம விடக்கூடாதுன்னு தெளிவா இருக்க போல. அதுசரி? ஹவ் இஸ் யுவர் ஹெல்த்?

Anonymous said...

Anbu Thambi,

Can you give me website address of PKP?

கதிர் said...

அதிமேதாவி/முழுதாக வெந்த அண்ணாச்சிக்கு :)

சொந்தநாட்டுக்கு திரும்ப முடியாமல் வேறுநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் எவரும் உணர்வால் அகதிதான். புகுந்த நாட்டை அவர் கொண்டாடினாலும் அந்நாடு ஒத்துக்கொள்ளாது. அவர் அகதியாக புலம்பெயர்ந்திருக்காவிட்டாலும் இது பொருந்தும் என்பது என் கருத்து.

எளக்கியவாதியென்று ஒத்துக்கொள்ளும்வரை இதுபோன்ற அரைவேக்காட்டுத்தன உளறல்களை நிறுத்த மாட்டோம்.

கோகுல்

http://pkp.blogspot.com இங்க இருக்கு பாருங்க.

கிருத்திகா ஸ்ரீதர் said...

பி.கே.பியின் எந்தப்பதிவில் இந்தப்புத்தகத்தை தகவிறக்கம் செய்யக்கொடுத்திருந்தது என்று கூறமுடியுமா... (அங்கே இப்ப என்ன நேரம்)

கப்பி | Kappi said...

சக எலக்கியவாதி தம்பியண்ணன்,

பிடிஎப்-பை மயில் காலில் கட்டி அனுப்பிவிடுங்கண்ணன் :))

சின்னப் பையன் said...

//எப்போது வீட்டுக்கு தொலைபேசினாலும் அம்மா தவறாமல் கேட்கும் முதல் கேள்வி
அங்க இப்ப என்னடா நேரம் என்பதுதான்//
Like Like Same Same...

நான் மணி சொல்லிவிட்டால் அடுத்த கேள்வி வந்து விழும்.. "இந்தியாவில் இருக்கும் அதே கிழமையா.. அடுத்த கிழமையா"!!!

தமிழ்நதி said...

அ.முத்துலிங்கம் அவர்கள் மிக அற்புதமான எழுத்தாளுமை கொண்டவர். நான் அவரது ஒரு புத்தகத்தையும் தவறவிடுவதில்லை. 'வியத்தலும் இலமே'என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர்களை நேர்காணல் செய்த தொகுப்பு ஒன்று காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது. அதுவும் அருமையான புத்தகம். முடிந்தால் வாங்கி வாசியுங்கள். நீங்கள் குறிப்பிட்டது போல சுஜாதாவின் புத்திசாலித்தனமான நகைச்சுவையை இவருடைய எழுத்துக்களிலும் காணலாம். நாஞ்சில் நாடனின் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை'கட்டுரைத் தொகுதி வாசித்துவிட்டீர்களா? அதை வாசித்த பிற்பாடு அவருடைய எல்லாப் புத்தகங்களையும் வாசிக்கும் ஆர்வம் கிளர்ந்திருக்கிறது.

வந்தியத்தேவன் said...

உமா கதிர் நீங்கள் புத்தகத்தை மேலோட்டமாகத்தான் வாசித்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். அந்தப்புத்தகத்திலேயே திரு.முத்துலிங்கம் அவர்கள் தான் யார் என்பதை பல தடவை உணர்த்தியுள்ளார். இவர் பல்நாட்டு தூதரகங்களில் வேலை செய்தவர். அதனால் தான் தன் பல அனுபவங்களை சுவை பட எழுதியுள்ளார். மிக அண்மையில் இவரின் ஒரு ஆபிரிக்ககதை விகடனில் வெளிவந்தது. பாகிஸ்தானில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சுவையாக தந்துள்ளார்.