எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, November 16, 2024

உண்டியல் - சிறுவாடு - Piggy Bank

 அப்பா தவறியதால் இந்த ஆண்டு எங்களுக்கு தீபாவளி கிடையாது. பொதுவாகவே தமிழகம் தவிர்த்த வெளிநாடுகளில் தீபாவளி என்பது வெறும் ஓய்வு நாட்களில் ஒன்றுதான். சிங்கப்பூரில் தீபாவளி அன்று பொதுவிடுமுறை. தமிழர்கள் வாழும் பிறநாடுகளில் வேலைநாளாகவே இருக்கக்கூடும். இங்கும் பெரியதாக கொண்டாட்டம் ஒன்றுமிருக்காது. வெடி வெடிக்க அனுமதி இல்லை. புத்தாடை அணிந்து நண்பர்களுடன் ஒருவேளை உணவை பகிர்ந்துகொள்வது என்பதே பெரிய விஷயம். ஆகவே தீபாவளி கொண்டாட்டம் இல்லை. பிள்ளைகளுக்கு மட்டும் புத்தாடை அணிந்து வெளியில் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம். துக்கம் கொண்டாடுகையில் புத்தாடை அணிவது பிழை என்று அறிவுறுத்தப்பட்டதால் அதையும் தவிர்த்தோம். பிறகு என்னதான் செய்வது என்ற யோசனையின்போது பெரியவன் ஒரு ஐடியா சொன்னான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் வரும்போது பெரியவனுக்கும் சின்னவனுக்கும் சேமிப்புப் பழக்கம் உண்டாகும்பொருட்டு ஒரு உண்டியல் வாங்கிக்கொடுத்தேன். அந்தகாலத்தில் குறவர்கள் தோளில் தொங்கும் டால்டா டின் நினைவிருக்கிறதா? அதுபோன்ற ஒரு உண்டியல். ஆனால் சிறியது. காசை உள்ளே போடலாம். வெளியே எடுக்க முடியாது. உடைத்துதான் எடுக்க வேண்டும். இப்படி வாங்கியதற்கு ஒரு காரணம் உண்டு. 

 


என்னுடைய சிறிய வயதில் என்னுடைய அப்பாவும் இதே பிண்ணனியில் ஒரு உண்டியல் வாங்கிக்கொடுத்தார். பாட்டி வீட்டுக்கு சித்தலிங்கமடம் சென்றபோது களிமண்ணால் செய்த உண்டியல் மேல்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் வண்ணம் அடித்த அழகிய உண்டியல். சித்தலிங்கமடத்தில் அனேக குயவர்கள் அப்போதிருந்தனர். ஊரே எப்போது புகைமூட்டத்துடன் இருக்கும். பானைகள் வெந்துகொண்டே இருக்கும். நிறைய மண்பாண்டங்கள் செய்யும் ஆட்கள் இருந்தனர். இப்போது மிகச்சிலரே இருப்பதாக அறிகிறேன். நாள்முழுக்க பானை வனைவதை நான் பார்த்திருக்கிறேன். கண்கொட்டாது சக்கரம் சுழல்வதை லயித்து பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தும் கூட அந்த நுட்பம் என் விரல்களுக்கு எட்டவில்லை. பல்லாண்டு கால பயிற்சி தேவை என்பது அப்போது புரியவில்லை. 

அப்படிப்பட்ட உண்டியலில் என்னால் காசு நிறைக்கவே முடியவில்லை. கிடைக்கும் சொற்ப ஓரிரு ருபாய் நாணயங்களை நான் சேர்த்து வைத்தாலும் கூட அனேக நேரங்களில் அதை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு செல்ல நேர்ந்துவிடும். கோலிகுண்டு வாங்கவோ, பம்பரம் வாங்கவோ, ஐஸ் வண்டிக்காரருக்கு கொடுக்கவோ, வாடகை சைக்கிள் உருட்டவோ என காசு உள்ளே போவதும் வெளியே எடுப்பதுமாக இருந்தது. மண் உண்டியலில் உருட்டி உருட்டி சத்தம் வராமல் யாரும் அறியாமல் காசு எடுப்பது பெரிய காரியமாக இருந்ததால் காசு போடுவதையே நிறுத்திவிட்டு நேரடியாக செலவு செய்யும் பழக்கத்திற்கு வந்து சேமிப்பையே நான் மறந்தேன். எனக்காவே ஓரிரு காசுகள் சில்லறையை பாக்கெட்டில் விடுதையும் நிறுத்தி விட்டார். அவருடைய சட்டைகளை வழக்கமாக நாந்தான் இஸ்திரி போடுவேன். அதற்காக எழுதப்படாத சம்பளமாக அவரின் பாக்கெட்டிலிருந்து நாணயங்களை எடுத்துக்கொள்ளும் அனுமதி எனக்கு உண்டு.

மேற்சொன்ன எந்த தடையும் இவர்களுக்கு இல்லாமல் இந்த உண்டியலை இவர்கள் இருவருமாக சேர்ந்து நிறைக்க வேண்டும் என்பது எனது ஆசை. 2022 டிசம்பர் மாதம் இந்த உண்டியலை வாங்கிக்கொடுத்தேன். அப்போது பெரியவனுக்கு 10ம், சிறியவனுக்கு 5ம் பூர்த்தியாகியிருந்தது. பைடன் அதிபராக  அமெரிக்காவுக்கும், லீ ஹூசியன் லுங் சிங்கப்பூருக்கும் பிரதமராக இருந்தனர். இன்று இவர்களுக்கு 12, 7 பூர்த்தியடைந்திருக்கிறது. இன்றைய தினத்தில் டிரம்ப், லாரன்ஸ் வோங் பிரதமராக இருக்கின்றனர். உலகில் பல மாற்றங்கள் இப்படி நடந்துகொண்டிருக்கையிலேயே இந்த டால்டா டின் உண்டியலும் நிறைந்து விட்டது. ஒரு கையால் தூக்கி சுமக்க முடியாதபடி அதன் எடை இருந்தது.

என் அப்பாவைப்போலவே நானும் எனது சட்டைப் பாக்கெட்டில் சில்லறைகளை மீதம் விடுவது வாடிக்கையாக வைத்துக்கொண்டேன். வீட்டில் வந்ததும் என் பாக்கெட்டை துழாவி ஓடிச்சென்று உண்டியலில் விடுவார்கள். அதன் தகர ஓசை நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தது அதே நேரம் உண்டியல் நிறைய ஆரம்பித்தது. தவிர, கடைக்கு போகும்போது கிடைக்கும் சில்லறை, அம்மாவின் பர்ஸிலிருந்து கிடைக்கும் சில்லறை, பாக்கெட் மணி சில்லறைகள். இடையில் ஒருமுறை இந்தியா சென்று திரும்போது கிடைத்த ரூபாய் நாணயங்களைக் கூட அதில் இட்டார்கள். இங்குதான் பெரும் பிழை நடந்தது அதை பின்னால் சொல்கிறேன்.

எனக்கு இருந்த அனேக செலவு காரியங்கள் பிள்ளைகளுக்கு அறவே இல்லை. கோலி குண்டு தெரியாது, பம்பரத்தை பிடித்ததில்லை, ஐஸ் வண்டிக்கார யார் என்றே தெரியாது. ஆகவே பெறுவது இடுவது ஒன்றே அவர்கள் செய்த காரியம். இந்த உண்டியலை என் வயதில் நிறைக்க வேண்டியதிருந்தால் என் மொத்த பால்யமும் போதாது என்றே தோன்றுகிறது. சேமிப்பைப் போலவே செலவு செய்யவும் தெரிய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். செலவு செய்யும்போதுதான் சேமிப்பின் அருமை தெரியும். 

பெரியவனும் சின்னவனும் நீண்ட நாட்களாக ஸ்கேட்டிங் ஷூ வேண்டும் என்று கேட்டார்கள். விழுந்தால் பலத்த அடிபிடிக்கும் விளையாடு என்பதால் தள்ளிக்கொண்டே வந்தேன். உண்டியல் நிறைந்தது கியர் வைத்த சைக்கிள் வாங்கித்தருவதாக வாக்களித்தேன். அவர்களின் சேமிப்பிலிருந்து வாங்குவதால் முறை வைத்து அதனை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் அப்படி சொன்னேன். ஆனால் அவர்களுக்கு சைக்கிள் சுத்தமாக பிடிக்கவில்லை, ஒரே குரலாக வேண்டாம் என்பதால் அவர்கள் கோரிக்கைப்படி ஸ்கேட்டிங் ஷூ வாங்கலாம் என்று முடிவானது. அதே சமயம் உண்டியலும் நிறைந்துவிட்டது.

தீபாவளி ஓய்வுநாளில் டெகத்லான் சென்று வாங்குவதாக திட்டம். உண்டியலை நேதாஜி என்ற நண்பர் உபகரணங்கள் கொண்டு பிளந்து கொடுத்தார். ஒரு லிட்டர் தகர பெயிண்ட் டப்பா அளவுள்ள அதில் உள்ளே ஐந்து, பத்து, இருபத்தி ஐந்து, ஐம்பது, ஒரு டாலர் நாணயங்கள் நிறைந்திருந்தன. எப்படியும் 500 டாலருக்கு குறையாமல் வரும் என்பது என் கணக்கு. பயல்கள் இருவது ஆயிரம் டாலர் தேறும் என்று உறுதியாக நம்பினார்கள். பிளந்து கொடுத்த நண்பரோ 300லிருந்து 400க்குள் வரும் என்றார். 

நோட்டுகளை டெபாசிட் செய்வது போலவே நாணயங்களையும் டெபாசிட் செய்யும் வசதி இத்தீவில் சில இடங்களில் உண்டு. நான் சிட்டி ஸ்கோயர்  மால் என்ற இடத்தை தேர்ந்தெடுத்தேன். அங்கேயே நாணயமும் டெபாசிட் செய்யலாம், அடுத்த தளத்தில் டெகெத்லான் எனும் விளையாட்டுப் பொருள் கடையும் இருந்தது. 

உற்சாகமாக நாங்கள் அங்கே சென்றோம். சில்லறைகளை இயந்திரத்தின் வாயில் நிறைத்தோம், அவை ஒன்றிரண்டாக உள்ளிறங்கியது. அத்தனையும் உள்ளே செல்ல நீண்ட நேரம் பிடித்தது. பிள்ளைகள் பொறுமை இழந்தார்கள். எனக்குமே கூட சலிப்பு தட்டியது. உள்ளே மலேசிய நாணயம், இந்திய நாணயம், சில அலுமினிய நாணயங்கள் கூட சென்றதைக் கண்டபோது அதிர்ச்சி அடைந்தேன். இவற்றையெல்லாம் சரிபார்த்து போட்டிருக்கலாம் என்று தோன்றியது. சோம்பேறித்தனம். இயந்திரம் பகுத்தறிந்து தேவையில்லாததை துப்பி விடும் என்பது என் அனுமானம். ஆனால் பேட்டரி நின்று போட ரோபாட் மாதிரி சத்தமிட்டு தன் இயக்கத்தை நிறுத்தியது மிஷின். கடைசியாக ஒரு துண்டுசீட்டு வெளியே வந்ததும் ஆவலாக அதை இழுத்து எத்தனை இலக்கம் சேமிப்பு என்று பார்த்தோம். 

ஆனால் அதிலே தொலைபேசி இலக்கம் குறிப்பிட்டிருந்தது. இயந்திரம் பல்வேறுநாட்டு நாணயங்களால் குழப்பமடைந்துவிட்டது. உங்களது தொகை பாதுகாப்பாக இருக்கிறது. ஓரிரு நாளில் உங்கள் கணக்கில் வர வைக்கப்படும் என்று எழுதியிருந்தது. நான் உடனே அந்த அவசர தொடர்பு எண்ணிற்கு அழைத்தேன். முதல்காரணம் எவ்வளவு சேமிப்பு என்பதை அறியவேண்டும், இரண்டாவது ஷூ வாங்கவேண்டும் என்னிடம் பணம் இருந்தாலும் அவர்களது சேமிப்பின் பலத்தை அவர்கள் அறியவேண்டும் என்ற என்னுடைய ஆசை. அது நிறைவேறாமல் போனது எல்லோருக்குமே வருத்தம். சின்னவன் இயந்திரத்தை லேசாக எட்டி உதைத்து தன்னுடைய கோபத்தை காட்டினான், பெரியவனுக்கோ முகம் வேறு வடிவம் கொண்டது. என் மனைவியோ "நீ கை வெச்சா எது வெளங்கும்?" என்று சொல்லாமல் முறைத்தார். 

தொலைபேசி பெண்மணியும் அதையே சொன்னார், உங்கள் தொகை பத்திரமாக உள்ளது, எவ்வளவு என்பது ஓரிரண்டு நாளில் நீங்கள் அறிவீர்கள் என்றார். 

பயல்களை ஏமாற்றக்கூடாது என்பதால் டெகத்லான் சென்று அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்தேன்.  சிறிது நேரத்தில் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து விளையாட்டுப்பொருளில் மூழ்கிப்போனார்கள். உஸ்மான் என்ற பாகிஸ்தானியர் கடையில் நான் ரொட்டியும், பட்டர் சிக்கனும் சாப்பிட்டும் வீடு சேர்ந்தோம். மறுநாளும் விடுமுறையால் பயல்கள் இருவரும் ஷூ மாட்டிக்கொண்டு வீட்டின் கீழே பயிற்சி எடுத்தார்கள். பெரியவன் முதல்நாளே ஓட்டப்பழகி விட்டான். சிறியவன் ஓரிரு நாளில் சுமாராக பழகிவிட்டான்.




 

எனக்கோ அந்த தொகை எவ்வளவு என்று தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும்போலிருந்தது. தினமும் லெட்டர் பாக்ஸ் பெட்டியை திறப்பதும், ஏமாற்றத்துடன் மூடுவதுமாக இருந்து பிறகு அலுவலக சிக்கல்களில் மறந்தே போனேன். 

நேற்று அந்த பெட்டியை வேறு ஒரு காரணத்துகாக திறந்தபோது வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்தது. 

அதில் இருந்த தொகை

நண்பர் சொன்ன தொகையா?

நான் அனுமானித்த தொகையா?

அல்லது பிள்ளைகள் கணித்த தொகையா?

எதுவாக இருக்கும்? உங்களது கணிப்பை சொல்லுங்கள்.....