எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, September 05, 2016

மயிர்க்கழித்தல்


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை முறை சலூன் சென்று முடிவெட்டிக்கொள்கிறான் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்காக அவன் எவ்வளவு செலவு செய்கிறான் என தெரியுமா? மனித வாழ்வின் ஒவ்வொரு பத்து வருடத்திலும் முடிவெட்டிக்கொளும் கால இடைவெளி மாறுபடுகிறது. தனது 15 வயதிலிருந்து 45 வயதிற்குள் அதிக முறை சலூன் செல்கிறார்கள். தோராயமாக 70 வயது வரை ஒரு மனிதன் வாழ்கிறான் எனில் அவன் 800க்கும் அதிகமான முறை முடிவெட்டிக்கொள்கிறான் அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். அதற்காக அவன் செய்யும் செலவு மொத்த சம்பாத்தியத்தில் ஒன்றிலிருந்து இரண்டு மாத சம்பளமாக இருக்கலாம். இதெல்லாம் புள்ளிவிவரக் கணக்கல்ல. ஒரு பத்து வெவ்வேறு வயதினரிடம் கேட்டு இதை எழுதியிருக்கிறேன். அதிலும் சிலர் மாதத்திற்கு இரண்டு முறையும், சிலர் ஒரு முறையும் என வெட்டிக்கொள்கின்றனர். 

சென்ற இரு மாதங்களுக்கு முன் எனக்கு நானே இந்தக்கணக்கை போட்டுக்கொண்டேன். எல்லா ஊரிலுமே சிறுவர்களை முடிவெட்ட அழைத்துச் சென்றால் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்கள். நான் சொல்வது சாதாரண கடைகளில். ஹைடெக் சலூன்கள் அல்ல. ஏன் தவிர்க்கிறார்கள் என்றால் குழந்தைகள் சிறுவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள், மிக எச்சரிக்கையாக வெட்ட வேண்டும், சீராக வெட்டிக்கொண்டிருக்கும்போதே தலை திருப்பினால் வெட்டுக்காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்காகவே பேபி சேர் ஒன்று தனியாக வேண்டும். ஊரில் என்றால் மனை ஒன்றை போட்டு அமர வைப்பார்கள். இது வேகமான நகரம். நேரம் ரொம்ப முக்கியம், ஒவ்வொரு நிமிடமும் காசுகணக்குதான். அவர்களுக்கு வெட்டும் நேரத்தில் இரண்டு பேருக்கு வெட்டலாம் என்பது முக்கியமான காரணம். அதிகபட்சம் ஒருதலைக்கு ஆறிலிருந்து பத்து நிமிடம் கணக்கு. ”அஞ்சு ரூவாய்க்கி வான்கோழி பிரியாணியா தருவாங்க” என்ற நகைச்சுவை நினைவுக்கு வருகிறதா?

ஊரில் உள்ள சலூன்கள் அப்படியல்ல. அங்கு காத்திருப்பதே ஒரு சுகம். பாட்டு போடுவார்கள், நடிகைகளின் படம் இருக்கும். பத்திரிக்கைகள் படிக்கலாம், பொரணி பேசலாம். ஊரில் ஒருவருடம் நாம் இல்லையென்றாலும் ஒருநாள் சலூனில் அமர்ந்திருந்தால் அந்த வருடத்திய அத்தனை நல்ல கெட்ட காரியங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். ஊரின் மொத்தக்கதைகளும் டீக்கடையிலும், சலூனிலும்தான் பேசப்படுகின்றன. பால்ய வயதில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அம்மா இல்லை. சித்திதான். அப்பாவுக்கு இவனைப் பிடிப்பதில்லை. முடிவெட்ட காசு எதுவும் கொடுக்க மாட்டார்கள். துணிவெட்டும் கத்திரிக்கோலை எடுத்து அவனே அங்கும் இங்கும் நீட்டிக்கொண்டிருக்கும் முடிகளை வெட்டிக்கொள்வான். மாடு சில இடத்தில் மேய்ந்து சில இடத்தில் மேயாமல் இருந்தால் எப்படி இருக்கும் அப்படிதான் அவன் தலையும் இருக்கும். செட்டில் உள்ள அனைவருமே அவனை கிண்டல் செய்வோம். இப்போது புரிகிறது எவ்வளவு சிறுமையுடன் நடந்து கொண்டோம் என்பது. சமீபத்தில் ஊருக்கு போயிருந்தபோது அதே நண்பனை பார்த்தேன். விளையாட்டு போல அவனிடம் முடிவெட்டிக்கொள்ளும் விஷயம் பற்றிக் கேட்டேன்.  சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாலும் அந்த பழக்கம் இன்னும் போகவில்லையாம். தனக்குத்தானே இன்னமும் முடிவெட்டிக் கொள்வதை சொன்னான். சிலருக்கு தொடர்ந்த ஒருசெயல் செய்துகொள்ளப் பழகும்போது வேறு ஒருவர் செய்வது பிடிக்காது. நான் இதுவரை சலூனில் முகச்சவரம் செய்துகொண்டதில்லை. முடி முளைத்த நாள் முதல் இன்றுவரை நானே செய்துகொள்வதுதான். இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் இதுவரை சொந்தமாக முகச்சவரம் செய்து கொண்டதேயில்லை. பயம்தான் காரணம். பழகப்பழக எதுவும் சாத்தியம்தான். பிறக்கும்போதே ஆற்றலுடன் பிறப்பதில்லை. தொடர்ச்சியான பயிற்சியில்தான் அது கைவரும். மிக எளிமையான வேலைதான் என எவ்வளவு சொன்னாலும் கேட்பாரில்லை.

எங்கள் வீட்டில் மூன்று பேர். முடி காதைத் தொடும்போது கட்டையனுக்கு சொல்லிவிடுவார் அப்பா. அவர்தான் ஊருக்கு முடிவெட்டுபவர். ஆந்தை போன்ற முட்டைக்கண்களும், எந்நேரமும் புகையிலையுடன் வெற்றிலை சுண்ணாம்பு சேர்த்து வாயின் ஓரம் அதக்கி வைத்திருப்பார். அருகில் வரும்போது கெட்ட வாடை வரும். கட்டைக்குரலில் அதட்டினால் பிள்ளைகளுக்கு ரெண்டு நாள் எழ முடியாதபடி காய்ச்சல் கூட வரும். அப்படிப்பட்டவர் வருகிறார் எனத் தெரிந்தா நானும் தம்பியும் திசைகொருவராக ஓடி விடுவோம். அப்பா நீண்ட பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு சந்து பொந்தெல்லாம் தேடி தரத்தரவென இழுத்து வந்து மனையில் உட்கார வைப்பார். அதற்கு மேல் முரண்டு பிடிக்க முடியாது. ஒருமுறை முள்புதருக்குள் உள்ளே ஒளிந்து மாட்டிக்கொண்டேன் வெளியே வரமுடியவில்லை. பிறகு கொடுவா கொண்டு முள்வெட்டி வெளியே இழுத்து ரெண்டு போட்டு அமர வைத்தார்கள்.  கட்டையனிடம்  அரை மணிநேரம் தலையைக் கொடுத்தே ஆகவேண்டும். அவருக்கு எல்லார் தலையும் ஒன்றுதான். ஒரே ஸ்டைல்தான். கொட்டாங்குச்சியை கவிழ்த்து போட்டதுபோல ஒரு ஸ்டைல். இரண்டு நாட்களுக்கு வெதும்பியபடியே சென்றால் பிறகு மறந்து போகும். ஊரின் ஒரே சலூனிஸ்ட் அவர். நல்லகாரியம், கெட்டகாரியம் எல்லாம் கட்டையன் கைவண்ணம்தான். பெரும்பாலும் வருடத்துக்கு இத்தனை மூட்டை நெல் என கூலி கொடுப்பர். அப்பா விவசாயி அல்லர், வேலை முடிந்தவுடன் கைக்கு காசு வந்துவிடும் என்பதால் காசு கொடுக்கும் வீட்டுக்கு முன்னுரிமை கொடுப்பார் கட்டையன்.

நானும் என் நான்கு வயது மகனும் ஒரு சனிக்கிழமை கிட்டத்தட்ட ஐந்து கடைகள் ஏறி இறங்கினோம். இரண்டு மயிர்க்கழித்தலுக்கு காசு கூடும் எனவே தவிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.  எல்லா கடையிலும் சொல்லி வைத்தது போல எதாவது ஒரு காரணம் சொன்னார்கள். சற்றே விலை கூடிய கடைகளுக்கு சென்று வெட்டிக் கொள்ளலாம் ஆனால் அதில் விருப்பமில்லை. பட்ஜெட் முக்கியம். தமிழ்க்கடைகளில் 6 வெள்ளிக்கு முடி வெட்டுகிறார்கள். என் தலைக்கும் என் பிள்ளையின் தலைக்கு ஒரே விலைதான். சற்றே உயர்தர சலூன் சென்றால் 20 வெள்ளி முதல் அந்தந்த ஸ்டைலுக்கேற்ப விலை உண்டு. வெயில் வேறு படுத்தியதால் வீடு திரும்பி விட்டோம். சிறுவர்களுக்கு முடிவெட்ட காலைநேரம் தான் சிறந்தது. மாலையில் வெட்டி தலைக்கு தண்ணீர் ஊற்றினால் மருத்துவருக்கு கொஞ்சம் காசு போக வாய்ப்புண்டு. அதுவுமில்லாமல் மாலை நேரங்களில்தான் எல்லா சலூன்களிலும் காத்திருத்தல் அதிகமாக இருக்கும். ஒரு கடையில் டோக்கன் கொடுத்து பிறகு வரச்சொன்னார்கள். அந்த நேரத்திற்கு போனால் விடுமுறை நாளின் அத்தனை வேலைகளுக்கும் பங்கம் வந்துவிடும். மட்ட மத்தியான நேரம் அது. கடைசியில் அடுத்த வாரம் வெட்டிக்கொள்ளலாம் என சமாதானம் கொண்டு வீடு திரும்பினோம். சிறுவர்களை முடிவெட்ட அழைத்துச் சென்று திரும்புவது சாகசமான வேலை. 

பிறகு அடுத்த இரண்டு சனிக்கிழமை செல்ல முடியவில்லை. பிறகு ஏன் நாமே வெட்டக்கூடாது என்ற எண்ணம் வந்தது. மனைவியின் தோழி ஒருவர் இருக்கிறார். அவரின் கணவரே இரண்டு பிள்ளைகளுக்கு முடிவெட்டி விடுவாராம். ஏன் நாமும் அப்படி செய்யக்கூடாது என யோசித்து எலெக்ட்ரிக் ட்ரிம்மர் ஒன்றை வாங்கினேன். குளியலறையில் ஒரு ஸ்டூல் போட்டு ஒரு துண்டை உடல் முழுக்க சுற்றிக்கட்டி அமர வைத்தேன். முதலில் பயந்தான். பிறகு வாக்குறுதிகள் பல கொடுத்து சமாதானப்படுத்தி அமரவைத்தேன். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற ட்ரிம்மரின் சத்தம்தான் முதலில் அவனை பயமுறுத்தியது. மெல்ல கீழிருந்து மேல்நோக்கி இழுத்தேன். பூப்போல முடி ட்ரிம்மர் வழியாக அறுபட்டு விழுந்தது. யோசிப்பதைக் காட்டிலும் எளிமை. அதிகபட்சம் பத்து நிமிடங்களில் வேலை முடித்து விட்டேன். தலைகழுவி உலர்த்தி பார்த்தபோது சில இடங்களில் அதிகமும் சில இடங்களில் குறைந்தது போலவும் இருந்தது. மனைவி முறைத்தார். முதல்முறைதான் என சமாதானம் சொன்னேன். ஆனால் அதற்கடுத்த இரண்டு முறை கடையில் வெட்டுவதைப்போலவே கச்சிதமாக கழித்தேன். நமக்கும் வெட்டிக்கொண்டால் என்ன என தோன்றியது. கடந்த இரண்டு மாதமாக எனக்கு நானேதான் முடிவெட்டிக்கொள்கிறேன். இரண்டு பேருக்கான இரண்டு மாத முடிவெட்டும் கூலி வாங்கிய எலெக்ட்ரிக் ட்ரிம்மரைக் காட்டிலும் விட அதிகம். காசும் மிச்சம் ட்ரிம்மர் லாபம். உபதொழிலாக முடிவெட்டவும் கத்துக்கொண்டாயிற்று. புதிய தலைகளில் முயற்சித்துப்பார்த்தால் தொழில் கைவரப்பெற்றுவிடும். உண்மையில் தனக்குத்தானே முடிவெட்டிக்கொள்வது மிகுந்த சுவாரசியமான காரியம் வேறில்லை எனத் தோன்றுகிறது. இதை வாசிக்கும் யாரின் பிள்ளைகளுக்காவது மயிர்க்கழிக்க வேண்டும் என்றால் நம்பிக்கையாக என்னிடம் வரலாம். 

நம்பி வாங்க! சந்தோஷமா போங்க!