எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, August 22, 2015

அத்தியாயம் 2- ஆரம்ப நாட்கள்.


“சில நேரங்களில் அம்மா சாப்பிடாமல் வேலைக்கு செல்வார். ஆனால் என்றுமே தன் பிள்ளைகளை சாப்பிடாமல் வெளியே அனுப்பியதில்லை. மிக சோதனையான ஏழ்மைக் காலங்களில் எங்களை அப்படிதான் வளர்த்தார்".

ஸ்வெடஸ் என்ற உள்ளடங்கிய கிராமத்தில்தான் என் வாழ்க்கை தொடங்கியது. 1800 பேர் கொண்ட கிராமம். ஆன்டிகாவின் தலைநகரம் செயிண்ட் ஜோன்ஸ். பரபரப்பான ஜோன்ஸிலிருந்து 11 மைல் தொலைவில் எங்கள் ஊர். கிட்டத்தட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள்தான். 1960களில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொண்டு மிக மகிழ்ச்சியாக வாழ்ந்த காலகட்டம். ஸ்வெடஸ் ஒரு வால் போல ஒட்டிக்கொண்டிருக்கும் கிராமம். அங்கிருந்து பெரிய அளவில் கிரிக்கெட்டில் யாரும் பிரபலமாகவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். அப்போது எங்கள் கிராமத்தில் கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டாக இருந்தது. அந்த இடத்தை தற்போது கால்பந்து விளையாட்டு எடுத்துக்கொண்டது. ஸ்வெடஸ் நகருக்கு வெளியே சென்று விளையாடி பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. மவுரிக் ஃப்ரான்சிஸ் என் பழைய முதலாளி. நீண்ட நாள் நண்பரும் கூட. அவர் ஒருமுறை சொன்னார்.

”நீ திறமையாளனாய் இருந்தால் எங்கே ஒளிந்திருந்தாலும் கண்டிப்பாக வெளிப்படுவாய்” அவர்களாகவே உன்னைத் தேடி வருவார்கள். என்று அறிவுரை சொல்வார். ஆண்டி ராபர்ட்ஸ் ஒரு மீன்பிடி கிராமத்திலிருந்து (ஹர்லிங்ஸ்) போய் கிரிக்கெட்டில் சாதித்தார். அதைப்போல நாமும் சாதிக்கவேண்டும் என நினைத்துக்கொள்வேன்.

எனது பயணம் தொடங்கியது 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 21. ஹில்லி ஒட்டோவுக்கும் ஜோஷ்வா அம்புரோஸ்க்கும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். 1956ஆம் வருடம் ஜுலை 26  அன்று எனது பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர். பிறகு எனது அப்பா அமெரிக்காவின் வெர்ஜீனிய தீவுகளுக்கு குடிபெயர்ந்தார். இல்லையென்றால் குடும்பத்தின் எண்ணிக்கை கூடியிருக்கும். இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக இருந்தனர். 

ஆன்டிகாவில் இருந்துகொண்டு குடும்பத்திற்கு போதுமான வருமானத்தை ஈட்டுவது அப்பாவுக்கு சவாலானதாக இருந்தது. வெர்ஜீனிய தீவுகள் அமெரிக்காவுக்கு போய்வர வாசலாக இருந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் இங்கிருந்து அமெரிக்காவினுள் நுழைய விசா தேவையில்லை. நான் கைக்குழந்தையாய் இருந்த சமயம் அப்போதுதான் என் தந்தை அங்கே பணிபுரிய சென்றார். குடும்பத்தை அம்மா கவனித்துக்கொள்வது என்றானது. அனெஸ்டா, குடும்பத்திற்கு மூத்தவள். என் பெரிய அக்கா, அடுத்து அண்ணன் அல்தான்சா, (டேனி என்றுதான் அழைப்போம்) அடுத்து அலிசியா சிறிய அக்கா. கடைசியாக நான். ஆண்-பெண், ஆண்-பெண் என்ற வரிசையில் நாங்கள் பிறந்துகொண்டிருந்தோம். அனைவர் பெயருக்கும் முதல் எழுத்தாக “அ” இருந்தது. எனக்கு பெயர் சூட்டுகையில் அம்மாவுக்கு”அ” எழுத்தில் பெயர்கள் கிடைக்கவில்லை.

”கர்ட்லி எல்கான் லின்வால் (Curtly Elconn Lynwall)” என்பதுதான் எனக்கு அம்மா சூட்டிய பெயர். ”ரே லிண்ட்வால்” என்பவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்” அம்மாவுக்கு மிகப்பிடித்த கிரிக்கெட் வீரர். அவர் நினைவாகதான் என் பெயரின் கடைசியில் Lynwall என்று சேர்த்ததாக பின்னாட்களில் சொல்லக்கேட்டிருக்கிறேன். எனக்குப்பிறகு ஒபீலியா மற்றும் விலிஸ்டீன் ஆகிய சகோதரிகள். கடைக்குட்டியாக சகோதரன் ஜெமி, சற்றே பெரிய குடும்பம்தான். அந்நாட்களில் இது சாதாரண ஒன்று.

இந்த வாழ்க்கை முழுவதுமே என்னை ஒரு வேகப்பந்து வீச்சாளனாகவே அறியப்பட விரும்புகிறேன். குறிப்பாக தொடர் பந்து வீச்சு (Long Spell) வீசுவது என்பது கடின உழைப்பாளி உழைப்பதைக் காட்டிலும் கடினமானது. இந்த கடின உழைப்பானது எனது ரத்தத்திலேயே கலந்திருக்கிறது என்று நம்புகிறேன். எனது அம்மாவின் அப்பா ”ஆர்ச்சிபால்ட் ஓட்டோ” ஒரு குழாய் பொருத்துனர் (Pipe Fitter) ஆக ஆன்டிகா பொதுப்பணித்துறையில் பணிபுரிந்தவர், அம்மாவின் அம்மா ஒரு பழத்தோட்ட விவசாயி. அப்பாவின் அப்பா ஒரு மீனவர். ஊரில் அப்பாவை ”ஜஸ்பர்” என்ற பெயரில்தான் எல்லோருக்கும் தெரியும். அப்பா முதலில் தொழிலாளியாக சர்க்கரை ஆலை ஒன்றில் பணிபுரிந்தார். பின்பு சிலகாலம் தச்சு வேலை செய்தார்.



இதுவரை அறிந்த வாழ்க்கையில் அம்மாவைப் போல கடின உழைப்பாளியை எங்குமே கண்டதில்லை. அப்பா வேலைக்காக விர்ஜீனிய தீவுக்கு சென்ற பிறகு எங்கள் ஏழு பேரை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினார். எனது குழந்தைப்பருவம் முதல் பதின்ம பருவம் வரை ஒவ்வொரு காட்சியும் என் நினைவில் இருக்கிறது. அதனால்தான் அம்மா ஒரு கதாநாயகியைப் போல எங்கள் நினைவில் இருக்கிறாள். என் வாழ்வின் உந்துசக்தி என்று யாரைச் சொல்வதென்றால், நான் என் அம்மாவையே சொல்வேன்.



அம்மா தினமும் காலை அரை மணிநேர நடையில் எட்டிவிடும் குன்றுக்கு செல்வார். அங்கு உருளை விவசாய நிலம் உண்டு. நிலத்தில் தாழிட்டு கைகளால் உருளைக்கிழங்கு பறித்து உள்ளூர் வியாபாரியிடம் கொடுத்து வருவார். இந்த வேலை அவளுக்கு நியாயமான வருமானத்தை ஈட்டித்தந்தது. எங்களின் காலை உணவுகள் இப்படிதான் நிறைந்தன.

அவள் திரும்ப வரும்போது உணவு மேசையில் தின்பண்டங்கள் இருக்கும். செய்த வேலைக்கு கொசுறாக கொஞ்சம் உருளைக்கிழங்கும் எடுத்து வருவார்., சிலசமயங்களில் அம்மா காலை உணவை தவிர்த்துவிட்டு வேலைக்கு செல்கிறார் என்று சகோதரி அனெஸ்டா சொல்வார். இருப்பதை எங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு அவள் வெறும் வயிரோடு வேலை செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எங்கள் அனைவரையும் கடவுள் மீது பற்றுள்ளவர்களாக வளர்த்தார். தேவாலயத்திற்கு செல்வதை ஊக்குவிப்பார். எனக்கு சிறுவயதில் விளையாடுவதைப் போலவே தேவாலயம் செல்வதும் உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் கிராமத்தில் இருந்த அப்பா விர்ஜீனியாவுக்கு சென்றார். எங்கள் அனைவரையும் நல்ல முறையில் பராமரிக்கவும், அம்மா கஷ்டப்படாமல் இருக்கவும் அங்கு செல்ல முடிவெடுத்தார். அங்கே அவருக்கு எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை ஒன்றில் வேலை கிடைத்தது.

விர்ஜீனியா சென்ற பிறகு மிக அபூர்வமாகதான் வீடு திரும்புவார். அப்படி ஒரு முறை  வீடு வந்தபோது அவர் யார் என்றே எனக்கு தெரியவில்லை. யாரோ ஒருவர் வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டது போன்ற உணர்வு. ஏனென்றால் அவர் எங்களை விட்டு வேலைக்காக சென்றபோது நான் ஆறுமாத கைக்குழந்தை. அதன்பிறகு நான் அவரை கண்டதில்லை.

காலம் செல்லச் செல்ல அப்பாவிடம் இருந்து பணம் வருவதும், பரிசுப்பொருட்கள் வருவதும் நின்று போனது. அப்பா சங்கிலித்தொடர் போல புகைப்பழக்கம் உடையவர். மேலும் அசாதாரணமான குடியும் சூதாட்டமும் சேர்ந்துகொண்டது. அவருடையை ஊதியம் அனைத்தையும் இந்த தீய பழக்கங்கள் விழுங்கிவிட்டது. நாங்கள் ஏழு பேருமே அப்பாவின் அரவணைப்பில் வளரவில்லை.

நாங்கள் அனைவரும் ஒருமுறை அவரைக்காண விர்ஜீனிய தீவின் செயிண்ட் க்ருக்ஸ் என்ற இடத்திற்கு சென்றிருந்தோம். அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம். அப்போதுதான் நான் அவரை முதன் முதலில் விவரம் அறிந்து சந்தித்தது.
அதற்குப் பிறகு 1988 ஆண்டு வரை நான் அவரை சந்திக்கவே இல்லை. எனக்கு அப்போது 25 வயது. காட்சிப்போட்டிக்காக நியூயார்க்கில் இங்கிலாந்து அணியுடன் விளையாடினோம். அப்போதுதான் நான் அவரை சந்தித்தேன். பதினேழு அல்லது பதினெட்டு வருடமாக நான் நேரிலும், தொலைபேசியிலும் கூட அவரிடம் பேசியிருக்கவில்லை. ஆனால் உள்ளன்போடு தொடர்பில் இருந்தோம்.

அந்த இரண்டு போட்டியிலும் நான் ஆடியதை அவர் காணவில்லை. என் சகோதரன் டேனி அவரை போய் அழைத்து வந்தான். எனக்கும் உள்ளூர அவரைக்காண மிகுந்த ஆவலாக இருந்தது. அவருக்கும் அப்படியே. அவர் எப்போதும் என்னை “பெரிய பையா” என்றே அழைப்பார். அவரின் உயரம் “ஆறடி இரண்டங்குலம்” டேனி “ஆறடி நான்கு அங்குலம்” ஜெமி “ஆறடி இரண்டங்குலம்”. எங்கள் குடும்பத்தில் அனைவருமே சராசரிக்கும் சற்று உயரமானவர்கள்தான்.

கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால் நாங்கள் அனைவருமே தந்தையின் அருகாமை இன்றிதான் வளர்ந்தோம். அம்மாதான் எங்களுக்கு ஆதர்சமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தாள். டேனி மற்றும் இரண்டு சகோதரிகள் நியூயார்க்கில் வசித்தார்கள். அவர்களுக்குதான் என்னைவிட அப்பாவைப்பற்றி நிறைய தெரியும்.
அப்பா எங்கள் வளர்ச்சியின்போது அருகில் இல்லாவிட்டாலும் கூட அவரை விரும்பினோம். அவரைப் பார்க்க எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அந்த சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். தந்தையின் அரவணைப்பில்லாத குழந்தைகள் தனக்குள் தாழ்மை உணர்வை உணர வாய்ப்புண்டு, ஆனால் அம்மா அப்படி உணர வாய்ப்பில்லாமல் எங்களை வளர்த்தார். பல வருடங்களாக அம்மா தனித்திருந்தாலும் தன் பெயரில் கண்ணியத்தையும், நேர்மையையும் வைத்திருந்தார். எத்தனை சோதனையான, வறுமையான காலகட்டத்திலும் அப்பாவை அவர் வெறுத்ததில்லை. எங்கள் முன் எந்த புகாரும் சொன்னதில்லை.

பலமுறை நாங்கள் கேட்டிருக்கிறோம் அப்பா எங்கேம்மா? ஏன் அவர் நம்முடன் இல்லை? ஏன் அவர் எந்த உதவியும் செய்வதில்லை? என்று பல கேள்விகள் கேட்டிருக்கிறோம். ஒருமுறை கூட அப்பாவைப்பற்றி தவறாக சொன்னதில்லை. எனவே அவரைப்பற்றி உயர்வான எண்ணத்துடனும், நல்மதிப்புகளுடன் வளர்ந்தோம். அவரைப்பற்றி அம்மா சொல்லும் புகார் சூதாட்டமும், புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும்தான். ஏன் அதைக்கூட சொல்கிறாள் என்றால் நாங்கள் யாரும் அந்த தவற்றை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான் அன்றி வேறில்லை.

குடித்தபிறகு அவர் வேறு மனிதனாக மாறிவிடுவார். ஆன்டிகாவில் இருந்த நாட்களில் அளவாக இருந்த அவரது குடிப்பழக்கம் விர்ஜீனிய தீவுகளுக்கு சென்ற பின்பு அதீத அளவிற்கு மாறிவிட்டிருந்தது. அவரது தனிமைதான் காரணம் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அவர் அற்புத மனிதராக எங்கள் நினைவுகளில் இருந்தார். இச்சூழலில் வளர்ந்த நான் இன்று வரை புகை, மதுப்பழக்கம் என்னை ஆட்கொள்ளாமல் வாழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய தாயாரின் அறிவுரைகள்தான். மிகச்சில முறை மதுவை சுவைத்திருக்கிறேன் என்றாலும் அது வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான், சக வீரர்களின் வற்புறுத்தலின் பேரில் சுவைத்திருக்கிறேன். இயல்பின் மதுவை இன்றுவரை வெறுக்கும் மனிதன் நான்.

1989ஆம் ஆண்டு அப்பா இறந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 59தான். சராசரியாக எங்கள் பகுதியில் இறக்கும் வயது அல்ல அது. இறக்கும் முன்பு அடிக்கடி மருத்துவரை பார்த்து வந்தார். முந்தைய நாள்தான் அறுவை சிகிச்சை செய்வதற்காக நாள் குறிக்கப்பட்டது. உடலுக்குள் அவருக்கு ஏராளமான பிரச்சினைகள் இருந்தன. ஒருவேளை இப்படி அமைதியான முறையில் விடை பெறத்தான் அவர் விரும்பியிருந்தாரோ என்னவோ தெரியவில்லை. எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் இறப்பதற்கு முன்பு சிலகாலம் என்னுடன் அவர் செலவழித்திருந்தார். பால்யத்தில் நான் இழந்திருந்த அவரின் அருகாமையை ஓரளவு திரும்பப் பெற்றிருந்தேன்.

பிரிவொன்று நிரந்தரமானதைத் தவிர அம்மாவிடம் எந்த மாற்றமுமில்லை. வழக்கம்போல கிரிக்கெட் மோகம் அப்படியேதான் இருந்தது. கிரிக்கெட்டின் வெறிபிடித்த ரசிகை. சிறுவயதில் கவனித்திருக்கிறேன் ட்ரான்சிஸ்டர் ரேடியோ ஒன்றை காதோரம் வைத்தபடி இரவு பகலாய் கிரிக்கெட் வர்ணனை கேட்டுக்கொண்டிருப்பார். கிரிக்கெட்டுக்கும் எனக்கும் முதல் பந்தம் உருவானது எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருந்த வர்ணனைகள் மூலமாகத்தான். அது என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் ஒலித்துக்  கொண்டேதான் இருந்தது. அவர் கிரிக்கெட் அடிமை போல நடந்துகொள்வது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஏனென்றால் எனக்கு பாஸ்கெட் பால் விளையாடுவதுதான் ஆர்வமாக இருந்தது. கிரிக்கெட் எனது தேர்வல்ல. “இந்த வர்ணனைகள் மூலமா நீங்கள் அடைந்ததுதான் என்ன?” என்று அம்மாவிடம் எரிச்சலுடன் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னை கிரிக்கெட் பக்கம் செலுத்தினார். நாங்கள் நகரத்திற்கு செல்ல நேர்ந்தால் அங்கே கிரிக்கெட் போட்டி ஏதாவது நடக்கிறது என்று அர்த்தம். அது எங்கள் நாட்டு அணியா, லீவர்ட் தீவு அணியா, உள்ளூர் அணியா என்பது அவசியமில்லை. அனைத்தையும் ஆர்வத்தோடு பார்ப்பார். எங்களையும் பார்க்க வற்புறுத்துவார். அவரின் இந்த முயற்சியை என் இருபது வயது வரை நிராகரித்தே வந்திருந்தேன். எங்கள் கிராமத்தில் கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டையும் விளையாடுவதில்லை. எனவே நான் கட்டாயமாக கிரிக்கெட் விளையாட வேண்டியதாக இருந்தது. அந்த வயதில் விளையாட்டைத்தவிர வேறு என்ன பொழுதுபோக்கு இருக்கா முடியும்?

ஆறேழு வயதில் தெரு நண்பர்களோடு கோலிகுண்டு விளையாடுவோம். வீட்டின் பின்புற தோட்டத்தில் மாமரமும், முன்புற தோட்டத்தில் கினி மரமும் இருந்தது அதன் அடியில் ஒன்று கூடி விளையாடுவோம். இன்றும் அந்த மரம் இருக்கிறது. ஆட்டத்தில் ஐந்து அல்லது ஆறுபேர் இருக்கலாம், ஒரு குச்சியால் தரையில் முக்கோணம் போல வரைந்து அதில் அவரவர் குண்டுகளை வைக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு குண்டுகள் வரை வைப்பது வழக்கம். பின்வருபவர்களும் அதே அளவில் குண்டுகள் வைக்க வேண்டும். கட்டை விரலால் காசு சுண்டுவது போல சற்றே பெரிய குண்டினால் முக்கோணத்தினுள் இருக்கும் குண்டுகளை வெளியே தள்ள வேண்டும். கோட்டை விட்டு வெளியே தள்ள முடியவில்லை என்றால் அடுத்தவர் முறை. வெளியே தள்ளும் குண்டுகள் அவரவர்க்கு சொந்தம். அதிக குண்டுகள் தள்ளுபவர் வெற்றி பெற்றவர் ஆவார். வேடிக்கையான விளையாட்டாக இருந்தாலும் இதில் நான் கில்லியாக இருந்தேன்.
எப்படியாவது கிரிக்கெட் பக்கம் என்னை தள்ளிட அம்மா செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. என்னைவிட என் சகோதரன் டேனி அருமையாக விளையாடுவான். ஆன்டிகாவின் சுற்றுவட்டப் பகுதிகளில் அவன் பிரமாதமான பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக அறியப்பட்டிருந்தான். அவன் தான் மேற்கிந்திய தீவுகளுக்காக கிரிக்கெட் விளையாடுவான் என்று எல்லோரும் கணித்திருந்தனர்.

பதின்ம வயதுகளில் கிரிக்கெட் ஆட செல்லும்போது வேண்டுமென்றே டேனி என்னை ஆடவிடாமல் நடுவராக நிற்க வைத்துவிடுவான். ஸ்வெடஸ் வட்டார பகுதிகளில் நடுவர் பணிகள் செய்திருக்கிறேன். நடுவர் பணி இல்லையென்றால் ரன்கள் குறிப்பேன். பள்ளி, வீடு, தெரு எங்கும் கிரிக்கெட்தான். கிரிக்கெட் ஆட விருப்பமில்லை எனில் தனித்துவிடப்படுவீர்கள். நான் தனித்திருக்க விரும்பவில்லை.

” பள்ளித்தோழனும் பிற்காலத்தில் என்னுடன் மேற்கிந்திய தீவுகளுக்காக கிரிக்கெட் ஆடிய வின்ஸ்டன் பெஞ்சமின் என்னைப் பற்றி சில வார்த்தைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்”

ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தான் நான் முதல் முதலில் கர்ட்லியை சந்தித்தேன். பள்ளியின் கிரிக்கெட் அணியில் அவரும் ஒரு வீரர். எங்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆனால் அதுதான் விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுத்தது. பதிமூன்று அல்லது பதினாலு வயதிருக்கலாம். அப்போதே கர்ட்லி தனக்கென தனி பாணியை பின்பற்றி பந்து வீசுவார். ஒரு ஸ்டைலிஷான முறையில் அவரது பந்துவீச்சு இருக்கும். பள்ளியிலிருந்து வெளியேறிய பின்பு கிரிக்கெட்டில் அவரால் தொடரமுடியவில்லை. கர்ட்லியின் ஆர்வமெல்லாம் பாஸ்கெட்பால் விளையாட்டிலேயே இருந்தது. பின்னாளில் எங்கள் பகுதியில் கால்பந்து கூட விளையாடினார். கர்ட்லியில் மூத்த சகோதரன் டேனி கொஞ்சம் வித்தியாசமானவன். நான் ஆரம்பநிலை வகுப்பில் இருந்தபோது போது டேனி உயர்நிலை வகுப்பில் இருந்தார். அவர் ஒரு பிரமாதமான கிரிக்கெட் வீரர். அதைவிட பிரமாதமான விக்கெட் கீப்பரும் கூட. பந்து அவர் கையில் இருந்து நழுவியதாக சரித்திரமே இல்லை என்னும் அளவுக்கு திறமையானவர். இவரின் தாக்கத்தை கர்ட்லியிடம் காண முடியும். இவர்களை விட இவர்களின் தாயார் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகை. அவர்தான் இவர்களை உருவாக்கினார்”

தினசரி நான் பள்ளிக்கு செல்ல விரும்பினேன் என்று சொல்ல முடியாது. போயே ஆக வேண்டிய கட்டாயம். ஆல் செயிண்ட்ஸ் நடுநிலைப் பள்ளியில் பயிலும்போது வேதியியலும், இயற்பியலும் என்னை மிகவும் தொந்தரவு செய்தன. அந்த பாட்டில்களும், குழாய் குடுவைகளும், வேதியியல் குறியீடுகளும் மிக வேடிக்கையான இருந்தன. நான் நன்றாக படிக்கும் மாணவனாக இருந்ததில்லை. அதே சமயம் மோசமான மாணவன் என்றும் சொல்ல முடியாது. முதல் நிலை படிவத்தில் தேர்ச்சியடைந்ததும் கொஞ்ச காலம் பள்ளிக்கு செல்லாமல் வீணடித்தேன். அம்மாதான் பள்ளிக்கு என்னை முடுக்கி விட்டபடியே இருப்பார். ஆனால் புத்தகத்தின் பக்கம் என் கவனத்தை நான் திருப்பவே இல்லை.

இரண்டாம் படிவத்தை அம்மாவின் வற்புறுத்தலுக்காக தொடர்ந்தேன். முன்பு என்னுடன் படித்தவர்கள் மூன்றாம் படிவத்தில் இருந்தார்கள். இரண்டாம் படிவம் தேறி மூன்றாம் படிவத்தேர்வில் தோல்வியடைந்தேன். அப்போது என் நண்பர்கள் ஐந்தாம் படிவத்தை எட்டியிருந்தனர். மறுபடியும் மூன்றாம் படிவத்தேர்வு எழுதி தேறியபோது 17 வயதை தொட்டிருந்தேன். இனியும் பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை. அந்த வயதில் நான் கல்லூரியை எட்டியிருக்க வேண்டும். இனியும் படிப்பதில் துளி கூட விருப்பமில்லை, நான் வேலைக்குப் போகிறேன் என்று அம்மாவிடம் கராறாக சொல்லிவிட்டேன். முதலில் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த அறிவுறையும் என்னிடம் பலிக்காததால் பின்பு சமாதானமடைந்து வேலைக்கு செல்ல அனுமதித்தார்.

நாங்கள் ஏழு பேர் உண்ணவும் உடுக்கவும் அவர் உழைத்துக்கொண்டிருந்தார். நான் சிறிதளவாவது அதற்கு உதவுவேன் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் என்னை அனுமதித்தார்.

ஒரு விஷயத்திற்காக எங்கள் வீடு பெருமிதமாக உணரப்பட்டது. 1960ஆம் ஆண்டில் எங்கள் கிராமத்தில் யார் வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கவில்லை. ஆனால் எங்கள் வீட்டில் இருந்தது. அக்காலத்தில் அபூர்வமாக கருதப்பட்ட சாதனம் அது, அம்மா ஒரு முறை அப்பாவைப் பார்க்க விர்ஜீனியா சென்றபோது வாங்கிவந்தார். சிறிய கருப்பு வெள்ளை தொலைக்காட்சி. அந்நாளில் ஆன்டிகாவில் விலைகொடுத்து வாங்கமுடியாத பொக்கிஷம். அதனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் எங்களை பெருமிதமாக கருதினார்கள். மாலை வேளைகளில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்போம்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்கும் மேற்கத்திய படங்கள் (Western movies) என்னுடைய விருப்பப் பட்டியலில் இருந்தது. சைனீஸ் கராத்தே படங்களும் விரும்பிப் பார்ப்பேன் என்றாலும் மேற்கத்திய படங்கள் பிடித்தமானது. ஜான் வெய்ன் (Jhon Wayne), க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood),  ஹென்றி ஃபோண்டா(Henry Fonda), சார்லஸ் ப்ரான்சன்( Charles Branson) எனது விருப்ப நடிகர்கள். இன்றும் கூட குறுந்தகடுகள் வாங்கி கண்டுகளிப்பேன். நான் அவற்றை வெகுவாக நேசித்தேன்.

என்னுடைய முதல் வேலை ஒரு துணிக்கடையில் ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அந்த வேலை சலிப்படைந்துவிட்டது. அது ஆண்களுக்கான வேலை அல்ல என்று நினைத்தேன். என்னால் மூன்று மாதங்களுக்கு மேல் அங்கு நீடிக்க முடியவில்லை. பின்னர் தச்சுவேலை சிலகாலம் செய்தேன். நண்பன் ஒருவன் மூலமாக இந்த வேலை கிடைத்தது. ஆன்டிகா பொதுப்பணித்துறையில் கட்டிட வேலைகளை (Mason) செய்துவந்தான் அந்த நண்பன்.

அர்லிங்ஸ் என்ற இடத்தில் பள்ளி ஒன்று கட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கு கொத்தனார் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன். அங்கு சென்ற பிறகுதான் கொத்தனார் வேலையெல்லாம் இல்லை தச்சு வேலை மட்டும்தான் என்று தெரிந்தது. சம்பாதிக்கதான் வந்தோம் என்ன வேலை செய்தால் என்ன என்று தச்சு வேலைகள் கற்றுக்கொண்டேன். இப்படிதான் நான் ஒரு தச்சுக்காரனாக மாறினேன். 1981ஆம் ஆண்டு முதல் 1984 ஆண்டு வரை அங்கு தச்சு வேலை செய்தேன். பின்னர் அங்கிருந்து விலகிவிட்டேன்.

என் நண்பன் ராபின்சன் கார் டயர்கள் மாற்றும் காரேஜில் வேலை செய்தான். ஓய்வு நேரங்களில் அவனோடு காரேஜில் நேரம் செலவழிப்பேன். ராபின்சன் என்பது அவனது பெயராக இருந்தாலும் எல்லோரும் அவனை பல்லு என்றுதான் அழைப்போம். தொடக்கப்பள்ளியில் என்னுடன் படித்தவன்.

பள்ளிகள் இல்லாத வார இறுதிநாட்களில் நண்பர்கள் அனைவருமாக இளநீர் குடிக்க இந்த காரேஜ் வழியாக செல்வோம். பள்ளிக்கு செல்லும்போது வரும்போதும் இந்த காரேஜை கடந்துதான் செல்ல வேண்டும். ஆன்டிகாவில் இளநீரை “ஜெல்லி” என்றுதான் அழைப்போம். கும்பலாக சென்று இளநீர் குடித்துவிட்டு அப்படியே கிரிக்கெட் விளையாட செல்வோம்.

பல்லுவைப் பார்க்க அடிக்கடி காரேஜுக்கு செல்லும்போது வேலைகளில் உதவிகள் செய்வேன். எனது ஆர்வத்தைப் பார்த்து அங்கேயே வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள். நான் செய்த வேலைகளிலேயே இந்த வேலைதான் மிகவும் எளிதானது. ஏன் என்றால் மற்ற வேலைகள் அதிக உடலுழைப்பைக் கோருபவை. இது வெயில்படாத நிழல் வேலை. ஒரு கிரிக்கெட் வீரனுக்கு உடல்வலிமை அவசியம். முன்பு செய்திருந்த வேலைகளால் என் உடல் வலிமை பாதித்திருந்தது.

பல்லுவிடம் சொன்னேன் சில வாரங்களாக நீ செய்யும் வேலைகளை பார்த்த பின்னர் என்னாலும் இதை சுலபமாக செய்ய முடியும் என்று தோன்றுகிறது என்றேன்.
“காண்பது எளிதானதுதான், செய்யும்போது எளிதில்லை என்று தெரியும் என்றான்” முடிந்தால் செய்துபார் என்றும் சவால் விட்டான்.

என் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டே வந்திருக்கிறேன். யாராவது என்னிடம் முடியாது என்று சொன்னால் அதையே சவாலாக எடுத்து ”என்னால் முடியும்” என்று நிரூபிப்பேன். இந்த காரேஜ் வேலையையும் சவாலாக எடுத்துக்கொண்டு செய்தேன். ஒரு வொர்க் ஷாப்பின் பாதி வேலைகளை என்னால் இப்போதும் செய்ய முடியும்.

”காரேஜ் உரிமையாளரான ப்ரான்சிஸ், கர்ட்லியைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்கிறார்”

“நான் ஒருநாள் வொர்க் ஷாப்பின் வரவு செலவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். கர்ட்லி செய்த வேலைகளுக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வரவு வைக்கப்பட்டிருந்தது. எதுவுமே குறைவாக இல்லை. எல்லாமே அதிகமாக இருந்தது. நான் கர்ட்லியிடம் கேட்டேன்.

“ஒரு வேலையை செய்து முடிக்கும்போது நான்கைந்து டாலர்கள் கூடுதலாக வாடிக்கையாளர்கள் தருகிறார்கள். நீங்கள் எனக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள். அதனால் வாடிக்கையாளர் தருவதை அப்படியே வரவு வைத்து விடுவேன் என்றார்”

கூடுதலாக தருவது உன் வேலைக்காக அவர்கள் தரும் டிப்ஸ். அதை உன் கைச்செலவுக்கு வைத்துக்கொள் என்று சொன்னேன்.

கர்ட்லி மறுத்துவிட்டார்

என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தானாக எடுத்துக்கொள்வது திருட்டு என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்கவே கர்ட்லி அப்படி செய்திருப்பார்.

இதுதான் கர்ட்லியின் நேர்மை.

1984ஆம் வருடம் ஸ்வெடஸ் நகர அணிக்காக ஆடும்போதுதான் கிரிக்கெட்டை மிக தீவிரமாக விளையாட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 20 வயது முடிந்திருந்தது. என்னைக்குறித்து நானே பெருமைப்படும் விஷயம் ஒன்று உண்டென்றால் அது எந்த வேலையைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வதுதான். அம்மாதான் கிரிக்கெட் பக்கம் என்னை பயணிக்க வற்புறுத்தினார். அதற்காகவாவது நான் எதாவது சாதிக்க வேண்டும். முன்பெல்லாம் கிரிக்கெட் விருப்பமில்லை, பாஸ்கெட் பால்தான் என் கனவு என்றெல்லாம் அம்மாவிடம் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

என்னை முழுதாக அறிந்தவர்கள் என்னிடம் சொல்வார்கள். “நீ மட்டும் கிரிக்கெட்டை நேசித்திருந்தால் நீ இருக்கும் இடமே வேறு” என்பார்கள்.

“நான் மட்டும் கிரிக்கெட்டை நேசித்திருந்தால் இதைவிட மோசமான இடத்தில் இருந்திருப்பேன்” என்று பதில் அளிப்பேன். “எந்த விஷயத்திலும் ஆழ்ந்த பிடிப்பை உனக்குள் உருவாக்கிக்கொள்கிறாய்” என்று டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (Desmond Haynes) சொல்வார். ஆம், இதை என் தாயிடமிருந்துதான் கற்றேன். அவர்தான் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதாரம். இளம் வயதில் ஆண்களுடன் சரிக்கு சமமாக கிரிக்கெட் ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. கிரிக்கெட்டுக்கு ரசிகை மட்டுமல்ல அதையும் தாண்டிய நபர் அவர்.

இருபது வயதிற்கு முன்னரே கிரிக்கெட்டில் தீவிரம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஸ்வெடஸ் அணி பாரிஷ் பிரதிநிதி அணியால் ஏதேதோ காரணங்களால் தவிர்க்கப்பட்டு வந்தது. அது ஒரு உள் அரசியல். அங்கீகாரமற்ற நிலையில் இருந்தோம். அப்போது ஒரு மூன்றாண்டுகள் ஸ்வெடஸ் அணி எங்குமே சென்று விளையாட முடியாத நிலை. என்னுடைய சகோதரன் டேனி விரக்தியடைந்து கிரிக்கெட்டை கைவிட்டு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டான்.

எங்களுக்குள் அணிகள் பிரித்து எங்களுக்குள்ளேயே போட்டிகள் விளையாடுவது போல அணிகளை அமைத்துக்கொண்டோம். மிருதுவான டென்னிஸ் பால் கொண்டு ஆடினோம். ஏனென்றால் மைதானங்கள் எல்லாம் அளவில் மிகச்சிறியவை. நான் விக்கரெஜ் அணிக்காக ஆடினேன் அந்த மைதானம் என் வீட்டிலிருந்து இரண்டு நிமிட நடையில் இருந்தது. மற்ற அணிகளான செயிண்ட் ஆன் (அவர்கள் மைதானத்தை லார்ட்ஸ் என்று அழைப்பார்கள், அளவில் கொஞ்சம் பெரியது) நார்போல்க் (இதை “கப்பா” என்று அழைப்பார்கள் பிரிஸ்பேன் மத்தியில் உள்ளது) கோர்னர் மற்றும் ரோமன் ஹில் என மொத்தம் ஐந்து அணிகள்.

தேசிய அளவிலான போட்டிகளில் ஸ்வெடஸ் பங்கேற்காத மூன்றாண்டுகளில் எங்களுக்குள் விளையாடிக்கொண்டோம். மென்மையான டென்னிஸ் பந்தில் இன்றும் போட்டித்தொடர்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருவகையில் அவ்வகை போட்டிகளின் கண்டுபிடிப்பாளர்கள் நாங்கள்தான். பின்னாளில் தேசிய அளவில் ஸ்வெடஸ் பங்கேற்க துவங்கியது.

ஏழு அல்லது எட்டு வயதில் பந்து வீசக்கற்றுக் கொண்டது டென்னிஸ் பந்தில்தான். அப்போதே எனது பந்து வீசும் முறை வித்தியாசமாகவும், துல்லியமாகவும் இருக்கிறது என்று சொல்வார்கள். மற்ற சிறுவர்கள் பந்தை முறையாக கையாளவே தடுமாறிய நிலையில் இருந்தார்கள். பள்ளி நாட்களில் பத்து பேர் சேர்ந்தோமென்றால் எங்களுக்குள் அணி பிரித்துக்கொள்வோம். இரண்டு கேப்டன்களும் வரிசையாக எங்களை நிறுத்தி வைத்து அவர்களுக்கு தேவையானவர்களை இழுத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் என்னை கடைசியாக போனால் போகட்டும் என்று அழைப்பார்கள். கொஞ்ச காலத்தில் என் பவுலிங் சிறப்பாக அமையவே முதலில் என்னை அழைக்கும் நிலை சீக்கிரமே வந்தது. டென்னிஸ் பந்துகளில் சுலபமாக பவுன்சர்களை எழுப்ப முடியும். நான் உயரமாக இருப்பதால் துல்லியமாக பந்துவீசி விக்கெட் வீழ்த்த முடிந்தது. முன்பே இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்ட ஈனோச் லீவிஸ், மெல்வரின் ஸ்பென்சர் ஆகியோர் தொடர்ந்து பந்து வீசி பயிற்சியில் ஈடுபட எனக்கு உத்வேகம் அளித்தனர். என்னுடைய திறமையை அடையாளம் கண்டவர்கள் இவர்கள்.

பாரிஷ் லீக் மற்றும் டேவிசன் லீக் தொடர்களில் எனது பந்து வீச்சு பலரை கவர்ந்தது. செயிண்ட் பால் பாரிஷ் மற்றும் உள்ளூர் அணிகளுக்காக ஆடினேன். லிபர்ட்டா, நியூ விந்த்ரோப்ஸ், பக்லேஸ், பால்மவுத், ஃப்ரீ டவுன், கடைசியாக ஆல் செயிண்ட்ஸ் என பல அணிகள். கிரிக்கெட்டில் உபயோகப்படுத்தும் கடினமான பந்தில் போட்டிகள் இருந்தன. இப்போது எனக்கு வயது இருபது, தாமதமாக நுழைந்தாலும் என் வளர்ச்சி அதிவேகத்தில் இருந்தது. 1984ஆம் ஆண்டு லீக் அணியில் எனது இடம் தவிர்க்க முடியாததாக மாறியது. எவ்வளவுதான் நன்றாக செயல்பட்டாலும் முழுதாக அங்கீகரிக்கப்படவில்லை.

என்னைக்குறித்து ஒரு வதந்தி அணி முழுக்க பரவியிருந்தது. ஆனால் அது உண்மைல்ல. என்னால் இரண்டாவது சுற்று (Second Spell) பந்து வீச இயலவில்லை என்பதுதான் வதந்தி. ஒரு பந்து வீச்சாளனை தொடர் முழுக்க முதல் சுற்று (First Spell) மட்டுமே வீசச் செய்வது மனதளவில் அவனை குன்றச்செய்துவிடும். எனக்கு அப்படிதான் நடந்தது. பிராந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் இவ்வகை அரசியல் முதல் அனுபவம். இதுமட்டுமல்ல இன்னும் பல தடைகளை தாண்டித்தான் சாதிக்க வேண்டும். எங்கள் பகுதி அணியில் பிரதான பந்துவீச்சாளன் நான் இங்கு மட்டும் ஏன் இப்படியானது என்பதுதான் என் வருத்தம்.

1985ஆம் ஆண்டு எல்லா தடைகளையும் உடைத்தெறிந்த ஆண்டு. சோகம் என்னவென்றால் அதற்கு முன்பு சில மாதங்கள் நான் கிரிக்கெட் விளையாடவே இல்லை. கடந்த வருடம் உபயோகித்த காலணிகள்  (Cricket Shoe) தற்போது உபயோகிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டது. இந்த காலணியை வைத்துக்கொண்டு இந்த வருடம் கிரிக்கெட் ஆட முடியாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதை வாங்குவதற்காக என்னிடமிருந்த சொற்ப டாலர்களை இழக்க தயாராக இல்லை. அந்த டாலர்களில் எனக்குப்பிடித்த மேற்கத்திய சினிமா பார்க்க தயாராக இருந்தேன். ஆனால் என் சூழ்நிலையை புரிந்துகொண்ட ஸ்வெடஸ் அணியின் மேலாளர் “உனக்கு கிரிக்கெட்டில்தான் எதிர்காலம் இருக்கிறது” என்று சொல்லி புதிதாக ஒரு ஜோடி காலணிகள் வாங்கிக்கொடுத்து பயிற்சி எடுக்கச் சொன்னார். என் காலணியின் அளவு 14 இஞ்ச். பிரத்யேகமாக தயாரித்துதான் வாங்க வேண்டும். என்னால் மறக்கவே முடியாத உதவி அது. 1985ல் ஸ்வெடஸ் அணிக்காக புதிய காலணிகள் கொண்டு ஆடினேன். அப்படி விளையாடி இருக்காவிட்டால் நீங்கள் கர்ட்லி என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். அங்கிருந்து என் பயணம் உச்சமடைய தொடங்கியது.

1985ஆம் ஆண்டு பர்னஸ் ஹில் அணியையும், பிகுட்ஸ் அணியை எளிதாக வென்றோம்.  இரண்டு போட்டிகளும் ஆன்டிகா பொழுதுபோக்கு மைதானத்தில் நடந்தது (Antiqua Recration Ground). வெற்றியின் முதல் சுவை கிட்டியது ஆன்டிகா மைதானத்தில்தான். அது மனதில் நிற்கும் தருணமாக அமைந்தது. பிகுட்ஸ் அணிக்கு எதிராக எனக்கு சரியான துவக்கம் அமையவில்லை. எனது முதல் பந்தையே கட் செய்து நான்கு ஓட்டங்களாகிப் போனது. எனது பந்துவீச்சில் ஓட்டங்கள் அதிகம் போவதை விரும்பவில்லை. மனதளவில் சோர்ந்து போனேன். என் மனதைப் புரிந்துகொண்ட லீவிஸ் “என்னாச்சு உனக்கு” என்று வினவினான். ”பவுன்சர் வீசி அவனது மண்டையை பிளக்கப்போகிறேன்” என்றேன். அமைதிப்படுத்திய லீவிஸ் எனக்கு ஒரு ஆலோசனை வழங்கினான்.

நீ வழக்கம்போலவே பந்து வீசுவாய் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இரண்டு ஃபீல்டர்களை எல்லைக்கோட்டருகே நிற்க வைத்து விட்டு வழக்கம்போல வீசாமல் யார்க்கராக வீசு என்றான். அவனது யோசனை ஏற்கக்கூடியதாக இருந்தது. அவன் சொன்னபடியே நிற்க வைத்து யார்க்கர் வீசினேன். ஆம், ஸ்டம்புகள் பறந்துவிட்டது. அப்போது முதல் புதிதாக கற்பவனைப்போல லீவிசிடம் யோசனைகள் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றோம். நான் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினேன்.

லீவிஸ் நினைவு கூர்ந்தது.

கர்ட்லியின் சிறப்பு என்னவென்றால் நல்ல லெந்த்தில் வீசப்படும் பந்து பேட்ஸ்மேனை நெருங்கும்போது நெஞ்சுக்கு நேராக வந்துவிடும். தவிர்த்தாக வேண்டும் இல்லையென்றால் பெவிலியன் செல்ல வேண்டும். சுற்றுவட்டாரத்தில் கர்ட்லியின் பந்துக்கு இரையாகாத பேட்ஸ்மேன்களே இல்லை என்ற அளவுக்கு இருந்தது. ஸ்வெடஸ் அணிக்கும் வீரர்களுக்கும் ஏராளமான பெருமிதங்களைப் பெற்றுத்தந்துள்ளார் கர்ட்லி. அவர் ஆட்டங்களைப் பார்க்க வார இறுதிகளில் மக்கள் கூட ஆரம்பித்தனர். ஸ்வெடஸ் பல போட்டிகளில் வெல்ல கர்ட்லியின் பங்களிப்பு முக்கிய காரணம் வகித்தது.

ஸ்வெடஸ் எனக்கு எல்லா சுதந்திரத்தையும் வழங்கியிருந்தது. தாமதமான முயற்சியிலும் என் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. எனது அடுத்த லட்சியம் தேசிய அணியில் இடம்பிடிப்பதே. அதற்கேற்றது போலவே விரைவில் எனக்கு தேசிய இடமும் கிடைத்து விட்டது. 1985ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி முதல் முதலில் நான் ஆன்டிகா மற்றும் பார்புடா அணிக்காக செயிண்ட் கீட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினேன். நான் பெரிதும் மதிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் உடன் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. தனது கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் இருந்த ராபர்ட்ஸ் தானாகவே முன்பவந்து இளைஞர்களுடன் ஆட சம்மதித்திருந்தார். கர்ட்னி வால்ஷ், கென்னி பெஞ்சமின், ஜென்சன் ஜோசப், ஆண்டி ராபர்ட்ஸ் ஆகியோருடன் இணைந்திருந்த அந்த போட்டியை பெருமிதமாக கருதினேன்.



அப்போட்டிக்கு முன் நான் பெரிதாக எந்த பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த பயிற்சியாளரும் இல்லை. திடீரென்று தோன்றிய யோசனையில் நேராக ஆண்டி ராபர்ட்ஸ் இடம் சென்று அவரின் ஆலோசனைகள் பெற்றேன். அந்த போட்டி எனக்கு இனிய துவக்கமாக அமையவில்லை. ஆனால் அந்தபோட்டிதான் லீவர்ட் தீவுக்காக விளையாட எனக்கு அருகில் இருந்த ஒரே வாய்ப்பு. லீவர்ட் தீவுக்கு விளையாடுவதுததான் மேற்கிந்திய தீவுக்குள்  நுழைய முதல்படி. பல தடைகளையும் சூழ்ச்சிகளையும் உடைத்துதான் முன்னேற வேண்டும் என்பதை விரைவில் உணர்ந்துகொண்டேன். அதில் வெற்றியும் பெற்றேன். நான் மேற்கிந்திய தீவு அணியில் இடமும் பிடித்த வரலாறு இதுதான்
.
ஆண்டி ராபர்ட்ஸ் என்னைப்பற்றி பகிர்ந்து கொண்டது.

“அந்த ஆன்டிகா போட்டிதான் எனக்கு கடைசியாகவும் கர்ட்லிக்கு ஆரம்பமாகவும் இருந்தது. எனக்கும் கர்ட்லிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இருவருமே குக்கிராமத்திலிர்ந்து மேலே வந்தவர்கள். இங்கிருந்தெல்லாம் உலகம் வியக்கும் கிரிக்கெட்டர்கள் முளைத்து வெளியே வருவார்கள் என்று யாருமே எதிர்பார்க்காத கிராமம் எங்களுடையது. எனக்கு கர்ட்லி மீது நம்பிக்கை இருந்தது. அன்றைய நாட்களில் இவரது பந்துவீச்சில் இரண்டு உத்திகளை பயன்படுத்தினார், ஒன்று புல் லெங்க்த், இரண்டாவது ஹாஃப் லெங்க்த். இந்த இரண்டு உத்திகளை பயன்படுத்திய அன்று பிற்காலத்தில் உலகமே திரும்பிப்பார்க்கும் பந்துவீச்சாளனாக உருவெடுப்பார் என்று அன்றையே தினமே கற்பனை செய்தது நினைவுக்கு வருகிறது.”





Saturday, August 08, 2015

விடை பெறும் நேரம் - கர்ட்லி அம்ப்ரோஸ்

1995 ஆண்டில் இங்கிலாந்து பயணத்தில் இருந்தோம். அப்போதே ஓய்வு பெற விரும்பினேன். பின் இந்தநேரத்தில் ஓய்வை அறிவிப்பது எனக்கும் எனது அணிக்கும் நல்லதல்ல என்று எண்ணி ஓய்வை மறுபரிசீலனை செய்தேன். பிற்பாடு 98ஆம் ஆண்டு வாக்கில் மிக தீவிரமாக ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பாகிஸ்தான் பயணத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்திருந்தோம். மூன்று டெஸ்டுகளிலும் தோல்வி. கடைசி டெஸ்டில் முதுகுவலி காரணமாக நான் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் பயணத்தின் முடிவில் இதுதான் ஓய்வு பெற சரியான நேரம் என்று நினைத்தேன். ஏனென்றால் நான்கொஞ்சம் கொஞ்சமாக எனது ஆர்வத்தை இழக்கத் தொடங்கியிருந்தேன். லீவர்ட் தீவுக்கு எதிரான உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு திருப்தியாக ஆடிய பின்பு ஓய்வை அறிவிக்கலாம் என்று தீர்க்கமாகவும் முடிவு எடுத்திருந்தேன். அதாவது அடுத்த இங்கிலாந்து தொடர் (1998) விளையாடப் போவதில்லை என்பதே அது.
அணித்தேர்வாளர்கள் அவர்களாக ஒய்வு குறித்து பேசும் முன்பாக நானே அறிவிப்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. மேலும் உள்ளூர் போட்டிகளின்போது வர்ணனையாளர்கள் எனது பந்துவீச்சு குறித்து மோசமாக வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விமர்சனங்களில் இருந்து மீண்டு எனது இடத்தை அணியில் நிரூபிக்கவேண்டும் என்றும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். லீவர்டு போட்டிகளின் போது எனது நெருங்கிய நண்பர் ரோலன் ஹோல்டரிடம் இதுபற்றி ஆலோசித்து ஓய்வு பற்றிய கடிதத்தைக் தயாரிக்க சொல்லியிருந்தேன். ரோலன் அவருடைய நெருங்கிய நண்பரிடம் இது பற்றி விவாதித்திருக்கிறார். அந்த நண்பரோ ஒருபத்திரிக்கையாளர். ரகசியத்தை காக்கத் தெரியாத முட்டாள். அவர் மூலம் என் அனுமதியின்றி எனது ஓய்வு குறித்த செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துவிட்டது.

 மறுநாளே எனக்கு தொலைபேசி விசாரிப்புகள் ஆரம்பித்து விட்டது. தவிர்க்கமுடியாமல் ஓய்வு பற்றிய செய்திகள் பொய்யானவை என்று அனைவருக்கும் தெரிவித்தேன். ஏனென்றால் என் ஓய்வு இப்படியாக அறிவிக்கவேண்டும் என நான் எண்ணவில்லை. என் வாழ்க்கையில் எல்லாமே மிக நேர்மையாகவேசெய்திருக்கிறேன். அதே போல எனது ஓய்வையும் நாட்டுக்கும், கிரிக்கெட் போர்டுக்கும் முறையாக தெரிவித்த பின்பு தான் ஊடகத்திற்கு தெரிந்திருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக ஊடகத்திற்கு முதலில் வந்ததை எண்ணி வருத்தமடைந்தேன். ஆகவே ஓய்வு குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டியதாகிவிட்டது.

என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை அப்புறப்படுத்த நினைத்தேன். ஒன்று எதிர்மறையான விமர்சனங்களில் இருந்து விடுபடவேண்டும். இரண்டாவது உலகிற்கு தெரியும் முன்பு தேர்வாளர்களுக்கு என் எண்ணங்களை அறியச்செய்வது.

கடைசியில் எல்லாமே சிக்கலாக மாறிவிட்டது. எனது திறமையை மறுபடியும் நிரூபிப்பது எனக்குள் இன்னமும் கிரிக்கெட் இருப்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டும். அதற்கு அணியில் நீடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனது ஓய்வை நானே அறிவிக்கவேண்டும் ஊடகமோ, மற்றவர்களோ அல்ல.

 ஒரு நல்ல பந்துவீச்சாளன் மோசமான நிலையின்போது தனது ஓய்வை அறிவிக்ககூடாது. அந்தவகையில் என்மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு தான் நான் நன்றி கூற வேண்டும்.

 கொஞ்சம் வேகமாக நினைவுகளை நகர்த்துகிறேன். 2000த்தின் மே மாதம் மறுபடியும் ஓய்வு குறித்த சிந்தனைகள் என் மனதில் ஓடத்தொடங்கியது. பாகிஸ்தான் அணியுடன் எனது சொந்த மண்ணான ஆண்டிகுவாவில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். எனது பந்துவீச்சில் தோழனும் உடன்பிறவா சகோதரனாக நான் நினைக்கும் கர்ட்னி வால்ஷ் உடன் கலந்து பேசினேன்.

மிக நெருக்கமான தோழன் அவன். என் வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் அவனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறேன். அவனுக்கு நன்றாக பந்துவீச்சு எடுபட்டு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தால் நான் எதிரணிக்கு பதட்டம் குறையாமல் பந்து வீசுவேன். எனக்கு பந்துவீச்சு எடுபட்டு விக்கெட்டுகள் விழுந்தால் அவனும் ஆட்டத்தின் சூடு குறையாமல் பந்து வீசுவான். அவனிடம் நான் கேட்டேன்

”அனேகமாக இந்த போட்டிதான் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”

 ”மிக வேகமாக இடைமறித்தவன் நீ கண்டிப்பாக தொடர வேண்டும் என்றான்”

 “ஏன் தொடர வேண்டும் என்று கேட்டேன்?”

 அந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினோம்

 “நீ ஏன் தொடர வேண்டும் ஒரே ஒரு காரணம் சொல்கிறேன். நீ 400 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் சேர வேண்டும்.”

 அப்போது நான் 388 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். நேர்மையாக சொல்லப்போனால் எனக்கு எண்ணிக்கையில் விருப்பம் இருந்ததில்லை. 388 என்பதே எனக்கு மகிழ்ச்சியான முடிவுதான். ஆனால் கர்ட்னி என்னைத் தொடர்ந்து 400 கிளப்பில் சேர வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.

 அப்போது அந்த பட்டியலில் கர்ட்னியும் இருந்தான், மேலும் கபில் தேவ், ரிச்சர்ட் ஹட்லீ, வாசிம் அக்ரம் மற்றும் பலர் அந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

நான் எப்போதுமே அணிக்காகதான் விளையாடியிருக்கிறேன். எனது தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியதில்லை. கர்ட்னி சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இந்த கிரிக்கெட் வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் 400 விக்கெட் கிளப்பில் சேரலாம் என்று முடிவெடுத்தேன். 400வது விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் இப்பட்டியலில் நானும் இருப்பேன்.

 இங்கிலாந்து பயணத்திற்கு முன்பாக கரீபிய மண்ணில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் “இங்கிலாந்து தொடருக்குபின் எனது ஓய்வை அறிவிப்பேன்” என்று சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் எனது ஓய்வை தள்ளிப்போட விருப்பமில்லை. முதலில் விமர்சகர்களுக்கு நிரூபிப்பதற்காக தொடர்ந்தேன். பின்பு என் நண்பன் கர்ட்னியின் வேண்டுகோளுக்காக தொடர்ந்தேன்.

 இங்கிலாந்து தொடரின் கடைசி டெஸ்ட். மற்ற போட்டிகளைப் போலவேதான் இந்த போட்டியும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. என் காதலி ப்ரிகெட் (பிற்காலத்தில் என் மனைவியானவள்) மற்றும் என் இரு மகள்களும் இருந்தனர். முதல் பெண் தான்யா பத்து வயது, இரண்டாவது மகள் சிலொ இரண்டு வயது. பின்னர் மேலும் இரண்டு மகள்களை பெற்றுத்தந்தார் என் மனைவி. ஐந்தாவது டெஸ்டின் கடைசி நாளன்று அமைதியான முறையில் இரவுணவை குடும்பத்தோடு சாப்பிட்டோம். ஓய்வு பெறும் நாளன்று என் குடும்பம் என்னோடு இருந்ததை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எவ்வித பதட்டமும் இல்லை. அன்றிரவு நன்றாக உறங்கினேன். இதுதான் முடிவு.

வீட்டில் வராண்டாவில் காலை உயரத்தூக்கி வைத்தபடி அமைதியாக என் வாழ்க்கையை வாழ வேண்டும். காலை வேளைகளில் நன்றாக உறங்க வேண்டும். நான் காலை உணவை ரசித்து சாப்பிடும் வழக்கம் உள்ளவன். அதற்கு இனி எந்த பிரச்சினையும் இருக்காது. கடைசி டெஸ்டின் போது என் மனைவிதான் என்னை எழுப்பினாள். இன்னும் ஐந்து நிமிடம் என்று சொல்லி மறுபடி தூங்குவேன். பின்பு அரக்க பரக்க எழுந்து அணி வீரர்கள் செல்லும் பேருந்தினை பிடிப்பேன். எப்போது ஆறு மணி ஆகும் ஆட்ட நேரம் முடியும் என்றுதான் பார்த்துக்கொண்டிருப்பேன். இத்தொடருக்கு முன் ஓய்வு பெற எண்ணியிருந்த என்னை உற்சாகமூட்டி 400 மைல்கல்லை எட்ட வைத்த என் நண்பன் கர்ட்னியை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

 ஐந்தாவது டெஸ்டின் ஐந்தாவது நாள். நான் மிகுந்த தன்னம்பிக்கை உடையவன். என்னால் பேட்டிங்கில் அதிகபட்சம் 20 அல்லது முப்பது ரன்கள் மட்டுமேசேர்க்க முடியும். ஆனால் பந்தினைக்கொண்டு ஆட்டத்தையே மாற்றிவிட முடியும். அன்று நாங்கள் வெற்றி பெற 374 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 215 ஓட்டத்தில் போட்டியை இழந்தோம். காலையில் போட்டி தொடங்கும்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினோம். ஏழாவது விக்கெட் வீழ்ந்தபோதே ஆட்டம் கையை விட்டுப் போய்விட்டதை உணர்ந்தேன். தோல்வி உறுதியானது என்றவுடன் அதுகுறித்த கவலை இல்லை. இதுதான் கடைசி தினம் நான் மைதானத்தில் இருப்பது.

ஓவல் மைதானத்தில் கூடிய அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று எனக்கு கைதட்டியபடி பிரியாவிடை கொடுத்தனர். இன்னமும் எனக்கு அந்த காட்சி நினைவில் இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரனுக்கு மறக்க இயலாத காட்சி.


மைக் ஆர்தர்டன் மிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என யூகிக்கிறேன். ஏன் என்றால் டெஸ்ட் ஆட்டத்தில் அவரை பதினேழு முறை வீழ்த்தியிருக்கிறேன். அதே போல ஆர்தர்டனும் எங்கள் அணிக்கு எதிராக ஏராளமான ரன்களை குவித்திருக்கிறார். அந்த போட்டியில் அவர் 83 மற்றும் 108 ரன்களை குவித்திருந்தார். ஒரு துவக்க வீரருக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலானது புதிய பந்தை எதிர்கொள்வதுதான். ஆர்தர்டன் ஒரு சிறந்த துவக்க வீரர் என்பதில் சந்தேகமில்லை.

 வீரர்களின் அறை அமைதியாக இருந்தது. சக வீரர்களுக்கு என்னை நன்றாக அறிவார்கள். பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று எந்த ஏற்பாடும் செய்யவில்லை. போட்டியில் வென்றிருந்தால் ஒருவேளை கொண்டாடியிருக்க வாய்ப்புண்டு.

 தோல்வியுடன் ஒரு வீரனின் விளையாட்டு முடிவுறுவது சோகமானது. எனது ஆரம்பமும் இப்படித்தான் இருந்தது. ஆம் என் பயணமே தோல்வியில்தான் ஆரம்பித்தது. அதிலே முடிவதில் வருத்தமில்லை.

சிலர் கேட்கிறார்கள் “ஏன் பதினைந்து வருடம் கழித்து இந்த கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” என்று காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. இப்போதுதான் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 80களிலும் 90களின் மத்தியிலும் எங்கள் அணி சவாலான அணியாக இருந்தது. 1988 முதல் 2000 ஆண்டு வரையான கிரிக்கெட் வாழ்க்கையில் மேற்கிந்திய தீவுகள் அணியை பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் நான் உணர்ந்திருக்கிறேன். அக்காலகட்டத்தின் வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.