எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, December 21, 2006

வெயில் திரைப்படவிமர்சனம்

வெயில் படத்தின் பாடல்களை கேட்டபொழுதே படம் பார்க்க வேண்டும்
என்ற ஆர்வம் தோன்றியது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அவரது
சீடர் வசந்தபாலன் எடுத்திருக்கும் படம் இவர் முன்னரே ஆல்பம் என்ற
படம் எடுத்திருந்த போதும் அது கவனிக்கபடாமலேயே போய்விட்டது.
அந்த குறையை இந்த வெயில் கண்டிப்பாக தீர்க்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய
படம்தான் என்று பார்த்தவுடனே மனதிலும் தோன்றியது.

Photobucket - Video and Image Hosting

வாழ்க்கையின் சகலபரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை
படமாக்க முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை இந்த முயற்சி தமிழ் சினிமாவில் இல்லை. சினிமா
கதாநாயகனுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் கதைக்கான,
கதைக்களத்துக்கான இரு கதாநாயகன்களாக பசுபதி (முருகேசன்).
அவரின் தம்பியாக பரத் (கதிர்).

Photobucket - Video and Image Hosting

முதல் பாடல்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது இது வழக்கமான சினிமா
இல்லையென்பது. வெயிலோடு விளையாடி பாடலில் வரும் அத்தனை
விஷயங்களும் சிறுவயதில் நாம் செய்த ரசிக்கும்படியான குறும்புகள்.

பள்ளி கட் அடித்து விட்டு தியேட்டரில் திருட்டு தம் அடிக்கும் மகனை
பூதாகரமாக கண்டிக்கிறார் தந்தை. அவமானம் பொறுக்க முடியாமல்
பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் பசுபதி.
இருக்கும் பணத்தையும் தொலைத்து விட்டு தியேட்டரில் வளர்கிறார்.
அங்கிருந்து காதல், சமூகம், எல்லாம் விளையாடுகையில் கண் முன்னே
காதலியின் தற்கொலை, தியேட்டர் இடித்த பிறகு வேலையும் போய்
ஏன் வாழ்கிறோம் என்று வேதனையில் இருக்கும்போது வீட்டுக்கு
போக முடிவெடுக்கிறார். இருபது வருடம் கழித்து வரும் மகனை
கண்டதும் பாசத்தில் தாய், இன்னும் அதே கோபத்தில் தந்தை இந்த
இடத்தில் அந்த தந்தை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

வீட்டிலும் தான் எதிர்பார்க்கும் பாசம், அன்பு கிடைக்கவில்லை
தங்கைகள் தன்னை அண்ணனாக ஏற்கவில்லை, திரும்பவும் திருட்டு
பட்டம் என்று காட்சிக்கு காட்சி தோல்விகள் கண்முன்னே தோன்றும்
போது பிரமிப்பு மீளவில்லை. பசுபதி நடிப்பின் உச்சத்தை தொட
முயன்றிருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். என்
முகத்திலே முழிக்காதே என்று சொன்ன அதே அப்பா மகன் காலடியில்
வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறார்.

சிறப்பான ஒளிப்பதிவு, தரமான இசை படத்துக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.
முத்துக்குமாரின் வரிகளில் "உருகுதே மருகுதே" பாடல் மிக அழகாக படமாக்க
பட்டிருக்கிறது. அழகான வரிகளும் கூட. "வெயிலோடு விளையாடி" பாடல்
உங்கள் உதட்டில் குறுநகையயும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். "காதல்
நெருப்பின் நடனம்" உயிரே பாடலை நினைவுபடுத்துகிறது. அருவா பாடலும்
ஊராந்தோட்டத்தில பாடலும் தாளம் போட வைக்கிறது. "இறைவனை உணர்கிற"
காதுக்கு இனிமை.

Photobucket - Video and Image Hosting

தென்மாவட்டமான விருதுநகரில் கதை நடக்கிறது. அந்த மண்ணுக்குரிய
வெக்கைதான் படத்துக்கு பெயராக வைத்திருக்கிறார்கள். வெயிலின்
குறியாக கோபம், தவிப்பு, வெறுப்பு, மற்றொன்றாக பசுபதியயும் சொல்ல
வைக்கிறது. படத்தின் முழுக்கதையும் இவரை சுற்றியே வருகிறது இவரை
சுற்றி பலரும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பரத்துக்கு ஜோடியாக பாவனா. இவர் தனது பங்களிப்பை செய்து விட்டு
கடைசியில் காணாமல் போகிறார். பசுபதிக்கு ஜோடியாக இருவர் இருந்தாலும்
இதிலும் தோல்விதான். படத்தில ஸ்ரேயான்னு ஒரு அம்மணி இருக்காங்க
சவுண்டையெல்லாம் தூக்கி வெச்சிட்டு பாந்தமான நடிப்பை தந்து நம்மளை
நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

மொத்தத்தில படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது ஏதோ ஒரு கிராமத்து
வீட்டின் உள்நுழைந்து ஒருவர் வாழ்க்கையை பார்த்து வந்தது போன்ற
உணர்வு. சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருந்தாலும் ரத்தம் அதிகம்
நன்றாக அமைத்திருக்கிறார்கள் சபாஷ்.

பஞ்ச் டயலாக், குலுக்ஸ் நடனங்கலை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே
மிஞ்சும். வித்தியாசமான படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ஒரு
விருந்து இந்த படம்.

இதை தயாரித்ததற்காக ஷங்கருக்கு ஒரு நன்றி.

இதை எழுதி இயக்கிய வசந்த பாலனுக்கும் வாழ்த்துக்கள்

எச்சரிக்கை!!!

இது ஒரு எச்சரிக்கை பதிவு!!!

காலம் கடந்த எச்சரிக்கைதான் ஆனாலும் கவனமா இருங்க பின்னாடி இதே
தப்பை செஞ்சிறாதிங்க.

சென்னைக்காதல்

Photobucket - Video and Image Hosting

இந்த படத்தை நான் பார்க்க கூடாதுன்னு சில தரப்புகளில் இருந்து
எதிர்ப்புகளும், பல இடங்களில் இருந்து எச்சரிக்கைகளும் வந்தன். இதே
போல எச்சரிக்கைகள் வல்லவன் படம் பார்க்க முடிவு செய்த போது என்
நல விரும்பிகள் கொடுத்தார்கள். அதனை அலட்சியம் செய்து பார்த்தேன்.
அதன் பின்விளைவு அப்புறம் தெரிந்தது.

சரி படத்துக்கு வருவோம் அதுக்கு முன்னாடி இயக்குனர் விக்ரமன் பத்தி
கொஞ்சம் சொல்லுவோம். இவர பத்தி எனக்கு இருக்குற ஒரே கருத்து
செண்டிமெண்ட் கலந்த காமெடி படம் எடுப்பாரு. பெரும்பாலும் இவரோட
முந்தைய படங்களின் கதையயே மத்த படங்களுக்கும் உபயோகிப்பார்
ஆங்கிலப்படங்களையோ, வேற்று மொழிப்படங்களையோ பார்த்து காப்பி
அடிக்காம ஒரே கதையை திரும்ப திரும்ப எடுக்கறதினால இவரை
பாராட்டலாம். லாலாலா பிண்ணனி இசையும், ஆர்மோனியத்தின் அபஸ்வர
ஒலியையும் இவரையும் பிரிக்கவே முடியாது அப்படி ஒரு பந்தம்.

Photobucket - Video and Image Hosting

இவரு இயக்குனராக முயற்சி செய்யும்போது எழுதின கதைய இப்ப
எடுத்திருக்காரு படத்த பாத்தா அந்த மாதிரிதான் தெரியுது. இதே மாதிரி
கதையில ஆயிரத்தி சொச்சம் படம் தமிழ்ல வந்திருக்கு.இப்ப எதுக்கு இந்த
படத்தை எடுத்தாரோ தெரியல. ஒருவேளை தாணுகிட்ட ஏகப்பட்ட பணம்
இருந்திருக்குமோ தெரியல.

ஒரு சென்னைப்பயன் படிக்காம ஊர சுத்தி, வீட்டையும் மதிக்காம, யாரையும்
மதிக்காம ஒரு பிகரை(ஜெனிலியா) காதல் செய்கிறார். அவளையே கல்யாணம்
செய்யிறதுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளையும் சந்தித்து காதலில் வெற்றி
பெறுகிறார். " உன்ன வளர்த்ததுக்கு பதிலா ஒரு எருமை மாட்டையே
வளர்த்திருக்கலாம்"னு பரத்தோட அப்பா சொல்லப்போக ஒரு எருமை
மாட்டையே வீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தறாரு பரத். இதுக்காக படத்தில
15 நிமிஷம் காமெடின்ற பேர்ல இந்த சீனை எடுத்திருக்காங்க. யெப்பா
சகிக்கலடா சாமி... ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யறதுக்காகவே
விக்ரமன் படத்தில குறைஞ்சது நாலு பேர் இருப்பாங்க. இவங்க உயிரை
குடுத்தாவது ஹீரோவை காப்பாத்துவாங்க. அந்த மாதிரி இதுல நாலு பேர்
நடிச்சிருக்காங்க அதில ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.
ஏற்கனவே தொலைக்காட்சில செய்த காமெடியையே திரையிலும் பார்த்ததுதான்
கொஞ்சம் புதுமையா செஞ்சிருக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

அது என்னவோ தெரியல ஹீரோயின் அப்பா பயங்கரமான ரவுடியா வருவது
தமிழுக்கு எத்தனையாவது படம்னு. அழகான ஜெனிலியாவுக்கு ராதாரவி
அப்பாவாக நடித்திருக்கிறார். எங்க சார் போயிருந்திங்க இவ்ளோ நாளா?.
இவ்வளவு நாளா காத்திருந்தது வீண் போகல. ஒரு அருமையான படத்தில
நடிச்சிட்டிங்க.

கிளிகள் மும்பைக்குதான் பறந்து போச்சின்னு ராதாரவிக்கு எந்த படை வீட்டு
அம்மன் கனவில வந்து சொல்றாங்கன்னு தெரியல அதுவும் இவரு தோஸ்தான
இன்னொரு ரவுடி வீட்டுலயே தஞ்சம் புகுந்து அங்கயே யாருக்கும் தெரியாம
இருக்கறது காமெடியின் உச்சம்.

இப்ப தமிழ் சினிமா இருக்கற சூழ்நிலைக்கு எப்படியெல்லாம் படம் எடுக்க
கூடாதோ அப்படி எடுத்திருக்கிறார் விக்ரமன் அதுக்காகவாச்சும் அவருக்கு
உதவி இயக்குனர்கள் நன்றி சொல்லணும். படத்துல ஆறுதல் அதில வரும்
பாடல்கள் அப்படின்னு கூடசொல்ல முடியாது பிண்ணனி இசை படு
கேவலம். சீரியல்ல கூட இதை விட பிரமாதமா கொடுக்கறாங்க. த்ரில்
காட்சிக்கு பிண்ணனிஇசையா டொட்ட டொய்ங் டொட்ட டொய்ங்தான்
போடறாங்க.

ஏண்டா நாயே படம் பாத்துட்டு இந்த வைய்யி வைய்யரேன்னு கேக்கறிங்களா?

ஜெனிலியான்னு ஒரு அம்மணி நடிச்சிருந்த ஒரே காரணத்துனாலயும், கூட பரத்தும் இருக்கறதினால பாத்து தொலச்சிட்டங்க.

பள்ளி ஆண்டுவிழா நாடகத்துல கண்ணுல மை வைக்க தெரியாம வெச்சி,
சாந்துபொட்டை உதட்டு சாயமா போட்டுகிட்டு ஏதாவது ஒரு பொண்ணு ஓரமா
ஒரே இடத்தில நின்னுகிட்டு கைய மட்டும் சுத்துவாங்க அதுக்கு பேரு டான்ஸ்.
ஆமாங்க அந்த மாதிரி ஒரு நாடகத்தை பார்த்திருந்திங்கன்னா அதுல வர்ற
பொண்ணு கேரக்டர்தான் ஜெனிலியா பண்ணது.

என்னவோ போ!

இன்னிக்கு வெயில் படம் பாக்கறேன் அதுவாச்சும் நல்லா இருக்குதான்னு பார்ப்போம்.

Monday, December 04, 2006

அமீரக வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

ஆசிப் அண்ணாச்சியின் தலைமையில் மற்றுமொரு மாபெரும் மாநாடு
அமீரகத்தில் இனிதே நடைபெற்றது. சந்திப்புக்கு வருவதாக சொன்ன பிற
நண்பர்கள் பலர் வர இயலாதபடி செய்து விட்டார் வருணபகவான். இந்த சந்திப்பு அருமையான ஒரு விவாதக்களமாக அமைந்தது. பல தலைப்புகளில் நண்பர்கள்
நன்றாக பேசினார்கள். குறிப்பாக அண்ணாச்சியும் பெனாத்தல் சுரேஷ் அவர்களும் நகைச்சுவையாக அதே சமயம் நல்ல கருத்துக்களுடன் பேசினார்கள்.மாநாட்டில்
கலந்து கொண்டவர்கள் விவரம்.


ஆசிப் மீரான்
பெனாத்தல் சுரேஷ்
நண்பன்
இசாக்
முத்துக்குமரன்
கவிமதி
லியோ சுரேஷ்
தமிழன்பு
சுந்தரராமன்
செண்பகராஜன்
தம்பி.

லியோ சுரேஷ் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். நேரம் தவறாமை
என்பது மிக முக்கியம் என்பதை முன்வைத்து பதிவுகளின் நோக்கம் என்ன?
எதிர்காலத்தில் இதனால் நாம் சாதிப்பது என்ன? என்று விவாதத்தை துவக்கினார்.

பதிவுகள் அவசியமா? பதிவுகளுக்காக பின்னூட்டமா? பின்னூட்டத்துக்காக
பதிவுகளா? தமிழ்மண கவிதைகள், பெரியார் போன்ற பல தலைப்புகளில்
விவாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட நேரத்திக்கு சந்திப்பு நடபெற்றிருந்தால்
இன்னும் நிறைய பேசியிருக்கலாம். இந்த சந்திப்பில் என்னுடைய பங்கு எனபது பார்வையாளனுக்கும் கீழேதான் என்பது சந்திப்பில் இடம்பெற்ற அனைவருக்கும்
தெரியும். நிறைய விஷயங்களில் தெளிவான பார்வை இல்லாததும் ஒரு காரணம்.

எழுத்து என்பது தொழில்முறை எழுத்தாளருக்கு மட்டுமே சொந்தமில்லை,
அனைவருக்கும் பொதுவானது. வாசகன் என்பவன் வாசிக்க மட்டுமே அல்ல
அவனுக்கும் சில கருத்துக்கள் உண்டு அதை பொதுவில் வைத்து விவாதம்
நடத்த உதவியாக இருக்கும் இந்த பதிவுகள் என்பது மிக அவசியம் என்று
அருமையாக பேசி விவாதத்தை துவக்கி வைத்தார். ஒரு விஷயத்துல
நமக்குன்னு ஒரு கருத்து இருக்கும் அதை பொதுவில் வைத்து விவாதிக்கும்போது
புதிய சில விஷயங்கள் தெரிய வரும், மற்றவர்களின் பார்வையையும் அறிய
ஒரு வாய்ப்பு. சில முரண்பட்ட கருத்துக்கள். ஒரு காலத்தில் எழுத்தாளர்களுக்கு
மட்டுமே சொந்தமாக இருந்ததை இப்பொழுது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக வெளியிடலாம் என்பது ஒரு மிகப்பெரிய
சுதந்திரம். வலைப்பூவின் சக்தி குறித்து நண்பன் ஒரு செய்தி குறிப்பிட்டது
சுவாரசியமானதாக இருந்தது. இராக் யுத்தத்தின் போது யுத்தக்கள செய்திகளை
இரு பெரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு கொண்டிருந்தது. (CNN, Al JAZEERA) இரண்டுமே நடந்ததை நடுநிலையோடு வெளியிட்டதாக யாரும் நம்பபோவதில்லை.
அந்த நேரத்தில் இராக்கியர் ஒருவர் அங்கே என்ன நடந்தது என்பதை எவ்வித சார்புத்தன்மையும் இல்லாமல் தன் வலைப்பூவில் எழுதியது பரபரப்பை
உண்டாக்கியது. உலகமே அந்த வலைப்பூவினை வாசித்தனர் என்றார். இது போல சுதந்திரமாக செய்திகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள ஏதுவாக உள்ள
ஒரு ஊடகம் இது. எழுதி வைத்து பேசறதுக்கே நம்மாள முடியாத போது
அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது என்பது
பாராட்டக்கூடியது அந்த வகையில் முத்துக்குமரன் அருமையாக பேசினார்.

அடுத்து பதிவுகள் எழுதப்படுவது பின்னூட்டங்களுக்காக மட்டுமா?. சில
மொக்கையான பதிவுகள் (என் பதிவுகள் போல) பின்னூட்டங்கள் நிறைய பெறுவதும்,அருமையான படைப்புகள் பல கவனிக்கப்படாமல் போவதும் எதனை அறிவுறுத்துகிறது? வாசிப்பவர்கள் நகைச்சுவையை மட்டுமே விரும்புபவர்களா?
எதனால் இப்படி என்ற சுவாரசியமான விவாதம். என் பதிவில் நான்
பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை நேரமின்மையும் நேரவிரயமும்
காரணங்கள். நான் எழுதிய கவிதைகளை சேமித்து வைக்கும் ஒரு இடமாக
வலைப்பூவினை பயன்படுத்துகிறேன். என்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக எனது மின்னஞ்சல் முகவரி, உலாபேசி எண் அங்கேயே
உள்ளது. என்பதை இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்பில் சொன்னதை நினைவு
கூர்ந்தார் நண்பர் இசாக். வலைப்பூக்களில் ஒருபுறம் கடுமையான விவாதங்கள் நடைபெற்றாலும் ஒருபுறம் நகைச்சுவை பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தீவிரமான விவாதங்களில் பங்கேற்க விரும்பாதவர்களும் சர்ச்சைகளில் சிக்க
விரும்பாதவர்களும் நகைச்சுவை பதிவுகள் எழுதுவதையே தேர்ந்ததெடுக்கின்றனர்.
இதில் என்னுடைய கருத்து என்பது பின்னூட்டங்கள் என்பது அவசியமே
பதிவு வெளியிட்டு சில நொடிகளில் மற்றவர் கருத்தை பின்னூட்டங்களில்
அறிய முடிவது வரமே.

கவிதைகள் குறித்து பேச்சு வந்த போது கவிமடத்தலைவர் கவுஜைகளின்
மன்னன் ஆசிப் அவர்கள் பெரும்பாலான கவிதைகள் காதலை மையமாக
வைத்தே எழுதப்படுவது எதனால்? இதுபோல எழுதப்படும் கவிதைகள்
புலம்பல்கள் போலவே தோற்றமளிக்கிறது. காதல் என்ற பொருளைத்தாண்டியும்
நிறைய விஷயங்க உள்ளன. வெறும் அலங்கார வார்த்தைகளைக் கொண்டு
புனையப்படுவது கவிதை என்று சொல்ல முடியாது. கவிதைகளின்
பாடுபொருள் என்பது காதல் மட்டுமேயல்ல.

எளிதில் தீப்பற்றக்கூடிய, முடிவில்லாததுமாகிய பெரியார் என்ற விவாதம்
வந்த போது அது எளிதில் முடியக்கூடியதாக இல்லை. முக்கியமான எனது
கருத்து என்னவென்றால் பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட
பெரியாரை விமர்சிப்பர்களே அதிகம். மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது. எதிர்கருத்துக்களுக்கு வாதிட யாரும் தயாராக இல்லாதபோது விவாதம் நடத்தி
பயனில்லை.

அமீரகசெய்திகளுக்கு வலைப்பதிவாளர்கள் யாரும் முன்னுரிமை கொடுத்தால்
வாசகர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நண்பர் செண்பகராஜன்
குறிப்பிட்டார். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தின செய்திகள்
போன்றவைகளையும் பதிப்பித்தால் நன்று என்றார். இங்கு வெளியிடப்படும் செய்தித்தாள்களின் செய்திகளே தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்தான்.
வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் சட்டச்சிக்கல்கள் போன்றவைகளை
நயமாக எடுத்துரைத்தார் நண்பர் ஆசிப்.

நான் என்ன பேசினேன்னு கேக்கறிங்களா? நான் பேசவில்லை பேசுவதை கேட்டு
கொண்டிருந்தேன். என் கைதான் பேசியது என் கைகள் சிவ்ஸ்டார் பவனின்
மூன்று வடைகளை பதம் பார்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்திருக்க நீயி.
அப்படின்னு யாரும் கேக்ககூடாது ஆமாம்.

மீதி அடுத்த பதிவில்!

Friday, December 01, 2006

THREE BURIALS

சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்னு ஒரு படத்தை கிளி மாதிரி கவ்வி போட்டாரு. THREE BURIALSனு ஒரு படம். படம் பார்த்து முடிக்கற வரைக்கும் அந்த படத்தின் தலைப்பு கூட அர்த்தம் தெரியாது எனக்கு என்பதுதான் உண்மை.

Photobucket - Video and Image Hosting


வழக்கம்போல அமெரிக்காவில நடக்கற கதைதான். வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க மெக்ஸிகோ நாட்டிலிருந்து மலைகள், பாலைவனங்கள் வழியாக பயணம் செய்து அமெரிக்காவிற்கு ஊடுருவும் மெக்ஸிகோ மக்கள். அதை தடுக்கும் அதிகாரிகள் அதையும் மீறி வருபவர்கள் என இதுதான் கதை. ஆனால் வித்யாசமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தில் யார் கதாநாயகன் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்து படத்தின் இயக்குனரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் டாம்மி லீ ஜோன்ஸ் என்பவரைத்தான் சொல்வேன். ஒவ்வொரு நொடியும் கவனமாக பார்த்தால்தான் புரியும் அவ்வளவு நுணுக்கமான கதை. படத்தில் நிறைய ஸ்பானிஷ் வசனங்கள் வருகின்றன. எனக்கு ஸ்பானிஷ் தெரியாது ஆனால் இந்த அலைவரிசையில் (ரேடியோ) வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்பேன். இனிமையான மொழி அது. என்று கண்தெரியாத ஒரு பெரியவர் சொல்வார். என்னை கவர்ந்த இரண்டாவது கதாபாத்திரம் அவருடையதுதான்.

Photobucket - Video and Image Hosting

மெல்கியுடெஸ் எஸ்ட்ரடா(Melquiades Estrada) என்னும் மெக்சிகோ இளைஞன் எல்லையை தாண்டி டெக்ஸாஸ் நகரத்திற்கு வருகிறான். நகரம் என்றால் ஒதுக்கு புறமான கிராமம், அங்கு பண்ணை வைத்திருக்கிறார் ஜோன்ஸ் அவரிடம் ஏதாவது வேலை கேட்கிறார். என்ன வேலை தெரியும் உனக்கு? எனக்கு மாடு மேய்க்க தெரியும் (கவ்பாய்) என்று சொல்கிறார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் சினேகம் ஏற்பட்டுவிடுகிறது. எஸ்ட்ரடாவை தன்னுடனே வைத்துக்கொள்கிறார் ஜோன்ஸ். எஸ்ட்ரடா தன் குடும்பம் பற்றியும், வீட்டை பற்றியும் விவரிக்கும் இடத்தில் நெகிழ்கிறார் ஜோன்ஸ். மிக்க மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கதையில் குண்டு போடுகிறார் பெர்ரி பெப்பர் (Barry Pepper).

Photobucket - Video and Image Hosting

ஒருமுறை தூரத்தில் உள்ள பண்ணையை பார்க்கசெல்லும் எஸ்ட்ரடா ஒரு நரியை சுடுகிறார். தன்னைத்தான் சுடுகிறார்கள் என்று பெப்பர் எஸ்ட்ரடாவை சுட்டு விடுகிறார். அதை மறைத்தும் விடுகிறார். இதை கண்டுபிடித்து அந்த காவலதிகாரியான பெப்பரை பழி வாங்குகிறார் ஜோன்ஸ் இதுதான் கதை என்றாலும் அதை திறம்பட சொன்னதுதான் படத்தின் சிறப்பு. முன்பொரு முறை நான் இறந்தால் என்னை என் வீட்டில் அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் புதைக்கும்படி விருப்பம் தெரிவித்ததை நினைவில் கொண்டு அதை நிறைவேற்ற அதே போலிஸ் அதிகாரியை கடத்தி வந்து எஸ்ட்ரடாவை புதைத்த இடத்தில் இருந்து பிண்த்தை தோண்டி எடுத்து அதை அவனையே சுமக்க வைத்து குதிரையில் மெக்சிகோ புறப்படுகிறார் ஜோன்ஸ். இந்த பயணத்தில் ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க பெப்பர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பல அனுபவங்கள் நமக்கே ஏற்படுவது போல இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting

வழியில் பல இன்னல்களை இருவருமே சந்திகிறார்கள். மலைகள், பாலைவனங்கள் பல கடந்து பிணத்தை எடுத்து செல்வதென்பது சாதாரண விஷயமில்லை. எஸ்ட்ரடாவின் ஆசைக்கிணங்க அதை செய்கிறார். படத்தில் இவரின் நடிப்பி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை இத்தனைக்கு இவரேதான் இயக்குனர். இந்த பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மெக்ஸிகோ மக்கள், கண் தெரியாத கிழவர், ஆற்றை கடக்கவும் விலாசத்தை கண்டுபிடிக்க உதவும் உள்ளூர்வாசியும்
நடிப்பில் மனதில் பதிகிறார்கள்.

பல இன்னல்களுக்கிடையில் எஸ்ட்ரடாவின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள் யாருமே இல்லாத மலைக்காட்டில் சுற்றுச்சுவர்கள் மட்டுமே உள்ள இடம்தான் அந்த வீடு. இந்த இடத்தில் புதைக்கவா இத்தனை கஷ்டப்பட்டு பிணத்தை வைத்துக்கொண்டு வந்தார்கள் என்று நினைக்கவே முடியவில்லை. அத்தனை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். பெப்பரின் கையாலேயே அந்த வீட்டை செப்பனிட வைத்து குழியும் பறித்து அதில் புதைக்கிறார்கள். எஸ்ட்ரடாவின் குடும்ப புகைப்படத்தை வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்லுகிறார் ஜோன்ஸ்.
தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பும் கேட்கிறார் பெப்பர்.

கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் படத்தில் பார்க்கும்போது மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

கடைசியில் கழுதையை தனக்கு எடுத்துக்கொண்டு குதிரையை பெப்பருக்கு அளித்து விட்டு அமெரிக்கா புறப்படுகிறார் ஜோன்ஸ். இத்துடன் கதை முடிகிறது. படத்தில் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்தால் மெக்சிகோ மலை வாழ் மக்களின் ஏழ்மை நிலையையும், எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக அந்த மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் பற்றியும் தொட்டு சென்று உன்னதமான ஒரு நட்பின் பிரிவை சொல்லியிருக்கிறார்.

நான் படம் பார்த்து தெரிஞ்சிகிட்டது இவ்வளவுதான். படம் பார்த்தவங்க நான் எழுதினதுல குத்தங்குறை இருந்தா எடுத்து சொல்லுங்க. ஏன்னா எனக்கு புரிஞ்ச மாதிரிதான் எழுதி இருக்கிறேன்.

இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக்கல, என்னடா ஒரு நல்ல படத்தை இப்படி நாஸ்தி பண்ணி எழுதிட்டமோன்னு. என்ன செய்யிறது எல்லாம் அந்த கடைக்காரன சொல்லணும்!.