வனத்தின் மலைச்சரிவில்
உள்ள கூடாரத்திலிருந்து அவர்கள் நான்கு பேரும் வெளியே வரும்போதுதான்
கவனித்தார்கள். அவர்களைச் சுற்றி வளைத்தது போல மனிதக்குரங்குகள் வந்துவிட்டன. அவைகளை தலைமையேற்று நடத்துவது போல ஒரு மனிதக்குரங்கு முன்னேறி வந்துகொண்டிருந்தது. அதனைப்பின்பற்றி
மற்ற குரங்குகள் மெல்ல அடியெடுத்து வைத்து வந்துகொண்டிருந்தன. அவைகளின் கைகளில் சிறிய கற்களும் ஒடிந்த கிளைகளும் ஆயுதத்தைப் போல வைத்துகொண்டு மூர்க்கமாக வந்துகொண்டிருந்தது.
நான்கு பேரும் அதிர்ச்சியுடன் அசையாமல் நிற்கிறார்கள்.
நால்வரின் கையிலும் துப்பாக்கி. பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அத்தனை துப்பாக்கிகளின்
குண்டுகள் பாய்ந்தாலும்
கூட சில குரங்குகள் மீதம் இருக்கலாம். உயிர் போவது உறுதி. ஆயுதத்தை உபயோகிப்பது சரியான முடிவல்ல என்ற என்னும் முதலாமவன் மெல்ல கிசுகிசுத்தபடி
மற்ற நண்பர்களிடம்
சொல்கிறான். மறந்தும் கூட சுட்டு விடவேண்டாம்.
மெதுவாக ஆயுதத்தைக் கீழே போட வலியுறுத்துகிறான். மற்ற மூவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. மெல்ல இறைஞ்சுகிற தொனியில் சூழ்நிலையை விளக்குகிறான். அதிலே ஒருவன் சமாதானமடைந்து சம்மதிக்கிறான்.
முதலில் நம்மாள் அவைகளுக்கு ஆபத்து இல்லை என புரியவைக்க வேண்டும். அவைகளை அதன் போக்கில் விட்டு விடலாம். சரணடைவதைப்போல
துப்பாக்கிகளை தூரப்போட்டு
கையை உயர்த்தசொல்லி
கெஞ்சுகிறான்.
அசைவற்ற முதலாமவனின்
காலில் இரண்டு இஞ்ச் அளவுள்ள கட்டெறும்பு
ஒன்று ஊர்ந்தபடி மேல்நோக்கி ஏறுகிறது. வியர்வையில்
ஊறிய உடம்பில் எறும்பு ஊர்வது எரிச்சலைக் கிளப்பினாலும் இப்போதைய சிறு அசைவும் பெரிய ஆபத்தில் முடியலாம் என எறும்பை அனுமதிக்கிறான்.
மெல்ல பேசி அனைவரையும் சமாதானம் செய்தவன் ஒருசேர துப்பாக்கிகளை தரையில் போட்டு காலால் அதனை தூரத்தள்ளுமாறு பணிக்கிறான். பெரிய கம்புடன் முன்னேறி வந்த தலைமைக்குரங்கு இந்த செய்கையைப் பார்த்தனும் தொலைவில் நிற்கிறது.
முதலாமவன் தான் நின்ற இடத்திலிருந்து நான்கடி முன்னே வைத்து “மன்னிப்பு கோரும் தொனியில் மண்டியிட்டு
வேண்டுகிறான்”
தலைக்குரங்கு அவனிடம் வந்து முகத்தை உற்று நோக்குகிறது. மெல்லச் சிரித்துவிட்டு
ஒருவிதமான ஒலியெழுப்ப மற்ற குரங்குகள் ஆமோதிப்பதைப்
போல சத்தமிட்டு பின்வாங்குகின்றன. சற்று நேரத்தில் அந்த இடத்தில் ஒரு குரங்கு கூட இல்லை. எல்லாம் சென்றுவிட்டன.
ஒரு மாயம் போல நடந்தவற்றை நம்ப முடியாமல் அங்கிருந்து ஊர்சேர்கின்றனர்.
நடந்தவற்றை தம் தாய்தந்தையரிடம் அதிசயத்துடன் பகிர்கிறான்
ஒருவன்.
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவனது அப்பா சொல்கிறார் “அவை உன்னை அடையாளம் கண்டு விட்டன. அதனால் விலகிச் சென்றிருக்கிறது”
என்கிறார்.
நான் முன்பே சில முறை சொல்லியிருக்கிறேன். என் அப்பாவின் சாயல் உனக்கு வந்திருக்கிறது. உனது தாத்தா மனிதக்குரங்குகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.
ஒருமுறை நமது தோட்டத்தில் புகுந்த மனிதக்குரங்கு
பழங்களைப் பறித்து நாசம் செய்துகொண்டிருந்தது. கோபமடைந்த தாத்தா துப்பாக்கியால் குரங்கை குறிபார்த்து சுடத்தயாரானபோதுதான் கவனித்தார். அதன் முதுகில் பெரிய காயம் இருந்தது. அதற்கு ஒரு குட்டியும் இருந்தது. சுடும் எண்ணத்திலிருந்த அவர் அதை மாற்றிக்கொண்டார். அதற்கு முந்தைய தினங்களில்தான் காட்டுத்தீ பரவி பெரும்பகுதி
காடுகள் நாசமாகிவிட்டன. அதில்தான் காயம்பட்டிருக்க வேண்டும். மனதை
மாற்றிக்கொண்டவர் பறித்த பழங்களை அதை நோக்கி வீசினார். பொறுமையாக அவற்றை சேகரித்த
குரங்கு அவ்விடத்தை விட்டு அகன்று விட்டது.
மறுநாள் பழம் கொடுத்த
நன்றியின் அடையாளமாக அவ்விடத்தில் ஒரு தகர டின்னை விட்டுச்சென்றிருந்தது குரங்கு.
பிறகு தினசரி அத்தகர டின்னில் பழங்கள் போட ஆரம்பித்தார். இப்படித்தான் அவர்
குரங்குகளுடன் பழகினார். ஒருகட்டத்தில் அவைகள் அவருடன் நெருக்கமாகிவிட்டன.
ஒருமுறை பன்றிக்கு
வைத்த கண்ணியில் ஒரு குட்டிக்குரங்கு மாட்டிக்கொண்டது. அவர் அதைக் காப்பாற்றி
சிகிச்சையளித்து ஒப்படைத்தார். அன்றிலிருந்து அவரை தன் கூட்டத்தில் ஒருவராகவே
சேர்த்துக்கொண்டது அந்தக்குரங்குகள்.
உனது தாத்தா இறந்தபோது.
குரங்குகள் அவரது சடலத்தை இழுத்துச் சென்றுவிட்டன. கடைசிவரை எங்கு தேடியும் ஒரு
எலும்புத்துண்டு கூட கிடைக்கவில்லை.
நீ நாளை குரங்குகளை
சந்தித்த அதே இடத்துக்கு செல். நிறைய பழங்களை வாங்கிக்கொள். குரங்குத்தலைவன்
நின்றிருந்த இடத்தில் அப்பழங்களை விட்டுவிட்டு வந்துவிடு. அவைகளை நாம் வரவேற்கும்
விதமாக இதை முயற்சி செய்து பார் என சொல்கிறார்.
மறுநாள் பழங்களை
வாங்கிக்கொண்டு அந்த இடத்திற்கு செல்கிறான். கூடையை வைத்துவிட்டு வீடு
திரும்புகிறான்.
அதற்கடுத்த நாள் அதே
இடத்துக்கு செல்கிறான். பழக்கூடை அங்கு இல்லை. ஆனால் இலைகளால் மறைக்கப்பட்ட சிறு
குவியல் இருக்கிறது. அதன் மேல் இரண்டு பட்டாம்பூச்சிகள் சிறகடித்தபடி
அமர்ந்திருக்கின்றன. மெல்ல இலைகளை அகற்றிப் பார்க்கிறான். உள்ளே மனித
எலும்புக்குவியல் இருப்பதைக் காண்கிறான்.
----