எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, May 26, 2008

அங்கே இப்ப என்ன நேரம்

நண்பர் பி.கே.பி அவர்களின் வலைப்பக்கத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது நிறைய
மென்நூல் கோப்புகள் கண்டேன். முன்பே சுஜாதா தொடங்கி ஜெயமோகன், தமிழில்
லினக்ஸ், ஜாவா வரை பலகோப்புகள் சேமித்து வைத்திருந்தாலும் நான்காவது கொலை
தவிர்த்து மற்ற எதையும் முழுதாக வாசிக்கவில்லை. நா.கொ கூட நகைச்சுவைக்காக
படித்தது. அதை வாசிக்கும்போது அலுவலகத்தில் எவ்வளவு கட்டுப்படுத்தியும் பலர்
முன்னிலையில் காரணமில்லாமல் சிரித்தது கூட நினைவுக்கு வருகிறது. இறுக்கமான
அலுவலக சூழலை இந்த நகைச்சுவை எழுத்துக்கள் எளிதாக்கிவிட்டன. திரையில்
கண்கொட்டாமல் வாசித்துக்கொண்டிருக்கும்போது யாராவது தொலைபேசியில்
அழைத்தாலோ, அருகிலே நின்று எதாவது கேள்வி கேட்டாலோ தன்னிச்சையாக
தமிழிலே பதில் அளித்திருக்கிறேன். கேட்பவர் "ங்கே" என்று முழிப்பது கண்டு இயல்புநிலைக்கு திரும்பவேண்டும். இதற்காகவே நான் அலுவலகத்தில் தமிழ்மணம்
தவிர்த்து எதையும் வாசிப்பதில்லை.

"அப்ஸராவுக்கு இரண்டு வயது.
ஏற்கனவே பழக்கமான மெட்டுக்கு தன்னுடைய
சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடுகிறாள்.
நேற்று சந்திரனைப் பற்றிய ஒரு
பாடல் செய்தாள்.
அந்தப் பாடலில் நானும் இருந்தேன்.
அதுபோல ஒரு கவிதையை
என் வாழ்நாளில் கேட்டதில்லை.
அதுபோல ஒரு பரிசைப் பெற்றதுமில்லை.
இந்த புத்தகம் அப்ஸராவுக்கு"


இந்த ஆரம்ப வரிகளே என்னை படிக்கத் தூண்டியது.

எப்போது வீட்டுக்கு தொலைபேசினாலும் அம்மா தவறாமல் கேட்கும் முதல் கேள்வி
அங்க இப்ப என்னடா நேரம் என்பதுதான். சலிக்காமல் நானும் பதில் சொல்வதை
இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

எதிர்பாராத நிகழ்வுகள்தான் ஆச்சரியத்தை அளிக்கும். அதேபோல அ.முத்துலிங்கம்
அவர்களின் "அங்கே இப்ப என்ன நேரம்" என்ற கட்டுரைத் தொகுப்பை வாசிக்க
ஆரம்பித்ததும் சுற்றம் மறந்து போனது. முன்பு நாஞ்சில் நாடனின் கட்டுரைத்
தொகுப்பைப் பற்றி எழுதியபோது குறிப்பிட்ட ஆனால் சற்றே வித்தியாசமான
மொழி அழகில் படைப்பட்டதுதான் "அங்கே இப்ப என்ன நேரம். 343 பக்கங்கள்
கொண்ட இந்த பி.டி.எப் வடிவ புத்தகத்தை இரண்டே அமர்வில் வாசித்துமுடித்தது
உச்சகட்ட சாதனை. படித்து முடித்த இரண்டு நாட்களுக்கு என் கண்கள்
விஜயகாந்த் படத்தின் இறுதி சண்டைக்காட்சியின் போது அவர் கண் எப்படி
இருக்குமோ அதுபோல ஆகிவிட்டது.

பொதுவாக ஈழத்து எழுத்துக்களை இதற்கு முன்பு இணையத்தில் பல இடங்களில்
படித்தாலும் சில வார்த்தைகள்(இந்த சில என்பது கணிசமாக தேறும்)விளங்குவதில்லை
அதனால் வாசிக்க சோம்பல் படுவதுண்டு. உதாரணத்திற்கு கீழே சில வார்த்தைகள். இவற்றிற்கு ஓரளவு நானே அர்த்தப்படுத்திக்கொண்டாலும் உண்மையான அர்த்தம்
வேறாக இருக்கலாம்.

சிருங்காரநாரி - இடுப்புன்னு நினைக்கிறேன்
சீமைக்கிளுவை - முள்ளா இருக்குமோ?
கதிரை - நாற்காலி, முக்காலி, இருக்கை, மேசை இதுல எதோ ஒண்ணுதான்
சொண்டு - உதடு (இது மட்டும் சரியா தெரியும்)
றாத்தல்
அப்பியாசக்கொப்பி
வாங்கு
வலகம்ப்பாகு

இவையெல்லாம் எழுதி வைத்த வார்த்தைகள் மட்டுமே. எழுதாத வார்த்தைகளை
எலிக்குட்டி கொண்டு மேலும் கீழும் சறுக்கி கண்டுபிடிக்க முனைந்து பின் சலித்து
விட்டுவிட்டேன். ஈழத்தில் மட்டும் புழங்கும் வார்த்தைகளை இதற்கு முன் எவராவது
வலையில் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தால் அங்கு சென்று
பார்த்துக் கொள்ளலாம். இல்லாதபட்சத்தில் நண்பர்கள் முயற்சி செய்யலாம்.

பல்வேறு நாடுகளில் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்த ஒருவருக்கு புத்தகம் மட்டுமே
தனிமையை போக்க உதவியிருக்கும். அவர் படித்த, பார்த்த, அனுபவித்த உலகத்தை
இந்த 343 பக்கங்களில் அற்புதமான மொழியினால் வடித்திருக்கிறார். வெளிநாட்டின்
சூழலை வாசிக்கிறோம் என்று தோன்றச்செய்யாத எழுத்து. மிகவும் வியப்பது
இவரின் நகைச்சுவை. சுஜாதாவின் எள்ளலும் நாஞ்சிலின் மொழியும் இணைந்த
கலவையான புதுவடிவம்.

கனடாவில் கடன் என்ற முதல் கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கும்போது ஏற்பட்ட
புன்சிரிப்புடன் கடைசிவரை படிக்க முடிந்தது. கனடாவில் கடன் அட்டை இல்லாமல்
பொருள் வாங்குவது கடினம். அந்த கடன் அட்டைகளைப்பற்றிய இவரின்
நகைச்சுவையை ரசிக்காமல் இருப்பவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று
சொல்லலாம். கீழே இருப்பதை படித்துப்பாருங்கள்.

பெருமதிப்பிற்குரிய தலைமையாளர் அவர்களுக்கு.

இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட
வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வியடைந்து
கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பக்கப்பட்டுவிட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த
நாட்டில் கடன் சரித்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்புக்
கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு
வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.

எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து
சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன்
அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சரித்திரத்தை
படைத்து, மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும்
கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல் கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கிலோமீட்டர் ஓடும் சிக்கனமான
ஒரு கார் வாங்கியிருக்கிறேன் அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும்
மாத வருமானத்தில் 1% குறைவான பாலில்,கோதுமை சக்கையை கலந்து காலை உணவாகவும் ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறேன். அதைக்கூட
தாங்கள் பார்க்கலாம். உணவிலும் பங்கு கொள்ளலாம்.

ஆனால் துரதிர்ஷடவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை.
எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை
கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த
இலக்கை அடைந்து விடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும்
முக்கியம் என்று எனக்கு படுகிறது.

தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என்
கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக்காட்டுவேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையான, கீழ்ப்படிந்த, தாழ்மையான, நிலத்திலே புரளும்...



அங்கதம், பகிடி போன்ற குறிச்சொற்கள் கொண்டு விளங்க வைக்காமல் நேரடியான
நகைச்சுவை எழுத்து. அனுபவத்தை எழுத்தாக்கும்போது இருக்கும் அனுகூலமே
படிப்பவர் தன்னையும் எழுத்தோடு இணைத்துக்கொள்வதாகதான் இருக்க முடியும்.
நகைச்சுவை மாத்திரமன்றி குடும்ப உறவுகள், பாசம், நட்பு, ஆங்கில இலக்கியம்
மொழிபெயர்ப்பு, ரசனை, பயணம், விமர்சனம் என்று மொத்தம் 48 கட்டுரைகள்
அத்தனையும் ரசித்து வாசிக்கலாம்.

இத்தனை சுவாரசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் எப்படி எழுத முடிகிறது என்று
ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அனுபவக்கட்டுரை மாத்திரமல்ல மொழி
பெயர்ப்பிலும் மிகச்சிறந்த கதாசிரியர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளது அவரின்
பரந்த வாசிப்பனுபவத்தை காட்டுகிறது. ஒருவர் சிறந்த வாசகராக இருக்கலாம்,
சிறந்த எழுத்தாளராகவும் இருக்கலாம். வெற்றுமொழியை அதன் உலகத்தோடு
நமக்கு காட்சிப்படுத்துவது ஒரு கலை. ஆண்டன் செக்காவின் "வேட்டைக்காரன்"
மிகச்சிறந்த சிறுகதை. வாசித்தபின்பும் மனதை விட்டு விலகவில்லை. கடந்த
பதினைந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதை ஜெயமோகனின்
"வலை" என்ற சிறுகதையை குறிப்பிட்டிருந்தார். இது சிறந்த சிறுகதைதான்
மிகச்சிறந்த சிறுகதையா என்று தெரியவில்லை. ஜெமோவின் "திசைகளின் நடுவே"
சிறுகதைத் தொகுப்பில் "வலை" படித்தபோது திகைத்தது உண்மைதான்.

றோராபோரா சமையல்காரன்

பெஷாவரில் பணியாற்றியபோது பாகிஸ்தானிகளிடம் ஏமாந்த அனுபவங்கள். சமையல்
செய்ய ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்த குலாம் என்பவர் தாம் இருபதுவ்
வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தன் பணி அனுபவ காகிகத்தை இவர் முன்
நீட்டுகிறார். எட்டு மடிப்புகளாக பிரிந்த அந்த காகிதத்தில் பின்வருமாறு ஆங்கிலத்தில்
இருந்தது. இருபது வருடங்களாக தன்வசமிருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதி
உள்ளது என்பதுகூட அறியாமல் இருந்திருக்கிறார்.

"To whom it may concern" இதனால் சகலமானவருக்கு அறியத்தருவது

"இந்தக்கடிதத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் "குலாம் முகம்மது நிஸாருதீன்"
உங்களிடம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்று அர்த்தம். இவர் என்னிடம்
இரண்டு வருடகாலம் சமையல்காரராக வேலை பார்த்தார். இவருக்கு சமைக்க
தெரியாது. மிகவும் நல்லவர். மற்ற என்ன வேலை கொடுத்தாலும் செய்வார் என்றே
நினைக்கிறேன்".

"வில்பிரட் ஸ்மித்"


ஒரு சிறுவனின் ஆர்வத்துடன் மாயஜால புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை
படித்த உணர்வு.

பி.கு: கனநாட்களாக அர்த்தம் தெரியாத ஒரு வார்த்தை இருக்கிறது என்றால் அது "கொழுவி" என்ற வார்த்தைதான். அந்த வார்த்தையும் நூலில் இடம் பெற்று
இருக்கிறது. ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும்... அசல் அர்த்தம் தெரியவில்லை.

அண்ணாச்சியும் மீனாவும் பின்ன சிலதும்

புற்றுநோய்க்கு எதிராக அபுதாபி தமிழ்ச்சங்கத்தின் மகளிர்பிரிவு மாபெரும் விழிப்புணர்ச்சி
விழாவினை அபுதாபியில் நடத்தினார்கள். விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் எண்ணத்தில்
நடிகை மீனாவினைக் கொண்டு புற்றுநோய் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக கலந்துகொண்ட மீனாவுக்கு கலைத்தொழிலில் சிறப்பாக செயல்
பட்டமைக்காகவும் விருது வழங்கி கவுரவித்தார்கள்.

"டேய் ஒரு விழா இருக்கு வர்றியாடே" ன்னு அண்ணாச்சி போனவாரம் கேட்டார்.

வெள்ளிக்கிழமை கடவுளே பாலைவனத்துல வந்து வேலை செய்யுன்னு சொன்னாலும்
நம்ம செய்யறது கிடையாது. இருந்தாலும் பஸ், டாக்சி புடிச்சி ஒரு இடத்துலருந்து இன்னொரு இடத்துக்கு போறதும் ஒரு வேலைதானன்னு சோம்பேறித்தனம் மேலிட்டதால் "எத்தனை மணிக்கு விழா நடத்துறாங்க" என்றேன்.

சாயங்கலாம்தாண்டேன்னு சொன்னார். பெருசா வெட்டி முறிக்கற வேலை
இல்லன்னாலும் பில்டப் விடலன்னா நம்பவே மாட்டாங்கல்ல. விழாவுக்கு போக
முக்கியமான காரணியாக இருந்தது. அமீதா ஆண்ட்டி. (அரங்கத்தில் உள்ளவர்கள்
நமீதா என்றே அழைத்தனர்.)

ஒரு இடத்திற்கு தெளிவாக செல்லவேண்டும் என்றால் அண்ணாச்சியிடம் வழி
கேட்கவோ/சொல்லவோ கூடாது என்பதை எனக்கு இரண்டாவது முறையாக புரிய
வைத்தார்.

மறுபடியும் சரியான இடத்தை டாக்சி மூலம் அடைந்தேன். அரங்கின் வாயிலில்
காத்திருக்க அண்ணாச்சி வந்து உள்ளே கூட்டிப்போனார். நடிகைகள் ஒப்பனை இடும்
அறைக்கு நேராக அழைத்துப்போனார். அங்கே அமீதா வர்ணனை ஒத்திகை பார்த்துக்
கொண்டிருந்தார். இங்கே ஒன்றைக் குறிப்பிட்டே வேண்டும்.

அமீதாவும் அண்ணாச்சியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்ததுபோல
பேசிக்கொண்டிருந்தனர். நடுநடுவே மேஜர் கரகர சுந்தர்ராஜனின் புத்திரர் கரகர கவுதம்
வந்து போய்க்கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளால் அண்ணாச்சி இரண்டு நாளாக
சாப்பிடவில்லை போலும். அதை அவர் வெளிப்படுத்தியபோது சரவணபவன் அளவு
சாப்பாடு ஒன்றை அமீதா எடுத்து நீட்ட அவர் ஐந்தே வினாடிகளில் அனைத்தையும்
காலிபண்ணினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னை அப்பளம் சாப்பிடக்கூட
சொல்லவில்லை.

பின்பு பாட்டுக்குப் பாட்டு புகழ் B.H.அப்துல் ஹமீத் அறைக்கு அழைத்துச்சென்றார்.
மைக்கில் பேசுவதை விட என்ன அழகான குரல்வளம் அவருக்கு. அவரிடம்
வழக்கம்போல என்னைக்காட்டி இவர்தான் கவிஞர் கம் எழுத்தாளர் தம்பிகதிர்
என்று அறிமுக்கப்படுத்தி கொலைவெறியை தீர்த்துக்கொண்டார்.

"கவிதையெல்லாம் இயற்றுவீர்களா கதிர்"? என்று B.H.அப்துல் ஹமீத் என்னைப்பார்த்து கேட்டதும் "ங்கே" என்று முழித்து இல்லிங்க சார் என்று பதில் அளித்தேன்.
பிறகு வாயைத் திறக்கவேயில்லை.

சிறப்பு விருந்தினர்கள் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொருவராக மேடை ஏறி
அமர்ந்தனர். மீனாவின் அருகில் ஒரு அரபி உட்கார்ந்தவுடன் அரங்கமே அதிரும்படி
ஓ போட்டனர். மீனா புத்தகம் வெளியிட ஒரு ஒரு அரபி பெற்றுக்கொண்டார்.

அதற்கு முன்னதாக ஒருநூறு குழந்தைகள் பல்வேறு வேடங்களில் பல்வேறு பாடல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்க நடனமாடினார்கள்.

பின்னர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடுவராக அண்ணாச்சி அமர
மேலும் இருபெண்மணிகள் அமர்ந்தனர்.

சுவாரசியமாகவே இருந்தது. மார்கழி மாத கச்சேரிகளில் முன் வரிசை ரிட்டையர்டு
பெருசுகளுக்கு இணையாக தாளம்போட்டபடி பாடல்களை ரசித்தார் அண்ணாச்சி.
பழைய படத்தின் பாடல் பாடி முடிக்கும்போதெல்லாம் பாடல் இடம்பெற்ற படத்தின்
பெயர் மற்றும் இசையமைப்பாளர், பாடியவர் என்று அனைத்து தகவல்களையும்
திரு.அப்துல் கூறும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. மேம்ப்பட்ட
தரவுத்தள சில்லுகளை மூளையில் பதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சிறப்பாக பாடிய பெண்ணுக்கு முதல் பரிசளித்தனர். சிறந்த பாடல்களை தேர்வுசெய்த
அவர் சிறந்த குரலையும் வெளிப்படுத்தினார். மறக்காமல் அவரை சந்தித்து
பாராட்டினோம்.

நடுவராக பங்கேற்ற அண்ணாச்சிக்கு மீனா நினைவுக்கோப்பை வழங்கினார். அதை
பெறும்போது "உங்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே உள்ளது" என்று
மீனா சொன்னாராம். எங்கள் காதுகள்தான் அதைக்கேட்க கொடுத்து வைக்கவில்லை.

பிறகு ராஜ், விஜய், சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பெண்களை பிழிந்து
நடிக்கும் நடிக நடிகையர் நடனம் ஆரம்பித்தது. இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே
ஆகவேண்டும். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின்போது அற்புதமான வரிகளைக்
கொண்ட பாடல்களை பாடும்போதெல்லாம் மகிழ்ந்து பாராட்டிய அப்துல் அவர்கள்
தற்போது வெளிவரும் பாடல்களின் வார்த்தைகளையும் ஒரு பிடி பிடித்தார்.
வாடி, வாடா, நாயே, பிசாசு, போன்ற வார்த்தைகள் இடம்பெறும் பாடல்தான்
ரசிக்கப்படுவது வேதனையளிக்கிறது என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும்

ஏ ஆத்தா ரீமிக்ஸ், வாடி கப்பக்கெழங்கு, லூசுப்பொண்ணு, போன்ற புகழ்பெற்ற
பாடல்களுக்கு சின்னத்திரை சீக்காளிகள் நடனம் ஆடினார்கள்.ஆடி முடிந்ததும் ரசிகர்கள்
ஓடோடி வந்து ராஜ்காந்த், டவுசர்காந்த், விருச்சகாந்த் முதலான ஆட்களிடம்
ஆட்டோகிராப், போட்டோகிராப் என்று அவர்களை மகிழ்வித்தனர். பிறகு அப்துல்
அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.




அண்ணாச்சி காரில் (சொந்தக்கார்) நான், B.H, ஜீவராஜ் என்ற இசையமைப்பாளர்
(கின்னஸ் என்ற படத்துக்கு இசையமைக்கிறாராம்) வந்தோம்.

மகாராஜாவின் ரயில்வண்டி, மரப்பசு, நாளை மற்றும் ஒரு நாளே, யூமா வாசுகியின்
ரத்த உறவு போன்ற புத்தகங்களை பரிசளித்தார்.

இனிமையாக சென்றது வெள்ளிக்கிழமையின் மாலை.

***

குருவியின் மகத்துவம் அறிய குறுந்தகடு சொல்லி பலநாள் கழித்து கிடைத்தது.
பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு அன்பர் அறைக்குள் வந்தார். தான் குருவி
படம் நேற்று திரையரங்கில் பார்த்ததாகவும் அருமையான படம் என்றார்.
அப்படியா என்று ஆச்சரியப்பட்டு குருவியை பார்த்துக்கொண்டிருந்தேன். அவரும்
பார்த்துக்கொண்டிருந்தார். பத்துநிமிடம் கழித்து இது என்ன புதுபடமா என்று கேட்டு
என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

***

எலக்கிய பில்டப் கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டும் எவரும் என்னை எலக்கியவாதி
என்று ஒத்துக்கொள்ளவில்லை. கட்டக்கடைசியாக அபிஅப்பா மட்டும் என்னை
எலக்கியவாதி என்று சொல்லி எலக்கிய கலாய்ச்சல் பதிவுபோட்டார். அந்த பதிவு
எழுத கழிவரையில் அரைமணிக்கும் மேலாக உட்கார்ந்துகொண்டு யோசித்ததாக
கூறினார். ஏன் கழிவறையில் உட்கார்ந்துகொண்டு எழுதவேண்டும் என்று கேட்டபோது
அதிஉன்னதமான, அவருக்கே உரிய அதிபுத்திசாலித்தனத்துடான் பதிலளித்தார்.
அதாவது புனைவு எழுத உலகில் கழிவறையை விட சிறந்த இடம் வேறு எதுவும்
இல்லை என்று சொன்னார்.

ஏன் அய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்டால். அது அப்படித்தான் எலக்கியவாதின்னா
டாஸ்மாக்ல சரக்கடித்துவிட்டு சண்டை போடணும், எவனையாச்சும் திட்டனும்
கெட்ட வார்த்தைல நாவல் எழுதணும் என்று அடுக்கிக்கொண்டே சென்றார். எனக்கு
டவுசர் கிழிந்தது, தாவூ தீர்ந்தது. இவ்வளவு சிறப்பான அறிவைக்கொண்டே அவர்
கழிவறையிலேயே குடியிருந்து மேலும் மேலும் புனைவு எழுத என்னாலான உதவியை
செய்யவேண்டும். அவருடைய தாகத்தை தீர்க்கவேண்டும்.

***

பை த பை ப்ளைட்டை மிஸ் பண்ணாமல் அய்யனார் அமீரக கரையோரம் வந்து
சேர்ந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ட்ரீட்டு எப்பய்யா?

*விழா தொடர்பான புகைப்படங்கள் நாளை வெளியிடப்படும்.

Sunday, May 18, 2008

மொக்கை ரிட்டர்ன்ஸ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கதையுள்ள தமிழ்ப்படத்தை பார்த்த திருப்தி. வடிவேலு,
சில பாடல்கள், வசனங்கள் தவிர்த்திருந்தால் சிறந்த படமாக இருந்திருக்கும்.
சினிமாவுக்கென்றே பல இயக்குனர்கள் சவுகார்பேட்டை சேட்டுகளிடமிருந்து கடன்
வாங்கி வந்து வைத்துக்கொள்வார்கள். நா சுலுக்கெடுத்துக்கொள்ளும் வகையில்
பெயர்கள் இருக்கும் அவர்களைப் போல் அல்லாம் மாரிமுத்து என்ற தன் பெயருடன்
எதையும் சேர்க்காமல் தன் பெயரை வெளியிட்ட இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு கவிதையே படத்தின் மையக்கருவாக இருந்தது பலரை கவர்ந்திருக்கும். ஒரே
எழுத்துக்களுடன் ஒரே வார்த்தைகளில் இருவேறு நபர்கள் எழுதுவதென்பது சாத்தியம்
இல்லை எனினும் அதையும் மீறி கதைசொல்லி இருக்கிறார் மாரிமுத்து. படம்
முழுக்க பச்சையை அள்ளித் தெளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். என்னைப் போன்ற
பாலைவன ஆசாமிகளுக்கு குளிர்ச்சியாக இருந்தது. நீண்ட காலமாக எனக்கு ஒரு
சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தமிழ்சினிமாவில்
நடிக்கும் தகுதியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதா? இல்லை அழகான பெண்கள்
யாரும் இல்லையா? எல்லா படத்திலும் வெளிமாநில பெண்கள் நடித்துக்கொண்டேஏஏ
இருக்கிறார்கள். இது சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இல்லை என்றாலும் இங்கே
யாருமே இல்லையா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

உதாரணத்திற்கு இப்போது தயாரிப்பில் இருக்கும் பல படங்களை எடுத்துக்
கொள்ளுங்கள், மலபார் மால்களும், மும்பை மெகா மால்களுமாக இருக்கிறார்கள்.
தமிழில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் தவிக்கிறது கோலிவுட். கடைசியா
நான் பார்த்த தமிழ் நடிகை விஜயலட்சுமி என்று நினைக்கிறேன்.

கதாநாயகி அறிமுகப்பாடல் (அவரது தோற்றத்துக்கு சற்றும் பொருந்தாத வேக நடன
அமைப்புகள்)வடிவேலு நகைச்சுவை (யார்கிட்டயாச்சும் அடி வாங்கறமாதிரி காமெடிய
எவண்டா கண்டுபிடிச்சது?) நீங்களாக படம் அருமை.

படத்தின் இறுதியில் ஊர்மக்கள் திரண்டு அல்லது குடும்பமே திரண்டு காதலர்களை
ஒன்று சேர்ப்பதாக முடிக்காமல் விட்டது புதுமை.

குருவிகள் பருந்து வேகத்தில் பறக்கும் ஊரில் இவை ஓடாதது ஆச்சரியம்தான்.

----
சமீபத்தில் தாயகத்தில் இரூந்து திரும்பிய அபிஅப்பாவை போனில் பிடிப்பது மிகவும்
சிரமமாக இருந்தது. பிடித்தபோது ஏன் அழைப்பை ஏற்கவில்லை என்று காரணம்
கேட்டேன். தான் பயன்படுத்தும் மொபைல் உலகத்திலேயே ஒன்றுதான் தயாரிக்கப்
பட்டதாகவும் அதனை இயக்குவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுதான் அழைப்பை
எடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறினார். அந்த அதிசய மொபைலை
வாழ்நாள் முடிவிற்குள் நானும் காணவேண்டும். நோகியா தவிர்த்து வேறு போனை
உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை அவர் செயல்படுத்தி
வருகிறார் என்பதே சந்தோஷம்.

கடைசியாக அவர் பாவிக்கும் வகையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வத்தில்
கேட்டே விட்டேன். ஓட்டூ என்றார். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
ராஸலீலா அவரிடம் உள்ளதே!
-----

ஆங்கிலத்திலும் மொக்கைப்படங்கள் வரத்தான் செய்கின்றன நாம்தான் பார்க்கவில்லை
போலா. அனானி தியாகு என்று அமீரக பதிவர்களால் அழைக்கப்படும் நண்பர் அபுதாபி
வந்திருந்தார். சினிமா போகலாம் என்று முடிவானது. குசேலன் பார்க்கும்முன் "கத
பறயும் போள்" பார்க்கவேண்டும் என்ற என் ஆசையை தீர்க்கலாம் என்றால் அதற்கு
முன் அந்த படத்தை தூக்கி விட்டு குருவியை ஓடவிட்டார்கள். அந்த படத்திற்கு
டிக்கெட் கிடைக்காது என்று தெரியும். கிடைத்தாலும் அதை ஏன் பார்க்கவேண்டும்.
பிறகு கப்பியை போல பதிவெழுத வேண்டும். எதற்கு வீண் நமைச்சல்.




எட்டு திரையரங்குகள் கொண்ட அந்த மாலில் சுற்றிக்கொண்டிருக்கும்போது பல
நாட்டு பிகர்களை தரிசிக்கும் வாய்ப்புகிட்டியது. நண்பர் அயர்ன்மேன் செல்லலாம்
என்று சொன்னார் "என்னங்க நீங்க அதெல்லாம் குழந்தைகளுக்காக எடுக்கற படம்.
நாமல்லாம் நல்ல தரமான படம் பாக்கணும் என்று அங்கே காட்சிக்கு இருந்த
போஸ்டர்களிலே நீளமான தலைப்புள்ள படமாக தேர்வு செய்து அதற்கு போலாம்
என்றேன். அரைமனதுடன் சென்றோம்.

Before the Devil Knows You're Dead

அண்ணன் தம்பிகள் தங்களது சொந்த அப்பாவின் தங்க வைர நகைகள் அடங்கிய
கடையை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்கள். செயல்படுத்தும்போது
எதிர்பாராத விதமாக அம்மா கொல்லப்படுகிறாள். பிறகு உண்மை வெளிவந்து
அப்பா அவர்களை கொல்கிறார். படம் சுமாருக்கு படுபாதாளத்தின் அடியில்
இருந்தது. இந்த படத்திற்கு எதற்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள்
என்று தெரியவில்லை. குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படும் ஹாலிவுட்
கதாநாயகனை திரையில் காண்பித்ததை விட என்ன வித்தியாசம் உள்ளது
இந்த படத்தில்? பார்த்தவர்கள் விளக்கலாம்.
----

தொடர்ச்சியாக எனது பதிவுகளை வாசிக்கும் அவலநிலைக்கு உள்ளான ஒருவர்
என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். சந்தித்தேன்.

குருவி
சிவாஜி
அந்நியன் போன்ற படங்கள் வணிக படங்கள். அவற்றை ஏன் நல்ல படம் இல்லை
என்று வலையில் பரப்புகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவையும் சிறந்த படங்கள் என்று ஆணித்தரமாக வாதாடினார். ஷங்கரைப்போல
விஷயஞானம் உள்ளவர் போல!

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எப்படி பத்மபூஷன் விருது வாங்குவது
என்று கேட்டார். திரு திருவென்று விழித்தேன். எதாவது அரசியல் கட்சிக்கு
கட்சி நிதின்ற பேர்ல சிலபல கோடிகள கொடுங்க என்று சொல்லி சமாளித்தேன்.
அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர் சமீபத்தில் வாங்கி இருந்தாராம்.
இவருக்கும் ஆவல் வந்துவிட்டது போல. தவறில்லை கடின உழைப்பு இருந்தால்
கண்டிப்பாக வாங்கிவிடலாம் நண்பரே!

அருமையான காப்பி கொடுத்தார். உடம்பில் பச்சைக்குத்துதல், பேஷன் டிசைன்
பத்மபூஷன், வணிகசினிமா பத்தியெல்லாம் நிறைய எழுதுங்க. சும்மா எல்லாரும்
எழுதற மாதிரி எழுதிகிட்டு இருக்காதிங்க என்று அறிவுரை கூறினார். இதற்காகத்தான்
இவ்வளவு காலம் காத்திருந்தேன். வெறுமனே புத்தகங்கள் பற்றியும், உலகசினிமா
பற்றியும், நாவல்கள் பற்றியும் எழுதாமல் உபயோகமாக எழுதச்சொன்னார்.
உள்ளூர் சினிமாவ மொதல்ல கவனிங்க அப்புறம் உலகசினிமா போகலாம் என்றார்.
அறிவுரைக்கு தன்யனானேன் நண்பரே!

Saturday, May 10, 2008

காலம் தவறிய சொற்களின் குவியல்

கடிதங்கள் எப்போதுமே நேரில் பேச முடியாத வார்த்தைகளால் நிரம்பிருக்கின்றன.
எந்த காலத்திலும் திருப்பி வாங்கிக்கொள்ள முடியாதவை அவை. தொலைபேசி
உரையாடலைப்போல் அல்லாத அவற்றின் மீது எனக்கு மிகுந்த காதல் உண்டு. என்
பதின்ம வயதில் பலபெண்களால் ஈர்க்கப்பட்டிருந்தும் ஒருத்திக்கு கூட கடிதம்
எழுதாததை நினைத்தால் வேதனையளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கடிதம் இனியும்
எழுத சாத்தியமில்லாமல் போவதால் இப்போதே எனக்கு ஒரு கடிதம் எழுத
வேண்டும் என்று தோன்றுகிறது. என் காதலிகளான நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம்.
இந்த கடிதத்தை உங்கள் எவர் கைக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது என்
பொறுப்பு. பிறகெதற்கு கடிதம் என்று கேட்கலாம். இக்கடிதத்தை எழுதி முடித்த
கணம் நீண்ட காலமாக என் மனதை ரணமாக்கி வந்ததை ஒரு முடிவுக்கு கொண்டு
வரலாம். ஆகவே காதலிகளே பயம்கொள்ள அவசியமில்லை.




அன்புள்ள தீபா

இக்கடிதத்தை எழுதும் கணம் என் இடது கன்னத்தில் உனது உதடுகள் விட்டுச்சென்ற
எச்சிலை தடவிக்கொள்கிறேன். எப்போதும் முத்தத்தோடு எச்சிலையும் சேர்த்தே
விட்டுச்செல்பவள் நீ. இதுகுறித்து எனக்கு எதுவும் கோபம் இல்லை. உன் அம்மா
உனக்கு சோறூட்டும்போது அடம்பிடிப்பாய். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் நமக்கு திருமணம் செய்து வைப்பதாக சொன்னபிறகுதான் நீ சாப்பிடுவேன் என்றது ஞாபகமிருக்கிறதா. பிறகு ஒவ்வொரு முறை இரவு உணவின்போது அதே
வாக்குறுதியை பெறுவதில் உனக்கு ஆனந்தம். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது.
லிட்டில் மேரி பள்ளியை மறந்திருக்க மாட்டாய் என நம்புகிறேன். வகுப்பு பிரித்து
உட்கார வைக்கும்போது என்னைத் திரும்பி பார்த்துக் கொண்டே அழுது சென்றதை
எப்படி மறக்க முடியும் தீபா? நம் காதல் மூன்றாண்டுகள் வளர்ந்திருக்குமா? நாம்
மூன்றாவது படிக்கும்போது கடைசியாக பார்த்தது. இருபது ஆண்டுகள் கடந்து
விட்டது இப்போது. நாங்கள் வீட்டை காலி செய்தபோது நீ அழுவாய் என்று
உன்னை வேறு இடத்திற்கு கொண்டு சென்றார்கள் உன் அப்பாவும் அம்மாவும்.
அதை நீ அறியாமல் சைக்கிளில் ஏறி அமர்ந்து சென்று விட்டாய். உனக்கும்
சேர்த்து நான் அழுதேன் தீபா. உன் தங்கையிடம் பத்து நாளில் திரும்பி வந்து
உன்னைப் பார்ப்பேன் என்று சொன்னதை உன்னிடம் சொன்னாளா?

கேட்க மறந்துவிட்டேன் தீபா? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
உன் கணவனுக்கு காபி கலந்து தருகிறாயா? மிக்சியை ஓடவிட்டு சீரியலின் வசனம்
புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாயா? குழந்தைக்கு பாலூட்டுகிறாயா?
அல்லது அவசர அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறாயா?
நீ இறந்திருக்க மாட்டாய் என நம்புகிறேன். இப்போது நீ எப்படி இருப்பாய் என்று
தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை. உன் பிஞ்சு முகத்தை நினைக்கையில்
நானும் அந்த பருவத்திற்கே செல்கிறேன். இப்போது வளர்ந்து பெரியவள்
ஆகியிருப்பாய். மழலையின் சுவடுகள் மறைந்து போய் வேறு ஏதோ உருவில்
நீ காட்சியளிப்பதை நான் காண விரும்பவில்லை. என்றாவது துர்சொப்பனம்
காணும்போது நான் இறந்திருப்பேன் என்பதை யூகித்துக்கொள். அதற்குமுன்
நீ ஐந்து வயது சிறுமியாக மாறி என் கன்னத்தில் முத்தமிடுவாயா தீபா?

வருகிறேன் தீபா.

அன்புள்ள கவிதா

எனக்குப் பிடித்த பெண்களை நான் காதலி என்றே அழைத்துக்கொள்வென். ஆகவே
கவிதா நீ அதிர்ச்சி அடையவேண்டிய அவசியமில்லை.

நம் முதல் சந்திப்பு ஐந்தாம் வகுப்பு படித்தபோது நடந்தது. நீ ஆர்ப்பாட்டமாக
பள்ளிக்கு வந்திறங்கிய அன்றைய தினம் நான் மறக்க முடியாத நாள். செருப்பில்லாமல்
பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் நீ குதிரை பூட்டிய வில்வண்டி
ஒன்றில் இருந்து வகுப்பிற்கு வந்தாய். அன்றே முடிவுசெய்துவிட்டேன் உன்னை
காதலிக்க வேண்டும் என்று. வகுப்புத் தலைவனாக உனக்கு பல சலுகைகள்
அளித்தும் நீ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உன்னிடம் பேச வரும்
போதெல்லாம் ஏளனமாக பார்ப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
சிலேட்டில் குண்டு குண்டு வார்த்தைகளால் கவிதா என்று எழுதி உன்னிடம்
காண்பித்தபோது அதன்மேல் தண்ணீர் ஊற்றி அழித்தாய் ஞாபகமிருக்கிறதா
கவிதா? அழகை உனக்கு பிடிக்காதா? நீ கூடத்தான் அழகாக இருக்கிறாய்.

என் நண்பர்களோடு பொன்வண்டு சேகரிக்கவும், திருட்டு மாங்கா ருசிக்கவும்
ஒரு மாந்தோப்பிற்குள் நுழைந்தேன். கூட்டு வகையினை சேர்ந்த மாங்கா
தோப்பு அது. உப்பு, காய்ந்த மிளகாயும் வைத்து சாப்பிட அதையும் கால்சட்டை
பையிலேயே வைத்திருந்தோம். திடிரென உன் சித்தப்பா வந்துவிட்டார்.
எங்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்தார். உங்களுக்கு சொந்தமான தோப்பு
என்று தெரிந்திருந்தால் நான் சத்தியமாக நுழைந்திருக்க மாட்டேன். தீர
சாகசத்தை செய்ததைப் போல உன் சித்தப்பன் குடும்பத்தையே அழைத்து
எங்களை காண்பித்தான். அப்போதாவது சொல்லியிருக்கலாம் என்னை உனக்கு
தெரியும் என்பதை. அன்றுதான் கவிதா உன் மீது எனக்கு உச்சகட்டமாக
வெறுப்பு வந்தது ஆனால் நேரில் உன் முகம் காண்கையில் காதலைத்தவிர
வேறெதுவும் வரவில்லை.

ஐந்து முடித்து ஆறு செல்லும்போது நீ ஹாஸ்டலில் சென்று படிப்பதாக நண்பர்கள்
மூலம் அறிந்தேன். இப்போது என்ன செய்கிறாய் கவிதா? எனக்குத் தெரியும்
உனக்கு நல்ல கணவனை உங்கள் அப்பா வாங்கித் தந்திருப்பார். அனேகமாக
நீ வெளிநாட்டில் கூட இருக்கலாம். இக்கடிதம் உனக்கு வர வாய்ப்பில்லை ஆகவே
எந்த குற்ற உணர்வுமில்லாமல் அபஸ்வர குரலுடன் கூடிய உன் குரலுடன் மிதமான
ஷவர் குளியலில் சந்தோஷமாயிறு கவிதா. உன் கணவன் வெளியே சனியன்
என்று மனதுக்குள் வைது கொண்டிருப்பான்.

அழகான சுகந்திக்கு

உன் தீர்க்கமான கண்களுக்கு இணையாக உலகில் எந்தக் கண்களுமே இருக்க
வாய்ப்பில்லை சுகந்தி. ஆச்சரியமாக இருக்கும் உனக்கு. நான் எப்போது உன்னை
காதலித்தேன் என்று. அதற்கு முன்பாக உன்னிடம் சில மன்னிப்புகள் கேட்க
வேண்டும் சுகந்தி. ஆம் நீ குளித்துக் கொண்டிருக்கும்போது நான் உன்னை
முழுநிர்வாணமாக பார்த்துவிட்டேன். ஆனால் அதை நீ அறியவில்லை. ஒரு
பெண்ணை அதற்கு முன் நிர்வாணமாக கண்டதில்லை என்பதால் அன்று முழுவதும்
ஒருவிதமான குற்றவுணர்வுடன் கூடிய மனநோய்க்கு ஆளானேன். என்னை எனக்கு
பிடிக்காமல் போனது. நாயக்கர் வீட்டு தோட்டத்திற்கு நீ தினமும் செம்பருத்திப்பூ
பறிக்க வருவாய். அதற்கு முன்னரே நான் அங்கு சென்று உனக்காக காத்திருப்பேன்.
எவரையும் உனக்கு முன் பூப்பறிக்க விடவும் மாட்டேன். பள்ளிச்சீருடையுடன்
நீ தூரத்தில் வரும்போதே தென்னையின் பின் ஒளிந்து விடுவேன். ஒற்றைச்
செம்பருத்தியை ஏன் சுகந்தி உனக்கு பிடிக்கவில்லை. அடுக்கு செம்பருத்தியை
விட அதுதான் அழகாக இருக்கும். அடுக்கு செம்பருத்தி ஒருவிதமான ஒழுங்கு
இல்லாமல் இருக்கும். அதை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இதையும் உன்னிடம்
ஒருமுறை சொல்லியே இருக்கிறேன்.

வெகுநாட்கள் கழித்துதான் நீ என்னைவிட ஒருவயது மூத்தவள் என்று அறிந்தேன்.
எப்படி எனக்கு முன் நீ பிறந்தாய் சுகந்தி. இப்போதுதான் வயதுக்கும் காதலுக்கும்
சம்பந்தமில்லை என்று அறிந்தேன். இப்போது என்னை ஏற்றுக்கொள்வாயா சுகந்தி?
உன் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து உன்னை வரவேற்கிறேன்.

அன்புள்ள தேவிக்கு

கொஞ்சம் விவரம் தெரிந்த பின்பு நான் சந்தித்த முதல் பெண் நீதான். ஆச்சாரமான
அய்யர் வீட்டு பெண்ணான உன்னை காதலிப்பதாக நண்பர்களிடம் பெருமிதமாக
சொன்னதை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். உன்னிடம் பேச எனக்கு
நிறைய வாய்ப்புகள் இருந்தும் எனக்கு அதிக தயக்கம் உண்டு. காரணம் நீ
மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி. நான் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவன்.
தும்பைப்பூ நிறத்தில் நீ வெண்ணிற ஆடைகளுடன் பள்ளிக்கு புறப்பட நானோ
என் துருப்பிடித்த சைக்கிள் கிரீஸ் கரை தொய்த்த பேண்ட் அணிந்து செல்வேன்.
ஆனால் இந்த பாரபட்சமெல்லாம் துடைத்து எறியும் விதமாக உன் அன்பு என்னை
மாற்றியிருந்தது. நீ மொட்டை மாடியில் நின்று காட்டிய சைகைகளுக்கு இன்றுவரை
எனக்கு அர்த்தம் புரிந்ததே இல்லை. ஆனாலும் அதை ரசித்துக் கொண்டிருப்பேன்.
பதினொன்றாம் வகுப்பு விடுமுறை நாட்களில் நமக்குள் நெருக்கம் அதிகமானது.
உனக்கு சைக்கிள் ஓட்ட கத்துகொடுத்ததை இன்றுவரை பாக்கியமாக கருதுகிறேன்.
வாடகை சைக்கிள் எடுக்க அம்மாவின் சேமிப்பில் இருந்து நிறைய திருடி இருக்கிறேன்.
ஆனால் அதெல்லாம் ஒரு திருட்டே அல்ல.

புத்திசாலிப்பெண்ணான நீ ஒரே வாரத்தில் நன்றாக ஓட்ட பழகினாய். நாம் முத்தமிடும்
அளவுக்கு நெருங்கினோம். உன்னிடமிருந்து வரும் பாண்ட்ஸ் பவுடரின் வாசனைக்கு
நான் அடிமை தெரியுமா? அதற்க்காகவே மிகவும் நெருங்கி அமர்ந்து பேசுவேன்.
இப்போது என்ன பவுடர் உபயோகிக்கிறாய்?

உன் அக்கா உன்போல அறிவானவள் அல்ல. அவளுக்கு அப்படி என்ன அரிப்பு?
ஆச்சாரத்தை கெடுப்பது போல எவனுடனோ ஓடிவிட்டாள். அவள் எவனுடனோ
ஓடியிராவிட்டால் நான் உன்னுடன் எங்காவது ஓடியிருப்பேன். அவள் திரும்பி
வந்துவிட்டாளா? வந்தால் ஒரு பளார் அறையுடன் என் நன்றியைச் சொல்.
அதற்கு முன் இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்றாவது சொல்.


அன்புள்ள தேன்மொழி.

உன்போல கருணையுள்ளவள் என் தாய் மட்டுமே. என் காதலிகள் வரிசையில் நீ
இருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? உன் அழகு குறித்து
நம் பள்ளியே கேலி செய்தது உன்னை தினமும் அழச்செய்திருக்கும். ஆனால்
அபாரமான உன் படிப்பறிவைக் கண்டு தலைமையாசிரியரே பாராட்டியிருப்பதை
நம் பள்ளி அறியும். என்மேல் ஏன் தேன்மொழி உனக்கு அவ்வளவு பிரியம்?
நான் விடை தேடிக்கொண்டிருக்கும் கேள்விகள் முதன்மையானது இதுதான்.
எனக்காக வீட்டுப்பாடங்களை என் நோட்டுபுத்தகத்தில் எழுதுவாய். எனக்குப்
பதிலாக ஆசிரியரின் கேள்விக்கு விடையளிப்பாய். அறிவியல் கூடத்தில்,
கணக்கு சொல்லித்தருவதில், படிப்பதில் ஆர்வத்தை அதிகரிக்க வைத்ததில்
நீ என்மீது காட்டிய அக்கறை அளவிட முடியாதது. அத்தனை பேர் இருக்க நீ
என்மீது மட்டும் ஏன் அதிகபட்ச அன்பு செலுத்தினாய்?

உன்னை கருவாச்சி என்று பலர்முன் அழைத்தபோது கார்த்திக்குடன் சண்டையிட்டேன்
மறுநாள் வகுப்பரையில் நீ என்னை கண்கள் பனிக்க பார்த்தாயே அதையே என்மீது
உன் அளவில்லாத அன்பின் பதிலாக ஏற்றுக்கொள்ளட்டுமா? எதுவாயினும் நான்
என் காதலை உன்னிடம் சொல்லாததில் கூட ஒரு சுயநலம் இருக்கிறது. கார்த்திக்
பலர் முன்னிலையில் சொன்னான். நான் உன்னிடம் சொல்லவில்லை. ஆனால்
உன்மீது தாய்மையுடன் உள்ள என் காதலை நீ அறியமாட்டாய். என் காதலை
தெரிவிக்கும் அக்கணத்தில் பரிதாபத்தில் விளைந்ததாக நீயும் புனிதமான நம் நட்புடன்
கூடிய காதலை நானும் எங்கு சென்று மீட்போம்?. அதனால்தான் நான் உன்னிடம்
என் காதலை தெரிவிக்கவேயில்லை. ஆனால் இன்றுவரை உன்னை நினைக்கும்போது
மனதுக்குள் நிறைவாக இருக்கிறது தெரியுமா தேன்மொழி?

உனக்கு இன்னும் திருமணம் ஆகாதது தெரிந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்
அதற்காக மன்னித்து விடு தோழி. இன்னமும் நான் உன் நினைவிலிருந்தால் நம்
அடுத்த சந்திப்பில் என் காதலை தெரிவிப்பேன் காத்திரு தோழி. நாமிருவரும்
இக்கடிதத்தை ஒருசேர வாசிப்போம்.

அன்புள்ள அமுதா

உன் குரலைப்போன்று இனிமையான குரல் இந்த உலகில் நடிகைகளுக்குத்தான்
இருக்கிறது. உன் தங்கை நலமா? நினைவிருக்கிறதா அமுதா?

ஒருநாள் அடைமழை... தெருவில் எவருமில்லை. நீயும் உன் தங்கையும் மிக
சிரமத்துடன் ஒரு குடைக்குள் முழுதாக நனைந்தபடி வந்தீர்கள். ஒரே நேரத்தில்
ஒரு நிலவையும் ஒரு குட்டி நட்சத்திரத்தையும் மின்னல் கீற்றின் நடுவே பார்த்தது
போல இருந்தது. அதுமுதல் உன்மீது பைத்தியம் ஆனேன். நீயும் நானும் ஒரே
கல்லூரியில் படித்தது இன்னும் எனக்கு வலுசேர்த்தது. அழுத்தமாக உன்மீது
நான் பார்வையை பதியவிடுவதால் நீ என்மீது எரிச்சல் அடைந்து "உனக்கு என்ன
வேணும்னு" என்னிடம் கேட்டாய் நினைவிருக்கிறதா? அதுதான் நமக்குள் நடந்த
முதல் சம்பாஷணை. அன்றுமுதல் நாம் தினந்தோறும் பேசுவதை ஒரு வேதமாக
எடுத்துக்கொண்டோம். விடுமுறை நாட்களில்கூட நாம் தொலைபேசியும் பேசுவோம்.

குழந்தையைப்போல
பூனையின் பாதத்தைப் போல
மானின் விழியுயர்த்தல் போல
எப்படி அமுதா உன்னால் இவ்வளவு அழகாக ஏற்ற இறக்கங்களுடன் கொஞ்சிப்பேச
முடிகிறது?

பெண்களுடன் அதிகமாக பேசியதை கணக்கெடுத்தால் என் வாழ்க்கையில் உன்னிடம்
மட்டுமே அதிகம் பேசியிருப்பேன். நிறைய சந்தோஷமாக இருந்ததாலோ என்னவோ
திடிரென பயங்கர விவாதத்துடன் நாம் பிரிந்தோம். அழுக்குகளை நான் மறந்து
அச்சடித்த பிரிக்கடிதத்தை கொடுத்தபோதும் நீ ஏற்கவில்லை. உனக்காக என்
நேத்திரங்கள் தினமும் கசிந்தது உனக்கு தெரியாது. அதைத் துடைக்கத்தான்
ஜெயலஷ்மி வந்தால். ஆனால் அவளை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தெரியுமா?
அதையும் நீ தவறாகவே புரிந்துகொண்டாய். அவளுக்கு பாசாங்குகள் நிறைந்த
கண்கள் அதை நீ கவனித்திருக்கிறாயா அமுதா? வாய்ப்பில்லை.

முடிந்தது முடிந்தது. வாழ்வில் நான் காதலை முழுமையான அர்த்தத்துடன் புரிந்து
காதலித்தது உன்னுடன் மட்டுமே. உன் தங்கை இப்போது உன்னுடன் அழகாக
இருப்பாள் என்று நினைக்கிறேன். இதையும் தவறாக புரிந்துகொள்ளாதே.

சாந்தி, குறலி, ரம்யா, ஷோபா, நஸீமா, சுஹாசினி, ஷேனாஸ், உஷா
மற்றுமொறு சாந்தி,

உங்களை காதலிக்காதது குறித்து வருந்துகிறேன்.

கடிதத்தை எழுதி முடிக்கையில் உதட்டை விட்டு பிரிக்காது ஒரு சிகரெட்டை ஊதி
விடவேண்டும் என்ற சந்தோஷம். விசில் அடித்தபடி எழுந்து வெளியே சென்றேன்.
அங்கொரு நட்சத்திரம் என்னைப்பார்த்து கண்சிமிட்டியது. ஆண்டாண்டு காலமாக
அப்படிதான் ஒளிர்ந்து வருகிறது. நாம்தான் தவறாக அர்த்தம் கொள்கிறோம்.
ஒருதலைக் காதலைப்போல.

Monday, May 05, 2008

ஞானக்கூத்து - மா.அரங்கநாதன்

அந்த பழைய புத்தக கடை பெண்கள் பள்ளிக்கும் காய்கறி மார்கெட்டுக்கும்
பின்புறம் இருந்தது. காய்கறிகளின் அழுகின வாடை. சுவருக்கு அந்தப்பக்கம்
பள்ளிப் பெண்களின் மனன கோஷம். புத்தக கடையை வெளியிருந்து பார்ப்பவர்
காயலான் கடை என்று சொல்லத்தகுந்த தோற்றம். அந்த வழியாக நடந்து
கடக்கும்போது உள்ளே நுழைந்து பார்க்க தோன்றியது. குறிப்பிட்ட சில
எழுத்தாளர்களின் பெயர் சொல்லி அவர்கள் எழுதிய புத்தகம் எதாவது இருக்குமா
என்று கேட்டேன். அவரோ யார் எழுதினது என்ற விவரமெல்லாம் தெரியாதுங்க.
ஆனால் எதோ சிலது இருக்கும் நீங்களே தேடி பாருங்க, கிடைச்சு பிடிச்சிருந்தா
எடுத்துகிட்டு போங்க என்றார்.

சுந்தர ராமசாமியின் "மேல்பார்வை" சிறுகதை ஒன்று உருப்படியாக கிடைத்தது.
ஓஷோ புத்தகம் ஒன்று (இன்னமும் பிரிக்கவில்லை) இரண்டு மூன்று கவிதை
புத்தகங்கள். பிரபலமே இல்லாத சிலரின் கவிதைகள். புகழ் என்ற வட்டம்
இருந்திருந்தாலோ, அல்லது பிரபலாமன ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தால் புகழ்பெற்றிருக்கலாம் அவை. எங்கு பார்த்தாலும் மண்மலர், யவனராணிகளும்
இருந்தது. சாண்டில்யன் வாங்கிக்குங்க சார் அதான் "பாஸ்ட் மூவிங்" என்றார்.
அது இல்லன்னா இது எடுங்க என்று ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களை காட்டினார்.
அது ஒரு மலைபோல் குவிந்திருந்தது. எவரும் படித்தவுடன் இங்கு வந்து போட்டுவிடுவார்களோ என்று கூட சந்தேகம் வந்தது.

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச்சிறுகதைகள் ஒன்றை வாங்கினேன். எல்லாம்
முடிந்து காசு கொடுத்து புறப்படும்போது வாங்குபவர்களை தெம்பூட்டும் விதமாக
ஒரு புத்தகத்தை இனாமாக கொடுத்தார். "யாருமே வாங்கல சார் ரொம்ப நாளா
இருக்குது". அதுதான் மா.அரங்காநாதன் அவர்கள் எழுதிய ஞானக்கூத்து என்ற
சிறுகதை தொகுப்பு.

முன்பே கதாவிலாசத்தில் மா.அரங்கநாதனைப் பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே
படித்திருந்தேன். எங்கு கிடைக்கலாம் இவை என்று யோசனையில் அவற்றை
வாங்கும் முயற்சியில் மட்டும் இருந்தேன். மேற்கொண்டு எதையும் செய்யவில்லை.

அப்புத்தகத்தின் முதல் பக்கங்கள் சில இல்லாததினால் அதை நாவல் என்று எண்ணியே
வாசிக்க ஆரம்பித்தேன்.வரிசை எண்களையும் அத்தியாயம் என்று நினைத்தேன்.
ஒவ்வொரு சிறுகதையிலும் பிரதான பாத்திரமாக முத்துக்கருப்பன் என்பவர் இருந்தார்.
ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாது இருந்தது. இணையத்தில் மறுபடியும்
அரங்கநாதனைப் பற்றிய கதாவிலாசத்தை வாசித்தபோது சிறுகதை தொகுப்பு என்று
குறிப்பிட்டிருந்தது. ஒரே பெயர் அனைத்து சிறுகதையிலும் வந்தாலும் அனைத்தும்
தனித்துவம் கொண்ட சிறுகதைகள்.

அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர். மிக நுண்ணிய அவதானிப்புகளை தமிழ்ச்
சிறுகதை வரலாற்றின் ஆரம்பத்திலேயே எழுதியவர். இப்போது வாசிக்கும்போது கூட
பல விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நகரத்தின் இயல்பை பிரதிபலிப்பதாகட்டும்
கிராமத்தின் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகட்டும் என்று எல்லாமும் காட்சிப்படுத்த
முடிகிறது.

நீங்கள் எங்காவது வழிதெரியாத இடத்தில் சிக்கி தடுமாறி இருக்கிறீர்களா? ஆரம்ப
இடத்திலே கடைசியாக வந்து சேர்ந்து இருக்கிறீர்களா. அப்போது உங்கள் மனநிலை
என்னவாக இருக்கும். நகரத்து நெரிசலில், அனைத்து தெருக்களும் ஒன்று போலவே
காட்சியளிக்கும் குழப்பநிலையின்போது உங்கள் உணர்ச்சிகள் என்னவாக இருக்கும்.

ஒருமுறை அய்யனார் என் அறைக்கு வர வழிகேட்டார். அதற்கு முந்தின தினம் கூட்
வந்திருந்தார். இன்று வழிமறந்து விட்டது போலும். ஐந்துக்கும் அதிகமான முறை
செல்பேசியில் அழைத்து வழிகேட்டு சரியாக தவறான பாதையில் சென்று எங்கோ
சென்றுவிட்டார். மறுபடியும் அழைத்து "என்னை எப்படியாச்சும் இந்த குழப்பத்துல
இருந்து காப்பாத்துடா" என்று கதறி அழுவாத குறை. கருணையற்ற கோடையில்
வழிதெரியாது நிற்பவருக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. நானே நேரில்
சென்று அழைத்து வந்தேன். நகரங்களின் அமைப்பு அப்படி. தினமும் சென்று
வந்தாலேயொழிய வேறு வழி இல்லை.

ஞானக்கூத்து நூலின் முதல் சிறுகதை இப்படிதான் ஆரம்பிக்கிறது. பிரம்மாண்டமான
நகரத்தின் எதோ ஓர் மூலையில் அபூர்வமான திரைப்படம் திரையிடப்பட்டிருப்பதாக
அறிந்து அதைக் காண புறப்படுகிறான் முத்துக்கருப்பன். செல்லும்போது பாதை
குறித்த குழப்பம். அவரவர் ஒரு வழி சொல்கிறார்கள். மிகுந்த சிரமத்துக்கிடையில்
திரை அரங்கினை அடைகிறான். சொற்பத்திலும் சொற்பமான பேர் ரசிக்கிறார்கள்.
படம் முடிந்து ரயில்நிலையம் செல்லும்போதும் குழப்பம். மறுபடியும் வழிகேட்டு
வழிகேட்டு நடக்கிறான். இறுதியாக தண்டவாளத்தை காண்கிறான். தண்டவாளத்தை
தொடர்ந்தபடி செல்கிறான். பேரிரைச்சலுடன் ரயில் வருகிறது பயந்து பின்வாங்கி
பக்கத்து தெருவில் நுழைகிறான். திரும்பவும் வழிதவறுகிறது, இருட்டு, ஆள்
இல்லாத நீண்ட தெருக்கள். தூரத்து சோடியம் விளக்கை நோக்கி கால்கள்
விரைகின்றன. நெருங்குகையில் சற்றுமுன் பார்த்த அதே திரை அரங்கின் வாசலில்
அவன் நிற்கிறான்.

மற்றொரு சிறுகதையான எலி என்ற சிறுகதையை அடக்குமுறையில்தான் வன்முறை
பிறக்கிறது என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இக்கதையும்
முத்துக்கருப்பனை சுற்றியே வரும். உயிர்களை துன்புறுத்துவதற்கு எதிரானவரான
முத்துக்கருப்பன் சிற்றறிவுடைய உயிரினங்களை கூட கொல்லத்துணிபவர் அல்ல
அவருடைய மனைவியும் மகளும்தான் வீட்டில் அதம் பண்ணும் எலிகளை
படீரென்று கொல்லும் நேரத்தில் வெளியில் நிற்பார். தன் நண்பனுடைய நிறுவனத்தில்
மகளுக்கான நேர்முக அழைப்புக்கு இவரும் வரவேண்டுமென மகள் சொல்கிறாள்.
அரைமனதுடன் செல்கிறார். அலுவலகத்தின் உள்ளே
"கொல்"
"இன்றே கொல்"
"விடாதே"

எலி பாஷாணம் முதலான பொருள்களை தயாரிக்கும் நிறுவனம் அது.

என்ற வாசகங்கள் இருக்கிறது. தன் தந்தையின் உதவி கிடைக்காது என்பதை அவளே
புரிந்துகொள்கிறாள். மவுனமாக மு.க வெளியேறுகிறார். தூரத்தில் பிரம்மாண்டமான
பிள்ளையாருடன் கூட்டமாக மக்கள் கூச்சலிட்டபடி வருகிறார்கள். பிள்ளையாரின்
காலுக்கருகில் பெரியதொரு எலி எதையோ தின்கிறது. அவருக்கு பின்பக்கம் ஒரு
அழகிய முகம்மதியர் பள்ளிவாசல் இருக்கிறது. அங்கும் கூட்டமாக சிலர்.

அக்கூட்டத்தில் அவரும் சிக்கினார். இப்படியாக முடிகிறது.

அடக்குமுறைக்கு எதிராகத்தான் வன்முறை பிறந்திருக்க வேண்டும்.

சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். ரயிலில் செல்லும்போது
ஜன்னலினூடே மலையை ரசிப்பது, குழந்தை அழும் சத்தம், ஆங்கில புத்தகத்துடன்
ஏளனமாக மற்றவரை பார்ப்பவர், தயிர்சாத பொட்டலம், சூழ்நிலையை இத்தனை
நுண்ணிப்பாக கதையில் குறிப்பிடுவதுதான் வாசகரை ஆர்வத்துடன் வாசிக்க
செய்யும். வெறுமையான வார்த்தைகளை நிறைத்து புனையப்படும் கதைகளுக்கு
மத்தியில் உணர்வுகளை எழுத்தாக்குவது சாதனைதான்.

ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பது போலவே ஏடு தொடங்குதல் குறித்த கதை
என் தலைமுறையில் கூட இல்லை. இப்படி நிறைய விஷயங்களை தொலைத்து
விட்டுத்தான் இந்த நிலையை நாம் அடைந்திருக்கிறோம்.

வெகுஜன வாசகர் மத்தியில் அறியப்படாத படைப்பாளியாக இருப்பினும் இலக்கிய
வட்டத்தில் அறிமுகம் தேவைப்படாதவர் அரங்கநாதன். "முன்றில்" என்ற
இலக்கிய இதழின் ஆசிரியராக எல்லாராலும் அறியப்பட்டவர். இவரின் பல்வேறு
படைப்புகள் தேடிப்பார்த்தாலும் கிடைக்குமா என்று தேரியவில்லை. சில
எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே முதல் வாசிப்பிலேயே அவரின் பிற
படைப்புகளையும் படிக்கவேண்டும் என்று தோன்றும். அந்த எண்ணமே இவரின்
படைப்புகளை வாசிக்கும்போதும்.

பறளியாற்று மாந்தர், காளியூட்டு என்ற நாவலும், காடன் மலை, வீடுபேறு,
ஞானக்கூத்து, என்ற சிறுகதை தொகுப்புகளும், பொருளின் பொருள் கவிதை
என்ற உரைநடை கவிதையும் படைத்திருக்கிறார்.

The old man and sea ஆங்கில நாவலை தமிழில் "கிழவனும் கடலும்" என்று
மொழிபெயர்த்த எம்.எஸ் என்று எல்லாராலும் அறியப்படும் எம்.சிவசுப்ரமணியம்
என்பவரின் சகோதரர் மா.அரங்கநாதன்.

Thursday, May 01, 2008

மொக்கை

கமலின் தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவை சம்பளமில்லாத விடுமுறை போட்டு
பார்த்தேன் கலைஞர் தொலைக்காட்சியில். இதுவரை பார்க்காத கமலை மேடையில்
பார்க்க சகிக்கவில்லை. வருபவர் போவரெல்லாம் குடுத்த காசுக்கும் மேல் கூவிக்
கொண்டிருந்தனர். வைரமுத்து ஒருபடி மேலே போய் "உன்னை மிஞ்சிட உலகில்
யாரும் இல்லை" என்றே சொல்லிவிட்டார். "உலக சினிமாக்களுடன் போட்டி போடப்
போகும் இந்த படத்திற்கு ஆறு பாடல்கள் அவசியமா" அதற்காக இவ்வளவு செலவு
செய்து விழா எடுக்க வேண்டுமா என்று உள்மனம் கேட்கவில்லை.

கமல்ஹாசனுக்கு அவசியமில்லாத விளம்பரங்கள் எதற்கு என்று யோசித்துப் பார்த்தேன்
ஆஸ்கார் பிலிம்சின் வற்புறுத்தலாக இருக்கலாம். தலைமூழ்கும் அளவு புகழுக்கோ
விளம்பரத்துக்கோ ஏங்கும் மனிதரல்ல கமல்.



இவ்வளவு ஆராவாரங்களுக்கு இடையே கமலுக்கு எதிராக மாபெரும் நடிப்பு சூராவலி
உருவாகி வருவதை கமலே அறிந்திருக்கமாட்டார். இந்த உலக நாயகனை மிஞ்சிட
யார் என்று கேட்ட வைரமுத்துவுக்கு பதில் அளிக்க வந்திருக்கிறார் "உலக நடிப்பு
சூராவலி" ஜே.கே. ரித்திஸ். தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழா நடந்த அன்றே
இவரின் "நாயகன்" படத்துக்கும் பாடல் வெளியிடும் விழா நடைபெற்றது. முன்பே
இவர் சபதம் செய்தது போல தசாவதாரத்தோடுதான் என் போட்டி சாதாரண காக்காய்
குருவிகளுடன் அல்ல என்று சொல்லியிருக்கிறார். அதே போல பாடலை வெளியிட்டு
விட்டார். கமல் கலைஞரை வைத்து வெளியிட்டால், ரித்திஸ் கலைஞரின்
துணைவியாரை வைத்து வெளியிட்டார். ஆகமொத்தம் சினிமாக்காரர்களுக்கும்,
அரசியல் தலைவர்களுக்கும், என்னைப்போன்றவர்களுக்கும் இதுதான் வேலை.
நல்லவேளை மல்லிகா "டைட் டவுசர்" போட்டு வந்தது கலாசாரத்துக்கு எதிரானது
என்று தமிழ் பண்பாட்டுக்காவலர்கள் ஜிங்சா அடிக்கவில்லை.



தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என நாயகன் படத்தின் இயக்குனர்
சரவணன் ஷக்தி பத்திரிக்கையாளர்களிடன் சூளுரைத்தார். இந்த நியூமராலஜிபடி
சக்தியை ஷக்தி என்றும், சங்கரை ஷங்கர் என்றும் மாற்றி வைத்துக்கொண்டு
திரியும் சவங்களை தனியாக கலாய்க்க வேண்டும் அதற்கு முன்னதாக "நமீதா"
புகழ் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தின் முகத்தில் காறி துப்ப வேண்டும். ஏன் என்றால்
நேற்று அந்த சீக்காளி இயக்கியிருந்த "சண்ட"படத்தை பார்க்க நேர்ந்தது. அதிகமில்லை
பத்து நிமிசம் பாத்திருப்பேன். அதுக்கே இம்புட்டு கொலவெறி. இவனுங்க எல்லாம்
மக்கள கேணயனுங்கனு நினைக்கிறதாலதான் வரிசையா இதே மாதிரி "வெற்றி"
படமா எடுத்து தள்ள முடியுது. அய்யா சுந்தர்.சி நீங்க படம் இயக்குறதே பெரும்
கொடுமை. இதுல நடிச்சும் கெடுக்கனுமா?

தினமும் இந்திய நேரப்படி கலைஞர், தொலைக்காட்சியிலும், இசையருவியிலும்
சிரிப்பு நிகழ்ச்சி போடுகிறார்கள். அதில் வரும் விளம்பரத்தில் தமிழ் சினிமாவின்
நகைச்சுவை நடிகர்களின்(கவுண்டமணி, செந்தில், விவேக, கோவை சரளா,
ஜனகராஜ்...) ஆகியோர்களின் போட்டோ அனிமேஷன்களுக்கிடையில் சிம்புவின்
படமும் அனிமேஷனில் போடுகிறார்கள். குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு
சொம்புவின் மேல் அப்படி என்ன காண்டு என்று தெரியவில்லை. மிஸ்டர் சொம்பு
எந்த படத்தில் காமெடியாக நடித்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. தெரிந்தால்
எனக்கு தெரியப்படுத்துங்கள்.

மலையாளத்தில் இப்போது ஜட்ஜுகளுக்கு பயங்கர பஞ்சம். சமீபத்தில் ஏசியாநெட்
நாப்பது லட்சம் பரிசுத்தொகை போட்டியினை ஒரு வருடமாக இழுத்தடித்து
முடித்திருந்தார்கள். இப்போது இரண்டு கோடி என்ற அறிவிப்புடன் அதே மாதிரி
நிகழ்ச்சியை தயாரிக்கிறார்கள். இது 2011 ல் முடியும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மலையாளிகளின் தொலைக்காட்சியில் ஆடல் பாடல் மட்டுமே மாலை நேரங்களில்
ஒளிபரப்புகிறார்கள். இங்கு ஜட்ஜுகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். வாய்ப்பு
இல்லாத பிரபலமான பாடகராக இருந்தால் சிறப்பு. கையெழுத்து ஒன்றை இட்டு
குறைந்தது இரண்டு வருடம் நடக்கும் போட்டியில் ஜட்ஜாக வேலைக்கு செர்ந்து
விடலாம். கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மசுராட நிகழ்ச்சியின் ஜட்ஜுகளை
பார்த்தபோது தனியாக ரூம்போட்டு சிரிக்க வேண்டும் போல இருந்தது.

அது என்ன எழவு கான்செப்ட்னு தெரியல. ஆனா ஊன்னா "கான்செப்ட் சூப்பரா
இருந்துச்சு" "கான்செப்ட் சொதப்பிடுச்சி" "அருமையா இருந்துச்சு" ன்னு ஒரே மாதிரி
சொல்லிகிட்டு. சூர்ய தொலைக்காட்சி ஆரம்பிச்ச காலத்துலருந்து இந்த நடுவர்கள்
பங்குபெறும் நிகழ்ச்சிகள் இருந்துவந்தாலும் எனக்கு என்னமோ இப்பதான் சூடு பிடிச்ச
மாதிரி தெரியுது. வரிசையா மூணு ஜட்ஜுங்க அப்புறம் "நான் ஆடினது/பாடின
புட்ச்சிருந்தா எனக்கு எஸ்.எம்.எஸ் வோட்டு போடுங்கன்னு. இந்த SMS தொகையே
பல லட்சங்கள் தேறும். ஆனா வெற்றி பெற்றவங்களுக்கு கொடுக்கறது என்னவோ
மூணு லட்சம். இதுல ஏசியாநெட் பரவால்ல. நாப்பது லட்சம் தராங்க.
அவுங்க காசு வாங்கி அவுங்களுக்கே கொடுக்கறதுக்கு எதுக்குடா நிகழ்ச்சின்னு
கேக்கலாம்தான்.